வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 1 - 06 - 2005

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்.

தமிழ்க் கவிப்பித்து

ஈழக் கவிஞர் முனைவர். க.சச்சிதானந்தன்.

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா.
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை.
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்று களிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும கிழங்குகளை தின்று மகிழ்வேன்.

மாடமிதிலை நகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்.
பாடி யவர் அணைக்கக் கூடிமகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்.
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி யேறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை.
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

நன்றி : தும்பை இதழ் 1 - 15-5-2005



விலகிப் போகிறேன்

சம்மதமில்லாத வாழ்க்கையோடு
சமாதானம் செய்து கொண்டு
இத்தனை நாள்களும்
உன்
வாய்க்கு நான் வாழ்க்கைப் பட்டேன்.

இன்று
விழுந்துவிட்டதாய்
நினைக்காதே... விலகிப் போகிறேன்.

என்னை
முத்தாய் மலர்த்திக்காட்டி
எத்தனை முறை
மறைத்திருக்கிறாய் - உன்
இதயத்தின் முதலைகளை ?

உன் வாய் நாற்றமடித்தது
நீ
பேசிய
பொய்களின் பிசிறுகள்
எனது இடுக்குகளில்
சேர்ந்ததால்தான்...

அப்போதெல்லாம்
கூச்சப்பட என்னை நீ
பொருட்படுத்தியதே இல்லை.
எனது
வெற்றிடத்தை நிரப்பிக்கொள்
செயற்கையால்.
பொருத்தவும்
கழற்றவும் வசதியாயிருக்கும்
உன் கொள்கை மாதிரி.

உனது வார்த்தைகளின்
கால்களுக்குக்
கவர்ச்சியூட்ட நீ
கட்டியிருந்த சலங்கையில்
ஒரு பரல் உதிர்ந்ததாய்
நினைத்துக்கொள்.
என் பிரிவை.

எப்போதும் போல்
தவறாக நினைக்காதே.

நான் விலகுவது
இன்னொரு வாய் தேடி அல்ல.

நன்றி : இரத்தினமாலை - மே 2005



என் கணவருக்கும் சமைக்கத் தெரியும்.

அவர் மிளகாய் அரைக்க
ஐந்தரை அடி அம்மியாய்
என் தந்தை.

மாமியார் மருமகள்
சண்டையைச்
சமரசம் செய்ய அஞ்சுவார்.

செய்யத் தெரிந்தது
சிருங்கார ரசம் மட்டும்.
பேச்சுக்குப் பேச்சு
டீ - போடுவார்.

மாமியார் நாத்தனார்
மத்தியில்
குழம்பு - வார்.
கோபத்தில் கொதித்துப்
பொங்கு - வார்.

ரொட்டியாய் உள்ளத்தைச்
சுடுவார்.
வார்த்தைகளால் வறுப்பார்.

என்றேனும்
எரிப்பார் என்னையும்
விறகாக...

என் கணவருக்கும் சமைக்கத் தெரியும்.

