வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 12 - 2004

இரைச்சல்

யாருமற்ற
குளியலறையில்
காற்றின்
உந்துதலால்
சப்தம்
எழுப்பியபடி
இருக்கிறது
ஓடடையான குவளையொன்று

செல்வகாந்தன்
நன்றி : சுகன் - டிசம்பர் 2004



எதார்த்தம்

நாலு சுவருக்குள்
வாழ்வும் வயசும்
போயாச்சு..

உடல் வேட்கையிலும்
பொருள் வேட்கையிலும்
காலம் பின் சென்று
தேய்ந்தது.

விழித்துக் கொண்ட போது
மரணப் படுக்கையின்
தனிமை மயக்கத்தில்
நிலைக்கண்ணாடியில்
தொங்கும்
திராட்சைக் கொத்தைக்
கொத்திக் கொண்டிருக்கும்
சிட்டுக் குருவியின்
மணி அலகுகள்

ஜன்னலில இமை தட்டுகிறது
தூரத்து நட்சத்திரங்கள்.

கிருஷி
நன்றி : கல்வெட்டு பேசுகிறது - டிசம் 2004



முன்னெச்சரிக்கை

பட்டாம்பூச்சியைப் பிடிக்காதே
வர்ணச் சிறகுகளுக்கிடையில்
வழுக்கும் புழுவுள்ளது.

பூவை முத்தமிடாதே
இளம் புன்முறுவலுக்குப் பின்னால்
கூரிய முள்ளுள்ளது.

அந்திநேரத்தை கொஞ்சாதே
கன்னச் சிவப்பின் பின்னால்
இருளுள்ளது.

நிலா வெளிச்சத்தை நம்பாதே
இருள் பெண்ணின்
பாழ்வாக்காகும்

தென்றல் குளிரைத் தாலாட்டாதே
கொடும் காற்றின்
விதையாகும்.

மழையைக் காதலிக்காதே
மரணத்தின்
ஜன்னலாகும்.

கவிதையுடன் விளையாடாதே
வாக்குகளின் அழகுகள் தாண்டி
நெற்றிக்கண் தீயாகும்.

மலையாளத்தில் : ஜமீல் அகமது
தமிழில் : கீதா ரவிக்குமார்.

நன்றி : நறுமுகை - அக்-டிச 2004



மகுடேஸ்வரன் கவிதைகள்

(o)
ஒன்றா இரண்டா
ஓராயிரம முத்தங்கள்
கண்மூடிப் பெற்றாள்

இன்றவள்
மனைமாட்சி பொருந்த
மற்றொருவனுடன்
மனமொத்து வாழ்கிறாள்

இறந்த காலத்தின் மீதெழும்
திடுக்கிடும் கனவு
அந்த மாசறு பொன்னைத்
துயில் கொள்ளாமல் புரளச் செய்யுமோ.


(o)
காசுக்கு வந்தவள்
கண்ளை
இறுக மூடிக் கொண்டாள்

ஏறிட்டுப் பாராமல்
இமை கவிழ்ந்திருந்தாள்

பார்வை தாங்காமல்
ஆடை கொண்டாள்

ஊழ்வினையோ
உற்றவன் கொடுமையோ
உதரத்தில் பசித்தீயோ

உயர் குடிப்பெண்ணாள்
நெறி பிறழ்ந்தாள்.


(o)
பாதுகாப்பான இடத்தில்
சேர்ப்பித்துவிட்டதாகத்தான்
நினைத்துக் கொள்கிறோம்

யாவும் பயனற்று
பயனற்று
வெளியே வழிந்து விடுகின்றன

உடைவுகள் உடைய
நீர்த் தேக்கங்களில்
நதிகள் சிறைபடுகின்றன.

எங்கோ
பால் கட்டிய நாற்றுகள்
கருகிக் கொண்டிருக்கின்றன.


(o)
சீராடிக் கொண்டு
தாய்வீடு வந்து விடுகிறாய்

சிலநாள் கழித்து
அழைத்துப் போகவருகிறேன்

வரவேற்ற உன் வீட்டார்
நமது தனிமைக்கு வழிவிட்டு
சாக்குச் சொல்லி
அகன்றுவிடுகின்றனர்.

ஊடல் களையைக்
கூடிப் பிடுங்கினோம்.

