வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 03 - 2004

மனக்குருவி

எழுதிக் கொண்டிருந்தேன்
ஜன்னல் வழியே
அறைக்குள் பறந்து வந்தது
ஒரு சிட்டுக் குருவி.

வழிமாறி வந்ததை
உணர்ந்திருக்க வேண்டும்.
சிறகுகள் படபடக்கவிட்டு
திரும்பும் வழிதேடி
வெளியேற எத்தனித்தது.

குருவியைப் பிடித்துக்
கூண்டில் அடைத்துவிட்டால்
குழந்தை அழும்போது
காட்டி அழுகையை நிறுத்தலாம்.

குருவியைப் பிடிக்க எத்தனித்தேன்
எண்ணத்தைப் புரிந்து
கைகளுக்குள் அகப்படாமல்
மற்ற ஜன்னலினூடாக
வெளியே பறந்தது.

கைகளுக்குள் சிக்காத
குருவியை சபித்தபடி
மறுபடியும் வந்தமர்ந்தேன்.
முன்பு போல எழுத முடியவில்லை.
உடம்புக்குள் ஏதோ
பறப்பது போலிருந்தது.
என்னவாக இருக்கும்
உற்று நோக்கினேன்.

மனதுக்குள் பிடிபட்ட
குருவி வெளியேற
துடிதுடித்துச் சிறகுகளை படபடத்தது.
"என்னை வெளியே விடு"
குழந்தையாய்ச் சிணுங்கியது.
திடுக்கிட்டேன் !

- குறிஞ்சி இளந்தென்றல் -

நன்றி : மல்லிகை - கொழும்பு - பிப்ரவரி 2004



தேர்

என் வீட்டின் எதிரிலேயே நின்று கொண்டிருக்கும் அது

விடியல் நேர வாசலை
சாணமிட்டுக் கூட்டிப் பெருக்கி
குப்பைகளை அதனருகில் கூட்டி வைப்பாள் அம்மா.

பின்னிரவில் குடித்துவிட்டுவரும் அப்பா
கடவுளைத் திட்டி அதை உதைத்திருக்கிறார் பலமுறை.

ஆடிமாதத்தில் அலையும்
அடுத்ததெரு நாய்கள் கூட
கால் தூக்கிவிட்டுச் செல்லும் இதன்மேல்.

கள்ளன் போலீஸ் விளையாட்டில்
கள்ளனாய் நான் ஒளிந்திருக்க நேருகையில்
சிறுநீர் கழித்திருக்கிறேன் அதன்கீழ்.

திண்ணையில் அமர்ந்துகொண்டே
பாட்டி துப்பும் வெற்றிலைக் கழிவு
திட்டுத் திட்டாய்க் கறைபடுத்திவிடும் அதை.

தெருவில் இழவு விழுந்துவிடும் சமயங்களில்
சாராயக் கடையாய் மாறிவிடும் அதன் மறைவிடம்.

தெருக்கூத்து சமயங்களில்
இளவட்டங்களின் அமர்வு மேடையாய்
மாறிப்போகும் அதன்பாதி.

நேரம் காலம் தெரியாமல் தாண்டித் தாண்டி
விளையாடி மகிழும் வெள்ளாட்டுக் குட்டிகள்
அதற்கும் திண்ணைக்குமாய்.

இருட்டிய பின்னும் மறந்துவிடாமல்
தொலைந்துபோன பம்பரம் தேடி
அதன் மறுபுறம் சென்றபோது,
அவசரமாய் விடுவிக்கப்பட்டாள்
எதிர்வீட்டு அண்ணனின்
அணைப்பிலிருந்து அக்காள்.

எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு
அமைதியாய்க் காத்திருக்கும்
அடுத்த மாதத் திருவிழாவை எதிர்நோக்கி
எங்களூர் தேர்.

தொ. சா. குணசேகர்.
தூயசவேரியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை.

நன்றி : புதிய காற்று - மார்ச் 2004.



குறும்பாக்கள்

தூண்டில் உணவை விரும்பிய மீன்
உணவானது
தூண்டில்காரனுக்கு.

சம்மட்டியின் அடிதாங்காமல்
இரும்பு சிந்தித்தது
இனப்பற்றைப் பற்றி.

பிஞ்சை உருவாக்கிய பெருமையில்
பூமியில் விழுந்தது
பூ

மழைக்காக ஆடிய மயில்
தோகையை சுமக்க முடியாமல்
குளிரில்.

பொழுது புலர்ந்தது
புதிய
கவலைகளோடு.


டாக்டர். பழனி இளங்கம்பன், சித்திரக்கூடம், பழனி.

நன்றி : நம்மொழி - துளிப்பா சிறப்பிதழ் - மார்ச் 04



ரகசியமென்று யார் யாரோ
திணித்தவைகளை
பத்திரப்படுத்தியிருந்தேன் மூளைக்குள்
எவருக்கும் எச்சூழலிலும்
அவைகளை எங்கும்
வெளியிடப்படாதென்றும்
உத்திரவாதமாகியிருந்தேன்
பொழுதுகள் தொலைந்த ஒரு
பொழுதில்
முட்டிக்கொண்டு
என் மூளைக்குள்ளிருந்து முளைத்திருந்தன
கிள்ளியெறிய முடியாதபடி
முட்செடிகளும் விஷக்கொடிகளுமாய்.

- க. அம்சப்ரியா -

நன்றி : கணையாழி - மார்ச் 2004



நெருப்பில் காய்ச்சிய பறை

காய்ச்சக் காய்ச்ச
இறுகுகிறது எம்பறை
நெருப்பின் தகிப்பில்
பொங்கியெழும் பெருமுழக்கம்
சிறு தீண்டலிலும்
காற்றின் அணுக்களில்
பேரலையாய் அதிர்வுகள்
இசையின் திசைகளில்
கலந்திருக்கிறது எம் உயிர்
திரண்ட பறைகளின்
குமுறல்களில் பொங்கும்
யுகங்களின் கோபம்
மறுக்கப்பட்டவர்களின் மனதாக....
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக...

- அன்பாதவன் -
நெருப்பில் காய்ச்சிய பறை நூலில்

நன்றி : தமிழ்நேயம் 18.



பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் !
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பபொருட்டே ஆவேன் !

தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன் !
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன் !

சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்,
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிரு கூறாய்ப்

போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே !
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெலாம் அதுவே !


நன்றி : யாதும் ஊரே - மார்ச் 2004



வாசகர் கருத்து

இன்றைய இளைஞர்களில் பாதிப்பேர் சுவரொட்டிகளில் இருக்கும் நடிகையின் ஆடைகுறைப்பைப் பார்த்து எச்சில் வடிக்கிறார்கள். தன் வாழ்க்கையும் சுவரொட்டியாகவே இருப்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இளைஞர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டுமென்றால் தரமான, ஆபாசமில்லாத படங்களைக் கொடுக்கவேண்டும். தன் தலைவர் படத்தை 50 முறை பார்ப்பது, கொடி பிடிப்பது, அடிப்பது, உதைப்பது இதையெல்லாம் விட்டு விட்டு என்றைக்கு தனக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், சமுதாய நோக்கோடு சிந்தித்துச் செயல்படுகிறார்களோ அன்றைக்குத்தான் இளைஞர்களுக்கு உண்மையான விடியல்.

- இனியன் பாலா -

நன்றி : நம்மொழி - மார்ச் 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061