வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 20 - 07 - 2005

குறும்பாக்கள்

(o) குண்டு துளைக்காத காரில்
குலை நடுங்கப் பயணம்
பாதுகாப்பு அமைச்சர்

- கிரிஜா மணாளன் - திருச்சி

(o) கவிதைப் புத்தகம் புரட்ட
கடைசிவரை விடவேயில்லை
அட்டை ஓவியம்.

(o) தக்கை அசையாமல்
புழுவிழுங்கும் மீன்கள்
அரசியல்வாதிகள்.

- மா.கண்ணன் - இராசபாளையம்.

(o) நீண்ட பாலம்
தேடினேன்
எங்கே நதி.

(o) பணம் கொடுங்கள்
சிறப்பு வழியல்
சாமி தரிசனம்.

- ந.பச்சைபாலன் - மலேசியா.

நன்றி இனிய நந்தவனம் - திருச்சி

(o) அதிக வட்டி அதிக வட்டி
முதலீட்டாளர்களுக்கு
நாமக்கட்டி.

(o) ஐந்து லிட்டர் கேனில்
ஏழு லிட்டர் கொள்ளும்
ரேசன் கடையில்.

(o) கிரி வலம்
உடனடி பலன்
கால்வலி.

- பாரதி மணியன் -

நன்றி - குறிஞ்சி வட்டம் இதழ் 4



ஆசிரியரிடம் சொல்லுங்கள்.

எங்கள்
ஆசிரியர்
அடிக்கடி சொன்னார்...

படிப்பு என்பது
அலுவலுக்காக அல்ல
அறிவுக்காகத்தான்
என்று....

ஆசிரியரிடம் சொல்லுங்கள்

நாங்கள் இன்னும்
அறிவாளிகளாகத்தான்
இருக்கிறோம் என்று...


மணவை பொன். மாணிக்கம்

நன்றி - தாழம்பூ படப்படி இதழ் - எண் 271



உயிருக்கு ஓரறிவுயிர்.

பசுமைக் குடைவிரிக்கும்
அடர்மரங்களும்
பரிதியொளி பூமிகாண
விதம் பலபெற்று
இதம்பல கொடுக்கும்.
பூஞ்செடிக் கூட்டமும்
பசுமைப் பாய்விரித்து
பச்சை நிழல் சிந்தி நிற்கும்
புதர்கள், புல், பூண்டு
மூலிகைகள் யாவும்
ஓரறி வுயிர்கள்

விரிபுவனத்தில் உலவிடும்
சிப்பி சங்கு ஈரறிவாம்
கரையான் எறும்பு
மூவறிவாம்.
வண்டு தும்பி
நான்கறிவாம்.
மிருகங்கள் பறவைகள்
ஐந்தறிவாம்.
பிறவுயிர்க்கு உணவாகி உயிராகி
உயர்த்திடும்
ஓரறிவுயிர்கள் காண்பீர்

தகடூர் வனப்பிரியன்
நன்றி - தமிழ்க்குயில் இதழ் 5



ராகமாலிகை.

- காசி ஆனந்தன் -
பெண்
பிறக்கையில்
பூபாளம்.
பாவாடை
அணிகையில்
பாகேஸ்வரி
இனிய பதினாறில்
ஜனரஞ்சனி
கற்ற
கல்வியால்
சரஸ்வதி
காதலில்
மோகனம்
திருமணத்தில்
கல்யாணி
கூடலில்
அமிர்தவர்ஷணி
வளைகாப்பில்
வசந்தா
மழலையின்
சிரிப்பில்
மதுவந்தி
குழந்தைத் தாலாட்டில்
நீலாம்பரி
புதுமனை
புகுதலில்
கத்தபங்கரளா
இல்லற
இங்கிதத்தில்
இந்தோளம்
குடும்ப நிர்வாகத்தில்
நாயகி
சம்சார
சாகரத்தில்
சங்கராபரணம்
கணவனை
கண்டிப்பதில்
கரகரப்பிரியா
மகள்
திருமணத்தில்
ஆனந்தபைரவி
மகன்
திருமணத்தில்
தர்பார்
மருமகள்
அதிகாரத்தில்
அட்டாணா
பந்து ஜன
பிந்துமாபினி
பரிபாலனத்தில்
பிந்துமாலினி
சஷ்டியப்தபூர்த்தியில்
மத்யமாவதி
மூப்பில்
முகாரி
கண்ணன்
திருவடி சேர்கையில்
பிருந்தாவன சாரங்கா.

