வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 5 - 08 - 2005

குறும்பாக்கள்

(o) காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று

தன்மதி

(o) அம்மாவின் சேலைகள்
இனி தாவணியாகாதோ
பள்ளியிலும் சுடிதார்

சிவராச. செல்வகுமார்

(o) வெட்டப்படுவதை
வேடிக்கை பார்த்தபடி
காத்திருந்தன பலியாடுகள்

நந்தவனம் - சந்திரசேகரன்

(o) இராசி பலன்
செரிமானக் கோளாறாம்
கிடப்பதோ பட்டினி

பொன்னியின் செல்வன்

நன்றி : தமிழ்க்காவிரி இதழ் மே - ஜூன் 2005

(o) உடம்பு சரியில்லாதவர்
பார்க்கப் போய்
மனசு சரியில்லை

(o) விடை தேடி
மாணவர் குழப்பம்
ஆசிரியருக்கும தெரியவில்லை

(o) சாமியார்மீது குற்றம்
மரியாதையிழந்தார்
கடவுள்

- ராச சேகர் - கடலூர்

(o) குழந்தையின் பால்
அவசரத்தில் சிந்தியது
பசியாறின எறும்புகள்

மித்ராவின் கவிதைகள் (பக் 101)

(o) தாய்ப்பால் கொடுக்காமல்
அழகைக் காத்தாள்
சூம்பிப் போனது குழந்தை

சூரியனுக்கு வெட்கமில்லை (பக் 9)

(o) பலர் முத்தமிட்டது தெரிந்தும்
நானும் முத்தமிட்டேன்
தேனீர் கோப்பை

பரமானந்தம் - சென்னை 118

(o) முள்ளொடிக்கிறாள்
மகள்
சட்டை கிழிந்ததென

வைகறை பாலன் - தேனி

(o) மாடு தின்னும்
வைக்கோலுக்குக் காவலாய்
பசியுடன் விவசாயி

தேவரம்பூர் திரவாசகன் - திருப்பத்தூர்

(o) அழகிய கிண்ணத்தில்
பூக்களை அடுக்குவோம்
அரிசிதான் இல்லையே

- பாஷோ -

(o) குண்டும் குழியுமாய்
சாலைகள்
யாரைப் புதைக்க ?

மு.முருகேஷ்

(o) பூட்டிய பூட்டை
இழுத்துப் பார்த்தார்
கடவுளை நம்பாத பூசாரி

இரா.இரவி - மதுரை

நன்றி : இனிய ஹைக்கூ இதழ் எண் 20



மரபுப் பாடல்கள்

எழுது கோலினை ஏந்திடு
எழுச்சிப் பாக்களை யாத்திடு
பழுது கண்டுமே பொங்கிடு
பொழுதும் நற்பணி ஆற்றிடு

க.சண்முக சிதம்பரம் - தரங்கம்பட்டி

நன்றி : நற்றமிழ் - கொடுத்தபடி தொடுத்த பாடல்கள்



ஆரிய மொழிக்கே ஏற்றம் ஆர்ப்பரித் தளிப்பார் கண்டும்
நேரிய தமிழைத் தீயர் நெஞ்சிலார் பழிப்பக் கேட்டும்
வீரியம் அழிந்து மானம் வீழ்ந்தனை தமிழா ! பொங்கிப்
போரிடு ! பழமை வீரம் போற்றிடு தமிழ்தான் மூச்சு !

கரு. சின்னத்தம்பி - உடுமலை

நன்றி : நமது தமிழாசிரியர் - பாமேடை 51



வாழ்வின் நெறியுரைக்கும் வையகமே பாராட்டும்
ஆழ்ந்த கருத்தியம்பும் ஆன்றோர்கள் - வாழ்த்துகிற
மாசில்லா நூலாம் மணக்கும் திருக்குறளைத்
தேசியநூல் என்பீர் தெளிந்து.

கடவூர் மணிமாறன் - கிருட்டிணராயபுரம்

நன்றி : மீண்டும் கவிக்கொண்டல் வெண்பா விருந்து



சொல்விளையாட்டு

முற்பாதி போய்விட்டால் காட்டில் வாழும்
முனைப்புமிகு வரிப்புலியாம் அந்தச் சொல்லின்
முற்பாதி அழகதனைக் குறிக்கும் அம்மே
முன்மூன்றும் நாணேறி இலக்கில் தைக்கும்
விற்றுணையாம் நற்கருவி முதலும் ஈறும்
விடலையுடன் கன்னியல்லா அலியே யாகும்
சொற்பாகம் உணர்ந்தோரே ! வெண்ணிலாவின்
சுந்தரமார் அப்பெயரைக் கூறு வீரே

பெண்ணை வளவன்

(விடை - புலி, அம், அம்பு, அலி - அம்புலி)

நன்றி : சோலைக்குயில் - மேழம் இதழ்



மொழி வாழ்த்து

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே
முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே
தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே
இன்னறும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே
மன்னுஞ்சிலம்பே மணிமேகலை வடிவே
முன்னும் நினைவால முடிதாழ வாழ்த்துவமே



உயிர்த்தெழு

- காசி ஆனந்தன் -

திட்டு நீ என்னை ஆங்கிலம் கலந்து
தீந்தமிழ் அழிய நான் வாழ்ந்தால்
கட்டு நீ செருப்பு மாலை என் கழுத்தில்
காறி என் முகமிசை உமிழ்வாய்
வெட்டு நீ என்றன் நாக்கினை! ஊரில்
வெறுத்தெனை ஓர்புறம் ஒதுக்கு
கொட்டு நீ முரசம் இவன் தமிழ்த் தாயின்
குரல்வளை அறுத்தவன் என்றே

தாய்மொழி அழிப்போன் யாரானால் என்ன ?
தலைவனே ஆயினும் தாக்கு !
தமிழனாய் இருப்பின் இனியதாய் மொழியாம்
தமிழுக்கு நஞ்சுவைப் பானோ ?
தமிழ்மொழி பழித்தான் ! ஆங்கிலம் களித்தான் !
தறுதலை ! இவனென்ன தமிழன் ?
தமிழனா ? இல்லை ! வெள்ளையன் பிள்ளை !
தமிழன் போல் நம்மிடை வாழ்ந்தான் !

