மாற்றம்
ஆதியிலே
என தாத்தா
பொற்கொல்லராயிருந்தார்
அதைக் கற்றுக்கொண்டு
பின்பு என் அப்பா
தச்சராய் மாறிப்போனார்
பின் என் தமையன்மார்கள்
அரசாங்க வேலையே
உசிதமென்று
அதில் ஆழ்ந்து போனார்கள்
பறக்கும் பட்டம் பார்த்து
எப்படி ஆவதென நான்.
மா. கண்ணன்
கடைசி
முதலில் காற்று வந்தது
முண்டியடித்து குடங்கள் வந்தன
குடங்களோடு கூட்டம் வந்தது
கூட்டத்தோடு குழப்பம் வந்தது
சடுதியில் சண்டை வந்தது
சாவகாசமாய் போலீசு வந்தது
வரிசையாய் வழக்குகள் வந்தன.
வருடமெல்லாம் வாய்தா வந்தது
வக்கற்ற குழாயில் வரவேயில்லை
தண்ணீர் மட்டும்
கண்மணி ராசா
தொட்டிலில்
மலம் கழித்து விட்டாள்
மகள்.
கட்டிலில்
எழ முடியாமல்
என் தாத்தாவும் தான்.
எங்கள் வீட்டில்
இரண்டு குழந்தைகள்.
பெரியார் குமார்.
நன்றி :- களம் வெளியீட்டு நூல்கள் மூன்றுக்கும்
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்.
- ஈரோடு தமிழன்பன் (சென்னிமலை கிளியோபாத்ராக்கள்)
திராவிடத் தேர்
தடம் மாறியது
பார்ப்பனரிடம் வடம் - பொன். குமார் - (குறும்பா எழுதியவர்)
தடம் மாறியது
திராவிடத் தேர்
பூநூலில் வடம் - பொன்னீலன் - (குறும்பா கண்டு எழுதியவர்)
மணிகட்டிப் பொட்டல் பொன்னீலன் (இதழ் ஆய்வுச் சிறப்புக் கடிதத்தில்)
அமுதபாரதியின் குறும்பாக்கள்
இறங்கி விடு எறும்பே
சக்கரத்திலிருந்து
புறப்படுகிறது பேருந்து.
திருமணம்
சாப்பிடப் போட்டி
குப்பைத் தொட்டி.
இருபது வயது முதலாளி
அறுபது வயது பணியாளர்
வயதுகளை வெல்லும் பணம்.
எழுதிக் கொண்டிருக்கையில்
காத்துக் கொண்டிருக்கிறது
முற்றுப்புள்ளி.
நன்றி :- இனிய ஹைக்கூ இருமாதக் கவிதை இதழ் (எண் 15)
வாழ்க்கை
இயந்திர வாழ்க்கையில்
அறையப்பட்ட சிலுவையோடு நான்
அதோ எனது வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .
சம்பிரதாய ஆணிகளோடு
சடங்குக் கட்டுகளோடு.
என் வீட்டு வேப்பமரம்
பூச்சொரிகிறது.
தென்றல் தேகம் தொட்டு
நலம் விசாரிக்கிறது.
ஆனால் நான் மட்டும்,
எங்கோ.........
நான் வீட்டில் இருந்தாலும்
அலுவலகத்தில் இன்னும்
வலைகள் என்று தெரிந்தும்
வயிற்றுக்காக மாட்டிக் கொண்ட பிழைகள்..
எப்போதோ பார்க்கும் சுற்றம்
என்னைப் பார்த்துக் கேட்கிறது
வேலை செய்கிறாயா என்று ?
ஒரு நாள் கூடக் கேட்டதில்லை
வாழ்க்கையை வாழ்கிறாயா ? - என்று.
சிவபாரதி - இராமநாதபுரம்.
நட்பு
சின்ன வயதில் நம் நட்பு
எத்தனை நெருக்கமானது.
கட்டிப் புரண்டு, ஒட்டி உறவாடி,
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
நீயே நிறைந்திருந்தாய்.
அம்மாவிடம் எத்தனை முறை
அடிபட்டிருக்கிறேன்
உன் நட்பு கூடாதென்று.
பள்ளிப் பருவத்தில் கொஞ்சம்
குறைந்து போனது.
எப்போதாவது விளையாட்டு வேலையில்
தொட்டுப் பார்த்துப் பழகுவதோடு சரி.
