இலக்கிய இணைய இதழ்
05 ஆகத்து 2007 - இதழ் எண் : 67
|
அன்புடையீர். வணக்கம்,
பல்வேறு சூழல்கள். 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிவரும் கட்டடம் சிதைந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம். தவிர்க்க முடியாது தலைமேல் ஏறி அழுத்தியது. சொல்ல முடியவில்லை. கண்கள் பிதுங்கின. புதிய பட்டறிவு. நிறைய படித்துக் கொண்டேன். இது மற்றொரு பயணத்திற்குப் பெரிதும் உதவும்.
அரசு, அதிகாரம், செயற்பாடு, கட்டமைப்பு, தொடர்புகள், விளைவுகள், பயன்பாடுகள் - என ஒவ்வொரு கூறுகளும் எப்படி இயங்குகின்றன என நுணுகிக் காணும் மிகப்பெரிய வாய்ப்புக் கிட்டியது. வெளியில் நின்று உரத்துக்கூறும் பொழுது நாம் கூறுவது எத்தனை காதுகளுக்குக் கேட்கும் எனத் தெரியாது. கூறுவது எப்படிப் பயனாகும் என்று தெரியாது. எனக்குக் கிடைத்த புதிய பட்டறிவு இவைகளை யெல்லாம் ஓரளவிற்கு உள்ளவாங்கும் ஆற்றலைத் தந்துள்ளது.
கடந்த 6 திங்களாக வலையேற்றம் செய்ய இயலவில்லை. புத்தகங்களும், இதழ்களும் குவிந்துள்ளன. என் மீது நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து அனுப்புகிற அனைவருக்கும் என் நன்றிகள். இந்த காலக்கட்டத்தில் தான் நான் தமிழம் வலையின் உலகப் பயன்பாட்டினை அறிந்து கொண்டேன். வெளி நாடுகளிலிருந்து - ஏன் வலையேற்றம் செய்ய வில்லை? உங்கள் பாடங்கள் எங்களுக்குப் பயனாகின்றன. பணம் அனுப்ப வேண்டுமா? படியெடுத்துப் பயன்படுத்தலாமா? என மின் அஞ்சல்கள் வந்து கொண்டேயிருந்தன. இந்தனை வாசகர்களா? தமிழ் படிக்க இத்தனை மக்களா? நானே வியந்தேன். மகிழ்ந்தேன். புதிய புதிய பாடங்களை, முறைகளை, கற்றல் கற்பித்தல் கருவிகளை உருவாக்கி pdf கோப்புகளாக்கி, இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் இணையத்தில் வைக்க வேண்டும் என்ற விருப்பு மேலோங்கி, என்னை எழ வைத்தது.
உங்கள் மின் அஞ்சல்கள் தான் என்னை ஊக்குவிக்கின்றன. தமிழம் வலையிலுள்ள எதை வேண்டுமானாலும், படியெடுத்துப் பயன்படுத்தலாம். நம் தமிழ் மக்கள் பயன்படுத்தக் கொடுக்கலாம். என்னிடம் கேட்க வேண்டியதில்லை. பயன்பாட்டின்பொழுது இடர்பாடுகள் வந்தால் மட்டும் சொல்லவும். அதனை இன்னும் எளிமைப் படுத்தி இணையத்தில் வைக்கிறேன். இவை அனைத்தும் நானே - என் அறையில் அமர்ந்து தட்டச்சு செய்து - என் எண்ணத்தில் தோய்த்து எடுத்து உருவாக்கியவை தான் - எனவே யாரும் தடுமாறவேண்டாம். பயன்படுத்தவும். பிறருக்கும் தரவும்.
