வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 30 - 04 - 2004

கவிதையின் பக்கம் யார் இருக்கிறார்கள் ?

அரசாங்கங்களும் ராணுவங்களும்
கவிதையை வெறுக்கின்றன.

புனித நூல்கள், தீர்க்க தரிசிகள்
மற்றும் சட்டதிட்டங்கள்
கவிதையை வெறுக்கின்றன.

தத்துவவாதிகள் கவிதையிடமிருந்து
பின் வாங்குகிறார்கள்.
தத்துவத்தின் ரொட்டியைக்
கவிதை களவாடிவிடும் என்பதால்.

கன்னியாஸ்திரிகள் கவிதையை
ரகசியமாய் சீராட்டுகிறார்கள்.

ஆனால் கவிதை கவலைப்படுவதில்லை,
அது எவருக்கும் எதையும் கடன்பட்டிருக்கவில்லை.

அது வரலாற்றின் படிகளில்
ஒரு புயலை உருவாக்கியபடி
தன் வழியில் நடைபோடுகிறது.

கவிதை எல்லோரையும் நேசிக்கிறது.

- ஆஸ்கன் மெர்ட்
துருக்கியக் கவிதையின் மொழிபெயர்ப்பு : எஸ். பாபு

நன்றி : உயிர்மை - ஏப்ரல் 2004.



நீதிமன்றம்

நீதி தேவதையின்
கண்களைக்
கட்டிக் கொண்டு
வழக்கறிஞர்கள்
கண்ணாமூச்சி
விளையாடுவதற்காக
அரசாங்கத்தால்
கட்டப்பட்டுள்ள
ஒரு விளையாட்டு
மைதானம்

- கவிஞர். இளையபாரதி -
நன்றி : மைசூர் முரசு.



சிட்டுக் குருவி

நாங்கள் மின்கம்பிகளில்
ஜோடியாய் உக்கார்ந்து
கூரிய அலகால் உரசிய படியே,
காதல் கவிதைகள் பேசுவதைக்
கண்ட அவர்கள்,
அந்த லேகியத்திற்கு..
எங்கள் பெயரை வைத்து விட்டார்கள்.

விட்டு விடுதலையாகி
நாங்கள் பறப்பதைப்
பார்த்தவர்கள் கோடி.
பாரதி மட்டும்தான்
பாடிவைத்தார் அதை.

கண்ணாடியில் நாங்கள்
முகம் பார்த்துக்
கொத்தி மகிழ்வதைக்
கவிதையாக்கியுள்ளனர் சிலர்.

எந்த வீடாயினும் நாங்கள்
கூடுகட்டத் தடையில்லை.
குருவிக் கூட்டைக் கலைத்தால்
குடும்பமே கலையுமென்று
சொல்லி வைத்த நாட்டுப்புறத்தானைக்
கும்பிடத் தோன்றுகிறது.

சுதந்திரமாய்ப் பறப்பது
சுறுசுறுப்பாய் உழைப்பது
எபபோதும் காதலித்து
இன்பமாய் வாழ்வது
என்ற
எங்களின் வாழ்விலும்
மனிதர்கள் கற்றுக்கொள்ள
எத்தனையோ பாடங்கள்
இருக்கின்றன...

- கழனியூரான்
நன்றி : நறுமுகை ஏப்ரல் ஜுன் 2004



அவனின் பாட்டன்
அணியவேயில்லையாம்
ஆதிக்கவாசிகள் சொல்கிறார்கள்.

அவனின் தாத்தா
ஊருக்குள் மட்டும்
கையிலெடுத்துச் செல்வாராம்.

அவனின் அப்பா
துஷ்டரைக் கண்டால் தூர விலகுபவர்.
எங்கு எப்படியென வளைந்து நடப்பவராம்.

அவனோ
கால்களில் மட்டுமே அணிகிறான்
ஆதிக்க வாதிகள் வினவினால்....?
கைகளிலும் எடுக்கிறான்
ஆயுதமாக...

- திருவைக் குமரன்
நன்றி : இன்று இதழ் எண் : 5



தமிழில் பெயரிடுங்கள்

தாய்மொழியை ஒதுக்கி வைத்து பிறநாட்டாரின்
தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொள நினைத்தல்
தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்.
வாய்மணக்கும் தமிழில் பெய ரிடுவதாலே
வாய்வெந்து போய்விடுமா ? இட்டால் என்ன ?
குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும்
குமணனென்றும் பெயரிடலாம் ஆண் கட்கெல்லாம்
அன்னலென்றும் அன்றிலென்றும் அல்லி யென்றும்
அருவியென்றும் பெயரிடலாம் பெண் டிற்கெல்லாம்
மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின்
மின்னி யென்றும் பெயரிடலாம் தமிழரெல்லாம்
என்றுமுள செந்தமிழில் பெயரி டாமல்
இரவல் மொழிப் பெயரிடுதல் அடிமைத் தனம்.

- உவமைக் கவிஞர் சுரதா
நன்றி : தமிழா உன் பெயர் தமிழா நூல்
நன்றி : தமிழ்ப்பாவை மேழம் இதழ்.



