வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 02 - 2005

குறும்பாக்கள்

(o) தவறுகள் செய்யாமலேயே
நிற்கும் தண்டனை
பேருந்தில்.

(o) இனி தமிழில் கடிதங்கள்
பறந்தது அரசாணை
ஆங்கிலத்தில்

(o) எரிபொருள் இல்லாமலேயே
வெந்தது உடம்பு
பேருந்து நெரிசல்.

பெரணமல்லூர் சேகரன்.

நன்றி : புதிய ஆசிரியன் - பிப் 2005



உரை வீச்சுகள்

பின்னடைவு

தாழ்வாரம் தாண்டிய
அவன் வீட்டு முன்வாசல்
தலைமுறை ஞாபகங்களை
கர்வமாய் சுமந்து நிற்கிறது.
முறுக்கு மீசைகள்
நெற்றிகள் மேல் சைவப்பட்டை
தலைப்பாகை அணிந்த உருவங்கள்
கறுப்பு வெள்ளை புகைப்படங்களாய்
கண்ணாடி சட்டகங்களுக்குள்
குறுநகை தவழும் உயிர்ப்புடன்
இது அப்பா
இது தாத்தா
இது தாத்தாவின் அப்பா
இது தாத்தாவின் தாத்தாயென
வரிசையாய் படம் காட்டினான்
அத்தெரு நண்பன்.
என் தாத்தா உருவமே
நினைவில்
மசமசவென்றுதான் அசைகிறது.
முத்தாத்தன் பெயரும் நானறிவேன்.

- வெ. வெங்கடாசலம் -

நன்றி : தலித் முரசு - பிப் 2005



காசி ஆனந்தன் சொன்ன செய்திகள்

ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் மேடைக்கு வந்து பல குரல் நிகழ்ச்சிகளை நடத்தினான்.

டாக் - எப்படி குரைக்கும் தெரியுமா ? என்று குரைத்துக் காட்டினான். க்ரோ - எப்படிக் கத்தும் என்று கரைந்து காட்டினான். கேட் எப்படி குரல் எழுப்பும் என்று குரல் எழுப்பினான். கடைசியாக டாங்கி - எப்படிக் கத்தும் என்று கத்தினான்.

கடைசியாக நான் பேசும்போது, இந்தச் சிறுவன் நாயைப்போல் குரைத்துக் காட்டினான். காக்கையைப் போல கரைந்து காட்டினான். பூனையைப் போல மியாவ் என்றான். கழுதையைப்போலவே கத்தினான். ஆனால் தாய்மொழியான தமிழில் பேச முடியவில்லையே. இந்தக் குறையை அவனது பெற்றோர்கள்தான் போக்கவேண்டும்.

பல தமிழ்ப் பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய கேவலம் அல்லவா ?

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைமைக் கழகத் திறப்பு விழாவில் பேசியது (25-12-2004)

நன்றி : முகம் - பிப் 2005



மூலதனம் (கிராமியக் கதை)

ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரும் ஆண்மக்கள். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரியவரின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாள்.

பெரியவர் தன் மூன்று மகன்களையும் அழைத்து, மூவருக்கும் தன் சொத்துக்களை சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். அதன் பிறகு தன் மூன்று மகன்களில் மூத்தவனைத் தனியே அழைத்து நான் நாளை முதல் காசிக்கு யாத்திரை செல்லப் போகிறேன். உனக்காக, நம் தோட்டத்துப் புங்கமரத்தின் அடியில் ஒரு பொருளை வைத்திருக்கிறேன் அதை எடுத்துக் கொள் என்று கூறினார்.

சிறிது நேரம் கழித்து நடுவுள்ள மகனைத் தனியே அழைத்து நாளை முதல் நான் காசிக்குச் செல்கிறேன். உனக்காக ஒரு பொருளை நம் தோட்டத்துப் புங்க மரத்தடியில் வைத்துள்ளேன் எடுத்துக் கொள் என்று கூறினார்.