இப்போதெல்லாம்
சந்திக்கும் வாய்ப்பே குறைவானாலும்
ஓய்வு வேளைக் கடற்கரை சந்திப்பில்
செருப்பையே சிம்மாசனமாக்கி,
விரல் நுனியில் கோடுகள் போட்டு
விசாரித்துக் கொண்டு
நாகரீக நட்பு கொள்கிறோம்.
நம் நட்பின் பரிசாக
முன்பு எப்பொழுதும் இல்லாததைவிட
முழுவதுமாய்
என்னையே உனக்குத் தந்து விடுவேன்
" மண்ணே ! " என் மரணத்திற்குப் பிறகு.
வைரமணி
நன்றி :- களரி - இதழ்
பிற நம்பிக்கை
சாமி படம் வாங்குங்க சார்
பழகிய குரலெனவே திரும்பினேன்
பதினைந்தே ரூபாயில்
எல்லாச் சாமிகளும்
சட்டங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தன.
பலர் பார்த்தனர்
சிலர் பேரம் பேசினர்
ஓரிருவர் வாங்கினர்
யாரும் வராதபோது கேட்டேன் -
" பிழைப்பு எப்படி ஓடுது "
" எங்க சார். லாட்டிரி சீட்டு
வித்தப்ப நாலு காசு நின்னுச்சி
இப்ப ஏதோ சோத்துக்குத் தள்ளுது "
பிறர் நம்பிக்கையை விற்று
வாழ்ந்த வாழ்க்கை
தன் நம்பிக்கையின் விற்பனையில்.
நன்றி :- சொர்ணபாரதி - (கல்வெட்டு பேசுகிறது - சனவரி 2004)
எது கவிதை ?
இலைக்கனத்தைத் தாங்குகின்ற மரத்தைப் போலே
இலக்கணத்தைத் தாங்குவதே கவிதை யாகும்
மலைக்கனத்தைத் தாங்குகின்ற தரையைப் போலே
மரபுதனைத் தாங்குவதே கவிதை யாகும்.
அலைக்கனத்தைத் தாங்ககின்ற கரையைப் போலே
அணிநயத்தைத் தாங்குவதே கவிதை யாகும்.
முலைக்கனத்தைத் தாங்குகின்ற இடையைப் போலே
மோனைமுதல் தாங்குவதே கவிதை யாகும்.
புதுக்கவிதை எனஇங்கே எழுத்தைக் கூட்டி
புரியாமல் எழுதுவதா கவிதை யாகும் ?
எதுகவிதை ? மரபுதனில் சிந்தை தோய
எழுதுகின்ற வீச்சிங்கே கவிதை யாகும்.
மதுக்கவிதை தந்திட்ட மாக்கவிஞர்தம்
மரபுதனில் புதுக்கருத்தின் விதைகள் தூவிப்
பொதுமையெனும் பயிர்வளர்த்துப் புரட்சி செய்யும்
போர்ப்பாட்டே புதுக்கவிதை என்று சொல்வேன்.
எதுகவிதை என்பதிலே இரண்டு போர்கள்
எதுகவிதை? விதைப்பதுதான் கவிதை யாகும்.
புதுக்கவிதை மரபுயெனும் இரண்டில் வெற்றுப்
புலம்பலெனில் இரண்டினிலும் கவிதை இல்லை.
புதுமைகளை நெஞ்சினிலே பதிய வைக்கும்
புதுநோக்கின் வித்தொன்றே கவிதை யாகும்.
புதுக்கவிதை நல்மரபோ எதிலும் சொல்லும்
புரிதலில்தான் கவித்துவத்தின் வெற்றி நிற்கும்.
நன்றி :- தேனிரா. பாண்டியன் - தும்பை கவிதை இதழ்.
கரப்பு
செத்து விட்டது என்று தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
அது நகருகிறது !
பிழைத்துக் கொண்டது உயிரென்று
ஒருகணம் ஆறுதல் பட்டாலும்
அது என் அறிவுக்கு அடுக்காத ஏளனம்.
ஏய்த்துவிட்டான் அந்தக் கடைக்காரன்
கலப்படத்தை எனக்கு விற்று.
அடுத்தமுறை அக்மார்க் பார்த்து
அசலான உயிர்க்கொல்லி வாங்கவேண்டும்.
செத்ததுபோல் இனியும் கரப்புகள்
எனை ஏமாற்றாதவாறு.
