வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 09 - 2004

ஏய்... கில்லி...சுள்ளான் - எதிர்காலத் தமிழகம்

நா. முத்து நிலவன்

கலையும், கலைமகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே, ஒரு சமூகப்போக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள். கலைத் தொடர்புச் சாதனங்கள் வெறும் கண்ணாடி போன்றவை என்பதால் உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நவீன ஊடகவளர்ச்சியில் அவற்றின் தாக்கம் சமூகக் கருத்தை உருவாக்குவதிலும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு கருத்தை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதைக் கவனிக்க வேண்டும்.

கதை, கவிதை, போலும் இலக்கியங்கள் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்புகளை விடவும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் காணும் கலைவடிவத்திற்கு விளைவும் அதிகம். வீச்சும் அதிகம். பெரிய அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு நிகரானது இக்கலை வடிவங்களின் சாராம்சம்.

அந்த வகையில் பாரம்பரியம் மிகுந்த கவிதையும், பாட்டும், கூத்துமாய் உலகம் வியக்க செழித்துக்கிடந்த நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றைய பெரும்பாலான மக்கள் காணும் கலைவடிவங்கள் அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்டவையாகி வருவதுடன் நம்மையும் ஊமைச் சனங்களாக வளர்க்க உரம் போட்டு வருவது மிகுந்த கவலை தருவதாகவே உளளது.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் பெயர் சூட்டி மிகழ்ந்த தமிழ்த் திரைப்பட உலகம் இன்று - ஏய், கில்லி, சுள்ளான், என்றெல்லாம் பெயர்வைக்கும் அளவுக்குப் பொறுப்பற்ற நிலைமைக்குப் போய்விட்டதை எண்ணிக் கவலைப் படாமல் இருக்க முடியவில்லை.

கடந்த 18 மாதங்களாக வெளிவந்த நேரடித் தமிழ்ப்படங்கள் 125 ( 2003 இல் 90 - 2004 இல் ஜூன் முடிய 35). இதில் சில படங்களின் பெயர்கள் : பாப்கார்ன், வெல்டன், தூள், ஜே ஜே, எஸ் மேடம், தம், செம ரகளை, குத்து, ஜோர் - இதெல்லாம் என்ன ? இது போல அர்த்தமற்ற அல்லது ஆங்கிலத்திலான சுமார் 22 ( அதாவது நான்கில் ஒரு பங்கு) படங்களின் பெயர்கள் எந்த அளவிற்குத் தமிழ்த் திரைப்பட உலகம் பொறுப்பற்று இருக்கிறது என்பதற்குச் சாட்சிகளாக நிற்கின்றன. மொழியளவிலும் சமூக அளவிலும் எந்த அளவுக்கான அலட்சியம் இது என்பதை அறிந்தவர் அறிவாராக......

படங்களின் பெயர்களில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். தலைப்பிலேயே படம் எடுப்பவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு விடலாமே ? அதில் காணப்படும் விட்டேத்தியும், விடலைத்தன்மையும்தான் அந்தப்படம் முழுவதும் விரவியிருக்கும் என்பதுதானே சிக்கல். மூலக்கதைகூட 'அநியாயம் தோற்கும் நியாயம் வெல்லும்' எனும் பஞ்சதந்திரக் கதையாக இருக்கலாம். ஆனால் அதைக் காட்சி வடிவாக்க அவர்கள் காட்டும் தந்திரத்திற்குப் பஞ்சமே இருக்காது. அடடா! குட்டிச்சுவரில் உட்கார்ந்து, வீதியில் பாட்டுப்பாடி, வகுப்பு நேரத்தைக்கட் அடித்து, தம் அடித்து, பீர் குடித்து, பெண்களைக் கிண்டல் செய்து, அப்பாவை எப்போதுமே வெறுத்துப் பேசி, பொழுதைக் கழிக்கும் விடலைதான் - பின்னர் ஊரே புகழும் 'பெரீய்ய்ய' மனிதனாகி விடுவானாம் இந்த மாணவ விடலைகள் வேலை வாய்பில்லாதவர்கள் தாம் திரும்பத் திரும்ப வந்து படத்தைப் பார்ப்பவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன ? அதனால் படப் பெயர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் - அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் !

