வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 11 - 2004

அடுத்த அய்ம்பது ஆண்டுகளில்
உலகமெல்லாம் தமிழ் ஒலிக்கும்
எப்படி ?

இருநூறு ஆண்டுகளில் துப்பாக்கி முனையில் அமைந்த காலனி நாடுகளில் மெக்காலேயின் ஆங்கிலம் பரவியது. தொழில் புரட்சியும், அறிவியலும் துணை புரிந்தன.

அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு, இங்கிலாந்ததுதான் தாயகம். இருந்தபோதிலும், அவர்களின் விடாமுயற்சியும், உழைப்பும், அறிவியல் கண்டுபிடிப்புகளில் தாயகத்தையும மிஞ்சி விட்டனர் எல்லாத் துறைகளிலும், அதுபோலவே...

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் 50 நாடுகளில் ஏதிலிகளாகக் குடிபுகுந்து, அந்த மண்ணில் நிலை கொண்டு தமிழை வளர்த்து வருகிறார்கள்.

செம்மொழியான தமிழ், அவர்களால் உலகமெல்லாம் வலைப் பின்னலைப்போல் விரிந்து பரவும். அமெரிக்கர்களைப் போல் அவர்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்து, தமக்கென்று அமையும் ஈழமண்ணில் நின்று கொண்டு தமிழை அறிவியல் மொழியாக வளர்த்து, புதுப்புதுக் கண்டுபிடிப்புகளால் பெருமை பெறுவார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் மூலம், 200 ஆண்டுகளில் ஆங்கிலம் பெற்ற இடத்தை அய்ம்பதே ஆண்டுகளில் தமிழ் பெறும். இது உறுதி! உறுதி!!

நன்றி : முகம் - நவம்பர் 2004 இதழின் தலையங்கம்.


வென்றது நீதான்

(ஒரு சிறைக்குயிலின் பெருமிதக் கூவல்)

மண்ணுள மொழியும் நாடும் மலர்ந்திடா முன்னம் எங்கள்
கண்ணுள மணியாய்த் தோன்றி காட்சிகள் அறிவு நூல்கள்
விண்ணுள கதிரைப் போல மேதினி ஒளிரும் வண்ணம்
எண்ணிலா வகைகள் தந்து இயற்றமி ழானாய் வாழ்க!

கான்தரும் மூங்கில்தந்து கவின்குழல் தன்னில் தோன்றும்
தேன்தரும் இனிமை அந்தச் சீறியாழ்ப் பாணன் மீட்டும்
வான்தரும் அமிழ்தம் போல வளர்ந்திடு பண்ணும் பாட்டும்
ஊன்தரும் உயிரில் ஒன்றி ஒப்பிலா இசையும் ஆனாய்!

பாடலின் திறமும் நல்ல பண்களின் ஒழுங்கும் ஒன்றாய்க்
கூடலின் பயனைக் காட்டும் குரலிசைச் சிறப்பும் தேர்ந்த
ஆடலாம் நாட்டி யத்தின் அருங்கலை அனைத்தும் எங்கள்
நாடகத் தமிழாய் ஞால நடப்பினை விரியச் செய்தாய்!

அளவைநூல் கொன்னு லென்னும் அறிவுசால் துறைகள் கற்புக்
களவியல் வகைகள் காட்டும் காதலின் ஒழுக்கம் நல்ல
உளவியல் வான நூல்கள் உயர்ந்தநல் இலக்க ணங்கள்
அளவிலா தமைந்து எம்மை அறிவினில் உயரச் செய்தாய்.

ஆர்த்திடும் வீரர் கூட்டி அயலவர் நடுங்கும் வண்ணம்
போர்த்திறம் காட்டும் எங்கள் புறத்திணை புலவர் தங்கள்
நாத்திறம் காட்டிப் பாடும் நலமிகு பாடாண் என்னும்
சீர்த்திறம் அனைத்தும் பெற்ற செம்மொழி உலகில் ஏது?

பொருள்எனில் அணவாம் ஒன்றில் பொருந்துவ தாலே அஃதாய்ப்
பொருள் எனில் அகமாம் மற்றும் போர்முறை நெறிகள் கூடம்
பொருள் என வழங்கும் என்றும் பொருத்தமும் தொடர்பும் அற்றப்
பொருளிலாச் சொற்கள் இல்லை புகன்றவர் உன்போல் யாரோ?