வடமொழி கலந்தான்.. கன்னடன் ஆனான் !
மலையாளி தெலுங்கனாய்ப் போனான் !
அட ! இன்று தமிழன் ஆங்கிலம் கலந்தான்..
கடல்பொங்கி அழித்தும் அழியாத தமிழை
கண்காணத் தமிழனே அழித்தான் !
கெடல் ஒன்றே கொள்கை என வாழ்ந்தான்.. தமிழன்
கெட்டானே... கெட்டானே... கெட்டான் !

அன்னையின் பாலைச் சுவைத்தவன் இந்நாள்
அயல்நாட்டான் காலைச் சுவைத்தான் !
தன்னை இவனேதான் தாழ்த்தினான் . கொடியன்
தமிழ்வாயில் ஆங்கிலம் வைத்தான் !
சென்னையா ? இல்லை லண்டனா ? தெருவில்
செந்தமிழ் தொலைத்தானே.. அடிமை!
முன்னையத் தமிழன் எங்கடா போனான் ?
முயல்கிறேன்.. முகவரி இல்லை !

வேங்கையே ! வாடா வெளியில் வா ஓங்கி
வீசு நீ புயலாக வீசு !
தீங்கு செய் கொடியர் தமிங்கிலார் தீட்டும்
திட்டங்கள் துகள்படச் செய்யவாய் !
ஆங்கிலப் பள்ளி அடிக்கல்லை அள்ளி
அடுப்பாக்கு ! சமையலுக் குதவும் !
தாங்கடா தமிழை ! தோள்தட்டி எழுக !
தமிழினம் உயிர்த்தெழல் வேண்டும்.

நன்றி : தமிழர் கண்ணோட்டம் இதழ்.



எங்கள் நாட்டில்.

நல்லதமிழ் மணமறியாக் கழுதை தன்னை
நடுவணர சரியணையில் அமர வைப்போம் !
பல்லிறித்து நக்குகின்ற சொறிநாய் தன்னைப்
பகர்"ஞான பீட"மதில் ஏற்றி வைப்போம்
தில்லுமுல்லு செய்வதிலே சிறந்து நிற்கும்
திருடர்களை அரசாளத் தேர்ந்தெ டுப்போம் !
கல்விதனைப் பாழாக்கும் ஆட்சி யைப்போய்க்
"காமராசர் ஆட்சி"என்று கதைப்போம் நாங்கள் !

திருவள்ளு வன்சிலையைத் திறக்க ஒட்டான்
சிறிதளவும் நீர்உதவான் அவனை நாங்கள்
"திருவிடத்துத் தம்பி" என்போம்! அவன்முன் னேறத்
திராவிடர்கள் முன்னேற்றக் கழகம் வைப்போம் !
ஒருதமிழும் அறியானை முத்த மிழ்க்கும்
உறைவிடமாம் இவன்என்போம் பசுத்தோல் போர்த்துக்
கரவாக மேய்கின்ற கொலைக்கூட் டத்தைக்
கண்கண்ட கடவுளென்போம் எங்கள் நாட்டில்.

இரா.தி.

நன்றி - தெளிதமிழ் கடகம் தி.ஆ.2036



தமிழர் உறுதி மொழிகள்

யான் ஒரு தமிழன் ! என துயிர் - மொழி தான்
தேனினும் இனிக்கும் தென்றமிழ் மொழிதான் !
என்பெரு நிலமும் கலை - நெறி யாவும்
இன்புறும் செந்தமிழ் வழக்கியல் முறைதாம் ( யான் )

தமிழ்பயின் றன்றிப் பிறமொழி பயிலேன் !
தமிழில் வடமொழி, பிறமொழி கலவேன் !
தமிழ்நில அரசியல் குடிஇயல் யாவும்
தமிழில் தமிழரைக் கொண்டே செய்வேன் ( யான் )

இல்லப் பெயர்தெரு மக்களூர் பெயர்கள்
எல்லாம் தூய தமிழ்ப்பெய ரிடுவேன் !
இசைமுதற் கலைகள் தொழில் வழித்துறைகள்
எங்கும் தமிழுக்கே தருவேன் முதன்மை ( யான் )

பேச்சும் எழுத்தும் நடையும் செயலும்
மூச்சும் தமிழாய் முழங்கிடுவேன் நான்
ஏச்சும் நகையும் இடரும் பாரேன்
என்கடன் தமிழ்ப்பணி என்பதை மறவேன் ( யான் )

என்பொருள் அறிவு என் பணி பரிவு
எல்லாம் முதலில் தமிழ்த்தாய்க் களிப்பேன்
நன்மகன் வள்ளுவன், கீரன், மறைமலை
நற்றமிழ் முழக்கம் நாள்தோறும் புரிவேன் ( யான் )

தமிழ்நிலம் எல்லாம் தமிழர சோங்க
தமிழ்க்கொடி, தமிழ்மக்கள் சிறந்தினி தோங்க
தமிழ்நூல் திருக்குறள் உலகினை ஆள ( யான் )

இந்நெறிக் குழைப்பேன் ! இவ்வழி உழைக்கும்
நந்தமிழ்த் தலைவர் சொற்படி நடப்பேன்
என்றிவை எல்லாம் என் கடன் என்றே
ஏற்றினி துரைக்கும் உறுதிநற் சொல்லே ( யான் )

