வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 02 - 2004

திருஷ்டி பொம்மை

சிலுவைபோல் கட்டப்பட்டு
வைக்கோற்பிரி சுற்றப்பட்ட கொம்புக்கு
எசமானனுக்குப் பயன்படாத
ஒரு கைச்சட்டையும், கால் சட்டையும்
அணியப்பட்டது.

சுண்ணாம்பு பூசப்பட்ட
மண்சட்டி ஒன்றில்

கண், காது, மூக்கு, வாயெல்லாம்
வரையப்பட்டு அதன்மேல் கவிழ்க்கப்பட்டது.

சட்டி வைத்த நாள் முதலாய்க் கண் இமைக்காமல்
எதிர்வீட்டு சன்னலையே
எப்போதும் அது பார்த்திருந்தது.

சூரிய சந்திரர்கள் கூட அதை
வியப்பாகவே பார்த்துக்கொண்டு
விரைந்து போனார்கள்.

பறவைகளெல்லாம் அச்சத்தோடு
சற்று ஒதுங்கியே பறந்தன.

ஓய்வாக இருக்கும் போதெல்லாம்
நாய்கள் அதைப் பார்த்துக் குரைத்து
ஆறுதல் அடைந்தன.

கடன்பட்ட வேதனையில் வீட்டுக்காரன்
கலங்கிக் கொண்டிருக்கும் போதும்
திருஷ்டி பொம்மை மட்டும்
தெளிவாகவே சிரித்துக் கொண்டிருந்தது.

இடுக்கண் வருங்கால்
நகுதல் வேண்டும் என்பதை
தமிழர்களைப் போல் திருஷ்டி பொம்மைகளும்
தெரிந்து வைத்திருக்கின்றன.

அய்ம்புலனிருந்தும்
தாய்மொழி ஒன்றில்லை.
தாய்மொழி உணர்வுமில்லை !
இனமொன்றில்லை !
இனஉணர்வும் அதற்கில்லை
நாடில்லை,
நாட்டுப் பற்றுமில்லை.

வீட்டைப் பார்த்து வியந்து
பொறாமை கொள்ளும் பொல்லாத கண்களைத்
திசை திருப்பும் கருவியாக
திருஷ்டி பொம்மை நம்பப்படுகிறது....

ஆனல்..................
ஓலைத் தடுப்புக்குப் பின்னால்
ஒரு பெரிய கட்டடம் உருவாவதை
திருஷ்டி பொம்மைகள் தான் எப்போதும்
தெருவில் பறைசாற்றுகின்றன.

தேர்தல் முடிந்ததும் மதிப்பற்றுப் போகும்
வாக்காளன் மாதிரி
கட்டட உச்சியிலிருந்து திருஷ்டி பொம்மை
கடைசியாக இறக்கப்படுகிறது
இறக்கடிக்கப் படுகிறது....

அப்பன் மேஸ்திரியே
அதற்குக் கொள்ளி வைக்கிறான்.

இன்றைய அப்பன்களும் அவ்வாறே
தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி தந்து
அவர்களை அந்நிய நாட்டுக் கட்டடங்களுக்கு
திருஷ்டி பொம்மைகளாய்த்
தயார் செய்து வைக்கிறார்கள்.

வையவன்

நன்றி : சிந்தனையாளன் - பிப்ரவரி 2004
12 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி
குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து !


சண்டிகரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் அவர் உரையாடினார். அப்பொ ழுது மாணவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மாணவர்களிடம் கலாம் பேசியதாவது. குடியரசுத் தலைவர் பதவியேற்கும் முன் நான் ஆசிரியராகப் பதவி வகித்து வந்தேன். தற்பொழுது வகிக்கும பதவி 2007 இல் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிந்தவுடன் மறுபடியும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன். வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆசிரியர்களுக்குத் தலைமைப்பண்பு இருந்தால்தான் தோல்விகளை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெற்றி இலக்கை எட்டமுடியும்.

இலட்சியத்துடன் கனவு காணுங்கள் என்று குழந்தைகளைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகளை முன்னதாரணமாகக் கொண்டு கடுமையாக உழைக்கவேண்டும். சிந்தனையைச் சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை மாணவர்கள் எனக்குத் தரவேண்டும் என்றார் கலாம். மேலும் அவர் கூறும்பொழுது நாட்டின் தேசிய மொழி இந்தி. அது வளர்ச்சியடைந்து வருகிறது. இருந்தபோதிலும் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதே எனது விருப்பம் எனறார்.

