வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 01 - 2005

பொங்கடா தோழனே

பச்சரிசிப் பொங்கலிட்டுப் படையல் செய்தே
உச்சிவரும் ஒளியனுக்கு உவந்தே காட்டும்
மெச்சுபுகழ்த் திருநாளின் மேன்னை யெல்லாம்
இச்சமயம் பேசுகிறோம் இதுவா வெற்றி ?
துச்சமென நம்வாழ்வைத் தூக்கிப் போட்டு
நச்செனவே மதயானை மிதிக்கக் கண்டும்
அச்சமின்றி நாகரிகம் என்றே எண்ணி
அச்சடித்த பதுமைகளாய்க் கிடக்கின் றோம்நாம்!

தமிழாண்டின் தொடக்கமது சுறவம் இல்லை
தமிழ்த்திங்கள் பெயர்களுமே தமிழில் இல்லை
தமிழரிடும் பொங்கலுக்குச் சிறப்பும் இல்லை
தமிழனுக்கத் தன்மானம் சிறிதும் இல்லை
தமிழ்ப்பிள்ளை பெயரிங்குத் தமிழில் இல்லை
தமிழனிவன் வேதமெனக் குறளும் இல்லை
தமிழ்க் கல்வி தமிழாட்சி தரமாய் இல்லை.

உடலுண்டு உயிருண்டு உடைமை உண்டு
உடம்போடு நரம்போடு உணர்வு உண்டா ?
கடலுண்டு நிலமுண்டு காற்றும் உண்டு
கடல்சூழ்ந்த தமிழ்நாடு கையில் உண்டா ?
வடலுண்டு தரலுண்டு விழுந்த துண்டு
விடமாட்டோம் என்கின்ற வீரம் உண்டா ?
கெடலுண்டு மேன்மேலும் கெடுப்பார் உண்டு
அடலுண்டா? ஆண்மைக்கு அணிதான் உண்டா ?

களைபோலும் செந்தமிழ்ச் சொல் குறளும்கூட
இளைதாய முள்மரத்தைக் கொல்லச் சொல்லும்
களைந்தோமா சாதிமத வருணக் காடு ?
வளைப்பாம்பு ஆரியத்தை வணங்கும் கேடு
இளைப்பாறி இருக்கின்றோம் இந்நாள் தோழா !
விளைந்திடுமா பெருவெற்றி எண்ணிப் பாராய் !
தளைப்பட்ட விலங்கெல்லாம் தகர்த்துப் போக்கி
சளைப்பின்றிப் பொங்கிடடா அன்புத் தோழா !

- பாவலர் வையவன் -

நன்றி : சிந்தனையாளன் - சனவரி 2005


குறும்பாக்கள்

(o) சுழற்சி

அழுகிய பழம்
புதையுண்டுப் போனது
பின்னொரு நாளில்
சுவைதரும் நறுங்கனிகளைத் தர.

வண்ணை சிவா - புது வண்ணை

(o) குடைகளாய் இருந்தும்
நனைந்தன மழையில்
காளான்கள்.

சுப.சந்திரசேகரன் - சென்னை

(o) கர்த்தரால் வந்தது

திருமண அழைப்பிதழில்
இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது
ஆறு மாதங்களுக்குப் பின்
தினசரி செய்தியில்
வரதட்சணைக் கொடுமை
கணவன் கைது
இந்தக் காரியமும் கர்த்தரால் வந்தது.
ஆமென்.

சென்கவி - வள்ளியூர்

நன்றி : வள்ளியூர் தென்றல் - வள்ளியூர்.


(o) சிலந்தி
சொந்தமாக
வீடு கட்டியது
என்னுடைய
வாடகை வீட்டில்...

(o) சாமியாரின்
அருள்வாக்கு
பிடித்திருந்தது
அவளுக்கு....

அவளின் உடல்வாகு
பிடித்திருந்தது
சாமியாருக்கு...

வெற்றி ஒளி.

நன்றி : விகடகவி - திருப்பூர்


உரைவீச்சுகள்

வாரி சுருட்டி குடித்து
துயரங்களின் மடியில்
துப்பிவிட்டுப் போனது கடல்.

இழப்புகளின் மீது கட்டப்பட்ட
கண்ணீர் கோபுரங்கள்
உறைந்து கிடக்கின்றன.

அலைகளின் வெம்மை சுருக்கிய
மழலைப் பிஞ்சுகளின் அழுகுரல்
உயிரின் கடைசி சொல்லானது.

