வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 05 - 2004

துளிப்பாக்கள்

தமிழனாய்ப் பிறக்க விரும்பவில்லை
தாய்மொழியில்
படிக்க ஆசை.

தமிழக ஆறுகளில்
வற்றாமல் ஓடுகிறது.
கானல் நீர்.

புரியவில்லை
படித்துப் பார்த்தும்
அயல்மொழிக் கல்வி.

சிம்னி விளக்கில்
படிக்கிறான்.
இந்தியா ஒளிர்கிறது.

மானம் பறிக்கும்
மதிப்பெண்ணுக்காய்
சீரழிந்த கல்வி.

கொலைக்குத்
தண்டனை
தூக்கு.

தாலி அறுக்கிறான்
மார்வாடி
மஞ்சள் கயிறு மிஞ்சும்.

புதுவை. தமிழ் நெஞ்சன்
நன்றி : வண்ணப்பூங்கா - மே 2004


மழலையர் பாடல்கள்

அன்பே அமுதே எழுந்திடு
அன்னைத் தமிழில் படித்திடு
அறிவாய் நீயும் வளர்ந்திடு
அறியாமை மீது போர்தொடு
உடும்பாய்க் கொள்கை பிடித்திடு
உயர்வு தாழ்வு சமனிடு
உரிமை மீட்கத் துணிந்திடு
உண்மையாக வாழ்ந்திடு.

காய்ச்சிய நீரைக் குடி குடி
கரும்பை நன்றாய்க் கடி கடி
தாய்மொழிக் கல்வி படி படி
தடையாம் சுவரை இடி இடி
காற்றில் மாசு வடி வடி
மண்ணில் கழிவு துடி துடி
சாதிப் பாம்பை அடி அடி
துணிந்து செயலை முடி முடி

கதிரவன் வந்தான் எழுந்திடு
கண்ணை நன்றாய் திறந்திடு
காலைக் கடனை முடித்திடு
கடமை செய்யத் துணிந்திடு
கல்விக் கரும்பைக் கடித்திடு
கசடை நீக்கிப் படித்திடு
கலைகள் அனைத்தும் கற்றிடு
காரிருள் நீக்கி வென்றிடு.

புதுவை - தமிழ் நெஞ்சன்
நன்றி : பூவரசு 13 ஆவது ஆண்டு நிறைவு மலர்.



உரைவீச்சுகள்

கடவுள், குழந்தை
இரண்டும் ஒன்று
இனியும் சொல்லாதீர்
இப்படி.....

கருவறை தாண்டி
வெளியே வர முயன்றவை.
குழந்தைகள் மட்டுமே.

நாணற்காடன் - இராசிபுரம்.
நன்றி : மதுமலர் - மே 2004



முரண்

தமிழ் நாட்டின்
நெற்களஞ்சியமாம்
தஞ்சை
ஆம்.....

கலயங்களில்
நெல் மணிகள்.

மா.சிவக்குமார் - திருக்கண்ணமங்கை.
நன்றி : மகிழம்பூ மாத இதழ். 2004


இரண்டு கவிதைகள்

என் குட்டிகளுக்கு
வைத்திருந்த பாலை
நிதம் இரவு ஒரு பூனைக்குட்டி
உறிஞ்சியது.
ஒருநாள் பொறிவைத்துப்
பிடித்து அதை
அருகிலிருந்த காட்டில் விட்டேன்
சில வருடங்கள் கழித்து
அதே சாயலில்
என் வீட்டில் உட்கார்ந்திருந்தது.
இப்பொழுது புலியாய்
உறிஞ்சப் போவது பாலை அல்ல
என் குட்டிகளின் இரத்தத்தை
கனவு கலைந்தது.
திடுக்கிட்டு எழுந்தேன்.
இப்போது
என் வீட்டிற்குப்
பால் வாங்கும்போது
500 மிலி சேர்த்து வாங்குகிறேன்.
ஏன் ?
எவனுக்குத் தெரியும்.

*****
இந்தக் கிளிகள்
அவர்களுக்காக
கூண்டுக்குள் அடைபடுகின்றன.
பின்னர்
சுதந்திரம் என்று சொல்லி
தங்கள் சிறகுகளை
ஒடித்துக் கொண்டு
கூண்டுக்கு வெளியே திரிகின்றன
வீட்டையே
கூண்டாக்கிக்கொண்டு.

