கனவு
எல்லா இளைஞர்களைப் போலவும்
அவர்களும் கனவு கண்டார்கள்
புகழைப் பற்றியும், காதலையும், அதிகாரத்தையும்
எல்லா இளைஞர்களைப் போலவும்
அவர்களும் நம்பிக்கை வைத்தார்கள்
வாழ்வின் பொன்னான வேளை குறித்து
மற்ற எல்லோரையும் போலவே அவர்களும் கண்டார்கள்
நீர்க்குமிழிகள் போலக் காற்றில் மிதந்து
தம் கனவுகள் சிதறிப்போனதை.
எதுவும் நடவாதது போல்
இப்போது
இங்கு வாழவும் கற்றுக் கொண்டார்கள்.
- ஜியார்ஜியா டக்ளஸ் ஜான்சன் -
மொழிபெயர்ப்பு : வளர்மதி , நன்றி : கவிதாசரண் (சன-பிப் 2004)
மரபு
அணிகிற பொழுதே மூன்று
உடைந்தன,
துணி துவைக்கயில் ஒன்று
உடைந்தது,
கணவனின் மிருக உந்துதலால் இரண்டு
உடைந்தன,
பேருந்து நெரிசலில் இரண்டு
உடைந்தன,
மாமியாரின் விரல்கள் பட்டு மூன்று
உடைந்தன,
மீத வளையல்களை மரபு
உடைத்து விட்டது,
மரபை உடைக்கப் பழகு.
- கபிலன் - தெரு ஓவியம்
நன்றி : அருவி காலாண்டிதழ்
தடையல்ல (முனைப்பு, உழைப்பு, முன்னேற்றம்)
படிப்பு தடையல்ல
படிக்காதவர்களும் தகுதிக்கேற்ப வேலை பெறுகிறார்கள்.
மொழி ஒரு தடையல்ல
மொழி கடந்த ஆற்றல்கள் வேலை பெற்றுத்தரும்.
உயரம் ஒரு தடையல்ல
நெப்போலியன் முதல் அண்ணாதுரை வரை
குள்ளர்களும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
நிறம் ஒரு தடையல்ல
கருப்பர்களும் வெள்ளையர்களுமாக
எல்லோரும் சாதிக்கிறார்கள்.
மதம் ஒரு தடையல்ல
இதய அறுவை டாக்டரின் மதம் பார்த்து நடப்பதல்ல.
எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்
அது ஒரு தடையல்ல.
அதை வைத்துக் கொண்டே உலகில்
ஆயிரக் கணக்கினர் வென்றுள்ளனர்.
தடையில்லை, தடையில்லை,
எந்தத் தடையும் தடையில்லை
நன்றி : தன்முன்னேற்றம் நம் பிறப்புரிமை (சன 2004)
அன்றாடத் தமிழ்ப பணிகள்
கையொப்பம் தாய்மொழியில் செய்க என்றால்
காட்டுகின்றார் மிரட்சியினைக் கண்கள் மூலம்
வையப்பா தலைப்பெழுத்தைத் தமிழில் என்றால்
வம்பேனோ செய்கின்றீர் என்கின் றாரே
மையொப்ப மிட்டுவாங்கும் கூலி தன்னில்
மனதாரத் தாய்மொழிக்கே செலவும் செய்யார்
தையொப்ப விழாவாகும் பொங்கல் நாளில்
தருகின்றார் ஆங்கிலத்தில் வாழ்த்து அட்டை.
முதன்மொழியாம் தமிழ்மொழியில் பெயரும் வைக்க
முன்வருக என்றழைத்தால் இராகு கேது
புதன்சனியாம் திசைக்கதுவும் பொருந்தா தென்பார்.
பிற்போக்கு மூலதனம் சேர்த்த தாலே
இதழ்என்ன படிக்கின்றீர் என்று கேட்டால்
இனிப்பாகும் இந்தியாடுடே என்பார் அந்தோ
சிதல்மறைப்ப அழிகின்ற நன்னூல் போலச்
சீரழியும் தமிழ் மக்கள் உய்வ தெந்நாள் ?
