வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 06 - 2004

குறும்பாக்கள்

அனைத்து விட்ட வானம்
விளக்கேற்றி வைக்கும்
சூரியன்.

படிக்கத் தெரியாவிட்டாலும்
புத்தகத்தைப் புரட்டும்
காற்று.

வற்றிக் கிடக்கும் மார்பு
விரல் சூப்பிப் பழகும்
குழந்தை.

இ. சாகுல் அமீது.
நன்றி: இனிய நந்தவனம்.



இடம் மாறுகிறது இதயம்
மலரில் தேனெடுக்கிறது....
வண்டுகள்.

வ.கோபி. சி.க.நா.கல்லூரி. சென்னை.

உள்ளம் ஊனமுற்றதால்
வந்த வேதனை.....
சாதி மத மோதல்கள்.

ஏ. முனுசாமி. சி.க.நா. கல்லூரி, சென்னை.

கனவுக் காதலி.
ஒரு பட்டாம் பூச்சி
என்னைச் சுமந்து செல்கின்றது....
அவளின் பூந்தோட்டத்திற்கு.

ப.சந்தோஷ்குமார், சி.க.நா.கல்லூரி.

வாய்மையே வெல்லும்
உண்மை தான்.......
இலஞ்சம் வாங்காதபோது.

ஜெ.வினோத்குமார் - சென்னைப் பல்கலைக்கழகம்.
நன்றி : செம்பருத்தி சூன் 2004.



குப்பை

ஒருமுறை அல்ல
இருமுறை அல்ல.

ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் கொண்டிருக்கிறாள்.
அம்மா.

கூட்டக் கூட்ட
வந்து கொண்டேயிருக்கிறது
குப்பை.

பொன். குமார் - சேலம்.
நன்றி : கவிதை உறவு இதழ்.



நண்பன்

பசியோடு அலைந்தவனுக்குப்
பாவப்பட்டு உணவளித்தேன்.
எனது சம்மதமின்றியே
வீட்டில் சேர்ந்து கொண்டான்.

காவல் வேலையை
கருத்தாகச் செய்தான்
சம்பளப் பிரச்சனை ஏதுமில்லை.
ஓரிரு கவளம் சோறு போதும்.

பிள்ளைகள் விளையாட
பொம்மையானான்.
வயசுக்கு வந்த மகளை
பள்ளிவரை சென்று
விட்டு வந்தான்.
கொல்லையில் மனைவி
குளிக்கும்போது கூட
தட்டியருகே நின்று
இசட் பிரிவு பாதுகாப்பளிப்பான்.

என்னோடு வயலுக்குத்
துணையாக வருவான்.
அவனது காவலில்
கோழியும், குஞ்சுகளும்,
வெள்ளாடும், குட்டிகளும்
காளைகளும், எருமைகளும்
பத்திரமாக இருந்தன.

எல்லோரும் அவனை
"நாய்" என்று சொல்லுகிறார்கள்.
நான் மட்டும் அவனை
"நண்பன்" என்றுதான் அழைக்கிறேன்.

வி. சகாயராஜா
நன்றி : சுற்றுச் சூழல் புதியகல்வி மாத இதழ்.



வதை வலி

ஆக்கினைகள் என்னைத் தத்தெடுத்துள்ளன
ஆ !
என்னுடனே பயின்று வந்த எனது
நாக்கொருநாள் திடீரென்று நரம்புயிர்க்கப்
பெற்று
"நான் தமிழன்" என்றுரைக்க
நடுங்கியது பூமி.
தாக்கினார்கள். அதுகேட்டுத்
தடி, தண்டு, பொல்லால்...
தார்வீதி முழுவதுமே என்குருதி மையால்
கூக்குரலைப் பதிப்பித்துச் சென்றார்கள்.
ஐயோ !
குற்றுயிரை மட்டும் எறிந்தார்கள்
போனார்கள்.

தூக்கத்தில் வலிந்தெழுப்பி
துப்பாக்கி முனையில்
துயர்களிடம் எனை அழைத்துப்
போனார்கள் மறுநாள்,
பார்க்க முடியாதபடி பழந்துண்டுத்
துணியால்
பலநூறு ஆண்டுகளைப் பிழையின்றி நன்கு
நோக்கவல்ல தமிழ்க்கவியின் நுதல்விழியைக்
கூட
நூற்பதற்கு முனைந்தார்கள்,
முடியாதபோது,
பூக்கரங்கள் தழுவுகிற பொன்மேனிதன்னில்
புண்விளைச்சல் கண்டு பூரித்தாரம்மா !
நோக்கமின்றி அடித்தார்கள்
பலநூறுதடவை.
நோ, தனது விளம்பரத்தை எனதுடலிற்
காட்ட,
வீக்கமெழும்.
அதன்மேலும் இரண்டொருவர் வந்து
விடமொழுகும் வேதனையை
அறைந்துவிட்டுப் போவார்.
தூக்கமின்றிப் பிரிந்திருக்கும் துயர்
இமைகள்
பிறர் முன்
துகிலுரியப்படுகையிலே மட்டும் ஒன்றாகும்.
சாக்குருவி ஊளையிடும்
என் வெறுமை மனதில்
சஞ்சலம் தன்துணையோடு குடிபுகலாகும்.

