வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 08 - 2004

அவசரம்

உருவகக் கதை - செங்கதிரோன்

நீருக்குள் தூண்டிற் கயிற்றில் தொங்கிய புழுவை ஆவல் மீதுர அவசரமாக அணுகியது மீன்.

"நில் ! இரையென எண்ணி என்னில் மறைந்திருக்கும் தூண்டிலில் நீ மாட்டிக் கொள்ளப் போகிறாய்" மீனைப் பார்த்துப் புழு எச்சரித்தது.

"உன் உயிரைக் காய்பாற்றிக் கொள்ள என்னை எச்சரிக்கிறாயா ? உன்னைத் தப்பவிடப் போவதில்லை !" என்றபடி மீன் மேலும் புழுவை நெருங்கியது.

"ஏய் ! நான் சொல்வதைக் கேள். என்னுயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இப்பொழுது எனக்கில்லை. மீனவன் என்னைப் பிடித்துத் தூண்டிலில் கொழுவேற்றியபோதே நான் குற்றுயிராகிவிட்டேன். என் உடல் சிதைக்கப்பட்டு விட்டது. உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இனி நான் இறப்பது நிச்சயம். ஆனால் என்னைக் கொண்டு உன்னை ஏமாற்றும் இந்த மனிதச் செயலை நான் வெறுக்கிறேன். என்னால் இன்னொரு உயிர் மாய்வதற்கு மறைமுகமாகவேனும் நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. மீண்டும் ஒரு முறை உன்னை எச்சரிக்கிறேன். இரையென்று எண்ணி என்னைக் கொத்தி விழுங்கி வீணாக உன் உயிரை மாய்த்துக் கொள்ளாதே" புழு புத்தி கூறியது.

"கேவலம் ! நீ ஒரு புழு. எனக்கு இரையாகப் போகிறவன். எனக்குப் புத்தி புகட்டுவதா ? தப்பிக் கொள்வதற்குத் தந்திரம் போடும் உன் வார்த்தைகளை நம்ப நான் தயாரில்லை" என்று கூறிய மீன் புழுவின் பதிலுக்குக் காத்திராமல் புழுவைப் பாய்ந்து கவ்வியிழுத்தது.

தூண்டிற் கயிற்றில் கட்டப்பட்டு நீரின் மட்டத்தில் மிதந்து கொண்டிருந்த மிதவை நீருக்குள் அமிழ்வதை மேலே கரையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த மீனவன் தூண்டிற் கம்பை உயர்த்தி வேகமாக மேலே இழுத்தான். தூண்டில் தொண்டையில் கொழுவிய மீன் தூண்டிற் கயிற்றுடன் மீனவனின் தலைக்கு மேலாற் சென்று தரையில் கிடந்து துடித்தது.

நன்றி : ஓலை 10 - கொழும்பு தமிழ்ச் சங்க மாதாந்த மடல்


கரை சேர்த்த வியாபாரம்

வெங்காய வியாபாரம் செய்தேன் -
உரிக்க உரிக்கத் தோலாய்
உருவற்றுப் போனது.

உப்பு வியாபாரம் செய்தேன் -
மழையில் கரைந்து நீராகி
மறைந்தே போனது.

இரும்பு வியாபாரம் செய்தேன் -
வியாபாரப் போட்டி வெப்பத்தில்
உருகி விரயமாகிப் போனது.

பஞ்சு வியாபாரம் செய்தேன் -
சூறாவளியில் சிக்கி
பூப்பூவாய்ப் போயொழிந்தது.

எந்த வியாபாரம் செய்தாலும்
எந்தனுக்கு வாய்க்கவில்லை.
கடனெனும் கடலில் மூழ்கி
கரைசேரத் தத்தளித்தேன்.

கரும்பாய் ஒரு வியாபாரம்
அடியேனைக் கரை சேர்த்தது.
காகிதப் பட்டங்களை
உற்பத்தியாக்கும்
கல்விக் கடைகளைத் திறந்தேன்.