கலைக்கூடம் வைத்திருப்போர் கைகள் தாமும்
கலப்படமே யில்லாத தமிழில் மட்டும்
நிலைபேறாம் பெயர்ப்பலகை எழுத வேண்டும்
நிறைவான தமிழ்த்தொண்டு அதுவே யாகும்
விலைமகள் போல்காசுக்கே எழுதும் போக்கை
விட்டொழிந்தால் விண்ணுயரும் தமிழின் மாட்சி
அலையலையாய்ச் சுறுசுறுப்பைக் கொண்டு நாமும்
அன்றாடம் தமிழ்ப்பணியை நோன்பாய்க் கொள்வோம்.
- தி.ப. சண்முகம் -
நன்றி : மக்கள் செங்கோல் (சனவரி 2004)
அம்மா, ஆச்சாரம், நான்
- கன்னடக் கவிதை -
என் திருமணத்திற்கு முன்பு
பல பெண்களைப் பார்த்து எங்கம்மா
ஒவ்வொருவரையும் தன் ஒப்புதலின் உரசலில் உரைத்து -
அவள் அப்படி, இவள் இப்படி
அவளைவிட மேல் காக்கை
இவள் எல்லாம் சரி, ஆனால் நீள நாக்கு
ஒருத்தி இலங்கிணி
இன்னொருத்தி ஒட்டச்சிவிங்கினி
ஒருத்தி நின்றால் சோளக்காட்டு பொம்மை
இன்னொருத்தியின் பல் குழந்தையின் கிறுக்கல்.
என்று எல்லோருக்கும் பெயர் வைத்து -
நெடுநாள் நான் திருமணமில்லாமலே இருந்தேன்.
அம்மாவை மனதாரத் திட்டினேன்.
அம்மா மிகவும் சம்பிரதாயம்
குரான் நமாஸ் ரம்ஜான் உபவாசம்
தார்மீக ஆச்சாரங்களில் சொல்லமுடியாத ஆர்வம்
பர்தா அணியாமல் வீதியில் நடமாடும் எங்கள்
பெண்களைப் பார்த்து சிடுசிடுவென -
' அதிகம் படித்த பஜாரிகளின் தலையெழுத்தே இவ்வளவுதான்
கடவுள் தர்மங்களின் பயமில்லாமல் எள்ளவும்
ஆண்கள் எதிரில் உடம்பைக் காட்டும் அடங்காப்
பிடாரிகள் கணவனோடு வாழ்வார்களா ?
இப்படிப்பட்டவர்களை என் பையனுக்கு என்றைக்கும்
கொண்டு வரமாட்டேன் '
என்று சத்தியம் செய்து -
எப்போதும் பர்தா அணியும் கரடியை
நவீன செயல்கள் அறியாத குருடியை
கிராமத்துப் பெண்ணை மெச்சி
என்னைக் கேட்டபோது, நான் பயந்து
' நேராகப் பார்த்து ஒப்புக்கொண்ட கற்றவளைக்
கை பிடிப்பேன் ' என்றபொழுது -
' படிச்சவங்க பாழாகட்டும்
நானென்ன படிச்சிருந்தேன்டா முட்டாள் ?
திருமணத்திற்கு முன்பு பையன்
பெண்ணைப் பார்ப்பது தர்மவிரோதம்.
நாங்கெல்லாம் கண்மூடிப் பெண்ணை மெச்சி
முடிச்சி போட்டு வைப்போமா ? '
என்று வாய் அடைத்தாள்.
தன்மேல் என் அருவருப்பை அதிகப்படுத்தினாள்.