- தூயதமிழ்க காவலர் அண்ணல் தங்கோ -



உணர்வு பெற்று எழுக

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு திசையினில்
எவ்வொரு கருத்திலும் இசைவிலா விசையினில்
எவ்விதம் இவன்றன் இனத்தை உயர்த்துவான் ?
எவ்விதம் இவன்றன் நாடும் உருப்படும் ?
ஆக்கம் தேடி அடைவன திரட்டி
ஊக்கப் படுத்தும் உளம் பெறா திவனோ
தாக்கு தாக்கெனத் தாக்கிச் சிதறிப்
போக்கிலா தலையும் புன்மை பெருக்கினான்
உலக முதன்மொழி உன்மொழி என்னப்
பலரும் விதந்து பரப்புரை செய்ய
கலகம் விளைக்கக் களம்புக லாமேர் ?
நலம்பய வாவுரை நாளும் கிளைப்பதோ ?
விதைநெல் லாக விளைந்த முதலைப்
பதைக்கப் பதைக்கப் பகடி செய்யாமல்
புதையலாய் எண்ணிப் போற்றுவம் ! எவ்வழிச்
சிதைப்பிலும் முந்துறச் சிந்திப்ப தொழிவீர் !
செம்மொழியாக்கும் செயல்திட் டங்கள்
அம்மவோ முடக்குவர் ஆளுங் கணத்தவர்
நம்மொழி தூக்கி நாட்டும் கொள்கையில்
கும்முக ஒன்றாய்க் குடிநிமி ரட்டும்
பெற்று வளர்த்துப் பெரியவ னாக்கிக்
கற்றுக் கொடுத்துக் கல்வி பெருக்கி
எற்றுக்காக இவையெலாம் செய்வார்
எற்றி உதைக்கவா ? இழிவாய் நடத்தவா ?
உச்சி முகர்ந்து ஒருவாய் புகட்டி
எச்சில் சோற்றை எடுத்துண் பாள்தாய்
அச்சோ அவளையா ஆரெனக் கேட்பாய்
ஆன்ற தமிழுக் காயிரம் சீர்த்தி
சான்றோர் கண்டு சாற்றுவர் நீயோ
ஈன்ற தாயை ஏரிளந் தமிழைத்
தோன்று முன்னரே தொலைக்க முனைவை
கூறு கூறாய்க் குறுகிக் குறுகி
ஏறுமலை யென எம்பிக் குதித்து
மாறு படவும் மயங்கிச் சோரவும்
சோறு கிடைப்பின் சொக்கிக் கிடக்கவும்
உடலும் பெருத்து உயிரம் காத்துச்
சடலம் போலச் சாலையில் நடக்கவும்
மடலம் பெற்றாய் மானம் விற்றாய்
அடடா உன்போல் ஆரிங் குளரோ
எருது பசுவென ஏறத் தாங்குமோ
விருது பெறவென வேடங் கட்டவும்
விருது தருங்கால் விழுந்து நக்கவும்
கருது கோளைக் கடைமாற் றுவையோ ?
திருடத் திருடத் திருடன் தலைவன்
வருட வருட வளைந்தவர் ஆட்சி
கரடும் முரடும் கழனிக் காகா
இரடா சோற்று கிரடா போதும்
முழுந்தா ளிட்டு விலைபோ காதே
இழந்தால் மறுபடி ஈட்டுத லரிது
எழுந்தால் கதிராய் எழுவிடி யட்டும்
விழுந்தால் விதையாய் விழு முளைக்கும்மே !

கடகம் 2036 தேமதுரத் தமிழோசையில் ஆசிரியர் உரை



அறிவே அளவுகோலா ?

ஓர் அறிவே உடையவையாம் மரமும் புல்லும்
உலகத்தைக் காப்பதிலே இவைபோல் உண்டா
சீர்ப்புல்லின் நெல்மணிகள் இல்லை யென்றால்
தீப்பசியால் மனிதகுலம் செத்திருக்கும்
ஈரறிவே கொண்டவையாம் சிப்பி சங்கு
எழில்முத்தால் கடற்சிப்பி இன்பம் கூட்டும்
நேரில்லாக் கொற்கைமுத்தே கிரேக்கர் வாங்க
நெடுந்துறைகள் காத்திருந்தார் கப்ப லோடே

மூவறிவே உடையவையாம் எறும்பும் செல்லும்
முனைப்பான உழைப்பொன்றே வெற்றி யூர்க்குத்
தேவையென்றே எறும்பைப்போல் கூறும் ஆசான்
செகம்மீதில் வேறொருவர் பிறந்ததுண்டா ?
பூவுலகில் நான்கறிவைப் பெற்ற தென்றால்
பொன்வண்டும் தேனியும் என்றே சொல்வர்
நாவினிக்கும் தேன்தந்து நோயை ஓட்டி
நலம் சேர்க்கும் மருத்துவரே தேனீதானே

பாரகத்தில் ஐந்தறிவைப் பெற்ற தென்றே
பறவைகளை விலங்குகளைச் சொல்வார் மண்மேல்
ஏருழவு மாடுகளே சுழலா விட்டால்
ஏதிங்கே இைச்சோறு ? மனிதன் மட்டும்
சீருடனே ஆறறிவைப் பெற்றேன் என்றே
திமிர்வாதம் புரிகின்றார் விளைச்சல் என்ன ?
போர் வெறியால் வெடியொலியால் குருதி ஆற்றால்
பூமித்தாய் அமைதியினைக் குலைத்தான் பாவி

- கா. வேழவேந்தன் -

நன்றி - தமிழ்ப்பாவை கடகம் தி.ஆ. 2036 -



தன் வரலாறு எழுதுக

மண்புழுவும் தன் வரலாறு எழுத வேண்டும்

பட்டது, கெட்டது, விட்டது, தொட்டது தன் வரலாற்றில் தெரியும்.
கல்வியறிவற்ற சமூகங்களில் தன் வரலாறுகளே முதல் இலக்கியம்.
மராட்டிய தலித்துகள் பிறகு கர்நாடக தலித்துகள் இப்போது தமிழக தலித்துகள் தன் வரலாற்று இலக்கியங்களைக் குவிக்கிறார்கள்.
வண்ணார், நாவிதர், குயவர், நெசவர் - எல்லோரும் தன் வரலாறு எழுத வேண்டும்