வைத்தீஸ்வரன் கவிதைகள்.
நன்றி :- கணையாழி - சனவரி 2004
பொங்கல் வாழ்த்து 2004
பொங்கல் புத்தாண்டில் நன்செய்ச்
செங்கரும்பு நெல்வாழை மஞ்சளிஞ்சி
எங்கள் தமிழ்நாட்டில் கண்டு
எங்கும் சென்றுலக நாகரிகம்
பொங்கச் செய்த மூவேந்தமள்ளர்
உழவர் குடும்பர் தேவேந்திரர் தமிழர்
வளரும் அறிவியல் ஆற்றல் பெருக்கிக்
கணினித் தகவல்த் தொழில் நுட்பத்தால்
இனிதுலகம் வாழ அறிவுலக நாயகராய்
அம்பலமறி ஆடவேண்டும் தமிழர் புகழ்
என்றே வாழ்த்தும் எமமிறைவன்
நன்றே சொன்னான் நாளை நமதென்று.
- குருசாமிச் சித்தர் - ( மள்ளர் மலர் - சனவரி 2004)
முன்பொரு நாள் நபிகள் நாயகம் மசூதியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி சீடர்கள் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அகவை முதிர்ந்த ஒரு தாய் அங்கே வந்து அவருக்கு கொடிமுந்திரிப் பழங்களை வழங்கினார்.
நபிகள் நாயகம் அன்போடு வாங்கி ஒவ்வொன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அந்தத் தாய் மிகவும் மகிழ்ந்து சென்றார்.
அவர்கள் சென்ற பின்பு சீடர்களில் ஒருவர் நபிகளை நோக்கி "ஐயா நீங்கள் எப்பொழுதும், எப்பொருளையும் எங்களுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டுத்தானே உண்பீர்கள். இன்று நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே ! " என்று கேட்டார்.
அவைரும் என்ன பதில் கூறப் போகிறார் என ஆவலோடு இருந்தனர். அதற்கு நபிகள் " இப்பழங்கள் மிகவும் புளிப்பாக இருந்தன. இதைக் கொடுத்த அந்த அம்மாவின் உள்ளம் கோணக்கூடாது என்பதற்காகவே நானே அனைத்தையும் இனிப்பானதாகக் கருதி உண்டுவிட்டேன்" என்றார்
தரவு:- அற்புதராசன் ( நன்றி :- தமிழ்ப்பாவை - சனவரி 2004)
உறவுப் பெயரில் ஊர்ப்பெயர்
ஊர்ப்பெயர்களுள் பெரும்பாலானவை இயற்கை வாழ்வியலையும், சிறுபான்மை செயற்கை வாழ்வியலையும் அடியொற்றி அமைந்துள்ளன. இவற்றுள் இரண்டிலும் இயைந்து நிற்கும் உறவு முறையினங்களின் அடியொற்றியும் ஊர்ப்பெயர்கள் உண்டு. இத்தகைய ஊர்ப்பெயர்களுள் சில....
அம்மையப்பன், அம்மையாண்டி, அம்மாப்பேட்டை, அம்மாச்சத்திரம், ஆய்ப்பாடி, ஆய்க்குடி, அன்னை நல்லூர், ஆய்க்குளம், தம்பிக்கு நல்லான் பட்டிணம், தம்பிக்கோட்டை, தம்பித்துறை, தமபிப்பாடி, தங்கச்சி மடம், அக்கச்சி மடம், அண்ணா நகர், அண்ணா மண்டபம், அண்ணாப்பேட்டை, ஐயன் பேட்டை, ஐயங்குடி, ஐயன்பாளையம், பாப்பாகோயில், பாப்பாக்குடி, மருகன் பாக்கம், மருகிப்பூண்டி, கொழுந்தியார் பேட்டை, மாப்பிள்ளைக் குப்பம், மணவாள நல்லூர், மணவாளன் பேட்டை......
இங்ஙனம் உறவுமணங் கமழும் ஊர்ப்பெயர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு, அவற்றின் பெயர்களையும், அவற்றிற்கான கரணியங்களையும் ஆய்ந்து காணும் போழ்து, நற்றமிழ் மணம் கமழ்கின்றது.
நன்றி :- நா. தண்டபாணி அம்பல் ( நன்றி :- தமிழ்ப்பாவை - சனவரி 2004)
|
|