மண்வாசனை நூலில் வல்லம் தாஜூபால்
நன்றி : மது மலர் - ஏப்ரல் - மே இதழ்



பாவேந்தர் ஆத்திச்சூடி

அனைவரும் உறவினர்.
ஆட்சியைப் பொதுமை செய்.
இசைமொழி மேலதே.
ஈதல் இன்பம்.
உடைமை பொதுவே.
ஊன்றுளம் ஊறும்.
எழுது புதிய நூல்
ஏடு பெருக்கு.
ஐந்தொழிற்கு இறை.
ஒற்றுமை அமைதி.
ஓவியம் பயில்.
ஒளவியம் பெருநோய்.
கல்லார் நல்லர்.
காற்றினைத் தூய்மை செய்.
கிழிப்பொறி பெருக்கு.
கீழ்மகன் உணர்வெனும்
குள்ள நினைவுதீர்.
கூன் நடைபயிலேல்.
கெடு நினைவகற்று.
கேட்டு விடைபெறு.
கைம்மை அகற்று.
கொடுத்தோன் பறித்தோன்.
கோனாட்சி வீழ்த்து.
சதுர்பிறர்க் குழைத்தல்.
சாதல் இறுதி.
சிறார் நலம் தேடு.
சீர்பெறல் செயலால்.
சுவையுணர் திறங்கொள்.
சூழ்நிலை நோக்கு.
செல்வம் நுண்ணறிவாம்.
சேய்மை மாற்று.
சைகையொடு நூல்தேர்.
சொற்பெருக்காற்றல் கொள்.
சோர்வு நீக்கு.
தளையினைக் களைந்து வாழ்.
தாழ்வடிமை நிலை.
திருஎனல் உழுபயன்.
தீங்கனி வகைவிளை.
துன்பம் இன்பத்தின்வேர்.
தூய நீராடு.
தெருவெலாம் மரம்வளர்.
தேன் எனப்பாடு.
நைக்க இனிதுரை.
தொன்மை மாற்று.
தோல்வி ஊக்கந்தரும்.
நடுங்கல் அறியாமை.
நால்வகைப் பிறவி பொய்.
நினைவில் தெளிவுகொள்.
நீணிலம் உன்இல்லம்.
நுண்ணிதின் நுண்மைதேர்.
நூலம் புளுகும்.
நெடுவான் உலவு
நேர்பயில் ஆழ்கடல்.
நைந்தார்க்கு உதவிசெய்.
நொடிதொறும் புதுமை தேர்.
நோய் தீ ஒழுக்கம்
பல்கலை நிறுவு.
பார்ப்புப் பொதுப்பகை.
பிஞ்சு பழாது.
பீடு தன்மானம்.
புதுச்சுவை உணவுகாண்.
பூப்பின் மணங்கொள்.
பெண்ணொடாண் நிகர்.
பேயிலை மதமல்லால்.
பைந்தமிழ் முதன்மொழி
பொழுதென இரவுகாண்.
போர்த்தொழில் பழகு.
மறை எனல் சூழ்ச்சி.
மாறுவதியற்கை
மிதியடியோடு நட
மீச்செலவு தவிர்.
முகச்சரக்காய் வாழ்.
மூப்பினுக்கிடங் கொடேல்.
மெய்க்கழி வயற்கின்னா
மேலை உன் பெயர் பொறி
மையம் பாய்தல் தீர்.
மொடு மாற்றுப் பொதுவின்னா
மோத்தலிற் கூர்மை கொள்.
வாழாட்கு வாழ்வு சேர்.
விடுதலை உயிர்க்கு உயிர்.
வீடெனல் சாதல்.
வெறும் பேச்சுப் பேசேல்
வேளையொடு ஆரஉண்.
வையம் வாழ வாழ்.

நன்றி : தமிழ்க் குயில் - ஏப்ரல் 2005



வெறுங்கை என்பது மூடத்தனம்

கவிஞாயிறு - தாரா பாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்.
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்.

தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவா னந்தான் உன் எல்லை.

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலி நீ தூங்குவதா ? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா ?

விழி விழி உன்விழி நெருப்பு விழி - உன்
விழிமுன் சூரியன் சின்னப் பொறி.
எழு எழு தோழா உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி.

கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் - உன்
தோள்களிரண்டு தெற்கே வடக்காய்த்
துருவங் களுக்குப் பாலமிடும்.

நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத் தியரேகை - நீ
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வலம் வரும் புதுப் பாதை.

மண்புழுவல்ல மானிடனே - உன்
மாவலிகாட்டு வானிடமே
விண்ணும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைக ளல்ல வேள்விகளே.

நன்றி : தும்பை - இதழ் 1, 15-5-2005



இவனா தமிழன்.

என்ன பிடிக்கும் தமிழா - உனக்கு
என்ன பிடிக்கும்.?.

