வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 04 - 2005

குறும்பாக்கள்

(o) கணவன் கட்டளை
சீதை தீக்குளிப்பு
அடிமைப் பெண்.

(o) களவு போகிறது
அறிவுச் செல்வங்கள்
அயல் நாட்டில் வேலை.

புதுவை யுகபாரதி.

(o) பாரதிதாசன்
இங்கிலீஸ் ஸ்கூல்
தமிழுக்கும் அமுதென்று பேர்.

புதுவை தமிழ்நெஞ்சன்.

(o) குறைந்தது
முதுகுவலி - கைவலி
பள்ளி விடுமுறை.

கு.அ.தமிழ் மொழி

நன்றி : கரந்தடி இதழ் எண் 18

(o) வேருக்கு நீர்
கிளையில் கோடாரி
ஐ.எம்.எஃப்.

(o) மண்ணின் மைந்தர்கள்
கைநாட்டு வைக்கிறார்கள்
காப்புரிமைக்குக் கையெழுத்து.

(o) காப்புரிமைக்குக்
கட்டுப்படவில்லை
சிறகை விரிக்கும் கிளி.

(o) வண்ணத்துப் பூச்சியின்
நிறம் மாறியது
புகை நகரம்.

(o) மண்ணில் நிலா
காணவே இல்லை
வறண்ட ஏரி.

(o) எந்திரங்கள் வாங்கினால்
மாந்த உரிமைகள் தள்ளுபடி
உலகமயம் - தாராளமயம்.

புதுவை தமிழ் நெஞ்சன்
நன்றி : சுற்றுச் சூழல் புதியகல்வி.

(o) சமையலறைக்
கைதியின் பெயர்
இல்லத்தரசி.

நன்றி : விகடகவி - ஏப்ரல் 2005.


உரை வீச்சுகள்

கொம்பு தேடி
நாலா புறமும்
அலைந்த கொடியை
என்னில் ஏற்றிக் கொண்டேன்.

மிக மென்மையாக
மிதமான வெப்பத்தில்
என்னைச் சுற்றிப் படர்ந்து
முழுமையாய் மூடியது.
உதறி எறிய
முழுமையாய் முடியவில்லை.

எச்சரிக்கைகளின் பேரில்
உதறி எழுந்தேன்.
சுற்றி வளைத்து
நெருக்கிற தழும்புகள்
என்னில் வடுவாக இன்னமும்.

நச்சினார்க்கினியன்

நன்றி : காளான் டிசம்பர் 2004


எலிக்குட்டிகள்

எனது கணினி அறையில்
எலி குட்டிகள் தென்படுகின்றன.
பெரியதாகவும் சிறியதாகவும்
துண்டிக்கப்பட்ட
என் சுண்டுவிரல் போல.

எட்டிப் பார்த்துவிட்டு
மறைந்து விடுகின்றன.
தொலைபேசி நரம்பின்வழி
வெளியே சென்று
சங்கடத்துடன் திரும்பி வருகின்றன.

ஒருநாள் எலிக்குட்டி ஒன்றை
என் நகல் எந்திரத்தின்
கண்ணாடிப் பரப்பிற்குள் கண்டேன்.
பெருகும் எலிக்கூட்டமொன்றைப்
பற்றிய அச்சம் எழுந்தது.

வெண்மையான மேற்பரப்புகளில்
கறுத்த நிற அசுத்தங்களைப் பரப்புகிறது என்றாலும்
ஒரு குழந்தையின் செயலென மன்னித்து விடுகிறேன்.

கடும் வேலையின் பொழுது
அதன் வேடிக்கை சற்று ஆறுதல்தான்
அருகே வந்து விளையாடுகிறது.
என்னைப் பற்றிய அச்சமேயில்லை.

யாராவது அவைகளிடம் சொல்லுங்கள்
கணினியின் நரம்பொன்று துண்டிக்கப்படும் நாளில்
சகல நியாயங்களுடன்
அந்த எலிககூட்டத்தைக் கொல்வேன் என்று.

