வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 10 - 2004

குறும்பாக்கள்

(o) குளித்ததைப் பார்த்த பிறகு
திரை போட்டனர்
அம்மன் சன்னதி. .................(வலம்புரிலேனா)

(o) இறந்த பிறகு
அலங்கரிக்கப் படுகிறான்
புதைக்கப்படுவதற்கு. .................(தாயாகவிச் சிற்பி)

(o) சருகுகளும்
உரமாகும்
கூட்டுக் குடும்பம் .................(த.ப.மூர்த்தி)

(o) எப்படி வருவாரோ
வேலைக்குப் போன மனுசன்
இன்று சம்பளநாள் .................(கா.வ.கன்னியப்பன்)

நன்றி : மதுமலர் - படப்படி இதழ் - திருவலம்பொழில்


போதி மரம்

விளம்பரத்தில்
பார்த்த பொருளையெல்லாம்
வாங்கிக் குவிக்கும்
அம்மா....

விழா, விருந்தென
பணத்தைத் தண்ணியாக்கும்
அப்பா....

அலங்காரப் பொருள்களை
வாங்கி அடுக்கும்
அக்கா....

இரு மடங்கு
காசு கொடுத்து
புதுப்படம் பார்க்கும்
நான்...

மிட்டாய் வாங்க
கொடுத்த காசை
சேமித்து வருகிறாள்
கடைசித் தங்கை.

புன்னகை சேது - பொள்ளாச்சி
நன்றி : தங்க மங்கை - அக்டோபர் 2004.


ஒத்திகை

ஏறும் போதும்
இறங்கும் போதும்
நூறுமுறை திரும்ப வைக்கும்

மாடிப்படிச் சுவரில்
மாட்டப்பட்ட கண்ணாடி.

அடிக்கடி முகம் கழுவி
மஞ்சள் பூசி மையிட்ட
முக அழகை
கொஞசமும்
அதியமாய்க் காட்டத் தெரியாத
குணம் அதற்கு.

பழித்துக் காட்டினால்
என்னைப் பழிக்கும்.

எது எப்படியாயினும்
நிதம், நிதம்
ஒத்திகை பார்த்துக் கொள்ள
உதவும் தோழியது
யாருக்கு எந்த முகம்
காட்ட வேண்டுமென.

மு.மனோன்மணி.
நன்றி : கல்வெட்டு பேசுகிறது. அக்டோபர் 2004


பொது மன்னிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன்பே
பொன்கூரை வேய்ந்தவர்கள் நாங்கள்
இறைவன் குடியிருக்க.
தென்னங்கூரை வேய்ந்து
பச்சிளங் குழந்தைகளை படுகொலை செய்திட்ட
படுபாதகர்கள் நாங்கள்தான்.
கோவில் நகரத்தில் !

பாரதி சொன்னான்
பள்ளித் தலம் அனைத்தும்
கோவில் செய்வோமென்று..
கோவல் தலங்களில்கூட
பள்ளிகள் செய்கிறோம் நாங்கள்..
காசு பார்ப்பதற்கு..

விலை மதிப்பில்லா சொத்து
ஒவ்வொரு மாணவனும்
சமூகத்தின் பார்வையில்
விலை மதிப்புள்ள சொத்து
ஒவ்வொரு மாணவனும்.
பள்ளிகளின் பார்வையில்.!

இந்தியா வளர்ந்த நாடாகப் போகிறதாம்,
இரண்டாயிரத்து இருபதில் - ஆம்
கூரைக் கொட்டகையின் கீழ்
குருகுலக் கல்வியை
மீண்டும் கொண்டு வந்து !

குடந்தையில் நாங்கள்
கொன்று குவித்தது
குழந்தைகளை மட்டுமல்ல..
இழந்து வரும் - எங்கள்
மனிதத்தன்மையின் மாண்புகளையும்தான்.

எங்கள் அரசியல்வாதிகள்
மிகத் திறமையானவர்கள்..
மலர் வளையம் வைத்தே
மறைத்து விடுவார்கள்.
அவர்களது குற்றங்களை.

ஊரெங்கும் போஸ்டர் ஒட்டினோம்
கண்ணீர் அஞ்சலி என்று..
ஒரு குரல்கூட ஓங்கி ஒலிக்கவில்லை - அதன்
காரண வேர்களான கல்விக் கொள்கையை.
கண்டறிந்து கொல்ல.