அலை அலையாய் கூட்டம்
அடித்துப் பிடித்து வந்தது.
கடனெல்லாம் அடைந்தது.
கைப்பொருளும் சேர்ந்தது.
கூடுதல் போனசாய்
கல்வித் தந்தை பட்டம் வேறு
கலகலப்பாய் உலவுகிறேன்.

- க. பரமசிவன்.
நன்றி : புதிய ஆசிரியன் ஆகஸ்ட் 2004



முரண்பாடுகளின் மகுடம்

மெரினா கண்ணகி மீண்டும்
மதுரை புதிய உயர் நீதிமன்ற
வளாகத்துக்கு மாறுதல். !

உலக மானுடர்களின்
முதல் பெண் வழக்கறிஞரே கண்ணகி தான் !
என்ற சூளுரையோடு
சிலையாக நிற்கப்போகிறாள் ! அது சரி இங்கே
ஒரு விரலோ... ரெண்டு விரலோ...
காட்டிக் கொண்டு நிற்காதே.
தன் ஆட்சிக் காலம் என்று சிலர்
நினைத்துவிடப் போகிறார்கள்.

கையில்
ஒற்றைச் சிலம்புகூட வேண்டாம் !
அது மதுரைப் பாண்டியனிடம்
காட்சியாகப் பறியோய்விட்டது...!
வெறும் கோபாவேசத்தோடு... மட்டும் நில்...

தலைவிரிகோலம் மட்டும்
அனுமதிக்கப்படும் !
அதென்ன அமங்கலம் ?
என்று கேள்வி கேட்கிறாயா ?
இன்றைய பெண்களின்
நாகரிகமே அதுதானே !

- இளைசை அருணா.
நன்றி : வண்ணப்பூங்கா ஆகஸ்ட் 2004



உயிர்ப் பலி

யாருக்கும் தெரியாம, உன் அப்பனுக்கும் சொல்லாம
சேத்தி வச்ச சிறுவாட்டுக் காசோட...
அஞ்சு பத்து கொறையுதுன்னு அக்கம் பக்கம் கடன் வாங்கி
செஞ்சுப் போட்ட வெளிளிக் கொலுசு !

பள்ளிக்கூடம் போகையில
கால்குனிஞ்சு பாக்கயில..
ஒத்தக் கொலுசு காணலன்னு
ஒப்பாரி வைக்கிறயே...
என் காதுல ஈயம் காய்ச்சி ஊத்துரியே !...

எவ வீட்டுக் கதவ அதிர்ஷ்டம் வந்து தட்டுச்சோ...
எந்த மவராசி கையிக்குக் கெடச்சிச்சோ !
அடி ! எடுத்தவக கொடுப்பாளா ?
எளவெடுத்த கிறுக்கி மவளே...

மசமசன்னு நிக்காதடீ...
அங்க இிங்க தேடிப்பாரு !
கூட வந்த மல்லிகாவ
ஒன்னுக்கு நாலுதரம்... நல்லாக் கேட்டுப்பாரு !

இல்லேன்னா இருக்கவே இருக்கு...

ஊரோட எல்லையில ஒசரமா நின்னிருக்கும்
காவக்காட்டு முனியப்பன் கைசூலத்துல
உசுரோட ஒரு கறுப்புக் கோழி
தலைகீழா கட்டுத் தொங்க வைப்பம் !

ரெக்கைய அடிச்சுக்கிட்டு, உசுரவிடும் கோழி போல
திருடனக் குடும்பம் துள்ளத் துடிக்கப் போகட்டும் !
அவவீட்டுக் கூரையில வெளவாலு தூரியாடட்டும்...
அப்பத் தெரிஞ்சுக்கலாம் எடுத்த சிறுக்கி யாருன்னு !

- கோனூர் வைரமணி
நன்றி : தமிழ்ச் சிறகு - ஆக-செப் 2004



சொர்க்கவாசி

யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது.

காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது.

புத்தர் வந்தார்
உயிர்வதை ஒழிந்தது.

