நானென்பது
வெண்மேகத்திரளிடை
பார்த்த உருவத்தையெல்லாம்
ஒப்புவித்தபோது
அம்மா சொன்னாள்
'நீயொரு ஓவியனாய்ப்
பிறந்திருக்க வேண்டியதென்று'
மார்கழிப் பனி ஏந்திய
செவ்விதழ் ரோஜாவை
ரசித்துக் கொய்தபோதெல்லாம்
தமக்கை சொன்னாள்
'நீயொரு கவிஞனாய்
அவதரித்திருக்க வேண்டியவனென்று'
அலுவலில் நடந்தேறிய
அத்தனை நிகழ்வுகளையும்
சுவாரஸ்யப் போதையேற்றி
சொல்லிக் கிடந்த இரவுகளிலெல்லாம்
தம்பி சொன்னான்
' நீ யொரு திரை இயக்குனனாய்
ஜனித்திருக்க வேண்டியவனென்று'
' கண்டதை நினைத்து
கற்பனை வளர்த்து
அலுவலில் சொதப்பி விடாதே
ஒழுங்கா பிழைக்கிற வழியைப் பார் '
வார்த்தைகளில்
திராவகம் குதப்பித்
துப்பிவிட்டுச் சென்றார் அப்பா.
சிறு பிராயத்திலிருந்தே
தொடரும் தீ வார்த்தைகளால்
பொசுங்கித்தான் போகிறது
எனக்கென்று விரியும்
ஓர் மலர் வனம்.
இப்போது எல்லா அழகியலும்
அழுதன
என் கண்களின் வழியாக.
- எஸ். சி. கலையமுதன் -
நன்றி : மன்னுயிர் - பிப் 2004
மாறுகண்
எப்படி ரசிப்பது மழையை......
ஒழுகும் குடிசைகளில்.
கிளிமொழியை அனுமதிக்குமா.....
சோளக்காட்டுக் காவல்.
பெளர்ணமி ராத்திரிகளைப்
பழிக்கிறது.....
நடைபாதைத் தாம்பத்யம்.
பூக்களும் சருகுகள்.....
காமுகன் பார்வையில்.
மார்கழியை வெறுக்கும்
செய்தித்தாள் போடும்......
சிறுவர்களின் மனசு.
இருக்கத்தான் செய்கிறார்கள் !
கவிதை பிடிக்காதவர்களும்.
- நெல்லை ஜெயந்தா -
நன்றி : மனுஷி - பிப்ரவரி 2004
சோதனை இல்லாமல் சாதனையா ?
உளிகள் தீண்டாதவரை கற்கள்
சிற்பங்கள் ஆவதில்லை.
தென்றல் தீண்டாதவரை மலர்கள்
இதழ்கள் விரிப்பதில்லை.
சூரியன் தீண்டாதவரை நீர்த்துளி
மேகம் ஆவதில்லை.
மலை தீண்டாதவரை மேகம்
மழை கொடுப்பதில்லை.
மழை தீண்டாதவரை பூமியில்
உயிர்கள் வாழ்வதில்லை.
கற்பனை தீண்டாதவரை சொற்கள்
கவிதைகள் ஆவதில்லை.
விழிகள் தீண்டாதவரை உலகில்
காதல் பிறப்பதில்லை.
சோதனை தீண்டாதவரை மனிதன்
சாதனை படைப்பதில்லை.
ம. இராசசேகரன்.
நன்றி : கண்ணியம் பிப்ரவரி 2004
தூங்கியிருந்தோர் விழித்தார்
தாழ்வுணர்ச்சி வயப்பட்டே குனிந்து நிற்கும்
தமிழ்மகனே! தென்குமரிக் கண்டம் இந்நாள்
ஆழ்கடலுள் சென்றாலும் உலகில் மாந்தன்
அங்கேதான் பிறப்பெடுத்தான், அவனே உன்முன்னோன்
வாழ்உலக முதன்மொழி உன் தாய்த்த மிழ்தான்
வடமொழியின் மூலம்அதே திராவி டத்தாய்
தாழ்வுணர்ச்சி விட்டொழிப்பாய் நிமிர்வாய் என்றார்.
தமக்குவமை இல்லா நம்பா வாணர் !
பழம்பெருமை மட்டும்அவர் பேச வில்லை
பண்பாட்டுச் சிதைவுகளை தமிழ ரைக்கீழ்
விழச்செய்த சூழ்ச்சிகளைத் துருவிக் காட்டி
வேற்றவர்யார்? நம்மவர்யார்? வருங்கா லத்தில்
எழத்தமிழர் என்னென்ன செய்ய வேண்டும்?
