இதழ் எண் : 78
23 சூலை 2008


அன்புடையீர். வணக்கம்,

ஒவ்வொரு முறை இணையத்ததை வடிவமைக்கும் பொழுதும், ஒவ்வொரு விதமான நிகழ்வுகள், இருந்தாலும் அவற்றை வென்றெடுத்து இணையத்தை வலையேற்றும் பொழுது மகிழ்வாகவே இருக்கிறது.

எழுத்துகளைப் பொறுக்கி எடுத்து அடுக்கி, சரிசெய்து - அச்சு இயந்திரத்தில் அச்சாக்கி, வெட்டி, மடித்து, முகவரி எழுதி - அஞ்சலில் சேர்ப்பதற்குள் - போதும் போதும் என்றாகிவிடும். சிற்றிதழ்ச் செய்தி இதழை (35 இதழ்வரை) அச்சு இதழாகக் கொண்டு வந்தபோது வலித்த வலிகள். இந்த வலிகள் ஒவ்வொரு இதழாளருக்கும் சொந்தமானது. பாடுபட்டு அச்சாக்கி அனுப்பிய அந்த இதழ் படிப்பாளியின் வீட்டில் பிரிக்கப்படாமலே இருந்தால் அந்த இதழாளருக்கு எப்படியிருக்கும்? அந்தப் படிப்பாளி படிக்காமலேயே - தன் சொந்த, சுயநல, விளம்பர, வடிகால்களை உள்ளடக்கி வானளாவப் புகழ்ந்து எழுதிய தன்பெயரை அச்சில் பார்க்க விரும்பும் படிப்பாளியை அந்த இதழாளர் சந்திக்கும் போது எப்படி இருக்கும்? - வலிகள், வேதனைகள், சலிப்புகள் - இருந்தாலும் ஒவ்வொரு இதழாளரும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மிகப் பெரிய வலி என்பது - இதழாளருடன் இருந்து - பேசி - எழுதி - இணைத்து - வந்த இணை ஆசிரியர் - திடீரென ஒருநாள் - உன்னை எனக்குப் பிடிக்கவில்லை - உன் கருத்து சாதிக்காது - எனப் பிரிந்து - தனிக் கொடி பிடிப்பது, அரசியலில் மட்டுமல்ல, இதழியல் துறையிலும் நடைபெறுகிறது.

இதனால் தான் இதழாளர்களை வணங்குகிறேன். இததனை வலிகளுக்கும் இடையில் இநத மக்களை, இநத மண்ணை, இந்த மொழியை - நினைத்துத் தொடருகிற இவர்களது இதழ்ப்பணி - நெஞ்சில் வைத்து - வணங்குதற்குரியது.

இநத இதழில் - தீவிரவாதி என்பவன் யார் - என்ற கட்டுரையை இணைத்துள்ளேன், இது மின் அஞ்சலில் வந்தது. கட்டுரை எழுதும் நண்பரகள் - tsc font - வகையில் தட்டச்சு செய்தால் நான் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. எனவே படைப்பாளிகள் - குறள், சாய் இந்திரா, அவரங்கள், என்கிற வகை எழுத்துருவில தட்டச்சு செய்து மின் அஞ்சல் செய்யவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
23 - 07 - 2008


பயங்கரவாதம் என்றால் என்ன ?

இலண்டன் சுடரொளி - வைகாசி ஆனி 2008 - நீதியரசர் சி.வி.விக்னேசுவரன்

பயங்கரவாதம் பயங்கரவாதிகள் என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியததுவம் அடைந்துள்ளன. ஆனாலும் சட்டப்படி. அச்சொற்களுக்குப் போதுமான அரத்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் பயங்கரவாதிகள் யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்க நியூயோர்க் நகர இரட்டைக் கோபுர அழிப்பும் அதன் போது மரணித்த சுமார் 4000 பேரின் அகால மரணமும் பயங்கரவாதம் என்ற சொல்லால் அண்மைக் காலங்களில் முக்கியததுவம் அடைய வைத்தன எனலாம். அச்சம்பவம் நடந்த உடனேயே அமெரிக்க ஜனாதிபதி பயங்கரவாதததிற்கு எதரான போரினைத் தான் தொடங்கப் போவதாக அறிவித்தார். அப்பொழுதிலிருந்து பார்க்கும் இடமொல்லாம் பயங்கரவாதம் தலைவிரிததாடுவதாகப் பல நாட்டுத் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள்.