- சங்கமித்ரா - ஆகஸ்ட் 2005 ஒடுக்கப்பட்டோர் குரல் இதழில்



காமராசர்

காமராசரை வட இந்திய மக்கள் இன்னொரு காந்தியாகவே எண்ணினர். அதனால்தான் அவரை காலா காந்தி என்று அன்போடு அழைத்தார்கள்.(காலா என்றால் கறுப்பு) சென்னை மெரினாக் கடற்கரையில் காமராசர் பலமுறை பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். எனினும் இம்முறை அவர் பேசியவை வரலாற்று ஏடுகளில் சிறப்புமிக ஆவணங்களாகப் பதிவாகியிருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா - நமது நாட்டை அச்சுறுத்தியபோது, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவி இல்லாமலே சுதந்திர இந்தியா - சொந்தக் காலில் நிற்கும் வல்லமை வாய்ந்தது என்பதை விளக்கி மானத்தோடு வாழ்வோம் என்று பேசினார். அது போலவே 1965 இல் தமிழகத்தில் மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்தபோது இந்தி என்னை மீறி வந்துவிடுமா ? வராது. வந்தால் அந்த உத்தரவை கிழித்து எறிவேன் என்றார் காமராசர்.

காமராசர் பதவிக்கு வந்த பிறகும் வாடகை வீட்டிலேயே குடியிருந்தார். அரசு வீடு கேட்டு வசிப்பிடத்தை மாற்றிக் கொள்ளவில்லை அவர். அதுபோலவே தனது காரையும் மாற்றிக் கொள்ளவில்லை MDT 2627 என்ற எண்ணுள்ள காரைத்தான் இறுதி மூச்சுள்ளவரை உபயோகித்து வந்ததர்.

இரு முறை பிரதமர் பதவி தேடிவந்தபோதும் அதனை ஏற்காது மறுத்தவர். நேரு காலமான போது லால்பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரி காலமானபோது இந்திராகாந்தியையும் பிரதமராக்கி வரலாற்றுப் புகழ் பெற்றார் காமராசர். இதனால் அரசியல் வட்டாரத்தில் அவரை கிங்மேக்கர் என்று அழைத்தனர். - நன்றி : தன்மானக்குரல் - சூைலை இதழ்



பாரதியார் பதறினார்

நீலகண்ட பிரம்மசாரி 1921 -22 ஆம் ஆண்டுகளில் சாப்பாட்டிற்கேகூட கையில் காசில்லாமல் இரவில் பிச்சையெடுத்து சாப்பிட்டிருக்கிறார். ஒரு நாள் கையில் காசு சுத்தமாக இல்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. சோர்வுற்றிருந்த அவர் பாரதியிடம் சென்று தட்டுத் தடுமாறி ஒரு நாலணா இருக்குமா என்று கேட்டார்.
மகாகவி திடுக்கிட்டு ஏன் ஏன் என்று கேட்க பிரம்மசாரி அன்று முழுவதும் சாப்பாட்டிற்கு ஒன்றுமில்லாமல் அல்லல்பட்டதைக் கூறினார். பாரதி பதறிப்போய் நாலணாவைக் கொடுத்து உடனே போய் சாப்பிட்டு வாரும் என்று அனுப்பி வைத்தார். அப்போது அவர் பாடிய பாடல்தான் " தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பது.

நன்றி : இந்திய சுதந்திரப்போர் (எஸ்.கிருஷ்ணன்) நன்றி : சேரத்தமிழ் இதழ் - கொச்சி தமிழ்ச் ச்ங்கம் - கொச்சி 682 031



உலகத் தலைமைக்குத் தமிழன் வரமுடியும்

சங்கமித்ரா தனது கட்டுரையில் மக்கள் தொகை, வாழிடம் இன்று, வாழிடம் வரலாற்றில், மொழி, பொருளியல் நிலை இன்று, அரசு நிறுவனங்கள், உலகஅளவில், தமிழகத்துத் தொழில்கள் நலிந்தன, தமிழகத்திற்கு ராயல்டி இல்லை, இந்தியாவில் மீட்டர் கேஜ், சினிமா, தமிழகக் கடற்கரை, சந்தனக் காடுகள் எனப்பகுத்து விளக்கி - வளர்ச்சி அடைவதற்கான தீர்வுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

தீர்வுகள்

அரசு செய்ய, சமூகம் செய்ய, தனியார் செய்ய என்று தீர்வுகளைப் பிரிக்கலாம். அரசு பயிற்சி, படிப்பு, பட்டம், பட்டயம், மானியம், கண்காட்சி, ஆராய்ச்சி என்று அடிப்படைத்திட்டம் வகுத்து கொரியா போல, சைனா போல செயற்பட வேண்டும். விற்பனைச் சந்தைகளை தமிழகப் பொருள்களுக்கு உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும். சமூகம் சக தமிழளை இன உணர்வோடு கை தூக்கி விடவேண்டும். தனி மனிதர் தன் முனைபபோடு உழைக்க வேண்டும்.

நன்றி : மைசூர் முரசு இதழ் - மைசூர் தமிழ்ச் சங்கம். மைசூர் 570 009



மூடிவைத்திருப்பது சிலையை அல்ல

மூடிவைக்கப்பட்டிருக்கும் சிலை சிற்பத்திறன் காட்டும் ஏதோவொரு சிங்கார சிலையன்று. சீரியர், நேரியர், வீரியர் எனப்படுவோர்களின் சிந்தனைக்கெல்லாம் மேம்பட்டவொரு சிந்தனைப் பேராளரின் சிலையாகும்.

