வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 03 - 2004

குறும்பாக்கள்

குடும்பமே தற்கொலைக்குத்
தயாராய்
தீப்பெட்டி

செத்தபின்னும்
நடக்கிறது மாடு
தோல் செருப்பு

யூசுப்
நன்றி : தமிழுற்று



சமத்துவபுரம்
கழிவு சுத்தம் செய்ய
அதே கருப்பன்

நன்றி மீண்டும் வருக
அச்சமாய் இருந்தது
அரசு மருத்துவமனை

பாலபாரதி - பொள்ளாச்சி
நன்றி : தீக்குச்சி



ஊர்கள் தோறும்
கலங்கரை விளக்கம்
தொலைபேசி கோபுரங்கள்

வினோத் குமார்

பக்கத்து வீட்டில்
பற்றிக் கொண்டதால்
பதறி அணைத்தான்
அவனுக்கும் குடிசை வீடாம்.

தமிழ்க் காசாலை - தேனீ

மருத்துவரிடம் சென்றேன்
நோய் தீர்ந்தது
யாரிடம் செல்லவேண்டும் ?
சாதி நோய் மறைய.
சே. சதீசு

விவசாயி விதை விதைத்தான்
வேகமாக வளர்ந்தது
கடன்
த. ராமகிருட்டிணன்

ஓட்டுப்போடக் காத்திருக்கிறோம்
எப்போது கிடைக்கும் ?
தேர்தல் பிரியாணி
வ. கோபி
நன்றி : செம்பருத்தி இதழ்,



மலரே நீயும் பெண்தானே
பிறந்த வீட்டில் மலர்கிறாய்
புகுந்த வீட்டில் உலர்கிறாய்.

பொன் ராஜ்
நன்றி : பூவனம் பல்சுவை இதழ்



தமிழாசான் விளக்கமொன்று
அறிவியல் ஆசான் விளக்கம் வேறு
அமாவாசை இருளில் மாணவன்.

பக்தியில் திளைத்தான் மகன்
பெற்றோர்
முதியோர் இல்லத்தில்.

தாய் சேய் நலம்
பிரசவ பில் பார்த்து
மூர்ச்சையில் தந்தை.

பெரமநல்லூர் சேகரன்.
நன்றி : புதிய ஆசிரியன் மார்ச் இதழ்.



ஏரியின் மீதூர்ந்து
கரையாமல் மூழ்காமல்
பனைமரமீதினில்
ஏறிப்பின் இறங்கி
சிந்தாமல் சிதறாமல்
கள்ளிமுள் காட்டிடையே
காயப்படாமல்
குத்திய குச்சியில் வீழ்ந்து
கிழிபட்டும் போகாமல்,
பள்ளங்கள் பாய்ந்தும்
மேடேறி ஊர்ந்தும்
உடைபட்டுப் போகாமல்
பயணிக்கும்
அந்தப் பருந்தின் நிழல்

இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் (நிலாப்பேச்சு நூலில்)
நன்றி : பாதை படப்படி இதழ் - இதழ் 18 (பிப்ரவரி 04)



கடிதம்

வீட்டிற்குள் நுழையும் போதே
விழிகள் மேயும்
தூக்கணாங் குருவிக்கூடாய்
கேட்டில் தொங்கும்
அஞ்சல் பெட்டியை.

இன்றும் ஒன்றுமில்லை
என்றறிந்த பிறகு....,
சின்னதாய் ஒரு சோகம்.

முன்பெல்லாம்
முத்து முத்தாய் எழுதும்
முத்து மாமாவின்
பழைய கடிதங்கள்
மனசு அசைபோடும்

கவிதையைப் போலவே
நடை துள்ளும்
நண்பர்களின் மடல்கள்

இப்போதெல்லாம்
உடன்பிறப்புகள் கூட
கடிதம் எழுதுவதில்லை.

அவசரமாய் வருவதுண்டு
வங்கியில் வட்டிகட்ட
நினைவூட்டு மடல்.

