இலக்கிய இணைய இதழ்
18 நவம்பர் 2006 - இதழ் எண் : 60

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் வளரும் தமிழ் உலகம் இதழில் வெளிவந்த புதுமைப்பித்தன் கட்டுரையை இணைத்துள்ளேன். இவர் இறந்த பொழுது அருகிருந்தவர் மிகச் சிலரே. இன்று விழாக் கொண்டாடி மகிழ்கிறோம். வாழும் போது நல்ல இலக்கியவாதிக்கு இங்கே மரியாதை இல்லை. தமிழ் உலகத்திற்கு இது ஒரு சாபக்கேடு?.. இதை எழுதும் பொழுதே நெஞ்சு வெடிக்கிறது. இலக்கியத்திற்காகவே வாழ்ந்த வல்லிக்கண்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாதது. தமிழம் வலை அந்த மாபெரும் மனிதருக்குத் தலைதாழ்த்தி வணங்குகிறது.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
18 - 11 - 2006


இலக்கிய இதயம் திருமிகு வல்லிக்கண்ணன்.

9 - 11- 2006 சென்னை முதுபெரும் எழுத்தாளரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான வல்லிக்கண்ணன் அவர்கள் வியாழக்கிழமை இரவு சென்னை திருவல்லிக்கேணியில் அவருடைய தம்பியின் இல்லத்தில் இயற்கை எய்தினார். இதழ்களில் வரும் அனைத்துப் படைப்புகளுக்கும் படைப்புகளைப் பாராட்டி அஞ்சல் அட்டையில் ஊக்கம் அளித்து வந்த இந்த இலக்கியவாதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நடந்தே கழியனும் வாழ்க்கை என்று சொன்ன இவர் கடந்த செப்டம்பர் மாதம் வரை உடல்நலத்தோடு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். அவருக்குத் தமிழம் வலை தலை தாழ்த்தி வணங்குகிறது.





புதுமைப்பித்தன் வாழ்க்கையும் சிறுகதையும்.

கா. சிவத்தம்பி.

சிறுகதைகள் மூலம் தமிழ் நாட்டின் வாழ்க்கையை, தத்துவத்தை, பண்பாட்டை நமக்கும் ஏனையோருக்கும் படம் படமாகத் திரட்டிக் காட்டிய புதுமைப்பித்தன் தம் இறுதிக் காலத்தில் தம் நெருங்கிய நண்பர் சிதம்பரத்திடம் "இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொல்லும்" என்று சொன்னார். புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய சோக நாடகமாக இருந்ததோடு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்தது. இலக்கிய உலகத்திற்கு வருவதற்கு முன்பே ஓரளவாவது இவ்வெண்ணம் அவருக்கு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியப் பணியே தம் முழு மூச்சு என்று எண்ணி உற்றார் பெற்றோர் அனைவரையும் வெறுத்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்த அச் செம்மலைத் தமிழகம் சரியான முறையில் கவனிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு கலைஞர் வாழ்ந்திருக்கும் போது அவரைச் சிறிதும் கவனிக்காத சமுதாயம் அக்கலைஞர் இறந்த பிறகு அவருக்கு நினைவுச் சின்னங்களும் மண்டபங்களும் எடுத்து விழாக் கொண்டாடும் தமிழகத்தின் பொது விதிக்கு அவர் மட்டும் என்ன விதிவிலக்கா? மரணத்திற்குப் பின் தம் நிலை என்ன என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதை அவரது இறுதிக் காலப் பேச்சுத் தெளிவாகக் காட்டுகின்றது.

இலக்கிய வட்டாரத்தில் புதுமைப்பித்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட விருத்தாசலம் நடுத்தரக் குடும்பத்தில் 1906 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தையார் தென்னார்க்காடு மாவட்டத்தில் நிலப்பதிவு தாசில்தாராக இருந்த சொக்கலிங்கம் என்பவர். சிறுவயதிலேயே தம் தாயை இழந்த புதுமைப்பித்தன், தம் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளானார். சிற்றன்னையால் இழைக்கப்பட்ட கொடுமைகள் அவர் வாழ்க்கையைத் திசை மாறிய மரக்கலமாக்கியது. வெகுசிரமத்திற்கிடையே 1931 ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற்ற புதுமைப்பித்தனை உயர் பதவியில் அமர்த்த அவர் தந்தையார் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. சிக்கலான இச்சூழ்நிலையில் இவருக்குத் திருமணம் முடிந்தது. திருமணத்திற்குப் பின் பெற்றோர்களுடன் இருந்த சிறு உறவுகூடத் துண்டித்துப் போயிற்று.