அப்பா கொடையாளன் -
' பையன் தானே தேர்ந்தெடுக்கட்டும் எதிர்கால வழி
பெத்தவங்க நாம் எதுக்குத் தடையாக வேண்டும்
அந்த யோசனையை விட்டுவிடு '
என்று எச்சரித்த பொழுது
- அம்மா, சாப்பாடு தண்ணீர் இல்லாம
பொல பொலவென அழுது
கயிறு கிணறு நெருப்புகளை உச்சரித்தபோது
வாய் மூடிக்கொண்டேன்.
அப்பா உலகமறிந்தவர் - அப்படியே அம்மாவின்
கோபம், அடத்தையும் அறிந்தவர்,
விபரீதமான செயல்
என்று தோன்றி வேறு எதுவும் தெரியாமல்
' உன் இஷ்டம் ' என்றார்.
இரவெல்லாம் அறையின் விளக்கை எரியவைத்து
சிகிரெட் பற்றவைத்து
நடமாடி உள்ளுக்குள் நொந்து கொண்டார்.
ஒருநாள் அம்மாவுக்கு ஞானோதயம்
ஆனதுபோல் இருந்தது ; சாப்பிட உட்கார்ந்தபோது
' உன் இஷ்டம் போல் படித்தவளையே கல்யாணம் செய்துக்கோப்பா '
- என்றபோது, அவநம்பிக்கை ஆச்சர்யம் மகிழ்வுடன்
பயம் வளர்ந்து கைகழுவி எழுந்தேன் வேகமாக.
அந்த இரட்டைப் பட்டதாரியின் புகைப்படத்தை
நாள் முழுக்க உற்றுப்பார்த்து
எடை பார்த்து அளந்து
விலாசம் அறிந்து நேரடியாகப் பார்த்து மெச்சி
நிச்சயதார்த்தம் சாத்திரம் திருமணம் எல்லாம் முடிந்தது
மனம் அம்மாவை மெளனமாக வணங்கியது.
முதல் முறையாக வெளியே சென்றபோது
என்னவள் தோளில்லாத ரவிக்கையை அணிந்து
கனத்த சேலையை இடுப்புக்குக் கீழே நாசூக்காகக் கட்டி
கழுத்தில் தங்கச் சங்கிலி
காலில் ஹைஹீல் செருப்பு
செவியில் விரலில் ரிங் அணிந்து
லிப்ஸ்டிக் பவுடர் ரோஸ் பூசி
திருஷ்டிப் பொட்டு வைத்து
கோபுரக் கொண்டையை முடியை இறுக்கக் கட்டி
இடது வகிடு எடுத்து
இதை எல்லாவற்றையும் மிஞ்சும்
புன்னகையைப் பூசி,
இனியென்ன வாசற்படியைத் தாண்டவேண்டும் - அப்போது
' கொஞ்சம் இருங்க ' என்று உள்ளே ஓடி,
- வந்து ' போகலாம் ' என்று சொன்னபோது
தலைசுற்றி நாக்கு வற்றி ஊமையானேன் ;
பார்த்தால் -
அணிந்திருந்தாள் எங்கம்மாவின் பர்தா !
முனைவர்: கே.எஸ்.நிஸார் அகமது - தமிழாக்கம்: முனைவர் தமிழ்ச்செல்வி
நன்றி : திசை எட்டும் - மொழி பெயர்ப்புக் காலாண்டிதழ். (சன-மார் 2004)
நன்றி : நறுமுகை - கலை இலக்கியக் காலாண்டிதழ் (சன-மார் 2004)
எது மூடநம்பிக்கை
ஒரு உண்மை தத்துவஞானி கங்கையிலிருந்து நீரை சொம்பில் மொண்டு கரையில் ஒரு குழாயில் ஊற்றிக் கொண்டே
இருந்தார். இப்பைத்தியக்காரச் செயலைக் கண்டு கும்பலில் ஒருவர் ஏனப்பா இப்படி வீணாக உடம்பை வாட்டிக்
கொள்கிறாய் எனப் பரிகசிக்க......
அந்த ஞானி "லாகூரில் இருக்கும் என் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்" எனப் பதில் அளித்தார்.
