வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 19 -10- 2003

அக்டோபர் 2003 பாதை படப்படி இதழில்

அம்பல் மாதவியின் கவிதை

கிடாவெட்டி
கறிச்சோறு ஆக்கி
சாராயமும் சுருட்டும்
வைத்து படைப்போம்
சுடலை மாடனுக்கு.

அரிவாளுக்கும்
ஆட்டுக்கும்
இடையில்
அரசாணை
தடுத்து நிற்க

நேர்ந்து விட்ட கிடாயை
மோதிச் சிதைத்த லாரியில்
எழுதப்பட்டிருந்தது
" சுடலை மாடன் துணை "


திசையெட்டும் அக்-டிச 2003 காலாண்டிதழில்.

கால் - கவிதை - கே. சச்சிதானந்தன்.
( தமிழில். டாக்டர் டி.எம்.ரகுராம் )

காசியில், அரிச்சந்திர மயான கட்டத்தின் சாம்பலில்.
முற்றிலும் வேகாமல் கிடக்கும் இந்தக் கால்.
எந்த உடலுக்குச் சொந்தமோ ?.

எத்தனை முகாம்களிலும் ஆசிரமங்களிலும்.
மனநிம்மதி தேடி இது அலைந்ததோ ?.
பாலுணர்வுகளின் பாரத்தை இறக்கி வைக்க.
எத்தனை வேசியர் இல்லங்களில் ஏறி இறங்கியதோ ?.

கிராமத்து வயலில்.
ஏர் பூட்டிய மாடுகளுக்குப் பின்னால்.
அறுவடை நாளைக் கனவு கண்டபடி இது வேகமாய் நடந்ததோ !.
நகரத்து ரயில் நிலையத்தில்.
ஒரு துண்டு ரொட்டிக்காக இது அலைந்து திரிந்ததோ ?.

பானையும் குடமும் செய்யச் சேற்றைக் குழைத்து.
இதன் தசைகள் துவண்டு போயிருக்கலாம்..

நீதி கிடைக்கவென கோர்ட்டு கோர்ட்டாக அலைந்து.
இதன் எலும்புகள் நொறுங்கி யிருக்கக்கூடும்..
மரணப்படுக்கைக்கும் பிரசவப்படுக்கைக்கும் காவல் நின்று.
இதற்கு தள்ளாட்டம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.
எத்தனையோ வாழ்வுகளையும் மிதித்துத் தேய்த்திருக்கலாம்..

அதுவுமில்லையெனில் விளையாட்டுத் திடலிலோ .
நடன மேடையிலோ,.
ரசனையும் பக்தியும் கலந்த கண்கள் பின் தொடர்ந்த.
காலாகவும் இருக்கலாம் இது..

இதன் ஒவ்வொரு காயத்துக்கும், தழும்புக்கும்.
ஒவ்வொரு சோகக் கதையுண்டு, சொல்ல,.
இமயமலையில் குளிர்ந்து நடுங்கியும் .
கொடும் கோடையில் வெந்து கருகியும்.
இறுதியில் இது கங்கைக் கரைக்கே வந்து சேர்ந்தது..
உடலுக்கும் தலைக்கும் மோட்சம் கிடைத்தது..

இந்தக் கால் மட்டும் இன்னமும் சூரியனுக்குக் கீழே.
நெருப்புக்கும் நீருக்கும் சமமான இடைவெளியில்.
அடுத்த ஜென்மத்துக்கான தூரத்தைக்கண்டு.
பிரமித்து, திணறி.................


கல்ஓசை அக்டோபர் 2003 இதழில்

இடிதாங்கி - கவிதை - பெ. வேலு -


போன மாதம்
கோழிவெல நூறு ரூவா !
காளியாத்தாளுக்கு அறுக்க
தீர்த்தக் காணிக்கை
ஒரு ரூவா தான் !

இந்த மாதம்
கோழி எண்பதுக்குக் கிடைத்தது
காணிக்கை மட்டும்
இருபத்தைந்தாம் !

அடடே,
எந்தச் சட்டம் வந்தாலும்
விலைவாசி இடிப்பது
எங்களைத்தான் !


தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் இதழில்

மனு - கவிதை - காசி ஆனந்தன்

அவன்
சொன்னான்
சிந்திப்பது
எங்களுக்கு எளிதாக இருக்கிறது.....

நாங்கள்
தலையில் இருந்து
பிறந்தவர்கள்....

அவனை
ஓங்கி உதைத்த
இவன் சொன்னான்
உதைப்பது
எங்களுக்கு
எளிதாக
இருக்கிறது.....

நாங்கள்
காலில் இருந்து
பிறந்தவர்கள்.....


உயிர்மை அக்டோபர் 2003 இதழில்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

ஒரு மரத்தை வெறுக்கும்போது.
----------------
நாம் ஒரு மரத்தை வெறுக்கும்போது
முதலில் ஒரு இலையிலிருந்து
தொடங்க வேண்டும்.