புதுமைப்பித்தன் தமது இலக்கியச் சேவையை 1933 இல் அவதாரம் எடுத்த மணிக்கொடியில் ஆரம்பித்தது, 1936 லிருந்து 1943 வரை தினமணி செய்தித் தாளில் உதவி ஆசிரியாராகப் பணியாற்றினார். தினமணியிலிருந்து விலகிய புதுமைப்பித்தன் தினசரியில் சில காலம் இருந்தார். அங்கிருந்தும் விலகியதோடு அவர் தம் பத்திரிகைத் தொழிலை விட்டு விட்டுத் திரைப்படத் துறையை நாடினார். திரைப்படத் துறையை நம்பிப் பூனா சென்ற புதுமைப்பித்தன் காச நோயோடு ஊர் திரும்பினார். காச நோயே அவருக்கு எமனாக அமைந்தது.

புதுமைப்பித்தன் இலக்கியத் தொண்டு.

புதுமைப்பித்தன் எழுதிய மொத்தக் கதைகள் 200. இதில் கருத்து வேறுபாடு உண்டு. புதுமைப்பித்தன் இப்பெயரில் மட்டுமேயன்றி சொ.வி., வேளூர்க்கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி முதலிய பல பெயர்களில் தமது இலக்கியப் பணியை மேற்கொண்டார். இன்று நமக்குக் கிடைத்த நூல்கள்- புதுமைப்பித்தன் கதைகள், காஞ்சனா, புதிய ஒளி, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை முதலியன. இதைத் தவிரக் கட்டுரைத் தொகுதி ஒன்றும் நாடகங்கள் ஒன்றிரண்டும் சில கவிதைகளும் குறுநாவல் என்ற முறையில் ஒன்றிரண்டும் எழுதியுள்ளார். அயல் நாட்டுக் கதைகள் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளார். நாடகம், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் சிறுகதைத் துறை ஒன்றில் தான் இவரால் சிறப்படைய முடிந்தது.

புதுமைப்பித்தன் கதைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைக்கு ஏற்றமும் சிறப்பும் இவர் காலத்தில் தான் கிடைத்தன என்று சொன்னால் அது மிகையல்ல. புதுமைப்பித்தனுக்கு இருந்த சிறப்பெல்லாம் அவர் கதைகள் அனைத்தும் சமூகப் பிரச்சனையை உள்ளடக்கியவை என்பதால்தான். மக்கட்குலத்தின் அறியாமையும் மனமாசும் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடும் துயரங்களின் அவலமும் இவருடைய கலை நோக்கில் கதையூற்றுகளாகத் தோற்றமளித்தன. இவற்றைத் தமது எழுத்திலே தேக்கி மனிதனைச் சிந்திக்க வைத்தார்.(கலைக்களஞ்சியம் - தொகுதி 7 பக்கம் 433-434)

காஞ்சனா என்ற தொகுதியின் முன்னுரையில் எப்படித் தம்மால் கதை எழுத முடிந்தது என்பது பற்றிக் கூறியுள்ளார். நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசிப்பதில்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பிலேயே எழுதி வெற்றி காண்பதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாக எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்த இடங்களிலிருந்து நான் எப்பொழுதுமே எடுத்துக் கொள்வேன் (காஞ்சனா - முன்னுரை). கு.அழகிரிசாமி அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கதை எழுதுவது குழாயைத் திருப்பியதும் தண்ணீர் சுரப்பது போலல்ல என்று குறித்துள்ளார். (நான் கண்ட எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி - பக் 85) சிறுகதை மன்னன் புதுமைப் பிததன் சிறுகதை வாழ்க்கையின் சாளரங்கள், வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்தரிப்பது என்று இலக்கணம் வகுத்தார்.

புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் சமூகக் கதைகள் தான். ஆயினும் அதில் பல பிரிவுகள் அடங்கியுள்ளன.

சமூகக் கதை

பிறர் மன விகாரம் எனக்கூறி ஒதுக்கிய பிரச்சனைகள் பற்றியது ஒருவகை, கல்யாணி, பொன்னகரம், கவந்தனும் காமனும் இப்பிரிவில் அடங்கும். யதார்த்த நிலையில் வாழ்க்கையை அணுகியது மற்றொரு வகை. மனித யந்திரம், தெருவிளக்கு, ஒருநாள் கழிந்தது முதலியன இப்பிரிவில் அடங்கும்.