தகர்க்கப்பட்ட குடிசைகளின்
சுவடுகளில் தேடுகிறோம்
மூச்சுக் காற்றுகளை

காப்பாற்ற வக்கற்ற
கடவுள்களை அழித்த
ஆழிப் பேரலைகள்
நிலப்பள்ளங்களில் அடுக்கின
பிணக் குவியல்களை

தூக்கி விசிறியடிக்கப்பட்ட
கரையோர வாழ்க்கையில்
சாதிக்கு மட்டுமல்ல
'சுனாமி' க்கும் கூட
உழைப்பவர் மட்டுமே பலி.

- யாழன் ஆதி -

நன்றி : தலித் முரசு சன 2005.


எங்கள் பேரன் அரசு பள்ளி சென்றான்

என்னுடைய பேரன் - அவன் இன்று பள்ளி செல்கிறான்.
சின்னஞ்சிறு மழலை - இளஞ் சிறுவர் பள்ளி சென்றான்.
அவனைச் சேர்த்த பள்ளி - புதுவை அரசின் பள்ளி யாகும்.
தவறிப் போய் அப்பள்ளி - தாய்த் தமிழில் நடை போடும்.

படித்தவர்கள் எல்லாம் - சும்மா பணத்தை அள்ளிக் கொட்டி
அடித்துப் பிடித்துக் கொண்டே - மகவை ஆங்கிலத்தில் சேர்க்க,
என்ன உங்கள் பயலை - நீவீர் இங்குச் சேர்த்து விட்டீர் ?
ஒன்றும் நடவாதே - இது ஓட்டைப் பள்ளி என்றார்.

ஓட்டைப் பள்ளி யேனும் - தமிழ் உலவும் பள்ளி யன்றோ ?
கேட்டில் நலம் உண்டோ? - தமிழ் கொடுக்கும் கல்வி நன்றோ.
தாய்மொழியில் பேசிச் - சொந்தத் தாய்மொழியில் பாடி
நேயக் கல்வி கற்றல் - குழந்தை நெஞ்சுக்கு இன்பம் அன்றோ ?

அழுக்குப் புடவை கட்டிக் - சொந்த அன்னை ஒரு பக்கம்
தளுக்கு மினுக்குக் காட்டி - வெறுந் தடிச்சி ஒரு பக்கம்
இரண்டு பேரில் குழந்தைக்கு இன்பந்தரல் யாரோ ?
வறண்ட வேற்று மொழியா ? - கலை வடிக்கும் சொந்தத் தமிழா?

பசி பட் டினிஎன்றாலும் - படுக்கப் பாய் இல்லை என்றாலும்
இசைவாய்த் தழுவி அன்னை - மகவை எடுத்து மகிழ்தல் மேலா ?
அறுசுவை உணவு - தந்தும் அணி மணிகள் தந்தும்,
கூரிய பல்பூதம் - மகவைக் கொண்டு செல்லல் மேலா ?

வட்டரங்கில் ஒரு நாய் - மிதி வண்டி ஓட்டுதல் போல்
கற்ற மனப் பாடக் - குருட்டுக் கல்வி கல்வி யாமோ?
தட்டுத் தடுமாறி - னாலும் தன்ன றிவைக் கொண்டு
பெற்ற கல்வி யன்றோ - நெஞ்சம் பிணிக்கும் கல்வி யாகும் !

சொந்த மொழியில் கல்வி - தேன்போல் சுவை வழங்கும் கல்வி
வெந்தும் வேகாக் கல்வி - சீ வேற்று மொழியில் கல்வி !
அறிவு கெட்ட தமிழர் - முற்றும் அயன்மைப் பட்டுப் போனார்
உரிமை வாழ்க்கை வாழார் - போலி ஒளியில் விட்டில் ஆனார்.

புதுப் பகட்டில் மயங்கி - நாங்கள் போலியாக வாழோம்.
எதிற்குறை என்றாலும் - வாழ்வில் எளிமை எமக்குப் போதும்.
ஆங்கிலத்தில் கல்வி - எங்கட்கு அருவருப்பே ஊட்டும்
தீங்கிலா எம் தமிழ்தான் - நெஞ்சில் தித்தித் தின்பம் கூட்டும்.