ஸ்ரீரங்கம் ஆர்.கோபாலன்

நன்றி - கணையாழி - சூலை 2005



இருந்தும் இல்லையென்றானதும்.

நேற்றெம் ஊரிருந்த காற்றில்
இதமான குளிரும்
நேர்த்தியான சுகமுமிருந்தது.
சந்தனக்கரப்பெனும் புனிதமிருந்தது.
வாசலிறங்கக் கோலமிருந்தது.
வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ
உள்ளே வெளிச்சம் நல்கின.
மின்சாரம் மினுங்காத ஒழுங்கையில்
இருளெனும் எழிலிருந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்
தேவநிலை சித்தித்தது.
ஊர்நிறைந்த கோயில்மணி நாதமும்
கூத்துப் பாட்டும்,
நாதஸ்வர மங்கலமும்
தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு
எங்கே துரத்திப்பிடி
என்பதாய்ப் போயின.

சாவுக்கும் சடங்குக்கும்
ஊனுருகியொழுக
பக்கத்திற் சுற்றமிருந்தது.
சனியானாற் பிடித்திழுத்து
எண்ணை முழுக்காட்ட
அத்தைமார் இருந்தனர்
புதுவருடத்தன்று புளியமரக்கிளையேறி
அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட
அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப்பொடியும்,
வெள்ளி முரலும்
கூனிறாலும் போட்டுக் குழம்புவைக்க
குஞ்சாச்சிமார் இருந்தனர்.
நிழல் விழுத்தும் முற்றத்துப்
பூவரசின் கீழே
பல்லாங்குழியாட அம்மான்மகள்மார்
இருந்தனர்.
தில்லையம்பலப் பிள்ளையார்
கோவிலுக்குப் போய்வர
திருக்கல் வண்டிகள் இருந்தன.
என்ன இல்லையென்பதாய்
எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்
சித்திரையிற் கஞ்சி
ஆடியிற் கூழென
வாய்க்குக்கூட வரையறையிருந்தது.
அப்பனுக்கு மூத்தவன்
ஆத்தாளுக்கு இளையவனென
சாவுக்குப் பின்னுமொரு
சங்கையிருந்தது.

வயல் வரம்பிலும்
வாய்க்காற் கரையிலும்
தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்
இணைந்ததும் பிணைந்ததுமென
இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைந்து
இடருருவிக் கிடக்கிறது வனப்பு.
துக்கித்திருக்கிறது சோபிதம்.

வெஸ்ரன் யூனியனில் - வந்திறங்கும்
வெளிநாட்டு ஆதாரம்
வேகமாய்ப் பெருகுதெனினும்
கொள்ளிக்குப் பிள்ளைகளில்லையே.

காட்சிப் பெட்டி
கைத்தொலைபேசி
துவைக்கும் பொறி
குளிளுறை இயந்திரமென
புதிதாயெழும் மாளிகையெங்கும்
நிறைந்துளது.
ஆயினுமென்ன....

முதுகேறி விளையாடிய
பிள்ளைகளில்லையே.
மூத்திரம் பெய்ய பேரர்களில்லையே.
முற்றத்து முருங்கை நிறைகாய்
சுமைதாங்காது கிளைமுறிய
மரமும் மாறிச் சரிகிறது
உருவிச்சப்ப ஒருவரில்லையே.
கிணற்று வாழை குலைமுற்றிக் கிடக்கிறது
ஒருவரில்லையே உரித்துத் தின்ன.