' இவர்களா
அடித்துக் கொண்ட சோடிகள் ! '

அக்கம்
பக்கம்
பகடி பேசுகிறது.

நன்றி : தூறல் - இதழ் எண் - 4



செய்திக் கவிதை

நக்கீரன் ஏடு 2004 நவம்பர் 17 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு..

காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, வயிற்றைக் கலக்குகிறது எனத் தெரிவித்த ஜெயேந்திரருக்கு டாய்லெட்டை அடையாளம் காட்டியிருக்கிறார்கள் போலீசார். நான் வெட்டவெளியில் போவதுதான் வழக்கம் என ஜெயேந்திரர் சொல்ல, அவர் பின்னாடியே ஒரு வாழை இலையை எடுத்துக் கொண்டு நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்றார். அவர் வாழை இலையைத் தரையிலே விரிக்க, அதன் மேல் காலைக்கடன் கழித்தார் ஜெயேந்திரர். அதன் பின் இலையைச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டார் கிருஷ்ணமூர்த்தி.

தலைவாழை இலைபோட்டுச் சோற்றை உண்ணல்
தமிழர் கடைப் பிடிக்கின்ற பழக்கம் ! இந்தக்
கொலைகாரச் செயேந்திரரின் செயலைப் பாரீர் !
கொல்லைக்குப் போவதெனில் இலையில் தானாம் !
விலைபோய்விட் டோம்தமிழா! நம்மை யாரே
மீட்டெடுக்க வுள்ளார் சொல் ? யாரும் இல்லை !
இலைபோட்டுச் சோறென்றால் குமட்டு மேடா !
எண்ணுங்கால் திண்ணியத்தின் நினைவுண் டாமே !

மருதநாடன்

நன்றி : மக்கள் நெஞ்சம் 28 நவம்பர் 2004



பொங்கு தமிழ்

பொங்கு தமிழே பொங்கி யெழுந்திடு
பாரினில் தமிழினம் ஒன்று திரண்டிட
படித்தவர் பாமரர் வேற்றுமை நீங்கிட
மாவீரர் கனவுகள் மண்ணில் பலித்திட
தாய்மண்ணில் விடுதலைக் காற்று வீசிட
பொங்கு தமிழினமே பொங்கி எழுந்து வாரீர்.

வீழ்த்துவோம் வேதனையை
வீறுகொண்ட வேங்கைகளை
வாழ்த்துவோம் வணங்குவோம்.
எமது வருங்காலம் வாழ
தனித்துவம் கொண்டதொரு
தனித்தேசிய இனமாகத் தரணியெங்கும்
பொங்கிடுவோம்.

ஊதிய சங்கு இன்னும் எதிரிக்கு எட்டவில்லை
பாதிவழி நின்று ஓங்கிக் குரல் கொடுக்க
ஓடிவா என் அன்புத் தமிழா
ஓரணியில் நின்று வடம்பிடிக்க
ஓடிவா என் அன்புத் தமிழா.

இலங்கையின் ஒருமைப் பாட்டுக்கு
பட்டாடை போர்த்தத் தமிழ் பட்டுப் பூச்சிகள்
தான் வெந்நீரில் வேகவேண்டுமா ?

வேங்கைகள் எழுந்த பூமியில்
இனியும் வேகாது இந்தப் பருப்பு
பொங்கு தமிழா, பொங்கு தமிழா
தமிழன் வீரம் உலகுக்கு நீ சொல்லு

பொங்கு தமிழ் பொங்கு தமிழ்
பொங்கு தமிழ் பொங்கு தமிழ்
கல்லூரி வாசலிலே கருக்கொண்ட
பொங்கு தமிழ்
கடல் அலையாய்ப் புயல் அலையாய்
உருக் கொண்ட பொங்கு தமிழ்

பத்மாவதி சீவரட்ணம், கனடா.

நன்றி : ஏழைதாசன் - டிசம்பர் 2004.



பெண்ணியச் சிந்தனைகள்

அம்மா நீ
தகப்பன் தமையன் என்றாலும்
ஆணுக்குள் ஒரு
மிருகம் இருக்கிறது.
எந்த ஆணையும் நம்பாதே !
தனிமையில் அகப்படாதே !
வன்புணர்ச்சி முயற்சியில்
அவன் இறங்கினால்
பல், நகம் எல்லாம்
உனக்கு ஆயுதம் , கடித்துக் குதறு.
இரத்தக் கிளறியாக்கு !

