இதழ் எண் : 71
30 டிசம்பர் 2007


அன்புடையீர். வணக்கம்,

2008 ஆம் ஆண்டு தொடங்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் எனக் கேட்டு மகிழ்கிறோம். இந்த இதழிலிருந்து சிற்றிதழ்ச் செய்தி புதிய வடிவத்துடனும், உள்ளடக்கத்துடனும் வெளிவரும். புதிய விடிவை நோக்கித் தமிழ் மக்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவுத் தெளிவும், துணிச்சலும், தொடர் உழைப்பும், அனைத்து மக்களையும் திரட்டி எழுகிற எழுச்சியும் கட்டாயம் வெற்றி பெறும் என்பதை நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உலகம் முழுவதிலும் அடக்குமுறையும், வணிகம் செய்ய எப்படி வேண்டுமானாலும் கீழிரங்குவது என்ற தன்மையும் மேலெழுந்து கொண்டிருக்கிறது. 1974 களில் இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தில் இயங்கிய போது இரஷ்ய நாட்டை சமாதானப் புறாவாக, வெண்புறாவாக வரைந்தும், பேசியும், எழுதியும் கேட்ட கண்ணும் காதும் இன்று அந்த நாடுதான் போர்விமானங்களையும், துப்பாக்கிகளையும் ஏற்றுமதி செய்கிறது என்பதைக் கேட்கும் பொழுது தலை சுற்றுகிறது.

இருந்தாலும் இந்தப் புதிய ஆண்டை நம்பிக்கையோடு எதிர் நோக்குவோம்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
30 - 12 - 2007


கார்மேகம் அவர்களிடமிருந்து படித்வை


தலைவராக இருப்பவர் தன் பணியாளர்களிடம்

அவர்கள் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிப்

பேச அழைக்கும் பொழுது....

1) தலைமைக்குக் கீழே பணியாற்றுபவர்கள் அனைவரும் சரியாகச் செய்வார்கள் என்று நம்பமுடியாது. மெத்தனமாக இருக்கலாம். செய்து விடுவேன் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை - என்று சொல்லிக் கொண்டே நாள்களைக் கடத்தலாம். அல்லது சரியான நேரத்தில் செய்து கொடுக்காமல் ஏமாற்றலாம். எந்த நிலையில் இருந்த்ாலும் அவர்களது செயல்படாத தன்மையை பண்பாகச் சுட்டிக் காட்டவேண்டும். செயல்படாததனால் ஏற்பட்ட இழப்பை ஒப்பிட்டுக் காட்டவேண்டும். திட்டுவது போல இருக்க வேண்டும் ஆனால் யாரையும் தனிமைப்படுத்தித் திட்டக்கூடாது. அவர்கள் உணர்ந்து அடுத்து இயங்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்,

2) தலைமைக்குக் கீழே பணியாற்றுபவர்களுக்கு - அவர்கள் எதை முதலில் செய்ய வேண்டும் என்பது தெரியாது. எதையாவது செய்து கொண்டிருக்காமல், எதை முதலில் செய்ய வேண்டும் என்றும் அடுத்து எதை என்றும் வரிசைப்படுத்திக் கொடுக்க வேண்டும்,

3) தலைமைக்குக் கீழே பணியாற்றுபவர்களிடம் அவர்களது பணிபற்றி தெரியாதது போலக் கேட்ட வேண்டும். ஆனால் அவரகள் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகள் பற்றியும் தலைமையில் உள்ளவர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அவர்கள் தவறாகத் தன் பணியைக் குறிப்பிடும் பொழுது உனது பணி இதுதான் எனச் சுட்டிக்காட்ட வேண்டும்,

4) தலைமைக்குக் கீழே பணியாற்றுபவர்கள் செய்வதில் உள்ள தவறுகளை உடனடியாகச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்து இப்படி வரக்கூடாது எனத் துணிச்சலாக, உறுதியாக எடுத்துக் கூறவேண்டும். தவறாகச் செய்வதற்கு எத்தனைச் சான்றாதாரங்கள் காட்டினாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

5) தலைமைக்குக் கீழே பணியாற்றுபவர்களிடம் தகவல்கள் கேட்கும் பொழுது குத்துமதிப்பாக இவ்வளவு என்று சொல்பவர்களைச் சரியாக, அன்றைய நிலவரப்படி என்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்,

6) மிகப்பெரிய செயற்பாடுகளைக் கூட சரியாகத் திட்டமிட்டால் எளிதாகச் செய்து விடலாம். பணியாற்றுபவர்களிடம் செயற்பாடுகளைச் செய்யப் பணிக்கும் பொழுது அதனை எப்படி எளிமையாகச் செய்வது என்பதற்குரிய குறிப்புகளைக் கொடுத்து உதவவேண்டும்,