பழைய சாய்மனைகளுக்கெதற்குப் புதிய வீடு?
எல்லா அழகும் இல்லையென்றாக
எலியோடும் உத்தரத்தை வெறித்தபடி
எத்தனை நாளுக்கென்றுதான்
கைத்தடிகள் காவலிறுப்பது ?

பிள்ளைகளை அனுப்பினது பேய்வேலை
கூழோ கஞ்சியோ குடித்தபடி
ஒற்றைப் போர்வைக்குள்
எல்வோரும் உறங்கியிருக்கலாம்
இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்
இழந்ததை எண்ணிக் குமைந்ததுவாய்
உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்.

வெளியரர் வயலில், வயலோர் வெளியில்.
முட்டும் இழுப்புடன் மூத்தோரே ஊர் முழுதும்.

- புதுவை இரத்தினதுரை -

நன்றி - தென் ஆசியச் செய்தி இதழ் 16 சூன் 2005



பிதற்றுவதை நிறுத்திக்கொள்.

முற்போக்கு வாதியென்ற முகமூடி போட்டுக் கொண்டு
பிற்போக்கு ஜெயகாந்தன் பிதற்றிய கிறுக்கல்களை
எப்போக்கு மில்லாத பன்னாட்டு எந்தமிழர்
கொப்பாடும் கனிகளென்று கொண்டு மனமகிழ்ந்தார்,
இப்போது தானே புரிகிறது சனாதனத்தின்
கப்படிக்கும் இழிபிறவி இதுவென்ற கண்ணராவி.
ஞானபீடப் பரிசு இவன் நிசமுகத்தை நன்றாகக்
காணவைத்து விட்டது காசுக்காய்க் கற்பிழக்கும்
ஈனப் பிறவியா தூயதமிழ் ஏந்தல்களை
நாணமின்றி நாய்களென நாக்கொழுப்பைக் காட்டுவது ?
நாய்கள் அடேமடையா நன்றியுள்ள உயிர்களடா
தாய்முலையை அறுக்கின்ற தப்புயிர்கள் இல்லையடா
பேயா இனியேனும் பிதற்றுவதை நிறுத்திக்கொள்
வாயைத் திறக்காதே வண்டமிழர் வாயடைப்பார்
மண்ணையும் மொழியையும் மறவாது நேசிக்கும்
பொன்நிகர் தமிழர் புன்மொழியைத் தொழமாட்டார்.
தென்மொழியை செந்தமிழை திருக்குறளைப் போற்றுவோர்
உன்னடிமைப் புத்தியை ஒருபோதும் ஏற்கமாட்டார்
கன்னலடா எமக்குத் தனித்தமிழ்க் கருவூலம்
பன்னாடையே இனியும் பழிசுமந்து நாறாதே.

பாவலர். வீ.கோவி. மணாளன், கோலாலம்பூர், மலேசியா.

நன்றி - எழுகதிர் ஆடவை, தி.ஆ.2036



நெருப்பாகித் தீர்.

கல்லிலும் முள்ளிலும் நடந்து பழகு
புதரிலும் கொஞ்சம் புரண்டு பழகு
நஞ்சுடன் சற்றுக் கொஞ்சிப் பார்
விலங்கு வாழ்விலும் வேட்கை கொள் இனி
நீந்திப் பார்
ஒரு வெள்ளத்துடன் நீயும் உருள்
உருண்டு வடிவம் ஒழுங்கு பெறு
எழு, கனமாகு,
நெருப்பின் மேல் நட
நெருப்பில் குளி
நெருப்பைத் தின்
நெருப்பாகித் தீர்
அழிதிறம் பெறு
இல்லையேல்
அழிந்து போவாய் நீ.

- கவிஞர் இரணியன் -

நன்றி - தமிழ் நேயம் 23 -



தயங்குவதும் அரசாகுமா?