முடி வைக்கப்பட்டிருக்கும் சிலை யாரோ ஒரு சிலரின் விருப்பத்திற்காக ஓரிரு செல்வந்தரோ, ஏனோதானோவென்று ஓரிரு நிறுவனமோ அல்லது ஏதோஒரு அரசோ நிதி வழங்கி நிறுவப்பட்டதல்ல. பல்லாயிரக்கணக்கான மக்களின் விருப்பத்தின் பேரில், பன்னூற்றுக்கணக்கானவர்களிடம் ரூபாய் ஐந்து பத்து நூறு, ஆயிரமென்று நிதி திரட்டிப்பெற்று பல்லாண்டுக்கால முயற்சியின் பயனாக மாநகராட்சியே அனுமதி கொடுத்ததற்குப் பிறகே நிறுவப்பட்டதாகும்.

மூடி வைக்கப்பட்டிருக்கும் சிலைக்குரியவர் ஏதோவொரு நாட்டுக்கு அரசரோ, கோட்டைக்கு ஆசைப்பட்டவரோ, நாட்டைப் பிடித்தவரோ அல்லர். அறிவு, அன்பு, அமைதி, அடக்கம், அறம், ஆற்றல், உண்மை, ஒழுக்கம், உயர்வு, கல்வி, கடமை, காதல், வாழ்வு, போன்ற எண்ணிலாப் பண்புகளை எடுத்துரைத்த ஒரு சித்தாந்தச் சீரியர்.

வையமெலாம் வாழும் மாந்தர் வலிவோடு வளமோடு வனப்போடு வகையோடு வாழவேண்டும் என நீதி நெறிமுறைகளைத் தொடுத்துரைத்த நேயரின் திருவடியை மூடி வைத்திருப்பது என்பது உண்மையில் நீதி நெறிமுறைகளுக்கு எதிரான பொல்லாதாரின் செயலாகவே கருதப்படும்.

கருதப்படலாமா? கண்ணியந்தானா? சரிதானா? முறைதானா?

- சங்கநேயன் -
நன்றி : ஊற்று இதழ் - பெங்களூர்த்தமிழ்ச் சங்கம், பெங்களூர்.




தோள் சீலைப் போராட்டம்

நாகர் கோயில் லட்டாரத்தில் சில பகுதிகளில் ஒரு காலத்தில் கேரளாவுடன் சேர்ந்து இருந்தது. கேரளாவை நம்பூதிரிகள் ஆண்ட காலத்தில் அவர்கள் தாழ்ந்த சாதியினரை மிகவும் கடுமையாக அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள். குறிப்பாக தலித்துகளையும், நாடார் இன மக்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்தி இருக்கிறார்கள். அதிலும் அவ்வினப்பெண்கள் இடுப்புக்கு மேலே ஆடை அணியக்கூட அனுமதிக்கவில்லை. அன்றைய மன்னர்கள். பிற்காலத்தில் அப்பெண்கள் தோளில் சேலை அணிய அனுமதி வேண்டி ஆள்வோரிடம் விண்ணப்பம் வைத்துப் போராடவேண்டிய நிலை இருந்தது. அப்போராட்டத்திற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய காலகட்டத்தில் தான் அச்சம்பவம் நடந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மேலுக்குச் சேலை அணியக்கூடாது, திறந்த மார்புடனேயே வாழவேண்டும் என்ற சட்டம் அமுலில் இருந்த காலத்தில் ஒரு நாள் திருவிதாங்கூர் மகாராசா ஒரு ஊருக்கு விஜயம் செய்தார்.

ராஜாவின் வருகை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஊர்மக்கள் ராஜாவின் வருகைக்காகக் கூடினார்கள். அன்றைய வழக்கப்படி இடுப்புக்கு மேல் ஆடை அணியாமல் அரை நிர்வாணமாகவே பெண்கள் கூடி நின்றார்கள். சிறிது நேரத்தில் மகாராஜா தாரை தப்பட்டை முழங்கக் குதிரையின் மீது அமர்ந்து அங்கு வந்து சேர்ந்தார். பொதுமக்கள், மாலைகள் அணிவித்தும், மலர்ச்செண்டுகள் கொடுத்தும் மகாராசாவை வரவேற்றார்கள்.

அரைக்கு மேல் ஆடை அணியாத ஒரு இளம் பெண் மட்டும் மகாராசாவின் முன்னால் போய் நின்று, தனது அரையில் உடுத்தியிருந்து சேலையைத் தூக்கி மகாராசாவுக்குத் தன் பிறப்புறுப்பைக் காட்டினாள், உடனே காவலர்கள் அவளைக் கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். "அவளுக்கென்ன பைத்தியமா?" என்று ஒருவருக்கொருவர் பேசினார்கள்.

கைது செய்த அந்த இளம் பெண்ணை சிறையில் அடைத்தார்கள் காவலர்கள். மறுநாள் அரசவை முன்னால் அந்த இளம் பெண்ணை ஆஜர்படுத்தினார்கள். குற்றம் சாட்டப்பட்டு நின்ற அந்த இளம் பெண்ணை நோக்கி மகாராஜா "பொதுமக்கள் பலரும் கூடியிருக்கும் இடத்தில் அதுவும் என் முன்னிலையில் ஏன் அப்படி நடந்து கொண்டாய்?" என்றார். அந்த இளம்பெண் "மகாராசா நாங்கள் தாழ்த்தப்பட்ட பெண்கள், எங்களுக்கு மார்பை மறைத்து ஆடை அணியக்கூட அனுமதி இல்லை. எனவே எங்கள் இனப்பெண்கள் எல்லோரும் மேல் ஆடை இன்றித்தான் வாழ்கின்றோம். எங்கள் மார்பழகை ஊர் உலகத்திற்கெல்லாம் காட்டியபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லோரும் மார்பழகைக் காட்டித் திரியவேண்டும் என்று கடவுள் எங்கள் இனப் பெண்களின் தலையில் எழுதியிருக்கிறார். நாங்களோ " மகாராசா, தங்களிடம் எதைக் காட்டி வரவேற்க முடியும்? எல்லோருக்கும் காட்டிக்கொண்டிருக்கிற மார்புகளை மட்டும் உங்களுக்குக் காட்டினால் உங்களின் கெளரவம் என்னாவது? எனவே தான் நான் உங்களுக்கு எனது சிறப்பான பிறப்புறுப்பைக் காட்டி வரவேற்றேன். தவறென்றால் தாங்கள் தரும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று துணிவுடன் கூறினாள்.