ஒரு நாட்டின் தலைமைப்பீடம், தமக்கு எதிராக யாரேனும் தலையெடுத்தால் உடனே அவரகளைப் பயங்கரவாதிகள் என்ற அடையாளம் காட்டுவது இன்றைய உலகில் ஓர் அரசியல் நாகரிகமாக இருந்து வருகிறது.

ஆனாலும் பயங்கரவதம் என்றால் என்ன? பயங்கரவாதி என்றால் அவர் யார் ?

சட்ட வல்லுநர்கள் இதுiவரையில் ஏற்புடைத்தான ஒரு பதிலை முன் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. குற்றமுடைய வன்முறை (criminal violence) வேறு, பயங்கரவாதம் வேறு, என்கிhறார்கள். அரச வன்முறை வேறு, பயங்கரவாதம் வேறு என்கிறார்கள். ஆனhாலும், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதில், எந்த ஒரு கருத்ெjதாருமைப்பாட்டையும், சட்ட வல்லுநர்கள், வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரியவில்லை

இலங்கையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற ஒன்று உள்ளது. 1979 ஆம் ஆண்டில், 48 ஆம் இலக்கச் சட்டம், அது, 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் வருமுன்பே, பயங்கரவாதச் சிந்தனைகளுக்குத் தலைவர்கள் இடமளித்திருந்தார்கள். ஒரு காலத்தில், எங்களுக்கு வேண்டாதவர்களைக் - கம்யூனிஸ்டுகளள் - என்று குறிப்பட்டோம். பின்னர் நக்சலைட்டுகள் என்றோம். இப்பொழுது பயங்கரவாதிகள் என்கிறோம். அதனால்தான் போலும் மேற்படி சட்டத்தில் - பயஙகரவாதம் - என்ற சொல், வரையறை செய்யப்படவில்லை

ஆனாலும், 2000 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பயங்கரவாதச் சட்டம் இந்தக் கைங்கரியத்தைத், தன்னால் இயன்ற மட்டில், பின்வருமாறு பூரத்தி செய்து உள்ளது. பயங்கரவாதம் என்ற சொல், இந்தச் சட்டத்தில் பின்வரும் செயலை அல்லது செயல் புரிவதற்கான அச்சுருத்தலைக் குறிக்கும்

அமெரிக்க நூலாசிரியர்கள், அராசாங்கத்தையோ, சமுதாயத்தையோ அச்சுறுததும், அல்லது வற்புறுததும் நோக்கில், பயத்தையும், பீதியையும் உண்டாக்கும் வண்ணம் செய்யப்படும் வன்செயல், அல்லது அதற்கான அச்சுறுத்தலையே பயங்கரவாதச் செயல்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அப்படியானால், பொதுவாக நாட்டில் நடக்கும் வன்செயல்களுக்கும், பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே, என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுகின்றது.

உதாரணமாகப், பிக்பாக்கெட் அடிக் வந்த ஒருவனை, பஸ்ஸில் பிரயாணம் செய்வோர் அடையாளம் காண்கின்றனர். அவனை மடக்கிப் பிடிக்க எத்தனிக்கின்றனர். அவனோ கத்தி ஒன்றைக் காட்டி, கிட்ட வராதே வந்தால் குத்துவேன் என்கிறான். கண்டக்டர, அவனை நோக்கி முன்னேறுகிறார். அவரைக் குத்திக் கொன்றுவிட்டு ஓடிவிடுகிறான். பிக்பாக்கெட் அடிக்க வந்தவன், அவ்வாறு கொன்ற ஒருவனின் செயல், பிரித்தானியச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலா?