கடைவீதி விளம்பரங்கள் காண்கின்ற போதிலே
கண்ணீர் வருகின்றது - நம்
கன்னித் தமிழுக்கு வாழ்வில்லையே என்று
நெஞ்சம் கொதிக்கின்றது.

எங்கெங்கு நோக்கினும் ஆங்கிலக் காட்சிகள்
எவனுக்கும் வெட்கம் இல்லை - இந்தத்
தமிழ்நாட்டை ஆள்கின்ற தடியர்கள் அனைவர்க்கும்
தாய்மொழிப் பற்று இல்லை.

தான்பெற்ற குழந்தைக்குப் பால்கொடுக்க மறுக்கின்ற
தாயுமொரு பெண்ணாகுமா? - இந்தத்
தமிழ்நாட்டில் மாணவர்க்குக் தமிழ்க்கல்வி கற்பிக்கத்
தயங்குவதும் அரசாகுமா?

- க. அப்பாத்துரை -

தனித்தமிழ் மன்றம், நடுப்பட்டி, மணப்பாறை (வட்) 621 315



பயம்.

இப்போது போலில்லை
சிறு வயதில் இருட்டென்றால்
பேய் உலவும் என்று பயம்.
நட்டநடு நிசியில் வெள்ளை ஆடை பூண்டு
சலங்கை ஒலியுடன் தெருவில்
இரத்தவெறி தாங்கிப் போகும்
காட்டேரி என்று பயம்.

வேப்பமரக் கிளையென்றால்
இஷ்டமுடன் வந்தமரும் ஆவி என்று பயம்
மூன்று மைல் தள்ளி டூரிங் டாக்கீஸில்
இரண்டாம் ஆட்டம் பார்த்துத் திரும்பும் வேளை
சனீஸ்வரன் துரத்துவான் என
மரம் விட்டு மரம் தொடுமுன்
கை பின்னி, ஓங்கிப் பேசி
தொண்டைக்குள் துக்கம் நிறுத்தி
ஊர் வரும் வரைக்கும் உயிர் பயம்.

பள்ளியைக் கடந்த பின்னும்
பாதி பயம் நெஞ்சில் உண்டு
மீசை வந்த பின்னால்தான்
பயம் தெளிந்த இரவு எனக்கு.

இப்போது இரவென்றால் பயமில்லை
பகல் வேளை பயமிருக்கு
பகல் வேஷம் போட்டபடி
பல நூறு இதயங்கள்.

- ராசி அழகப்பன் -

நன்றி - தென் ஆசியச் செய்தி 15-7-2005



சுனாமி எனல் எதற்கு ?

வடமொழியைக் கோயிலுக்குள் வரவிட்டோம்
தெலுங்கிசைக்கும் வாய்பி ளந்தோம்
அடலுறுசெந் தமிழழிக்க ஆங்கிலத்தைப்
பயிற்றுமொழி ஆக்கிக் கெட்டோம்
கடைவணிகம் செய்தியிதழ் கலையுலகம்
தொலைக்காட்சி காட்டும் சின்னப்
படமொழியும் கலப்படமாய்ப் பண்ணிவைத்தோம்
போதாதோ பாழும் செய்கை ?

பல்லாயி ரங்கால முன்பிருந்தே
தமிழ்வாழ்வில் பதிந்து போன
பொல்லாத கடல்கோள்தான் பொங்கிவந்து
மீண்டும்நமைப் பொடிசெய் தாலும்
சொல்லாலே தமிழன்றோ? சொந்தமொழி
தனிலதனைச் சுட்ட லின்றி
எல்லாரும் சுனாமி எனல் எதற்கையா?
சீச்சீநம் இழிவு தானே ?

தெளிதமிழ் - திங்களிதழ். ஆடவை தி.ஆ.உ0ஙசு



உளறும் பத்திரிகைகளைத் தடைசெய்க.