என்பவற்றைத் தெளிவாகக் காட்டும் நூல்கள்
தொழத்தகுநம் பாவாணர் தொடர்ந்து தந்தார்.
தூங்கியிருந் தோர்விழித்தார் எழுச்சி கொண்டார் !
முனைவர். இரா. இளவரசு
நன்றி : தமிழர் முழக்கம் - பெங்களூர்
தமிழ்நாட்டில்தான் தமிழுக்கு மதிப்பில்லை !
வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக அங்கேயே வெளியிட்டு, விலையின்றி வழங்கப்படும் தமிழ்த்
திங்களிதழ் தென்றல். அதன் அக்டோபர் 2003 இதழில், இவ்விதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான
மணி.மு.மணிவண்ணன் அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்.
" அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நம்ம ஊர் நாட்டுப்புறத்தானைப் போல நல்ல தமிழில்
பேசுகிறீர்களே!" - என்று என் தமிழைப் பார்த்து மூக்கில் விரல் வைத்தார்கள் சென்னைத் தமிழர்கள். அன்றாட
வாழ்வில் எல்லாமே கலப்படம் என்பதால், மொழி பண்பாடு இவற்றிலும் கலப்படம் வேறூண்றியிருப்பதைச்
சென்னைத் தமிழர்கள் பொருட்படுத்தவில்லை. நல்ல தமிழ் பேசினால் யாருக்கும் புரியாது என்ற சாக்கில்,
கலவை மொழியைத் தொலைக்காட்சி, திரைப்படம், வானொலிகளில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பேசும் சொற்கள். உச்சரிப்பு இவற்றில் ஒரு புதிய மொழியே உருவாகிக் கொண்டிருக்கிறது
என்கிறார் சுசாதா. வானொலியில் நல்ல தமிழ் கேட்க வேண்டும் என்றால் - அறுபது ஆண்டுகளாகத்
தமிழ் மணம் பரப்பிவரும் பிபிசி, தமிழோசை, சிங்கப்பூர் ஒலி 96.8, மலேசிய வானொலி, இலங்கை வர்த்தக
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவற்றோடு வடஅமெரிக்க ஐக்கிய ஒலிபரப்புகள் இருக்கவே இருக்கின்றன.
ஆகக்கூடி - தமிழ்நாட்டில்தான் தமிழுக்கு மதிப்பில்லை !
இதனைத் தெளிதமிழ் இதழின் பார்வைக்கு அனுப்பிய பேராசிரியர் மதனகல்யாணி சண்முகநாதன்
(அண்மையில் அமெரிக்கா சென்று வந்தவர்) அவர்களுக்கு நன்றி
நன்றி : தெளிதமிழ் திங்களிதழ் - புதுச்சேரி
காந்த உள்ளாடை மோசடி
சென்னையின் கோனிபயோவுக்கு குஜராத்தில் தடை.
மல்டி லெவல் மார்கெட்டிங். மணி லிங்க், காந்தப் படுக்கை, காந்த உடை, இவையெல்லாம் ஆசை காட்டி மோசம்
செய்யும் ஏமாற்றுத் தொழில்கள், ஆம்வே, வீகேன், கோனிபயோ, என்று பல பெயரில் இந்த மோசடிகள் நடந்து
வருகின்றன. முதலில் ஒருவரிடம் ஓர் பொருளை விற்பது, அவரிடம் மேலும் இரண்டு, நான்கு, எட்டு என
மடங்குகளில் ஆட்களைக் கொண்டுவந்தால், பெருந்தொகை லாபம் தரப்படும் என்று கூறுவது. இதற்காகப்
போலி வெற்றியாளர்களைக் காட்டுவது. பலவித கணக்குகளைப் போட்டுக் காட்டி. மாதா மாதம் பலலட்சங்கள்
வருமானம் வரும் எனக் கூறுவது இப்படியாக நடக்கும் தொழில் இது.
மனிதனது ஆழ்மனதில் உறங்கும் பேராசையைத் தூண்டிவிட்ட பிறகு இவர்களது வியாபாரம் சூடுபிடிக்கிறது.
தான் மட்டும் பணக்காரர் ஆனால் போதாது. தனது மனைவி. மக்கள் உறவினர்கள் எல்லோரையும் லட்சாதிபதி
ஆக்கும் கனவில் ஏராளமானோரைப் பலிகொடுக்கும் தொழிலாக இந்த மோசடி நடக்கிறது, இறுதியில் பல
ஆயிரங்களை, பல இலட்சங்களை இழந்து பரிதவிக்கும் குடும்பங்கள் தமிழகத்தில் பல ஆயிரம் உண்டு
....கட்டுரையை முழுமையாகக் காண படியுங்கள்
பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழ் பிப் 2004
|
|