இதழ் எண்: 80
14 செப்டம்பர் 2008


அன்புடையீர். வணக்கம்,

இணையதளத்தில் கிடைத்த அரிய தகவல் களஞ்சியம் சேலம் மாணிக்க நாயக்கர் பற்றிய செய்தி - இதன் முதன்மை கருதி இதனை சிற்றிதழ்ச் செய்தி இதழில் வெளியிடுகிறேன்.

அதிகாலை இணையதளம் அன்போடு என்னை நேர்காணல் செய்தது. அந்த இணையதளத்தில் - என்னுடைய நேர்காணல் செய்திகள் - எழுத்திலும் - ஒலிவடிவிலும் உள்ளன, கேட்டு மகிழுங்கள், இதற்காக நான் எழுதிய கட்டுரையை இங்கே வெளியிட்டுள்ளேன், இதுவரை என்னைப் பற்றி நான் எழுதவில்லை. அந்த இணையதளத்தின் நேர்மையான உழைப்பு என்னை எழுத வைத்தது, அதன் விளைவாக உருவாக எழுத்துப் பதிவை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்,

மிக முக்கியமான செய்தி இது. மின் நூலகம் - என்பது படிப்பதாகவும், கேட்பதாகவும் - அமைய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர் - அதுவும் சரியானதே - அதற்கான பல்வேறு முயற்சிகள் பலராலும் எடுக்கப்பட்டு வருகிறது, அதுவும் வணங்குதற்குரியதே....

பழைய கிடைத்தற்கரிய நூல்களைத் தட்டச்சு செய்து மின்நூலாக்குவது என்பதை விட அந்த நூல்களை அப்படியே அதன் வடிவத்திலேயே - அந்த எழுத்திலேயே - அந்த அமைப்பிலேயே - மின் நூல்களாக்கிப் பாதுகாத்தால் - சிறப்பாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன், இது பின்வரும் தலைமுறையினருக்கு மிகப் பெரிய சான்றாவணமாக இருந்து வழிநடத்தும், இதற்கான பல்வேறு தொழில் நுட்பங்களைத் திரட்டி வருகிறேன். தற்பொழுது எனக்குக் கிடைதத தொழில் நுட்பங்களைக் கொண்டு - 1948 இல் வெளியான சிறுவர் இதழான "டமாரம்" இதழின் 8 பக்கங்களை - அப்படியே Scan செய்து - jpg -வடிவக் கோப்புகளாக்கி - பிறகு அதனை pdf வடிவாக ஆக்கியுள்ளேன், இதில் கவனிக்க வேண்டியது.. பக்கம் பெரியதாகும் பொழுது எழுத்துகள் உடையக் கூடாது. மேலும் அதற்கான சேமிப்பு இடம் மிகக் குறைவாக இருக்க வேண்டும், பக்கங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும். இந்த அளவுகோல்களை வைத்துக் கொண்டு நான் தேடி வருகிறேன். இப்பொழுது உருவாக்கியுள்ள இந்தக் கோப்பு 2,18 எம்பி அளவுள்ள இடத்தை நிரைத்துள்ளது, இதைவிடக்குறைவான அளவில், எழுத்துகள் உடையாமல் வரும் வகையில் தொழில் நுட்பம் இருந்தால் தெரிவிக்கவும். என் தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களையும் இந்த வகையில் பதிவாக்கி - இலவசமாக - இணையத்தில் அனைவரும் பெறுமாறு வைக்க விரும்புகிறேன் - எனவே உதவவும், டமாரம் இதழை பெற சொடுக்கவும்

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
14 - 08 - 2008


மாணிக்க நாயக்கர்

கட்டுமானப் பொறியியல் அறிஞர்

மாணிக்க நாயக்கர் - சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் - முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

மறைமலையடிகளார் தொடங்கிய "தனித்தமிழ்" இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். இவர் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றியபோதும் இவரது மரபுநிலை காரணமாக இயற்கையிலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
சுத்தானந்த பாரதியார்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய உமாமகேசுவரனார்,
ஈ.வெ.ரா.பெரியார்,
நாமக்கல் கவிஞர்,
மு.இராகவையங்கார்,
ஆபிரகாம் பண்டிதர்
முதலியோர் நாயக்கரின் சமகால அறிஞர்கள் ஆவர்.


மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றியபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம். 1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். வட ஆந்திர நாட்டிற்கு இவர் மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மாநாட்டைக் கூட்ட இயலவில்லை.

பல அறிஞர்களின் தொடர்பு இவருக்கு இருந்ததால் நாயக்கர்

அறிவியல் சிந்தனை,
தமிழ் ஒலி இலக்கணம்,
தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்,
ஆயுத எழுத்தைப் பயன்படுத்தி எல்லா மொழிச் சொற்களையும் எழுதுதல்,
விலங்கியல் தொடர்பான அறிவு
போன்றவை அவரிடம் அமைந்திருந்தன.


"தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்," என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 - 24ல் "செந்தமிழ்ச்செல்வி" இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.

தமிழகம்,
அறிவியல் தமிழ்ச் சொற்கள்,
வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை,
கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்
ஆகிய கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி திங்களிதழில் வெளிவந்தன.
"அறிவியல் தமிழ்" பற்றிய சில தொடர்கள் "தமிழகம்" என்னும் இதழிலும், "ஜஸ்டிஸ்" இதழிலும் வெளிவந்தன.

1913ம் ஆண்டு மாணிக்க நாயக்கர் நீண்ட விடுப்பில், தமது சொந்தச் செலவில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மான்செஸ்டர் தொழில் பள்ளியில் தமது "Calculograph" என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தார்.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது "திராவிடர் - ஆரியர் நாகரிகம்" என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார்.

மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே. இவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்

காழி.சிவ.கண்ணுசாமிப்பிள்ளை,
க.ப.சந்தோஷம் ஆகியோர்.

1926ம் ஆண்டு வெளியான "Madras - 200" என்னும் நூலில் விளக்கப்படங்கள் பல காணப்படுகின்றன. இந்த நூல் அன்றைய சூழலில் கற்றவர் நடுவில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அன்றைய "ஜஸ்டிஸ்" இயக்கம் நாயக்கரின் பணிகளைப் பாராட்டி ஒரு கையேடு வெளியிட்டது. இந்நூலைப் படிக்கும் போது, அந்த இயக்கம் அவரை முழுமையாக ஆதரித்ததை அறியமுடிகிறது. "மொழிமுதல் தமிழர் கடவுட் கொள்கை" என்னும் சொற்பொழிவில் இறைவடிவம் உருவம் அற்றது என்றும், அதற்குச் சான்றாகத் தொல்காப்பியரின்

கொடிநிலை,
கந்தழி,
வள்ளி
என்னும் நூற்பாவையும் காட்டுகிறார்.


"தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்" என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஈ.வெ.ரா தமது கட்டுரை ஒன்றில் "பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக எவ்வளவோ செய்தார். அவரது ஓங்காரத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு அவரை முழுவதும் அறிந்துகொள்ள இயலாதபடி செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு எவ்வளவோ செய்திருப்பார்," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் பணியாற்றியபோது பெரியாரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1916ம் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட "தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் நூலை மாணிக்க நாயக்கர் படிக்க நேர்ந்தது. அதைப்படித்த நாயக்கருக்கு தொல்காப்பியத்துக்கு உண்மைப் பொருள் காண்பதற்குப் பதிலாகப் பல ஐயங்கள் எழுந்தன.