தமிழன் இதழில் 19-11-1930 அன்று வெளிவந்த நான் மந்திரியானால் என்ற தலைப்பில் கிறுக்கன் எனும் புனைபெயரில் அப்பாதுரையார், 14 அம்சத் திட்டத்தினை வெளியிட்டார். இன்றும் நீளும் சாதி வர்க்க ஆணாதிக்கச் சூழ்நிலையில் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அதிகபட்ச சாத்தியங்களை அகப்படுத்தி, பகுத்தறிவு சமதர்ம வழியல் புதுவீச்சையும் உருவாக்கியவர் அப்பாதுரையார். சவால்கள் மிகுந்த எதிர்மறை பிராந்தியங்களை எவ்விதத் தயக்கமுமின்றி அசாத்தியமாக எதிர்கொண்ட அப்பாதுரையார், தன் 14 அம்ச பகுத்தறிவு - சமதர்மத் திட்டத்தினை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மைசூர் சமஸ்தான மன்னர், சென்னை மாகாண அமைச்சர்கள் பி.டி.ராசன் குமாரராசா ஆகியோர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. இந்தியாவிலுள்ள கோயில்களையெல்லாம் பள்ளிக்கூடங்களாகவும், சிறு கைத்தொழில் கூடமாகவும் மாற்றுவேன்.
2. கடவுள் பேரால் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தடைசெய்வேன்.
3. இந்தியா முழுமையும் ஒரே சம்பளம் என்று முறை வகுப்பேன். அதிகாரிகள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாத வகையில் சட்டம் கொண்டு வருவேன்.
4. தன் பெயர்களுக்குப் பக்கத்தில் சாதிப்பெயர் குறிப்பிடுவதைத் தடைசெய்து அபராதம் விதிப்பேன். சந்நியாசிகள், சாமியார்கள், மதகுருமார்கள் அனைவரையும் எங்குமில்லாமல் செய்து மதங்கள் என்பதை அழித்துவிடுவேன்.
5. மாணவ - மாணவியர்களுக்குரிய பாடப்புத்தகங்களிலுள்ள புராண, மதக் கருத்துகளடங்கிய பாடப்புத்தகங்களை அகற்றிவிடுவேன்.
6. தேசியம், புராணம், இதிகாசம், மதம், கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளைத் தடைசெய்வேன்.
7. 5000 ரூபாய்க்குமேல் எவரும் பணம் வைத்திருக்கக்கூடாது என்றும், சாதி மறுப்பு, கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் சட்டம் செய்வேன்.
8. பெண்கள் 18 வயதுக்கு மேல்பட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று சட்டம் ஆக்குவேன்.
9. மந்திரவாதிகளையும், சோதிடம் பார்ப்பவர்களையும் ஒழிப்பேன்.
10. பிச்சை எடுப்பவர்களை தடுத்தி நிறுத்தி, அவர்கள் வேலை செய்து பிழைக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வழி செய்வேன்.
11. எல்லா ஊர்களிலும் மக்களுக்குத் தேவையான பொருள்களை வழங்க, அரசாங்க கடைகளைத் திறப்பேன்.
12. இந்தியா எங்கும் ஒரே மொழி வழங்க ஏற்பாடு செய்வேன்.
13. தூக்குத் தண்டனையை எடுத்துவிடுவேன்.
14. கோயில் பேராலும் கடவுளின் பேராலும் இருக்கிற சொத்துகளைப் பறிமுதல் செய்வேன்.