அறத்தொடு நிற்கும் எங்கள் அகத்திணை மரபுக் கீடாய்ப்
புறத்துள மொழிகள் பெற்ற புதுமைகள் ஏதும் உண்டோ?
சிறப்புடை எழுத்தும் சொல்லும் சீர்மிகு பொருளும் என்றே
திறத்தினால் வகுத்த பாங்கு தேடினும் கிடைக்கு மாமோ?

அறிவுடன் பொருந்தும் வாழ்க்கை அறம்பொருள் இன்பம் என்னும்
செறிவுடை நெறிகள் காட்டும் தேர்ந்தநல் முப்பால் மற்றும்
பொறிபுலன் கடந்த தூயன் புகன்றதொல் காப்பி யத்தின்
நெறிகளுக் கீடாய் இந்த நீள்நிலம் பெற்ற துண்டோ?

பிறமொழிக் கலப்பே இல்லாப் பெற்றிமை குடும்பம் என்னும்
உறவுள மொழிகள் தோன்றும் உயிர்ப்புள தன்மை ஓங்கும்
திறமுடை ஆற்றல் காலம் சிதைத்திட இயலா நல்லச்
செறிவுடை வளமை காத்துச் செம்மொழி ஆனாய் வாழ்க!

என்றும்நீ புதுமை மாறா இளநலம் காட்ட லாலே
என்றுநீ பிறந்தாய் என்று இன்னும்யாம் அறிந்தோ மில்லை!
இன்றுபோல் நேற்றுங் கூட இனப்பகை இருந்த போதும்
வென்றது நீதான் எங்கள் மேன்மையே உன்னா லன்றோ!

பேரா.க.நெடுஞ்செழியன்

நன்றி : தென்செய்தி (உலகத் தமிழர்களின் செய்தி ஏடு) நவம்பர் 2004



செந்தமிழ்

பாவாணர் சொன்ன பதினாறு பண்புகளும்
தாவாது தண்டமிழில் தங்குவதால் - நாவினிக்கும்
செந்தமிழ் செம்மொழியே! செப்புமொழி அத்துணைக்கும்
நந்தமிழே நற்றா யறி!

இலக்கணச் செம்மை! இலக்கிய வண்மை!
இங்குள்ள நூல்களோ எண்ணின் - இலக்கமோ
கோடியோ! தாமரையோ! கூறிடுவீர் சான்றோரே!
கேடிலாச் செந்தமிழின் கேழ்.

வாழ்க்கை நெறியை வகுத்தவ னேதமிழன்
ஆழ்ந்த இலக்கணம் ஐந்தினில் - மாழ் (கு) இல்
பொருள்இலக்க ணம்பெற்ற பூந்தமிழே என்றும்
செறிவார்ந்த செந்தமிழாம் செப்பு.

அழகாய் உவமை அளவாய் அணிகள்
இழுமென் ஒலியுடன் ஏற்ற - எழுச்சி மிகு
வண்ணனை கற்பனை வாழ்வியல் பெற்றதே
தண்ணிய செம்மைத் தமிழ்.

அறிவியல் எல்லாம் அருந்தமிழி னுள்ளே
செறிந்திருக்கக் காணாச் சிறியர் - மறலையாய்
சங்கத் தமிழைச் சரியாய் படிக்காமல்
சங்கூதிச் சாவார் சலித்து.

புலவர். பெ.சயராமன்., மாவட்டக் கல்வி அலுவலர், இலால்குடி.
நன்றி : சோலைக்குயில் கடகம் 24


விடுதலை பெறுவோம் தமிழா

போனார் 'சார்'
வந்தான் 'பிரண்டு'
கொடுத்தான் 'ஸ்வீட்'
சொன்னான் 'டேங்ஸ்'
பதிலுக்கு 'வெல்கம்'
வந்தார் 'மேடம்'
கேட்டார் 'வாட் பங்சன்'
எனக்கு 'பர்த் டே'
வாழ்த்த 'மெனிமோர் ரிட்டர்ன்ஸ் ஆப் த டே'
போகும் போது 'பாய் சி யூ'
இரவில் 'குட் நைட்'
சாப்பிட 'லஞ்ச்'
கேட்டான் 'ட்ரீட்'
அம்மாவிற்கு' 'மம்மி'
அழைத்தான் 'டாடி'
மனைவிக்கு 'வைஃப்'
குழந்தைக்கு 'பேபி'
அன்பிற்கு 'லவ்'
ஓட்ட 'பைக்'
அடிக்க 'பெட்ரோல்'
குடிக்க 'கூல் டிரிங்ஸ்'
பார்க்க 'சினிமா'
கேட்க 'சாங்'
போக 'பார்க்'
ஏற 'பஸ்'
தொங்க 'ஸ்டெப்'
வைக்க 'கிஸ்'
போட 'டிரஸ்'
வாங்க 'கிஃப்ட்'
கெஞ்ச 'சாரி'
கொஞ்ச 'டியர்'
படிக்க 'புக்'
நடக்க 'வாக்'