சுத்தியலை எடுத்தார்கள்
அதுகண்டு பயந்து
சுண்டங்காய் அளவான ஆதாரச்சுருதிச்
சத்தை நசித்தார்கள்
சந்ததியை மறித்த
சந்தோசம்தனை நின்ற யாவருமே புசித்தார்
கத்தியழ வாய் திறந்தால்
மிளகாய்த்தூள் கம்பி
கருணையின்றி உள் நுழையும் என்பதனால்
வாயைப்
பொத்தியழுகின்றேன்.
பூகம்ப நெஞ்சே !
பொறுத்துக்கொள் நிலைமாறும் காலங்கள்
உண்டே.

ஸ்ரீ பிரசாந்தன் - இலங்கை
நன்றி : கணையாழி - சூன் 2004.



பருவம் தவறாத நம்பிக்கை உழவன்

இன்னும்.....
வறண்டு கிடக்கிறது நிலம்.

கண்மாய் வெடிப்புகளுக்குள்
பாம்புகள் அடைகாக்கின்றன.

மரங்கள்...
நம்பிக்கை தளிர் விட்ட வருடம்
நினைவில்லை.

பூமி விளைந்த வருடத்தை
நினைத்துப்
பெருமூச்சு விடுகிறான் உழவன்.

ஒவ்வொரு வருடமும்
மாடுகளுக்குச்
சாவி கூட மிஞ்சவில்லை.

விதை நெல்லை
ஒரு நேரம் காய்ச்சிக் குடித்துப்
பசியாறி இருக்கலாம்.
சங்கடப்படுகிறாள் மனைவி.

பட்டுப் போன சுள்ளிச் செடிகளைப்
பிய்த்துத் தின்று
பசியாறுகின்றது ஆட்டுமந்தை.

காய்ந்து சருகாகிப்போன
புல்லைச் செதுக்கி
மாடுகளுக்குப் பசியாற்றிக்
காப்பாற்றுகிறான் சம்சாரி.

கண்ணவிஞ்ச கடவுளுக்கும்
நாதியத்த வானத்துக்கும்
பொய் சொல்லும் பூமிக்கும்
என்ன தெரியும் ?
தினமும் நெற்குதிர் தடவும் தரித்திரம்.

பருவம் வந்துவிட்டது
தோளில் கலப்பை சுமந்து
உழவுக்குத் தயாராகிவிட்டான்
இந்த வருடம்
துளிர்க்கும் நம்பிக்கையோடு....

- சிங்கமுத்து -
நன்றி : தொடரும் காலாண்டிதழ்.



பல்லக்குத் தூக்கிகள்

நாங்கள் பல்லக்குத் தூக்கிகள் அதுவே
எங்கள் வாழ்ககை.
சினிமா நடிகர்கள் சவாரி செய்யும்போது
நாங்கள் இரசிகர்கள்.
அரசியல்வாதிகள் சவாரி செய்யும்போது
நாங்கள் தொண்டர்கள்.
இலக்கியவாதிகள் சவாரி செய்யும்போது
நாங்கள் கைதட்டும் பார்வையாளர்கள்.
மதவெறியர்கள் சவாரி செய்யும்போது
நாங்கள் கடப்பாரை சேவகர்கள்.
நாங்கள் பல்லக்குத் தூக்கிகள் - இங்கு
எப்போதும் பல்லக்கைச் சுமப்பவர்கள்.

சிலசமயம் நாங்கள் கட்டியங்காரர்கள்
சிலசமயம் நாங்கள் பதாகை தாங்கிகள்
சிலசமயம் மேளதாள ஒலிக்கிசைந்து
பல்லக்கின் முன் ஆட்டக்காரர்கள்
பல்லக்கு பவனியாளருக்காகச்
சிலசமயம் நாங்கள் அக்னிப்பிரவேசக்காரர்கள்.
எப்போதும் நாங்கள் பல்லக்கில்
ஏற அனுமதிக்கப்பட்டதில்லை.
இப்போதும் ஏற எண்ணுகிறோமா ?
இல்லை, இனியாரையும், யாருமே
சுமக்கவேண்டாம் சுதந்திரத்தை உணரட்டும்.

- முருகனடிமை - காரைக்குடி.
நன்றி : மதுரைத் தென்றல் - மதுரை.



கிறுக்குத் தனமான கிரிக்கெட்

இந்த மட்டை விளையாட்டு இந்தியாவில் புகுந்ததிலிருந்து, வாசிப்போர் பாடத்தை மனனம் செய்யும் ஆற்றலை அறவே ஒழித்துவிட்டது. இந்தக் கிறுக்குத்தனமான விளையாட்டு சீனாவில் நுழையவில்லை. இலண்டன், உருசியா, தாய்லாந்து, செர்மனி, இசுரேல், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நுழையவில்லை. அந்நாட்டு மக்கள் மொழிப்பற்று மிககவராக, தாய்நாட்டுப்பற்றுடன் சிறப்புடன் வாழ்கின்றனர். ஆனால் தமிழினத்தை, தமிழ் இளைஞர்களை இந்த விளையாட்டு சீரழித்து வருகிறது. "வாங்க வாசிக்க வாங்க" என்ற இலக்கியக் கூட்டத்தில் மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அவர்கள் மதுரையில் கூறியது.

நன்றி : அருணன் - சூன் திங்களிதழ்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061