வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 07 - 2004

ஒரு குழந்தை
(அம்மாவின் வயிற்றுக்குள் இருந்து)

அம்மா, அம்மா
உங்கள்
சின்னச் செல்லம்
பேசறேம்மா..

பெரியக்கா எங்கம்மா ?
பள்ளிக்கூடம்
போயிருக்காங்களா ?
சின்னக்கா...?
அவுங்களுமா...?
இரண்டு பேருமே,
என்மேலே
எவ்வளவு
அன்பா இருக்காங்க
நீங்க படுத்திருக்கும் போது
எவ்வளவு
கூசுது தெரியுமா ?
அவுங்க பரவாயில்லம்மா
இந்த அப்பாதான் மோசம்
ரொம்ப மோசம்.

முத்தம்
கொடுக்கிறேனுச் சொல்லி
மீசையால குத்த குத்த
எவ்வளவு வலிக்குது
தெரியுமா ?

நான் வெளியே வந்ததும்
முதல் முத்தம்
உங்களுக்குத்தாம்மா..
இரண்டாவது
சின்னக்காவுக்கு..
மூணாவது
பெரியக்காவுக்கு.
கடைசியாத்தான்
அந்தக்
கம்பளிப் பூச்சி
மீசைக்கு.
அய்யோ
அம்மா அம்மா
அப்பாகிட்டே
சொல்லிடாதீங்க
அடிச்சிடப் போறாங்க.

அம்மா
அக்காவுங்க எப்படி
இருப்பாங்க
உங்களை மாதிரியா ?
அப்பா மாதிரியா ?
நீங்க எப்படிம்மா
இருப்பீங்க ?
என்னை மாதிரித்தானே !

உங்களை எல்லாம்
உடனே பாக்கணும்போல
ஆசையா இருக்கும்மா.
ஆச ஆசையா
இருக்கும்மா.

எப்போம்மா
உங்களை எல்லாம்
பாக்கலாம் ?
இன்னும்
ஏழு மாதம் கழிச்சா ?
அய்யோ..
அவ்வளவு நாள்
எப்படித் தாங்குவேன் ?

மெதுவா
மெதுவா
உட்காரும்மா..
கண்ணாடிக்
குடுவைக்குள்ளே
மீனு மாதிரி
உன்
வயிற்றுக்குள்
நானு.

என்னம்மா...?
தொலைக்காட்சியா..?
ஏம்மா அதைப் போட்டதுமே
ஓரே
பொம்பளைங்க
அழுகைச் சத்தமா
கேட்டுகிட்டே இருக்கு..
நீங்க
எதை மாத்தினாலும்
அதே தான்.
அய்யோ.. அய்யோ..!

ஏம்மா
எதையோ சாப்பிட
வாயில் வச்சிட்டு
சாப்பிடாம வச்சீங்க ?
எனக்காகவா ?
எனக்காகவா ?
சாப்பிட மாட்டீங்க
வேணாம் வேணாம்
நீங்க சாப்பிடுங்க
நான் தாங்கிக்கறேன்.
மத்தப் பிள்ளைங்க எல்லாம்
உள்ளே இருக்கும்போது
உதைப்பாங்களாமே
நான்
உதைக்க மாட்டேன்.
உதைக்கவே மாட்டேன்.

யாரோ
கதவைத் தட்டறாங்கம்மா
மெதுவா மெதுவா
எழுந்திருங்கம்மா

யாரு..?
அப்பாவா ?
அப்பாவும் நீங்களும்
எங்கம்மா
புறப்பட்டுட்டீங்க ?
மருத்துவ மனைக்கா..?
எனக்காகவா ?
எனக்கென்ன ?
நான்
நல்லாத்தானே இருக்கேன்.

என்னம்மா
மருத்துவர்
என்னென்னவோ
கருவிகள் வைத்துப்
பார்க்கிறாரு ?
பார்த்திட்டாரு.
அப்பா...
தப்பிச்சிட்டேம்மா
உங்கள்
இதயத்துடிப்பு
சத்தத்தில்
மருத்துவர்
என்ன பேசுகிறார்
என்பதே
காதில் விழலம்மா..
என்ன..
என்ன...
நான்
என்ன குழந்தை என்று
தெரிந்துவிட்டதா ?
பெண் குழந்தையா..

