வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 -12- 2003

தமிழ் இன்பம் டிசம்பர் இதழில்

மேட்டுக் குன்னத்தூர் சேகர்

குடிநீரை வீணாக்காதீர்கள்
வீணாக்கிச் செ(ா)ல்லும்
தண்ணீர் வண்டி.

பட்டமரம்
துளிர் விடுமா ?
இலையில் கிளி.



பாதை படப்படி இதழில்

வெற்றிப் பேரொளி

இடைமறிக்கின்றன
நிறைய கேள்விகள்
தாண்டி வந்துகொண்டிருக்கிறேன்
பதிலே இல்லாமல்.



புதிய ஆசிரியன் டிசம்பர் இதழில்

மழையூர் வி. தமிழரசன்

அலுவலகங்கள் நகர்ந்தன
கோப்புகள் நகரவில்லை
அரசாங்கம்



விழுது ஆசிரியர் இணைய இதழில்

கரும்பலகையில் எழுதாதவை நூலில் பழ.புகழேந்தி

சார்.....
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்

சார்.....
உடனே மற்றொருவன்
அதட்டினேன்

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்.

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது.
என் அதிகாரம்.



இன்று இதழ் 4 இல்

வெட்கமாய் இருக்கிறது - ஆலங்கரை பைரவி

விளை நிலங்களின் ஈரங்களை
கான்கிரீட் மரங்கள்
உறிஞ்சி விட்டன.

ஆறுகளின்
ஊற்றுக் கண்களை
சாக்கடைகள் அடைத்து விட்டன.

மழை தரும் மரங்கள் எல்லாம்
கதவு நாற்காலிகளாய்
நிற்கின்றன.

அட்சய பாத்திரங்களை
அழித்து விட்டு
திருவோடு கட்டி வைத்து
காத்திருக்கிறோம்
மழை நீருக்காக,



நம் மொழி மார்கழி இதழில்

முகிலை இராசபாண்டியன்

கட்டம் போட்ட சட்டை
அதற்குப் பொருத்தமாய்
முழுக் கால் சட்டை.

இடது கையில் எச்.எம்.டி,
வலது கையில் புத்தகம்
ஐந்து மையிலுக்கு அப்பால் உள்ள
கல்லூரிக்குச் செல்ல
புது மிதிவண்டி.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
நான் பட்டதாரி.
என் தந்தையிடம் இருந்து
கைமாறிப் போயிருந்தது
இருந்த ஒரே ஒரு வயல் பட்டா.



விடியல் வெள்ளி - டிசம்பர் இதழின் கட்டுரையில்,

நீ ஒரு நாயை வெறுமனே திடீரென்று சுட்டால், நாலு பேர் அதன்மேல் அனுதாபம் காட்டுவார்கள். உன்னை அநியாயக்காரன் என்பார்கள். சிலர் தட்டிக் கேட்பார்கள். அதனால் நீ அந்த நாயைச் சுடுவதற்கு முன்னால் அதை வெறிபிடித்த நாய் எனப் பிரச்சாரம் செய். முதலில் நம்ப மறுப்பார்கள். தொடர்ந்து சொல்லிக் கொண்டே இரு நம்புவார்கள். அந்நிலையில் அந்த நாயை நீ சுட்டுக் கொன்று விடு. உன்னை யாரும் கேட்க மாட்டார்கள். மாறாக வெறிபிடித்த நாயை ஒழித்துக் கட்டியவன் என உன்னைப் பாராட்டுவார்கள்,




அன்பு வணக்கம் இதழின் தலையங்கத்தில்,

தமிழ்ச் சமுதாயம் தலைவனற்ற படையாக, மாலுமியற்ற மரக்கலனாகப் பயனற்றுக் கிடக்கிறது. சிலர் அமிலச் சொற்களால், கவிதைகளில், கட்டுரைகளில் தமிழ் இனத்தின் செயல்படாத் தன்மையைச் சுட்டிக் காட்டியவாறுள்ளனர். சில மூத்த, முதிர்ந்த புலமையாளர்கள் குறை சொல்வதும் வழிகாட்டுவதும் கூட மதிப்புக் குறைவென எண்ணித் தவிர்த்துத் தனித்து நிற்கின்றனர். இவ்விரண்டு பார்வைகளையுமே தவிர்க்கலாம். தமிழினம் தலைநிமிர, ஆடம்பர உலகில் தமிழ் இழந்து நிற்கிற மாண்பைப் பெற்றிட வழிகள் எவை எனக்கேட்டு நிற்கிறது தமிழினம். செயலாற்றும் மனங்கொண்டவர்கள், வசைகளைக் கேட்டு வாடிக் கிடக்கிறார்கள். பழமைத பாடியது போதும், பழி கூறியதும் போதும். மாற்றுவழிச் சிந்தனைகள் எழுந்து நிற்கட்டும். ஆற்றவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டட்டும். பாதைகள் நம்மின் பாடுபொருளாகட்டும். எழுதுகோல்கள் கைகாட்டி, உழைத்துக் கடமையாற்றட்டும்



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061