அனைவருக்கும் தமிழம் வலை உதவுமானால் அதுவே எனக்கு மகிழ்வூட்டும்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 05 - 08 - 2007
|
வாழ்வியல் முப்பது
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
திருவள்ளுவராண்டு 2038 ஆடவை 16 ஆம் நாள் (30-6-2007) அன்று பனப்பாக்கம் தென்மொழி இசையக பொறுப்பாளர் திருமிகு நற்றேவன் அவர்களது துணைவியார் திருவாட்டி த.தமிழிசை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வெளியிடப் பெற்றது.
புகழ்ச்சியின் மயக்கறு
புன்மையை உதறு
இகழ்ச்சியைத் தாங்கு
எள்ளலை எடுத்தெறி
நிகழ்ச்சியை வரிசை செய்.
நினைவை உறுதி செய்
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே.
ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்.
ஏக்கம் அகற்று.
ஏறுபோல் வினைசெய்.
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்.
இன்றைய நாள்நினை.
இனிவரும் நாள் நினை.
என்றும் புதியன் நீ
யாவிம் புதியன
அன்றன்றும் புதுநாள்.
அனைத்தும் இனியன.
ஒன்று, கை போகின்
ஒன்றுன் கைவரும்.
உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சி செய்
கொடுநினை வகற்று.
உயர்வாய் நினைப்பன
உன்னை உயர்த்தும்
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கம்
துயர்வுறும் வினைக்குத்
துணிவுகொள் ளாதே.
அயர்வின்றி இயங்கு
ஆக்கம் துணைவரும்.
ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு
இழிவுறும் அதனால்
பழக்கம் கொடியது
பண்புபொன் மகுடம்
இழக்கும் பொழுதுகட்கு
ஈட்டம் நினைந்து பார்.
ஒவ்வொரு நொடியும்
உனக்கென வாய்த்தது
எவ்வொரு நொடியும்
இழத்தல் செய்யாதே
இவ்வொரு நொடிக்கே
ஏங்கி யிருந்ததாய்
அவ்வொரு நொடியும்
அளாவிப் பயன்பெறு.
நேற்றெனல் பேறு
இன்றெனல் வேறு
நேற்றிருந்தது போல்
இன்றிருந் திடாதே.
நேற்றினும் இன்றுநீ
நெடிது வளர்ந்துளாய்
நேற்றைய வளர்ச்சியுள்
நினைவொடுக் காதே.
நேற்றைய நினைவுகள்
இன்றைய செயல்கள்
நேற்றைய அறிவோ
இன்றறி யாமை
நேற்றைய அடிக்குமேல்
நெட்டடி இன்றுவை
நேற்றுநீ காற்றெனில்
நீள்விசும் பின்றுநீ.
உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக
குன்றுபார், கதிர்பார்
கோடிவிண் மீன்பார்
நின்றுபார் நடந்துபார்
சிறுநீ, உலகம்.
சிற்றுயிர் எறும்பும்
சுற்றுதல் காண் நீ
மற்றுயிர் எல்லாம்
இயங்குதல் மதித்துணர்
அற்றெனில் நீ ஏன்
அமர்ந்திங் கிருப்பது?
கற்றுவா. எண்ணிவா,
காற்றில் நனைந்துவா.
மலைமுக டேறு.
மடுவினில் இறங்கு
கலைகுவி சோலையுள்
காற்றாய் நுழைந்து போ
அலைவீட் டுள்புகு
ஆற்றினில் நீந்து
புலைநினை வழிந்திட
இயற்கையுள் புதைநீ.
உயிரை மலர்த்து
உணர்வை அகல்செய்
பயிர்நீ கதிர்நீ
பழம்பெரு வான் நீ
துயர்கொளும் சிறிய
துகளிலை நீ ஓர்
உயிரொளிப் பிழம்பு
உலக உடம்பு
சிற்றிறை வன்நீ
சிந்தனை வெள்ளம்
அற்றிடாப் பிறவி
அறிவுக் கொழுந்து
வற்றிடா ஊற்று
வளர்பெரும் புடவி
குற்றிடா நெற்று
கோடிக் குமுகம்.