ஒரு செயலானது, விளைவிப்பவரின் உயிர் தவிர, வேறு யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்துண்டாக்கினால், அது பயங்கரவாதச் செயல் என்று பிரித்தானியச் சட்டம் கூறுகிறது. அப்படியானால், பிரித்தானியாவில், மேற்படி பிக்பாக்கெட் அடிப்பவன் பயங்கரவாதியாக, அடையாளம் காணப்பட முடியுமா? முடியாது. ஆனால், குற்ற விவரிப்பு, இப்பேர்ப்பட்டவனையும், உள்ளடக்குவதாகத்தான் அமைந்திருக்கிறது.

இதன் நிமித்தமோ என்னவோ, மேற்படி இரண்டு மேலைத் தேசங்களும், சில இயக்கங்களைப் பயங்கரவாத இயக்கங்கள் என்று, சில காலத்திற்கு முன்பிருந்தே, அடையாளம் காட்ட விரைந்தனர். இந்த இயக்கங்கள் எதைச் செய்தாலும், அது பயங்கரவாதமே என்று, சொல்லாமல் சொல்லி வைத்தார்கள். அத்துடன், வெடிபொருள் வைத்திருப்பது, மக்களைப் பணயக்கைதிகளாக்குவது போன்ற சில குற்றச் செயல்களைப், பயங்கரவாதச் செயல்கள் என அடையாளம் காட்ட முற்பட்டனர். இவை, முன்னமே, அந்தந்த நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ்க், குற்ற நடவடிக்கைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

ஆகவே, எப்படி ஒரு செயலைப் பயங்கரவாதச் செயல் என்று அடையாளம் காண்பது ?


சபரிமலையில் மகர விளக்கு ( சந்தேகம் தீர்த்த நிர்வாகம் )

நன்றி : மண்மொழி இதழ் கடகம் 2038

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு தரிசனம் காண ஆண்டு தோறும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்வதும், இந்த மகர விளக்கு பற்றிப் பல்வேறு புனைவுகள், நம்பிக்கைகள் நிலவி வருவதும் நாடறிந்த செய்தி.

ஆனால் இந்த மகரவிளக்கு என்பதே மாய்மாலம். இது பக்தர்களை ஏமாற்றும் ஒரு இழிசெயல் என கேரள இடதுசாரி அரசும், திருவாங்கூர் தேவசம் நிறுவனமும், சபரிமலை தந்திரி குடும்பமும் தற்போது இதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இதன் சாரம் வருமாறு.

மகரவிளக்கு என்பதும் மகரஜோதி என்பதும் முற்றிலும் வேறு வேறானவை. மகரஜோதி என்பது விண்வெளியில் தெரியும் நட்சத்திரம். இது இயற்கையானது. குறிப்பிட்ட காலம் தோன்றி மறைவது. நம்மூர்ப் பகுதிகளில் பின்னிரவு - அதிகாலைப் போழ்தில் - வெள்ளி முளைக்கக் காண்கிறோம் அல்லவா - அதுபோல.

ஆனால் மகர விளக்கு அப்படியல்ல. இது மனிதர்களால் உருவாக்கப்படுவது. செயற்கையானது. எனினும் இது ஏதோ இறையருளால் நிகழ்வது போல ஆக்கப்பட்டு, பல இலட்சக் கணக்கான பக்தர்களை ஏமாற்றி வருவது. இந்த மகர விளக்கு போலித்தனத்தை அம்பலப்படுத்தப் பகுத்தறிவுவாதிகள் பலர் பல முறை முயன்றிரக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அரசின் காவல் துறையாலும், வனத்துறையாலும் அவர்கள் கொடூரமாக ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது அரசும், கோயில் நிர்வாகமும், கோயில் குருமார்களுமே முன்வந்து, இந்த மாய்மாலத்தை ஒப்புக் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது.