- பேரா. ம. இலெ. தங்கப்பா -

நன்றி : தமிழ்ச் சிட்டு சுறவம் உ0ஙசு


பாமேடை

காலத்ததால் மூத்தவளாய்க் கணக்கற்ற நூலைக்
கருத்தரித்துக் கண்ணுதலார் கையிறுத்தி வேலைச்
சூலத்தார் சேர்ந்தறியச் செய்தவளாய்ப் புலவோர்
சூழ்ந்திருக்க ஒளிவிளக்காய்ச் சுடர்வீசும் நிலவாய்
சீலத்தார் சேவிக்கச் சேய்மொழிகள் ஈன்று
சிறுமையுருச் செல்வியாகச் செழித்திலங்கித் தோன்றும்
கோலத்தே குலமகளாய்க் கோலோச்சி ஊழிக்
கோதகற்றிச் செம்மொழியாய்க் குலுங்குதமிழ் வாழி !

- ப. பரமசிவம் - காந்திகிராமம் -

நன்றி : நமது தமிழாசிரியர் - சனவரி 2005


தமிழறிவோம் ( தொடர்)

- எழில் அரசு -

தமிழனின் மொழி மட்டுமல்ல தமிழனின் இசையும் அயல்மொழிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி தமிழ். அதே போல் உலகின் முதல் இசை (ஆதி இசை) தமிழிசை.

அயல் மொழிகளின் அழிம்புகளில் இருந்து தமிழை மீட்கவும் காக்கவும் வளர்க்கவும் எப்படி தனித்தமிழ் இயக்கம் இன்றியமையாததாக விளங்கியதோ, அப்படியே பிறமொழி இசைகளின் அழிம்புகளில் இருந்து தமிழிசையை மீட்கவும் காக்கவும் வளர்க்கவும் இன்றியமையாததாகத் தோன்றியதுதான் தமிழிசை இயக்கம்.

செட்டிநாட்டரசர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார், தன்மான உணர்வாளர் ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் போன்ற தமிழ் வள்ளல்கள் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்துத் தமிழிசை வளர்ச்சிக்குத் தனி இயக்கம் நடத்தினார்கள். இவர்களுக்குப் பிறகு மீண்டும் தமிழிசை கேட்பாரற்று வீழ்ந்தது. தமிழகத்தின் தலைநகரில் "கோலோச்சுகிற" மியூசிக் அகாதமி - தமிழிசை எதிர்ப்புச் சக்தியாக இரண்டகத்தை அறங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான தமிழர் அய்யா அவர்கள் "பொங்குதமிழ் வளர்ச்சி"அறக்கட்டளையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழிசையின் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் விழா நடத்தி. தமிழிசை அறிஞர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டி, பரிசளித்து, தமிழிசை இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆதி இசை தமிழிசையே என்ற நூலின் வழியாகவும் விழிப்புணர்வூட்டுகிறார் திருமிகு இராமதாசு அய்யா அவர்கள்.

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் மாத இதழ் - சனவரி 2005


சிகிரெட்டைத் திணிக்கிறது சினிமா.
புகையில் கருகுது நிகழ்காலம்

செய்தி 1 : தமிழக அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதைச் சட்டபூர்வமாகத் தடை செய்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்க உத்தரவிட்டுள்ளது.

செய்தி 2 : சிகிரெட் மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைத் தடை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

செய்தி 3 : 2003 பிப்ரவரியில் சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் கூடிய 150க்கும் மேற்பட்டநாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், சிகிரெட் விளம்பரங்களை உலகம் முழுவதும் தடைசெய்யவும், விற்பனையைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்திகளைப் படிக்கும்போது சிகிரெட் மற்றும் புகையிலைப் பழக்கம் விரைவில் ஒழிந்துவிடும் அல்லது ஒழிக்கப்படும் என நாம் நம்பலாமா ?

நிச்சயமாக நம்பமுடியாது. ஏனெனில் எல்லாத் தடை முயற்சிகளையும் கடந்து சிகிரெட் பழக்கம் மிக வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. பெரும் பணம் படைத்த சிகிரெட் கம்பெனிகள் புதிய புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து இளையோர் மீது புகையிலை நஞ்சினை விடாமல் திணிக்கின்றனர். இந்த மரண வியாபாரத்திற்குத் துணை போவதில் முதலிடத்தில் இருப்பது சினிமா ஆகும். பல சமூக சீர்கேடுகளைப் பரப்பிவரும் அதே திரைப்படத் துறைதான் சிகிரெட்டையும் திட்டமிட்டுத் திணிக்கிறது.