என்
பெரியக்கா மாதிரி..
சின்னக்கா மாதிரி..
நானும் உங்களுக்கு
செல்லக் குழந்தை
இல்லம்மா..

என்னம்மா..
அப்பாவும் நீங்களும்
அமைதியா இருக்கீங்க
ஏம்மா
ஏம்மா பேசமாட்டீங்கறீங்க ?
அப்பா என்னம்மா
சொல்றாரு ?

" இரண்டு
பெண் குழந்தை
இருக்காங்க
மூணாவது
ஆணாக இருக்கனும்னுதான்
இது..இது..
வேணாங்கறேன "

அம்மா
அம்மா
அப்பாவின் மீசைக்
குத்திச்சினு சொன்னேனே
அதுக்காகவா
அப்பா
கோபமா பேசறாங்க ?

அம்மா
நான் பிறந்ததும்
அப்பாவுக்கே
முதல் முத்தம்ணு
சொல்லும்மா
அம்மா..
அப்பா சொல்லறதை
ஏம்மா
மறுத்துப்
பேசமாட்டேங்கிறீங்க
அப்போ...
உங்களுக்கும்
நான் வேண்டாமா ?

அப்படி நான்
என்னம்மா
தப்பு செய்தேன் ?
அப்படியே
அழிக்கலாம்ணு
நினைச்சாலும்கூட
கொஞ்சம் பொறுங்கம்மா

பிறந்து வந்ததும்
உங்க முகத்தை...
உங்க அழகு முகத்தை..
ஒரே ஒருதடவை
ஆசையா
பாத்துக்கறேன்.
அக்காகள...
அப்பாவை...
ஆசை ஆசையா
ஒரே ஒருதடவை
பாத்துக்கறேன்...

வானம்
பூமி
மரம்
குயில்
எல்லாத்தையும்
ஒரே ஒருமுறை
சடைசியா
பாத்து முடிச்சதும்
கள்ளிப்பாலோ
நெல்லோ
பால்லே
கலந்து
கொடுங்கம்மா
குடிச்சிடுதேன்.

எங்கம்மா
எங்கம்மா போறீங்க ?
ஓ...
எல்லாம் தயாராயிடுச்சா
மருத்துவரய்யா
மருத்துவரய்யா
என்னைக் கொல்ல
நீங்க தயாராயிட்டீங்களா ?
பரவாயில்லையா..
ஆனா
ஒரே ஒரு வேண்டுதல்
என்னைக் கொல்லும்போது
எங்க அம்மாவுக்கு
என் ஆசை அம்மாவுக்கு
என்னாலே
எந்த ஒரு
சின்ன வலியும்
இல்லாம
என்னைக் கொன்னுடுங்க
அது...
அது போதும் எனக்கு
அது போதும்.
அம்மா
அம்...அ..ம்...

அறிவுமதி
நன்றி: சுற்றுச் சூழல் புதிய கல்வி மாதஇதழ் - சூலை 2004



குறும்பாக்கள்

கடைசிக் காலத்தில்
கால் வயிறு
கஞ்சிக்கில்லாமல் மாண்ட
பக்கத்தது வீட்டுத் தாத்தாவுக்கு
வரிசையாய் வந்து போடுகிறார்கள்
வாய்க்கரிசி.

கா. சபியா.
நன்றி : தச்சன் சூலை 2004



வெட்டடியானின் வாழ்க்கை
சாம்பல்
மின் சுடுகாடு !

புதுவை தமிழ் நெஞ்சன் - புதுவை 9

பத்து மாதம் சுமந்தவள்
இன்னும் சுமக்கிறாள்
வேலையில்லா நான்.

வ.முகமது ரஜபுதீன் - இராமநாதபுரம்

பாதையில் விழுந்து
போதையில் கிடந்தார்
இந்தியக் குடிமகன்.