- இவான் -
நன்றி : பயணம் புதிது - ஏப்ரல் 2004


காலம்

முப்படையை வைத்துக் கொண்டு
எப்படையும் தோற்க்கடித்தான் - அன்று
தப்படி போட்டுக் கொண்டு
தம்படிக்கு ஆசைப்படும் காலமோ - இன்று

முக்கனி சுவை கொட்டி
முத்தமிழைப் பேசிவந்தான் - அன்று
தக்கபடி பேசினால்தான்
தரித்திரம் நீங்கும் என்பான் - இன்று.

பொருட்சுவையும் சொற்சுவையும்
வாழ்வில் கண்டான் - அன்று
பொருட்சுவை மட்டும் போதும்
புகழ்பட வாழ்ந்திடலாம் என்பான் - இன்று

தந்தை தாயை தெய்வமென
தொழுது வாழ்ந்தான் - அன்று
காப்பகத்தில் விட்டுமீதக்
காலத்தைத் தள்ளச் சொன்னான் - இன்று

கல்விக்கூடம் கட்டி உயர்
கல்விதனை கற்க வைத்தான் - அன்று
கல்விக்கூடம் இடித்துவிட்டு
சொகுசுகூடம் ஆக்கிக் கொள்ளும் காலமோ - இன்று

என். இராமச்சந்திரன் - திருகண்ணமங்கை
நன்றி : மகிழம்பூ - சித்திரை 2004



அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில்
அருந்தமிழ்ப் பயிற்சி

அறிஞர் அண்ணாவை அழைத்துப் பெருமைப்படுத்திய ஏல் பல்கலைக்கழகம் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தர உள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்க நாட்டு ஏல் பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியரும் தென் ஆசியக் கல்விக் குழுவின் தலைவருமான திரு.சீனிவாசன் அறிவித்துள்ளார். உலகில் 8 கோடி மக்கள் பேசும் மொழியும் 5 நாடுகளின் நாட்டு மொழியும், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஈராயிரமாண்டுக்கு மேல் இடையறா இலக்கிய மரபுடைய மொழியுமான தமிழைத் தென் ஆசியக் கல்விக்குழு பாடத்திட்டத்தில் இணைத்துத் தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, வரலாறு பற்றிச்சொல்லித்தர வேண்டுமென 900 மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது ஏற்கப்பட்டு ஏல் பல்கலைக்கழகம் முழுநேரத் தமிழ்ப் பேராசிரியர்களைப் பணியில் அமர்த்தித் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளது. புதுவையில் திராவிடப் பேரவை ஏல் பல்கலைக்கழகத்தை உலகத் தமிழர்கள் சார்பில் பாராட்டுகிறது.

நா. நந்திவர்மன்.
நன்றி : தெளிதமிழ் - விடைத்திங்களிதழ்



அமெரிக்காவில் நானோ தொழில் நுட்பம்
தமிழர் சாதனை

ஒரு தலைமுடியின் கனத்தைவிட 10,000 மடங்கு குறைவான கனம் கொண்ட பொருளைக் குறிக்கும் சொல்தான் நானோ - என்பதாகும். இத்தகைய மிக நுண்ணிய பொருளை எண்ணற்ற பணிகளுக்கும் பயன்படுத்தலாம். நானோ தொழில் நுட்பத்தை மின்சார சாதனங்கள். சென்சார் கருவிகள். மிகுந்த வலிமையான எடை குறைந்த பொருள்கள் மற்றும் எண்ணற்ற துறைகளில் பயன்படுத்தலாம். விண்வெளி செயல்பாடும் அவற்றில் ஒரு பகுதிதான். மருந்து, போக்குவரத்து, கணினி போன்ற நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான பிரிவுகள் இதனால் பயன்பெறும்.
இப்புதிய தொழில் நுட்பமான நானோ அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் நானோ டெக்னாலஜி மையத்தில் இயங்கி வருகிறது. அத்தொழில் நுட்பமையத்தின் இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் தமிழ் நாட்டில் உள்ள காரைக்குடியில் பிறந்த திரு. மெய்யா மெய்யப்பன் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவருடன் இணைந்த 60 விஞ்ஞானிகளும் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நானோ மின்னனுத் துறைக்கான கார்பன் நானோ டியூப்கள். சென்சார்கள். கண்டுபிடிப்புக் கருவிகள் மற்றும் மின்னனு மூலக்கூறுகள் போன்ற பலதரப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி : தாகூர் கல்விச் செய்தி - மே 2004
நன்றி : நமது தமிழாசிரியர் - விடைத் திங்கள்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061