முழுதும் கற்பனைக் கதைகள்

சிற்பியின் நகரம், ஞானக்குகை, கனவுப் பெண் முதலியன.

புது உருக் கொண்ட கதைகள்

சில பழைய கதைகளைப் புதுமைப்பித்தன் தன் எண்ணப்படி அவற்றிற்குப் புத உருக்கொடுத்து நம்மை ரசிக்க வைத்துள்ளார். அகல்யை, சாபவிமோசனம், அன்று இரவு முதலிய கதைகள் இந்த வகையைச் சேர்ந்தன.

மர்மக் கதைகள்

இவர் எழுதிய சில மர்மக் கதைகள் சமாதி, கொலைகாரன் கை, டாக்டர் சம்பத் முதலியன.

நகைச்சுவைக் கதைகள்

நகைச்சுவையை விரும்பாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். இவரது நகைச்சுவைக் கதைகளுக்கு எடுத்துக் காட்டாகக் காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகளைச் சொல்லலாம்.

புதுமைப்பித்தன் கதைகளுக்குச் சிறப்பாகச் சில தனித் தன்மைகள் உண்டு. அவருக்கென்று அமைந்த ஒரு கதையும் கதை சொல்லும் போக்கும் கேலியும் கிண்டலுமாக நைந்து போயிருக்கின்ற சில மூடப்பழக்க வழக்கங்களைச் சாடும் தோரணையும், சுருங்கச் சொல்லும் அழகும் அவரது கதைகளுக்குத் தனித் தன்மையை ஊட்டுகின்றன. முதல் வார்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை ஒன்றோடு ஒன்று பொருத்தி அர்த்த பாவத்தோடு சொல்லும் அவர் தரும் விளக்கங்களும் வர்ணனைகளும் கதையின் ஒரு பாத்திரத்தின் தன்மையை விளக்குவதற்காகத்தான் இருக்கும். அவர் கையாளக்கூடிய உவமைகள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் காணக்கூடிய காட்சிகளாகவே அமைந்து இருக்கும்.

தம் கதைகளுக்குப் புதுமைப்பித்தன் கொடுத்த தலைப்புகள் எல்லாம் புதுமையானவை. நாசகாரக் கும்பல், கயிற்றரவு, பிரம்மராட்சஸ், சாயங்கால மயக்கம் முதலியன அவர் கொடுத்த தலைப்புகள். இந்தத் தலைப்புகளுடன் கதைகளும் பொருந்தித்தான் உள்ளன. நாசகாரக்கும்பல் தோன்றிய விதத்தைப் புதுமைப்பித்தனே சுவைபட எழுதியுள்ளார். பிரும்ம ராக்ஷஸ் என்ற கதையின் கருத்தைப் பற்றி சொல்லும் பொழுது, "கருத்து ஒன்றும் கிடையாது, வார்த்தைகளை வைத்து விளையாடிவிட்டேன். வெற்றியும் பெற்று விட்டேன்" என்று சொல்லியுள்ளார்.

சில கதைகளில் கடைசி வரிகள் நல்ல கருத்துக்களோடு உயிர்த துடிப்புள்ளதாகவும் காணலாம். பொன்னகரம் என்ற கதையில் "என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கின்றீர்களே! இதுதானய்யா பொனனகரம்" என்று முடித்துள்ளார். சில வேளைகளில் அந்தக் கடைசி வரிகளில் கதை முடியாதது போல் தோன்றும்.

புதுமைப்பித்தனது நடை, இன்று புதிய வசனநடைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகக் காட்டப்படுகிறது. இந்நடையைப் பற்றிக் கூறும் திரு அழகிரிசாமி அவர்கள், புதுமைப்பித்தன் இலக்கியம் தமிழ் நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து, அவர் வசன இலக்கிய மன்னர் என்று கூறுகிறார் (நான் கண்ட எழுத்தாளர்கள் பக்கம் 82) தம் நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