ஞா. நெல்சன் - நெல்லை
நன்றி : ஏழைதாசன் - சூலை 2004



உழைப்பு

உடல் தேய
உழைத்தும்
முன்னேற்றம் இல்லை
செருப்பு

கதிர்மதி - சங்ககிரி.
நன்றி : புதிய ஆசிரியன் - சூலை 2004



வேட்டை

உன் பழத்தோட்டம்
அழைத்துச் சென்றாய்.
ஹைபிரிட் என்று சொல்லி
மினுமினுக்கும் பழங்களைக் காட்டினாய்

ஐநூறு கொய்யா
ஆயிரம் சப்போட்டா
மரங்களின் எண்ணிக்கையைச் சொன்னாய்

கை நீட்டி
திசை எல்லாம் காட்டி
நில அளவும் சுட்டினாய்.

உன் வார்த்தைகளில்
சிறிதும் கவனம் இன்றி
எண்ணிக்கொண்டு வருகிறேன்.

பறவைகளை விரட்ட
அங்கங்கே தொங்கும்
வெட்டப்பட்ட காக்கைகளின்
இறக்கைகளை.

கு.ரா - மேட்டூர் அணை
நன்றி : வள்ளியூர் தென்றல் - இதழ் 54



முன்னிரவில்
பேருந்து நிறுத்தத்தில்
தனியாகக் காத்திருந்தாள்
என் விரோதியின் மனைவி

வியர்த்த முகமும்
அதைரியப் பார்வையுமாய்

அது
ராக்குற்றங்கள் மலிந்த பகுதி

என் பேருந்துகள் வந்தபடியிருந்தாலும்
ஏறாமல்
துணை அறிவிக்கும் தோரணையில்
பாவனையாக நின்று கொண்டிருந்தேன்

அவளுக்கான வண்டி
ஒரு வழியாக வந்தது.

ஏறியவள் திரும்பிப் பார்த்து
உதிர்த்தாள்
என் பகை கரைக்கும் புன்னகையை.

என் பேருந்துகளை இழந்திருந்த நான்
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்
ஒரு பாடலைப் பாடியபடி.

மகுடேசுவரன்.
நன்றி : தமிழ் நேயம் 20



சினிமா மாயை

தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் - கவிஞர் கண்ணதாசன்.

உங்களுக்கு ஒரு கடிதம் ( 1967 )

தமிழகத்து மண்ணில் தவழ்ந்தாடும் குழந்தை என்ற முறையில் உங்கள் குழந்தைகளில் ஒருவனாகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். காலங்காலங்களாகவே கண்ணியத்திற்குப் பேர்போன சமூகம் தமிழ்ச் சமூகம். குடும்ப வாழ்க்கையை ஒரு நாகரிகம் என்று கூறியது தமிழ்ச் சாதி........

துரதிருஷ்டவசமாக சினிமாவினால் ஏற்பட்ட சீரழிவு நமது நாகரிகக் கட்டுக் கோப்பைக் குலைத்துவிட்டது. சில நடிகர்களுக்கு அரசியலிலும் சமூகத்திலும் ஏற்பட்ட அந்தஸ்து தமிழ்ச்சமூதாயத்தின் கற்பு நிலைக்கே சோதனையாகி விட்டது. அவர் சோடாவைக் கொஞ்சம் குடித்துவிட்டு கொடுத்தால் அதை வாங்கிப் பத்துப் பெண்கள் குடித்தார்கள் என்ற செய்தியும், அவர் தூக்கிப் போட்ட மாலையை பெண்கள் மார்போடு அணைத்துக் கொண்டார்கள் என்ற செய்தியும்....

நமது பாரம்பரிய பெருமைகளையே பாழாக்கிவிட்டன...

இந்தக் கொடுமையை நீங்கள் இன்னும் அனுமதிக்கிறீர்களா ?....

நன்றி : தர்மத்தின் குரல் - சூலை 2004



இங்கேயே வேலைகள் ஏராளம்

ஏழ்மையை விரட்ட வெளிநாடு போய்க் கொடூர வேலையில் சிக்கும் தமிழர்கள் உயிர் பிழைத்தால் போதுமென ஊர் திரும்பும் பரிதாபச் செய்திகள் உள்ளத்தை உருக்குவதாக உள்ளன.