இந்நாளில் இழிந்த குணங்கள் பலவும் நிறைந்த தலைவர்களையே ஊடகங்களில் பார்த்துப் பார்த்து வளர்ந்து வரும் நம் குழந்தைகளுக்கு ஆதர்ச புருஷர்கள் யார் ? இளைய தளபதி, புரட்சிக் கலைஞர், இளைய திலகம், எனும் தமிழ்ப் புகழ் மொழிகளோடு சூப்பர் ஸ்டார், எவர்கிரீன், ஸ்டார் சுப்ரீம், ஸ்டார் அல்டிமேட், ஸ்டார், ஆக்ஷன் கிங் எனும் பட்டங்களோடும் சின்ன வண்ணத்திரைகளில் உலாவந்து உதிர்ந்து போகக்கூடிய நட்சத்திரங்களையே இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்தி வருவது நல்லோர்கள் நெஞ்சை உறுத்துவதாக அல்லவா இருக்கிறது?

இன்றைய இளம் நடிகர் ஒருவரை இளைய தளபதி என்று சொல்கிறார்கள். அரசியலில் மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற இளைய தலைவர்களைத் தளபதி என்றும் மக்கள் தளபதி என்றும் கூறுவதையாவது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். இந்த சினிமாத் தளபதிகள் எந்தப் போர்க்களத்தில் யாருக்கெதிராகப் படைநடத்தி எங்கே வெற்றிக் கொடி நாட்டினார்களாம்?

திரைக்கதைப்படி அநியாயம் செய்யும் சில பெரியமனிதர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து டூப்புகளை பலிகடாவாக்கி ஆவேசப்போர் புரிவதற்கே இவர்களை தளபதி என்றழைத்தால் அதே படங்களில் நடனம் என்ற பெயரில் அசிங்கமான அசைவுகளுடன் இவர்கள் வழங்கும் ஆபாசக் கூத்திற்கு என்ன பட்டம் தருவது? இதனால் அவர்களுக்குக் கிடைப்பதோ சில பல கோடிகள். நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதோ எதார்த்தமற்ற ஒரு மாய உலகம் பற்றிய மனக்கோட்டைகள் தானே? இதிலிருந்து நம் குழந்தைகளை மீட்டெடுக்க நம்மிடம் ஏதுமில்லையே ?.....

இவர்களுக்குத்தான் படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிப்பதற்காகப் பன்னாட்டுக் கும்பினிக்காரர்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களே. பிறகு தேசமாவது பக்தியாவது... ஆயினும் அவர்களிடையே அது என் தேசத்திற்கு எதிரானது என்று நடிக்க மறுத்தார் மம்முட்டி என்பதே பெருமையானது...

இவர்கள் படங்களில் "ஜெய்ஹிந்த்" முழக்கத்துடன் தேசவிரோதிகளைப் பிடிக்கப் போவார்கள் ஆனால் கூடவரும் ஒரு பெண் 'கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு' என்று கதறுவாள்.

இவர்கள் படங்களில் கல்லூரி மாணவர்கள் வருவார்கள். உலகில் இல்லாத ஒரு குரூப் டான்ஸ் இருக்கும். ஆனால் கல்லூரி முதல்வர் கேணையாகவும். ஆசிரியர் கிறுக்காகவுேம் இருப்பார்கள்.

இவர்கள் படங்களில் சந்தன வீரப்பனைக் காட்டுக்குள் தேடிச் சென்று பிடித்து விடுவார்கள். ஆனால் அரசாங்கம் தேடும் பொழுது ஒரு பத்திரிகைக்காரனை அனுப்பிவிட்டு வேடிக்ககை பார்ப்பார்கள்.