தமது ஐயங்களைக் குறிப்பிட்டு இராகவையங்காருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றுக்கு இரு கடிதங்கள் வாயிலாக இராகவையங்கார் பதில்கள் எழுதியுள்ளார். இந்த பதில்கள் பெரும்பாலும் வினா வடிவிலேயே இருந்தன. இந்த வினாக்கள் தொடர்பாக ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமிருந்தும் நாயக்கருக்கு இரு கடிதங்கள் வந்தன.

மேற்குறிப்பிட்ட எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924ம் ஆண்டில் நாயக்கரே தமது சொந்தச் செலவில் நூலாக வெளியிட்டார்.

"ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்," என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது என்பது அவர் "அஞ்ஞானம்" என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.

"பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே" என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி. நாயக்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் புகழ்பெற்றார். ஆனால் பல

தமிழ் இலக்கியப் பணிகளையும்,
அறிவியல் சிந்தனைகளையும்,
கணக்கியல் முறைகளையும்
அறிமுகப்படுத்திய அந்த அறிஞரை தமிழ் உலகம் மறந்துவிட்டது.

1941ல் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய புறநூனூற்று மாநாட்டில் பா.வே.மாணிக்க நாயக்கரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.

புலவர் பா.அன்பரசு
நன்றி: தமிழ்மணி (தினமணி)


பொள்ளாச்சி நசன் - பற்றிய குறிப்பு

அதிகாலை.காம் இணையதள ஊக்குவிப்பால் எழுதியவை

என் பெயர் ம.நடேசன்., யாரும் என்னை "டே" என்று அழைக்க வேண்டாம், என்று பெயரை 1983 இல் மாற்றினேன். ஆக "நசன்" அதுவே புனைபெயராக நிலைத்து விட்டது. தற்பொழுது தமிழ்க்கனல் என்று எழுதி வருகிறேன். முதுகலை விலங்கியல் பட்டதாரியான நான், தமிழிலும் முதுகலை பெற்று, முதுகலை கல்வியியலும் பெற்றுள்ளேன். ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் திருமூர்த்தி நகரில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு.

1951 இல் சிதம்பரத்தில் பிறந்த நான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அனைத்து முதுகலைப் படிப்புகளையும் படித்து முடித்தேன். படிக்கும் போது தமிழில் மிகப்பெரிய ஈடுபாடு இல்லை. 1974 இல் படித்து முடித்து - வேலை கிடைக்காமல் அலைந்தபோது (பல்கலைக் கழகத்தின் Founder's zoology Prize - First Rank பெற்றவன்) சுண்ணாம்பு அடிப்பது முதல் அனைத்து வேலைகளையும் செய்தேன். அது எனக்குள் ஆழமான படிப்பினையும், மக்களைப் பற்றியும் விதைத்தது.



1980 இல் இளங்கலை கல்வியில் படித்திருந்ததால் வேலை கிடைத்தது. மேல்நிலை இரண்டாமாண்டிற்கு விலங்கியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக - எருமைப்பட்டி - என்ற ஊரில் பணியைத் தொடங்கினேன். 25-8-1985 இல் நானே வடிவமைத்த உருட்டச்சு இயந்திரத்தில் (செலவே இல்லாத மரப்பலகை, உருளைகளைப் பயன்படுத்தி உருவாக்கிய உருட்டச்சுப் பொறி) விடுதலைப் பறவை என்ற இலவச இதழைத் தொடங்கினேன். என் கவிதைகள், துணுக்கு, குறிப்புகள் என ஒரு பல்சுவையான உருட்டச்சு இதழாகவே அது இருந்தது. 100 படிகள் எடுத்து கிடைத்த முகவரிக்கெல்லாம் அனுப்பினேன். பார்த்த இதழ்களுக்கெல்லாம் அனுப்பினேன். யாராவது ஒரு அஞ்சலட்டை எழுதினால் - வானத்தில் பறப்பது போலத் தோன்றும். (இன்றும் தோன்றுகிறது - வெளிநாட்டிலிருந்து முகம் தெரியாத ஒரு அன்பர் - உங்களது இணைய தளம் சிறப்பாக இருக்கிறது - எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது - என்று தொலைபேசியிலும், அலைபேசியிலும் அழைத்துச் சொல்லும் பொழுது)



34 இதழ்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக, உருட்டி உருட்டி - அனுப்பிக் கொண்டே இருந்தேன் - நிறைய இதழ்கள் மாற்று இதழாக வரத் தொடங்கின. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் - வந்த இதழ்களையெல்லாம் வரிசையாக அடுக்கிப் பார்த்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில், கருத்தில் - நெஞ்சு நிறைந்தது. விடுதலைப்பறவையின் 21 ஆவது இதழில் இம்மாதம் வந்த இதழ்கள் என பாலம், ஓ, சுட்டி, வாரமுரசு, முக்குலமுத்து, உள்ளச் சிதறல், தாராமதி, கதிரவன், அமுதம், கனவு, சுகன், துளி, வாசல், மனுஷி என்ற இதழ்களை முதன்முதலாகக் குறிப்பிட்டேன். பிறகு தொடர்ச்சியாக "வந்த இதழ்கள்" என்று பட்டியலிட்டேன். இன்னும் நிறைய இதழ்கள் வந்தன. நண்பர்களிடம் புதிய இதழ்கள் இருந்தால் கேட்டுப் பெறத் தொடங்கினேன்.

கோவை யாழ் நூலக நண்பர் திரு. துரை மடங்கன்., கருத்துச் செறிவுள்ள நண்பர்., தன்னிடம் வைத்திருந்த 100 இதழ்களை (மிகத் தரமான இலக்கிய, அரசியல், இதழ்களை) எனக்கு அன்போடு அளித்தார். தரமான இதழ்கள் என்றால் என்ன என்பது அந்த இதழ்களைப் படித்த பிறகுதான் உணர்ந்தேன். விடுதலைப் பறவை இதழ் தனது 34 ஆவது இதழை 15-8-1988 இல் வெளியிட்டதோடு நின்று விட்டது. இந்த இதழில் 31 சிற்றிதழ்களைப் பட்டியலிட்டு இருந்தேன். விடுதலைப் பறவை நின்றபோதும், தொடர்ந்து இதழ்கள் எனக்கு வந்து கொண்டே இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாகத் தரமான இலக்கியத்தின் பக்கம் நகரலானேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு....

1991 இல் (நவம்பர் - டிசம்பர்) இருமாத இதழாகச் - சிற்றிதழ்ச் செய்தி - என்ற அச்சு இதழைத் தொடங்கினேன். முதல் இதழின் அட்டையை அலங்கரித்தவர் சி.சு.செல்லப்பா. இதழில் வல்லிக்கண்ணன், கோ.இராஜாராம் ஆகியோர் கட்டுரைகளை எழுதியிருந்தனர். முதல் இதழில் தற்பொழுது வரும் சிற்றிதழ்கள் என்று 50க்கும் மேற்பட்ட இதழ்களை முகவரிகளுடன் பட்டியலிட்டு இருந்தேன். முதல் இரண்டு இதழ்களைத் தாராமதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன்.