ஏறு வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல் ! ஏறு மேன்மேல் !
ஏறி நின்று பாரடா எங்கும்.
எங்கும் பாரடா இப்புவி மக்களை
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
என்குலம் என்றுணைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்.
அறிவை விரிவு செய் ! அகண்ட மாக்கு !
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.
அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு.

- பாரதி தாசன்.
நன்றி : சிகரம் மாத இதழ்


செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
நாவிலி னித்திடும் அப்பம்
உனை வளர்ப்பன தமிழா - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

- பாரதிதாசன்
நன்றி : நற்றமிழ் மேழம் இதழ்



யாதும் ஊரே யாவரும் கேளீர்

தமிழறிந்த ஒவ்வொருவரும் தனது பரந்த மனப்பான்மையைக் காட்ட, இந்தப் பாடலை அடிக்கடி மதிப்பிடுகின்றனர். இந்தப் பாடல் இந்த ஒரு அடியை மட்டும் கொண்டதல்ல. இது 13 அடிகளைக் கொண்ட பாடலின் முதல் அடியாகும். இது புறநானூற்றில் 192 ஆவது பாடலாக வருகிறது. இப்பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள. மகிபாலன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

முழுப்பாடலும் பின்வருமாறு...

யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனது
கல்பொருது இரங்கும் மல்லற் போர்யாற்று
நீர்வழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இந்தப் பாடலின் பொதுவான கருத்தைப் பார்ப்போம்.

எல்லா ஊர்களும் எங்களுடைய ஊரே
எல்லோரும் எங்களுடைய உறவினர்களே.
தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை.
அவை நமது செயலாலே வருவதாகும்
நோதல் ஏற்படுவதும் நீங்குவதும் இவற்றைப் போன்றதே.
சாவது புதிதாக ஏற்படுவதில்லை.
கருவாகத் தோன்றும்போதே சாவும் தோன்றிவிட்டது.
ஆகவே வாழ்வது இனிதென எண்ணி மகிழ்வதுமில்லை.
வருத்தமேற்படுங்கால் வாழ்வு இனியது அல்ல
என்று வெறுப்பதுமில்லை.

நன்றி : தமிழர் முழக்கம் மேழம் திங்களிதழ்.
குறிப்பு எழுதியவர் : வீ.இரத்தினம் - பெங்களுர்.



உரைக்கும் பொருளும், உண்மைப் பொருளும்

கலங்கரை விளக்கம்

உலகத்திலேயே முதன் முதலாக மனிதன் தோன்றிய இடம் - குமரிக் கண்டம்தான். அந்தக் குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய அதே நேரத்தில்தான் இமயமலை வெளியில் வந்தது.
அந்தக் குமரி மூழ்கியதனால், வேறு ஒரு குமரி நகரைஉண்டாக்கிக் கொண்டதனால் அதற்குக் கன்யாகுமரி என்று பெயர் சூட்டிக் கொண்டனர். கன்னி என்றால் புதிய குமரி நகரம் என்று பொருள். உலக மாந்தனாகிய தமிழன்தான்.
உலகில் கப்பல் செலுத்திய முதல் மாந்தன். அதனால்தான், கப்பலைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லே எல்லா மொழிகளிலும் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். சிப் - என்பது கப்பல் என்பதன் மரூஉவே. நாவாய் என்பதன் மரூஉவே நேவி என்பது. கட்டுமரம் என்பதன் மரூஉவே கட்டமரன் என்பது.
கலம் என்றாலும் கப்பலே. கடலில் சென்று திரும்பும்பொழுது கரை எங்கு இருக்கிறது? நாம் சென்று கரையேறவேண்டிய பகுதி எது என்பது அடையாளம் தெரிந்து கொள்ள - குறிப்பாக இரவில் தெரிந்துகொள்ளக் கரையில் ஓர் உயரமான தூணை நிறுவி அதன் மீது கட்டைகளை இட்டு எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி அடையாளம் காட்டினான். அதற்குப் பெயர் சூட்டினான் கலங்கரை விளக்கம் என்று.
கலம் என்றால் கப்பல். கரை என்றால் கடலின் கரை. விளக்கம் என்றால் விளக்கு என்று பொருள்கொள்வதே வழக்கம். கரை என்பதற்கு இதனைவிட வேறு ஒரு சிறப்பான பொருள், அழைத்தல் என்பதாகும். காகம் கரைகிறது என்று கூறுகிறோம். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீரார்க்கே உள (திருக்குறள் 527) கரைந்துண்ணும் என்றால் அழைத்துண்ணும் என்பதே பொருள்.
கலங்கரை விளக்கம் - என்பதற்கு மரக்கலம் வழிஅறிந்து வருவதற்காகக் கரையிலே வைக்கப்பட்டுள்ள விளக்கு - என்ற பொருளை உரைத்துக் கொண்டிருந்தோம். இனிமேல் கடலிலே வருகின்ற கப்பலை இங்கே வா இங்கே வா என்று அழைக்கின்ற விளக்கு - என்னும் உண்மைப் பொருளைக் கொள்வோமாக.

புலவர். வெற்றியழகன்
நன்றி. கண்ணியம் திஙகளிதழ்


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061