இவர்கள் படங்களில் மனிதர்களை ஒன்றாகப் பாவிக்கும் சாதி மத ஒற்றுமையே சத்தியம் பேசும்.ஆனால் அவர்களே தம் சாதிபார்த்து வெல்லும் வியூகங்களோடு அரசியலில் இறங்குவார்கள்.

இவர்கள் படங்களில் ஆறு மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து கூட அனாயசமாகக் குதிப்பார்கள். ஆனால் நிஜ வாழ்வில் ஒன்றரையடி ஸ்டூலிலிருந்து குதிக்க உதவியாளனைத் தேடுவார்கள்.

இவர்களுக்கு மகளாக நடித்த பெண் இவர்களுக்கே காதலியாகவும் தாயாகவும்கூட நடிப்பார். ஆனால் கதாநாயகனுக்கு மட்டும் வயதாவதே இல்லை. அந்த ஸ்டைலும் பலமும் அப்படியே இருக்கும்....

இவர்கள் மேல் மட்டும் பிழையில்லை. கான்வெண்ட் பள்ளி ஆண்டுவிழாக் கூத்துகளில் அடுத்து இதோ சூப்பர் ஸ்டார் மேடைக்கு வருகிறார் என்று தன் மகளை அறிமுகப்படுத்துவதைப் பெருமையாகக் கருதிமகிழும் பெற்றோர்கள் தாமே பெரும்பான்மையாக இருக்கிறோம்? தமிழ் பேசி வந்த காந்தி. பாரதி மற்றும் காமராசர் போன்ற உண்மை வரலாற்றுப் ப(ா)டங்களை நம் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அறிமுகப்படுத்தினோமா என்பதை யோசிக்கவேண்டும். இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று அரசுகளும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தணிக்கையாளர்கள் பாயில் புகாதே என்றால் இவர்கள் தடுக்கில் புகுந்து வருவதைத் தடுக்கத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். எதையும் பகுத்தறிந்து உள்வாங்கக் கற்றுத்தரும் - சமகாலத்தை விளங்கிக் கொள்ளும் - பாடத்திட்டங்களும் இல்லை.

கில்லி, ஏய், சுள்ளான் போன்ற சிறுபிள்ளைத் தனமான தலைப்புகளில் வரும் படங்கள் - தமிழ்ச் சமூகத்தை மெதுவாய்க் கொல்லும் விஷங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது. தமிழ்ச் சீரழிவில் அவசியமான விஷயங்களை அலட்சியப்படுத்துவதில் அல்பமான விஷயங்களுக்கு ஆலாய்ப் பறப்பதில் கொண்டுபோய் விடும்.

தலைப்பை வித்தியாசமாக வைத்து எப்படியாவது பார்த்துவிடத் தூண்டும் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நல்ல படம் - நிகழ்ச்சி என்றால் மட்டுமே பார்ப்பது - அல்லது தவிர்த்து விடுவது என்று புரிந்து கொண்டால் மட்டுமே தமிழ்ச் சமூகம் உருப்படுவது சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.

நன்றி : கணையாழி - செப் 2004



காற்று

சாலையில்
காற்றைக் கிழித்துக் கொண்டு
காற்றாய்ப் பறந்த அந்த பேருந்து
நகர முடியாமல்
நின்று கொண்டிருந்தது
சக்கரத்தில்
காற்று இல்லாததால்.