அப்போதுதான் பரம்பரை பரம்பரையாகப் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் மட்டும் மார்பை மறைத்து ஆடை அணிய அனுமதிக்காத குற்றத்தை ராசா உணர்ந்தார். எனவே அந்த இளம் பெண்ணை உடனே விடுதலை செய்து விட்டதுடன், இனி தாழ்த்தப்பட்ட பெண்கள் யாரேனும் விரும்பினால், மேலுக்கும் ஆடை அணிந்து மார்புகளை மறைத்துக் கொண்டு வாழலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

- மூத்த எழுத்தாளர் சொல்லக் கேட்டு எழுதியவர் கழனியூரான் நன்றி : இறக்கை இதழ் - வாய்ப்பாடி



பீர்பால் கதை

அக்பரும் அவரது இரண்டு புதல்வர்களும் நீராடுவதற்காக அரண்மனைத் தோட்டத்திலிருந்த பொய்கைக்குச் சென்றார்கள். பீர்பாலும் அவர்களுடன் சென்றார். நீரில் இறங்குவதற்கு முன் மூவரும் தங்கள் அரச உடைகளை கழற்றிப் பீர்பாலிடம் தந்தனர். அதன் பிறகு மகிழ்ச்சியாக நீராடிவிட்டு கரையேறினர்.

கரையில் இருந்த பீர்பால், விலை மதிப்புள்ள அரச உடைகள் அழுக்காகி விடக்கூடாதே என்று அவற்றை தோளின் மேல் போட்டுக் கொண்டார். பீர்பாலைப் பார்த்தார் அக்பர். அவரை மட்டந்தட்ட நல்ல வாய்ப்பு என்று நினைத்த அவர், பீர்ப்ால் ஒரு கழுதை சுமையுடன் இருப்பது போலக் காட்சியளிக்கிறீரே என்று கேலியாகக் கேட்டார்.

அரசே, நான் சுமை சுமந்து கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் நீங்கள் சொல்வது போல ஒரு கழுதை சுமை அல்ல, மூன்று கழுதை சுமை என்று மூக்குடைப்பது போல பதில் தந்தார் பீர்பால்

நன்றி : ரோகிணி - விகடகவி இதழ்



நூறு ரூபா நோட்டு

திகைச்சுத் திக்குமுக்காடிப் போனார் யாக்கோபு. கையில இருக்கிற நூறு ரூபா நோட்டப் பாப்பாரு. அதக்குடுத்த அழகு மகன் முகத்தைப் பாப்பாரு. என்ன இது?

"லே மக்கா, இன்னா இருக்க நாகர்போவிலுக்குப் போயிட்டு வாறதுக்கு இத்தினிப் பெரிய நோட்டா!" அவருக்க பல் இல்லாத பிளந்த வாயி பிளந்தபடியே நிக்கு.

"போங்கப்பா நானில்ல தாரேன். போங்க போயி, நல்லாச் செலவாக்கிக்கிட்டு வாருங்க"

கிழவனுக்கு அடிச்சிருக்க யோகத்தப் பாருங்க! அவருக்க பெஞ்சாதி பிரகாசியம்மாள் பிரமிச்சுப் போயி நாடியிலே கையை வைச்சிக்கிட்டு நடு முத்தத்தில நிக்கிறாக.

யாகோப்பு திரும்பவும் தன் கையில இருக்கற அந்த நூறு ரூபா நோட்டப் பார்க்கிறாரு. அச்சடிச்ச மேனிக்கிப் புத்தம் புதுசா அப்பிடியே வந்திருக்கு. அந்த நோட்ட அப்பிடியே தன் முந்திரி பழம் முக்குக்கிட்ட கொண்டு வாறாரு. அச்சு மை வாசனை அசத்துது. பெரீய ஒரு அணைக்கட்டு, அணை நிறைஞ்சி தண்ணி பொங்கிப் பாயிது. நம்ம வாழ்க்கையும் இதுபோல பொங்குமுண்ணு ரூபா நோட்டு சொல்லுதோ! இந்தக் காந்தி... மனுசன் ஏன் இப்படிச் சிரிக்கறாரு? ச்சே, இந்தப் பையன் இப்படி ஒரு புது நோட்டத் தருவானா, தந்து என்னைய இப்பிடி மிரட்டுவானா... ஹ்ம்..அந்தப் பய குணம் அது.

போன வருசமும் இதே சமயம் தானே! இதே மாதிரி லீவுக்கு வந்திருக்கச்சில தானே! ஆமாமா... இளைய மகபுள்ள - பேத்தி சடங்குக்குக் குடும்பமே போயிருக்கச்சில, "லே தம்பி, கன்னியாகுமரி பக்கத்தில தான் இருக்கு. பார்த்துட்டு வந்திருவோம். பைசா தாலேன்னு கேட்டா மூத்தமவ. இந்தக் கிறுக்குப்பயன் என்ன செய்தான்... அப்பவும் இத்தே மாதிரிதான்! எங்கிருந்து தான் கொண்டு வந்தானோ, ஒரு கட்டுப் பத்து ரூபா நோட்டு, தொப்புன்னு அக்கா மடியில போட்டு, "போங்க, நல்லாச் செலவாக்குங்க" ன்னு சிரிக்கான்.

பணத்தப் பார்த்ததுமே மூத்தவ முகம் மாறிப்போச்சி. அந்த நோட்டுக் கட்ட அப்பிடியே அமுக்கிட்டா. சின்னதுகளுக்குப் பத்து ரூவாய்க்கு உப்புக் கடல வாங்கிக் குடுத்து அவ கன்னியாகுமரி சுற்றுலாவ முடிச்சிகிட்டா. "பெரியம்மா, விவேகானந்தர் பாறைக்குப் போணும். வளையல் வாங்கணும், கலங்கரை விளக்கில ஏறணும்" எந்த வேண்டுகோளும் அவ செவியில நுழையல்ல... குடும்பத்தில அந்தக் கசப்பு இன்னும் மாறல..