7) இறுதியாகப் பணியாளர்களின் தேவைகளைக் கேட்க வேண்டும். இயலுகிற நடைமுறைகளை அடுத்த நாளே செய்வதற்கான முயற்சி எடுக்க வேண்டும்,

8) பணியாளர்களை அழைத்து, நடக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றிப் பேசி - பேச்சை முடிக்கும் பொழுது அவர்கள் மகிழ்வாக இருக்கைக்குச் செல்லும் வகையில் பேசி முடிக்க வேண்டும்,



நம்மவர்களுககு நாம் தொழில் நுட்பத்தைக் கற்றுத தரவில்லை.


()

நம் தமிழ் மாணவர்களுக்கு நாம் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தரவில்லை. பாடம் பாடம் என்று கண்டதை மனப்பாடம் செய்வதையே பெரிது படுத்துகிறோம். கூர்த்த அறிவுக்கும், திறன் வளர்ச்சிக்கும் நாம் அடித்தளம் அமைக்கவில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்று நெருக்குகிறோம். புரியாததை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர்கள் அனைத்தும் பெற்றுவிட்டதாகப் பெருமை பேசுகிறோம். இது நம்மேல் சுமத்துகிற சாபக்கேடு. பல காலங்களாக எதையுமே சொல்லிக் கொடுக்காமல் சீரழிக்கப் பட்டோம். இப்பொழுது எதை எதையோ சொல்லிக் கொடுக்கப்பட்டு சீரழிக்கப் படுகிறோம். இதில் வேடிக்கை என்ன வென்றால் சீரழிக்கப் படுவது தெரியாமலேயே பணத்தைச் செலவழித்துச் சீரழிப்பைப் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம். கருத்துகளை எளிமையாக பயன்பாட்டுக்கு உதவுகிற வகையில் சொல்லிக் கொடுப்பதில்தான் கல்வியின் உயர்வே உள்ளது.

தற்பொழுது blockspot என்ற வலைப்பூக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளன. எளிமையாக, யார் வேண்டுமானாலும், செலவில்லாமல் வலையேற்ற இயலும். இது பற்றிய விளக்கத்தை யாரும் யாருக்கும் சொல்லித் தருவதில்லை.

நண்பர் அரசெழிலன் திருச்சியிலுள்ள திருவெரும்பூரில் வாழ்ந்து கொண்டிருப்பவர். மாதவன் மின்பொருள் அங்காடி வைத்திருப்பவர். தமிழ் உணர்வாளர். பகுத்தறிவாளர். உழைப்பாளி. நாளை விடியும் என்ற இருமாத இதழைத் தொடர்ந்து நடத்துபவர். விழிப்புணர்வுச் சுற்றறிக்கைகளை அச்சாக்கி அனைவருக்கும் அனுப்புபவர்.

இவர் தமிழம் இணையதளத்தின் பார்வையாளர். ஆனால் இணையதள வடிவமைப்பு பற்றி எதுவும் தெரியாது. கடந்த திங்களில் புதுச்சேரி நண்பர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி ஒரு நேர்முக பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். ஒருநாள் பயிற்சி அது. அதில் இவர் கலந்து கொண்டார். பயிற்சி முடித்து வந்த ஒரு வாரத்தில் இரண்டு வலைப்பூக்களை உருவாக்கி விட்டார். என்னைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். எப்படி இவரால் முடிந்தது. தள்ளத் தள்ள பக்கங்கள் வந்து கொண்டே இருந்தன. அத்தனை பக்கங்களும் பகுத்தறிவை அறிவியலை நுட்பத்தை காட்டுகிற உயர் கருத்துகள். (www.naalaividiyum.blogspot.com - www.arivuvhchudar.blogspot.com)

கணினிப் படிப்பு படித்தவர் வெளிநாட்டுக்குச் சென்று பொருளீட்ட வேண்டும் என்று தான் நினைக்கிறார். கருத்துச் செறிவோடு இயங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகி வருகின்றனர். எனவே தொழில் நுட்பப் படிப்பை எளிமைப் படுத்தி கருத்து உள்ளவர்களுக்கு இனிப் பரவலாக்குவோம். நமக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தை நம் மக்களோடு நாம் பகிர்ந்து கொள்வோம்.



என்ன நடக்கிறது மலேசியாவில்...