நன்றி தலித் முரசு - சூலை 2005



கண்டதேவி தேரோட்டம் களையப்படவேண்டிய சாதி ஆதிக்கம்

தேவகோட்டை வட்டம் கண்டதேவியில் தேரோட்டம் என்ற செய்தி கடந்த 15 நாள்களாகச் செய்தி நாளிதழ்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. இங்குள்ள சொர்ணமூர்த்தீசுவரர் கோயில் தேர்வடம் பிடித்து இழுக்கும் உரிமைகோரி 1998 இல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருட்டிணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தரழ்த்தப்பட்ட மக்களுக்கும் வடம் பிடிக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்து வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டுகளில் அது நடைமுறைபடுத்தப்படவில்லை. 2002 ஆம் ஆண்டு காவல்துறையினரைக்கொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். 2003 இல் தாழ்த்தப்பட்ட மக்களும் தேர்வடம் பிடிக்க மாவட்ட ஆட்சியர் பெரும் முயற்சி செய்து வெற்றி பெறமுடியவில்லை என்பதால் தேரோட்டம் நின்றுவிட்டது. ஆட்சியர் தவறு செய்து விட்டார். எப்படியும் அவர் தேரோட்ட வழி செய்யாத தவறுக்காக மாற்றப்பட்டு 6 மாத காலம் கரத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சென்ற 2004 இல் பேச்சு வார்த்தை நாடகத்தின் விளைவாகக் குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் வடம் பிடிக்க அனுமதிக்கப்பட்டு, அவர்கள் வடத்தைத் தொட்டவுடன் அடித்து உதைத்து வெளியே தள்ளப்பட்டனர்.

இவ்வாண்டு மீண்டும் நீதிமன்றத்தை அனுகிக் கடுமையான எச்சரிக்கையினை மாவட்ட ஆட்சியருக்குக் கொடுத்து விழா நடத்த முயன்றனர். ஆனால் நீதிமன்றக் கட்டளைக்கு மாறாகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் பங்கேற்றனர் என மாவட்ட ஆட்சியர் பேட்டி கொடுத்துள்ளார். 26 பேர் மட்டும் வடம் பிடிக்கலாம் என அவர்களுக்கு மட்டும் அடையாளச் சீட்டுக் கொடுத்து ஏற்றாடு செய்தனர். ஆட்சியரும் மாவட்ட நிர்வாகத்தினரும் இந்த உண்மையினை - எங்கப்பன் குதிருக்குள் இல்லையென - குறைந்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்றனர் எனச் சொல்லியதால் ஒப்புக் கொண்டுள்ளனர்.

- மெல்கியோர் - நன்றி இலட்சியப் போராளி - சூலை 2005



சிறப்பு மிக்க இடங்கள்

எவ்வளவு பெரிய மகானாய் இருந்தாலும், அவரது பூதஉடலைத் திருக்கோயில் வளாகத்தில் அடக்கம் செய்யும் வழக்கம் இந்து சமய மரபில் இல்லை. ஆனால் மகான்கள் அடக்கமான இடம் காலப்போக்கில் திருக்கோயில்களாகியுள்ளன.

யோகீஸ்வரர்கள் மாகான்கள் ஒடுங்கியுள்ள இடங்களே பிரபல பிரார்த்தனைத் தலங்களாக விளங்குகின்றன என்பது சித்தர்களின் கொள்கை. பதினென் சித்தர்களின் சிறப்புப் பொருந்திய இடங்களைக் கீழே தந்துள்ளோம்.

1) பதஞ்சலி - இரரமேஸ்வரம்
2) அகத்தியர் - திருவனந்தபுரம்
3) கமலமுனி - திருவாரூர்
4) திருமூலர் - சிதம்பரம்
5) குதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை
6) கோரக்கர் - பேரூர்
7) தன்வந்திரி - வைதீஸ்வரன் கோயில்
8) சுந்தராநந்தர் - மதுரை
9) கொங்கணர் - திருப்பதி
10) சட்டமுனி - திருவரங்கம்
11) வான்மீகர் - எட்டுக்குடி
12) இராமதேவர் - அழகர்மலை
13) நந்தீஸ்வரர் - காசி
14) இடைக்காடர் - திருவண்ணாமலை
15) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
16) கருவூரார் - கருவூர்
17) போகர் - பழனி , தில்லை
18) பாம்பாட்டிச் சித்தர் - சங்கரன்கோயில்

நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்து ஒலைச்சுவடியில் உள்ள ஆதிகாலத்திலே என்ற விருத்தத்தின் அடிப்படையிலான பட்டியல் இது. போகர் ஐந்நூறு நூலில் இதே செய்திகள் சில மாற்றங்களோடு சொல்லப்பட்டுள்ளது.