புதுமைப்பித்தனது கதைகளில் காணப்பெறும் மற்றொரு சிறப்பு மனித மனக் கோலங்கள் வெகு திறமையாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. மனவிகாரங்களைப் பற்றியும் மன ஆசாபாசங்களைப் பற்றியும் புதுமைப்பித்தன் எழுதத் தொடங்கியவுடன் அவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அவ்வெதிர்ப்பைச் சமாளிக்கும் முறையில், நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவுமில்லை என்று தம் காலத்து இலக்கிய விமர்சகர்களைக் கண்டித்தவர் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனது சிறுகதைகளில் மனித உணர்ச்சிகளுக்குத்தான் மதிப்புக் கொடுக்கப்பட்டதே அன்றி நாம் காலம் காலமாகப் போற்றி வரும் ஒழுக்கங்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படவில்லை என்பது, அவரது கதைகள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு. பொன்னகரம், கவந்தனும் காமனும் முதலிய கதைகளை இந்தக் கருத்தில் பெரும்பாலானவர்களும் தாக்கினார்கள்.

புதுமைப்பித்தனது உண்மைநிலை என்ன என்பதைச் சிறிது ஆராய்ந்து பார்த்தால் தூய காதலைப் பற்றியும், பெண்மையின் சிறப்புப் பற்றியும், பெண்மைக்குத் தரவேண்டிய ஏற்றத்தைப் பற்றியும் அவருக்கு உறுதியான கருத்துகள் இருந்தமை நன்கு புலனாகும்.

பொன்னகரம் என்ற கதையில் அம்மாளு என்ற கூலியின் சங்கடம் விளக்கப்பட்டுள்ளது. அம்மாளுவின் கணவன் ஒரு சாதாரண குதிரை வண்டிக்காரன். விபத்தில் சிக்கி வீட்டிலிருக்கும் அவனுக்குக் கஞ்சி காய்சிக் கொடுக்க அம்மாளுவிடம் காசில்லை. இநத நிலையில் இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் ஒரு சந்துப்புறமாகச் செல்கிறாள். அவள் மீது நீண்ட நாள்களாகக் கண்வைத்திருக்கும் ஒரு இளம் வாலிபன் அவளைப் பின்பற்றிச் செல்கின்றான். இருவரும் இருளில் மறைந்து விடுகின்றனர். அம்மாளு சிறிது நேரத்தில் முக்கால் ரூபாய் சம்பாதித்து விடுகின்றாள். ஆம், கணவனுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கத்தான். இந்தக் கதையில் ஆசிரியர் அம்மாளுவின் சீர்கேட்டைத் தம்பட்டம் அடிக்க நினைக்கவில்லை. ஒழுக்கத்தைத் துச்சமென்று நினைத்தவள் அம்மாளு என்று சொல்ல வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாயின் அவளைத் தன் "கவந்தனும் காமனும்" என்ற கதையில் வரும் தொழில் யுவதியைப் போல் படைத்திருக்க மாட்டாரா?

"கவந்தனும் காமனும்" என்னும் கதையில் வரும் அந்தத் தொழில் யுவதி, மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பும் சபல உள்ளம் படைத்த சில ஆண்களை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றாள். அவ்வழியே குமாஸ்தா ஒருவன் வருகின்றான். அவளை அவன் பார்க்கவில்லை. அவளாகவே சென்று அவனிடம் வம்பு செய்கிறாள். பயந்துவிட்ட அவன் தன்னிடமிருந்த சில்லரைகளை அவள் கையில் திணித்துவிட்டு ஓடிவிடுகிறான். "ஏண்டா பேடிப் பயலே! என்னைப் பிச்சைக்காரின்னா நினைச்சுக்கினே!" என்று அவன் கொடுத்த சில்லரைகளை விட்டெறிகிறாள்.

இவளைப் பொறுத்தவரை பிச்சையெடுப்பதைத் தன் தொழிலைவிடக் கேவலமாக எண்ணுகிறாள். இத்தகைய ஒரு சீர்கெட்ட பாத்திரமாகவா அம்மாளுவைப் படைத்திருக்கிறார்? அம்மாளுவின் கற்பு காசானது என்றால் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் அதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஏழ்மை வளருமானால்... ஏழைப் பெண்களின் ஒழுக்கம் என்ன ஆகும்? பொன்னகரமாகும் என்பது ஆசிரியரின் கருத்து. இக்கதையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை விழித்துக் கொள்ளச் சொன்னாரேயன்றித் தன் மட்டரகமான ரசனையையோ, அல்லது கீழ்த் தரமான உணர்ச்சியையோ விரும்பிக் கூறவில்லை.