சிறுமையை எண்ணிச்
சிறுத்துப் போ காதே
வெறுமையை நினைத்து
வெயர்த்தழி யாதே.
குறுமையாம் வாழ்க்கை
நறுமை நினைவுகள்
நல்லொளிப் பிறவி
உண்மை வலியது
உள்ளமும் வலியது
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன
எண்மேல் எண்ணிய
ஒருவனாய் இருநீ.
புன்மை சிறியது
பொய்மையும் சிறியது
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே
புன்மைனயும் புரையும்
பொக்கன, புதைவன.
தருக்குக் கொள்ளாதே
தன்முனைப் பகற்று
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்
உருக்குலைத் திடும் அது
உன்னையும் உம்மையும்
திருக்குலைத் திடும் அது
தீமையும் விளைவிக்கும்.
உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே.
விலகப் பயில் நீ
வீணுரை விணரை.
மாந்த ஒளி நீ
மந்த விலங்கிலை
ஏந்தல் எனநட
இளைத்தும் தலைநிமிர்
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திழு.
சேந்து,அவர் நினைவை
செம்மை நினைவுவார்.
அறிவொளி விளக்கால்
அவர்விளக் கேற்று
செறிவுரை பகர்ந்திடு
செழிக்க அன்பு செய்.
முறிவுரை பகரேல்
முகவுரை கீழ்மை
வெறியுணர் வடக்கு
வீம்பறி யாமை.
உரையால் உரைபெறு
உவகையால் ஒளிசேர்
புரைசொல் இழுக்கு
போலிமை வினைதவிர்
திரையிட் டிராதே
தீமையைத் துணிந்துகொல்.
வரையறு போக்கை
வாழ்வைக் காதல் செய்.
கலைபயில் எண்பயில்
கவினிலக் கியம்பயில்
சிலைபயில் வண்ணச்
சித்திரம் எழுது.
அலைபயில் கலம்பயில்
அளாவும் விண்பயில்
உலை பயில் உடல் பயில்
உன்னை நீ பயில்.
விளங்கிய செல்வம்
வினைபடு கருவி
வளங்களைப் பகிர்ந்துகொள்
வயல்விளை வறிவு
உளங்கொள ஈத்துண்
உவகையே ஈகை.
களங்கல் விக்கமை
கனவிலுங் கேள்விகொள்.
சிறக்கச் செய்திடு
சிறப்பூண் சிறிதுண்
உறக்கம் மிகுதவிர்
ஓய்வுளக் கிளர்ச்சி.
மறக்க மறப்பன
மதிப்பன மதி மகிழ்.
துறக்க துறப்பன
துய்ப்புயிர் வாழ்க்கை.
ஓம்புக நல்லுடல்
உயிர்க்கது ஊர்தி
சோம்பல் இறப்பு
சுறுசுறுப் பியக்கம்
தீம்பர் இணைதவிர்
தேனினும் அளவுகொள்
தேம்பல் கோழைமை
திறலொடு துணிந்திரு.
நகை நட்பன்று
நன்னட் பறிந்துதேர்
பகைமுன் விலகு
பார்வையிற் கூர்மைகொள்
மிகைதவிர் எதிலும்
மெப்புரை தப்பு
புகை நெருப் பாகும்
பொய்வளை விழையேல்.
பொழுதெழு முன்னெழு
பொழுதொடு துயில்சேர்
பழுதுறங் கின்மை
பனிநீர் நிதங்குளி
தொழுது பெறாதே
தூய்மை உடையணி
விழுதெனத் துணையிரு
வீறுவிந் தடக்கம்.
பொருந்துணா விருந்து
புறவுணா முதுபிணி
அருந்தலும் அளவு செய்
ஆசை அடக்கியாள்
திருந்துதல் வாழ்க்கை
தெறுநோய் முன் தவிர்
மருந்துணல் தீது
மணிநீர் மருந்து.
பொதுமை உலகிது.