சர்வோதயம் சூன் 2005 இதழ்.



பல்கலைக் கழகங்களும் ஓலைச் சுவடிகளும்.

அனைத்து முதுகலைப்பட்ட ஆய்வேடுகளில் சுவடி பெயர்த்து எழுதுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.

தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், செர்மனி போன்ற வெளிநாடுகளிலும், நூலகங்களிலும், அருங்காட்சியகங்களிலும், ஆய்வுக்கூடங்களிலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் ஒலைச்சுவடிகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன. அவைகளில் என்னென்ன செய்திகள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அவை கலை, அறிவியல், கணக்கு, மருத்துவம், வானவியல், இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சென்ற ஓரிரு நூற்றாண்டுகளில் பல தமிழ் ஆறிஞர்கள் சுவடிகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து ஒரு சிலவற்றைப் பதிப்பித்துள்ளனர். பல ஓலைச் சுவடிகளை வெளிநாட்டவர் கொண்டு சென்றுள்ளனர். செர்மனியில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் தமிழ் ஏடுகள் உள்ளதாக சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் முனைவர் சி.எஸ்.மோகனவேலு தமது செர்மனியில் கிடைத்த தமிழ்ப் புதையல் என்ற நூலில் கூறியுள்ளார். தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இன்னும்பல லட்சம் ஏடுகள் குவிந்து கிடக்கின்றன எனலாம். இந்த ஓலைச் சுவடிகளைப் பதிப்பிப்பது பண்டைய தமிழரின் அறிவாற்றலை வெளிக்கொண்டு வரும். அவை தற்போதைய அறிவியலுக்கும் மருத்துவத்திற்கும் தேவையான செய்திகளையும் கூறும்.

பல்கலைக் கழகங்கள் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வேட்டின் ஒரு பகுதியாக ஒரு ஓலைச்சுவடியாவது படித்துப் பெயர்த்து எழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு ஏதுவாகச் சுவடியியல் பற்றிய ஒருபாடம் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் ஒரு பாடமாகக் கற்றுத் தர வேண்டும். பல்கலைக் கழகங்கள் இதற்கான செயல் திட்டங்களையும், விதிமுறைகளையும் வகுத்து நடைமுறைபடுத்த வேண்டும்.

நன்றி - மள்ளர் மலர் சூன் 2005 இதழ்.



கல்வி முறையை நெறிப்படுத்துங்கள்

அண்மையில் தமிழக அரசு ஏற்பிசைவு பெறாத பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடுகின்றது. ஏற்பிசைவு பெறவேண்டுமானால் 40 நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டுமாம். காற்றோட்டமான பள்ளிக்கூடம் தேவைதான். விளையாட்டுத் திடலும், கழிவு அறைகளும் கட்டாயம் தேவையே.

தீப்பிடிக்காத நிலையில், சுற்றுச்சூழல் கேடு இல்லாத அமைப்பும் தேவை என்பது சரிதான். அவையெல்லாம் பிள்ளைகளின் உடல் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் தேவையானதே. ஆனால் அதைவிட பிள்ளைகளின் அறிவு நலன் முகாமையானது.

சுற்றுச் சூழலால் குழந்தைகளின் உடல்நலம் கெட்டுவிடுவதுபோல், முறையற்ற கல்வியால் குமுக நலன் கெட்டுப்போகும் அன்றோ ?

தமிழ்நாட்டில் கல்வி முறையை ஐந்து வகைக் கல்வி முறையாக அரசு பாகுபடுத்தி வைத்திருப்பதை மாற்றவேண்டும். அனைவர்க்கும் உரிய ஒரே வகைக் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டும்.

