குறும்பாக்கள்
காப்பாற்று
காப்பாற்றும்
ஐம்பூதம்.
பூக்களைப்
பறித்தான்
வாடியது மனசு.
தாகத்தோடு
படிக்கிறான்
குடிநீரை வீணாக்காதீர்கள்.
காவிரி சிக்கல்
நடுவர் மன்றம் கூடியது.
அவரவர் கையில் நீர் புட்டில்.
எல்லாப் பூக்களும்
வாடா மலராய்.
நெகிழிப் பூக்கள்.
புதுவை தமிழ் நெஞ்சன்.
நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் - சூலை 2004
* சாயப்பட்டறைக்குத்
தண்ணீர் சுமக்கும்
லாரியில்...
"மழை நீர் - நம் உயிர்நீர்
மழைநீரைச் சேமிப்போம்.
நிலத்தடி நீரை காப்போம் "
* தின்ற அனைத்தும்
வாந்தியாகவில்லை.
வாந்தியானதில்
ஏதோ தவறு
தேர்வில் தோல்வி.
அ. இளஞாயிறு - திருப்பூர்.
நன்றி : செம்பருத்தி - சூலை 2004
கேள்வி
விதவை கையில்
பூமாலை...
யார்க்குச் சூட..?
அவளிடமே கேட்டேன்.
பாவம்..
கோவிலுக்குப்
போகிறாளாம்..
கல்லிற்கு மாலையிட...!
பிரேமாவதி - மாவடிக்கோட்டை.
நன்றி : புதிய தென்றல் இதழ்.
கல்லெறிபட்டால் என்னவாம் ?
விரட்ட விரட்ட பறவைகள்
தின்னக் கிடக்கும் வரை
வரத்தான் செய்யும்
நீ சாத்தும் கதவில் என்
மூக்குடைந்தாலும் என்ன ?
உன் வீட்டில் இரைந்து கிடக்கும்
என் உயிர் மணிகளை
விட்டுவிடவா முடியும் ?
கலை இலக்கியா.
நன்றி : பயணம் சூலை 2004
தாயுள்ளம்
முதியோர் இல்லத்தில்
என்னை
தனியாக விட்டாலும்..
தாராள மனது
என்
தங்க மகனுக்கு...
மனைவியின்
ஊர்
மாதா கோயிலுக்கு
காணிக்கை வைத்த
மணி
கதவளவு பெரியதாம்.
- இ. மு. -
நன்றி : கல் ஓசை - சூலை 2004
ஞாயிற்றுக் கிழமைப் பாட்டு
ஞாயிற்றுக் கிழமையைப் போல
மோசமான நாள்
வேறெதுவும் இல்லை நாட்டில்
அதென்ன
உலகம் பூராவும்
ஒரே நாளில் விடுமுறை.
ஒரு தபால் அனுப்ப முடியாது
வங்கியில் பணம் எடுக்க முடியாது
அரசு அலுவலக வேலைகளை
முடிக்க முடியாது
வேலைகளுக்கு நடுவே
விடுமுறைநாள் வேண்டியதுதான்
எனில் ஒரே மாதிரி
ஒரே நாளில் அல்ல அது.
இந்தியாவில் தான் விடுமுறை நாள்கள்
அதிகம்
வேலைநாள் கம்மி
ஓய்வு நாளோ ஓயாமல் வருபவை.
பிரிட்டிஷ் ஆட்சி போன பின்னும்
அவர்கள் ஏற்படுத்திய நியமம்
மாறவில்லை இன்னும்.
என் விடுமுறை நாளை
எப்படி யாரோ என்மீது திணிப்பது
நானே தெரிவு செய்து கொள்வேன்.
எனக்கு வேண்டிய நாளை.
என் விடுமுறை நாளை
என் சுதந்திரத்திற்கு விடுங்கள் முதலில்
நீங்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை.
வேலையே இல்லாத எனக்கு
எல்லா நாள்களுமே
ஞாயிற்றுக் கிழமைகள் தாம்.
அபராஜிதா
தப்பித்தல்
ரேசன் கடையில்
எடை குறைவு
தட்டிக் கேட்க
ஆசைதான்.
என்ன செய்வது
மாலை 6 மணிக்கு மேல்
அரை மூட்டை அரிசி
அட்டையின்றி வாங்கனும்.
வருமானச் சான்றிதழ்
வாங்க லஞ்சம்
மறுத்துப் பேச
ஆசைதான்
என்ன செய்வது
நாளை
நேர்முகத் தேர்விற்கு
சான்றிதழோடு போகனும்.
வீடுகட்ட அனுமதிக்கு
கிம்பளம் கேட்கிறான்..