பெருமூச்சு விட்டுகிட்டே அந்த ரூபா நோட்டை ரெண்டு கண்ணுலயும் ஒற்றிக்கிட்டார் யாகோபு. நோட்டு கசங்கிடாமலும் விளிம்பு மடங்கிடாமலும் அதப் பொன்போல முந்தியில் பத்திரப் படுத்தி முந்தி முனைய இடுப்புல செருகினார்.

குடிலுக்குள்ளே குனிந்து நுழைந்து டிரங்குப் பெட்டியிலிருந்து முளங்கால் வரை தொங்கக்கூடிய பெரிய வெள்ளை அரைக்கைச் சட்டையைப் போட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டார். தேங்காய் எண்ணெய்யை ரெண்டு கைகளிலும் புரட்டி, தலையில அரக்கத் தேய்ச்சுக்கிட்டார். ஏற்கெனவே, பனைமரம் போல தாட்டிகமான உடம்பு. நூறு ரூபா நோட்டு மடியில ஏறிச்சா அது இன்னும் ஒரு பிடி உயரமா நிமிர்ந்து நிக்கிது.

"கஞ்சி குடிச்சிட்டுப் போங்க" யாக்கோப்பின் தோரணைகளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, பனை ஓலைக் குடிலின் வாசலில் குனிந்த எட்டிப் பார்த்தார். இல்லத்தரசி பிரகாசியம்மா.

"ஒன் கஞ்சிய நாய்க்கு ஊத்துளா" அந்த வட்டாரம் முழுவதும் எதிரொலித்திருக்கும் அவர் குரல். "ஆசாத் கடையில பிரியாணி தின்க போறாரு அய்யா. கஞ்சி குடிக்கணுமா! ப்பூ..! அதுக்கா பிள்ள பெத்து வச்சிருக்கேன்.!!"

கிளவியின் திகைப்பும் அதிர்ச்சியும் பாம்படம் தூங்கிய அவருடைய பன்முகத்தில் மின்னல் வெளிச்சம் போலப் படர்ந்து நின்றது.

"சாப்பிடுங்கப்பா" மகனின் கருப்பு முகத்தில் முத்துப்பல் வரிசை டாலடித்தது. "பிரியாணி என்ன, அதுக்கு மேல ஒரு கொத்துப் புரோட்டாவும் சாப்பிடுங்க"

மெதுவாக நடந்து பஸ்டாண்டுக்கு வந்தார் யாக்கோபு. பஸ் ஏறும் முன்னே பெட்டி கடையில வெத்தலைப் போடுவது தான் அவர் வழக்கம். ஆனால் இன்று மனம் முரண்டுப் பிடித்தது. ச்சீ இந்த அற்ப வெத்திலைக்காக நூறு ரூபா நோட்ட மாத்துவாங்களா! அதிலேயும் இப்படி ஒரு புத்தம் புதிய சலவை நோட்ட!!

பஸ்க்குக்காக வாராச்சி மரத்தோட மெலிஞ்சி போன நிழல்ல ஒதுங்கினார் யாக்கோபு. காலை பத்து மணிகூட ஆகல்ல. வெயில் இந்தப் போடு போடுதுன்னு ஆச்சர்யப்பட்டார். ஆனாலும் திடீர்னு அவருக்கு ஒரு எண்ணம். " 14 கல் தூரம் தானே நாகர்கோவில். சிறுப்பத்தில ஒரு நாளைக்கு மூணு தடவைகூட போயிட்டு வந்திருக்கேனே. ஏன் இப்பவும் நடந்து பாக்கக் கூடாது. போகும்போது நடந்தே போவோம். வரச்சில பஸ்ல வந்திறலாம். கால் செத்தவன்ல்ல கார் ஏறுவான். கடவுள் கொடுத்து காலிருக்கு. அரசாங்கம் போட்ட ரோடிருக்கு..உம்.. யோசனை முடியும் முன்னே ரோட்டிலே நடந்துக் கொண்டிருந்தார் அவர்.

சூரியனே உருகி வழிவது போலிருந்தது. அத்தனை வெயில்ல வெள்ளைச் சட்டை தொப்பு தொப்பாக நனைஞ்சி உடம்போடு ஒட்டிக் கொண்டது. மடியை அவிழ்த்து நோட்டைப் பார்த்தார். நல்ல காலம் அது நனையல்ல. சந்தோசமா இருந்து எட்டி நடையைப் போட்டார்.

தோவாளைப் பக்கம் வரும்போது அவருக்குக் கடுமையான தண்ணித் தாகம். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வாய்க்கால்ல களகளண்ணு தண்ணி பாய்ஞ்சிகிட்டுத்தான் இருக்கு. அந்தக் காலத்தில எத்தனையோ தடவை வாய்க்கால்ல இறங்கி ரெண்டு கையாலும் அள்ளி அள்ளிக் குடிச்சவருதான் அவரு. ஆன இன்னிக்கு வயக்காடு பூரா விசத்தை தூவறான். தண்ணியில என்ன யென்ன கலந்திருக்கோ. யார் கண்டா, சரி நாகர்கோயிலுக்குப் போனா யாவாரி தான் உடனே பணம் தருவானே. பிறகென்ன... ஒண்ணுக்கு ரெண்டா சர்பத் குடிச்சாப் போச்சி..

நாகர்கோயில்ல அவருக்குப் பெரிய ஏமாற்றம், தேடிப்போன வியாபாரி அன்னைக்குச் சந்தைக்கே வரல்ல. பசி வயித்தப் பிராண்டுது. ஒரு வினாடி மனசுக்குள்ளே ஒரு சவலம்.. ஆசாதுக்குப் போயிருவமா..

