வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 06 - 2004

குறும்பாக்கள்

இசை நாற்காலிப் போட்டி
இப்பொழுதும் வென்றது
அமைச்சர் மகன் ( சின்ன நதிகள் பக் 87)

கறுத்த பெண்
புகுந்தகம் வந்தாள்
கலர் டி.வி.யோடு (விரல் நுனியில் வானம் பக் 38)

என்ன வேலை தெரியும்
நான் கான்வென்டில் படித்தவன்
சரி, மூட்டை தூக்கப் போ. ( தீவின் தாகம் பக் 55)

அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் ( நட்சத்திர விழிகள் பக் 8)

தீப்பெட்டி
திறந்தால்
பிஞ்சு விரல்கள் ( கணையாழி மார் 91)

மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படிக்கிறான்
கம்ப்யூட்டர் சயின்ஸ் ( நெல்லை சு.முத்து தமிழில் ஹைகூ பக் 20)

அறிவுரை வேண்டாம்
வழிநடத்திச் செல்லுங்கள்
எவரையும் காணோம். ( பரிதிப் புன்னகை பக் 20)

இரா. மோகன் எழுதிய மின் மினிக் கவிதைகள் தொடரில்...
நன்றி : இனிய ஹைகூ இருமாத இதழ் - எண் 17


ஆறுகள்

ஆறுகளைப் பற்றிய
உங்கள் கணிப்புகள் தவறானவை.
ஐந்தோடு ஒன்றாக
நம்மைக் கடந்து போகும்
தண்ணீர்க் குவியல்
என்றதனை நினைக்கிறோம்.

ஆறுகள் மென்மையானவை
அதே சமயம்
குட்டக் குட்டக் குனியும்
ஒரு சமூகத்தின்
நிமிரும் வேகம்
அதனிடமிருப்பதை
நீங்கள் கண்டுகொள்ளவில்லை.

நகரமுடியாப் பாறைகளிடமும்
கரைகளிடமும்
தங்களைப் பகிர்ந்து கொள்கின்றன
ஆறுகள்
நீங்கள் காது கொடுக்காததால்
கேட்கவில்லை
மனிதர்களைப் போல்
ஆறுகளுக்குள்ளும் உண்டு
அளவிடமுடியா சோகங்கள்

தாமிரபரணியிடம் கேளுங்கள்
அது சொல்லும்
பதினேழு பேர்களின்
சோகக்கதைகளை.

வே. பாபு
நன்றி : முகடு இதழ் 2 - 15-6-04


படைப்பு

பெற்றவள்
ஒரு பாவமும் செய்யவில்லை
இருந்தும்
பிள்ளை பாதிக்கப்பட்டது
புத்தக பாரம் சுமந்து...

சாம்பாள் தெசுனா - காரைக்கால்
நன்றி : அறிவே துணை - சூன் 04


கிளிக்கும் உனக்கும்

தட்சணையின்றி

சீட்டெடுக்க
மறுக்கிறது
கிளி...

பெண்ணெடுக்க
மறுக்கிறான்
மனிதன்.


களம்

களத்தில் நிற்கிறேன்
அருவாளோடு
வன்முறை
என்கிறார்கள்...

ஊர் கோடியில்
ஐயனார் நிற்கிறார்
அருவாளோடு.

தமிழ்ச்செல்வன்
நன்றி : நிலம் - மே 2004


குயில் பாட்டு

வாடகை வீட்டில்
குடியிருக்கும் மனிதர்கள்
என்னைப் பார்த்துச் சொல்கிறார்கள்
"நீ கூடற்ற பறவை"
என்று ...

சோதனைக் குழாய்
குழந்தை
குளோனிங் குழந்தை
வாடகைக் கர்ப்பப்பை
என்று அலையும்
மனிதர்கள்,
என்னைப் பார்த்துச்
சொல்கிறார்கள்.

" நீ காகத்தின் கூட்டில்
முட்டையிடும் பறவை "
என்று...

நனைந்த பனை போன்று
கருத்த நிறமுடைய,
மனிதர்கள்
என்னைப் பார்த்துச்
சொல்கிறார்கள்,
" நீ கருப்பு நிறப்பறவை "
என்று...