நாயர் கடையில் சாயா பிடிக்கும்.
ஆரியபவனின் காபி பிடிக்கும்.
உடுப்பி ஓட்டலில் புல்மீல்ஸ் பிடிக்கும்.
ஆந்திரா ஆவக்காய் பிக்கிள்ஸ் பிடிக்கும்.
அகர்வால் பவனின் அல்வா பிடிக்கும்.
புகாரி ஓட்டல் ஃபலூடா பிடிக்கும்.
ஃபைவ் ஸ்டார் ஓட்டலின் பஃபே பிடிக்கும்
பாம்பே ஸ்வீட்டில் ரசகுல்லா பிடிக்கும்
பாபா கார்னரில் பிட்சா பிடிக்கும்
பெங்களூர் ஐயங்கார் பவன் பிளம்கேக் பிடிக்கும்

அம்மாவை மம்மி யாய் ஆக்கப் பிடிக்கும்
அப்பாவை டாடி என்று செப்பிடப் பிடிக்கும்
மாமாவை அங்கிளாய் அழைக்கப் பிடிக்கும்
மாமியை ஆன்டியாய் மாற்றப் பிடிக்கும்
குழந்தையை பேபி என்று கொஞ்சப் பிடிக்கும்
பார்க்கில் லவ்வரை மீட் பண்ணப் பிடிக்கும்
சினிமாவில் சீனாதானா சிங் பண்ணப் பிடிக்கும்
நைட்டில் எம்.டி.வி. பார்க்கப் பிடிக்கும்
ஆனால் தமிழனே !
தமிழ்நாட்டில்
நல்ல தமிழில்பேச மட்டும் பிடிக்காது.
காவிரியில், கச்சத்தீவில், கண்ணகி கோட்டத்தில்
தமிழர்களின் உரிமைகளைக்
கேட்க மட்டும் பிடிக்காது.

நன்றி : கரூர் மக்கள் களம் - மே 2005



செந்தமிழ் செம்மொழியே.

அசைத்தல், அறைதல், இசைத்தல், இயம்புதல்,
உரைத்தல், உளறுதல், என்னுதல், ஓதுதல்,
கத்துதல், கரைதல், கழறுதல், கிளத்தல்,
கிளத்துதல், குயிலுதல், குயற்றுதல், குழறுதல்,
கூறுதல், சாற்றுதல், செப்புதல், நவிலுதல்,
நுவலுதல், நொடித்தல், பகர்தல், பறைதல்,
பன்னுதல், பனுவுதல், புகலுதல், மிழற்றுதல்,
மொழிதல், வலத்தல், விடுதல், விதத்தல்,
விள்ளுதல், விளைத்துதல், விளம்புதல், யாவுமே

சொல்லுதல் என்பதைச் சுட்டவே குறிக்கும்.
ஒருபொருட் பன்மொழி உயர்வினை அறிவாய்.
அருந்தமிழ் ஆற்றல் அணிநலம் பயில்வாய்.
என்றுமே இளமை மாறா கனித்தமிழ்
நன்னிலை ஆள்வாய், நமனையும் வெல்வாய்.
எத்தனை எத்தனை எழிலாம் சொற்கள்
முத்தென உண்டு மூழ்கியே தெளிவாய்.
செந்தமிழ் நந்தமிழ் செம்மொழி சீர்தமிழ்
வந்தனைக் குரியது வான்புகழ் தேன்தமிழ்.
மொழியினில் மூத்ததாய் மொழிந்திடும் முத்தமிழ்
அழிவெலாம் வென்ற அருந்தமிழ் அருள்தமிழ்
விழியெனக் காக்கவே விழிவிழி தமிழனே.
செந்தமிழ் செம்மொழியே - என்று நீ எங்குமே
முந்தியே முழங்கடா மூச்சுள மட்டுமே.

படைக்களப் பாவலர் துரை.மூர்த்தி.

நன்றி : உற்று - மே 2005



பழந்தமிழரின் ஆழ்ந்த இயற்கை நோக்கு

1. நா = நாக்கு, நாய் என்று நாம் கூறும் விலங்கைத் தொல்காப்பியர் நாஈ என்று வழங்கியிருந்தார். நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு ஓடும் விலங்கு என்ற பொருளைத் தருகிறது இச் சொல்.