அட,
அன்று ஆங்கிலேயனுக்கு
இன்று ஆங்கிலத்திற்கு
தமிழன் தமிழன் தான்டோய்
அய்யா, பாரதி பொருத்துக்கப்பா
நாங்க என்னைக்கும்
இப்படித்தான்....

தமிழ்ப்பித்தன்

நன்றி : அருணன் - நவம் 2004 திங்களிதழ்.


இயந்திரக் குழந்தை

பாட்டி இடித்த வெத்தல உரலும்
பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும்
வேட்டை என்று ஓணான் அடித்ததும்
வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும்
மதிய வெயிலில் அஞ்சிடாமல்
மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும்
குதித்த குரங்கைக் கல்லால் அடிக்க
குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும்
விடிய விடியக் கூத்துப் பார்த்து
விரலில் பள்ளியில் அடிவாங்கியதும்
அடுத்த வீட்டுக் கோழி முட்டையை
அறியாமல் போய் எடுத்து வந்ததும்
கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும்
கபடி ஆடிக் கையும ஒடிந்ததும்
திண்ணைத் தாத்தா
கதைகள் சொன்னதும்
திண்பண்டங்கள்
கடித்துக் கொடுத்ததும்

என்றன் பேரன் கணினியின் முன்னே
எழுந்திருக்காமல் ஆடும் போதில்
இன்றென் மனத்தில் வந்து மோதின!

இவனும் இங்கே
இயந்திரப் பொம்மைதான்!

வளவ. துரையன்

நன்றி : பயணம் - மேலத்துலுக்கன்குளம் - அக் 2004


ஒரு நம்பிக்கை

கொய்யாப்பழம்!
கொய்யாப்பழம்! சொல்லி
நீட்டுகிற உள்ளங்கைகளில்
இருக்கிறது
ஒரு முயற்சி....!

வடை..வடை..என
வளைகிற வார்த்தைகளில்
இருக்கிறது
ஒரு உழைப்பு.

பாட்டுப்பாடி பிச்சை
கேட்கும் பிச்சை முகத்தில்
இருக்கிறது வாழ்வின்
ஒரு விதை...!

வேறு வேறு திசைகளில்
வேறு வேறு இலக்குகளில்
பயணம் ஒருமித்திருக்கிறது
மனசின் ஆழத்திலூன்றிய
களை பிடுங்கித்
தூரமெறிந்து ஒரு பாடலுடன்
ஓடிக் கொண்டிருக்கிறது
ரயில்....

கருப்புப் பட்டை மேனி
நகர்ந்து கொண்டிருக்கிறது
தொட்டால் சுருள்கிறது.
அடித்துப் போட்டால்
நாறுகிறது...
அதனை நோக்கி
வீசும் எந்தக் கேள்விக்கும்
இல்லை பதில்
அதனிடம்.

பின் ஏன் வாழ்கிறது
மரவட்டை?

பின் அதன் வாழ்க்கையை
யார் வாழ்வது.

ஹரணி

நன்றி : கணையாழி - நவம்பர் 2004


நம் குழந்தைகளின் எதிரிகள்

குழந்தைகள் பள்ளிக்கு நடக்கிறார்கள், வீட்டிற்கு ஓடுகிறார்கள் - என்று விளம்பரங்கள் தமிழக வீதிகளில். குழந்தைையும் தெய்வத்தையும் சமன்படுத்திப் பார்த்த கணக்கீடுகள் தவறிப்போனது எப்படி? குழந்தைகள் அலட்சியமாகவும், அக்கறையற்ற தன்மையுடனும், அதிகார சவுக்குகளின் நுனியிலும் நடத்தப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குழந்தைகளின் எதிரிகளான வகுப்பறைச் சுவர்கள், வீட்டுச் சுவர்கள், தொலைக்காட்சிப் பெட்டியின் சுவர்கள் போன்றவை - நானா ? நீயா? - என்று போட்டி போட்டுக் கொள்கின்றன. இவை ஒன்றுக்கொன்று சளைத்தவையில்லை.

குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவது, புத்தகச் சுமைதூக்கிகளாகக் குழந்தைகளை மாற்றுவது, மற்றவர்கள் மத்தியில் குழந்தைகளை நாகரிகமற்ற முறையில் நடத்துவது, குழந்தைகள் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கு அனுமதியாதிருப்பது, குழந்தைகளுடன் நட்புணர்வுடன் உரையாடத் தவறுவது - என்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. குழந்தைகளின் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் முயற்சிகள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஒழுக்கங்கெட்ட நிகழ்வுகள், குழந்தை வதைகளின் முகாம்களாகச் சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளின் மீதான இந்தக் கொடூரத் தாக்குதல்கள் குறித்தும், அவை சார்ந்த நெருக்கடிகள் குறித்தும் இந்த சிறப்புக் கட்டுரை அமைந்துள்ளது -

காண்க : குழந்தைகளுக்குத் தேவை ஆசிரியர்களல்ல! - சி.சொக்கலிங்கம் எழுதியுள்ள கட்டுரை - புதிய காற்று - நவம்பர் 2004 இதழில்.



மலையாளக் கதை
நினைவுகள்

மாதவிக்குட்டி

தமிழாக்கம் - மு.ஜீவா

புதுப் பெண்ணான தன் மகளின் தலையில் ஒரு மல்லிகைச் சரத்தைச் சூடிக்கொண்டே அம்மா விம்மினாள். "அய்யய்யே.. அம்மா அழாத" இந்த அளவுக்குப் பயப்படுகிறதுக்கு இதில என்ன இருக்கு?

அம்மாவின் இதயத்தில் அம்புகள் பாய்ந்து நினைவுகளாய் ஏறின. இருபது வருடங்களுக்கு முன்பு, தன்னை சாந்தி முகூர்த்தத்திற்கு அனுப்புவதற்கு முன்பு, தன்னுடைய அம்மா சொன்ன அதே வார்த்தைகள். அன்று அவள் கைவிரல்களைக் கடித்து நாணத்தால் முகம் கவிழ்த்தி நின்று கண்ணீரொழுக்கினாள். அம்மாவின் கண்களும் கலங்கியிருந்தன. தான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதை நினைத்தாயிருக்கும். காலம் எவ்வளவு வேகமாகக் கடந்து விடுகிறது?

விறைத்துக் கொண்டிருக்கும் சீதையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அம்மா சாந்தி முகூர்த்த அறைக்கு நடந்தாள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த அறைக்குள் நுழையும்போது வாசலில் தன் கால்கள் இடறியது நினைவுக்கு வந்தது. திறந்து கிடந்த அந்த வாசலைக் கடக்கும்போது தன்னுடைய இதயம் அதிவேகத்தில் துடித்தது. நரம்புகளினூடே இரத்தம் கொதித்தேறுவதுபோல் தோன்றியது. அந்த அறையின் கட்டிலின் ஒருபுறத்தில் சீதையின் அப்பா உட்கார்ந்திருந்தார். அம்மா தன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பிப் போனாள். அவருடைய முகத்தில் வெட்கம் நிறைந்த வியர்வைத் துளிகள். ஒரு மந்தகாசத்தோடு அரும்பியிருந்தன.

அவளுக்குத் தலை சுற்றியது. தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரம் தரையில் விழுந்தது.

சீதையின் கால் இடறியது. வாசல் கதவை எட்டியபோது அவளுடைய கன்னங்களில் ஒரு துடிப்புப் படருவதை அம்மா கண்டிருந்தாள். வெள்ளயைான பட்டுவேட்டி கட்டியிருந்த அந்த இளைஞன் மெலலச் சிரித்தான். முகம் கவிழ்த்தி நின்ற சீதையை அவனும்கூட தனித்தாக்கி விட்டுச் சென்று வாசல்க் கதவை அடைக்கும்போது அம்மாவின் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அந்தக் கதவின்மேல் காதை வைத்துக் கூர்ந்து கேட்டனர். ஏதோ ஒன்று தரையில் விழுகின்ற சப்தம். ஆமாம். சிதையின் மல்லிகைச்சரம்.

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அம்மாவின் மனதில் வழிந்து வழிந்து ஓடுவதாயிருந்தன. சிந்தனைகளில் மூழ்கியவளாய் அவள் அவளுடைய அறைக்குள் சென்றாள்.