- ப்ரியா
நன்றி : பயணம் ஆகஸ்ட் 04



விழிப்போடு முன்னேற்றம்

தமிழர்தம் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்தான்
தரவேண்டும் அப்போது தமிழ்த ழைக்கும்
தமிழ்ப்பெயரை வைத்தால்தான் தரணி யெங்கும்
தமிழ்உணர்வு அவர்நெஞ்சில் தலைஉ யர்த்தும்
தமிழ்மக்கள் இன்றைக்கு தமிழ்ப்பெ யர்கள்
தருவதில்லை வரும்நாளில் தமிழ்ப்பெ யர்போம்
தமிழ்இனமும் காணாமல் தமிழ்ப்பற் றுப்போம்
தழைத்தோங்கல் இல்லாமல் தமிழும் போகும்.

புரியாதபெயர் வைப்பார் புரியும் என்று
போலியாக நடித்திடுவார் பொய்யும் சொல்லித்
தெரியாமல் இருந்திடுவர் தெரிந்து கொள்ளும்
திறன்இன்றிப் போய்விடுவர் தீங்கு செய்வர்
விரியாது இவர்உலகம் விளங்கிக் கொள்ள
விரும்பாமல் வாதித்து வீணாய்ப் போவார்
சரியான உணர்வில்லை தலைஉ யர்த்த
தன்மானம் துளியில்லை தாழ்வே நெஞ்சில்.

நாம்தமிழர் நமதுமொழி நற்ற மிழ்தான்
நானிலமும் பேசிடவே நாம் இருப்போம்
ஆம்என்று தலையாட்டி அறிவு கெட்டு
அடியாளாய் இருக்கின்ற அவலம் விட்டு
மாம்பழம்போல் இனிக்கின்ற மக்கட் கின்று
மண்வாசம் வீசுகிற பெயரை வைத்து
வீம்பான பிடிவாதம் விட்டொ ழித்து
விழிப்போடு முன்னேற வேகம் கொள்வீர்!

- அழகனார் - கள்ளிக்கோட்டை.
நன்றி : யாதும் ஊரே - செப் 2004



ஆடு தங்காய் ஆடு !

ஆடு தங்காய் ஆடு!
அயராமல் ஆடு!
உடல் வளைத்தே ஆடு!
உணர்வினோடு ஆடு!
கரம் தூக்கி ஆடு!
களைப்பில்லாமல் ஆடு!

பாடு தங்காய் பாடு!
பண்ணெடுத்துப் பாடு!
தமிழிசை நீ பாடு!
தாழ்ச்சி அதில் ஏது?
தமிழிசைக்கே ஆடு!
தகுதி அதில் கூடு!

- குறும்பலாப்பேரி பாண்டியன் -
நன்றி : தமிழ்ச்சிட்டு சிறுவர் இதழ் ஆகத்து 2004



நியாயம் தானா ?

என் தங்கச்சி
பெரியமனுசியாகும் வரை
எல்லோருக்கும்
பொதுவாய்த்தான்
இருந்தது
எங்கள் வீட்டு
பூசை அறை !

பாவம்
புஷ்பவதியாகிப் போனதால்
அந்த அறைக்குள் நுழையும்
உரிமையிழந்து போனாவள்,
வெளியில் நின்றே
சாமி கும்பிட்டுப் போவது
வழக்கமாய் இருக்க....

கடந்த
இரண்டு நாள்களாய்...
கடுமையான துர்நாற்றத்தால்
நிரம்பி இருந்தது
அந்த அறை !

பலமான
சோதனைக்குப் பிறகு
கடைசியாய் கண்டு பிடித்தோம்
அந்தச் செத்துப் போன எலியை !

இப்போது என் தாயிடம்
கேட்கத்தான் நினைக்கிறேன்.

ஒரு பிணத்தின்
இருப்பைக்கூட
சகித்துக் கொள்ளும், உன் கடவுள்
பெண்ணாய்ப் பிறந்த
ஒரே ஒரு பாவத்திற்காக,
என் தங்கையின்,
வந்து போதலை மட்டும்
பொறுத்துக் கொள்ள மாட்டாராவென்று ?

- கோனூர் வைரமணி
நன்றி: தூறல் - இதழ் 3, செப் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061