தமிழில் இரு ஐபுன்கள்
(o) நண்டுகள் இல்லை... நத்தைகள் இல்லை...
வயல் நடுக்குளத்தில் மீன்கள் இல்லை...
குளத்தை வயலை நஞ்சாக்கியது... பசுமைப் புரட்சி..
நஞ்சாக்கியவர் இன்று வேளாண்அறிஞர் (!)
உள்ளதும் போவதற்குள்
நல்லதாக்கு
இயற்கை வேளாண்மை.
(o) ஏமாற... வரிசை... தேர்தல்
ஏமாற... வரிசை... வேலைவாய்ப்பு அலுவலகம்
ஏமாற... வரிசை... திரையரங்கம்
நல்லதல்ல
திருந்து
இளைஞனே !
- புதுவை சீனு. தமிழ்மணி -
நன்றி : கரந்தடி - துளிப்பா, நகைப்பா காலாண்டிதழ் (16)
திரையால் வந்த தீங்கு
நடிகருக்கு மன்றங்கள் வைத்தே நாட்டில்
நாளதோறும் அவர்புகழைப் பரப்பி நிற்பார் !
வெடிவெடிப்பார், விளம்பரத்துத் தட்டி வைப்பார் !
வெறித்தனமாய் நடந்திடுவார் வாழ்வை எண்ணார் !
கொடிகட்டி ஊர்முழுதும் பரப்பு ரைப்பார் !
கொஞ்சமேனும் தன்நிலையை நினைத்துப் பாரார் !
படிப்பதையும் விட்டுவிட்டுப் படத்தைப் பார்ப்பார் !
தேர்வுதனில் கோட்டைவிட்டுக் குமைந்தே போவார் !
நாட்டுக்கே உழைத்திட்ட நல்லோர் தம்மை
நாவினிக்கக் கூறென்றால் தெரியா தென்பார் !
பாட்டுக்கோர் புலவனைக் கூறென் றாலோ
பார்த்திடுவார், பரிதவிப்பார், தெரியா தென்பார் !
வீட்டினிலே நடிகைகளின் படமே தொங்கும் !
விடுதலைக்கே உழைத்திட்ட வீரர் தம்மை
மாட்டிவைக்க அவருக்கோர் இடமோ இல்லை !
மறந்திட்டார் இந்நாட்டை அதுதான் தொல்லை !
திரைப்படத்தால் சீரழிவு இன்னும் இங்கே
தீயெனவே தமிழகத்தைப் பற்றிக் கொண்டு
கறைபடியச் செய்கிறதே களங்கம் தானே !
காலமெல்லாம் பண்பாட்டைக் காத்து வந்தோம் !
சிறையிட்ட திரைமூலம் அழிக்கின் றாரே !
சீரழிக்கும் திரைப்படத்தை ஒதுக்கி வைப்போம் !
அரைகுறையாய் ஆட்டங்கள் இனியும் வேண்டாம்
அருவருப்புக் காட்சிகளோ திரையில் வேண்டாம் !
- க. சண்முக சிதம்பரம் -
நன்றி : தேமதுரத் தமிழோசை இலக்கியம் - செப் 2004
துடிக்காமல் இருக்கின்றார்
காப்பியங்கள் ஐந்துவகை இலக்க ணங்கள்
கற்புநெறி காட்டுகின்ற இலக்கி யங்கள்
காப்பாக வாழ்க்கைநெறி புகட்டு கின்ற
கணக்கற்ற அறநூல்கள் கொண்டி ருந்தும்
கோப்பாக அகம்புறமாய் வாழ்வு தன்னைக்
கொள்கைவழி கோர்த்துவைத்தும் இளமை யோடு
மூப்பின்றி உள்ளபோதும் தமிழை மூலை
முடங்கிடவே ஒதுக்குகின்ற கொடுமை ஏனோ !
கணினி மொழி ஆனபின்பும் உலக மெல்லாம்
காணுகிற இணையத்துள் நுழைந்த பின்பும்
அணியணியாய் அறிவியலின் கருத்தைச் சொல்லும்
ஆய்வுநூல்கள் அடுக்கடுக்காய் வந்த பின்பும்
மணிமணியாய்ப் பொறியியலை மருத்து வத்தை
மாத்தமிழில் மொழிபெயர்த்துச் சேர்த்த பின்பும்
தனித்தியங்கும் ஆற்றலுண்டு என்றே சொல்லித்
தமிழதுவே செம்மொழியாம் என்ற பின்பும்
ஆங்கிலத்தில் இல்லாத மொழியின் சீர்மை
அகிலத்தில் இருக்கின்ற மொழியுள் தொன்மை
பாங்காகத் தமிழ்மொழிதான் பெற்றி ருந்தும்
பதிதாப நிலைமைக்கு மானம் விட்டுத்
தூங்குகின்றார் தமிழர்தாம் என்று ரைத்தும்
துடிக்காமல் இருக்கின்றார் சொரணை யின்றி
தீங்கிழைக்கும் தமிழரினைச் சாட்டை யாலே
திருந்துமட்டும் அடித்தால்தான் தமிழைக் காப்பர் !