மகரவிளக்கு என்பதையும் மகரஜோதி என்பதையும் பக்தர்கள் போட்டுக் குழப்பி, பல்வேறு புனைவுகளை உருவாக்கிக் கொள்வதால் உண்மையை உணர்த்த இதை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது என சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமைக்குரு கண்டராரு மகாதேஸ்வரரு தந்திரி குறிப்பிட்டுள்ளார். ராகுல் ஈஸ்வரர் என்னும் தனது பேரப்பிள்ளை வாயிலாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் தெரிவிப்பது - அடர்ந்த காட்டில் பொன்னம்பலமேடு என்னும் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இம்மகர விளக்கை ஏற்றுகிறார்கள். முன்னாளில் ஐயப்பன் கோயிலை அங்கிருந்து அந்நாளில் பரசுராமர் தீபம் ஏற்றி வழிபட்டதாக அவர்கள் ஐதீகம். ஆகவே அந்த நாளை அவர்கள் தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் மகர ஜோதி என்று கருதி மக்கள் ஏமாறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து திருவாங்கூர் தேவசம் குழுவும் அதன் தலைவர் குப்பனும் இதை அங்கீகரித்துள்ளனர். கூடவே இந்த மகர விளக்கிற்கும் கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது எங்கள் நிரவாகத்திற்கு அப்பாற்பட்டு எங்கோ தொலை தூரத்தில் நிகழ்வது, இதை நிகழ்த்துவதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதுபற்றி நாங்கள் எந்த விளம்பரமும் செய்வதும் இல்லை. அதேபோல அதைத் தடை செய்யவும் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்கின்றனர் அவர்கள்.

இப்படித் தந்திரிகளும் கோயில் நிர்வாகமும் அறிவித்த பிறகு மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்திய இந்த மகரவிளக்கு பூசையை கேரள அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்குமா என்று கேரள அறநிலையத் துறை அமைச்சர் சுதாகரனைக் கேட்டதற்கு - உண்மை என்ன என்பதைத் தெளிவு படுத்தியாகி விட்டது. மக்களாகப் பார்த்துத்தான் இதை முடிவு செய்து கொள்ள வேண்டுமே தவிர, அரசாகப் போய் இதைத் தடை செய்ய முடியாது. அப்படித் தடை செய்தால் தேவையில்லாத பிரச்சனைகளும், வகுப்புக் கலவரங்களும் பதட்டமும்தான் இதனால் ஏற்படும். என்று தெரிவித்திருக்கிறார்.

கேரள அரசும் மக்களும் ஒரு புறம் இருக்கட்டும், மகர விளக்கு தரிசனம்காண, தமிழ் நாட்டிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கியோ, அல்லது முன்னதாகவே இதற்குச் சீட்டு கட்டியோ, எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு, பக்திப் பரவசமாய், வாழ்நாள் கடமை போல, இந்தக் கோயிலுக்குப் போய் கொட்டியழுது வருகிறார்களே, இந்தத் தமிழ் மக்களாவது திருந்தி இனி இக்கோயில் பக்கம் போகாது இருப்பார்களா?

சிலபேருக்கு தரிசனமாக இல்லாவிட்டாலும், சுற்றுலா போல சும்மா போய்ப் பார்த்தாவது திரும்பலாமே என்கிற எண்ணம் இருந்தாலும் அடர்ந்த காட்டில் அபாயகரமான வனவிலங்குகள் உலவும் சூழலில் சபரிமலை இருப்பதால், நினைத்தால் நினைத்த போது போய் வரமுடியாத நிர்பந்தம். எல்லோரும் போக வேண்டிய நாளுக்காகக் காத்திருந்து பக்தரோடு பக்தராக வேண்டிய நெருக்கடி.

இதையெல்லாம் யோசிக்க சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, சாலை வசதிகள் எல்லாம் ஏற்படுத்தி நன்கு பாதைகள் அமைத்து, ஒரு சுற்றுலாத் தலம் போல ஆக்கிவிட்டால், எந்தப் பிரச்சனையும் இருக்காது. யார் வேண்டுமானாலும் போய் ஐயப்பனை பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை வரும். இது சார்ந்து நிலவும் கட்டுக் கதைகள் மூடநம்பிக்கைகள் ஒழியும். இதற்கென்று பிரத்யேக நாளில் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் தேவை நெருக்கடியும் இருக்காது. ----செய்யுமா கேரள இடதுசாரி அரசு----


