வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 -12- 2003

மீண்டும்

அ.தமிழ்ப்பித்தன் - புனல்வேலி

திருப்பரங்குன்றிலும்
திருச்செந்தூரிலும்
திரும்ப நடக்கும்
சூரசம்ஹாரம் !
திருத்தணியிலும்
திருவேற்காட்டிலும்
திரும்ப ஓடும்
தேரோட்டம் !
முத்துமாரி அம்மனுக்கும்
பொட்டுக்காளி தாயிக்கும்
நித்தம் நடக்கும்
பூக்குளித் திருவிழா !
பூச்சரம் மணக்க
புத்தொளி பிறக்க
வீச்சறுவாளொடு
வீர கருப்பனுக்கு
ஆடு கோழி படையல் !
எல்லாத் தெய்வத்துக்கும்
எப்பவும் உண்டு
ஏழு லட்சம் செலவில்
கும்பாபிஷேகம் !
எங்க வீட்டு நிகழ்ச்சியாய்
ஏழைப் பெண் கல்யாணிக்கு
என்றுதான் நடக்குமோ
விதவைத் திருமணம் ?

நன்றி : தமிழ் நெஞ்சம் - டிசம்பர் 2003
www.tamilnenjam.com



எவ்வளவு அடித்தாலும்
பொறுமையாகவே
வண்ணாத்திக் கல்

மண்ணைப் பிளந்து
முளைத்த செடியில்
உதிரும் மலர்கள்

மழையில் நனைந்தும்
வர்ணம் கலையாமல்
வண்ணத்துப் பூச்சி

பொன். குமார் - சேலம்
மதுமலர் படிப்படி இதழில்



கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது

இரா, இரவி - மதுரை
நன்றி : மனித நேயம் - டிசம்பர் இதழ்



எதைச் சொல்லிப் புரியவைப்பது
உன் தடித்த செவிப்பறை
அடைத்த காதுகளுக்கு

கவிழ்ந்த இமைகளுக்குள்
கசியும் கண்ணீரின் கதை நிகழ்ந்திராத
உங்களின் அடக்கு முறைகளால்
அழுக்கே ஆடையாகிப் போன
எம் திமிறல்களின் அழுத்தத்தில்
அழிந்துபோகும் உங்களின் எல்லாம்

புறப்படுகிறோம்
கண்ணீர்த் துளிகளோடு அல்ல
தீத்துளிகளோடு.

யாழன் ஆதி
நன்றி : தலித் முரசு - டிசம்பர் இதழ்



தொப்புள் கொடி

உசிலை - காசி. கண்ணதாசன்

தாயமும் சொட்டாங்கல்லும்
நொண்டியும் அவளைத் திருப்திப் படுத்தவில்லை

சொர குடுக்கையை வயிற்றில் கட்டி
நீச்சல் கற்றுக் கொள்ள எவ்வளவோ
வற்புறுத்தினேன்.
'வாட்டர் ஜஸாக' இருப்பதாக
மறுத்து விட்டாள்.

நொங்கைச் சீச்சிக் கவட்டை செதுக்கி
வண்டி செய்தேன்
கால் வலிக்கிறதென்றாள்.

பொன் வண்டுகளைத் தீப்பெட்டியில் அடைத்து
ஆச்சர்யப்படுத்தினேன்.
அருவருப்பாய் ஒதுங்கினாள்.

பபூனின் காமெடியைப் பெரிதாய்ப் பேசி
'பவளக்கொடி'க்கு அழைத்துப் போனேன்
சிரிக்காமல் படுத்துத் தூங்கிவிட்டாள்.

என் ஆத்தாவிடம் கேட்கிறாள்
'கார்ட்டூன் நெட்வொர்க் கனெக்ஷன்
' இல்லையாயென....

என் கிராமத்தைப் பிடிக்கவில்லையாம்
என் மகளுக்கு

எம்.ஜி.எம். க்குக் கூட்டிப் போக
வக்கில்லை எனக்கு,

நன்றி : கலை(26) டிசம்பர் இதழ்



நெகத்தை வெட்டி
வீட்டுல போடாதடா மொளச்சிடும் !
நகத்தை வெட்டும் போதெல்லாம்
அம்மா சொல்லுவாள்.