சட்டம் பேச
ஆசைதான்.
என்ன செய்வது
புது வீட்டு வரியை
குறைத்துப் போட
அவனிடம்தான் கேட்கனும்.
நடப்பது நடக்கட்டும்.
சோலைக்குயில்
நன்றி : நறுமுகை - கலை இலக்கியக் காலாண்டிதழ்
துடிக்காமல இருக்கின்றார்
காப்பியங்கள் ஐந்துவகை இலக்கணங்கள்
கற்புநெறி காட்டுகிற இலக்கியங்கள்
காப்பாக வாழ்க்கைநெறி புகட்டுகின்ற
கணக்கற்ற அறநூல்கள் கொண்டிருந்தும்
கோப்பாக அகம்புறமாய் வாழ்வுதன்னைக்
கொள்கைவழி கோர்த்துவைத்தும் இளமையோடு
மூப்பின்றி உள்ளபோதும் தமிழை மூலை
முடக்கிடவே ஒதுக்குகின்ற கொடுமை ஏனோ !
கணினி மொழி ஆனபின்பும் உலகமெல்லாம்
காணுகிற இணையத்துள் நுழைந்த பின்பும்
அணியணியாய் அறிவியலின் கருத்தைச் சொல்லும்
ஆய்வு நூல்கள் அடுக்கடுக்காய் வந்த பின்பும்
மணிமணியாய்ப் பொறியியலை மருத்து வத்தை
மாத்தமிழில் மொழிபெயர்த்துச் சேர்த்த பின்பும்
தனித்தியங்கும் ஆற்றலில்லை என்றே சொல்லித்
தலைமையினைத் தாராமல் தாழ்த்தல் ஏனோ !
பாவலர் கருமலைத் தமிழாழன்
நன்றி : தமிழர் முழக்கம் - சூலை ஆகத்து 2004
வியன் தமிழே வேண்டும்
அற்சனைபாட் டேயாமென் றாரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் சொற்படியே
செய்தாய்நால் வேதந் திகைத் தொதுங்கப் பித்தனென்று
வைய்தாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்
இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்.
கண்ணிகள் 149 முதல் 151 வரை
தமிழ் விடுதூது
( மதுரை சொக்கநாதர் மீது மையல் கொண்ட கன்னியொருத்தி தனது காதல் விழைவைக் கழறிடத் தமிழையே
தூதாக விடுத்தது போன்று பொற்புறுமொரு படைப்பாக விளங்குகின்றது தமிழ்விடுதூது. ஈரிரு வரிகளாய் 208
கண்ணிகளைக் கொண்ட இந்நூலை எழுதியோர் பெயரும் புலப்படவில்லை. எழுதப்பெற்ற காலத்திற்கும்
குறிப்பில்லை)
நன்றி : ஊற்று - பெங்களூர்த் தமிழ்ச்சங்க இதழ் - இதழில் அட்டையில் ஒவ்வொரு திங்களும் பழந்தமிழ்
இலக்கியத்திலிருந்து பாடல்களை தேர்ந்தெடுத்துத் தருகிறது. இது உயர்வானது. வாழ்த்துகிறோம்.
பாவெனில் வெண்பா படையப்பா எப்போதும்
நாவினில் சொற்கள் நகர்த்தப்பா - ஆவலினால்
மற்றப்பா என்ன மயக்கப்பா பாரப்பா
உற்றப்பா வெண்பா உணர்.
கோவிந்தராசன் - கோவை 46
நன்றி : தமிழர் பெருமை திங்களிதழ் - எண் :6
மனிதனுக்கு நோய்கள் வந்தன.
மூலிகைச் செடிகளும், மருத்துவக் குணம் நிறைந்த மரங்களும்
மக்களுக்கு வரம்தந்து நல்வாழ்வு தந்து கொண்டிருந்தது முற்காலம்
அந்த மரத்தினடியில் ஒரு கல்லை நட்டுவைத்து அதற்கு
சந்தனம், குங்குமம் பூசி, அதைச் சாமியாக்கி, அந்தச்
சாமியிடம் மனிதன் வரம் கேட்டு நிற்பது நிகழ்காலம்.
மூலிகைக் குணம் நிறைந்த மரங்கள் கடவுளாகின்றன !
மனிதனுக்கு நோய்கள் வந்தன.
முலிகைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மருத்துவர் அருணா சுபாசினி.
நன்றி : தமிழர் பெருமை சூன்- சூலைத் திங்களிதழ். 2004
சொல்லின் பொருள்
தொடை : தொடுப்பது தொடை. தொடுக்கப்படுவது தொடை. இணைப்பது. பிணைப்பது, புணர்ப்பது, சேர்ப்பது,
கட்டுவது தொடை. எழுத்னெப்படுவது அசை. அசை எனப்படுவது அசைப்பது, அசைவது, அசைக்கப்படுவது.