கட்டாயம் வருவதுண்டு
தொலைபேசி
கட்டண அறிக்கை மட்டும்.

எப்போதாவது
கண்சிமிட்டும்
திருமண அழைப்பிதழ்கள்.

தொலைபேசி வாயாடியின்
தொண தொணப்பு மந்திரத்தில்
மனிதர்கள் எல்லாம்
மயங்கிவிட்டார்களா ?

கணினி தேவதையின்
கண்விரிப்பில்
கரைகின்ற எந்திர மனிதர்கள்

எழுத்துகளால்
மனதை வருடுகிற
கடிதங்கள் எல்லாம்
மறைந்து போனதெங்கே ?

எதிர்பார்த்து... எதிர்பார்த்து...
ஏமாற்றம் மட்டுமே
ஏக்கமாய் மலர்கிறது
எவருக்கும் நானும்
எழுதுவதில்லை என்ற போதும்.

கருமலைப்பழம் நீ
நன்றி : கவிதாசரண் - மார்ச்- ஏப் 2004



தொலைந்திட்ட புன்னகை

கிட்டிப்புள் அடித்துக் கிளித்தட்டும் ஆடியபோது
தட்டிலுள்ள சோற்றைத் தம்பியோடு பகிர்ந்துண்டு
குப்பிவிளக்கின் முன்னே குனிந்திருந்து நிமிர்ந்தெழும்பி
பனையோலைப் பாயினிலே பாட்டியவள் சேலையினால்
பாங்காகப் போர்த்திக் கொண்டு பயமற்றுத் தூங்கியதெல்லாம்
பயந்தோடிப் போனதங்கே.

ஆற்றிவந்த தொழிலிழந்து அகதியென்ற பெயர் வாங்க
ஆயிரத்தைக் கட்டியிவர் அகிலத்தில் அவலவாழ்வு
களஞ்சியம் களஞ்சியமாய்க் காத்த பொருளிழந்து
கைப்பையையும் உயிரையும் உடைமையெனக் கொண்டு
ஷெல்லடிக்கும் குண்டடிக்கும் செத்துமடிய மனமின்றி
நாளாந்த இடப்பெயர்வால் நலிந்துபோன வாழ்வங்கு

சூழ்நிலைக்கு இரையாகிச் சுகித்திருக்கும் இளையோர்கள்
பணமொன்றே குறியாகப் பறிபோகும் சொந்தங்கள்
இனங்கள்பல சேர்ந்ததனால் இழந்துபோகும் கலாச்சாரம்
சுயநலங்கள் பலம்பெற்று சூழ்ந்து நிற்கும் சொகங்கள்
தாய்மொழியை மறந்து நிதம் தடுமாறும் இனத்தவர்கள்
அரவணைக்க நேரமின்றி அலைந்தோடும் பெற்றோர்கள்
ஆதரிக்க உறவின்றி அவலமுறும் சிறுவர்கள்
பராமரிக்க ஆளின்றிப் பரிதவிக்கும் முதியோர்கள்
பகட்டை வெளிக்காட்டப் பரிணமிக்கும் விழாக்கோலம்
கடவுளையே வைத்திங்கு களமாடும் பணவேட்டை
இப்படியே தொலைந்ததையா! இங்கே நம் புன்னகைகள்
தாயிழந்து சேயிழந்து தாங்குமொரு துணையிழந்து
கையிழந்து காலிழ்ந்து காக்குமொரு மனையிழந்து

படிப்பிழந்து பட்டமிழந்து பஞ்சத்தின் படியினிலே
செய்யும்தொழில் தனையிழந்து சேவை செய்வார் யாருமின்றி
சிங்களத்தின் இனவெறியில் சிக்குண்டு சிதறிவெந்து
கன்னியரும் காளையரும் கதிகலங்கி நிற்கும் நிலை

எம் வீட்டில் எம் நாட்டில் இனியசுகம் கண்டோம்
கூழைக் குடித்தாலும் கூடிநாம் குதூகலித்தோம்
பச்சையிடி(சாம்பல்)யும் பழைய சோறும் உண்டாலும்
பட்டினிச் சாவும் இல்லை பொறாமைத் தீயும் இல்லையே.