தில்லை நடராசர் கோயில்

தீட்சிதர்கள் அடாவடி - சேயோன்

சிதம்பரம் நடராசர் கோயிலில் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. முன்பு எழுந்த சர்ச்சை வடமொழிக்கும் தமிழுக்குமான சர்ச்சை என்றால் தற்பொழுது எழுந்துள்ளது - சைவத்துக்கும் வைணவத்துக்குமான சர்ச்சை. முன்பு தமிழை எதிர்த்து வட மொழிக்குத் துதிபாடிய தீட்சிதர்கள் தற்போது வைணவத்திற்கு எதிராக தங்கள் வல்லடி வம்பைத் தொடங்கியிருக்கிறார்கள்

சிதம்பரம் நடராசர் கோயில் வளாகத்துக்குள்ளேயே கோவிந்தராஜபெருமாள் கோயிலும் உள்ளது. தில்லை நடராசர் சைவர். பெருமாள் வைணவர். பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. நடராசர் கோயில் தீட்சிதர்களின் நேரடிக் கட்டுப் பாட்டில் இருக்கிறது. நடராசர் கோயிலை நிர்வகிப்பவர்கள் பொது தீட்சிதர்கள் எனப்படுகின்றனர். பெருமாள் கோயிலைப் பராமரிக்கிறவர்கள் பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள்.

நடராசர் கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள், நடராசர் கோயில் மேல் அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் பெருமாள் கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் இந்து அறநிலையத் துறைக்குக் கணக்குச் சமர்ப்பித்து தணிக்கைக்கு உட்படுத்தி, அதன் பேரில் கோயில் நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டுத் தொகையைக் கோரிப் பெற வேண்டும். தற்போது ரங்காச்சாரி என்னும் பரம்பரை அறங்காவலரே பெருமாள் கோயிலைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கோவிந்தராசப் பெருமாள் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு முன், நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மோற்சவம் மீண்டும் நடத்த வேண்டும் என்று வைணவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் நடத்தக் கூடாது என்கிறார்கள் தீட்சிதர்கள்.

இதில் இருதரப்புக் கருத்தையும் நோக்க வைணவர்கள் சொல்வது, சைவ நடராசரையும், வைணவப் பெருமாளையும உள்ளடக்கி உள்ள ஒரே கோயில் இந்த சிதம்பரம் கோயிலதான். நாடு முழுவதிலும் இருக்கிற 108 வைணவத் தலங்களில் இதுவும் உண்டு. இத்தலம் குலசேகர ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற தலமுமாகவும் விளங்குகிறது. ஆகவே அதற்கு உரிய சிறப்பு செய்யும் வகையில் இதற்குப் பரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்கின்றனர்.

ஆனால் பொது தீட்சிதர்களோ, இது தேவையில்லாத வேண்டுமென்றே எழுப்பப்படுகிற சர்ச்சை. நூறு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சர்ச்சை எழுந்த போது வந்த பார்த்த நீதிபதிகள் - பெருமாள் கோயில் கொடி மரத்தில் கொடி வளையம் கூட இல்லை. ஆகவே இங்கு கொடியேற்றும் மரபு இருந்ததாகக் கருத முடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். என்பதாக அதைக் காரணம் காட்டி, காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயங்களை மாற்றலாமா என்கிறார்கள்.

இப்பிரச்சனை சர்ச்சையாக பெருமாள் கோயில் அறங்காவலர்கள் இதை இந்து அறநிலையத் துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் செல்வராஜ் கவனத்திற்குக் கொண்டு செல்ல, அவர் தலைமையிலான குழு, இரு தரப்பையும் அழைத்து வைத்துப் பேச்சு வார்த்தை நடத்திச் சென்றிருக்கிறது. முடிவு என்ன என்பது தெரியவில்லை. கேட்டால் பிரச்சனையை சென்னை ஆணையரின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம் - அவரே இறுதி முடிவு எடுப்பார் எனக் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் நாம் கூற விரும்புவது, சம்பிரதாயம், மரபு என்பதையெல்லாம் காரணம் காட்டி, பொது தீட்சிதர்கள் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை தடுக்க அனுமதிக்கக் கூடாது.