சிங்கப்பூர் சின்னஞ்சிறிய தீவு. வெறும் 640 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மக்கள் தொகையும் நமது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உள்ளதைவிடக் குறைவானதே. மக்கள் வாழ்வதற்கு போக்குவரத்து வசதிகளுக்கு இடப்பற்றாக் குறையைப் போக்க, 22 சதுர கிலோ மீட்டர் கடலைத் தூர்த்துச் சாலைகளை அமைத்திருக்கிறார்கள். அந்த நாட்டைவிட நம் தமிழ்நாட்டில் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் நமது இளைஞர்கள் சொந்தமாக இருக்கும் சிறு வீடு, வயலகளை விற்றுவிட்டு நம்பிக்கையோடு விமானம் ஏறுகிறார்கள். சம்பாதிக்கச் சென்ற இவர்கள் இருந்து உடைமைகளையும் இழந்து கடனாளிகளாகத் திரும்புகிறார்கள்.

நான் 1984 இல் முதல் முறையாக சிங்கப்பூர் சென்றபோது, அங்கே வெளிவருகிற தமிழ் முரசு பத்திரிகையின் ஆசிரியரைச் சந்தித்தேன். இருவரும் ஒரு தேநீர் கடைக்குச் சென்றறோம். எனக்கு வெந்நீர் தரச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உணவு மேசையில் வெந்நீர், பிஸ்கட்டுகள், தேநீர் இருந்தன. அந்த மேசையைக் காட்டி "இதுதான் சிங்கப்பூர்" என்றார், எனக்கு விளங்கவில்லை! பிறகு அவரே சொன்னார்......

சிங்கப்பூரில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. மலேசியாவிலிருந்து குடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கோப்பையில் இருக்கும் தேநீரில் உள்ள பால் டென்மார்க் நாட்டிலிருந்து வந்தது. அதில் உள்ள தேயிலை இலங்கையிலிருந்து வந்தது. அதில் கலக்கும் சர்க்கரை பிஜித் தீவிலிருந்து வந்தது. பிஸ்கட்டுகள் தாய்லாந்திலிருந்து வந்தவை. இவையெல்லாம் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் சீனாவிலிருந்து வந்தவை. இங்கே நாங்கள் ஒரு தேநீர் குடிப்பதற்கு ஆறு நாட்டுக்காரர்கள் பங்களிப்பைச் சேர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் காப்பிக் கொட்டையிலிருந்து கடல் முத்துவரை கிடைக்காத பொருள் இல்லை. எல்லாப் பொருள்களும் அங்கேயே உற்பத்தியாகின்றன. கிடைக்கின்றன. வெளிநாட்டுக்காரர்கள் எவர் தயவும் இல்லாமலேயே நீங்கள் சிறப்பாக வாழமுடியும். சிங்கப்பூர் மண்ணிலே நீங்கள் உழைக்கிற உழைப்பை உங்கள் மண்ணில் உழைத்தால் தமிழ்நாட்டை உலகின் சிறந்த நாடாக உருவாக்கிக் காட்ட முடியும் என்றார்......

இரத்தனகிரி - 15-6-2004 தினமணியில்
நன்றி : சிந்தனையாளன் - சூலை 2004



பருந்தா! கோழியா ?

கோழி முட்டைகளுடன் கலந்துவிட்ட பருந்து முட்டையைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அதில் முட்டைகளெல்லாம் பொரித்து குஞ்சுகள் வந்தபோது பருந்துக் குஞ்சு கோழிக் குஞ்சுகளுடனே சேர்ந்து வளர்ந்தது. அதன் எல்லா நடவடிக்கைகளுமே கோழிக் குஞ்சுகள் போலவே இருந்தன. வானத்தில் பறக்கும் பருந்துகளைப் பார்த்த போதிலும் அவைகளைப் போல நம்மால் பறக்க இயலவில்லையே என்று மற்ற கோழிக் குஞ்சுகளிடம் சொல்லும். கடைசி வரை அது தான் பருந்து என்கிற எண்ணேம் இன்றி இறந்தே போனது.

ஆயிரம் ஆற்றல்கள் நம்முள் புதைந்து கிடந்தாலும் அதனுள் ஒன்றையேனும் தேடிக் கண்டுபிடித்து வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணேம் சிறிதும் இல்லாமல் பருந்தாக பிறந்திருந்தாலும் கோழியாக வாழ்வை முடித்துக் கொள்கிறவர்களைப் பற்றி வருந்தத்தான் முடியும்.

நன்றி : சங்கமித்ராவின் புத்தகம் 15 தன்முன்னேற்றம் - சூலை 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061