நாம் வெறுக்கும்போது
கருகும் ஒவ்வொரு இலைக்கும்
நாம் விளக்கமளிக்க வேண்டும்
ஒவ்வொரு விளக்கத்திற்குப் பிறகும்
நம் வெறுப்பு நேர்த்தியாகிக் கொண்டே வரும்.

மரத்ததை வெறுக்கும்போது
வசந்த காலங்களில்
வெறுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும்
மலர்களின் நிறங்கள்
நம் வெறுப்பை உறுதியிழக்கச் செய்யும்
அதன் வாசனை
நம்மைப் பின்வாங்கத் தூண்டும்.

வெறுக்ககப்படும் ஒரு மரத்திலிருந்து
அதன் பறவைகள் தப்பிச் செல்லவே விரும்பும்
நாம் அதன் அலகுகளைத் திறந்து
வெறுப்பபைப் புகட்ட வேண்டும்
பிறகு அவை தம் வெறுப்பை
வேறொரு மரத்திற்கு எடுத்துச் செல்லும்.

வெறுப்பினால் அழியும்
ஒரு மரத்தின் புழுக்கள்

நம் உடல்களில் தொற்றிக் கொள்ளும்
நம் வெறுப்பின் தசைகளை
அவை தின்று வாழட்டும்.

நாம் வெறுக்கும் மரத்தின் கிளைகளில்
ஒரு மனிதனைத் தூக்கிலிட வேண்டும்
இரவெல்லாம் ஒரு மாய அழுகுரலின் சாபம்
அம்மரத்தைச் சூழ்ந்திருக்க வேண்டும்.

ஒரு மரத்தை எவ்வளவுதான் வெறுத்தபோதும்
தரையில் அசைந்து கொண்டிருக்கும்
அதன் நிழல்களை
நம்மால் ஏன் தீண்ட முடியவில்லை.
என்பதை நாம் சற்றே யோசிக்க வேண்டும்.


அருணன் 5-10- 2003 இதழில்

வேற்று கோள்களில் புது உலகம் படைக்கலாம் ! - செய்தி

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்து சாதனை படைத்துவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நிர்வாகி க.மு.இனியன், தண்ணீரை மட்டுமே குடித்து வாழமுடியும் என்பதை மெய்பிக்கவும், அதன்வழி வேற்றுக் கோள்களில் புதுஉலகம் படைக்க முடியும் என்பதையும் நிருபித்து வருகிறார்.


மனிதனுடைய தேடல் எல்லையற்றது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகள் தேடலில் கிடைத்த வெற்றிதான் இந்த உணவில்லாமல் வாழும் கலை (அ) நீர் உணவு முறை. இநத வகை ஆராய்சிமுறையானது 8 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு கோட்பாடாக அவரது ஆசான் வெங்கடேசன் என்ற பொறியாளரால் க்ணடுபிடிக்கப்பட்டு நூல்வடிவில் வெளிக் கொணரப்பபட்டுளளது. பழந்தமிழ்ச் சித்தர்கள் மேற்கொண்டு வாழ்ந்த இந்த வாழ்வியல் முறையை க.மு.இனியன் தற்பொழுது செயற்படுத்திக்காட்டி வருகிறார்.


சுற்றுச் சூழல் புதிய கல்வி அக்டோபர் 2003 இதழில்

வேளாண் தொடர் - 05
கல்லணை - தமிழரின் பெருமை - பாமயன் கட்டுரையில்.......

......பண்டைக் காலத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்பொழுது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்டம் மணலை அரித்துக்கொண்டு போக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும்.


இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப்பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறையை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும் பொழுது இரண்டு பாறைகளுககு இடையில் ஒரு வகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர்.


தஞ்சைப் பகுதியில் பெரும் பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது திருச்சி பகுதியில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டு வர வேண்டும். இத்தகைய இடர்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பபட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும பெருமையாகவும் உள்ளது,



எழுகதிர் அக்டோபர் 2003 இதழில்

புலவர் நா.தண்டபாணி, அம்பல் எழுதிவருகிற தொடரில்.....
தமிழிலிருந்து சமக்கிருதமாக மாற்றப்பட்ட
திருக்கோயில் இறைவன் இறைவி பெயர்கள் பட்டியலில் ஒருசில.........

சிதம்பரம் - சித்திரக்கூடன் (கோவிந்தராசப் பெருமாள்), தாமரைக் கொடியாள் (புண்டரீகவல்லி)

வயிந்திபுரம் - அடியார்க்குமெய்யன் (தாசசத்தியன்), வைகுண்டநாயகி (ஹோம்புஜவல்லி)

அத்தியூர் - பேரருளாளன் (வரதராசன்), பெரியதாயார் (ஸ்ரீபெருந்தேவி)

திருவேளுக்கை - அழகிய சிங்கன் (முகுந்த நாயகன்), வேளுக்கைவல்லி (அமிர்தவல்லி)



www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061