சாக்ரடீஸ் வந்தார்
மூடச்சிந்தனை ஒழிந்தது.

மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது.

டால்ஸ்டாய் வந்தார்
வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது.

லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது.

பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது.

வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது.

உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக் கொண்டு.

- கோபிகிருஷ்ணன் கவிதை
நன்றி : புது எழுத்து இதழ் 78.



குடந்தைத் துயரம்

"தலைவாரிப் பூச்சூட்டி முத்த மிட்டுத்
தலைவாசல் வரைவந்தே அனுப்பி வைத்தேன்.
கொலைகாரி ! பிள்ளையைநான் பள்ளிக் கூடம்
கூட்டிவழி அனுப்பிவைத்தேன் பாவி!" என்று
தலையிலடித் தழுதுகண்ணீர் வற்றிப் போன
தாய்மார்கள் தங்களது கருகிப் போன
குலவிளக்கைக் குவியலிலே தேடும் காட்சி
கொடுவாளாய் நெஞ்சத்தைப் பிளந்த தம்மா!

பணம்பறிக்கும் நோக்கத்தில் நடத்து கின்ற
பள்ளிகளை இழுத்தின்றே மூட வேண்டும் !
கணக்கின்றிப் பெருகிவிட்ட குச்சுக் கூரைக்
கட்டிடத்தை இடித்தெடுத்துப் போட வேண்டும்
வணிகநிலை எய்திவிட்ட கல்வித் தொண்டால்
வந்தவினை யாலின்று நொந்து போனோம்
தணிக்கவெண்ணாத் துயரத்தால் வாடு மிந்தத்
தாய்தந்தை மார்க்கென்ன பதில்சொல் வார்கள் ?

- இரா. செம்பியன்
நன்றி : தெளிதமிழ் மடங்கல்



வரலாறு

நாண்
ஏற்றும் கட்டை விரலும்
உயிர் காக்கும் கவச குண்டலமும்
கேட்டு வாங்கப்பட்டவை.
அன்று.. அது கற்காலம்.

மூளை மறைந்த ஊடகம்
நாளைய அரசின் கர்ப்பம் சுமக்கும்
இன்று ஓட்டும்
கேட்டு வாங்கப்படுபவை
இன்று.. இது... பொற்காலம்.

வெற்றிகள் தொற்றிக் கொள்ளும்
இரை நிரப்பிகளுக்கும்
தாரை வார்க்கப்பட்டவை.
இவைகள்... எல்லாம்.

உரிமைகள்.. உரிமைகள்...
தவணை முறையில் கிடைத்தவை
இது
எக்காலமும் ஸ்தல வரலாறு அல்ல
புண்ணிய பூமியில் இன்று
புற்றீசல் சரித்திரம் .. ஆம்.

ஒட்டடைக் குச்சிகள்
ஓய்வெடுத்துக் கொண்டால்
சிலந்திப் பூச்சிகள் எல்லாம்
சிம்மாசனம் ஏறிக்கொள்ளும்
எதிர்கால வரலாறெங்கும்.!

- இரா. சண்முகம்
நன்றி : கலைத் தமிழ் நெஞ்சம் - அறிமுக மாதிரி இதழ் 1



கவலை

திருடனுக்குப் பயந்து
முற்றத்திற்கு கம்பி வலை
போட்டாயிற்று நெருக்கமாய் -
விளிம்பில் உட்கார்ந்தால்
தினம் தெரியும் ஆகாயம்
காணாமல் போயிற்று -
மழை நாளில் முகட்டுவளை
நீர்ப் பிரவாகம்
முற்றத்தை நிறைக்க
கப்பல் விட்ட பழக்கம்
மனசுக்குள் -

நாலு மணிக்கு
ஏழெட்டு நெல் மணிகள்
பொறுக்க வரும் அணில் குஞ்சு
கம்பி வலையில் முகம் தேய்த்து
சோர்ந்து திரும்பும்
கோபத்தோடு -

ஏற்கனவே திண்ணையிழந்த
கோபத்தில் ரேழியில் முடங்கிய
தாத்தாவிற்கு
யாரைத் திட்டுவதெனத்
தெரியவில்லை -
இந்து படிப்பதும் விட்டுப் போயிற்று -
இடம் போதவில்லையென
கொல்லை பன்னீர் மரத்திற்கும்
குறி வைத்தாயிற்று.

