வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 02 -11- 2003

தாத்தாவும் கோழிக்குஞ்சுகளும்
- வெத்தியப்பன் -

காலையில் முதல் வேல
கோழிக் குஞ்சுகளுக்கு
இரைபோடுவதுதான்,
முட்டை எடுத்து வைப்பது....
அடை ஓடு தயார் செய்வது....
சாயங்காலமாய்
குஞ்சுகளுக்குக் கரையான் காண்பிப்பது...
தாத்தா
கோழிக்குஞ்சுகளுக்காகவே
வாழ்வதாய்ப்பட்டது!
கம்பிப்பஞ்சாரம்
பின்னுவதுதான்
பொழுதுபோக்கு!
போனவாரம்
பெய்த மழைக்கு
தாத்தா
படுத்த படுக்கையாயிட்டார்!
கோழிக்குஞ்சுகளும்
சீக்கு வந்து செத்துப் போனதில்
மிஞ்சியது
இந்த பொட்டைக்கண்ணு
குஞ்சு மட்டும்தான்.....
அதுவும் இன்று போகிறது
தாத்தா கூடவே....
சனிக்கிழமை செத்த பொணத்துக்குத்
துணைப் பொணமா!

நன்றி : பயணம் புதிது - அக்டோபர் 03


ஆண்டுக் கட்டணம் அனுப்பாமல் இருக்கும்
படிப்பாளிகளைப் பார்தது
நாடார் குலதீபம் இதழாளர் எழுதியுள்ள பாடல்..........

வாசகரே கேட்பீர் !

தாள்சுற்றி இதழ்வந்தால் தரவேண்டும் சந்தாவென்று
நாள்முற்ற விடாமல் நமக்கதனை அனுப்பிவைப்பீர்
ஆள்சுற்றம் அத்தனையும் அணுகிமிக ஓய்ந்துவிட்டேன்
நீள்சுற்று வழிதாண்டி நேரில்வந்தால் செலவன்றோ !

நன்றி : நாடார் குலதீபம் - அக்டோபர் 2003



கண்ணகி புரட்சிக் காப்பியத்தில்
கண்ணகி கோவலன் திருமணத்திற்கு வந்தவர்களாக
பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்ட தமிழ்ப்பெயர்கள்

அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன்
ஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லாள்
தென்னழகு தமிழப்பன் முத்து முல்லை
தேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன்
பொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன்
புத்தமுது தமிழரசு தங்கம் சோழன்
இன்பத்தேன் இளவழகன் ஒளவை வேந்தன்
இருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி.....


திருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல்
தேனருவி அருளப்பன் தோகை பாரி
மருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல்
மல்லிகை மாவளவன் காவேரி சிங்கம்
கரும்புபெருந் தகைமுத்துப் பந்தல் சேந்தன்
கயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன்
முருகாத்தாள் புகழேந்தி தேனீ மானன்
முத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன்


அழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல்
ஆரமுது தமிழ்த்தொண்டன் இலந்தை பொன்வேல்
மழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி
மணியம்மை பொன்முடிதே னாறு தென்னன்
மொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன்
முத்துநகை மாவரசு முதலி யோரை
அழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள்
அணியணியாய் அனைவருமே உட்சென் றார்கள்.

நன்றி : நமது தமிழாசிரியர் - தி,ஆ,2034 துலை


சுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் நூலில்
தோட்டக்கலை அதிசயங்கள்

253. புளி மரமாகாமல் கொடியாகப்படர
திரிபலத்துடன் எள், பார்லி, உளுந்து கலந்து
நீர்விட்டு, மஞ்சள் தூளிள் புகைமூட்டம் காட்டுக.


254-258. விளாம்பழ விதையை எடுத்து
அதை நெல்லி, காட்டு இஞ்சி, கடுக்காய், காக்கரட்டை,
வேதசம், அஸ்மபம், மாதவி, பலாசினி என்ற
அடிட்மூலத்தில் (எட்டுவேர்கள்)
பால் ஊற்றிக் காய்ச்சியதில் நூறுமுறை நேர்த்தி செய்க.
ஒரு மாதம் செய்க.
அப்படி நேர்த்தி செய்த விதையை
நெல், தேன், பசுவிரட்டிச் சாம்பல், எள்,
வாயுவிளங்கம், பன்றி மாமிசம் ஆகியவை இட்டு
நீர் பாய்ச்சிய குழியில் நட்டு
நாலுவிரல் கனத்திற்கு மண் இடுக.
பார்லி, உளுந்து, எள், தேன், மீன், மாமிசம்
காய்ச்சிய கசாயத்தில் நீர் கலந்து
ஊற்றி வந்தால் மரமாகாமல் விளா கொடியாகும்.


261. ஒரு ஆள்மட்டத்திற்குக் குழிவெட்டி அதனுள்
வட்டமாகப் புதிய செங்கல் கட்டி மண்நிரப்பி
அதனுள் மரக்கன்ளை நட்டு ஒரு மனிதன்
நம்பிக்கையுடனும் முயற்சியுடனும் வளர்த்தால்
மரம் குள்ளமான வளர்ச்சிகளிலும் பூத்துக் குலுங்கும்.
(ஜப்பானிய போன்சாய் நமக்குப் புதியதல்ல)


265. பல நிறமுள்ள தாமரைத் தண்டுகளை வேருடன்
பிடிங்கி கிழங்குகளை ஒன்றாய் இணைத்து
நூலில் கட்டி உருக்கிய வெண்ணையையும்
தேனையும் கிழங்குகளில்தடவி ஒரே கொடியாக
நடுவீர். அப்போது, ஒரே கொடியில்
பல வண்ணத் தாமரை மலரும்.

நன்றி : ஸ்பைசஸ் இந்தியா - அக்டோபர் 2003



ஊற்று அக்டோபர் இதழில்
அஞ்சா நெஞ்சினரே! ஆசிரியப் பெருமக்களே!...
தொடரில் ப. இளவழகன்...........

.......மொழி என்பது ஓரினத்தின் இதயநாளம். இரத்த ஓட்டம். கெட்டிக்காரர்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஒரு மொழி முடக்கப்பட்டால் அம்மொழி சார்ந்த இனமும் நாளடைவில் முடங்கிப் போகும் என்பதைத் தெளிவுறத் தெரிந்து கொண்டு இருப்பதால்தான் இனத்தின் முகவரியை இல்லாமல் செய்வதற்கு மறைமுகத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மொழிச் சிதைவு, மொழியழிப்புப் பணிகளில் முனைப்புகள் காட்டப்பபடுகின்றன. வாழைப்பழத்தில் ஊசி செருகுவதைப் போன்றே பணிகள் பலவழிகளிலும் பல துறைகளிலும் தொடர்கின்றன. தமிழர்தம் வீடுகளில் தமிழோசை குன்றுகிறது. தமிழர்தம் நாவினிலே பிறமொழிச் சொற்கள் பதியமாகின்றன. அதைச் சொல்லியாக வேண்டிய சூழ்நிலை உருவாக்கப் படுகிறது. காலப் போக்கில் தமிழர்கள் தமிழ்ச் சொற்களை இழக்கவும் தாய்மொழியையே மறக்கவுமான கேடு சூழ்கிறது.......


www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061