மூன்றாவது இதழை சிற்றிதழ்ச் செய்திக்கென ஒரு அச்சகம் உருவாக்கி அதில் அச்சிடத் தொடங்கினேன். அச்சகம் என்றால் - கையில் சுற்றும் ஒரு மெஷின். 20 கிலோ எழுத்து, மற்றும் 5 கிலோ தலைப்பு எழுத்து - இவை தான் நசன் அச்சகம். அச்சுக் கோர்க்கப் பழகினேன். ஒவ்வொரு எழுத்தாகப் பொறுக்கி, அடுக்கி, சரிசெய்து,



இயந்திரத்தில் ஏற்றி, ஒருவர் சக்கரத்தைக் கையால் சுற்ற - நான் தாளை வைத்து அச்சாக்கி எடுத்தேன். இந்த இதழும் இலவசம் தான். தொடர்ந்த இதழ்களில்... வல்லிக் கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன், நாரண துரைக் கண்ணன், எம்.வி.வெங்கட்ராம், வ.விஜயபாஸ்கரன், கி.ஆ.பெ.விசுவநாதம், டொமினிக் ஜீவா, தி.க.சி, கோவை ஞானி - என ஒவ்வொரு இதழிலும் இலக்கியவாதிகளை வெளியிட்டு, அவர்களைப் பற்றிய குறிப்பும் எழுதினேன்.

சிற்றிதழ்ச் செய்தி - சிற்றிதழ்களின் தொடர்பிற்காகவும், இணைப்பிற்காகவுமே வெளிவந்தது, நவம்பர் 1993 ஆம் இதழிலிருந்து சிற்றிதழ்ச் செய்தி பதிவுபெற்ற இருமாத இதழாகத் தொடர்ந்தது. 32 இதழ்கள் வெளிவந்தன. 32 ஆவது இதழில் ஆயிஷா சிறுகதையை வெளியிட்டிருந்தேன். ஒவ்வொரு இதழைத் தயாரிக்கவும், அச்சுக் கோர்த்து, பிழை திருத்தி, எழுத்துகளைப் பிரித்துப் போட்டு எனத் தொடர்ந்ததால் - கண் மங்கலாகத் தொடங்கியது. விளைவு கண்ணாடி நிரந்தரம் ஆனது.



கணிப்பொறி வந்த நேரம் அது. 286 கணினி வகையை வாங்கினேன். தமிழ் எழுத்து எங்கும் இல்லை. திரு என்ற ஒரு எழுத்துரு மட்டும் இலவசமாகக் கிடைத்தது. பிறகு ஆதமி என்ற எழுத்துரு அறிமுகமாகியது. கணினி மேலும் பல ஆயிரங்களை விழுங்கி 386 ஆகியது. கணினியில் தட்டச்சு செய்தேன். சிற்றிதழ்ச் செய்தியின் பக்கங்களை வடிவமைத்தேன். இறுதியாக வெளிவந்த நான்கு இதழ்கள் பெரிய அளவில், எனது கணினியில் என்னால் வடிவமைக்கப்பட்டு, நண்பரது அச்சகத்தில் அச்சாக்கி வெளியிடப்பட்டவை. இந்த இதழில் "சிற்றிதழ்கள் செய்ததும் செய்யத் தவறியதும்" என்ற கட்டுரையை வல்லிக்கண்ணனும், "சிறுவர் சிற்றிதழ்கள்" என்ற கட்டுரையை பூவண்ணனும் தொடர்களாக எழுதிக் கொண்டிருந்தனர். நான் காட்டாற்று வெள்ளமா ? கடமைச் செயலா?? என்ற தமிழ் விழிப்புணர்வுக் கட்டுரையை எழுதியிருந்தேன். தமிழ் உணர்வை ஊக்குகிற கோட்டோவியங்களை ஒவியர்களை வரையச்செய்து - அதனைப் படியெடுத்து நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்த காலம் அது (300 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இந்த வகையில் வரைந்து அனுப்பியுள்ளேன் - அவைகள் தமிழுணர்வுக் கண்காட்சியாக பல இடங்களிலும் வைக்கப்பட்டன. தமிழன் என்ற ஓவியர்தான் நிறைய படங்கள் வரைந்திருந்தார் - இவை தற்பொழுது தமிழம் வலையில் வலையேற்றப்படுகின்றன)

கண்காட்சி என்றதும் நான் நடத்திய முதல் சிற்றிதழ்கள் கண்காட்சிதான் நினைவுக்கு வருகிறது. தஞ்சை சுகன் இதழ் சார்பாக நடந்த நிகழ்வு அது. அதுதான் எனது முதல் சிற்றிதழ்க் கண்காட்சி, என் சேகரிப்பில் 900 இதழ்கள் சேர்ந்ததும், மக்களுக்கு இதனைக் கண்காட்சியாக வைத்தால் பயனாகுமே என்று கருதி நடத்திய காட்சி அது. வரிசை வரிசையாக அனைத்து இதழ்களையும் கோர்த்து கண்காட்சியாகத் தொங்க விட்டேன். கண்காட்சியின் ஒரு இடத்தில் மக்கள் நிறையபேர் நின்றிருந்தனர். அங்கு போலீஸ் செய்தி இதழின் பின் அட்டையில் அரை நிர்வாணப்படம் இருப்பதைக் கண்டேன். இதற்குப் பிறகு தரமான இதழ்களை மட்டுமே காட்சிக்காக வைப்பது என்று முடிவு செய்தேன்.


(புதுச்சேரியில் நடைபெற்ற கண்காட்சியின் புகைப்படம்)

மதுரை பல்கலைக் கழகத்தில் சிற்றிதழ்களைக் காட்சிக்கு வைத்த பொழுது "விலங்கியல் முதுகலையா ? உனக்குத் தமிழில் என்ன தெரியும்?" என்று வினாக்குறியோடு அலைந்த படிப்பாளிகளைப் பார்த்தேன். அதன் எதிர் வினையாக, தமிழ் முதுகலைப் பட்டத்தை இரண்டே ஆண்டுகளில் முதல் வகுப்பில் பெற்று எனதாக்கினேன்.

இறுதியாக நான் வைத்த கண்காட்சி சென்னையில்.. கோமல் சுவாமிநாதன் - வந்திருந்தார். உங்கள் ஊரில்தான் காலச்சுவடு முதல் இதழ் கண்காட்சியில் திருடு போனது என்று சொன்னேன். அதை அவர் சுபமங்களாவில் எழுதினார். தூத்துக்குடி நண்பர் அந்த இதழைத் தந்து உதவினார். கண்காட்சியை நடத்திய பொழுதுதான் ஒரு இதழை வைத்துக் கொண்டு அந்த இதழ் பற்றிய முழுமையைக் காட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். விளைவு கண்காட்சி நடத்துவது தடை பட்டது. சிற்றிதழ் செய்தி நடத்துவதும் தடைபட்டது. இதழை முழுமையாகச் சேகரிக்கத் தொடங்கினேன். முடிவு தெரியாத - கண்கட்டப்பட்ட - நீண்ட பயணம் அது. இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறேன். இது வரை 2700 வகையான இதழ்கள் சேர்ந்துள்ளன. முழுமையாக உள்ளவை 100 இதழ்கள் இருக்கலாம். 85 க்குப் பிறகு வந்த இதழ்கள் பெரும்பாலும் முழுமையாக இருக்கும்.