அம்மா நீ
வேறு ஆண் வீட்டல் இருந்தால்
எவ்வளவு தெரிந்தவன் என்றாலும்
எல்லாக் கதவுகளையும்,
சன்னல்களையும்
திறந்து வை.
அக்கா ஒரு சேதி என்று
பக்கத்து வீட்டுக்காரியை அழை.
பக்கத்து வீட்டில் யாரும்
இல்லை என்றாலும்

அம்மா நீ
தாளிட்ட அறையில் நீ
அகப்பட்டால் - சுத்தி - அரிவாள்
விளக்குமாறு - கடப்பாறை-
மண்வெட்டி எது கிடைத்தாலும்
எடுத்துத் தாக்கு.
அவன் உன்
பிணத்தை வேண்டுமானால்
புணரட்டும். உன்னைக் கூடாது.
90 விழுக்காடு நீ தப்பிப்பாய்
அகப்பட்டுக் கொண்டால்
அறிவைப் பயன்படுத்து.
தந்திரங்களைக் கடைபிடி.
இங்கே வேண்டாம் என்று
இடம் மாற்றித் தப்பியவர்கள்...
முதலில் நீ துணி அவிழ்
என்று அவன் துணியை
அள்ளிக் கொண்டு ஓடினவர்கள்.
இப்படித் தப்பித்தவர்கள் ஏராளம்.

அம்மா நீ உன்னை
மீறிய சூழலில்
கெட்டு அழிந்தபின்
அழுது புலம்பாதே.
கெட்ட கனவாய் மறந்து
வேற்று ஊரில்
புதிய வாழ்வைத் தொடங்கு.
கருவுற்றால்
அழித்துச் சாக்கடையில் விடு !
துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்.
முட்டாள் நாய்களிடம்
ஆலோசனை கேட்காதே.

அம்மா நீ
தனிமை தவிர்
இருளைத் தவிர்
ஒற்றை ஆணுடன்
ஊர்ப்பயணம் தவிர்.
உன்னைச் சுவைக்க ஆண்
வண்டி வண்டியாய்ப்
பொய் சொல்லுவான்.
சத்தியம் செய்வான்
வயிற்றுப் பசியில்
10 தான் பறக்கும்
உடற்பசியில்
ஊரே பறக்கும்.
உலகே பறக்கும்..
உடற்பசிக்காரன்
கொலையும் செய்வான்.

அம்மா நீ
ஆண் வன்முறை செய்யும் போது
பெண்ணின் முதல் கருவி
கூச்சல் தான்.
ஊர் ரெண்டாகக் கத்தி
ரகளை பண்ணு.
மிருகம் ஓட்டம் பிடிக்கும்.

அம்மா நீ
புணர்ச்சி என்பது ஆணுக்கு அரை
நாழிகை சுகம்.
பெண்ணுக்கு வாழ்நாள் துயரம்,
வாழ்வின் திசை மாற்றம்.
சில இடங்களில்
காதல் பேச்சில் 50 விழுக்காடு
உன்மனமும் நாளும் அரிப்பெடுக்கும்
இம்சை செய்யும்...
ஆனாலும்
வாழ்வைச் சூறைவிடாதே !
ஏமாறாதே !!

அம்மா நீ
ஆணின் உடல்மொழி, கண்மொழி
கூர்ந்து கவனி..
உளறுவான்
முரணாகப் பேசுவான்.
ஓட்டம் பிடிக்க இதுவே தருணம்.
ஆம்
அவன் உளறத் தொடங்கினால்
நீ ஓடிவிட வேண்டும்.

- சங்கமித்திரா -

நன்றி : ஒடுக்கப்பட்டோர் குரல் இதழ்
நன்றி : யாதும் ஊரே டிசம்பர் 2004



மனம் திறக்கிறார் மணவை முஸ்தபா

..... உலக மொழியியல் வல்லுநர்களும், யுனஸ்கோ போன்ற உலகப் பேரமைப்புகளும் இந்திய மொழிகள் ஆணையமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியே செம்மொழியாக இருக்கமுடியும் எனக் காலவரையறை செய்திருக்க, சாகித்திய அகாதெமி வல்லுநர் குழு ஆயிரம் ஆண்டுகள் எனக் குறைத்துக் கால வரையறை செய்திருப்பது ஏன் ? முனைவர் பட்டப் படிப்பும் பள்ளி இறுதிப் படிப்பும் சமமாக முடியுமா ?