கூடியிருந்தவர்கள் இது முதிர்ந்த பைத்தியம் என நிச்சயித்து அப்பா இங்கே கரையில் நீர் ஊற்றினால் அது எப்படி
லாகூர் போகும் என்று மேலும் கிண்ட.......
அதற்கு ஞானி பொருமையாக "ஐயா நீங்கள் இங்கு கங்கைக் கரையில் நடத்தும் சடங்குகள் தேவலோகத்திற்குப்
போய்ச் சேரும் என்று எப்படி நம்புகிறீர்கள்" - என்று கேட்டார்.
நன்றி : தேசிய வலிமை இதழ் (சனவரி 2004)
நோக்கிய நோக்கு
(சிறுகதை) - தி.நா. அறிவு ஒளி - மறைமலைநகர்
ஒரு மலை. அதைச் சார்ந்த ஒரு காடு. அக்காட்டில் ஒரு குறவன். அவன் கையில் வில். மறுகையில் கூரிய அம்பு.
சற்றுத் தொலைவில் புல்லை மேய்ந்துகொண்டிருந்தது ஒரு பெண்மான். அது கன்று ஈனாத கன்னி மான். அதை
அடித்துக் கொல்ல அம்பு தொடுத்து வில்லை வளைத்தான் குறவன். குறி பார்த்தான். ஆம் ! அடுத்த நொடியில்
நாணிலிருந்து அம்பு விடுபடும். குறிபார்த்தவன் பார்வை அப்பெண்மானின் கண்ணின்மேல் பட்டது.
இதேபோல மருண்ட பார்வையுடைய கண் தன் குறத்திக்கும் இருக்கிறதே என எண்ணினான். தன் மனைவியின்
பார்வையைக் கொண்டிருக்கும் இந்த மானையா அம்பெய்து கொல்வது? கூடாது! கூடாது - என்று உடனே கையிலிருந்த
அம்பைக் களைந்தான். பெண்மான் புல்லை உண்பதிலிருந்து நிமிர்ந்து பார்த்தது. சரி, இன்றோடு நம்வாழ்வு முடிந்தது.
குறவன் வில்லை வளைத்துக் குறிபார்த்துவிட்டான். இனித்தப்ப முடியாது என மான எண்ணியது.
அதை உணர்ந்தவன் போலக் குறவன் அப்பெண்மானைப் பார்த்து 'நீ மெலலப் போ' என்று கைக்குறிப்பால்
காட்டினான். ஆம். உறவுடையாரின் உறுப்பை ஒத்த மற்றொன்றின் மீதும் அன்புறவு கொள்வது மக்கட்பண்பன்றோ!
இது ஈங்கோய் மலைக்காட்டில் நடந்தது. பதினோராம் திருமுறை நூல்களில் ஒன்றாகிய திரு ஈங்கோய்மலை எழுபது
என்னும் நூலில் பன்னிரண்டாம் வெண்பாவில் இதைப் பாட்டோவியமாகத் தீட்டியுள்ளார் நக்கீர தேவநாயனார்
என்னும் அருமைப்புலவர்.
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.
