உரை வீச்சுகள்
கனவுகள்
அடிக்கிற
வெய்யிலின்
உக்கிரம் தெரிகிறது....
எத்தனை கல் சுமந்து
எத்தனை படி ஏறி
எத்தனை தடவை
சிமெண்ட் சட்டி தூக்கியிருப்பாள்.
எத்தனை சொட்டு
ரத்தத்தை முறித்து
வியர்வையாய் வெளியேற்றியிருக்கும்
இந்த வெய்யில்.....
மணற்சூட்டில் நின்றும்
சிமெண்ட் கலவையில் நின்றும்
எத்தனை எத்தனை தடவை
கால் கொப்பளித்துத் துடித்திருப்பாள்....
கொஞ்ச நேரம்
வேலைக்குத் தாமதமாய்..
போனதற்கு எத்தனை வசவு
வாங்கியிருப்பாள்.
தலை பிசுபிசுத்து
உடல் உப்புப்பூத்து
கண்முழி வளையம் கட்டி
தோல் கருத்துப் போனதெல்லாம்..
கனவில் வருகிறது !
அம்மாவிடம்
பொய் சொல்லி வாங்கிப் போன காசில்
பப்ஸ் சாப்பிட்டு, காப்பி குடித்து,
சினிமா பார்த்து...
சைட் அடித்து விட்டு வந்த
கனாவில் படுத்திருக்கும் போது....
இவையெல்லாம் கனவில் வருகிறது.
- கு. இலக்கியன் -
நன்றி : தச்சன் - பிப் - மார்ச் 2005
இரண்டு கவிதைகள்
ஒரு மிருகத்தின்
அறிவை
அதன் கழிபொருள் அளவைக் கொண்டு
கணிக்க முடியுமோ என்னவோ
அதோ பார்.
அந்த ஆண் மானை
தன் பின்னால்
எவ்வளவு சிறிய விட்டைகளை
விட்டுச் செல்கிறது.....
நகரங்களில் வாழ்வதற்காக
சிவப்பிந்தியர்கள்
படைக்கப்படவில்லை.
எவரும் அங்கு
நிலை கொள்வதில்லை...
சிலர் அங்கு குடியிருக்கிறார்கள்.
ஆனால்
எவரும் அங்கு வாழ்வதில்லை.
- பிரெஞ்சு கவிதையின் மொழிபெயர்ப்பு -
நன்றி : மொழி, கவிதை, எல்லைகள் கட்டுரையில் வெ.ஸ்ரீராம்.
திசையெட்டும் காலாண்டிதழ் - இதழ் 7 - சனவரி-பிப் 2005
அப்பா
உச்சிமுடி சேர்த்திழுத்து
கொப்பாகப் பிடித்து
நெற்கதிராட்டம் தலையைச் சுற்றி அடிப்பதும்
வாயைத் திறந்தால் ஏசல்களும், வசவுகளும்..
சிரிப்பை குத்தகைக்கு விட்டு விட்டு
வெத்தல போட்ட சிவப்பாய் சிவக்கும்
அவரோட கண்ணக் கண்டாலே
என் கால் சட்டை நனையும் பயத்தால்...
உதவாக்கரை,
உருப்படாதவன்,
ஊர் சுத்தி என
அவர் பிரியப்பட்டுச் சூட்டும்
பட்டங்கள் ஏராளம்.
தவிட்டிற்கு வாங்கியதாகவும்
குப்பையில் கிடந்தெடுத்ததாகவும்
என்னப் பெத்த நேரத்துக்கு
கழுதையோ, சலவைக் கல்லையோ
பெத்திருந்தால் பயன்படுமாம்
அழுக்கு சுமக்க...
அழுக்கு நீக்க...
இப்படி அடிக்கடி கடிந்து கொள்ளும்
அப்பாவின் பாசத்தை
என் பாதி உறக்கத்தில் தான்
கேட்க முடிகிறது தினமும்,
பெரியவன் சாப்புட்டானா ?
- திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் -
நன்றி : மதுமலர் - காலாண்டிதழ் 1
வரலாறு படைப்போம்
தமிழரொடு தமிழ்மொழியும் தாழ்ந்த மைக்குத்
தலையாய கரணியத்தை ஆய்ந்து பார்த்தோம்.!
தமிழ்வளர்ந்தால் தான்தமிழர் உயர்வார்! ஆனால்
தமிழ்தாழ்ந்தால் தமிழருந்த்ாம் தாழ்ந்து போவார்!
தமிழெங்கு மெதிலுமென முழங்கி யோன்தான்
தமிழெங்கு மெதிலுமிலா தாக்கி யோன்காண்.