நீ
வெட்டிப்போட்ட நகங்களை
என் வீட்டுக்குள் நட்டு வைத்தேன்

ஆனால்....
நகங்கள் வளரவில்லை.
உன் ஞாபகங்கள் வளர்ந்தன.

பெரம்பூர் - குமரேசன்
நன்றி : நறுமுகை - காலாண்டிதழ்.



புனைவு

வெ. கன்னியப்பன்

இறைவனும் இறைவியும் பூலோகத்திற்கு வந்தார்கள். ஒரு சிறுவன் மரத்தின் மீது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். பார்த்த இறைவி பதற்றமானாள்.

"ஐய்யோ கிளை முறிந்தால் சிறுவனும் விழுவானே" என்று துடித்தாள். "அமைதியாக இரு தேவி. பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும்" என்றார் இறைவன். "அது சரி சாமி. அவன் சிறுவன் சாகும் வயது இதுவல்லவே" என்றாள்,

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு விதியின் விளையாட்டு உனக்குத் தெரியாதா என்ன? " "இல்லை சாமி அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" எனக் கெஞ்சினாள் இறைவி.

"சரி, கீழே விழுபவன் அம்மா என்று அலறினால் நீ போய் தாங்கிப் பிடி. அப்பா என்று அலறினால் நான் போய் தாங்கிப் பிடிக்கிறேன்" என்றார் இறைவன். உடன்பாடு ஒப்புதலானது.

அந்நேரம் மிகச் சரியாகக் கிளையும் முறிந்தது. சிறுவனும் கீழே விழுந்தான். செத்தான்.

இறைவனோ, இறைவியோ காப்பாற்றவே இல்லை. ஏனென்றால் சிறுவன் 'மம்மி' என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான்.

நன்றி : நறுமுகை - காலாண்டிதழ்.



தமிழர்களும் கணினிப் பயன்பாடும்

நா. நந்திவர்மன். திராவிடப் பேரவை, புதுவை.

தமிழ்மொழி வழியே கணினியைப் பயன்படுத்தவேண்டும். தமிழ் அறிஞர்கள் நூல்களை எழுதி அச்சிட்டு நூலகத்திற்கு அனுப்பிவிட்டால் மட்டும் தமிழ்மொழி வளர்ந்து விடாது. உலகின் பல நாடுகளில் இருக்கும் அறிஞர்களும் தமிழ் ஆய்வாளர்களும், இந்த நூல்களைத் தேடிப்படிக்கத் தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை. நூல் வெளிவரும் போதே இணையத்திலும், தங்கள் நூல்களைப் பதிவு செய்யவேண்டும். குறுந்தகடுகளிலும் வெளியிடவேண்டும். ...... ஆங்கிலக் காதலால் தமிழுக்குள்ள பெருமையைத் தமிழர்கள் அறியாது உள்ளனர். ஆங்கில மொழியின் உயிரெழுத்துகளின் ஒலி ஒரே சீராக இருப்பதில்லை. put என்ற சொல்லில் u என்ற உயிரெழுத்து உ என்றே ஒலிக்கப்படுகிறது, but என்ற சொல்லில் அதுவே அ என ஒலிக்கப்படுகிறது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் மட்டுமின்றி. ஒலிப்பும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் மொழி அகராதிகளில் சொல்லுக்குப் பொருள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். ஏனெனில் தமிழ் ஓர் ஒலியலியன் மொழி. (Phonemc Language) அதனால் தமிழில் எழுத்தும் ஒலிப்பும் வேறுபடுவதில்லை. இத்தகு சிறப்பு உலகில் தமிழுக்கு உள்ளபோது தமிழர்கள் கணினியில் தமிழைப் பயன் படுத்தத் தயங்குவது ஏன் ?........

நன்றி : தெளி தமிழ் - திருவள்ளுவர் ஆண்டு 2034, சிலை 1


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061