செங்கல் மணலுக்கும்
சிமெண்ட்டுக்கும் கூடச்
சொல்லியாயிற்று -

காலம் மாறும்போது
உடைகள் போல
கவலைகளும் புதிதாகுமென
புரிதலும் வந்தாயிற்று.

- நா. விச்வநாதன்
நன்றி : படித்துறை - சித்திரை 2004



அழகான மனைவியைப் பெற்றவன் முதலில்
நன்றி சொல்ல வேண்டியது
மாமியாருக்கு.
நல்ல அறிவைப் பெற்றவன்
நன்றி சொல்ல வேண்டியது
ஆசிரியருக்கு.
நிறைய செல்வத்தைப் படைத்தவன்
நன்றி சொல்ல வேண்டியது
கடவுளுக்கு.
நிறைய நண்பர்களைப் பெற்றவன்
நன்றி சொல்ல வேண்டியது
சைத்தானுக்கு.

- கண்ணதாசன்.
நன்றி : தன்மானக் குரல் - ஆகஸ்ட் 2004



தமிழுக்குச் சோறிட்டவருக்கு (ஒரு கடிதம்)

த.ரெ.தமிழ்மணி, திருவாரூர்.


தமிங்கிலக் கவிஞர் வைரமுத்துவிற்கு,

காவிரி காய்ந்த கடைமடைத் தமிழனின் வணக்கம்.

அமெரிக்காவில் விருது வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். அதற்காக ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்து சர்வ தோசைய மொழியை உருவாக்க இப்படியா புது முயற்சி எடுப்பது ?

தாராளமயமாக்கல் என்கிற பூதம் தமிழ்மொழியை விழுங்கிவிடுமோ என்கிற பயம் வேறு உங்களுக்கு வந்திருக்கிறது. எங்களின் பயமே நீங்கள் தான். மொழியைப் பொறுத்தவரை, தாராளமயமாக்கல் என்பது நீங்கள் சொன்ன வேற்று மொழிக் கலப்புதான். இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் அஞ்சும் தாராளமயமாக்கலுக்கு நீங்களும் ஒரு காரணியம் தானே?

பல மொழிச் சொற்களைக் கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்துள்ளது என்கிற போலிக்கருத்துக்கு நீங்கள் பலியாகி இருக்கமாட்டீர்கள். ஆங்கிலம் வளர்ந்தது (பரவியது) மண்வெறி வல்லாண்மையாலும் பிறமொழிக் கருத்துகள் உடனுக்குடன் தம்மொழியில் பெயர்த்ததாலும்தான் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.

உங்கள் விருப்பப்படி மற்ற மொழிகளின் கலப்பைத் தமிழ் ஏற்றால் செம்மொழிக்கு உரிய அடிப்படைத் தகுதியான 'தனித்தியங்கும்' தன்மை தகர்ந்துவிடும்............

........எது எப்படியோ...உங்கள் கொள்ளுப்பேரன் காலத்திலும் தமிழ் செம்மொழியாக இருக்க வேண்டுமெனில் நீங்கள் அடுத்த மேடையேறும்போது பாவாணர் முதல் மணவை முஸ்தபா வரை தொகுத்திருக்கும் கோடிக்கணக்கான செந்தமிழ்ச் சொற்களைப் படித்துப் பயன்படுத்துமாறு, உங்களுக்கு கைதட்ட வருவோர்களிடம் அறிவுறுத்துங்கள் ! அதுதான் - தமிழ்த் தாய் என்றும் சீரிளமையோடு சிறந்திருக்க வழிவகுக்கும்.

தமிழுணர்வோடு - கடைமடைத் தமிழன்.

நன்றி : மகிழம்பூ - ஆடி 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061