மேற்கிலிருந்து கடலின் கர்ஜனை ஆவேசத்தோடு முழங்கியது. அம்மா தன்னுடைய சாந்தி முகூர்த்த இரவை நினைவில் கொண்டு வந்தாள். அன்று அவள் தனிமையளாகி நின்றிருந்தபோது கணவன் வெட்கத்தில் சிவந்திருந்த தன்னுடைய முகத்தைப் பிடித்துயர்த்திக் கொண்டு கேட்டார்.

"அம்மணி".

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். அன்பு தழும்பும் அந்தக் கண்கள் தன்னுடைய இதயத்தில் நுழைந்து துளையிட்டன. ஏதாவது பேசினால் பரவாயில்லை என்பது போல் தோன்றியது. உதடுகள் உலர்ந்தன. ஆனால் சப்தம் ஒன்றுமில்லை. அவருடைய கைகளில் நானமர்ந்தேன்.

கட்டுக்கடங்காத உணர்ச்சி வேகத்தால் தழும்பிய குரலோடும் பெருமூச்சோடும் அவர் "அம்மிணி...என் அம்மிணி" . என்னுடைய நெற்றி வியர்த்திருந்தது.

அந்தப் பழைய நாடகத்தில் அம்மா மீண்டும் பங்கேற்கின்றாள். அவருடைய நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அந்த அறையின் கூரிருட்டில் இறந்துபோன தன்னுடைய கணவனை அவளுக்குப் பார்க்க முடிந்தது. அன்றைக்கு அவர் இருந்த கல்யாண கோலத்தில்.

அவளை அந்த ஜன்னலின் மேல் அமர்த்திக் கொண்டு, அவர் கேட்கின்றார் "அம்மிணிக்குப் பாடத் தெரியுமா?"

"..ம்..."

" எனக்காக ஒரு சின்னப் பாட்டு பாடு"

தன்னுடைய கையை எடுத்து அவர் மடியில் வைத்துக் கொண்டார். கடலில் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருந்தன. அவள் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.

"காதோடுதான்.... நான் பாடுவேன்"

அம்மாவின் சப்தம் மெல்ல உயர்ந்தது. நினைவிழந்தவளாய் அவள் அந்த பழைய பாட்டைப் பாடிக் கொண்டிருந்தாள்.

அடுத்த அறையின் ஜன்னல் வழியே சீதையின் இனிய குரல் பாடலாய்ப் பறந்து வந்தது.

"வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்"

அம்மாவின் பாட்டு நின்றது.

"அழகே" ஆராதனை பொங்கி வழிந்த ஒரு ஸ்வரத்தில் அன்று கணவன் அழைத்தார். தன்னுடைய தலைப் பின்னல்கள் அவிழ்ந்தன. தளர்ந்த உடல் அவருடைய மார்பில் சாய்ந்தது. ஒரு கன்னுக்குட்டியை எடுப்பதுபோல் தன்னை வாரியெடுத்து அவர் தன்னை மெத்தைமேல் கிடத்தினார். அந்த மெத்தையின் மேல் மயக்கத்தை வரவழைக்கும் ஒருவித மணம் உயர்ந்தது. அவருடைய பெருமூச்சும் உயர்ந்தது.

"எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு" அவருடைய கண்கள் மூடின.

அறியாமல் உதடுகள் அசைந்தன. "எனக்கும் உங்களை"

இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அன்று அவர்கள் உறங்கினர். இறந்துபோன கணவனின் முகம் தன் முகத்தோடு முகமாய் அவளால் காண முடிந்தது. அவருடைய மூச்சுக்காற்று தன்னுடைய கன்னங்களில் பரவுவதாய்த் தோன்றியது. ஆனந்த லஹரியில் மூழ்கிக் கிடந்த அம்மாவை ஜன்னல் வழிவந்த இளந்தென்றல் நனவுலகிற்குக் கொண்டு வந்தது.

அதிகாலையில் களைந்துபோன முடியோடும், சோர்ந்துபோன கண்களோடும், உலைந்துபோன உடுப்புகளைச் சரியாக்கியபடியும் சீதை அம்மாவின் அறைக்கு வந்தாள். அம்மாவின் முடி அவிழ்ந்திருந்தது. முகத்தில் சோர்வு. அம்மா சேலையை நேராக்கிக் கொண்டு சிரித்தாள். ஒரு புதுப்பெண்ணின் மோகனப் புன்சிரிப்பு.

நன்றி : திசையெட்டும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ் - அக் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061