2. பல் + இ = பல்லி ஆகிறது. பல்லியம் என்றால் பலதரப்பட்ட ஒலி என்ற பொருள் உண்டு. பல்லி கூச்சலிடுவதை கெளளியடித்தல் என்பர். பல்லியின் பற்கள் மிகச் சிறியவை.

3. பட பட வென இறக்கைகளை அடித்து வானில் பறப்பதால் பறக்கும் பறவைக்கு பட்சி என்ற பெயர் வந்தது.

4. பானைத் தண்ணீரை பானை நீர் என்பர். இச் சொற்கூட்டைத் தவறாகச் சிதைத்து பாணீ என்கிறது மராத்தி மொழி.

5. பூச்சி என்று இன்று வழங்கப்படும் சொல் ஒரே தமிழ்ச் சொல் அல்ல. இரு சொல் கூட்டு. பூவைச் சுற்றித் திரியும் உயிரி என்ற பொருள் தரும் இச்சொல் இருசொல் கூட்டாய் அமைந்துள்ளது.

6. பல் + றி = பன்றி ஆகியது. காட்டுப் பன்றிக்குப் பல் நீளமாக வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

7. கரு கருவென்று உடலெங்கும் கருமுடி படர்ந்த விலங்கு கரடி என்பர். அடி முதல் தலை வரை கருமுடி படர்ந்த விலங்கு என்பர்.

8. புசு புசு என்று மெல்லிய முடிகளைக் கொண்ட விலங்கு பூனை ஆகும். புசு புசு - பூசை, பூனையின் பழந்தமிழ்ப்பெயர் பூசை. ஆங்கிலத்தில் busy cat - கடுவன் என்ற சொல்லே cat ஆனது.

9. மா என்று கத்தும் பசுவை மாடு என்று அழைத்தான் பழந்தமிழன்.

10. மனிதனைப் போல மிகச் சில சொற்களைப் பேசும் பறவையைக் கிளி என்றான். கிளத்தல், மொழிதல், பேசுதல் - கிளி. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்ற மற்றொரு பெயரும் இட்டான்.

சாத்தூர் சேகரன் தொடர் - தமிழ் மொழியும் தவறான ஆய்வுகளும்.

நன்றி : தேமதுரத் தமிழோசை - மே 2005.



மானமும் அறிவும் தமிழர்க்கு அழகு.

( மே 2005 தென் செய்தி இதழின் தலையங்கம் )

கடந்த 11 ஆம் தேதி தெருவெங்கும் பெண்களின் கூட்டம். குறிப்பாக நகைக்கடைகளில் மிகப்பெரும் நெரிசல். சென்னையில் சில நகைக்கடைகள் காலை 5 மணிக்கே திறந்து விட்டார்களாம்.

அப்படி என்ன அந்த நாளுக்குச் சிறப்பு? முண்டியடித்துக் கொண்டு நகை வாங்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் அனைவரும் ஒரே இரவில் பெரும் செல்வர்களாகி விட்டார்களா என்ன ?

குழப்பத்துடன் விழிப்பவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் விடை சொல்வார்கள். இன்று அக்சய திரிதியை.
அப்படியென்றால்....?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு சொல் இருப்பதே எவருக்கும் தெரியாது. நகைக்கடைக் காரர்களின் கண்டுபிடிப்பாக இது இருக்கலாம்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திரிதியையாம். திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்த நாளில்தான் பிறந்தாராம். இந்த நாளில் நகை வாங்கினால் வீட்டிற்குச் செல்வம் வந்து குவியுமாம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிவிடப்பட்ட கதை இன்று தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கிறது. மூடநம்பிக்கையால் உந்தப்பட்டு அனைவரும் நகைக் கடை நோக்கி ஓடுகின்றனர்.

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன். உடன்பிறந்த சகோதரிகளுக்கு பச்சை வண்ணப் புடவை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் என்று புனையப்பட்ட கதையை நம்பி, ஊரெல்லாம் பச்சை மயம்.