- பாவலர் கருமலைத் தமிழாழன் -
நன்றி : தமிழர் முழக்கம் திங்களிதழ் கடகம் முரசு 3 முழக்கம் 5
சீறி எழுவதன்றி வேறு வழியில்லை !
சிந்தித்துச் செயல்படுவோர் செப்பு கின்றார்
"சீறியெழு வேறுவழி இல்லை" என்றே
சிந்தையிலே வலுஉள்ளோர் சீறு வாரேல்
சிற்றெலியாய் இரிந்தோடும் சீயங் கூட
இந்தவொரு சொல்போதும் உணர்ச்சி யோடே
இருக்கின்ற தமிழர்களுக்கெழுச்சி யூட்ட
மந்தைகளாய் மாறிவரும் நமதி னத்தை
மறுபடியும் மனிதர்களாய் மாற்றிக் காட்டும்.
வற்றாத நெடும்புனலாம் தமிழ்ச்சொல் றாற்றில்
வடமொழியின் முடைநாற்றம் மிடைந்தே வீசும்
கற்றறிந்தார் தன்முனைப்பை விட்டொ ழித்தே
கலந்தொன்றாய் மொழித்தூய்மைக் காத்தல் வேண்டும்
முற்றாகத் தமிழ்மொழியை அழிப்ப தென்றே
முனைப்பாக இருக்கின்ற மொழிப்ப கைக்கே
சற்றேனு மினியுமிங்கே இடங்கொ டுத்தால்
சரிந்துவிடும் தமிழினமும் மொழியும் நாடும்.
பெருந்திரையும் குறுந்திரையும் பெருமை யோடு
பேசுகின்ற மொழிகளிலே தமிழே இல்லை
வருந்தாமல் இருப்பவரே இருக்க மாட்டார்
வானொலியார் வழங்குகின்ற உரையைக் கேட்டால்
மருந்திற்கும் கூடஇவை தமிழ்ப்பண் பாட்டை
மறந்தும்தம் நிகழ்ச்சிகளில் சேர்ப்ப தில்லை
திருந்தாத ஊடகங்கள் இவைக ளெல்லாம்
தெளிவான மக்களையும் குழப்பி வைக்கும்.
தாய்மொழியாம் தமிழிலுரை யாடு வாரைத்
தலைதொட்டுக் கால்வரையில் பார்க்கின் றார்கள்
சாய்ந்துவரும் தாய்த்தமிழுக்(கு) ஊன்று கோலைத்
தருபவரின் நிலையிதுதான் நாட்டிலின்று !
வாய்சோர்ந்தும் சிலர்இன்று தமிழில் பேச
மறுக்கின்றார் அதுவன்றோ கொடுமை இன்று
தேய்ந்துவரும் மொழியுணர்வைத் திரும்பச் செய்தால்
தீர்ந்துவிடும் மொழியுரிமைச் சிக்க லெல்லாம்.
- இரா. செம்பியன் -
நன்றி : தெளிதமிழ் - தி.ஆ.உ0ஙரு, கன்னி க ( ஆண்டு: கக, இதழ் சு)
தமிழ் ஒரு செம்மொழி
அமெரிக்க மொழியியல் அறிஞர்
முனைவர் ஜியார்ஜ் எல். ஹார்ட்
தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ளரு விளக்கவுரை வழங்க வேண்டுமென்று
பேராசிரியர் மறைமலை அவர்கள் (மாநிலக் கல்லூரி, சென்னை) கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருடைய
வேண்டுகோளைப் பெருமகிழ்ச்சியுடன் ஏற்று இதனை எழுதுகிறேன்.
1975 ஆம் ஆண்டு முதல் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நான் ஒரு பேராசிரியராக உள்ளேன்.