புகைப்பவர்கள் வயதாகும் முன்பே இறந்து போவதால், சிகிரெட் நிறுவனங்கள் இளம் சிறார்ககளைக் குறிவைக்கின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, திரைப்படங்களில் மறைமுக விளம்பரம் எனப் பல வழிகளில் சிகிரெட் திணிப்பு நடக்கிறது.

சிகிரெட் நிறுவனங்களின் குறி 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். இவர்கள் சுமார் 10 கோடி 92 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த வயதினரின் எண்ணிக்கை அடுத்த பத்த்ாண்டுகளில் 23 கோடியாக உயரும். இவர்களை சிகிரெட்டுக்கு அடிமையாக்குவதை இலட்சியமாகக் கொண்டு சிகிரெட் கம்பெனிகள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றன.

இந்தியாவில் நான்கு திரைப்படங்கள் வெளியானால் அதில் மூன்று படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி அமைக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

பழைய படங்களில் வில்லன் நடிகர்கள்தான் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தனர். ஆனால் இப்போது கதாநாயகர்களே புகைப்பதாகக் காட்டப்படுகிறது. தங்களது மனம் கவர்ந்த கதாநாயகர்களும், நாயகிகளும் புகைபிடிப்பது இளைஞர்கள் மனதில் முன்மாதிரியாகப் பதிகிறது. நடிகர்கள் செய்வதையெல்லாம் பேஷனாக இளைய தலைமுறையினரால் பின்பற்றப்படுகிறது.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் எம்.ஜி.ஆர். மட்டுமே திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதை ஓர் இலட்சியமாகக் கடைபிடித்தார்.

தமிழ் சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி முதன் முதலாக 1949 இல் வெளிவந்த வேலைக்காரி திரைப்படத்தில் காட்டப்பட்டது. இது மெல்ல மெல்ல அதிகரித்து 60 களில் உச்சகட்டத்தை அடைந்தது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகைப்பது ஓர் ஸ்டைலாக பிரபலப் படுத்தப்பட்டது. இப்பொழுது வெளியாகும் எல்லாப் படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கட்டாயப் படுத்தப்படுகின்றன.

இந்தியப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக சிகிரெட் கம்பெனிகள் லஞ்சம் தருகின்றன. பணம் தேவைப்படுகின்ற தயாரிப்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் லஞ்சம் ஒரு பகுதியாகி விட்டது.

நன்றி : பசுமைத் தாயகம் இதழ் மற்றும் புதுச்சேரியின் குரல் இதழ்



தமிழுக்குத் தேவை உயிரன்று

அரசியல் விருப்பமே.

அவர் ஒரு மருத்துவர். அவரது பெயர் சிவசுப்பிரமணிய செயசேகர். திருவாரூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் முனைவர் (M.D) உயர்நிலை ஆராய்ச்சிப் படிப்பிற்குத் தகுதியினடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

மொழி உணர்வும். பொதுமை நாட்டமும் கொண்ட திரு. சிவசுப்பிரமணிய செயசேகருக்கு உள்ளத்தில் ஒரு வினா எழுந்தது. நான் தமிழன். தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்று. தமிழகத்தில் தான் பணியாற்றுகிறேன். என்னிடம் மருத்துவத்திற்கு வருகின்ற அனைவரும் தமிழ் பேசுகின்றவர்களே. அப்படியிருக்க நான் ஏன் தமிழ் வழியில் எனது மேற்படிப்பைப் படிக்கக்கூடாது? இதுவே அவர் உள்ளத்தில் எழுந்த வினா. தமிழ் வழியில் படிப்பதென உறுதி பூண்டார்.

ஆராய்ச்சிப் படிப்பிற்குத் தமிழில் நூல்களே இல்லாத நிலையில் அவர் இரண்டு மடங்கு உழைக்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் நூல்களைப் பயின்று தமிழில் தனது ஆய்வேட்டை அணியம் செய்தார்.

குறைகாண முடியாதபடி மிகச் சிறப்பாகத் தமிழில் எழுதப்பட்ட ஆவர்தம் ஆய்வேடு நேர்காணல் தேர்விற்கு வந்தது. நேர்காணல் தேர்வுக் குழுவில் இருந்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் அவ்வாய்வேடு தமிழில் இருந்ததால் ஏற்க மறுத்தனர்.