கவிதாயினி. அருந்ததி ஆனந்ததேவன் - ஈஸ்ராம் - இலண்டன்.
நன்றி : கலைவிளக்கு கவிதையிதழ் - ஜெர்மெனி.



மகாமகம்

சாக்கடைகள் சந்தன மாவ தில்லை
சாமியார்கள் தீர்த்தம்விட்ட குளங்க ளெல்லாம்
கோக்கரணம்! கும்பகோணப் புராணம் சொன்னால்,
குறைகேட்ட பரமசிவன் தேவ லோகப்
பாக்கள்சொல்லும் ரம்பையர்கள் கூட்ட மாக
பாவம்தீர்க்கத் தலைமுழுக்கே அங்கே போட்ட
வாக்குகளே ஜலக்கிரீடை நாற்ற மெல்லாம்
வழக்காகி மகாமகம் புனிதம் என்றார்.

சொறிபிடிக்கும் சேற்றைஅள்ளிப் பூசிக் கொள்ளும்
சுண்டல்வடை புரோகிதரைத் தலையில் தூக்கி
தெருத்தெருவாய்த் தேரிழுத்து தீபம் பார்த்து
தெரிசித்து நீர்நக்கிக் குடிக்கின்றாரே!
வெறிபிடித்த மதவாதக் கடைவி ரிப்பால்
வேள்விகளில் மக்கள்ரத்தம் பிழிகின் றாரே !
எறிசோறாய்ப் பிரசாதம்! நெறிசல்! சாவு!
இவரெல்லாம் திருந்துவது எந்த நாளோ ?

புரட்சிதாசன் - ஆசிரியர் - இசைத்தமிழ்.
நன்றி : இசைத்தமிழ் - மார்ச் 2004



சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
ஈழக் கவிஞர் முனைவர் க. சச்சிதானந்தன்.

எழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி - சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் - என்பது. இந்த வரியின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தம் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை பகுதியில் பிறந்தவர். மகாவித்துவான் நவநீத கிருட்டிண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம் சமற்கிருத மொழிகளிலும் புலமை பெற்றவர். இலண்டனில் படித்து பி.ஏ. ஆனர்சு பட்டமும், குழந்தைகள் உளவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய ஆனந்தத் தேன் என்ற கவிதைத் தொகுதி 1954 இல் வெளிவந்துள்ளது. இவருடைய யாழ்ப்பாணக் காவியம் போன்ற பல கவிதைகள் அச்சேறாமால் இருக்கின்றன. இவர் கவிதைகள் மட்டுமன்றி அன்னபூரணி என்ற புதினத்தையும் உரைநடையில் பழைய அரசியல் தலைவர் வன்னிய சிங்கத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார். அதிர்ச்சி தரும் செய்தி, இவர் இப்பொழுது மனநிலை திரிந்து வவுனியாவில் அலைந்து கொண்டிருக்கிறார் என்பது. இவருடைய புகழ் பெற்ற அந்த வரியைக் கொண்டிருக்கும் முழுக் கவிதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.


பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தமுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.

தகவலும் பாடலும் : தேனிரா. பாண்டியன் . ஓசூர்.
நன்றி : தமிழர் முழக்கம் இதழ் எண் 25, பெங்களூர்



சேது சமுத்திரத் திட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தை 1860 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படை அலுவலர் கமாண்டர் பெல்லீசு என்பவர் உருவாக்கினார். சூயஸ், பனாமா கால்வாய் திட்டங்கள் உருவாவதற்கு முன்பே உருவான திட்டம். இத்திட்டம் நிறைவேறினால், கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகாமல் மிக எளிதாக சேது கால்வாய் வழிச் செல்லலாம். இதனால் 350 கி.மீ தொலைவு குறைகிறது. பயணநேரம் ஒன்றரைநாள் குறைகிறது. தவிர இராமேசுவரம், நாகப்பட்டினம், கடலூர், குளச்சல், புதுச்சேரி ஆகியவை பெரிய துறைமுகங்கள் ஆக மாறிவிடும். தமிழகமும் மேம்பாடடையும். உலகின் கடல்பாதை வரைபடத்தில் சிறப்பான இடத்தைப்பெறும்.