1999 ஏப்ரல் வரை சிற்றிதழ்ச் செய்தி தொடர்ந்தது. பிறகு தொடர முடியவில்லை. கருத்துச் செறிவான இதழ்கள் என்பதோடு அவை தெளிதமிழில் இருந்தால்தான் உயர்வானது என்ற எண்ணம் மேலெழுந்தது. என் கட்டுரையை நானே திரும்பப் படித்தேன். ஒரு வரியில் மூன்று அயற்சொற்கள். இனி எழுதுவது இல்லை என்று முடிவு எடுத்தேன். தெளிதமிழ் சொற்களைத் தேடத் தொடங்கினேன். தியாகு நடத்திய தாய்த் தமிழ்பள்ளியில் ஈடுபாடு மிகுந்தது. தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினேன். நானும் தமிழ்ச் சொற்களைப் படிக்கத் தொடங்கினேன். தெளிதமிழில் படிப்பது, பேசுவது என்று தொடர்ந்தேன். சிற்றிதழ்ச் செய்தி நின்ற போதும், எனக்கு வரும் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. கருத்துச் செறிவாக, தரமாக வரும் 50 க்கும் மேற்பட்ட இதழ்கள் - ஒவ்வொன்றும் எத்தகைய இடர்பாட்டில் தொடரும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். வலி தெரிந்தது. எப்படி உதவுவது ?

எனது மாணவன் வெற்றிவேல் தனது ஊரில் நடக்கும் விழாவுக்கு அழைத்திருந்தார். அங்குதான் கணினித் தொழில் நுட்ப வல்லுநர் செந்தில் அவர்களைச் சந்தித்தேன். அவரது இணையதளம் பற்றிக் கூறிய வெற்றிவேல் நீங்களும் இணையதளம் தொடங்கலாமே என்று குறிப்பிட்டார். கையில் வீடியோ படக்கருவியுடன் மாணவர்களைப் படம் எடுத்துக் கொண்டிருந்த செந்திலிடம் பேசினோம். 5 எம்பி இடம் அடுத்தவாரம் உங்களுக்குச் சொந்தம் என்றார். இணையம், 5 எம்பி, html, download, upload எதுவுமே தெரியாத காலம் அது. இணையத்தைப் பார்த்தது கூடக் கிடையாது. கோவையில் நடந்த புத்தகக் காட்சிக்குச் சென்று, html தொடர்பான புத்தகம் இருக்கிறதா என்றோம். ரூ250 விலையுள்ள புத்தகத்தைக் காட்டினார். எனக்கு வேண்டாம் - குறைவான விலையில் உள்ளதா என்று கேட்டேன் - கடைசியில் போய்ப் பாருங்கள் ஒரு புத்தகம் உள்ளது என்றார். கடைசியில் ஒரு புத்தகம் இருந்தது. அது தணிகை அரசு எழுதிய html - பற்றிய புத்தகம். (பெரிய புத்தகம் வாங்கியிருந்தால் குழம்பிப் போயிருப்பேன்)

(தணிகை அரசு எழுதிய நூல்)


அன்று இரவு முழுவதும் படித்தேன் - புத்தகத்தை முடித்தேன் - 10 வரிகளுக்குள் html செய்வது பற்றிய விளக்கத்தை அடக்கி விடலாம் போலிந்தது. அப்பொழுது என்னிடம் பென்டியம் 2 வகை கணினி மட்டுமே இருந்தது - அந்தக் கணினியில் புத்தகத்தைப் படித்து html உருவாக்கினேன். தமிழம் வலையின் முதல் பக்கத்தை நானே வடிவமைத்தேன் (கணினித் தொழில் நுட்ப வல்லுநரிடம் அலைந்து அலைந்து முழுமையாகக் கிடைக்காததால் ஏற்பட்ட எரிச்சலின் விடிவாகத்தான் அதை வடிவமைத்தேன்) ஒருவாரம் ஓடியது. செந்திலை பார்க்கக் கிளம்பினேன். கையில் நான் உருவாக்கிய தமிழம் வலை இருந்தது. இது சரியா தவறா எதுவும் எனக்குத் தெரியவில்லை. செந்திலும் நானும் ஒரு கணினி மையத்திற்குச் சென்றோம். அங்கே அவர், அவரது இணையதளத்தைக் காட்டினார். அன்றுதான் முதன் முதலாக இணைய தளத்தையே பார்க்கிறேன் நான். பிறகு தமிழம் வலையின் கடவுச் சொல் வந்துவிட்டதா எனத் தன் மின் அஞ்சலில் பார்த்தார். ஆ..உங்கள் கடவுச் சொல் வந்து விட்டது என்றார். அது எதற்கு என்றேன். இது முக்கியம் என்று குறித்துக் கொடுத்தார். அப்பொழுது நான் உருவாக்கி வைத்திருந்த தமிழம் வலையை எடுததுக் காட்டினேன். இது சரியாகுமா என்றேன். கணினியில் இயக்கிப் பார்த்து மகிழ்ந்தார். இதையே ஏற்றி விடுகிறேன் என்றார். ஒருசில நிமிடங்களுக்குள் நான் உருவாக்கி வைத்திருந்த 3 பக்கங்களும் வலையேறின. பிறகு தமிழம்வலை என்று தட்டச்சு செய்து இயக்கினார். நான் உருவாக்கிய பக்கம் என்முன் கணினியில் தோன்றியது. வானத்தில் பறப்பது போலத் தோன்றியது. செந்திலின் கையைப் பிடித்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

நேராக இணைய தளம் ஏற்பாடு செய்த - அரவிந்தசாமி என்ற நண்பரைக் காணச் சென்றோம். உங்களது கடவுச் சொல் காலையிலேயே அனுப்பி விட்டேனே என்றார். இப்பொழுது தமிழம் வலை என்று அடித்துப் பாருங்கள் என்றோம். அவரது கணினியில் தமிழம் வலை தெரிந்தது. நான் செய்ததை அறிந்து மகிழ்ந்தார். இணையதளத்திற்கான பல்வேறு தொழில் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தார். ஆங்கிலத்தில் தெரிந்த எனது இணையதளம், எனக்கு மகிழ்வூட்டவில்லை. தமிழில் உள்ள படங்கள் வர நேரம் ஆகியது. தமிழில் தெரிய வேண்டும் என்று செந்தில் ஆறுமுகத்தைத் தொடர்ந்து நெருக்கினேன். சென்னையில் அழகி விசுவநாதன் - இணையத்திற்கான எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றார். அவரை அறிமுகப் படுத்தினார். அவர் அருமையான நண்பர். தமிழம் வலை கண்டு மகிழ்ந்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் உருவாக்கி விடுவேன். அதை உங்கள் இணையத்தில் இலவசமாகவே வைத்து விடுகிறேன் என்றார். அவரது வழிகாட்டுதலில் இணையத்தின் பக்கங்களில் பல மாற்றங்கள் செய்தேன். இணையம் தமிழில் தெரிந்தது. முதல் இதழ் தமிழில் தெரிந்தது. செப்டம்பர் 2003 இல் வலையேற்றிய அந்தப் பக்கம் இன்னும் இணையத்தின் archive பகுதியில் உள்ளது. (www.thamizham.net/webmag/bn1.htm) இன்றுவரை தமிழம் வலையில் வலையேற்றப்பட்ட பக்கங்கள் அனைத்தும் இணையத்தில் archive பகுதியில் உள்ளன.

தமிழகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத தமிழ் மாணவர்கள் அதிகம். பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளால் தமிழையும் மறந்து, ஆங்கிலத்தையும் நிறைவாகப் பெறாமல் (ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றால் அந்த மாணவன் தான் நினைப்பதை எழுதவும், பேசவும் முடியும். பிறர் எழுதியதைப் படித்துப் புரிந்து கொள்ளவும் முடியும். மொழியறிவு என்பது இதுதான்) திரிசங்கு நிலையில் பெரும்பாலான மாணவர்கள் இருக்கிறார்கள். 6, 7, 8 படிக்கும் மாணவர்களால்கூட இன்று தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க முடியவில்லை. தமிழ் நாட்டில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்த நிலை! இதற்கான அணுகுமுறையை வடிவமைக்கத் தொடங்கினேன் ஐந்து ஆண்டுகள் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் இதனைச் சோதனை செய்தேன். முதல் வகுப்பு மாணவர்கள் செய்தித்தாள் படித்தனர். மேடையில் படிக்க வைத்தேன். 32 அட்டைகளுக்குள் தமிழ்ப் படித்தல்

(21 ஆவது அட்டை)


திறனை கற்பிக்க முடியும். 3 மாதங்களில் கற்றுக் கொள்வார்கள். இதனைச் செய்து காட்டினேன். ஆசிரியர்களே இல்லாத இடத்திலும் கற்பிக்க - தமிழ் எழுத்துகளை எழுதிக் காட்டுகிற, ஒலித்துக் காட்டுகிற - குறுவட்டினை உருவாக்கினேன். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாக உள்ளன. வெளிநாட்டிலுள்ள பல நண்பர்கள் இதனை வலையிறக்கிப் பயன்படுத்துகிறார்கள். படியெடுத்துப் பிறருக்குக் கொடுக்கவும் செய்கிறார்கள். விற்பனைப் பிரிவு வழி இதுவரை யாரும் வாங்கவில்லை. ( இணையத்தில் இலவசமாகவே உள்ள பொழுது எதற்குக் காசு கொடுத்து வாங்க வேண்டும் ? )

கேட்கும் நூலகம் - நல்ல திட்டம்தான். கண்ணை மூடிக் கொண்டே அனைத்தையும் உள்வாங்கி விடலாம். திரும்பத் திரும்ப கேட்கலாம். சலிக்காமல் சொல்லும். ஆனால் எழுதுவதையும், படிப்பதையும் மறந்துவிடுவானே நம் சோம்பேறித் தமிழன். எழுத்துகளைப் பிழையாக ஒலித்தால், கொச்சையாக ஒலித்தால், அயற்சொற்களோடு ஒலித்தால் - மீண்டும் தமிழ் கீழிறங்குமே. இன்றைய தமிழனை நாம் பார்க்கும் தமிழனாக அல்லவா மாற்றியுள்ளோம். அவன் பார்க்கத்தான் விரும்புகிறான். இசை வடிவில் உள்ள இலக்கியம் இந்த வகையில் வெற்றி பெறும்.

ஈரோட்டு இணைய நண்பர் ஒருநாள் வீட்டுக்கு அழைத்து இருந்தார். 1928 இல் தெளிதமிழோடு இயங்கிய நண்பரின் உறவினர் அவர். மாடியில் நிறைய நூல்கள். அனைத்தும் பழைய நூல்கள். அன்போடு அவற்றை எனக்குத் தந்தார். கிடைத்தற்கரிய அந்த நூல்கள் அவை. இப்பொழுது தமிழில் வெளியான அனைத்து நூல்களையும் திரட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காகவும் உழைக்கிறேன்.

மின் நூல்களாக்குவது ஒரு அருமையான செயல். புகழ் விரும்பாத, வணிக நோக்கமற்ற நல்ல நண்பர்கள் இந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்துள்ளார்கள். அவர்களது பணி உயரியது. போற்றுதற்குரியது. சங்க நூல்கள் அனைத்தும் மின் நூல்கள் ஆகிவிட்டன. 500 க்கு மேற்பட்ட தமிழ் நூல்கள் மின் நூல்களாகி தற்பொழுது இணையத்தில் உள்ளன. இந்தப் பட்டியலை திரட்டி, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, விடுபட்ட நூல்களின் பட்டியலோடு தமிழம் வலை இணையத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த வலையேற்றத்தில் பார்க்கலாம்.

நமக்கு மின் நூல்கள் மட்டும் போதாது. அவை இசைவழி வெளிப்படுபவையாக இருக்க வேண்டும் அல்லது செறிவான ஒலிப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். மேலும் இவற்றின் படக்காட்சிகள் இக்காலச் சூழலோடு பொருந்தியதாக இணைக்கப்பட வேண்டும். பீலிபெய் சாகாடும் அன்று... கத்தரிக்காய் மூட்டை ஏற்றிய மிதிவண்டி இன்று... பாடல் மட்டும் போதாது பாடலில் உள்ள சொல்லின் மேல் காட்டியைக் கொண்டு சென்றால் அந்தச் சொல்லுக்கான பொருள் தெரிய வேண்டும். இதனைத் தமிழம் வலையில் பார்க்கலாம் (www.thamizham.net/sangamlist.htm - நாலடியார், குறுந்தொகை, புறநானூறு பாடல்கள் இவ்வகையின)

வரலாற்றை இழந்து கொண்டிருக்கிறோம் நாம். தமிழ் மொழியின், தமிழரின் வரலாற்று எச்சங்களைத் திரட்டுகிற பணியில் ஆற்றலுள்ளவர்கள் ஈடுபட வேண்டும். கல்லூரி அளவில் இவை செயற்பாடுகளாக முறைபடுத்தப்படவேண்டும். ஒப்புக்கு அடைக்கிற ஒப்படைகளாக இல்லாமல், உணர்வோடு திரட்டுகிற சான்றாவணங்களாக இவை இருக்க வேண்டும். பள்ளிகளில் மொழிப்புலமையும், நுட்பமும், ஆய்வு நோக்கும், திறனறிவும் விதைக்கப்பட வேண்டும். தொடக்கநிலை வகுப்புகள் - தமிழியம் சார்ந்து - ஆற்றலுள்ள - வீறுகொண்ட - செயல் திறனுள்ள - மழலையர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும். (இதற்கான பாடத்திட்டங்களையும் உருவாக்கி வருகிறேன்)

தமிழம் வலை ஒருங்குறியீட்டுக்கு மாறாமல் இருப்பது வருந்துதற்குரியதே. வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வடிவமைக்கப் பட்டுள்ள பாடங்கள் ஒருங்குறியீட்டில் எழுதப்பட்டுள்ளன. தமிழம் வலையையும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு திங்களும் வருகிற இதழ்களைப் படித்து, குறிப்பு எடுத்து, வரிசைப் படுத்துவதற்குள் அடுத்த திங்கள் வந்து விடுகிறது. எனவே நடைமுறை வலையேற்றுவதிலேயே என் மணித்துளிகள் கழிந்து விடுகின்றன.

தமிழ்ப் பள்ளியில் தற்பொழுது 160 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் (ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ளன)

என் சேகரிப்பில் உள்ள அனைத்தும் இணையத்திற்கு வரும். அதுவரை அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளேன். எனவேதான் நான் ஆய்வாளர்களைக்கூட நூலகத்தில் அனுமதிப்பது இல்லை. பின் வரும் தலைமுறையினருக்கு காட்சிப்படுத்த வகை செய்கிற நண்பர்களின் வழி மாற்றி - வணிக நோக்கமின்றி - இலவசமாக - அனைவரும் பெறுமாறு இணையத்தில் வைப்பது என்பதே என் நோக்கம்.