நன்றி : தெளிதமிழ் திங்களிதழ் (சுறவம் தி.ஆ.உ0ஙரு)
கலை வணங்கும் கலாம்
கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன்
குறட்பாக்களை இசையமைத்துப் பாடி, உலகிலேயே முதன் முறையாக மூன்று மணி நேரத்தில் திருக்குறள் முழுமையையும்
இசைவடிவில் கேட்டுவிடும்படியாக ஒலிப்பேழைகளில் நான் பதிவுசெய்து வெளியிட்ட சாதனையைக் கேள்விப்பட்ட
நம் பாரதக் குடியரசுத்தலைவர் மேதகு. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் என்னைச் சிறப்பு அழைப்பாளராக
அவருடைய மாளிகைக்கு வரும்படி புதுடில்லிக்கு அழைத்தார். முன் அனுமதி இல்லாமல், யாரும் எளிதில் நுழைந்துவிடமுடியாத
நிலையில் பலத்த பாதுகாப்புடன்கூடிய ஆறு நுழைவாயில்கள். அனைத்து இடங்களிலும் இராணுவத்தினரின் பலத்த
பாதுகாப்பு. இறுதியாக எங்களிடம் வெடிகுண்டுப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தியபின் அனுமதி அளித்தவுடன்,
குடியரசுத் தலைவர் மாளிகையின் காவலர்கள்போல் காட்சியளித்த - சிவப்பு உடைதரித்த இரண்டு மெய்க் காவலர்கள்எங்களை
ஒரு நீண்ட நடைபாதையில் சிவப்புக் கம்பளத்தில் நடக்கச் செய்து உள்ளே அழைத்துச் சென்று ஓர் விசாலமான அறையில்
அமரச் செய்தனர்.
மிகப்பெரிய அறையில் ஒருபக்கமாக குடியரசுத்தலைவரின் இருக்கையும், மேசையும் இருந்தன. எங்களைப் பார்த்ததும்,
குடியரசுத் தலைவர் தம் இருக்கையைவிட்டு எழுந்து வந்து, எங்கள் கைகளைப் பிடித்து அழைத்து அவருக்கு முன்பாக
அமரச் செய்தார். அழகுத் தமிழில் "வாங்க நலமாக இருக்கீங்களா ?" என்று மகிழ்ச்சியுடன் சிரித்தபடி எங்களை வரவேற்றார்.
அவருடைய எளிமையையும், தோற்றத்தையும் கண்டு எங்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவருடன் புகைப்படம்
எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே புகைப்படம் எடுப்பவரை வரவழைத்தார். அவர்
விரும்பி ஒத்துக்கொண்டால்தான் புகைப்படம் எடுக்கமுடியும். இல்லாவிட்டால் எடுக்க மாட்டார்கள். அவரிடம் நான் பாடிய திருக்குறள
ஒலிப்பேழைகளைக் கொடுத்தேன். என் தந்தையார் அவ்வை சண்முகம் அவர்கள் எழுதிய சுயசரிதை நூலான 'எனது நாடக வாழ்க்கை'
ஒரு படியையும் வழங்கினேன். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்கள்.
அந்நாளில் இராமநாதபுரம் விருதுநகர் பொருட்காட்சி போன்ற இடங்களில். தம் மாணவப் பருவத்திலேயே எனது தந்தையாரின்
நாடகங்களைக் கண்டு வியந்ததாகக் குறிப்பிட்டார். சரித்திர வேடங்களில் தந்தையாரின் கம்பீரமான தோற்றத்தையும்,
அவ்வையாராக அவர் நடித்ததையும் மிகவும் ரசித்ததாகக் கூறினார். நம்நாட்டின் பெருமைமிக கலைஞர்கள் டி.கே.எஸ்.சகோதரர்கள்
என்று குறிப்பிட்டார்.
பிறகு நான் பாடிய ஒலிப்பேழைகளில் இருந்து சில குறட்பாக்களைப் பாடச் சொல்ல, கேட்டு மகிழ்ந்தார். அவர் எழுதிய
எழுச்சிப் பாடலான "வளமான நாடாக்குவோம் இளஉள்ளங்களைப் பொறி ஏற்றியே" என்ற பாடலை மெட்டுப்போட்டுப்
பாடச் சொன்னார். நான் மோகனம் இராகத்தில் உடனே மெட்டமைத்துப் பாடினேன். மிகவும் இரசித்து என்னுடன் கூடவே
சிலவரிகளையும் பாடினார்...."உங்களுக்க ஏதாவது பரிசளிக்க வேண்டுமே இருங்கள்" என்று கூறி, "என்றும் அழியாத
இந்நூலைப் பரிசளிக்கிறேன், வளமான நாட்டை நாம் உருவாக்குவோம்" என்று சொல்லி, தாம் எழுதிய "இந்தியா 2020"
என்ற நூலை புத்தக அடுக்கிலிருந்து எடுத்து, தம் வாழ்த்துகளையும் அதில் எழுதி, அழகாகத் தமிழில் கையொப்பம் இட்டு,
என்னிடம் வழங்கினார். கள்ளமில்லாத ஒரு குழந்தையைப்போல், எப்போதும் உதிர்க்கும் அந்தப் பெருமிதமான முத்திரைச்
சிரிப்புடன், எங்களுக்கு விடை கொடுத்தனுப்பினார்.