எத்தனை பெரியார் தோன்றினாலும் நம் மக்களின் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியாதோ என்னும் அளவிற்கு அச்சம் பரவுகிறது.

சென்ற ஆண்டு இதே அக்சய திரிதியையில் நகை வாங்கியவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்வம் வந்து குவிந்துவிட்டதா? இந்த ஆண்டு நாட்டில் வறுமையே இல்லையா? மக்கள் நகை வாங்கினால் நகைக் கடைக்காரருக்குத்தான் செல்வம் வந்து குவியும்.

எந்தப் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லாமல், யார் எது கூறினாலும் அதை நம்பிக்கொண்டு ஒரே திசையில் மந்தைகளாக ஓடிக்கொண்டிருந்தால் மக்கள் வளம் பெருவது எப்படி?

தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களில் ஒருசாரார் இறைநம்பிக்கை உடையவர்களாக இருக்கக்கூடும. ஆனால் எவரும் மூடநம்பிக்கை உடையவராக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. எனவே தமிழ் மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பரவலைச் செய்ய வேண்டியதும் நம் கடமையாகவே உள்ளது.

மானமும் அறிவும்தான் மனிதருக்கு மட்டுமன்று, ஒரு சமூகத்திற்கும் அழகு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகமே நம்முடைய எதிர்கால இலக்காக இருக்க வேண்டும்.



தமிழனுக்கு என்று ஒரு அடையாளம் உள்ளதா?

சங்கமித்ரா -

தமிழர்களுக்கு என்ன அடையாளம்?

அவர்களுடைய பெயரா? ராஜேந்திரன், நரசிம்மன், நாராயணன், சுபஸ்ரீ - எதில் இருக்கிறது தமிழ் வாசம். அவர்களுடைய உணவா? பாம்பே ஹல்வா, மைசூர்பாகு, அக்கார வடிசில், எதில் இருக்கிறது தமிழ் மணம்.

இவனுடைய உடைகளா? வேட்டி - சட்டையைச் சொல்லலாம். ஆனால் தமிழ்க் கவிஞன்கூட பைஜாமா ஜிப்பாவில் உலா வருவதைத்தான் இப்போது பெருமையாக நினைக்கிறான். தமிழனின் கடவுள்களைச் சொல்லலாமா? மகமாயி, வீரன், முனியாண்டி, கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பணம் கொழுத்து செல்வாக்கோடு இருக்கும் தமிழ்ச்சாமிகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை, தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் திருப்பதி வெங்கடாஜலபதி, குருவாயூர், அய்யப்பன். இவனுடைய பண்டிகையா? தீபாவளி - நரகாசூரனுக்கு விழா, கார்த்திகை - கார்த்திகைக் கன்னிகளுக்கு விழா, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடி வெள்ளி, பங்குனி உத்திரம், மாசிமகம் - எது தமிழ்த் தனமாய் இருக்கிறது? தேடுங்கள், யோசியுங்கள், இவன் தமிழன் என்று சொல்ல என்ன இருக்கிறது.

ஒன்றுமே இல்லை அய்யா. சொல்லித்தேட அடையாளம் காட்டக்கூட வழி இல்லை. தமிழன் காணாமல்போய் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இருப்பார்கள் பெரும்பான்மை ஆரியத்திற்கு லாலிபாடும் அடிமைக் கூட்டத்தினர். இதோ நான் இருக்கிறேன் தமிழன். இதுதான் தமிழனின் அடையாளம் என்கிறவர்கள் சொல்லுங்களேன். அந்த அடையாளம் எல்லாத் தமிழர்களுக்கும் பொருந்துவதாக தமிழர் பகுதிகளில் தெளிவாகத் தெரிகின்றதாக இருக்க வேண்டுமா இல்லையா?