()

இந்தியாவைப் பேர்லவே மலேசியாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலோயாவுக்கு (மலேசியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்போது ஆங்கிலேயர்கள் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்தனர். உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கம் பூர்வீக மலாய் மக்களைப் போலவே குடியுரிமை வழங்க வேண்டும் - எனபது தான அந்த நிபந்தனை. மலேயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார். யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப்பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும் மேம்பாடுகளையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமைமிக்குடைய தமிழர்கள் மலாய் மொழியைக் கற்று தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீன மொழியும் தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப்பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக்காட்சியும் இருபத்து நான்கு மணி நேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப் படங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் 'பலர் தமிழர்கள் என்பது உலகறிந்த உண்மை. நடிகவேள் எம்ஆர் ராதாவின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால். தாய்நாட்டுத் தமிழனைவிட மலேசியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான். அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும். மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ்ப் படங்கள் திரையிடப் படுகின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப் படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேசியத் தமிழர்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் மலேசிய இந்தியன் காங்கிரஸ், இதன் புகழ் பூத்த தலைவராய் இருக்கும் டத்தோ சாமிவேலு அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார்.இவரோடு பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களையல்லாமல் 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருக்கின்றனர். சிற்றூர்களிலும் நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் நீதிபதியாகவே அஜீத்சிங் என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்றுகின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்,

1965 ஆம் ஆண்டு வரை ஒரு மாநிலமாயிருந்த சிங்கப்பூர். தனிநாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப்பட்டது. சினர்களுக்கு மட்டுமல்ல. எல்லா இனமக்களுக்கும் பொதுவான நாடு என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார், ஆனால் மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழியாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும் அரசுப் பதவிகளுக்கும் வரமுடியும் என்ற நிலை வந்தது.

மலேசியாவின் மண்ணின் மைந்தர்கள் எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டனர். அவர்கள்,

1. பரம்பரை பரம்பரையாக மலேசியாவில் வாழவோராயிருக்க வேண்டும்,
2. மலாய் மொழியைத் தமாய்மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.

இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே பூமிபுத்தரா என அழைக்கப்படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி மலேசிய அரசாங்கம் தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு எனப் பிரகடனப் படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலககெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும் பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூகத்தின் மக்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும் முன்னேற்றமும் இல்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையிலேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும். இந்தியர்களும் வர்த்தகத்திலும் வேலை வாய்ப்பிலும் மிக முண்ணனிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப்புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட்கொண்டது.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டும் எனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும் சீனர்களுக்கும் ரத்த வெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெருவெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராக இருக்கும் இந்தியர்களுக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது. மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க்கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்த மலேசிய அரசு. இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தான் இருக்கிறது. இலங்கையைப் போலவோ. ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ -இன ஒதுக்கல் - எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கின்ற செல்வத்தைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில்தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர். கடையநல்லூர் தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதைவிட வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்கிற எந்த நிபந்தனையையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

இதுதான் மலேசியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேசியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால் அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படும் பொழுது அங்கே குடியிறுப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோயில்களோ, பள்ளிவாசல்களோ புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. பத்து கோயில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோயிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இஸ்லாமிய அரசு உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோயில்களைத் தடை செய்வதில்லை. செந்தூல் முருகன் கோயிலும், பத்துமலை முருகன் கோவிலும் தைப்பூச விழாக் கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லீம்கள் இருக்கும் நாட்டில் 4000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உண்மையான வரலாறு அல்லவா?

இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும் புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத்தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல்களும் ஆயிரக்கணக்கில் அப்புறப்படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது,

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அஙகே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள் இதுநாள் வரை இதைப் பிரச்சனை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர்களாகவும், உயர்தொழில் நுட்பக்காரர்களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் - இந்துக் கோவில்களுக்கு ஆபத்து - என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேசியா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தமிழ் மொழிப்புலம் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது.

அங்கே அண்மைக்காலத்தில் பாரதீயப் பண்பாட்டு லிழா - என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளை யெல்லாம் நடத்தத் தொடங்கினர், பாரதீயம் என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டில் இப்படிப்பட்ட ஒரு விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் சமஸ்கிருத ஸ்லோகம் - பஜனை - ஆன்மீகப் பயிற்சி - என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ் பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக் கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் கொண்டது என்பதைக் கண்டு கொண்ட மலேசியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேசியா திரும்பி விட்டனர்.