தற்சமயம் அங்குத் தமிழ்த்துறைத் தலைவன். 1970 ஆம் ஆண்டு ஃகார்வர்டு பல்கலைக்கழகத்தில் வடமொழிப்
(சமசகிதிதப்) பட்டம் பெற்றேன். எனது முதல் அனுபவம் 1969 இல் மேடிசன், விஸ்சான்சின் பல்கலைக்கழகத்தில்
வடமொழிப் பேராசிரியர் வேலை ஏற்றது. தமிழ், வடமொழி தவிர இலத்தீன், கிரேக்கச் செம்மொழிகளை அறிந்து,
அவற்றின் மூலம் அந்த இலக்கியங்களையும். மொழி ஒப்பியல் ஆய்வு நூல்களையும் விரிவாகப் படித்துள்ளேன்.
அவற்றுடன் உருசியன், செர்மன், ஃபிரென்சு ஆகியதற்கால ஐரோப்பிய மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உண்டு.
அம்மொழி இலக்கியங்களையும விரிவாகக் கற்றுள்ளேன். இவை தவிர இந்திய இலக்கியங்களில், தமிழ்,
மலையாள நூல்களை அம்மொழிகள் வாயிலாகவும், பிறமொழி நூல்களை ஆங்கில மொழியாக்கங்களின்
வழியும் படித்துள்ளேன். தெலுங்கு மொழியின் தலையாய அறிஞர்களுள் ஒருவரான திரு.வி.நாராயணராவ்
அவர்களுடன் நெடிது உரையாடப்பெற்ற வாய்ப்புகள் வழி அம்மொழியின் பாரம்பரியத்தையும் நன்கு அறிவேன்.
இந்தியமொழி இலக்கியச் செழிப்பை அறிந்துணரும் வாய்ப்பும் பெற்றேன். துளசி, கபீர், மகாதேவ வர்மா
நூல்களையும் ஆழமாகப் பயின்றுள்ளேன்.
நான் இவற்றையெல்லாம் இங்குச் சொல்வது, என் அறிவாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அன்று. ஒரு
இலக்கியத்தின் செம்மொழிப் பாங்கைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு என்பதைத் தெளிவுபடுத்த மட்டுமே.
எவ்வகையான அளவைக் கோட்பாடுகளைத் தேர்ந்து நோக்கினாலும், மேலான உலக பாரம்பரியங்கள், செம்மொழி
இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், நிச்சயமாகத் தமிழ் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத்
தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும்.
இதற்கான காரணங்கள் பல. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலாவதாக, தமிழ் மிகத் தொன்மையான
மொழி. பிற இந்திய மொழிகளின் கற்கால இலக்கியங்களைவிடத் தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் காலத்தால்
முற்பட்டது. தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள், பழைய கல்வெட்டுகளையும்,
செப்பேடுகளையும் வைத்து நோக்கும்போது, கி.மு.200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத் தெரிகிறது. பழந்தமிழின்
பெருமை போற்றும் சங்ககாலத் தனிப்பாடல் திரட்டுகள். பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல் இரண்டு
நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அவை இந்தியாவில் முதல் முதலான, சமயங்களுக்கு அப்பாற்பட்ட, உலகியல்
வாழ்வு தழுவிய சிறப்புடைய பாடல் தொகுதிகளாகும்.
இரண்டாவதாக, இந்திய மண்ணில் மணம் கமழும் இலக்கியப் பாரம்பரியமாக, வடமொழித் தொடர்பில்லாது
தோன்றிச் செழித்தது தமிழ் மட்டுமேயாகும். வடமொழியின் தாக்கம் தெற்கே பரவி வலுப்பெறுவதற்கு மிக
முன்னதாகத் தோன்றியவை தமிழ் இலக்கியங்கள். அவை பண்பில் தரத்தில் வடமொழி, பிற இந்திய மொழி
இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிலைக்கின்றன. தனக்கே உரிய செய்யுள் அமைப்பு முறைகள், இலக்கணப்
பாரம்பரியம், தமிழ் மண்ணில் தோன்றிய நுண்ணறிவியலின் எழில், தன்னேரில்லாது பரந்து விரிந்த இலக்கியச்
செழிப்பும், தனித்தன்மையும் கொண்டது. ஒப்புவமையற்ற இந்தியப் பண்பாட்டு உணர்வுகளைத் தமக்கே உரிய
முறையில், தமிழ் இலக்கியங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. விரிந்து பரந்த, மிகச் செழிப்பான, நுண்மான்
நுழைபுலன் விளைச்சலைக் கொண்ட பெட்டகங்கள் அவை. வடமொழி மற்ற இந்திய மொழிகளில் உள்ளதைவிடப்
பெரிதும் மாறுபட்ட, இந்திய அறிவுணர்வை உள்ளடக்கியவை.