இருப்பது மொழி மட்டும்தான். நம் கிளர்ச்சிகள் மொழி அடிப்படையில் மட்டுமே வெற்றி பெருகின்றன. நாம் போராட பாதுகாத்துக் கொள்ள வேறு எந்த அடையாளமும் இல்லை என்று ஆகிவிட்டது. நமது உடை, உணவு, பண்டிகை, திருவிழா, பண்பாடு எதிலும் - தமிழ்த் தன்மை இல்லை. அதற்காக ஏங்கிச் சாகவேண்டுமா இல்லை. இருக்கின்ற அடையாளங்களைப் பெறலாம். புதிய அடையாளங்களை உருவாக்கலாம். கலை பண்பாட்டுக் கூறுகளை இலக்கியம், சரித்திரத்திலிருந்து கண்டுபிடித்து தூதுதட்டிப் புதுப்பிக்கலாம். நிறைய செய்யலாம்.

மொழி அளவில் பார்க்கும் இடம் எல்லாம் சநதிக்கும் தமிழர்களிடமெல்லாம் தமிழ் மட்டுமே பேசலாம். பேச வேண்டும்.

ஆண், பெண் அத்தனை பேருக்கும் - ழ - என்கிற சிறப்புத் தமிழ் எழுத்து வருகின்ற பெயர்களை வைக்கலாம், பெயரைக் கேட்டவுடனே இவர் தமிழர் என்று தெரியவேண்டும். சீக்கியர்களை சிங் என்று முடிகிறமாதிரி அழகன், கழகன், வேழம், தாழம்பூ, ஆழ்கடல் என்கிற மாதிரி தமிழ் அறிஞர்கள் பெயர்களை உற்பத்தி செய்து அழகும் தமிழும் கொஞ்சுகிற மாதிரி பெயர்களைச் சொல்லவேண்டும்.

உணவில் முட்டை, மீன், கறி - ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும்.

உடை - வீட்டில் எப்பவும் சட்டையும், வேட்டியும் அல்லது, வேட்டியும் துண்டுமாக இருக்கவேண்டும். சமூகக் கூடங்களில் திருமணங்களில் வேட்டி சட்டை துண்டு, தேசிய உடையாகக் கட்டாயம் ஆக்கப்படவேண்டும்.

விழா - தமிழர்களுடைய விழாக்கள்- நமது இலக்கியங்கள் போற்றும் விழாவாக - நமது பண்பாட்டை விளக்கும் விழாவாக, தமிழ்த் தலைவர்களின் பிறந்தநாள் விழாவாக இருக்கவேண்டும்.

தமிழர்களுக்கு உலக அரங்கில் சரியான அடையாளம் இல்லை, சில சிதைந்தன. பல சிதைக்கப்பட்டன. எதுவுமே அடையாளம் சொல்லும் அளவுக்கு ஒட்டாமல் போய்விட்டன. மொழி மட்டும்தான் இருக்கிறது. இன்று கையில் கூடுதலாகக் கிடைத்திருப்பது பெரியார் தந்த ஞானமும், அம்பேத்கர் தந்த விழிப்புணர்வும்தான். இந்தச் சின்ன துடுப்புகளை வைத்துக் கொண்டு நாம் கரையேர வேண்டும். தமிழர்கள் புது அடையாளங்களை ஏற்படுத்த வேண்டும். மானம், அறிவு, உழைப்பு, நாணயம் என்கிற முத்து வைர மணிகளால் தமிழனின் அடையாள மாளிகையை அலங்கரிக்க வேண்டும்.

ஆம். வாருங்கள். தமிழனின் அடையாளங்களைப் புதிதாக உருவாக்குவோம்.



சிறுகதைகள்

1. உபதேசம் (துளிக்கதை)

இராமையாவுக்கு வழக்கம்போல் வியாபாரத்தில் அன்று கல்லாப்பெட்டி நிறைந்து இருந்தது. சிறிய வியாபாரம்தான். உழைப்பிற்கேற்ற ஊதியம்.