அதன் பிறகு கடைக்குட்டி மகனைத் தனியே ஒரு இடத்துக்குக் கூட்டிச் கொண்டு போய், யப்பா நான் நாளை முதல் காசிக்குச் செல்லப்போகிறேன். உனக்காக ஒரு பொருளை நம் தோட்டத்துப் புளியமரத்தடியில் வைத்துள்ளேன் எடுத்துக் கொள் என்று கூறினார்.

மறுநாள் பெரியவர் திட்டமிட்டபடி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கிப் பயணமானார்.

தந்தையார் சென்ற பிறகு மூத்த மகன் மறுநாள் புங்க மரத்தைச் சுற்றித்தோண்டிப் பார்த்தான். ஒரு செப்புப் பானை நிறைய நெல் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். நெல்லோடு உள்ள செப்புப் பானையை மனைவியிடம் கொடுத்தான். அவள் அதை அப்படியே அடுப்பில் ஏற்றி, அதில் நீர் ஊற்றி அடுப்பைப் பற்றவைத்து நெல்லை அவித்துக் காயப்போட்டு குத்தி அரிசியாக்கிச் சமைத்து விட்டாள்.

அடுத்தநாள் நடுவுள்ள மகன் தோட்டத்தில் உள்ள பூவரச மரத்தைச் சுற்றித் தோண்டினான். அங்கும் ஒரு செப்புப பானை நிறைய நெல் இருந்தது. நடுவுள்ள மகன் பெரிய செலவாளி. தன் தந்தை ஏதோ புதையல் வைத்துவிட்டுச் சென்றிருப்பார் என்று நினைத்த நடுவுள்ள மகன், செப்புப் பானையில் இருந்த நெல்லைப் பார்த்து ஏமாந்து விட்டான். இதை வைத்து என்ன செய்ய ? என்று யோசித்தவன் செப்புப் பானையையும், அதிலிருந்த நெல்லையும் விற்றுச் செலவு செய்து விட்டான்.

கடைக்குட்டி மகன் மூன்றாவது நாள் புளிய மரத்தைச் சுற்றித் தோண்டினான். அங்கும் ஒரு செப்புப் பானை நிறைய நெல் இருந்தது. அதைப் பார்த்ததும் கடைக்குட்டி மகன் இது ஏதாவது விசேசமான நெல்லாக இருக்கும். அதனால்தான் நம் தந்தை இந்த நெல்லை இங்கு புதைத்து வைத்திருக்கிறார் என்று நினைத்து, அந்த நெல்லை வீட்டிற்கு எடுத்து வந்து நிழலான இடத்தில் உலர்த்தி அதை விதை முதல் என்று எடுத்து ஒரு குலுக்கைக்குள் போட்டு வைத்தான்.

மழை பெய்ததும் அந்த நெல்லை ஒரு இடத்தில் பாவி நாற்றாக்கி, பிறகு அந்த நாற்றைப் பிடுங்கித் தன் வயலில் நட்டான். அது ஒரு அபூர்வ ரகமான வித்தாக இருந்ததால் அந்த இடத்தில் ஏராளமான ஏராளமான நெல் கிடைத்தது. கடைக்குட்டி மகனுக்கு விளைந்த நெல்லில் இருந்து விதை முதலை எடுத்து மீண்டும் நிறைய இடத்தில் அந்த நெல்லைப் பயிர் செய்தான். அவன் அந்தப் புதுரக நெல்லைப் பயிரிட்ட இடத்தில் எல்லாம் ஏக போகமாக நெல் விளைந்தது. எனவே, அவன் ஒரு சில ஆண்டுகளிலேயே பெரும் பணக்காரனாகி விட்டான்.