அதிகாலை இணையதள பார்வையாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். பழைய இதழ்களையும், நூல்களையும் திரட்டுவதில் விருப்பமுடையவர்கள் முனைப்புடன் செயற்படவேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் உள்ளனவற்றைத் திரட்டினாலே போதும்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன் 27-8-08



தமிழ் எங்கள் விளைவுக்கு நீர்

கே.விழியரசு


- சிறுகதை -

அதிகாலை மூன்று மணிக்கு நோயின் தாக்குதலால் இயலாமல் - ஐயோ, அம்மா வென்று துடித்துக் கொண்டிருந்த பொன்னரங்கத்தைத் திட்டிக்கொண்டே, அவள் மூத்திரச் சட்டியில் பிடித்து, வெளியில் கொண்டுபோய் ஊற்றிவிட்டுத் துணியால் அவரை துடைத்துப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள் பொன்னரங்கத்தின் மனைவி மலர்மணம்.

ஏய் சும்மா கத்தாதே, உன்ன இதலெல்லாம் செய்யச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தல. பணத்தைக் கொடுத்தா செவிலிப் பொண்ணுங்க வந்து செய்ராங்க. என்னமோ வெறும் பயல பேசற மாதிரி பேசுறியே. உனக்கெல்லாம் ஈவு எரக்கமில்லடி.

ஆமாமாம் நீங்க ரொம்ப ஈவு எரக்கத்தோட நடந்ததாலதான் பெத்த புள்ளைங்க ரெண்டும் பெத்தவங்களை வேணான்னு ஒதறித் தள்ளிட்டு பணம் பணம்ன்னு உன்ன மாதிரியே பேயா திரியுதுங்க. நாலு நாளைக்கு முன்ன, கண்ணுரெண்டும் நெலகுத்தி நாண்டுகிட்டியே, அப்ப எந்த செவிலிப் பொண்ணு வந்தா ?

நாம பெத்ததுகளே நமக்கு ஒதவுலியே, அக்கம் பக்கம் தாயா புள்ளையா பழகினவுங்க ஒத்து உதவியா உன்ன பெரிய மருத்துவமனையிலே சேத்து உயிர காப்பாத்தி இரவு பன்னெண்டு மணிக்கு கொண்டு வந்து போட்டாங்க, நீதான் நோவாளி, தூங்காம கெடக்குற,,,எனக்கு? நானும் சேந்து உங்கூட நாளுநாளா முழுச்சி கண்ணமூடாம தானே கெடக்குறேன்? என்னப் பாத்து ஈவு எரக்கம் இல்லையேன்னு சொல்லற...உனக்கு இருந்தா செவிலிப் பொண்ண வெச்சிக்கிறன்னு சொல்லுவியா? -- மலர்மணத்தின் பேச்சில் தன் தவற்றை உணர்ந்து ஆணென்னும் செருக்கோடு பொன்னரங்கன் பேச்சை நிறுத்திக் கொண்டார். பிறகு நோயின் தாக்குதலினால் அலர்வதற்காக மட்டுமே வாய் திறந்தார். திட்டித் தீர்த்தவாறே தூங்கிப் போனாள் மலர்மணம்.

பணமே உலகம்,, பணமே வாழ்க்கை,, பணத்தை முன்னிறுத்தியே இவ்வுலகில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். பணத்தாலேயே இவ்வுலகில் அனைத்தையும் அடைய முடியும் - என்னும் கொள்கையில் பிறழாதவர் பொன்னரங்கன். அவர் மனைவி, மகன்களையும் அவ்வாறே மாற்றினார்.

பொன்னரங்கன் அரசு நடுநிலைப்பள்ளியில் நடுநிலைத் தமிழாசிரியராய் பணியாற்றி பணிநிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் முடிந்தது. அறுபத்து ஆறு அகவை முதியவர். குருதி அழுத்தம், நீரழிவு நோய், சிறுநீரகத் தொல்லை உள்ளிட்ட நோய்கள் அவருக்கு வந்திருப்பதாக மருத்துவச் சோதனைகள் உறுதி செய்திருந்தன.

பொன்னரங்கன் இளம் பருவத்திலிருந்தே அதிக குண்டாக இருப்பார். அதிக உடல் உழைப்புகளற்ற வாழ்க்கைச் சூழலைப் பெற்றவர். பணத்தைத் தேடுவதில் ஏற்பட்ட மனஉளைச்சல். இந்த முதுமைக் காலத்தில் தன் மகன்கள் தன்னையும் தன் மனைவியையும் வெறுத்து ஒதுக்கிவிட்ட பரிதவிப்பு என எல்லாம் கூடி இத்தனை நோய்களைத் தோற்றுவித்திருக்கின்றன என்று அவர் உணர்ந்திருந்தார்.

பொன்னரங்கத்திற்கு இரண்டு மகன்கள். இருவரையும் தனியார் பள்ளியில் சேர்த்து, ஆங்கில வழியிலேயே பயிலச் செய்தார். பெரிய மகன் மென்பொருள் பொறிஞனாய் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஓர் இலக்கம் மாத ஊதியம் பெறுகிறார். மற்றொரு மகனை ஆங்கில மொழிப் பேராசிரியராக்கியிருந்தார்.

அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் தன் மகன்கள் இருக்கிறார்கள் என்றாலும் அதனால் பொன்னரங்கத்திற்கு எந்தப் பயனும் இல்லை. இவரின் எந்த நல துக்கங்களிலும் அவர்கள் பங்கேற்பதில்லை. மாறாக இவரின் அனைத்து சொத்துக்களையும் உரிமை கொண்டாட அவர்கள் அணியமாய் இருக்கிறார்கள் என்பதை அவருடைய நலம் விரும்பிகள் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறார். அதே நலம் விரும்பிகளின் மூலமே தனக்குப் பெயரன் பெயர்த்திகள் இருப்பதாகவும் அவர்கள் இப்போது உயர்நிலைப் பள்ளிக் கல்வியைப் பயில்வதாகவம் கேள்விப்பட்டிருக்கிறார்.

பொன்னரங்கன் ஊருக்குப் பேருக்கும் தான் வாத்தியார் வேலை பார்த்தாரே தவிர, உண்மையில் அவர் முழுநேரமும் வட்டித் தொழிலிலும், ஏலச்சீட்டு நடத்துவதிலும்தான் இதுநாள்வரையில் ஈடுபட்டு வருகிறார். காசு விவகாரத்தில் கணக்கு சரியாய் இருக்க வேண்டும். என்பதும் இவர் விருப்பமாய் இருந்தது. அவர் மகன்களும் இவரைப் போன்ற குணமுடையவராய் இருந்தனர். இவர்களின் கணக்கு இவர்கட்குள் பிணக்கை உருவாக்கிற்று. அப்பாவின் வாழ்நாட்கள் முடிவதற்குள் அத்துனை சொத்துகளையும் அடைய முயன்று அம்முயற்சியில் தந்தையிடம் தோற்று, தங்களின் உறவை அடிநிலைவரை முறித்துக் கொண்டு சென்றனர. அன்று முதல் இன்று வரை தன்மகன்கள் பற்றி யார் கேட்டாலும் - சனியன்களை ஒழித்து தொலைச்சிட்டேன்னு - வீம்பா சொலலிவிட்டு, கண்கலங்கி ஏங்கியிருக்கிறார், அவர் மனைவி பலமுறை பெற்ற வயிற்றை அடித்துக் கொண்டு அழுதிருக்கிறார். அப்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள்.