கொடி மரத்தில் கொடி வளையம் இல்லை என்பதையெல்லாம் காரணமாக ஏற்க முடியாது. கொடி யேற்றும் மரபு இல்லை என்றால், கொடி மரம் எதற்காக அமைக்க வேண்டும். ஆகவே மரபு இருந்துதான் கொடி மரம் நிறுவியிருக்கிறார்கள்.

தவிர, நடராஜர் ஆலயத்திலேயே முருகன் கோவில், அம்மன் கோவில்கள் எல்லாம் இருந்து அது அதற்கும் தனித் தனியே கொடியேற்றப்பட்டு உற்சவங்கள் நடக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, பெருமாள் கோயிலுக்கு மட்டும் ஏன் தடை சொல்ல வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

இது ஒரு புறம் இருக்க, மரபோ, சம்பிரதாயமோ அது நிலவியதோ, இல்லையோ, இன்று ஒரு மதப்பிரிவினர் தங்கள் கோயிலுக்குத் திருவிழா செய்ய வேண்டும் எனக் கோரும் பொழுது அதை ஒரு சனநாயகக் கோரிக்கையாக ஏற்று, அடுத்த கோயில்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அதை நடத்த அனுமதிக்க வேண்டுமே யல்லாது, விழாவுக்கே தடை சொல்ல, விதிக்க்க் கூடாது.

இத்துடன் நாம் கோர வேண்டியது, சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்களின் தனி சமஸ்தானம் போல நீடிக்கிற வரைக்கும் இது போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏதாவது வந்து கொண்டுதான் இருக்கும். தீட்சிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த, நீடிக்கச் செய்ய அடிக்கடி இப்படி எதிலாவது குறுக்கிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆகவே உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து, உடனடியாக சிதம்பரம் நடராசர் கோயிலை அரசே ஏற்று இந்து அறநிலையத்துறையின் கீழ கொண்டு வரவேண்டும்.

அடுத்து முக்கியமான ஒன்று. இந்து இந்து என்று இந்து எனப்பட்டவர்கள் அனைவரையுமே ஏடாமோடியாக எதிர்க்கிறவர்களே, இந்துவிலேயே எத்தனை இந்து இருக்கிறார்கள் பார்த்தீர்களா.. இந்துவிலேயே தமிழ் இந்து, வடமொழி இந்து, பார்ப்பனிய எதிர்ப்பு இந்து, பார்ப்பனிய ஆதரவு இந்து, சாதி ஒழிப்பு இந்து, சாதிக் கலப்பு இந்து, பகுத்தறிவு இந்து, மூடநம்பிக்கை இந்து, என்று எத்தனை இந்துக்கள். இந்த இந்துக்களில் இந்தப் பாகுபாட்டைப் புறந்தள்ளி கண்மூடித்தனமாக நாம் எல்லோரையும் எதிர்க்கப் போகிறோமா, அல்லது ஒடுக்கப்பட்டுப் போராடும் இந்துக்கு நாம் குரல் கொடுக்கப் போகிறோமா என்பதையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் நாம் ஒடுக்கப்பட்டு போராடும் இந்துக்களுக்குக் குரல் கொடுப்பதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஒன்றே. இந்துமத அடிப்படைவாத சனாதனச் சக்திகளை வீழ்த்தும், இநதுக்கள் எனப்படுவோரை சனநாயகப்படுத்தும், அல்லாது முரட்டுத்தனமாக எல்லோரையும் எதிர்த்தால் இது மீண்டும் மீண்டும் இந்துமத பார்ப்பனிய அடிப்படை வாத சக்திகளுக்கு உரமூட்டுவதாய், அது மேலும் மேலும் தங்கள் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதாகவே முடியும்.

அந்த வகையில் இன்று சிதம்பரம் கோயிலில் எழுந்துள்ள சர்ச்சை, மேல் நிலை எதிர் கடை நிலை மக்களுக்கான சர்ச்சையாக இல்லா விட்டாலும், சர்ச்சைக்குள்ளான இருபிரிவில் பொது தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரிவாகவும், பரம்பரை அறங்காவலர் பாதிக்கப்பட்ட, உரிமை மறுக்கப்டும் பிரிவாகவும் இருப்பதில் நாம் இந்த அறங்காவல் பிரிவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு விழாக்கள் நடைபெறுவது போலவே, பெருமாள் கோயிலுக்கும் விழாக்கள் நடத்தப்பெற, சைவ இந்துக்கள் பெற்றுள்ள உரிமையை வைணவ இந்துக்களும் பெற உரிய வழிவகை காணக் கோரவேண்டும்.


ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

நன்றி : மண்மொழி இதழ் - கடகம் 2038

தொழில் மற்றும் தொழில் நுட்பத் துறையில் அதி விரைவாக முன்னேறிய, உழைப்புக்குத் தயங்காத சுறுசுறுப்பான நாடு என உலக அளவில் போற்றப்படுவது ஜப்பான்.

ஆனால் அந்த ஜப்பான் நாட்டில்தான், பணிச்சுமை காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஐந்தாண்டுகளில் இத்தற்கொலைகள் இருமடங்காகியுள்ளதாகவும் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நவீன தகவல் தொழில் நுட்பப் பணிகளில 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் அதற்கு முயன்றவர்கள் 40 பேர். என்றால் 2007 ஆம் ஆண்டு அது 81 ஆக உயர்ந்துள்ளது.

இது தகவல் தொழில் நுட்பத் துறைகளில் மட்டும் உள்ள கணக்கு. மொத்தக் கணக்கு என்று பார்த்தால் 2006 இல் ஜப்பான் நாடு முழுக்கத தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 32,155. எனப்படுகிறது. இவர்கள் பல்வேறு காரணங்களுககாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

தகவல் தொழில் நுட்பப் பணிகளில் வேலை செய்பவர்கள் நாளுக்கு 8 மணி நேர வேலைக்கு அப்பால் மாதம் 80 முதல் 100 மணி நேரம் வரை கூடுதல் பணி பார்க்கின்றனராம். இதில் 10 விழுக்காட்டினர் 160 மணி நேரம் வரையும் கூடுதல் பணியாற்றுகின்றனராம். இப்படிப் பார்த்தால் சராசரி தினம் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை இவர்கள் கூடுதல் பணி பார்க்கின்றனர். ஆக தினம் மொததப் பணி நேரம் 11 மணி முதல் 13 மணி வரை ஆகிறது. இதற்கு அப்பால் பணியிடத்திற்குப் போய்வர ஆகும் நேரம் தனி. ஆக 1 நாளைக்கு 24 மணி நேரத்தில் பாதி நேரம்12 லிருந்து 15 மணிக்கு மேல் இவர்கள் பணிக்காகவே செலவிட்டால், பிறகு ஓய்வு, உறக்கம், மனைவி, மக்களோடு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தல் என்கிற வாழவியல் அம்சங்களுக்கு நேரம் ஏது? இதனாலேயே மாதம் 80 மணிக்குமேல் கூடுதல் பணிபார்ப்பவர்கள் இறந்தால் அவர் பணி பார்க்கும் நிறுவனம், இழப்பீடு வழங்க அரசாங்கம் சட்டம் இயற்றியிருக்கிறது.

இப்படிப் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்தான் - மனநிம்மதியை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது அதற்கு முயல்கின்றனர்.

இதனால் தற்பொழுது ஜப்பான் நாட்டு அரசு தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறதாம்.

ஓடி, ஓடி உழைக்க வேண்டியதுதான். ஆனால் எதற்கும் ஓர் அளவு உண்டு. இல்லையா. வாழ்க்கைக்குத்தான் சம்பாத்தியமே தவிர, சம்பாத்தியத்திற்காக வாழ்க்கை இல்லை. இப்படி வாழ்க்கையைத் தொலைத்து சம்பாதிக்க விழைபவர்கள்தான் கடைசியில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இதை உயிரோடு இருப்பவர்கள் எச்சரிக்கையாய்க் கொள்ள வேண்டும். இவர்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.