பிறகு அன்று தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசிடம் அவர் முறையிட்டார். அன்று கல்வித்துறை அமைச்சராக விளங்கியவ பேரா.அன்பழகன்., இவர் முறையீட்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தமிழக அரசும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் இறுதியாக முறைமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை உசாவிய முறைமன்ற நடுவர் ஒரு பார்ப்பனர் என்பதால், தமிழ்நாட்டில், தமிழ் வழியில் படிப்பதை மொழி வெறி என்று கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இன்றைய ஆட்சியோ முதல் வகுப்பிலேயே ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.

தமிழன் வாழ்வில் ஆட்சி மொழியாய், நீதிமன்ற மொழியாய், ஆங்கிலம் கோலோச்சுகிறது. தமிழகத் திருக்கோயில்களில் சமற்கிருதம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்துச் செவ்வியல் இசை மேடைகளில் தெலுங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்ற முழக்கத்தோடு திராவிடக் கட்சிகள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றி 37 ஆண்டுகள் ஆண்ட பிறகும், தமிழ்நாட்டில் தமிழின் நிலை இதுதான.

இந்நிலையை மாற்ற தமிழக அரசியல் கட்சித் தலைமைகள் முன்வருமா? அதற்கான அரசியல் விருப்பம் அவர்களிடம் உள்ளதா ?

நன்றி : தமிழ் மீட்சி இதழ் மற்றும் இலட்சியப் போராளி இதழ் சுறவம் உ0ஙசு


பெரியார் - ஜீவா நட்பு

நினைவலைகள் 1. ( அவ்வை தி.க.சண்முகம் )

....திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்றோம். ஈரோட்டில் ஒருநாள் ஈ.வெ.ரா பெரியார் அவர்களைக் காண அவரது குடியரசு அச்சகத்திற்குச் சென்றேன். முன்புற அறையில் உட்கார்ந்திருந்த ஒருவர் என்னை அன்புடன் வரவேற்றார்.

கறுத்து அடர்ந்த மீசை. கம்பீரமான தோற்றமும் பேச்சிலே இனிமை தவழ்ந்தது. அவர் எங்கள் தேசபக்தி நாடகத்தைச் சிறப்பாகப் புகழ்ந்தார். அதில் பாரதி பாடல்களைப் பாடுவதற்காக மிகவும் பாராட்டினார். தங்கள் பெயரென்ன ? என்றேன். ஜீவானந்தம் என்று பதில் கிடைத்தது. தேசிய உணர்ச்சி ஏற்பட்ட பின்பு, தொடர்ந்து தமிழில் வெளிவந்த எல்லாப் பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அவற்றில் பூவாளூர் அ.பொன்னம்பலனாரின் "சண்டமாருதம்" ஒன்று. அதில் படித்த தோழர் ஜீவாவின் பாடல் என் நினைவுக்கு வந்தது.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குறார் முத்திக்கென்றே !

பாடல் பல அடிகளைக் கொண்டது. இந்தப் பாடலை எழுதிய ஜீவானந்தம் என் இதயத்தில் இடம் பெற்றிருந்தார். அவரே இப்பொழுது எதிரில் இருப்பவர் என்பதை அறிந்ததும் என் உள்ளம் மகிழ்ந்தது. தோழர் ஜீவா என்னைப் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்தார். பெரியார் அவர்கள் என்னை மகிழ்வுடன் வரவேற்றார். குடியரசுப் பதிப்பகம் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகிவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுறாது அத்தனை நூல்களிலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்று முதல் பெரியார் ஜீவா பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

கடவுட் கொள்கையில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன. என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் சாதிஒழிப்பு, குழந்தை மணத்தடை, கலப்புமணம், கைம்மை மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகள் என்னை மட்டுமல்ல எங்கள் குழுவினரையும் கவர்ந்தன். தோழர் ஜிவாவின் சமதர்ம உணர்வும், அது பற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவுகளும் எனக்கு ஓர் உறுதியான இலட்சியத்தை வகுத்துத் தந்தன வென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.

நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார். அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள் மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினர் அனைவருக்கும் ஒருநாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்தததைக் கண்டு ஊரே வியந்தது, எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும் விருந்து வைத்ததும் வியப்பிற்குரிய செய்தியல்லவா !

முகம் - பொங்கல் இதழில் இதுபோல தமிழ் உணர்வு மிகுந்த 4 நினைவலைகள் உள்ளன.


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061