இருபது நாள் ஓய்விற்குப் பிறகு, மனைவியும், மருத்துவமும் சேர்ந்து உதவியதால் பொன்னரங்கன் உடல் தேறி நன்னிலை அடைந்தார. அவர் வாரா கடனையும் தேடி போய் கறாராய் திரும்பப் பெற்று வந்தார். நோயும் கவலையும் நீங்கி போனால் மனம் புது மகிழ்ச்சியில் திளைக்கும். அந்த மகிழ்ச்சி வாழ்க்கையை பொன்னரங்கன் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்று காலை 7-30 மணிக்கு பொன்னரங்கன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். - தமிழ் விடியலின் அடுத்த நிகழ்ச்சியாய் வருவது புறநானூறு. வழங்குபவர் தமிழறிஞர் திரு. மணிமுடியனார். - அந்தப் பெண் அறிவிப்பாளர் கூறிச் சென்றதும், மணிமுடியனார் பேசினார். இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொன்னரங்கத்தை வியப்பும், மகிழ்ச்சியும் கூடி அல்லல் படுத்தியது.

இருக்காதா என்ன ? இருபது ஆண்டுகளுக்கு முன் சிறிது காலம் திருவண்ணாமலைக்கு மாற்றல் கிடைத்து அங்கு பணியாற்றிய பொழுது தன்னோடு கணிதவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர்தான் இந்த மணிமுடியார். அப்போதே தமிழ் மீது பற்றும, ஆர்வமும் கொண்டவராய் இருந்தார். அந்தப் பள்ளியிலேயே அவர் மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார். பொன்னரங்கன் உட்பட மற்ற ஆசிரியர்கள் முறையாக வருகைப் பதிவேட்டில் கையொப்பமடிடவே பள்ளிககு வருவார்கள். மணிமுடியனாரைத் தவிர மற்ற ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாற்று தொழிலைச் செய்து வந்தனர். அதற்காகவே, அவர்கள் முதன்மையாய் உழைத்தார்கள். பெரும்பான்மை ஆசிரியர்கள் பொன்னரங்கத்தைப் போல வட்டித் தொழிலிலேயே ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அரசையும், மக்களையும் சட்டப்படியே ஏமாற்றும் தாங்கள் திறம் கண்டு தங்களே வியந்து மகிழ்ந்தார்கள்.

கடமையை ஒழுங்காய்ச் செய்த மணிமுடியனாரை அனைத்து ஆசிரியர்களும் கூடி கேலி பேசினார்கள். - பிழைக்கவே தெரியல நீயெல்லாம் எப்படியா வாழப்போற? - நல்லாசிரியர் விருது கூட கெடைக்காது - பொன்னரங்கன் பலமுறை இப்படி நேர்படவே திட்டியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் விளங்கிக் கொள்ள வியலாத புன்னகையை அவர்கட்கு விடையளித்து விட்டுச் செல்வார், தன்னைப் போன்றவர்க்கு அப்புன்னகையின் பொருளை விளக்க காலம் இத்துனை நாட்கள் எடுத்துக் கொண்டதே என்று அதிர்வோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனமிட்டார்.

மணிமுடியனாரின் பேச்சும் அவர் கூறும் புறநானூற்றுப் பாடலுக்கான விளக்கமும் அவரை வியக்க வைத்தது. இது வரையில் தான் தமிழ்க் கற்றவனென்றும் தமிழாசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும் பலரிடம் பெருமையாய் கூறி வந்ததை மணிமுடியனாரோடு ஒப்பிட்ட போது அவருக்கே கூசியது.

இத்துணை புதிய புதிய கருத்துகளோடு அவ்விலக்கியத்தை விளக்கும் மொழி நுட்பமும், மொழி வன்மையும் கணிவியல் ஆசிரியரான இவர் எப்படிப் பெற்றார்? இன்னமுள்ள மற்ற பாடல்களுக்கும் இன்றே விளக்கம் சொல்ல மாட்டாரா? என்னும் ஏக்கமும் அவரோடு உறவாடி மகிழ வேண்டும் என்ற ஆவலும் அவருக்கு கூடிற்று. நண்பர்களின் உதவியோடு அவர் இருப்பிடம் அறிந்து ஒருநாள் சந்திப்பதற்காகச் சென்றார்.

மணிமுடியனாரைக் காண்பதற்காக அவர் ஊருக்குச் சென்று பார்த்த போது வியப்பு பன்மடங்கு கூடிற்று. பேருந்து நிலையத்தின் எதிரில் மிகப்பெரிய தெள்பதாகை (டிஜிடல்பேனர்) யில் பாவாணர் படை தங்களைத் தமிழ் அன்போடு வரவேற்கிறது என்று வைக்கப்பட்டிருந்தது. அவ்வெழுத்தின் தொடக்கத்தில் பாவாணர் படமும், இறுதியில் மணிமுடியனாரின் படமும் போடப்பட்டிருந்தது. பாவாணர் படை என்கிற அமைப்பை நிறுவி மணிமுடியனார் நடத்தி வருவதை அவர் தெரிந்து கொண்டார். எல்லாக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப் பட்டிருந்தது. பெரிய உணவகங்களில் திருக்குறள் பெயர்ப் பலகை நிறுவி திருக்குறளும் விளக்கமும் எழுதப் பட்டிருந்தது.

இதன் நீட்சியாய் வீதிகளில் உள்ள எல்லா வீடுகளிலும் ஒரு திருக்குறளும், விளக்கமும் எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் பாவாணர் படை என்றும், மேலே இது திருக்குறள் வீடு என்றும் இருந்தது. அங்கோடும் ஊர்திகளில் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருப்பதை உணர்ந்து கொண்டார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே மணிமுடியனார் இல்லமான தமிழ்க் குடிலுக்கு செல்கிறபோதுதான் தனக்கு வாழ்க்கை என்கிற ஒன்று இப்போதுதான் தொடங்குகிறது என்று நினைத்துக் கொண்டார்.

இயற்கைச் சூழல் நிறைந்த தெருவின் இறுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழர் குடிலுக்குள் சென்றார். வீட்டினுள் நுழைகிறபோது தெரியும் முதல் கட்டடத்தில் மணிமுடியனாரால் நடத்தப்படும் பாவேந்தர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் சில குழந்தைகள் திருக்குறளைச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தமிழர் விளையாட்டுகளை விளையாடுவதுமாக இருந்தனர். அவற்றைக் கடந்து உள்ளே சென்ற பொன்னரங்கத்தை மணிமுடியனாரின் துணைவியார் அவரைக் கூடத்தில் உட்கார வைத்து நூல்களைப் படிக்கத் தந்து கணவரிடம் அவர் வரவைத் தெரிவித்துவிட்டு, உள்ளே சென்று இருவருக்கும் குளிர் மோரைக் குடிக்கக் கொடுத்து, அவர் உள்ளிட்ட இல்லத்தில் உள்ளவர்களின் நலன்களையும் கேட்டறிந்து கொண்டு, பின் புன்முறுவலோடு பகல் உணவை ஆக்கிட இருவரிடமும் மணிமுடியனாரின் துணைவி யாழினி அம்மையார் விடைபெற்றுச் சென்றார். பின் இருவரும் நெடுநாள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் உரையாடி மகிழ அவர் வீட்டில் அமைந்துள்ள சோலைக்குச் சென்றனர்.