கண்ணீர் விட்டோம், கதறினோம்
அஞ்சலிக் கூட்டங்களும் நடத்தினோம்,
ஆர்ப்பாட்டம் செய்தோம்..
அதிகாரிகளை நீக்கச் சொல்லி !
அதிருப்பதி தெரிவித்தோம்...
அரசாங்கம் மீதும் !
அத்தனையும் செய்வோம் - இனி
அடுத்த சம்பவத்தின் போது !!

மன்னிப்பு கேட்கிறோம்,
பிஞ்சுகளை இழந்த பெற்றோர்களிடமும்
தப்பிப் பிழைத்த தந்தைகளிடமும்..
நடந்து விட்ட சம்பவத்திற்காக மட்டுமல்ல !
இனிமேல் நடக்காதென்று,
உறுதி தர முடியாமைக்காக !!


- மில்லர் -
நன்றி : நவீன ஊடகம் - காலாண்டிதழ் - இதழ் எண் : 4


மேடை

பெரும் காப்பிய நாடகம்
மேடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஒளி வெள்ளத்தில் கதா பாத்திரங்கள்
ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதை வளர வளர
பார்வையாளர்கள் கதையின்
பகுதிகளில் இறுக்கமாகிறார்கள்
கதையின் ரூபங்கண்டு
திகைக்கிறார்கள்
நேரம் அதிகரிக்க அதிகரிக்க
அவர்களே கதா பாத்திரங்களாக
உருமாறுகிறார்கள்
மேடையின் பின் பக்கத்திலோ
கண்ணன் குண்டி சொறிகிறான்
சகுனி பீடி குடிக்கிறான்.
பஞ்ச பாண்டவர்கள்
கேலி பேசிச் சிரிக்கிறார்கள்
கிரீடங்களை அழுத்தி
பிடுங்கி எடுத்து
சொறிந்து கொள்கிறார்கள்.

மேடையின் முன்பக்க ஒளியாகவும்
பின்பகுதி இருளாகவும்
அந்தரத்தில் நிற்கும்
மேடை.

நாடகம் முடிவடைந்ததும்
பார்வையாளர்கள் தங்கள் தங்கள்
நாடகங்களை எடுத்துச் செல்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியாமல்
ஒளியும் இருளும் நிரம்பிய
மேடை அவர்களோடு
தொடர்ந்து செல்கிறது.

- லஷ்மி மணிவண்ணன் கவிதைகள் -
நன்றி : மீள் சிறகு - இதழ் 1 - செப்டம்பர் 04


படிப்பது சுகம்

அவன் ஒரு குதிரைக்காரன்.

எல்லாக் குதிரைகளும் பந்தயத்திற்கு வந்திருந்தபோது அவன் குதிரையும் வந்திருந்தது. ஆனால் அதற்கு மட்டும் கடிவாளம் இல்லாமல் இருந்தது.

அவன் குதிரைதான் பந்தயத்தில் முதலாவதாகவும் வந்தது. எல்லோரும் ஆச்சர்யமடைந்தார்கள். கடிவாளம் இல்லாமல் ஒரு குதிரையா ? அதுவும் பந்தயத்தில் முதலிடமா ? அவனிடம் கேட்டார்கள்.

அவன் சொன்னான். என் குதிரை சின்னக் குட்டியாக இருக்கும் போதே நான் குதிரை மொழியில் அதன் காதுகளில் கிசு கிசுத்தேன். " ஓடுவது சுகம், ஓடுவது ஆனந்தம், ஓடினால் தான் உடல் வலுவடையும், ஒரே குறிக்கோளுடன் ஓடுகிற குதிரைதான் உயர்ந்த குதிரையாகக் கருதப்படுகிறது" என்று...

எப்பொழுது ஓடுவது அனுபவமாக ஆகிறதோ, அந்தக் குதிரைக்கு எதற்குக் கடிவாளம் ? எப்போது ஓடுவதை ஆனந்தமாகக் கருதுகிறதோ அந்தக் குதிரையை வெல்லக் குதிரையேது ?

இப்போது நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். இதுவரை நீங்கள் படிப்பதைச் சுமையாகக் கருதியிருப்பீர்கள் - காரணம் பிரம்படி மூலமாகவும், அச்சுறுத்தல்கள் மூலமாகவும்தான் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். பழைய நினைவுகள் அனைத்தையும் அப்படியே கழற்றி விடுங்கள் - ஒரு புதிய குளியல் போடுங்கள் - ஒவ்வொரு நீர்த்திவலையும் மகிழ்ச்சியானது என எண்ணுங்கள்.

