பூனையும் சூரியனும்
பூனை கண்களைத் திறந்தது
சூரியன் உள்ளே நுழைந்தது.
பூனை கண்களை மூடியது
சூரியன் அங்கேயே நின்றது.
இப்பொழுது விளங்குகிறது
இரவில் பூனை விழிக்கும் வேளை
இரண்டு சூரியத் துண்டுகள்
இருட்டில் தெரியும் வித்தை.
பெல்ஜியக் கவிதை - மோரிஸ் கரம்
தமிழாக்கம் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்.
நன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - எண் 8
மோகனின் மஞ்சள் சட்டை
கண்களை உறுத்துகிறது
தொங்கிக் கொண்டிருக்கும்
மோகனின் மஞ்சள் சட்டை
அன்பளிப்பாக வந்ததாகப் பெருமை பட்டுக்
கொள்கிறான்.
முக்கியமானதொரு நாளைத் தவிர
வேறு நாட்களில்
அணிவதில்லை என்று கூறியிருக்கிறான்.
மகளுடன் வெளிக்கிளம்பிய நாளில்
அணிந்து அதன்மேல் நறுமணம் தடவிச்
செல்கிறான்.
அந்தச் சட்டை மணம் பரப்பும் விதம் கண்டு
பொறாமை கொள்கின்றனர் சிலபேர்.
நகரங்களில் இறுமாப்புக் கொண்டு
உலவி வந்த அதை தொட்டிச் செடியின் மீது
படுமாறு போட்டிருக்கிறான்.
அஜாக்கிரதையோ, துரதிர்ஷ்டமோ
அந்தச் சட்டையிலிருந்து திடீரெனப் புகை
கிளம்புகிறது.
பதறிப் போய்ப் பார்க்கையில்
செருகி வைத்த ஊதுபத்திகள் சின்னதாய்
துளை போட்டு விட்டது.
அதிர்ச்சியுற்ற அவன் சிறிது நேரம்
கலங்கியிருக்கிறான்.
அந்த ஓட்டை மீது ஒட்டுத் துணி போட்டு
மறைக்க என்னைக்
கேட்ட வண்ணமிருக்கிறான்.
நான் அதற்கான சிரத்தையை எடுக்கவில்லை.
இன்னும்
அந்தச் சட்டை தந்த ஆடம்பரத்தை
வேறு எந்த சட்டையும் தந்து கொண்டிருப்பதாக
அவனும் சொல்லவில்லை.
நானும் கேட்கவில்லை.
அய்யப்ப மாதவன் கவிதைகள்
நன்றி : யாதுமாகி - இதழ் 8
குடிமக்கள்
புதியதாக
மதுக்கடை ஒன்று
பச்சை பலகையில்
பளபளத்தது.
கட்டிடத்தின் உச்சியிலோ
காந்தி சிலை
எதிர்ப்பு கிளப்பிய சிலரால்
காணமல் போனார் காந்தி
இது சுதந்திர இந்தியா
இங்கு குடிமக்களுக்கே
முதல் உரிமை.
அக்னி இளங்கோ
நன்றி : தங்கமங்கை - ஆகஸ்ட் 04
குமுதம் விகடன்
புத்தகமெல்லாம்
வாரா வாரம்
வச்சக் கணக்கில்
அச்சடிச்சு
பட்டி, தொட்டி,
பொட்டிக் கடையில்
கட்டித் தொங்க
விட்டிடறாங்க...
தினசரிப்
பேப்பருக் காரங்களோ.
ராத்திரிச் சேதிய
காத்தாலைக்குள்ள
டீக்கடை பெஞ்சியில்
போட்டுடறாங்க ! .....ஆனா
பள்ளிக்கூட பாடநூல்
வருசமொரு தரம்
அச்சடிக்க
முடியாமத்தா
தட்டுப்பாடு
வந்துருதுங்க !....
விகடகவி இதழில் அதிகப்பிரசிங்கி
கவாத்து
முதலில் அடியைச்
சுத்தப்படுத்து.
பிசிறுச் சிம்புகளை
ஒடித்து எடு.
குப்புறக் கமுத்த கொப்பறையாய்
கிடந்து வெளிச்சம் விடாமல்
அமுக்கியிருக்கும்
முச்சடைக் கொடிகளை
இழுத்தெறி.
உச்சியில் கயிறு போட்டு
இழுத்து நிமிர்த்திக் கட்டு.
இடித்துத் தள்ளும்
அண்டை மரத்தின்
பக்கக் கிளைகளை வெட்டு.
முறிகிறதென்று
சஞ்சலப்படாதே
காயப்படுகிறதென
கவலை கொள்ளாதே.
செழித்து உயர்ந்து
விசிலாட்டமாய்
வளரவேண்டும்
மரம்.
கார்முகில்
நன்றி : செளந்தர சுகன் - இதழ் எண் 207
வெளவால்
மனிதர்கள்
விநோதமானவர்கள்
என்ன இயல்பாய்
இவர்கள்
தலை கீழாய்
நடக்கிறார்கள் !
நல்ல வேளை
பூமிப் பரப்பின்
பசையோ, விசையோ,
இவர்கள்
பாதங்களைப்
பற்றிக் கொண்டுள்ளது.
இல்லையெனில்
எங்கள் தலை தப்புமா ?