மூன்றாவதாக, உலகப் புகழ்பெற்ற சமசுகிருத, கிரேக்க, இலத்தீன், பர்சி, அரபியப் பேரிலக்கியங்களுடன்
ஒப்பிடும்போது, தரத்தில் முன்னணியில் நிற்கும் தகுதியுடையவை தமிழிலக்கியங்கள். அவற்றின் நுட்பமும்,
முழுமையும், திண்மையும், உலகளாவிய பல்நோக்கப் பார்வையும், தமிழை உலகின் சிறந்த பண்பாட்டுப்
பாரம்பரியங்கள், இலக்கியங்களின் வரிசையில் அமர்த்தும் தகுதியைத் தந்துள்ளன. (முதன்மையான, முதன்மைக்கு
அடுத்த நிலையினரல்லாது பொதுமக்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் முற்கால இந்திய இலக்கியம் தமிழ் ஒன்றே )
அறம்பாடும் உலகின் முதன்மையான நூல்களில் பொதுவானது திருக்குறள் என்பது யாவரும் அறிந்ததே.
திருக்குறள் தமிழின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றத் தோன்றிய பன்முக, பல்வகை - துறை முதன்மை
நூல்களில் ஒன்றேயாம். மாந்தர் வாழ்வியலை அகழ்ந்தாய்ந்து அதன் பன்முகத் தோற்றங்களுக்கு ஒளியேற்றியதில்
தமிழ் இலக்கியம் ஈடு இணையற்றது.
தமிழ் செம்மொழியாகத் தேர்வு செய்யப்பட்டால், மற்ற இந்திய மொழிகளும் அந்த நிலைக்கு உரிமை
கொண்டாடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின்
சிறப்பையும் நான் அறிவேன். அவை உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது செழிப்பும், ஆக்கத்திறனும்
கொண்டவை. அவை ஒவ்வொன்றும் உலகமொழி இலக்கியங்களுக்கு இணையாக இடைக்கால, தற்கால
இலக்கியங்களைக் கொண்டவை. ஆனாலும் அவற்றில் எதுவும் செம்மொழியன்று. ஆங்கிலம் போன்ற தற்கால
ஐரோப்பிய மொழிகள் (கிரேக்கம் தவிர) ஏற்கனவே இருந்த செம்மொழிகளின் பாரம்பரியத்தைத் தழுவிப்
பின்னால் கி.பி. இரணடாயிரத்தாண்டில் வளர்ந்தவை. ஐரோப்பியாவின் செம்மொழியாக உலகமுழுதும்
கிரேக்கம் அறியப்பட்டுள்ளது என்றாலும் அதனால் ஃபிரென்சும், ஆங்கிலமும் செம்மொழிகளுக்கான
நிலையைக் கோரமுடியாது.
செம்மொழிப் பாரம்பரியத் தகுதிபெற, ஒரு மொழி பல சீர்நிலைக் கோட்பாடுகளுக்குப் பொருநதவேண்டும்.
அதற்குப் பழந்தொன்மை, வேறொரு பாரம்பரியத்தின் கிளையாக அமையாத தற்சார்பு வளர்ச்சிப் பாரம்பரியம்
இவற்றுடன் செல்வச் செழிப்பு மிகுந்த பழம் இலக்கியத் தொகுப்புகளைக் கணிசமான அளவு பெற்றிருக்க
வேண்டும். பிற தற்கால இந்திய மொழிகளைப் போலல்லாது தமிழ் மேற்சொன்ன அனைத்துத் தகுதிகளையும்
தன்னகத்தே கொண்டது. தமிழ், இலத்தீன் மொழிபோல் மிகமிகப் பழமையானது. அரபு மொழிக்கு மூத்தது.
வடமொழி அல்லது வேற்றுமொழித் தாக்கங்கள் இல்லாமல், முழுமையான தன்னிலைத் தோற்றம்,
வளர்ச்சிப் பாரம்பரியங்களுடையது. அதன் பழம் பெரும் இலக்கியங்கள் சொல்லில் விரிக்கவியலாப் பரப்பும்,
செல்வச் செழிப்பும் கொண்டவை.
ஏப்ரல் 11, 2000
(முனைவர் ஜியார்ஜ் எல்.ஹார்ட் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் - செ.நாராயணசாமி)
நன்றி : தமிழ் நேயம் - கரந்தைத் தமிழ்ச் சங்கம் (சுருக்கத்தின் சுருக்கம்)
நன்றி : நமது தமிழாசிரியர் - இதழ் 163. தி.ஆ.2035 - கன்னி.
|
|