நன்றி : புதுகைத் தென்றல் (சனவரி 2004)
இலக்கியங்கள் படிப்பதன் தேவைகள்
......சில மனிதர்களை நாம் சிந்தனைச் சிற்பி என்கிறோம். பெரியார் என்கிறோம். அவர்களை நாம் சமூகத்
தொண்டர்கள் என்பதைவிட, உழைப்பாளிகள் என்பதைவிட, அவர்களிடம் படிந்து கிடந்த மாபெரும் உண்மையை
நாம் கற்கவேண்டும். இவர்கள் எப்பொழுதும், அளவில்லாது படித்தவர்கள். பெரும் நூலகத்திற்குச் சொந்தக்காரர்கள்.
வடநாட்டில் தனிமனிதர்களின் நூலகத்தில் அண்ணல் அம்பேத்கர் நூலகம் மிகப் பெரியதென்றார்கள். தென்னகத்தில்,
தமிழகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நூலகம் மிகப் பெரியதென்றார்கள். இதில் 20,000 புத்தகங்கள்
இருந்ததெனச் சொல்லப்படுகிறது.
புத்தகங்களை இழப்பது என்பது உண்மையிலேயே குழந்தைகளை இழப்பது போன்றதுதான். தான்
சேமித்த புத்தகங்கள் கடலில் மறைந்த பொழுது, அம்பேத்கர் வாய்விட்டு ஓவென்று கதறி அழுதார். நல்ல வேளை
தாம் சேமித்த புத்தகங்கள் எப்படி மறைந்தன என்கின்ற வேதனையான செய்திகள் வெளியாகும் முன்பே சிங்காவேலர்
மறைந்து விட்டார். அந்த நூல்கள் எப்படி மறைந்தன, அழிந்தன என்பதை நேரில் அறிந்தவர்கள் நானும் நண்பர்
கிள்ளை இராஜகோபாலும் தான்.
இந்தப் புத்தகங்களைத் தன்னுடைய குடும்பத்தினர்கள் காக்கமாட்டார்கள் என்ற நுட்பமறிந்த சிங்காரவேலர்
அந்தப் புத்தகங்களையெல்லாம் பொதுவுடமை இயக்கத்திற்கு உயிலெழுதி வைத்துவிட்டார். 20,000 புத்தகங்களும்
பகத் ஹவுசிற்கும் வந்துவிட்டன. இந்த நிலையில் பல புத்தகங்கள் மூர்மார்க்கெட்டில் விற்கப்பட்டதைப் பேராசிரியர்
முத்துக் கண்ணப்பன் என்னிடம் கூறியதுண்டு. 1982 இல் நான் சென்னை வந்துவிட்ட பின்னர் பகத்ஹவுசிலே
அந்தப் புத்தகங்கள் முறையாக அடுக்கப்பெறாமல் நெல்லைப்போலக் குவிக்கப்பட்டுக் கிடந்ததை நானே
பார்த்திருக்கிறேன். 1982 க்குப் பின் பெய்த அடைமழையில் அனைத்துப் புத்தகங்களும் ஊறிக் கட்டிக் கட்டியாகிப்
பொதுவுடமை இயக்கத்தால் வெளியில் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்து நெஞ்சம் துடித்திருக்கிறேன்.
பேராசிரியர். முத்து. குணசேகரன்.
நன்றி : அறிவே துணை (சனவரி 2004)
|
|