இந்தியர்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? ஹிண்ட்ராப் (Hindu Rights Action Force) என்பதுதான். அதாவது மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்ட மெனில் தமிழர் கோரிக்கைக் குழு எனப் பெயர் சூட்டியிருக்கலாம், அல்லது இந்தியர் நலம் நாடும் சங்கம் என்று சொல்லியிருக்கலாம்,இடையில் ஹிந்து உரிமை எங்கிருந்து வந்தது? ......................

2007 டிசம்பர் 09 ஜனசக்தி இதழில் திரு. வீரபாண்டியன்.(சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)



எல்லா மதமும்


அல்லா என்றே சொல்வோம்
அரி கிருட்டிணன் அவனே என்போம்
வல்லான் ஏசு மைந்தன்
குரு கோவிந் என்றே சொல்வோம்

பொல்லா மனிதர் கூட்டம்
அவர் இல்லா மதத்தைப் படைத்தார்
எல்லா மதமும் ஒன்றே
அவை சொல்லுவதெல்லாம் அன்பே

இறைவன் படைத்த மனிதன்
அவன் இறைவனைப் படைத்துப் பிரித்தான்
வேத மறையில் சொல்லாப் பொய்யால்
பல கதைகளைச் சொல்லி ஏய்த்தான் ஏய்த்தான்

-பொள்ளாச்சி பா.பொன்சிங்


பண்பாட்டுக் கிசைவாகப் பண்பாடு


பண்பாட்டுக் கிசைவாகப் பண்பாடு
தமிழிசைப் பண்பாடு - தமிழன்
வரலாற்று வரிகளையே நீபாடு - வீர
வரலாற்று வரிகளையே நீபாடு.

ஈகை இரக்கமுடன் வீரம் விருந்தோம்பல்
பண்பாடு இவை எம் பண்பாடு
ஒழுக்கம் பொதுவுடமை பணிவுதுணிவு
எல்லாம் பண்பாடு தமிழன் பண்பாடு.

அறிஞர் வியந்துபட
உலகம் போற்றி நிற்கும்
பண்பாடு இது எம்
பண்பாடு

வந்தோரை வரவேற்கும் பண்பாடு
தமிழன் பண்பாடு
தமிழன் வரலாற்றில் பண்பட்ட தனியேடு
தமிழன் தனியேடு.

பண்டைத் தமிழர்களின் செயற்பாடு
இந்த செயற்பாடு
பண்பட்ட பழந்தமிழர் பண்பாடு
நல்ல பண்பாடு

பெற்றோரைப் போற்றி கற்றோரைக்
காமுறுதல் பண்பாடு எம் பண்பாடு
தமிழன் வரலாற்றில் வழிவந்த
பண்பாடு எமது பண்பாடு

தாயைத் தமிழ் மொழியை
நாட்டைப் பழித்தவனை
பழிவாங்கி
மண்ணை கை பதிக்க
அறிவைப் பாழ்படுத்த
வந்தவனின் உயிர் வாங்கி
களத்தில் வாகை சூடிய
எம் வரலாறு தமிழர்
பெருமைமிகு போர் ஏடு.

பண்டைய பண்பாட்டை
வீரம் மிகு வரலாற்றை
வீரம் இணைந்து நிற்கும்
வேங்கைகளின் வரலாற்றை
வீறுகொண்டு எழுந்து நீபாடு.

- வெ. இளங்குமரன் -
நன்றி தமிழத் தேசியத் தொலைக்காட்சி.


எமக்கு வந்த - நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை


()

(o) 16-12-07 செங்கல்பட்டு - தமிழக இளைஞர் இயக்கம் முன்னெடுக்கும் இரண்டாம் ஆண்டு தமிழகக் கலைவிழா. தோழர் சீமான், கவிஞர் இன்குலாப் சிறப்புரை. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

(o) 22-12-07 பொள்ளாச்சி - ஓவியர் ஜீவா அவர்களின் இந்திய சினிமா ஒரு பார்வை என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

(o) 2008 சனவரி 5,6 தேதிகளில் வேலூர் அண்ணா கலை அரங்கத்தில் சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர் வெளியீட்டு விழா மற்றும் இளைஞர்கள் மாநாடு, மதவெறி மற்றும் எகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு.

(o) 4-1-08 வெள்ளி மாலை 5.30 மணி - இசாக்கின் ஒரு குடியின் பயணம் - குறும்படம் திரையிடல் - குறுந்தகடு வெளியிடல் - இடம் - சிவ் ஸ்டார் உணவகம் - கராமா, துபாய் - நிகழ்த்துவது துவக்கு இலக்கிய அமைப்பு மற்றும் தாய்மண் வாசகர் வட்டம்




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061