ஜீ. முருகன்

நன்றி : காளான் மார்ச் 2005


உடன் வருக ஊரை நோக்கி

அளவற்ற அருளாளன் வல்ல இறைவன்
அவன் தந்த நல்லருளால் தொடங்குகின்றேன்.
உளம் நிறைந்த கணவருக்குச் சாந்தி நிலை வரட்டும்.
உடல் நலமா ?... நாங்கள் சுகம்.. கடிதம் தன்னில்
எளியவளின் இதயத்தில் புதைந்திருந்த
எண்ணத்தை எழுத்தாக்கி அனுப்பியுள்ளேன்.
பிழையிருந்தால் பொறுத்தருள்க, கோபம் வேண்டாம்,
பிரியம் வைத்து உடன்வருக ஊரை நோக்கி.

பெருவாழ்வு வாழவேண்டும் என்றுஎண்ணி
பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய
பொருள்தேடி வெளிநாடு செல்வதொன்றும்
புதியதல்ல ஆண்களுக்கு: அன்று தொட்டு
இருந்து வரும் மரபு ஆகும். என்ற போதும்
அயலநாடே கதியென்று கிடந்திடாமல்
குறித்தகாலம் ஊர்வந்து தங்கிச் சென்றால்
குடும்பவாழ்வு செழிப்போடு மகிழ்ந்து நிற்கும்.

பலவருடம் ஆகிறது துபாய் சென்று
பல வசதி நம் வாழ்வில்
நிலபுலன்கள் வீடுவாசல் நகைகள் தோட்டம்
நதரத்தில் நான்கு கடை காரும் உண்டு.
சுலபமாக மனைப்பணிகள் செய்வதற்கு
விதம் விதமாய் விஞ்ஞ்ானக் கருவியுண்டு
இறையருளால் குறைவில்லை நமக்கு இன்று
சீரோடும் சிறப்போடும் ஊரில நாங்கள்
உண்டு உடுத்தி வாழும்போது, அன்பே நீங்கள்
தூரதேசம் அரபு நாட்டில் உழைத்துக் கொண்டு
தனித்திருந்தால் துயரம்தானே, எங்கள் நெஞ்சில்.
கோர வறுமை விரட்டவேதான் கடல் கடந்தீர்
காலமெல்லாம் அங்கிருத்தல் என்ன நியாயம் ?
ஆருயிரே இங்கும் பல கடமையுண்டு
அதை மதித்து
உடன் வருக.. ஊரை நோக்கி.

லால் நஜீர்

நன்றி : இனிய தமிழ் தென்றல் - ஜன மார்ச் 2005


தமிழ் உம் உயிரென்றால்

பாட்டெழுதும் பாமறவீர் !
பைந்தமிழ் உம் உயிரென்றால்
வேட்டெஃகம் கையேந்தி
விரைந்தெழுக துணிவாக
காட்டெருமைப் பகை வீழ்த்த
களங்காணப் புறப்படுக.

மேடையிலே அரிமாப்போல்
மேன்மையுடன் முழங்குகிறீர் !
ஓடை தரு குளிரான
ஒண்டமிழ் மேல் பற்றிருந்தால்.
கோடையிடிக் குரலெடுத்துக்
கொல்புலிபோல் பாய்ந்தெழுந்து
கேடுகளைக் களைந்திவீர்
கிழித்திடுவீர் தமிழ்ப்பகையை.

ஆட்சியிலே உள்ளவர்க்கும்
அருந்தமிழ்மேல் பற்றில்லை
மாட்சியுள்ள செந்தமிழை
வாழ்விக்கும் நோக்குமில்லை
ஏட்டளவில் பேச்சளவில்
எல்லோரும் ஈங்கிருந்தால்
மாட்டவருந் தமிழ்ப்பகைளை
மாய்த்திடுதல் எப்போது ?

பாவலர் இலக்கியன்

நன்றி : தமிழர் முழக்கம் மார்ச் - ஏப்ரல் 2005


தமிழ்த் திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயரா?
விழிமீன், உறங்கியது போதும் உலகத் தமிழரே.

பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

உலகில் ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். இங்குத் தமிழாகளின் ஆட்சி நடைபெறுகிறது. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தமிழ்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கிறாாகள். சட்டமன்ற உறுப்பினர்களதகவும், அமைச்சர்களாவும் பதவி வகிக்கின்றனர்.

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கொல்கத்தா, அகமதாபாத், போபால், டெல்லி போன்ற பெருநகரங்களிலும், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், தென்ஆப்ரிக்கா, கயானா, ரீயூனியன், சிசெல்சு, தாய்லாந்து, காம்பூச்சியா, வாவோசு, வியட்நாம், இந்தோனேசியா, பிஜி முதலிய பல நாடுகளில் சட்டபூர்வமான குடிகளாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினராகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் பதவி வகிக்கிறார். சிங்கப்பூர் அமைச்சர்களாகவும் தமிழர்கள் உள்ளனர். மலேசியா, தென்ஆப்ரிக்கா, மொரீசியசு, கயானா, சிசெல்சு போன்ற பல நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.

உலகத்தமிழர் பேரமைப்பும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர் அமைப்புகளும் இணைந்து உலகத் தமிழர் ஒற்றுமைக்காகவும் உலக நாடுகளரில் வாழும் தமிழர் சிக்கல்களுக்குப் பரிகாரம் காண்பதாகவும் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதே நேரத்தில் உலக நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களின் துன்பங்களிலோ, துயரங்களிலோ பங்குகொள்ளாது ஒரு கூட்டம் அவர்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கப் புறப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உழைத்துச் சேகரித்த பணத்தைக் கொள்ளையடிக்க வணிகச் சூதாடிகள் திரைப்படத்தின் வழியாகப் புறப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன்.

பாமர மக்களை ஈர்க்கும் வலிமை வாய்ந்த ஊடகமான திரைப்படங்கள் மூலம் ஆங்கிலமோகம் மக்களிடையே திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. வெறுக்கத்தக்க காட்சிகள், பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் காட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. தமிழ்த் திரையுலகில் தமிழர் அல்லாதாரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நிதி அளிப்பவர்கள் ஆகியோரின் பெரும்பகுதி தமிழர் அல்லாதாரே. இவர்களுக்குத் தமிழைப் பற்றியோ, நமது பண்பாடு பற்றியோ கொஞ்சமும் கவலை இல்லை. காசு ஒன்றே இவர்களுக்குக் குறி. காசுக்காக எதை வேண்டுமானாலும் இவர்கள் செய்வார்கள். தமிழ்த் திரையுலகம் இவர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குநர்களான தங்கர்பச்சான், புகழேந்தி, வ.செ.குகநாதன், சீமான், வேலுபிரபாகரன், வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித் தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.

இயக்குநர் இமயம் என்ற பெயர் பெற்ற பாரதிராஜாவைக்கூட தமிழ்ப் பகைவர்கள் விட்டு வைக்கவில்லை.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருப்பதால், தமிழ்பபடங்களுக்கு உலகச் சந்தைக்கு உரியவை ஆகிவிட்டன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகச் சந்தையைக் குறிவைத்தே படம் எடுக்கிறார்கள். தமிழ் பண்பாட்டுச் சீரழிவை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடம் இவர்கள் பரப்புகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

இந்தத் தீய போக்கை எதிர்த்துப் போராட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தயாராகி விட்டார்கள். தமிழக மக்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பண்பாட்டுப் புரட்சி முழுமையான வெற்றி பெற உலகத் தமிழர்கள் உதவவேண்டும்.

பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

நன்றி : தமிழ்ப்பாவை - மீனம்-மேழம் தி.ஆ.௨௰©௬



தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்

மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாடு.

தீர்மானங்கள் :-

1. அன்னைத் தமிழைக் காத்திட பல்வேறு மொழிப்போராட்டங்களில் உயிர்நீத்த மொழிப்போராளிகளுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் இம்மாநாடு வீர வணக்கங்களைச் செலுத்துகிறது.