மாலை 4 மணி. பழக்கப்பட்ட நண்பர் ஒருவர் கடையில் வந்து அமர்ந்து வணக்கம் சொன்னார். கடையை ஒரு நோட்டமிட்டுவிட்டு - கிழக்குப் பார்த்து வாசல் அமைந்திருந்தால் உங்கள் கடைக்குச் சிறப்பாக இருக்கும். பரவாயில்லை. நிலையில் கற்றாழையைக் கட்டுங்க... எலுமிச்சம் பழத்துடன் சங்குக் கயிறு கட்டுங்க.. அங்கே அம்மன்படம். இங்கே பிள்ளயைார் படம் என வைத்தால் - காசு கொட்டும் என இராமையாவைக் குழப்பினார்.

என் வீட்டில் வந்து பாருங்கள் - எல்லாமே சரியாக வைத்திருப்பேன் என்றார். பிறகு சற்று தாழ்வான குரலில் - டீ குடிக்க ஏதாவது சில்லரை இருந்தா- எனக் கையை நீட்டினார்.



2. தேடினான்.

நாட்டரசன் கோட்டை கிராமத்திலிருந்து சென்னை வந்து தங்கி, வேலை தேடும் படலத்தில் இறங்கினான் செழியன். அவசர அவசரமாகக் குளித்தான். 10 மணிக்கு இண்டர்வியூ. 8,30 மணி இரயிலைப் பிடித்தால் தான் செல்லமுடியும். மணி 8.00. சட்டையைப் போட்டுக் கொண்டு சில்லரையைச் சரிபார்த்தான்.

எப்போதும் சட்டைப் பையில் இருக்கும் அம்மன் படம். காணவில்லை. தேடினான். அம்மனே துணை. தேடினான். விட்டுப்போக மனமில்லை. தேடினான். 8.05, தேடினான். 8.15 தேடினான்., 8.20 தேடினான்., 8.30 தேடினான்.

தேடினான். வேளையைத் தவறவிட்டுவிட்டு, வேலையைத் தேடினான் தன் அரை வயதிலும்.

நன்றி : அணு - அஞ்சலட்டை இதழ். ஏப், மே 2005

3. ஒருநாள்....

முயல் ஒன்று விரைவாக ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு காகம் - நண்பரே.. முன்னால் போற நாயைத் துரத்திக் கொண்டு போறீரே...நீர் துணிச்சலானவர் தான் - எனப் பாராட்டியது.

உடனே முயல்....

நீர் என்னை என்ன நினைத்தீர்...என்னைக் கண்டுதான் நாய் தப்பி ஓடுகிறது. இதோ பாரும்...இன்னம் சிறிது நேரத்தில் நாயைப் பிடித்து விடுவேன் - என்றது.

காகம் தன்னைப் புகழவேண்டும் என முயல் நினைத்தது. விரைவாக ஓடியது.

அவ்வளவுதான். நாயருகே வந்த முயல். நாய்க்கு உணவானது.

காகத்தின் சொற்களைக் கேட்ட முயல் எச்சரிக்கை அடைந்திருக்க்லாம். வேறு திசையில் தப்பி ஓடியிருக்கலாம். என்ன செய்வது?

முயலின் வீண் பெருமை அதன் உயிரை இழக்கக் காரணமானது.

நன்றி : கன்மலை - மே 2005

4. பரிதாபம்

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் பொழுது போகல்ல. கைலாயத்தைப் பார்த்துப் பார்த்துச் சலிச்சுப்போச்சு. என்ன செய்யலாம்னு யோசிக்கிறாங்க. பூலோகத்தில போய் மனிதர்கள வேடிக்கை பார்க்கலாம் என்றார் பார்வதியம்மை. பரமசிவனுக்கும் அது சரியாப்பட்டது. ரெண்டு பேரும் பூலோகத்துக்க வாறாங்க.

பூலோகம் ரொம்ப அழகாக இருக்கிற மார்கழி மாச காலம். மழை பெய்து காடுகளெல்லாம் செழிச்சுப் பூத்துக் குலுங்குது. தேனீக்களோட ரீங்காரம், குருவிகளோட சத்தம், ஓடைகள்லயெல்லாம் மீனுக துள்ளி விளையாடிக் கிட்டிருக்கு. காடுகள்ல மான்கள் சுதந்திரமா மேய்ஞ்சிக்கிட்டு நிக்கி. காணக்காண அவங்களுக்கு மகிழ்ச்சியானா பெரும் மகிழ்ச்சி. அப்படியே நாட்டுக்கு வாறாங்க.

