இலக்கிய இணைய இதழ்
15 அக்டோபர் 2007 - இதழ் எண் : 68

அன்புடையீர். வணக்கம்,

சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழின் 68 ஆவது இதழ் இது. படைப்பாளிகள் தங்களது படைப்பாக்கங்களை அனுப்பி வைக்கவும். படிப்பாளிகள் தாங்கள் படித்த உயரிய செய்திகளை அனுப்பி வைக்கலாம். நல்ல கருத்துகளின் பரவலுக்கு இதழ்கள் உதவுமானால் அதுவே மக்களை வளர்த்தெடுக்கும். மக்கள் தொடர்பு ஊடகங்கள் அனைத்தும் இந்த நோக்கில் தான் இயங்க வேண்டும். இந்தக் கோணத்தில் மக்கள் தொலைக்காட்சி மிகச் சிறப்பாகச் செயலாற்றுகிறது. சிற்றிதழ்ச் செய்தி மக்கள் தொலைக்காட்சியை வாழ்த்துகிறது.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 10 - 2007



கல்வி என்றால் என்ன ? (கட்டுரை)

பொள்ளாச்சி நசன்


ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடத்துவார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.

இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.

இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. இந்த மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை. இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.






சிக்கனமாகச் சில சொற்கள்....

இவ்வுலகில் எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது, ஆனால் பெரும்பாலானவற்றை வாங்க முடியும். சிக்கனமாக இருக்க முடிந்தால் , ஒரு கதையுடன் தொடங்குவோமா?

ஒருவர் முகமது நபியிடம் வந்தார். ஊரில் ஒரு பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மீதமிருக்கும் கட்டடப்பணியை முடிக்க ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. முகமது நபியிடம் செய்தியைச் சொன்னார்.

முகமது நபி கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு பெரிய பணக்காரரைப் பற்றிச் சொல்லி அவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். கண்டிப்பாக அவர் உதவி செய்வார் என்று நம்பிக்கை ஊட்டினார். வந்தவர் மகிழ்ந்து போனார். வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உடனே பக்கத்து ஊருக்குப் பயணமானார்.

இவர் பக்கத்து ஊருக்குப் போனபோது, அந்தப் பணக்காரர் தன்னுடைய வேலைக்காரனின் முகத்தில் ஓங்கி ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தார். சரியாகப் பத்து குத்துகள். பணக்காரர், வேலைக்காரனைப் போட்டுக் குத்துவதைப் பார்த்து அப்படியே வெலவெலத்துப் போனார் இவர். இந்த நேரத்தில் போய் இவரிடம் எப்படி உதவி கேட்பது? என்று அச்சமாகவும் இருந்தது. வேலைக்காரன் வெளியே வந்ததும் அவனிடம் விசாரித்து விட்டு, பணக்காரனிடம் போவது என்று முடிவு செய்து கொண்டு, வெளியே காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த வேலைக்காரன் வெளியே வந்தான். அவனிடம், பணக்காரர் அவனை அடித்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அது ஒண்ணும் இல்லீங்க. கடையில போய் துவரம்பருப்பு வாங்கி வரச் சொன்னாரு. வர்ற வழியில பத்துப் பருப்புங்க கீழ விழுந்துடுச்சு. அதுதான் பத்து குத்து குத்துனாரு முதலாளி - என்றான் வேலைக்காரன்.

திகைத்துப் போனார் இவர். கூடவே ஒரு சந்தேகமும் வந்தது. பத்தே பத்து பருப்பு சிந்தினதுக்கே இப்படிப் போட்டு குத்துற மனுசன், எப்படி அவ்வளவு பெரிய தொகையைத் தருவாரு? - இவர் எந்த முதலாளியைப் பார்க்க வந்தாரோ, அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்பினார்.

முகமது நபியிடம் போய் செய்தியைச் சொன்னார். முகமது நபி, பரவாயில்லை. மறுபடியும் போய் அவரைப் பாருங்கள், அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்றார். இவரால் மறுக்க முடியவில்லை. முகமது நபியே சொல்லிவிட்டார், போய்த்தான் பார்ப்போமே என்று மறுபடியும அந்த ஊருக்குப் போனார்.