நாங்கள் தான்
தலைகீழ் வாதிகள் என்று
இவர்கள்
சொல்லித் திரிகிறார்களாமே ?!
சிரிப்புத்தான் வருகிறது.
உங்கள் தலைகளில்
ஒன்றும் இல்லை என்பது
உங்களை விடவும்
எங்களுக்கல்லவா
அதிகம் தெரியும்.
வெளிச்ச உலகில்
குருட்டு மனிதர்களே..
இருட்டு எவ்வளவு
வெளிச்சமானது
என்பதை
எங்களைப் பார்த்தேனும்
விளங்கிக் கொள்ளுங்கள் !
கனிதேடி வந்த
உங்கள் கற்கள்
காய்களைத்தான் அதிகம்
கொய்திருக்கின்றன.
கண்கள் இன்றியே
கனியின் திசை காட்ட
எங்களால் முடியும்.
உங்களால்,,,,?
பழுதடைந்த
உங்கள் பார்வைக்கு
" நேர் " என்றும்
கோணல் தான்.
கோவி. சந்திரசேகர்
நன்றி : இலக்கியச் சிறகு - இதழ் எண் : 9
ஒவ்வொரு இரவும்
அதிக இரைச்சலுடன்
வந்து நிற்கும்
வாகனச் சத்தம்
குரல் உயர்த்திக்
கலகம் செய்யும்
நாய்களின் அலறல் சத்தம்
நடுச்சாம இரவில்
கேடகும் தருணங்களில்....
பாதி வேக்காட்டில்
எழும்பும் பிணம்போல
எழுந்து,
நடந்து,
ஏமாந்து திரும்புவது
வாடிக்கையானது.
நீ
வேலைக்குச் சென்று
தாமதமாய் வீடு திரும்பும்
ஒவ்வொரு இரவும்.
திண்டுக்கல் - தமிழ்ப்பித்தன்.
நன்றி : நாளைவிடியும் - மடங்கல் இதழ்
நிறத்திற்காய் அழுவதா ?
காகிதங்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து
கறுப்பு மை குடிப்பதில்லை என்று விலகின.
புழுதியும் கவனிப்பும் அற்று அறைக்குள்ளே
புதையுண்டு போனதுதான் மிச்சம்.
துவாரம் விழ அனுமதித்த பலகைகளே
திறவுகோல்களைச் சுமக்கும் கதவுகளாயின.
அறுபட மறுத்த மரங்களெல்லாம் உடைக்கப்பட்டு
அடுப்பினுள் எரிபொருளாகிப் போயின.
உன்னைத் திறந்து வை, உலகைப் பார்.
உன்னைக் கண்டு பிடி, சமூகத்தை அளந்து கொள்.
உலகமே உன் விழிகளுக்குள்.
நிலவு தேவதை.
நன்றி : உயிர்த்த பார்வை இதழ் ஆகஸ்ட் 2004
வயிற்றுக்குச் சோறு வேண்டுமா ?
நாக்குக்குப் பேச்சு வேண்டுமா ?
சோறு வேண்டுமென்றால் ரஷ்ய
பாணியில் ஜனநாயகத்தைத் திருத்துங்கள்
பேச்சு வேண்டுமென்றால்
இதே ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புங்கள்.
கவியரசு கண்ணதாசன்
நன்றி : தன்மானக்குரல் இதழ் 2004
மதிப்பீடுகளின் முகங்கள்
நீ
சொல்லியபடி
வரைந்தபடி
இல்லை
பறவைகள்.
நேரில்
பார்த்தபோது
பறவைகளாக இருந்தன.
பறவைகள்.
- வே. பாபு -
நன்றி : கவிதாசரண் - ஆக-செப் 2004
நேர்மையான இருவரும் - நியாயமான தீர்ப்பும்
ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவர் ஒரு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை வாங்கியவர்
அதில் ஒரு தங்கப் புதையலைக் கண்டார்.
உடனே நிலத்தை விற்றவரிடம் சென்று உனது நிலத்தை மட்டும்தான் நான் வாங்கினேன். அதில் கிடைத்த தங்கப்
புதையல் உங்களுக்குக் சொந்தமானது. இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அதற்கு நிலத்தை
விற்றவர் நிலத்தையும் அதிலுள்ளதையும்தான் உனக்கு நான் விற்பனை செய்தேன். எனவே அந்தப் புதையல்
உனக்கே சொந்தம் எனக்கு வேண்டாம் எனக் கூறினார். இப்படி இருவரும் மாறி மாறிக் கூறிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் அவர்கள் இருவரும் மற்றொரு மனிதரிடம் பஞ்சாயத்துக்குப் போனார்கள். பஞ்சாயத்து செய்பவர் அவர்கள்
இருவரையும் நோக்கி...
உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா ? என்று கேட்டார். அவர்களில் ஒருவன் தனக்கு மகனிருக்கிறான்
என்றார். மற்றவர் தனக்கு மகள் இருப்பதாகக் கூறினார். உடனே பஞ்சாயத்து செய்தவர் அந்தப் பையனுக்கு
அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து அந்தத் தங்கப் புதைலிலிருந்து அவர்கள் இருவருக்கும் செலவும்
செய்யுங்கள் தர்மமும் செய்யுங்கள் என்றார்.
நன்றி : தர்மத்தின் குரல் ஆகஸ்ட் 2004
|
|