நன்றி : மண்மொழி இதழ் - கடகம் 2038

ஜப்பான் ஒரு வீரியம் மிக்க நாடு, இதன் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள், இதனை வீழ்த்தவே செய்வார்கள், அன்று அணுகுண்டு, இன்று பாலியல், பொழுதுபோக்கு, போதை, சூதாட்டம், என்கிற - மாற்று வித்தைகள். அணுகுண்டைவிட இவை வீரியம் மிக்கவை. மக்களின் நினைவுகளில், செயல்களில், வாழ்முறைகளில் - அதிர்வூட்டுபவைகள். இதனால் அழிவு வரும். ஆய்வாளர்கள் இந்த நோக்கில் காண வேண்டும். ஒரு நாட்டை அழிக்கத் திட்டமிடுபவர்களின் சூழ்ச்சி வலைகள் இவை. இந்த நோக்கில் ஆய்வு செய்தால் உண்மை விளங்கும்.


எமக்கு வந்தவை, நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை

()

09முதல் 18-5-2008 - சங்கமம் 2008 - கோடை முகாம் 7 - அழகர்கோயில் மகாத்மா பள்ளியில் நடைபெற்றது - குடும்ப வன்முறைகளாலும், சித்திரவதைகளாலும் பாதிக்கப்09முதல் 18-5-2008 - சங்கமம் 2008 - கோடை முகாம் 7 - அழகர்கோயில் மகாத்மா பள்ளியில் நடைபெற்றது -

13-06-2008 செஞ்சி - மணவிழா நிகழ்வு - மணமக்கள் - நா.குமார், தி,கனிமொழி - மணவிழாவில் நூல் வெளியிட்டுள்ளார்கள். அதில் மணமும் மானமும், நனியுயர் நாகரீகமும் நற்றமிழர் திருமணமும், தமிழர் திருமணம், புரட்சித் திருமணத்திட்டம், பண்டைய தமிழரின் திருமணம், தமிழா நீ எங்கே, சுயமரியாதைத் திருமணம், பெரியார் அறிவுரை, தன்மான சுயமரியாதைத் திருமணமும் தடுமாறும் தமிழர் திருமணமும், வாழ்வியல் அமுதம், குறள்வழித் திருமணம், தமிழராய் வாழ்வோம் - என்கிற படைப்பாக்கங்கள் உள்ளன.

14-06-2008 சென்னை - தமிழ்ப் படைப்பாளிகளின் பேரியக்கம் - தொடக்க விழா - கருத்துப் பகிர்வு - தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பழமலை.

28-06-2008 பொள்ளாச்சி இலக்கியக் கழகத்தின் சார்பில் சேக்கிழார் செந்தமிழ் தலைப்பில் பா.மனோன்மணி சொற்பொழிவு

13-07-2008 மதுரை, பெரியார் நிலையம் அருகில் அறிஞர் குணாவின் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூல் வெளியீட்டுவிழா - தொல்,திருமாவளவன், பழ, நெடுமாறன், அருகோ, அரிமாவளவன்

14-07-2008 சேத்துப்பட்டு, இல்லற ஏற்புவிழா - மணமக்கள் - வ.குமரன், செ.கோமதி - தலைமை இரா. திருமுருகனார், வாழ்த்துவோர் ம.இலெ.தங்கப்பா, இராந்திரசோழன், வ.ந.தன்மானன்

17-07-2008 சென்னை - கணித்தமிழ்ச் சங்கம் - சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச தமிழ்க் கணினி பயிற்சிப் பட்டறை, தொடர்பாளர் மா.ஆன்டோ பீட்டர்.

15-08-2008 வரை - சென்னை தமிழ்மண் பதிப்பகத்தின் முன்பதிவுத் திட்டம், சதாசிவப்பண்டாரத்தார் ஆய்வுகள் 10 தொகுதிகள் (உரூ1150), முதுமொழிக் களஞ்சியம் 5 தொகுதிகள் (உரூ 600)

16-08-2008 மதுரை - உலகத் தமிழர் பேரமைப்பு - ஆறாம் ஆண்டு நிறைவு விழா. உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. கருத்தரங்கம், பொது அரங்கம், இசை அரங்கம் - என நடைபெற உள்ளது. உலகத் தமிழர்கள் கூடுகிறார்கள். கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.


தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061