இவர் போனபோது, அந்தப் பணக்காரரின் வீட்டுக்கு முன்னால் கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் எட்டிப் பார்த்தார். அதே பணக்காரர். அதே வேலைக்காரன். இப்போது பணக்காரர், கையில் வைத்திருந்த சவுக்கால் வேலைக்காரனை அடித்துக் கொண்டிருந்தார்.,

சரியாகப் பத்து சவுக்கடிகள். இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரை விசாரித்தார்.

அது ஒண்ணும் இல்லீங்க. இந்த வேலைக்காரன் எண்ணெய் வாங்கிட்டு வந்திருக்கான். வர்ற வழியில பத்து சொட்டு எண்ணெய் கீழ சிந்திடுச்சாம். அதுதான் பத்து சவுக்கடி குடுக்கறாரு முதலாளி... என்றான்.

இவருக்கு இதயத்துடிப்பே ஒரு வினாடி நின்றுவிட்டது. பத்து சொட்டு எண்ணெய் கீழே சிந்தியதற்கு இந்த அடி அடிக்கிற மனிதர், எப்படி அவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகத் தருவார்? நம்பிக்கையற்றவராக அவரைப் பார்க்காமலேயே மீண்டும் ஊர் திரும்பினார்.

முகமது நபி விசாரிக்க, நடந்ததைச் சொன்னார். அடடா தப்புப் பண்ணிட்டீங்களே,, அவரைப் பாத்துட்டுல்ல வந்திருக்கணும்? சரி மறுபடியும் போங்க. இந்தத் தடவை என்ன நடந்தாலும் அவரைப் பார்க்காம வந்துடாதீங்க. போங்க என்றார் நபி. மறுபடியும் அதே ஊருக்குப் போனார்.

இந்த முறை இவர் எதிர்பார்த்ததைப் போல் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பணக்காரர் வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். யாருடனோ சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். இவர் பணக்காரருக்கு வணக்கம் சொல்ல, அவரும் மிகப் பணிவாக பதில் வணக்கம் சொல்லி வரவேற்றார். தன்னுடைய ஊரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதையும், பணம் இல்லாமல் வேலை பாதியிலேயே நிற்பதையும் சொன்னார்.

அடடா, நல்ல காரியத்தைப் போய் தள்ளிப் போடலாமா? முதல்லேயே வந்திருக்கக்கூடாது? - என்று உரிமையாகக் கடிந்து கொண்டார் அந்தப் பணக்காரர். உடனே வீட்டுக்குள்ளே போய் கேட்ட முழுத்தொகையையும் எடுத்து வந்து கொடுத்தார்.

வந்தவர் அசந்து போனார். அந்தப் பணக்காரர் அப்படி நடந்து கொள்வார் என்பதை இவர் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பிரமிப்பு மாறாமல் பணத்தோடு முகமது நபியிடம் வந்தார். பணக்காரர் பணம் கொடுத்த விவரத்தைச் சொன்னார்.

பத்தே பத்து பருப்புகளுக்காகவும், பத்து சொட்டு எண்ணெய்க்காகவும் வேலைக்காரனை அந்த அடி அடிச்சவரு, எப்படி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையா குடுத்தாரு? - என்று ஆச்சரியம் விலகாமல் நபியிடம் கேட்டார்.

நபிகள் மிகப் பொறுமையாகச் சொன்னார். நீங்க நெனைக்கிற மாதிரி அவரு கஞ்சன் இல்லை... சிக்கனக்காரர்.. அவர் மட்டும் அவ்வளவு சிக்கனமா இல்லைன்னா அவராலே பள்ளிவாசல் கட்டப் பணம் குடுக்க முடியாது.

இதுதான் சிக்கனத்தின் பெருமை.

( ஆர் பத்மநாபன் எழுதிய தண்ணியா செலவழி நூலின் முன்னுரையாகவும், நுழைவாயிலாகவும் எழுதிய சுவையான பகுதிதான் இது )




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061