எழுத்துகள் ஒன்றோ பலவோ, அசைவது, அசை. அவ்வசை பதமாய் இருப்பது பதம். அசைகள் சீர்பெற நிற்பது சீர்.
சீர்கள் ஒன்றோடொன்று தொடுக்கப்படுவது தொடை. இவை அடியெடுத்து வைத்து நடை பயில்வது. பயிலச்
செய்வது அடி. அடி, கால் இவற்றைத் தன்னுடன் தொடுப்பது தொடை. தானும் இடையுடன் தொடுக்கப்படுவது
தொடை. முழந்தாளுக்கு மேலும் இடைக்குக் கீழும் தொடுக்கப்பட்ட உடலின் உறுப்பு தொடை ஆகும்......
சொல்லின் பொருள் தொடரில்....ரெ. மல்லபிள்ளை - ஆத்தூர்
நன்றி : கண்ணியம் சூலை 2004
தமிழ் இதழ் நடத்துவோரே ! ஒரு வேண்டுகோள் !
தமிழுக்காக, தமிழன் உயர்வுக்காக என்று வாய் கிழியக் கூறும் இதழாசிரியர்களே, கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
நீங்கள் வெளியிடும் கதைகளில் 80 விழுக்காடு தமிழேயில்லை. அனைத்தும் வடசொற்கள். பல்லாண்டுகளாகத்
தமிழறிஞர்கள் பல முறை கூறிவிட்டார்கள். காலத்திற்கேற்றவாறு நம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் ஊட்டும் கடமை
நமக்குத்தான் இருக்கிறது......
நம் தமிழ் இதழாளர்கள் என்று தொடங்குவார்கள் ?
நன்றி : தமிழ்ப்பாவை - கடகம் 2035
சுஜாதாவும் புறநானூறும்
பண்டைத் தமிழ் நூல்களாம் பலாக்கனிகளின் சுவைகளை நாம் சுவைக்க உதவியாக இருப்பவை அவற்றுக்கு
எழுதப்பட்ட உரைகளேயாகும். அந்த உரைகளும்கூட கடினமாக இருப்பதாகக் கருதிய இன்றைய அறிஞர்கள் பலர்
எளிமையான புத்துரைகளை எழுதியுள்ளனர். இவர்கள் அனைவருமே நம் முன்னோர்களின் தோள்களில் ஏறி நின்று
உற்று நோக்கி. ஆர்வத்தோடும் அக்கறையோடும் தம் பணியைச் செய்தனர்.
கானமயிலாடக் கண்ட வான்கோழி தன் பொல்லாச் சிறகை விரித்தாடியது பேலவும் புலியைப் பார்த்துப் பூனை
சூடுபோட்டுக் கொண்டது போலவும். சிறுகதை மற்றும் புதினம் எழுதும் சுஜாதா "புறநானூறு" எனும் சங்க நூலுக்குப்
புத்துரை ஒன்று எழுதியுள்ளார்
தன்னையொரு விஞ்ஞானி என்றும் தமிழ் தெரிந்தவர் என்றும் முன்னுரையில் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
அவர் ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம். ஆனால் தமிழ் தெரிந்தவராக, அறிந்தவராக, அதில் புலமை மிகுந்தவராக
இல்லை என்பதை அவரின் புறநானூற்றுப் புத்துரை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.
நூல் முழுவதுமே விறலி என்ற சொல்லுக்குப் பாடுபவள் என்றே பொருள் கூறப்படுகிறது. பாடினி என்ற சொல்தான்
பாடுபவளைக் குறிக்கும். விறலி என்ற சொல் ஆடுபவளைக் குறிக்கும் என்பதை அவர் அறியவில்லை.
பாடல் 159 இல் ஐவனம் என்ற சொல்லுக்கு மலை நெல் அரிசி என்பதற்கு மாறாக ஐந்துவகைப் பயிர் எனத் தவறான
பொருளைத் தருகிறார். பாடல் 181 இல் கடிவிளை என்பதற்குக் காவற்காடு என்ற பொருளை விடுத்து பாதுகாப்பு
அறை என்று கூறுகிறார்......
இப்படி மூன்று பக்கங்களில் நிறைய தவறுகளைச் சுட்டுகிறார்.,
புலவர். மு. இரத்தினம்
நன்றி : நமது தமிழாசிரியர் கடகம் 2035 இதழில்.
இதழ் பெற: புலவர் துரை தில்லான் 2-6-5, பாரதி நகர்,
சின்னாளப்பட்டி, 624 301
|
|