சமஸ்கிருதம் முதலான செம்மொழிகள் மத்திய அரசின் கல்வித் துறையில் இணைந்திருப்பதால்தான் பல்வேறு வகைகளில் போதிய நிதி உதவி பெறமுடிகிறது. கல்வித் துறைக்குட்பட்ட பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறைகளும் இருக்கைகளும் உருவாக்க முடிகிறது. எனவே கல்வித் துறையில் தமிழ் இணைந்தால் தானே பல்கலைக் கழக மானியக்குழு அதனை ஏற்க இயலும். அப்போதுதானே இந்தியப் பல்கலைக் கழகங்களோடு உலகப் பல்கலைக் கழகங்களும் தமிழைச் செம்மொழியாக ஏற்க இயலும். வேண்டுமானால் மத்திய அரசின் பண்பாட்டுத் துறை பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடியுமேயன்றி ஆணை பிறப்பிக்க இயலாது.

மேலும், மொழிப்பாடம் உள்ள பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் துறை அல்லது இருக்கை உருவாக்க, பழந்தமிழ் இலக்கியங்கள் - இலக்கியச் சாரங்களை வேற்று மொழிகளில் பெயர்த்து வெளிப்படுத்த, சமஸ்கிருதத்திற்குச் செய்து கொண்டிருப்பதுபோல தமிழ் - ஆங்கில அகாராதிகள் பல தயாரித்தல், தமிழ் மொழி இலக்கிய, கலை, பண்பாட்டுத் தகவல்களுக்கென தனித்தனிக் களஞ்சியங்கள் பல உருவாக்குதல், இன்றைய நவீன மொழியியல் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக தமிழ் இலக்கண ஆய்வு குறிப்பாக தொல்காப்பிய ஆய்வு மேற்கொள்ளல், இன்றைய அறிவியல் கலைச் சொல்லாக்கத்திற்கு அன்றைய தமிழ் வேர்ச்சொற்கள் எவ்வாறெல்லாம் நெகிழ் திறத்துடனும் வளமுடனும் அமைந்துள்ளன என்பதை இன்றைய மொழியியல் அடிப்படையில் ஆய்ந்து தமிழின் சொல்லாற்றலை உலகறிய நிலைநாட்டுவது. சமஸ்கிருத ஆண்டு அரசு நிதி உதவியுடன் கொண்டாடியதுபேன்று தமிழ் ஆண்டு மத்திய அரசு அரவணைப்போடு இந்திய அளவில் உலக அளவில் கொண்டாடுவது.

பெரும் செலவு பிடிக்கும் இத்தகைய திட்டங்களுக்குக் கல்வித்துறை போதிய நிதி ஒதுக்கி உதவமுடியும். போதிய நிதி வசதியோ, துறை விரிவோ இல்லாத பண்பாட்டுத் துறை மூலம் என்ன சாதிக்க முடியும் ? ஆண்டுக்கொரு முறை இரண்டு விருதுகள் அளித்தால் போதுமா ?

மணவை முஸ்தபா அவர்களின் திறந்த மடல் என எழுதியதில் உள்ள சில பகுதிகள்.
நன்றி : அன்பு வணக்கம் - திசம்பர் 2004

( தமிழ் மொழியின் தாய்நிலமாகவும், உலகத்திற்கே தமிழ்ப் பண்பாடுகளைக் காட்சிப்படுத்துவதற்கான நிலமாகவும் உள்ள "தமிழகம்" இன்று மழலைகளுக்கான பயிற்றுமொழி தமிழாக இல்லாமல், ஆட்சிமொழியாகத் தமிழ் இல்லாமல், ஆலையங்களில் பூசனை மொழி இல்லாமல், தெளிதமிழ்ப் பேச்சு இல்லாமல் வீழ்ந்து கிடக்கிறது. மழலைகளுக்கான பயிற்று மொழியிலிருந்து படிப்படியாகத்திட்டமிட்டு வடிவமைத்தால் அதுவே தமிழ் செம்மொழி என்பதற்கான அடித்தளமாக அமையும். இதை அரசும், ஆர்வலர்களும் நினைவில் கொள்வார்களா ? - பொள்ளாச்சி நசன் )



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061