அந்த ஓரே வகைக் கல்வி முறையும் மக்கள் அறிவியலை ஊட்டுவதாக, மூட நம்பிக்கைகளை அகற்றுவதாக இருக்க வேண்டும். தமிழ்ப் புலமையும் வரலாற்றுத் தெளிவும் தரவேண்டும்.

இந்த நடைமுறைகளைச் செயல்படுத்துகிற கல்வி அமைப்பு முறையே இன்றைய கல்வியின் தேவை. அந்தக் கல்வி முறையை நடைமுறைபடுத்துவதையே அரசு முதல் பணியாக ஏற்கவேண்டும். அப்போதுதான் குமுகம் அறிவுக் குமுகமாக மாறும். தமிழகம் கல்வியால் ஒளிவிடும். எனவே முதலில் கல்வி முறையிலேதான் மாற்றம் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.

நன்றி - தமிழ்ச் சிட்டு சிறுவர் கலை இதழின் ஆசிரியர் உரை.



தமிழ் நாட்டின் தேசியமரம் பனை

1980 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 6 கோடி பனைமரங்கள் இருந்தன. அவற்றில் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

கடுமையான வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடிய பனைமரத்திலிருந்து நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனம்பழம், பதநீர் - இப்படிப் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல்நலத்திற்கு ஏற்றவை. பனை ஓலைகள், பனை நாரிலிருந்து கூடைகள் முடையப்படுகின்றன. இன்னும் எண்ணற்ற பயன்களைத் தரும் பனைமரம் தமிழர்களின் வாழ்வில் பல்லாயிரம் ஆண்டுகளாக நீக்கமற நிறைந்துள்ளது. இவ்வளவு பயனுள்ள பனைமரம் நம் தமிழ்நாட்டின் தேசிய மரமாக இருப்பதில் வியப்பென்ன ?

நன்றி - மணிக்குயில் சிறுவர் இதழ் - ஆடவை இதழ்.



கடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள்

கடனில் மூழ்கியுள்ள உழவர்களின் விழுக்காட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை ஆந்திரா தட்டிச் சென்றுள்ளது.

இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த மே 3 2005 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் 2003 வரை இந்தியாவில் மொத்தமுள்ள 8 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் உழவர் குடும்பங்களில் 48.6 விழுக்காட்டினர், அதாவது 4 கோடியே 34 லட்சம் குடும்பத்தினர் கடனில் மூழ்கி உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஆந்திராவில் உழவர் குடும்பங்களில் 82 விழுக்காட்டினர் கடனில் சிக்கியுள்ளனர். அடுத்து தமிழ்நாடு. தமிழகத்தில் 75 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் கடன் சேற்றில் சிக்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் ரூ 23,963 ஆகும். இது அனைத்திந்திய சராசரியைவிட இரண்டு மடங்காகும். தமிழக உழவர்கள் வாங்கியுள்ள இந்தக் கடனில் 52 விழுக்காடு தனியார் கெந்து வட்டிக் காரர்களிடமும், 48 விழுக்காடு அரசு மற்றம் கூட்டுறவு வங்கியிலும் பெற்றது.

கடன் படுவதற்கான முதன்மைக் காரணம் விவசாயம் செய்வதற்குத்தான் என்பதையும் ஆய்வறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாம் நிலைக் காரணங்களான திருமணம், கல்வி பிற குடும்பவிழாக்கள் வருகின்றன. நிலம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கடனும் அதிகமாக இருக்கிறது என்று மேலும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும் முதலாளிகளும், பெரும் அரசியல் புள்ளிகளும் அரசு வங்கிகளில் பெற்றுள்ள 45,000 கோடி ரூபாய்க் கடனைச் சத்தமின்றி வாராக்கடன் என்று தள்ளபடி செய்யும் அரசாங்கம், கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உழவர்களைக் கண்டு கொள்ளவதில்லை.

நன்றி - தமிழர் கண்ணோட்டம் - சூலை 2005.



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061