பொதுமை வாழ்விது
பொதுமை உயிர்நலம்
பொதுமையே இயக்கம்
பொதுமை உன் எண்ணம்
பொதுமை உன் வினைகள்
பொதுமையால் ஆக்கு, உனை
புதுநலங் காண்பாய்.
சில இணைப்புப் பாடல்கள்
முழுவதும் அறிந்துகொள்
முடிவுசெய்யாதே
தொழுவது நன்று எனின்
அடிமையாகாதே.
விழுவதும் இயல்பு உடன்
விசும்பென நின்றுகொள்
அழுவது கோழைமை
அயர்வு கொள்ளாதே.
கற்ற கல்வியால்
கவின் செய் உலகை
உற்ற இழிவுகள்
ஊதித் தள்ளு
மடமையை வீழ்த்து
மக்களை ஒன்று சேர்.
கடமையை உணர்த்து
கன்னித் தமிழினால்
கமழக் கமழ
உரைசெய், வினைசெய்
தமிழத் தம்பியே
தமிழத் தம்பியே
உலகைத் திருத்தடா
தமிழத் தம்பியே.
நகைப்பவர் யாவரும்
நண்பர்கள் ஆகார்
தொகைப் பெருக் கென்பதும்
தோழமைக் கில்லை.
மிகைப்படப் பழகுதல்
மிகுதுயர் செய்யும்
பகைப்பவர் என்பவர்
பழகி யிருந்தவர்.
பிறரைப் புகழ்கையில்
உனைத் தாழ்த்தாதே
பிறரை ஆய்கையில்
உன்னையும் எடையிடு.
பிறரைப் பணிக்கையில்
நீயும் பணிபுரி.
பிறரை மகிழ்வு செய்
நீயும் மகிழ்ந்து கொள்.
சாதிக் குப்பையைச் சாம்பலாக்கு
பாதியை அறிவுப் பயிருக்கு உரமிடு
மீதியை ஒற்றுமை மேன்மைக்கு உரமிடு
இனமும் ஒன்றுதான் மக்களும் ஒருவரே
இறைபல இருந்தால் மதம்பல விருந்தன
மதம்பல விருந்தால் குலம்பல வெழுந்தன
குலம்பல வெழுந்ததால் கொடுமைகள் நிறைந்தன
உலகம் எல்லாம் ஒருகுலம் என்னும்
உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டு வளர்க்க
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே.
மாந்தனை மாந்தனாய் மலர்த்துதல் கல்வி
நீந்துயிர், நெளியுயிர், நெடுவான் மிதக்குயிர்.
முகன்வால் நீண்டு முதுகிடை யாக
உகலும் விலங்குயிர் யாவினும் ஓங்கிப்
படிப்படியாகப் பண்பினும் அன்பினும்
வடிப்புற வளர்ந்து வான்வரை நிமிரும்
துடிப்பே கல்வியின் தொடக்கமென் றறிக
முடிப்பில் லாதது கல்வியின் முதிர்ச்சி.
மறைந்த தமிழிசை இவ் வாழ்வியல் முப்பது எனும் நூலில் உள்ள முப்பது பாடல்களையும் தம் இறுதி மூச்சுவரை நினைவில் வைத்திருந்தார். தம் பிள்ளைகள் இந்நூலை மனப்பாடம் செய்ய ஊக்குவித்தவர். அவரைக் காண வரும் பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவயமாகத் தரவேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டவர்.
இணையத்தில் இப்பாடல்களைக் காணும் நம் தமிழ் இளைஞர்கள் இப்பாடல்களைப் படித்து, உள்வாங்கித் தம் வாழ்வியலில் இவ் உயர் கருத்துகளை மேற்கொண்டு சிறக்க தமிழம் வலை வாழ்த்துகிறது. விருப்புடையவர்கள் படியெடுத்துக் கொடுத்து பரப்பல் செய்யவும்.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|