வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 05 - 2004

கீறல்கள்

அம்மா போட்ட
ஏலச்சீட்டின்
ரகசிய தவணைபாக்கி
அடுக்களைக் கருஞ்சுவரிடையே
வெள்ளைக் கீறல்களாக.

அக்காவின் பால் கணக்கு
மாடச்சுவரில்
கருப்புக் கீறல்களாக.

தங்கை வாங்கிய
பூக்கணக்கின் கீறல்கள்
அவசரகதியில்
தாழ்வாரச் சுவர் முழுவதும்.

வாண்டுகளின்
நர்சரிக் கீறல்கள்
நான்கு அடிஉயரச்
சுவர் முழுவதும்.

எல்லாக் கீறல்களும்
மாறிக்கொண்டேயிருக்கும்.

நான்கு வருடங்கட்கு முன்பு
கூடத்தூண்களில்
பாட்டியின் நடுவிரல் கீறிய
வெற்றிலைச் சுண்ணாம்பு
கீறல்களைத் தவிர.

பிரேம பிரபா.

நன்றி : இதய அலைகள் - மே 2004


பொறுப்பு

அமில நீரூற்றி
அடித்துக் கழுவினேன்
போதாதென்றாய்.
மீண்டும் மீண்டும்
அமில நீரூற்றி
அடங்காத போது...

உன் மல நாற்ற வீச்சின்
இடையறாத
நீளத்திற்குப் பொறுப்பேற்று
சுருங்குகிறது
பேசிய பத்து
ஐந்தாக.

குறிஞ்சி நாடன்.
நன்றி : நம்மொழி - ஏப் 2004


வெய்யில் ஏறிய பிறகும்
வந்து அமரும்
வண்ணத்துப் பூச்சியை
பிடித்து
கட்டிக் கொள்கிறாள்
பூக்கொல்லையின்
முதிர் கன்னி

நன்றி : நிலம் 1 - படப்படி இதழ்


பகல்ல பூராவும்
பஞ்சாலையில் கெடந்து மாய்ஞ்சு
பொழுது சாஞ்சா
அடுப்புல கெடந்து மாய்ஞ்சு
வகையா பொங்கி
ஆசையோட பரிமாறும் மீனாட்சிக்கும்
"நீ மொதல்ல
சாப்புடு புள்ள" ன்னு
அன்பாய் அதட்டும்
அவ புருசனுக்கும்
இன்னக்கி வரைக்கும்
தெரியாது
என்னக்கி காதலர் தெனமுன்னு.

அருணோதயம்
------------------------------------
அடையாளம்

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாதென்று
ஆனைகட்டிப் போரடித்த
ஒவ்வொரு உழவன்
வீட்டிலும்
சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
தேய்ந்து கெட்டக்
கலப்பை ஒன்று.
வாழ்ந்து கெட்டதன் அடையாளமாய்.

ஆ. செங்கதிர்ச் செல்வன் - ஆவாரம்பட்டி
நன்றி : தேடல் - ஏப்ரல் 2004


கொலுசு

மெல்ல
மெல்ல
தத்தித் தத்தி
விழுந்தும்
எழுந்தும்
நடந்து வருகிறது
குழந்தை
வெறுங்காலுடன்.

கடன் வாங்கியேனும்
வாங்கித் தரனும்
கொலுசு.

செல்வகாந்தன்
நன்றி : செளந்தர சுகன - மே 2004


கன்னடக் கவிதைகள்
மாயக் கண்ணாடிக்குள்ளே

மாயக் கண்ணாடிக்குள்ளே
மயிலிறகு
பகவத்கீதை
சின்னஞ் சிறுமிகளின் புன்சிரிப்பு
மிதந்து போனது.

தாத்தாவின் மெல்லிய சிவப்பு வேட்டித் துணியால்
கண்ணாடியைத் துடைத்தேன்.

காட்சியளித்தன -
கம்ப்யூட்டர்
கால்குலேட்டர்
கைக்குட்டை
கைக்கவசம்

புன்சிரிப்புடன்
மெல்லிய சிவப்பு வேட்டித் துணியால்
மீண்டும் கண்ணாடியைத் துடைத்தேன்.

என்னை நானே பார்த்தேன்.

அதற்குப் பிறகு -
கை நீட்டிய கோலத்தில்
இரு நிர்வாண ஆதிமனிதர்கள் எதிர்பட்டார்கள்.

ஆர்வத்துடன் மீண்டும் கண்ணாடியைத் துடைத்தேன்.

காணப்பட்டதோ
கையில் துப்பாக்கி பிடித்து
கூர்த்த பார்வையுடன் பீதியூட்டும் மனிதன்.
அவன் நெற்றியில் மின்னும் அடையாளம்.
பைக்குள் புனித நூல்.
பூட்ஸ்காலால் கண்ணாடியை உதைத்து
வெளியே வந்து விட்டான்.

சுற்றிலும்
உடைந்த கண்ணாடிச் சில்லுகள்.

இரண்யகசிபு ஆர்ப்பரிக்கிறான் -
எங்கே உன் கடவுள் ?
தூணிலா ?
துரும்பிலா ?

தூணிலும்
துரும்பிலும்
கடவுளைக் காணவைக்கிறான் மகன்
பக்த பிரகலாதன்.

எந்தக் கண்ணாடிக்குள்ளே
மாயமாகிப் போனான் ?
இரண்யகசிபு ஆர்ப்பரிக்கிறான் ?

சிந்தாமணி கொட்லெகெரெ
தமிழாக்கம் - பாவண்ணன்

நன்றி : திசை எட்டும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ் (4)


நீடுதுயில் நீக்கு

தாய்மொழியாத் தமிழ் மொழியைக் கொண்ட நாட்டில்
தமிழுக்கோ முதன்மைநிலை சிறிது மில்லை
ஆய்ந்தறிந்தே தமிழ்மொழியைக் கற்றார் கூட
ஆங்கிலவீண் மோகத்தில் உழலு கின்றார்
பாய்ந்தோடி ஆங்கிலத்தை மழலை யர்க்குப்
பள்ளியிலே பயிற்றுவிக்கத் துடிக்கின்றாரே.
மாய்க்கின்றார் தமிழுணர்வைப் பிஞ்சு நெஞ்சில்
மரம்போல அசையாது நிற்கின் றாரே.

அழகுதமிழ்ப பெயர்விடுத்து மழலை யர்க்கோ
ஆகாத பெயரெதையோ சூட்டு கின்றார்
பழகிநட்பை வெளிப்படுத்தும் போழ்து கூடப்
பைந்தமிழை விட்டுவிட்டே ஆங்கிலத்தில்
முழக்கியுமே உரையாடி மகிழு கின்றார்
முத்தமிழை உயிராக மதித்து வாழ்ந்த
பழம்பெருமை யனைத்துமே பாழாய்ப் போச்சு
பாய்கின்ற புலியே ! நீ உறங்கலாமா ?

இனமான உணர்வெல்லாம் எங்கே போச்சு
இங்குத் தமிழ் அழித்திட்டால் இனமே போச்சு
தினையளவும் உன்குருதி கொதிக்க லையோ !
திண்ணையிலே படுத்துறங்கல் அழகும் ஆமோ !
மனமெல்லாம் மழுங்கியுமே கல்லாய்ப் போச்சா ?
மானம்வீரம் யாவையுமே சிதைந்து போச்சா ?
கனவேதும் காண்குதியோ ? துடிந்தெழுந்தே
கண்விழித்து நீடுதுயில் நீக்குவாயே !

அதலை - இராமன் - மதுரை
நன்றி : மதுரைத் தென்றல் - இதழ் 42


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061