சில ஆண்டுகள் கழித்து காசிக்குச் சென்று பெரியவர் திரும்பி வந்தார். மூதத மகன் தனக்குக் கொடுத்த நிலத்தில் பெரும்பகுதியை விற்றிருந்தான். நடுவுள்ள மகன் தன் வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு பரம ஏழையாக இருந்தான். கடைக்குட்டி மகன் மட்டும் மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தான்.

தந்தையார் தன் கடைக்குட்டி மகனிடம் சென்று உனக்கு ஏதப்பா இத்தனை சொத்து சுகமும் ? என்று கேட்டார். அதற்கு கடைக்குட்டி மகன் எல்லாம் நீங்கள் தந்ததுதான். நீங்கள் புளிய மரத்தடியில் புதைத்து வைத்திருந்த விதை நெல்லை மூலதனமாகக் கொண்டு பயிர் செய்ததால்தன் எனக்கு இத்தனை செல்வங்களும் வந்தன என்று கூறினான். தான் காசிக்குப் போகும் முன் கூறிய வார்த்தையின் உள் அர்த்தத்தை தன் கடைக்குட்டி மகன் மட்டும்தான் சரியாகப் புரிந்துகொண்டு செயல் பட்டிருக்கிறான். மற்ற மகன்கள் இருவரும் தான் கூறியதின் உட்பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. என்று உணர்ந்து கொண்ட தந்தை தன் கடைக்குட்டி மகனை மனதாரப் பாராட்டினார்.

- கழனியூரான் -

நன்றி : பயணம் - சன 2005



எது சிறந்த எழுத்து ?

எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த படைப்பாளி ? இது எல்லாம் பண்டிதர் பெருமக்களின் பிரிவினை மட்டுமே. நாம் அவ்வாறு கருதக்கூடாது. நமக்குப் பிடித்தமானதே சிறந்த படைப்பு.

தீண்டாத வசந்தம் என்ற நாவலை நெஞ்சோடு தழுவிக் கொண்டவர்கள் உள்ளனர். மேலுக்குப் பாராட்டி, உள்ளே ஏசியவர்களும் உள்ளனர். படைப்பை விட வாழ்க்கை சிறப்பானது. அந்த வாழ்க்கை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் இருக்க வேண்டும். வாழ்வின் அனுபவம் இல்லாவிட்டால், நமக்கு எழுத்திலே வெறும் அழகு மட்டுமே தென்படும்.

தீண்டாத வசந்தம் நாவல் வாழ்க்கையின் குறிப்புகள் மட்டுமே. அந்தக் குறிப்புகள் இன்னும் இருக்கின்றன. மூன்று பாகங்கள் எழுத நினைத்தேன். இது இரண்டாம் பாகம் தான். முதல் பாகமும் மூன்றாம் பாகமும் எழுதவேண்டியுள்ளது.

என் முன்னோர் விட்டுச் சென்ற எவ்வளவோ வாழ்வின் பின்னால் இருக்கின்றன. அதையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டி இருக்கிறது. இந்தப் பூமியில் வாழும் மனிதர் உள்ளங்களிலே நல்ல எதிர் காலம் குறித்த நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதுதான் சிறந்த படைப்பின் பொறுப்பாகும். இன்றைய தேவையும் அதுதான்.

தீண்டாத வசந்தத்தில் ரூத்தின் நினைவு போராட்டத்திலே ஓய்வு கொள்கிறது. என் எழுத்தும் அப்படியே. எனது ஓய்வும் போராட்டத்திலே தான். மூச்சு நின்றாலும், எழுதுகோல் நின்றாலும் அங்கேயே. என் எதிர்காலத் திட்டம் என் கைகளிலே இல்லை. மக்கள் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் போராட்டப் பாதையிலேயே இருக்கிறது.


தீண்டாத வசந்தம் நாவல் ஆசிரியர் ஜி.கல்யாணராவ் - தெலுங்கு இலக்கியக்
காலாண்டிதழான - பிரஸ்தானத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து...