நன்றி : சேரத்தமிழ் - முத்திங்களிதழ்.



மரபீனி மாற்ற நெல் - (கட்டுரையில்)

.....மரபீனி மாற்றம் செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட குறிப்பானை (இதுதான் உயிரினத்தின் குணக்கூறுகளைக் கொண்டுள்ளது) மாற்றுகின்றனர். எடுத்துக் காட்டாக உப்பை ஏற்கும் திறனுள்ள மரபீனிக் கூறை நெல்லுக்குள் அனுப்புவார்கள். அத்துடன் அதற்குத் துணையான புரதம் ஒன்றையும் அனுப்ப வேண்டும். அப்படிச் செல்லும் புரதம் புதிய இடத்தில் எதிர்பார்க்கும் வேலை தவிர வேறு புதிய வேலையையும் செய்து விடுகிறது. இதனால் புதுவகையான சிக்கல்கள் தோன்றுகின்றன. சாம்பியா நாட்டில் மரபீனி மாற்று மக்காச் சோளம் பலவகையான உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமானதைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாகச் செரிமான மண்டலத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு, உடலில் இருக்கவேண்டிய சில நுண்ணுயிரிகளையும் அழித்து விட்டது. பசிக்கு உணவளிக்கிறோம் என்ற பெயரில் அந்நாட்டு மக்களைப் புதைகுழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சார்லஸ் பென்புரூக் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்

நன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் - மார்ச் 2004



ஜோதிட ரகசியம்
( குமரேசன் சொல்லும் குட்டிக்கதை )

அரண்மனை ஜோசியர் வெளியூர் சென்றிருந்த சமயம் ஒரு முக்கியமான விஷயம் குறித்து வேறு ஒரு ஜோசியரை அழைத்து விபரம் கேட்டார் மன்னர்.

ஜோசியரும் மன்னரின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து 20 நாளில் பெரிய ஆபத்து நேர இருக்கிறது என்றும், அதை நிவர்த்தி செய்ய ஒரு பூசை செய்து, ஒரு ஏழைக்கு 10 பசுமான தானம் செய்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்னார். மன்னரும் அதற்கென்ன இரண்டொரு நாளில் கொடுத்துவிடலாம் என்றார்.

ஒரு நல்ல நாளில் பசுமாடுகள் தானம் செய்ய10 பசுக்களை ஏற்பாடு செய்து ஹோமம் வளர்த்து பூஜை நடந்து கொண்டிருக்கையில் வெளியூர் சென்ற அரண்மனை ஜோசியர் வந்து விட்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அரண்மனை ஜோசியர் இந்த நிவர்த்திக்கு 10 பசுமாடு தானம் கொடுத்தால் பிரச்சனை தீரும் என்று எந்த சாஸ்திரம் சொல்கிறது என்று மன்னரின் முன்னே இருந்த ஜோதிடரைக் கேட்டார். அதற்கு சமஸ்கிருதத்தில் ஏதோ சொன்னார் புதிய ஜோசியர். உடனே அரண்மனை ஜோசியரும் "சரிசரி" என்று சொல்லிவிட்டார். வந்த ஜோசியர் அரண்மனை ஜோசியரிடம் என்ன சொல்லியிருப்பார் ?

வந்த ஜோசியர் அரண்மனை ஜோசியரிடம் சமஸ்கிருதத்தில் சொன்னது ' பசு மாடுகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் ' என்பதுதான்.

நன்றி : நாடார் குலதீபம் மார்ச் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061