நன்றி : ஆசிரியர் துணைவன் இதழ் 1-2-2004


குமாஸ்தாக்களை உருவாக்கிய மெக்காலே கல்வியைச் சுதந்திரம் அடைந்தபிறகு மேல்நிலைக்கல்வி எனப் பெயர் மாற்றம் தான் செய்திருக்கிறோமே தவிர, உண்மையிலேயே அது நம்மை மேல்நிலைக்குக் கொண்டு செல்கிற கல்வி அல்ல. தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். தொடக்கப்பள்ளியில் படிக்கும்பொழுதே மாணவர்கள் களிமண்ணால் பொம்மை செய்வது. பாத்திகளில் கீரைகளைப் பயிர் செய்வது. பள்ளித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்வது. தக்கிளியில் நூற்பது ஆகியவற்றைச் செய்து விரல்களைப் பழக்கவேண்டும் என்றார். காந்தியின் அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. பின்பற்றியிருந்தால் மம்மி-டாடி கலாச்சாரம் குழந்தைகள் மத்தியில் பரவியிருக்குமா ? கைத்தொழில் ஒன்றுமே தெரியாமல் ஏட்டுப் படிப்புள்ளவனாக மட்டுமே மேல்நிலைக்கல்வி முடித்த 17 வயது மாணவன் உருவாகி இருப்பானா ? 1947 இல் சுதந்திரம் பெற்ற பிறகு 1953 இல் ஒரு நல்ல முயற்சி செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சராக இருந்த மூதறிஞர் இராசாசி படிக்கிற காலத்திலேயே ஒருநேரம் படிப்பு, ஒருநேரம் உழைப்பு என்கிற ஒரு பாடத்திட்டத்தை அமல் படுத்தினார். அப்பொழுது தமிழநாடு சட்டப்பேரவையில் நானும் எம்.எல்.ஏ வாக இருந்தேன். காங்கிரசு எம்,எல்,ஏக்களான நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து ராசாசியிடம் சென்று ஒருநேரம் படிப்பு ஒருநேரம் கைத்தொழில் என்ற பாடத்திட்டத்தைத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளுக்குத் தருவதற்குப் பதிலாக, இதைப் புரிந்து கொள்ளும் வயதுள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தந்தால் நல்ல பலன் கிடைக்குமே என்றோம். ஆனால் அவர்கள் இப்பாடத்திட்டத்தை தொடக்கப்பள்ளியில் இருந்துதான் அமல் படுத்தவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். டாக்டர் மகன் டாக்டர், நாவிதன் மகன் நாவிதன் என ஆக்கும் குலக்கல்வித் திட்டம் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இவ்விளக்கத்தைக் கேட்ட பொதுமக்கள் இக்கல்வித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 1954 இல் மாண்புமிகு முதலமைச்சர் இராசாசி பதவியைவிட்டு விலகவேண்டியதாயிற்று.


நன்றி: ஓம் சக்தி மாதஇதழில் ஆசிரியர் நா.மகாலிங்கம்



பள்ளிக்குப் போன முதல்நாள்
ஒருவிரல் காட்டிப்போகத்
துணிச்சலற்று
அடக்கியடக்கி
சாப்பாட்டு மணியில்
ஒன்னுக்குப் போனபோது
இரண்டுக்கும் வந்து தொலைய
யாருக்கும் தெரியாமல்
டவுசரில் துடைத்து
வீட்டுக்குப் போகையில்
அம்மா உணர்ந்தாள்
படிப்பு வாசனை.

இரா. காமராசு - ங ப்போல் வளை நூல்.

நன்றி : செளந்தர சுகன் - பிப்,2004.



வள்ளலாரை மதித்த பெரியார்

பெரியார் ஒருமுறை வடலூருக்குச் சென்றிருந்தபோது, வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சபை மண்டபத்தைப் பார்க்க விரும்பினார். அவரை அழைத்துச் சென்றனர். உடன் சென்ற தோழர்கள் அனைவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றுவிட்டனர். பெரியார் மட்டும் வெளியே நின்றுவிட்டார். காரணம் கேட்டபோது., 'புலால் உண்பவர்கள் உள்ளே வரக்கூடாது' என்னும் அறிவிப்புப் பலகையைச் சுட்டிக்காட்டி., 'ஒரு பெரிய மனிதர் சொல்லியிருக்கிறார். புலால் உண்ணும் நான் அதை மீறி உள்ளே வருவது நல்லதல்ல' என்று கூறி உள்ளே செல்ல மறுத்துவிட்டார்.

நன்றி : முகம் - பிப்ரவரி 2004


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061