நன்றி : தலித் முரசு - பிப் 2005


மலேசியா - கோலாலம்பூரில் நடைபெறவுள்ள
ஆசியப் புகையிலை வர்த்தக மாநாட்டினை தடை செய்யக் கோரி
10 இலட்சம் கையெழுத்துப் பெறும் இயக்கம்

Million Signatures Against Emerging Tobacco Markets 2005.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2005 நவம்பர் 14 முதல் 17 வரை நடைபெறவுள்ள ஆசியபங் புகையிலை வர்த்தக மாநாட்டினை (Emerging Tobacco Markets 2005) தடைசெய்யக் கோரி 10 இலட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் இயக்கத்தினை பசுமைத்தாயகம் அமைப்பு 25-01- 2005 முதல் தொடங்கியது.

நன்றி : பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழ் - பிப் 2005




104 கோடிப்பேருள் 10 கோடிப் பேராவது சிந்திப்பார்களா ?

......
1. தனிநபர் வருமானத்துக்கு உச்சவரம்பு வைத்தல்.
2. கறுப்புப் பணப்புழக்கத்தைக் குறிப்பிட்ட காலத்தில் ஒழித்தல்.
3. இந்தியர்களிடம் பவுன்களாகவும் நகைகளாகவும் தேங்கிக் கிடக்கிற 7 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம் புழங்காத பயன்படாத முதலீடாக இருப்பதை, தொழில் வணிகம் முதலானவற்றில் ஈடுபடுத்தவேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடம் ஊட்டுதல். வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துதல். தங்கம் வாங்குவதற்கு ஆண்டுதோறும் ரூ40,000 கோடி செலவழிப்பதைக் குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடம் விதைத்தல்.
4. நில உச்சவரம்புச் சட்டங்களை விரைந்து அமல்படுத்துதல்.
5. இரத்துச் செய்யப்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி, விரைந்து அமல்படுத்துதல்.
6. நில உச்சவரம்பு போன்றே ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளக்கூடிய வீடுகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு வைத்துச் சட்டம் இயற்றுதல்.
7. கறுப்புப் பணம் முடக்கப்பட ஏற்ற களங்களாக உள்ள தனியார் கல்வி அறக்கட்டளைகள், தனியார் மருத்துவ அறக்கட்டளைகள், சமய அறக்கட்டளைகள், முதலானவற்றை கல்வி நிறுவனங்களை நடத்துவது, மருத்துவ மனைகளை நடத்துவது முதலானவற்றை இரத்து செய்தல்.
8. வேளாண்மை, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஊரகத் தொழில்கள், மற்றும் சிறு தொழில்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரவும், வங்கிகளில் மக்கள் செலுத்தும் வைப்பு நிதி, முன்பணம் இவற்றுக்கு நியாயமான வட்டி தந்து பொதுத்துறை, தனியார் துறை, வங்கிகளில் நம் மக்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைக்கத் தூண்டுதல் முதலானவற்றைச் செய்தல் -
என்கிற பணிகளை அரசு செய்யாமல் " எட்டுகோடிப் பேருக்கு இன்னும் 6 ஆண்டுகளில் வேலைதர முயலுவோம் " என இந்திய அரசு கூறுவது ஒரு ஏமாற்றே ஆகும்.
இதைப் புரிந்து கொள்ளப் போதிய அளவு கல்வி பெற்ற பத்து கோடிப் பேர்களேனும் இவை பற்றிச் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி நாம் செயல்படுவோம் வாரீர்.


1-2-2005 - வே. ஆனைமுத்து

நன்றி : சிந்தனையாளன் பிப் 2005


சிங்காரவேலர்

1927 ஆம் ஆண்டு பொதுவுடைமைத் தோழர்களான சாக்கோ, வான்சிட்டி ஆகியோரைத் தொழிற்சங்கவாதிகள் என்று குற்றஞ்சாட்டி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொன்றது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இக் கொடிய செயலைக் கண்டித்து, சென்னை பீப்பிள்ஸ் பார்க்கில்( மூர்மார்க்கெட் அருகில் ) கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் சிங்காரவேலர்.