எனது கூவல் குறித்து
இந்த மனிதர்களிடம்
விமர்சனம் ஏதும்
இருப்பதாகத் தெரியவில்லை !

கழனியூரன்
நன்றி : கல்வெட்டு பேசுகிறது - சூன் 2004



நீரில் தெரிந்த நிலா

பிண்டம் உருப்பெற்றுப் பெற்றுத் தலையாகிக்
கண்டம் தோள் மார்பிடைக் கைகால்கள் கொண்ட
பிறப்பும் இடையில் பிழைபட்டால் போகும்
இறப்போ துயர்தரும் ஈர்ப்பு.

நீர்மாலை புத்தாடை நீட்டிவைத்த பாடைஅதில்
ஊரார் மரியாதை ஒவ்வொன்றாய்ப் பூமாலை
வந்து குவிந்ததப்பா வாயில்வரை பெண்மக்கள்
நொந்தே துயருற்றார் நொந்து.

நீர்க்குடத்தில் புள்ளிகொத்தி நீர்பெய்தே ஆற்றுகின்றார்
தீச்சட்டிக் கொள்ளிதட்டிச் செப்புகின்றார் வாய்க்கரிசி
பால்கொடுத்த வாய்க்கு நான் பச்சரிசி போடுவதோ
தோள்கொடுத்த என்மகனே தோள்.

தாய்சுமந்து பெற்றுத் தளபதியாய் வைத்த உன்னை
நோய்கவர்ந்து கொண்டதனால் நொந்தனையோ தீமூட்டி
நீஎனக்குக் கொள்ளிவைக்கும் நேரம்வர நாளிருக்க
நான்உனக்குக் கொள்ளி வைத்தேன் நான்.

மெய்என்று வந்தவுன் மேனியில் தீப்பட்டு
நெய்யாய் உருகியே நீந்துவிட்டாய் ஐய்யய்யோ
பெண்கொண்டு வந்த பிறப்பெல்லாம் இப்படியோ
மண்கொண்டு போகுதே மண்.

ஈரைந்து மாதமடா என்மனைவி உன் அன்னை
ஊர்அறியத் தான்சுமந்துன் னைப்பெற்றாள் சாரங்கா
பச்சைப் பருவஉடல் பற்றிய தீயில்நீ
அச்சுக் கழன்றாயே அச்சு.

கண்ணில் அகன்றாய் கருத்தில் அகலவில்லை
புண்ஆகி நின்று புலம்பவைத்தாய் விண்நோக்கும்
மஞசள் சிவப்பு மயில்நீலத் தீப்பிழம்பில்
மிஞ்சிவந்தாய் சாம்பலென மீண்டு.

பால்தெளித்தார் சாம்பலிலே பார்த்த எலும்பெடுத்துச்
சேகரித்தார் மண்கலயச் செப்பாம் அதில்நிறைத்தார்
கத்தும் கடல்அலையில் கைநழுவ விட்டனபோல்
அத்தனையும் விட்டேனே ஆங்கு.

உன்னைப் பறிகொடுத்தேன் உன்சவத்தை நான்எரித்தேன்
என்னை அறியாமல் ஏன்அழுதேன் என்இறப்பை
நீபார்க்கக் கூடுமோ நீபார்த்த போதும் அதை
நான்விழித்துப் பார்ப்பேனோ நான்.

- புரட்சிதாசன் -
நன்றி : இசைத்தமிழ் - சூன் 2004

( 1993 இல் இசைத்தமிழ் ஆசிரியர் புரட்சிதாசன் அவர்களது மகன் சாரங்கன் இழந்த நினைவை நெஞ்சில் நிறுத்துகிற உருக்கமான பாடல் )

நமது நாட்டுக்கு ஏற்ற கல்வித் திட்டம்
முனைவர் முத்துக்குமர் கட்டுரையில்...