தமிழினத்தின் தலைவரெனும் அவரால் தானே
தமிழ்தாழ்ந்து தமிழரெலாம் கடையர் ஆனார்!
முன்னேற்ற வேண்டியதோ தமிழ கத்தை!
முன்னேற்று கின்றாராம் திராவி டத்தை!
முன்னோர்செல் லும்வழியில் பின்னோர் செல்லும்
முன்னரே திசைமாறிப் போகு மாயின்
பின்னேரும் திசைமாறும்! மொழியை யொட்டிப்
பிரிந்தபிற கின்னும்ஏன் திராவி டத்தை
முன்னேற்றத் துடிக்கின்றார் அதற்கென் றிங்கே
மூன்றுதனிக் கட்சிகளா? வெட்கம்! வெட்கம்!
தமிழினமே உலகின் முதற்குடியாம் அந்தத்
தமிழினமோ ஆரியத்தால் வீழ்ந்த தந்நாள் !
தமிழகத்தில் தமிழருக்கோர் ஆரியப் பெண்
தலைவியெனில் தலைகுனிவு தமிழ ருக்கே
தமிழகத்தை தமிழ்மொழியை முன்னேற்றத்தாய்
தமிழரெல்லாம் ஒன்றாக இணைவோம் வாரீர்
தமிழகத்தின் முன்னேற்றம் வளர்ச்சி காணத்
தமிழகத்தை முன்னேற்றும் கழகம் வேண்டும்.
- பொறிஞர். கு.ம.சுப்பிரமணியன் -
நன்றி : தேமதுரத் தமிழோசை கும்பம் 2036
வரலாற்றில் கரும்புள்ளி
ஆங்கிலத்தில் படப்பெயரை வைப்பேன் உன்னால்
ஆனதைநீ பார்த்துக்கொள் என்கின் றானைத்
தாங்கிடஓர் அரசிங்கே இருக்கும் போது
தரைமீதா நடப்பார்கள் இவர்க ளெல்லாம் ?
ஈங்கிதனைக் கருதாமல் விட்டு விட்டால்
இருக்காது தமிழ்நாடே தமிழ்நா டாக,
தூங்குகின்றார் தமிழரென்ப துண்மை யில்லை
துஞ்சிவிட்டார் என்பதுதான் உண்மை யாகும் !
பண்பாட்டுச் சீரழிக்கும் திரைப்ப டத்தைப்
பார்ப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
புண்பட்டுச் சீழ்வடியும் குமுகா யத்தின்
புரைதீர்க்க மருந்திடுவார் எவரு மில்லை
தண்டமிழைக் கொன்றழிக்கும் தடிய ருக்குத்
தடியெடுத்துக் கொடுக்கின்ற அரசின் போக்கைக்
கண்டிக்கத் தவறிவிட்டோ மாயின் நாளை
கண்டிப்பாய்த் தமிழ்மொழியே அழிந்து போகும் !
- இரா. செம்பியன் -
நன்றி : தெளி தமிழ் - கும்பம் 2036
பகைவரணி குலைக்க ஒரு கூட்டிதழ் தேவை
பல்லாயி ரந்தமிழர் படிக்கின்ற
பேரிதழ்கள் பகைவர் கையில்
புல்லாயி ரம்பேர்க்கும் போகாத
சிற்றிதழ்நம் போல்வார் கையில் !
பொல்லாத கொடுநஞ்சைப் பொதுமக்கள்
மூளைக்குள் போக விட்டே
இல்லாத இடத்தில்போய் அடிக்கின்றோம்
நாம்பாம்பை ! ஏன்செய் கின்றோம் !
நமக்குள்நாம் சிற்றிதழ்கள் நடததுவதால்
யாதுபயன்? நலம்என் றாலும்
கமழ்த்துதுளிச் சந்தனந்தான் கழுவிடுமோ
சாய்க்கடையை? கசடு நீக்கித்
தமிழ்க்குலத்தை மீட்டெடுக்கத் தமிழ்பரப்பும்
இதழ்இலக்கம் தாண்ட வேண்டும்.
குமிழ்த்தெழுவீர், பகைவரணி குலைப்பதற்கோர்
கூட்டிதழைக் கூட்டு வோமே.