ஆனா நாட்டிலேயோ, அவங்க ஆசையோட படச்ச மனிதர்களுக்க வாழ்க்கைத்தான் பரிதாபத்துக்குரிய தாய்த் தெரியிது. இவ்வளவு செழிப்பு இருந்தாலும் பலர் எலும்பும் தோலுமாய்க் காட்சி அளிக்கிறாங்க. சிலர் அளவுக்கதிகமாய்க் கொழுத்துப் பருத்து மூச்சுத் திணறிக் கிட்டிருக்காங்க. இன்னும் சிலர் அறிவு மங்கி எதுக்கும் லாயக்கில்லாதவர்களா அலஞ்சிக்கிட்டிருக்காங்க. ரொம்பச் சங்கடமாய் போயிட்டு ரெண்டு பேருக்கும்.

ஆத்தங்கரையில ஒரு மாமர நிழல்ல வந்ததும் பரமசிவன் அப்படியே நின்னுட்டாரு. ஏன் என்று கேட்டார் பார்வதி.

அதோ அந்த மனுசன் என்ன பண்ணுறான் பாரு- பரமசிவன் கிண்டலாச் சிரிச்சாரு.

பார்வதியும் பார்க்கிறார். மரத்தோட உச்சியில ஒரு மனுசன்ல்லா உக்காாந்திருக்கான். பாவி இப்படி இருக்கான். கிளையோட நுனியில உக்காந்து அடிப்பாகத்தை யல்லா வெட்டிக் கிட்டிருக்கான். அய்யய்யோ, கொம்பு ஒடிஞ்சி கீழே விழுந்து சாகப் போறானே..

ரொம்பவும் பரிதாபப்பட்டார் பார்வதி அம்மா. பரமசிவனின் தோளைப் பிடிச்சி உலுக்கி - அந்த மனுசன எப்படியாவது காப்பாத்தணும், அதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் - என்று பரமசிவனின் தாடையைத தாங்கிக் கெஞ்சுறார்.

பரமசிவன் சொன்னார். கொம்பு ஒடிஞ்சி கீழே விழும்போது அவன் அம்மான்னு கத்தினால் நீ தாங்கிக்கோ, அப்பான்னு கத்தினா நான் தாங்கிக்கிறேன் .. சரியா...

இரண்டும் சொல்லாமல், தெய்வமேன்னு அவன் கத்தினால் . என்றாள் பார்வதி.

நாம ரெண்டு பேருமே சேர்ந்து காப்பாற்ற வேண்டும் என்றார் பரமசிவன் திருப்தியாக. அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு பார்வதிக்கு.

ரெண்டு பேருமே அவனத் தாங்குறதுக்காகத் தயாரா நின்னுகிட்டிருக்காங்க. கிளை நல்லா வெட்டுப்பட்டு, முறிஞ்சி சாயுது...நுனியில இருந்தவன் விழும்போது எப்படிக் கத்துறான், யார் காப்பாத்தறது என்று ஆர்வத்தோட கவனிச்சுகிட்டு நிக்கிறாங்க பரமசிவனும் பார்வதியும்..

அவனோ.. அம்மான்னும் கத்தல,, அப்பான்னும் கததல.. கடவுளேன்னு கூடக் கத்தல.. மம்மீன்னு கத்திகிட்டே கீழ வந்தான். என்ன பண்ணறதுன்னு தெரியாம பரமசிவனும் பார்வதியும் திகச்சி நிக்க, அவன் கட்டாந்தரையில விழுந்து முதுகு ஒடிஞ்சான்.

(சொன்னவர் - பொன்னீலன்)

கருத்துக்கு நன்றி : ஓம் சக்தி இதழ் - சூன் 2005



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061