......அமெரிக்காவில் சில அரசு அலுவலர்கள் ஒரு சிகப்பிந்தியர் குடியிருப்பிற்குச் சென்று அவர்களது ஆறு குழந்தைகளை அழைத்துச் சென்று கல்வி கறிபிக்க உதவுவதாகச் சொன்னார்கள். அதற்கு அந்தக் குடியிருப்பின் தலைவர் அனுப்பமாட்டோம். ஏற்கெனவே எங்கள் குழந்தைகளில் அறுவரை நீங்கள் கல்வி கற்பிக்க அழைத்துச் சென்றீர்கள். அவர்கள் திரும்ப வந்தபோது அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.

அவர்களுக்கு நீச்சலடிக்கத் தெரியவில்லை. மரம் ஏறத் தெரியவில்லை. எங்களைப்போன்று குளிரையும் வெயிலையும் தாங்கத் தெரியவில்லை. அவர்களுக்கு ஓடும் திறமை இல்லை. பச்சை மாமிசத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். மானை அவர்களால் விரட்டிப் பிடிக்க முடியவில்லை. எதிரியின் தோலை உரிக்கத் தெரியவில்லை. எங்கள் கல்வி உயர்ந்தது. உங்கள் குடியரசுத் தலைவரிடம் சொல்லி உங்கள் குழந்தைகளில் அறுவரை இங்கு அனுப்புங்கள். அவர்கள் எங்கள் குருவுடன் தங்கச் செய்து அவர்கள் உண்மையான ஆண் மக்களாக்கி அனுப்பி வைக்கிறோம் என்று பதிலளித்தார்.

இன்று பள்ளியிலிருந்து நின்று விடும் மாணவர்களில் பலர் தாங்கள் விரும்புவனவற்றை பள்ளியில் கற்பிக்காததாலும், தாங்கள் விரும்பாதவற்றை தாங்கள் விரும்பாத வகையில் கற்பிப்பதாலும் பள்ளிக்குச் செல்வதை வெறுத்து நின்று விடுகிறார்கள்......

நன்றி : மனித உரிமைகள் மாத இதழ் - சூன் 2004



தமிழனுக்குக் காவிரி சொந்தமாகுமா ?
உருவெடுக்கிறான் பச்சை மனிதன்.

காவிரி நீரின் தமிழர்களின் உரிமையையும், காவிரி பொய்த்ததால் வாழ்விழந்து தவிக்கும் தமிழக ஏழை விவசாயிகளின் துயர நிலையையும், இந்தியாவின் மனசாட்சிக்கு உணர்த்தும் முகமாக "பச்சை மனிதன்" திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை உருவாக்குவதில் தமிழ்த் திரைப்பட உலகம் கண்டிராத புதுமையை அரங்கேற்றுகிறார்கள். அதாவது திரைப்படத்திலன் மூலமாக மக்களை இயக்கப்படுத்துகிறார்கள். மக்கள் திரைப்படமாக அமைப்பு ஆக்குகிறார்கள். தமிழ் மாணவர்களின் வியர்வைத் துளியில் இருந்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

ஜான் ஆபிரகாம் இவர் கேரள திரைப்பட இயக்குநர். 1889 இல் - அம்மஅறியான் - படத்தை மக்களிடம் நிதியை வசூல் செய்து எடுத்தார். அதே பாணியில் பச்சை மனிதன் திரைப்படத்தையும் தமிழ் மாணவர்களிடம் நிதிவசூல் செய்து உருவாக்க, அறக்கட்டளையைத் தொடங்கி இருக்கிறார்கள். அறங்காவலர்களாக டாக்டர் உதயமூர்த்தி. இயக்குநர் சேரன். இயக்குநர் லிங்குசாமி. இயக்குநர் சரத் சூர்யா பொறுப்பேற்று உள்ளனர்.

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழ் - சூன் 2004



தமிழால் முடியும் கட்டுரையில் .....

ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளைத் தமிழிலேயே எழுதித் தருகிறார். தன் எண்ணம், எழுத்து அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்னும் உறுதி கொண்டிருக்கிறார். சாதனையாளரான இந்த மருத்துவ நிபுணர் அரியலூரைச் சேர்ந்த மரு.கணேசன் ம.இ.அ.இ.,குழ.,ந,ம.,ப.மா. நோ.ம.உ (Dr.M. Ganesan,. MBBS, DCH., McRM)....
நன்றி : நாளைவிடியும் - இதழ் எண் 40


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061