இலக்கிய இணைய இதழ்
10 டிசம்பர் 2006 - இதழ் எண் : 61

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் சாத்தூர் சேகரன் அவர்களது கட்டுரை இடம் பெறுகிறது. சொல்லாய்விலும், மொழித் தொன்மைக்காகக் கிளர்ந்து எழுகிற தன்மையிலும் செறிவாக உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே உயர்தரத்ததாக இருக்கும். தமிழரது உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழரது ஆளுமையும், திறனும் சான்றாதரங்களோடு காட்சிப் படுத்தப்பட வேண்டும். இந்தச் செயலை நுட்பமாகச் செய்யும் இக்கட்டுரையாளரை நெஞ்சார வாழ்த்துகிறேன். இவரது பணி தொடர தமிழம் வலை வாழ்த்துகிறது.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
10 - 12 - 2006




தமிழ் நாகரிகம் நிலை பெற...

சாத்தூர் சேகரன்.

தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?

இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.

தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.

கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.

17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.

19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?

20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?

எழுச்சிக்குச் சில காரணங்கள்

ஒருநாடு எழுச்சியுற்று, தனிநாகரிகம் பெற்ற நாடாகத் திகழ வேண்டுமானால்...

1) கல்வியில் சிறந்தோங்கியிருக்க வேண்டும்.

2) பெண்கல்வி, பெண்ணுரிமை பேணப்பட வேண்டும்.

3) சிறந்த அரசர்கள் அல்லது அமைச்சர்கள், தானைத் தலைவர்கள் மிகுந்திருக்க வேண்டும்.

4) ஏற்றுமதிப் பொருட்கள் இருத்தல் வேண்டும்.

5) உலக நாடுகளின் நடுநாயகமாக இருத்தல் வேண்டும்.

6) திரைகடல் ஓடி ஒடிச் சம்பாதிக்கும் வணிகர் குழு இருத்தல் வேண்டும்.

7) அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்கள் பல்கிப் பெருகி இருக்க வேண்டும்.

முற்காலத்தில் மிளகாய் கிடையாது. மிளகுதான் உறைப்புச் சுவையைத் தரக்கூடியது. ஒரு மூடை மிளகு ஒரு சில நேரங்களில் ஒரு சிறு மூடை தங்கத்திற்கு ஈடாக விளங்கியது. மிளகின் மருத்துவக் குணங்கள் மிளகின் விலையை எப்போதுமே உச்சத்தில் இருக்க வைத்தன. அன்று ரோமாபுரி அவையின் பிளினி அலறிய அலறல் இன்றும் நம் செவியில் விழுகின்றதே. - ஐயோ எங்கள் நாட்டுப் பொன்னும் பொருளும் தமிழகத்திற்குப் பெருவாரியாகச் செல்கின்றதே - தமிழகத்திலிருந்து அறுசுவைப் பொருள்கள் பல நாடுகளுக்குச் சென்றன. மருந்து, மருந்துப் பொருள்கள், ஆடைகள், சாயமிடப்பட்ட ஆடைகள், உருக்காலான வாளும், வேலும், மிளகும் பிற வாசனைப் பொருள்கள், யானைத்தந்தம் இன்ன பிற பொருள்கள் உலகெங்கும் சென்றன. இதனால் தமிழன் வளம் பெற்றான். தமிழ் நாகரிகம் வளம் பெற்றது. நிலை பெற்றது. உலக நாகரிகங்களின் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம் அல்லவா? மற்ற நாகரிகங்கள் கட்டுச் சோற்று நாகரிகங்கள். எனவே 300 - 400 ஆண்டுகளில் நிலை குலைந்தன. தமிழ் நாகரிகம் மட்டுமே 5000 ஆண்டுகள் நின்று நிலைத்தது.

வீழ்ச்சிக்குச் சில காரணங்கள்.

1) தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று.

2) கலப்பு மன்னர்கள் ஆட்சியும் (குலோத்துங்கன்) வேற்று மன்னர்கள் ஆட்சியும் (விசயநகர மன்னர்கள்) தோன்றின.

3) வேற்று மத மன்னர்கள் ஆட்சி (மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சி) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான்.

4) ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை.

5) தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் (மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன்- சுந்தர பாண்டியன் போராட்டம்)

6) குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல், அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது. திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது.

7) சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனைத் தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல்.

8) அரபியக் கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல்.

9) இடைத் தரகராக மாறிய அரேபியரும், ஐரோப்பியரும் தமிழர் வணிகத்தைச் சீரழித்தல்.

10) கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை.

11) மேற்கல்வி பூணுால் பார்ப்பனனுக்கு மட்டுமே.(ராமப்பையனின் குளறுபடிகள்)

12) போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது. தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது.