2. தொடக்க நிலையிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழே பயிற்றுமொழி மற்றும் பாடமொழி என்பதற்கான சட்டத்தினை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமெனத் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. 1956 இல் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவந்தும் நடைமுறையில் இல்லாததால் ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. தமிழ்நாட்டில் உயர்வழக்குமன்ற நடவடிக்கைகளில் தமிழை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. பெயர் பலகை மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழுக்கே முதன்மையான இடம் அளித்திட வேண்டும் என்பதற்கான தமிழக அரசாணைகள் முழுமையான நடைமுறைப்படுத்தவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. தமிழை வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்திடச் சட்டம் இயற்ற வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

7. தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்திட அரசும் பொதுமக்களும் தத்தமது கடமைகளைச் செயலாற்ற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8. தமிழரது வாழ்வியல் நிகழ்ச்சிகளில் தமிழ் மரபுகளைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ் பெருங்குடி மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

9. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான கலைச் சொற்களை உருவாக்கி பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியினையும் அன்னைத் தமிழில் வழங்கிட ஆவன செய்யவேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10. தமிழ்ப் பெருங்குடி மக்கள் இனிய தமிழ்ப் பெயர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. ஆங்கிலமே தொடாபு மொழி என்னும் நிலைக்கு மாறாக அன்னைத் தமிழையே தொடர்பு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13. பேரா.நெடுஞ்செழியன், குணாவை விடுதலை செய்க.

நன்றி : தென் ஆசியச் செய்தி 2005 ஏப்ரல் 01-15



மகளிர் தினத்தில் ஒரு புரட்சிகரக் கொண்டாட்டம்

மங்கையராய்ப் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா - என்று பாடினார் கவிமணி. பெண்களின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் மார்ச் 8 ஆம் நாளை அகில உலக மகளிர் தினமாகச் சிறப்பிக்கின்றோம். இந்நிகழ்வை திண்டுக்கல் மாவட்டம் கோம்பயாண்பட்டி என்ற கிராமத்தில் மாவட்டத் தோழர்கள், கோம்பயாண்பட்டி, கிராம மக்கள் மற்றும் பொண்ணிமாந்துரை, மங்கமனூத்து மகளிரணியினர் ஆகியோர் இணைந்து சிறப்பித்தனர்.

சமுதயத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவரும் ஐந்து பெண்கள் விழாவுக்குத் தலைமை ஏற்றனர். குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டப் பொருளாளர் தோழர் வில்லியம் அனைவரையும் வரவேற்க நிகழ்ச்சி தொடங்கியது. மண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், உலகமயமாக்குதலில் பெண்களின் சிக்கலகள் பற்றியும், இட ஒதுக்கீடு, சமத்துவம், அடிமை நிலைகள் பற்றியும் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் கென்னடி, மாவட்ட பெண்கள் அணி அமைப்பாளர் தோழர் டெய்சி, மாநிலப் பொருளர் தோழர் மனுவேல், தோழர் ரோசாலி மற்றும் கோம்பயாம்பட்டி மூத்த தோழர் திரு.அருளானந்தம் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர், பெண்களின் பிரச்சனைகள் பற்றியும், சிசுக்கொலை, வரதட்சணை, கல்வி மறுப்பு, குடிகாரக் கணவனின் கொடுமைகள் போன்ற சமூகச் சீரழிவுகள் மற்றும் அவற்றின் தாக்கங்களைப் பற்றி கலைநிகழ்ச்சிகள், நடனம், பாடல், வழியாக மக்களுக்குச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. இளம் பெண்கள், பெரியவர்கள், மற்றும் சிறுவர், சிறுமியர் பெண்களுக்கு சமுதாயம் கொடுக்கும் புனைபெயர்களையும் (விதவை, வாழாவெட்டி, ஓடுகாலி, மலடி, வாயாடி) இழிவு படுத்தும் பழமொழிகளையும் நெருப்பிலிட்டுக் கொளுத்தி, இனி பயன்படுத்தமாட்டோம் என்று பெண்கள் சபதம் எடுத்தது, விழாவிற்குச் சிறப்பானதாக அமைந்தது. நிகழ்ச்சிகளை தோழர் அன்பு தொகுத்து வழங்கினார்.

நன்றி : இலட்சியப் போராளி - ஏப்ரல் 2005


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061