"சீ...எப்பேர்ப்பட்ட அற்ப பையலாப் போயிட்டா நீ. மனச் செருப்பால் தன்னையே அடிச்சிக்கிட்டார் அவர். வயித்த நினைச்ச குடி வாழாது என் மகனே!! “ சும்மாவா சொன்னாரு அய்யா.. ச்சை மனிசன்னா ஒரு உறுதி வேண்டாமா.. வர்ருன்னு ஒரு வெத்தல பாக்குக் கடையில போயி குடிக்கத் தண்ணி கேட்டாரு. ஒரு பானைத் தண்ணியை வச்சிகிட்டுத் தண்ணி இல்லன்னு கூசாமச் சொன்னான் அந்தப் பச்சைத் தமிழன். பெரியவர் சர்பத் குடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு. இவருக்கும் சர்பத் குடிக்க ஆசைதான். ஆனால் இந்த அற்ப சர்பத்திற்காக நூறு ரூபா சலவை நோட்ட மாத்தறதா! நேரே பஸ்டாண்டுக்கு நடந்தார். அங்கே அவருக்கு ஒரு ஞானோதயம்.

இவர் அண்ணன் பையன் ஒருத்தன் வாத்தியார் வேலையில சேர்ந்து முதன் முதலாச் சம்பளம் வாங்கினான். நூத்தி அம்பது ரூவா. அந்தக் காலத்துக்கு எவ்வளவு பெரிய தொகை அது. அதுல ஒரு நூறு ரூபா ஒத்த தாளு. மத்தது சில்லரை. நேரே வீட்டுக்குக் கொண்டாநது தாயர்கிட்ட குடுத்தான். அந்தத் தகப்பனப் பறிகொடுத்த பையன் தாய் என்ன செய்தான்னா, அத நேரே படக்கடைக்குக் கொண்டுபோயி கண்ணாடிச் சட்டம் மாட்டி வீட்ல கொண்டாந்து அவ இந்து என்கிறதுனால கும்பிட்டுக்கிட்டிருக்கிற லெட்சுமி படத்துக்குப் பக்கத்தில தொங்கவிட்டு அதுக்குப் பூச குடுத்த்ா. இன்னிக்கும் அந்த நோட்டுப் பூசை முகத்தில தான் இருக்கு. அவன் பல லட்சத்துக்கு அதிபதியாயிட்டான். இந்த ஞாபகம் வரவே அவர் மனசு திரும்பவும் புரழுது.

"சை முக்காலய முண்டாணி காரியமும் முடிஞ்சாச்சு. இனி வீட்டுக்கு நடக்குறதுக்கு மாச்சப்பட்டு இந்த மண்ணாங்கட்டி பஸ்ல ஏறதுக்காக ரூபா நோட்ட மாத்துறதா..ச்சை... அதுக்கு மேல யோசிக்க அவ லட்சுமி பக்கத்துல சட்டம் போட்டு தொங்கவிட்டா, நான் ஏசுசாமி பக்கத்தில தொங்கவிட மாட்டேனா... அவர் மனம் இடங்கொடுக்கல்ல..

மீனாட்சிபுரம் நுழைஞ்சி, ஒழுகினசேரி தாண்டி, மதம் பிடிச்ச ஒரு ஆண் யானை போல நடந்துக்கிட்டிருக்கார் யாக்கோபு. பசியும், தாகமும், சோர்வும் நெருக்க நெருக்க அவரோட மனஉறுதி மேலே மேலே எழும்புது. "இரு உன்னால என்னைய என்ன பண்ண முடியும்? வீடு போனாத்தான் ! சோறோ, தண்ணியோ இனி....

தன்னை எதிர்த்து நிற்கிற பசி தாகப் பேய்களை அமுக்கிப் பிடிச்சிக்கிட்டே புடதியில அறைகிற வெயிலயும் பொருப்படுத்தாம பாய்ஞ்சி போறாரு பெரியவரு...

வயித்த ஏதோ குடையிது போல... நெஞ்சு ஏதோ அமுக்குறத போல... தலைய ஏதோ இறுக்கிறது போல... கண்ணு மசங்குறது போல.. எதையும் அவர் பொருப்படுத்தல. எப்படியோ போறார்.

வீட்டை நெருங்க நெருங்க அவர் உடம்பு ஊறி பெருக்கெடுக்குது. லேசாக் கண்ணு செருகுது..

உம்... தள்ளாட்டம்...

எதாலயும் என் பிடிவாதத்த மாத்த முடியாது என்கிற ரீதியில் பல்லைக் கடிச்சிக்கிட்டே வீட்டுக்கு போயிட்டாரு. நிற்க முடியல்ல... உடம்பெல்லாம் படபடன்னு வருது. பூமிசுத்தறாப்பல இருக்கு. சட்டையைக் கூட கழட்டாம சாணி மெழுகின வீட்டு முத்தத்தில நீட்டி நிமிர்த்து மல்லாக்கப் படுத்திட்டாரு.

என்னவோ ஏதோன்னு ஓடி வந்த அவருடைய வீட்டம்மா அவர் கிடந்த கோலத்தைப் பார்த்து மிரண்டுட்டாக, ஒண்ணுக்கு மூணா உப்பிப் போயிருக்கு வயிறு. தலை அங்கட்டும் இங்கட்டும் பிரளுது. வலது கை அதுமட்டும் மடியிலிருந்த நோட்ட கவனமாக் கையில எடுத்துப் பிடிச்சிருக்கு. "பாத்தியாடீ என் சாமர்த்தியத்த" என்கிறது போல.

"ஐய்யோ, நூறு ரூபா நோட்டக் குடுத்து என் ராசாவ வம்படியாக் கொன்னுட்டானே பாவி!" பிரகாசியம்மாள் குரல் வெயில் நிறைஞ்ச ஆகாயத்தில துணையர் தவறவிட்ட பறவைபேல அலறி அலறிப் பறக்குது

- பொன்னீலன் -
நன்றி : ஓம் சக்தி மாத இதழ்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061