"படிப்பது இனிமேல் மகிழ்ச்சியானது" என்று திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். கண்களை மூடி தியானம் செய்யுங்கள். இனி விழிகளைத் திறந்து பாருங்கள் - புதிய ஒளி - புதிய வெளிச்சம் - புதிய உலகம் தெரியும்.

- வெ. இறையன்பு - (படிப்பது சுகமே நூலில்)
நன்றி : புதுக்கவிதைப் பூங்கா மாணவரிதழ் - அக் 2004



வெற்றி பெறத் துடிக்கும் இளைஞனுக்கு...

1. தன் இலட்சியத்தை ஆழ் மனதில் வேரூன்றச் செய்திட வேண்டும்.
2. பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு பின் வாங்குதல் கூடாது.
3. அவ்வப்பொழுது ஏற்படும் தோல்வியைக் கண்டு மனம் தளர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றிக் கனியைப் பறிக்கவேண்டும்.
4. தன் இலட்சியத்தில் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற முழுநம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லவேண்டும்.
5. தன்னைத் தானே ஆராய்ந்து. சுயசோதனை செய்து மலைபோல் குவிந்திருக்கும் குறைகளை நீக்கிடல வேண்டும்.
6. தன்னை நோக்கிவரும் இடர்களை துணிவோடு எதிர்கொண்டு மனவலிமையுடன் அடிஎடுத்து வைக்கவேண்டும்.
7. தியாக மனப்பான்மையோடு உலகிற்கு அதிகமான நன்மைகள் செய்யவேண்டும் என்பதை மனதில் பதிய வைத்தல் வேண்டும்.
8. நம் கருத்தை எவ்வாறு வலியுறுத்துகிறோமோ... அவ்வாறே பிறர் கருத்தை வலியுறுத்தும் பொழுது விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி கட்டுரையில் - காஜாமைதீன் - நாச்சியார் கோயில்.
நன்றி : கேடயம் - தென்னகத்து அரபுக்கல்லூரிகளின் பட்டமளிப்பு சிறப்பு மலர் - அக் 2004.


குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறித்த மலர்கள்

செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், செங்கழுநீர் மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், வேரி மலர், தேமா மலர், செம்மணி மலர், பெருமூங்கில் மலர், வில்வ மலர், எறுழமலர், வெண்கடம்ப மலர், கூவிர மலர், வடவன மலர், வாகை மலர், பஞ்சாங்கோரை மலர், காக்காணம் மலர், கருவிள மலர், பயினி மலர், வானி மலர், குரவ மலர், பச்சிலை மலர், மகிழ மலர், காயா மலர், ஆவிர மலர், சிறு மூங்கில் மலர், சூரை மலர், சிறு பூளை மலர், குன்றி மலர், குருகிலை, மருத மலர், கோங்க மலர், மஞ்சாடி மலர், பாதிரி மலர், செருத்தி மலர், புனலி மலர், சண்பக மலர், கரந்தை, காட்டு மல்லிகை மலர், மாவின் மலர், தில்லை மலர், பாலை மலர், கல முல்லை மலர், கஞ்சாங் குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழை மலர், வள்ளி மலர், நெய்தல் மலர், தென்னம் பாளை மலர், செம் முல்லை மலர், முள்தாள் தாமரை மலர், ஞாழல் மலர், மெளவல் மலர், கொகுடி மலர், பவழக்கால் மல்லிகை, சாதி மலர், கருந்தாமக் கொடி மலர், வெண்காந்தள் மலர், தாழை மலர், சுரபுன்னை மலர், காஞ்சி மலர், நெய்தல் மலர், ஓமை மலர், மரவ மலர், தணக்க மலர், இண்ட மலர், இலவ மலர், கொன்றை மலர், அடும்ப மலர், ஆத்தி மலர், அவரை மலர், பகன்றை மலர், முள்முருங்கை மலர், அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பை மலர், துழாய் மலர், தோன்றி மலர், நந்தியாவட்டை மலர், புன்னாக மலர், பருத்தி மலர், பீர்க்க மலர், குருக்கத்தி மலர், சந்தன மலர், அகில் மலர், புன்னை மலர், நாரத்த மலர், நாக மலர், இருள்வாசி மலர், குருந்த மலர், வேங்கை மலர், திலக மலர், ஈங்கை மலர், ஆர் மலர், மலையெருக்க மலர்

இவற்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த - " தமிழ் வளத்தையும், தமிழ் நாட்டு வளத்தையும் " அறியலாம்.
நன்றி : நமது தமிழாசிரியர் - துலை 2035


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061