13) மிளகாய் மலிவாக வந்தது. மிளகின் ஆதிக்கம் குன்றியது.

14) ஐரோப்பியர் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர்.

15) இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்சிகளுக்கு ஆங்கிலேய கும்பினியர்களும் அதன்பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் விதித்தனர். எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியுற்றது.

சுழலும் இயற்கையின் விதி.

இயற்கை எப்பொழுதும் முடங்கிக் கிடப்பதில்லை. அஃது ஒரு சுழற்சியின் பாற்பட்டது. சுழல் விதிப்படி கீழிருப்பது மேலே வரும். மேலே இருப்பது கீழே செல்லும். தற்காலிகமாகத் தாழ்ந்திருக்கும் தமிழ் நாகரிகம் மேலே வரவேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அன்று மிளகும் பிற வாசனைப் பொருட்களும் தமிழனின் வணிகக் களத்தைப் பெருக்கியது. இன்று.. கணிணியும் மென்பொருள் ஏற்றுமதியும் தமிழகத்திற்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அள்ளித் தருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு மாநாட்டில் பேசியதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். - கணினி இயற்கைக்கு ஒரு வரம். இன்னும் 50 ஆண்டுகளில் தமிழனின் வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும். மீண்டும் தமழ் நாகரிகம் உலகில் அரங்கேறும். தமிழ் உணர்வு இப்போது 2 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனை 5 விழுக்காடு ஆக்கிவிட்டால் தமிழ் நாகரிகம் மீண்டும் உச்சம் பெறும். கணினி தமிழகத்திலலும் இந்தியாவிலும் பொற்காலத்தை உருவாக்கி உள்ளது. இதை மறுக்க முடியுமா? ஏன் மாற்றிவிடத்தான் முடியுமா? இன்னும் 50 ஆண்டுகளில் கணினி கை கொடுக்கும். அதன்பின் உயிரியல், உயிரி வேதியல், போன்றன மேலும் ஒரு 50 ஆண்டுகளுக்குத தமிழனுக்கு வரமளிக்கும். இலங்கைப் பிரச்சனையால் தமிழ் உணர்வு இன்னும் பல்கிப் பெருகும். மனநெருக்கம் மிகுதியாகும். கல்வி, மேலாண்மை, தத்துவம், மருத்துவம், மொழியியல் போன்ற சில துறைகள் தமிழ் நாகரிகத்திற்கு மேலும் சில ஐம்பது ஆண்டுகளுக்கு உதவி புரியும்.

சில சுருக்கு வழிகள்.

கலப்புமணம் பெருகினால் சாதி சமயப் பிணக்குகள் வீழ்ச்சியுறும், தமிழ் உணர்வு மேலோங்கும். தமிழின உணர்வு மேலோங்கிட கவிஞர்களும், எழுத்தாளர்களும், ஆவண செய்ய வேண்டும. அரசியலில் கன்னடப் பார்ப்பனப் பெண்களும், மலையாளத் தெலுங்குத் திரைப்பட நடிகர்களும் வருவதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பரம்பரைத் தமிழனே தமிழகத்தை ஆள வேண்டும். இதனைக் கட்டாயமாக்க வேண்டும். மாநில சுயாட்சியைக் காட்டிலும் அதிகப்படியான சுயாட்சியைக் கோரிப் பெற வேண்டும். மைய அளவில் கூட்டாட்சி, இராணுவம், அயல்நாட்டுத்துறை, நிதி நிர்வாகம், போன்ற ஒரு சில துறைகளே மைய அரசிடம் இருத்தல் வேண்டும். மாநில தமிழ் அரசு, பிற நாடுகளில் வாழும் தமிழருக்கு தமிழ்க் கல்வி, பொறியியல், மருத்துவ மேற்கல்வி போன்ற துறைகளில் பயிற்சியை மலிவாகக் கொடுக்க வேண்டும். அவர் தம் ஆற்றலையும், அறிவையும், பயன்படுத்த வேண்டும், தமிழக அரசு தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் பரப்பிட தனிப்பட்ட அறிஞர் குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் நாகரிகத்தைப் பரப்பிட வேண்டும்.

தன்னப்பிக்கையே நன்னம்பிக்கை முனை

சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள், இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டிவிட்டால், எளிதில் கிடைப்பது வெற்றியாகும். பெரு வெற்றியாகும்.

நன்றி : தமிழ் நேயம் 27 - தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் ? கட்டுரைகள் தொகுப்பு 2 - நிகழ் வெளியிடு, தொகுப்பாளர் - கோவை ஞானி. 24. வி.ஆர்.வி.நகர்., ஞானாம்பிகை ஆலை அஞ்சல், கோவை 641 021 - தொலை பேசி : (0422) 2648119



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061