அங்கு அருகருகே இருந்த இரண்டு ஊஞ்சலில் ஆளுக்கொன்றின் மேல் அமர்ந்து கொண்டு பேச்சைத் தொடங்கினர். முதலில் பொன்னரங்கள்தான் இருவரும் ஒன்றாய் பணியாற்றிய போது பண்பாடற்று பேசி நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கோரினார். அதன் தொடர்ச்சியாகத் தன் வாழ்க்கைச் சூழலையும், தன் குடும்பம் பட்டுக்கொண்டிருக்கும் இன்னல் நிலைகளையும் கொட்டி அழுதார்.

ஐயா என்ன இது - நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாமரெண்டுபேரும் சந்தித்திருக்கிறோம். இந்த நேரத்தை அழுது வீணாக்குவதா? - வேண்டாம், இது உங்க வாழ்க்கையின் மறுமலர்ச்சிக் காலமுன்னு நெனச்சிக்குங்க. சேர்ந்து முடிவெடுப்போம். தீதும் நன்றும் பிறர்தர வாரா - தேத்திக்குங்கையா - மணிமுடியனாரின் பேச்சு அவரை நிலை நிறுத்தியது.

அழுகையை நிறுத்திவிட்டு இயல்பாகக் கேட்டார். - உங்களுக்கு இரண்டு மகன்கள் தானே? - ஆமாம், உங்களுக்கு அவர்களை மட்டும்தான் தெரியும், மகள் ஒருத்தி அதற்குப் பிறகு பிறந்தாள். அறிவொளி அவ பேரு. தமிழாசிரியர் பணியில் இருக்கா. ஆற்காடுல திருமணம் செய்து கொடுத்துருக்கோம். பெரியவன் இளமாறன் காவல் துறை ஆய்வாளராக இருக்கான். சின்னவன் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக இருக்கான். இந்த அகவை முதிர்ந்த காலத்துல நான் செய்யிர தமிழ் தமிழர் பணிக்கு அவங்கதான் முழு ஒத்துழைப்பும் பண உதவியும் செய்யறாங்க. எங்க குடும்பத்துக்கு ஒரு கொறையுமில்ல, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்கோம்.

அவர் பேசி முடிப்பதற்குள் பொன்னரங்கன் அழுதே விட்டார். ஐயா உங்க புள்ளைங்கள நீங்க எவ்வளவு சிறப்பா வளர்த்திருக்கீங்க. நான் தான் அப்படி வளர்க்காம - பணம் மட்டுமே உலகமாக நெனச்சி என் வாழ்க்கை மட்டுமில்லாமல் என் குடும்பத்தல உள்ள எல்லார் வாழ்க்கையையும் தொலைச்சிட்டேன். பூங்குன்றனார சொன்ன மாதிரி தீதும் நன்றும் பிறர்தர வாரா - நான் தப்பு செஞ்சிட்டேன்.

ஐயா இப்ப அழுது நடந்தத மாத்திட முடியாது. நீங்க நெனக்கிற மாதிரி என் பிள்ளைகளை இதப்படி அதப்படினனோ, இப்படிச் செய் அப்படிச் செய்யின்னோ வளர்க்கல. அவங்க இயல்பா வளர - தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை ஏற்படுத்தி - அவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியான தமிழ்க் கல்வியை முதன்மையாய் எடுத்து, அதுல அவர்கள் ஈடுபாடடோடு படிக்க வெச்சேன். நம்ம தமிழ் மொழித் தொடக்கக் கல்வியில்தான் -

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு ஐயம் இட்டு உண்

ஏற்பது இகழ்ச்சின்னு - பண்பாடும், ஒழுக்கமும் நிறைவா - நம்ம வாழ்வியலுக்கு ஏற்றதாக இயல்பாக இருக்கு. இந்த வழியில் கல்வியைப் படிச்ச குழந்தைகள் இப்படி சிறப்பாகத்தான் இயங்குவாங்க. நான் உறுதியாச் சொல்லறேன். இப்படிப் படிக்கிறவங்க, என் பிள்ளங்களைப் போலத்தான் இருப்பாங்க.

மாறாக அடிப்படைக் கல்வியிலேயே பிறமொழியில் அமைச்சிக் கொடுக்குற பெத்தவங்க உங்க பிள்ளங்களைப் போலத்தான் இந்த உலகத்துக்குத் தரமுடியும். பிற மொழிக் கல்விக் கூடங்களோட விளம்பரப் பகட்டுக்கு துணைபோற பெத்தவங்களால பிள்ளைகளும் அம்மொழிக்கே உரிய ஒழுகலாறுகளை (பண்பாடுகளை) பின்பற்றிக் கெட்டுப் போறாங்க,

குறுக்கீடு செய்யாமலும், கவனம் பிசகாமலும் கேட்டுக் கொண்டிருந்த பொன்னரங்கன், தமிழே தமிழர் விளைவுக்கு நீர் என்னும் தெளிவும், உறுதியும் பெற்று ஊஞ்சலை விட்டு இறங்கிச் சிறிது உலவிய போது - அவர் காதுகளில் குழந்தைகளின் குரலொலியல் - திருக்குறள் ஒலிப்பது கேட்டது. மணிமுடியனாரைப் போன்ற தமிழ் அறிஞர்கள் இருக்கின்ற காரணத்தால் எதிர்காலம் தமிழ்க் காலம், தமிழர் காலமாகும் என்ற நம்பிக்கையில் தானும் குறளோடு இரண்டறக் கலந்தார்.

நன்றி - புதிய நற்றிணை இதழ் - கடகம் 2039



எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை

()

17-8-08 காடம்பாறை - மாற்று மருத்துவ கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் - ஹோமியோபதி மருத்துவம் அறிமுகம் மற்றும் நோயாளிகள் பார்வை

20-8-08 சென்னை - கணித்தமிழ்ச் சங்கம் - சிறப்புக் கூட்டம் - சாந்தோம் கலைத் தொடர்பு மையம், மாதாந்திர விழிப்புணர்வுக் கூட்டம்,

20-9-08 திருவள்ளூர் இரயிலடி - குறளகம் இராதா பச்சையப்பனார் கல்வி அறக்கட்டளை - திருக்குறள் முத்தமிழ்க் கழகம் நடத்துகிற பச்சையப்பனார் 75 ஆவது அகவை நிறைவு பவழவிழா,

22-8-08 தஞ்சாவூர் - தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் படைப்பிலக்கிய ஆய்வுக் கருத்தரங்கம்.
22-8-08 தஞ்சாவூர் - தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்தும் 100 சாதனையாளர்களுக்கு சேவை விருது 2008 வழங்கும் விழா.

24-8-08 கோவை - பெரியார் திராவிடர் கழகம் - வே. மதிமாறனின் பதில்கள் நூல் அறிமுக விழா. சீமான், இராமகிருட்டிணன்

01-9-08 சென்னை - கோ.க.மணி அவர்களது இல்லத் திருமண விழா - மணமக்கள் - ம.தமிழ்குமரன் - ச.சத்யா

13-9-08 சென்னை - அண்ணாமலை மன்றம், மக்கள் நெஞ்சம் இதழின் 9 ஆம் ஆண்டு விழா - நூல்கள் வெளியிடு - ஒடுக்கப்பட்டோர் பேரவையின் 31 ஆம் ஆண்டுவிழா,

சூலை 08 முதல் சூன் 09 வரை - திங்கள் தோறும் - தமிழர் அறிவியக்கப் பேரவை - தொடர் சொற்பொழிவுகள் - இலட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி திருச்சி 2


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061