ஆனால் அந்நாளைய அரசு, காவலர் படையைக் குவித்துக் கூட்டத்தை நடத்தவொட்டாமல் அச்சுறுத்தியது. இதனால் பேச்சாளர்கள், தலைமையேற்க ஒப்புக் கொண்டவர்கள் உள்பட எல்லோரும் காவல்துறை கெடுபிடியினால் அந்தப் பக்கமே வரவில்லை.

எனவே, கூட்டமே கூடாது என்று வெறுத்துப்போய் அங்கு வந்த சிங்காரவேலர் கண்ட காட்சி வேறு வகையாக இருந்தது. புதிய இளைஞர்கள் சமதர்மப் பாடல்களை மேடையில் பாடிக்கொண்டிருந்தார்கள். அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி மேடையில் வீற்றிருந்தார்.

இதனால் எழுச்சியுற்ற சிங்காரவேலர், தாம் பேசுகையில் இத்தனை கெடுபிடிகளிலும் கூடியிருந்த பொதுமக்களை மனதாரப் பாராட்டினார். அமெரிக்க அரசுக்குக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். இக்கூட்டத்தில் மாவீரன் அழகிரி பேசியதாவது..

"மீன்பிடிக்கும் சமூகத்தைச் சேர்ந்த இத்தாலியத் தோழர் வான்சிட்டி அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்டு இறந்ததைப் போல, இந்த நாட்டின் மீனவச் சமுதாயத்தைச் சார்ந்த சிங்கார வேலர் ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டுப் பொதுவுடமை இயக்கத்துக்கு உயிரூட்டவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்திற்குப் பிறகுதான் சிங்காரவேலர் சுயமரியாதைக்காரராகவும் மாறினார் என்று அறியப்படுகிறது.

சிங்காரவேலர் ஒரு இதழாளர்

லேபர் கிசான் கட்சியை, 1923 மே நாளில் தொடங்கிய சிங்காரவேலர், லேபர் கிசான் கெசட் - என்னும் ஆங்கில மாதமிருமுறை இதழை வெளிக்கொணர்ந்தார். ஆனால் அந்த இதழை அரசு தடைசெய்துவிட்டது. அடுத்து தொழிலாளன் என்று தமிழிலும் வார இதழை நடத்தினார்.

மேலும் இவரின் படைப்புகள்- குடியரசு, சண்டமாருதம், சமதர்மம், பகுத்தறிவு, புதுஉலகம், புரட்சி, ஜனசக்தி, ஆகிய தமிழ் இதழ்களிலும் - Sunday Advocate. Sunday Observer, Swadhrma, Vanguard, Labour Kissan Gazette, The Hindu. The Mail ஆகிய ஆங்கில இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நன்றி : யாதும் ஊரே பிப் 2005 - சிங்காரவேலர் சிறப்பிதழ்.



மூன்றாவது மொழிப்போர்

தமிழ்த்தேசிய ஊர்திப் பரப்புரைப் பயணம்
தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசிய பரப்புரை ஊர்திப் பயணம் மார்ச் 8 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை நடைபெறவிருக்கிறது.

சென்னையிலிருந்து மருத்துவர் இராமதாசு, கோவையிலிருந்து பழ.நெடுமாறன், நாகையிலிருந்து திருமாவளவன், குமரியிலிருந்து சேதுராமன் ஆகியோர் தலைமையில் பயணங்கள் புறப்பட்டுத் திருச்சியை அடையும்.

திருச்சியில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெரிய கூட்டத்தில் மூன்றாவது மொழிப்போர்த் திட்டம் அறிவிக்கப்படும்.

நன்றி : தென் ஆசியச் செய்தி



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061