- இரா. திருமுருகனார் -
நன்றி : தெளிதமிழ் இதழ் - கும்பம் 2036
பிறர் காலை நத்துகின்றோம்
மேல்நாட்டார் முன்னேற்றம் கண்டாரென்றே
மேடையில் கையுயர்த்தி முழங்கு கின்றோம்
வால்பிடித்தே அவர்பின்னே போவதற்கும்
வரிசையாக நிற்கின்றோம் வெட்க மின்றி
நூல்முனையில் பறக்கின்ற பட்ட மாக
நூறாண்டாய் நாம்பட்டம் வாங்கு கின்றோம்
நூல்களினைப் பிறமொழியில் படிப்ப தாலே
நுனிப்புல்லை மேய்கின்ற மாடாய் ஆனோம் !
கல்லணையைக் கரிகாலன் கட்டு தற்குக்
கடல்கடந்தே ஆங்கிலத்தில் கற்றா வந்தான் ?
கல்லில்லாத் தஞ்சையிலே கோயில் கட்டக்
கவின்கலையைக் கடனாகப் பெற்றா வந்தான் ?
எல்லைகளைக் கடப்பதற்குக் கடலில் நாவாய்
கலம்செலுத்த ஆஃசுபோர்டில் படித்தா வந்தான் ?
பன்னாட்டுத் தொடர்பிருந்தும் நம்முன் னோர்கள்
பயிற்றுமொழி தமிழென்றே பேணி வந்தார் !
அழகாக வானத்தில் பறந்து செல்லும்
அருங்கருவி திருத்தக்க தேவர் தந்தார்
அழல்கக்கிச் சக்திதனைப் பெருக்கு கின்ற
அணுபிளக்கும் அறிவியலை ஒளவை தந்தார்
நிழலாகச் சுற்றுகின்ற கோள்கள் தம்மின்
நிலைப்பாட்டைப் பாட்டினிலே கணியன் தந்தார்
விழலென்றே நாமதனை நினைத்த தாலே
வீழ்ந்தின்று பிறர்காலை நத்து கின்றோம்!
பிறர்காலா நம்முடலைச் சுமந்து செல்லும்
பிறருழைப்பா நம்வயிற்றுப் பசியைப் போக்கும்
பறமொழியா சுயசிந்தை தோற்று விக்கும்
பிறகெதற்கு மாற்றான்கை பார்க்க வேண்டும்?
செறிவான செந்தமிழே நம்மைக் காக்கும்
சுயமாகச் சிந்தித்துப் புதுமை செய்ய
அறிவுதனைத் தருவதுவும் தமிழன்னை தான்
அருந்தமிழை நாம்மறந்தால் அழிவோம் நாமே!
- பாவலர் கருமலைத் தமிழாழன் -
நன்றி : தமிழர் முழக்கம் - பெங்களூர், பிப்-மார் 2005
பன்றியின் பாசம்
(சிறுகதை)
இரசிய நாட்டின் விலங்குக் காட்சிச் சாலை. அங்கு இருந்த கழலைப் பன்றி ஏழு
குட்டிகள் போட்டது.
குட்டிகளை யாரும் நெருங்கக் கூடாது. தாய்ப் பன்றி உடம்பை சிலிப்பிக் கொண்டு பாயும். குட்டிகளின் மீது
அவ்வளவு பாசம்.
ஆனால் அதே தாய்ப் பன்றி அங்கும் இங்கும் நடக்கும்போது குட்டிகளைப் போட்டு மிதித்தது.
குட்டிகளைப் பாசத்துடன் காத்த தாய்ப் பன்றியின் செய்கை வியப்பாக இருந்தது. குட்டிகளும் பால் குடித்த
பிறகு பயந்து ஓடின. அப்படியும் இரண்டு குட்டிகள் மிதிபட்டு இறந்து விட்டன.
தாய்ப் பன்றியால் மிதிபட்டே குட்டிகள் இறந்து போனது ஏன் ?
அது தான் இயற்கைத் தேர்வு.
ஆப்பிரிக்கக் காடுகளில் கழலைப் பன்றிகளுக்கு எதிரிகள் அதிகம். கொடிய விலங்குகளிடம் இருந்து காத்துக்
கொள்ள வேண்டுமானால் வலிமை வேண்டும்.
குட்டிகளின் வலிமையை அறியத்தான் தாய்ப் பன்றி அவ்வாறு செய்தது. வலிமையான குட்டிகள் தப்பிப் பிழைத்தன.
வலிமையற்ற குட்டிகள் இறந்து போயின.
குட்டிகளுக்குத் தாய்ப் பன்றி உணர்த்திய இயற்கை உண்மை என்ன ?
தகுதி உள்ளவையே தப்பிப் பிழைக்கும்.
நன்றி : மணிக்குயில் - சிறுவர் மாதஇதழ். கும்பம் 2036
|
|