தன் கதைகளைப் பற்றிக் கூறும் புதுமைப்பித்தன் "பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்விற்குச் செளகரியம் பண்ணவைக்கும் இன்சூரன்சு ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். (காஞ்சனை முன்னுரை). மேலும் அவர் "என் கதைகளில் ஒவ்வொன்றும் ஒரு விவகாரத்தைப் பற்றியதாக இருக்கும். ஆனால் என் கதைகளின் பொதுத்தன்மை - நம்பிக்கை வறட்சி" என்று கூறியுள்ளதைக் காணலாம் (புதுமைப்பித்தன் கட்டுரைகள் - பக் 9)

உலகத்துச் சிறுகதைகளை ஆராய்ந்த பிராங்க் ஓ கொணர் என்பார் சிறுகதை அமுக்கப்பட்ட மனிதனின் அல்லது மக்களின் குரல் என்றார். புதுமைப்பித்தன் சிறுகதைகள் வேறு எவரையும் கதைக் கருவாகக் கொள்ளவில்லை.(தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் - கா.சிவத்தம்பி - பக் 85)

நன்றி : வளரும் தமிழ் உலகம் இதழ் - ஈரோடு - அக் 2006




சைக்கிளைத் திருடு கொடுத்த சுகம்.
(சிறுகதை)

தமிழில் மதியழகன் சுப்பையா. (இந்தி - அசோக் சுக்லா)

முதலில் நானும் சைக்கிளைத் திருடு கொடுத்து நிற்கும் ஒரு மாறுபட்ட சுகத்திற்கு பரிச்சயமற்றிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக கடந்த நாளொன்றில் என் சைக்கிள் திருடு போகாமல் இருந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் இந்த விசித்திர ஆனந்தத்தை அனுபவிக்காமலேயே போயிருப்பேன். என் சைக்கிளை திருடி எனக்கிந்த தேவ சுகத்தைத் தந்த அந்த மகா புருஷனின் முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உண்மையிலேயே நான் பெரிய பாக்கியசாலி. இல்லையென்றால் உலகில் இத்தனை பேரிடம் சைக்கிள் இருக்கையில் என் சைக்கிள் மட்டும் திருடு போவானேன்? நிச்சயம் இது என் பாக்கியத்தின் பயன்தான்.

தன்னல எண்ணங்களை மீறி பற்றுகளை விட்டு சிந்திக்கையில் எனது சைக்கிள் திருட்டுப் போனதாய் கருதவில்லை. அது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனலாம். மேதைகளும், புரட்சியாளர்களும் நாடு கடத்தப்பட்டதற்கு வருத்தப்படாத நாம் சைக்கிள் இடமாற்றம் பெற்றதற்கு ஏன் கவலைப்பட வேண்டும். நிச்சயம் சைக்கிளைத் திருடியவனுக்கு அது மிக அவசியமானதாய் இருந்திருக்கலாம். யதார்த்தமாய் சொல்ல வேண்டுமானால் எனது சொத்து நஷ்டமாகியது எனலாம்.

இளைஞன் என்ற காரணத்தினால் காவல்துறை அதிகாரிகளிடம் நிறைய பயப்படுவேன். எப்படி தர்மாத்மாக்கள் கடவுளிடம் பயப்படுவதைவிட சாத்தானிடம் பயப்படுவார்களோ அப்படியே திருடர்களை விட காவலாளிகளிடம் பயப்படுதலே இளைஞனின் இயல்பு எனலாம். என் சைக்கிள் திருட்டுப் போனதற்கான புகார் கொடுக்க பயந்து பயந்து காவல் நிலையத்தை அடைந்தேன். நானே சைக்கிளை திருடியவனைப் போல பயந்து போனேன். சைக்கிளின் எண் எனக்கு நினைவில்லை. நான் நிறையவே குழம்பிப் போயிருந்தேன். ஒரு சிப்பாயி "இப்படி எண்களை மறந்து போவதால்தான் காணாமல் போவதாயும்" கருத்துச் சொன்னார். புகார் எழுதிக் கொண்ட காவலாளியின் கேள்விகள் என் சைக்கிள் திருடு போனதை மட்டும் சந்தேகிக்கவில்லை. என்னிடம் சைக்கிள் இருந்ததா என்பதையே சந்தேகமாய் கேட்டார்.

நான் வீடு திரும்புவதற்குள் சைக்கிள் திருட்டுப் போன செய்தி அப்பகுதி முழுவதும் பரவி இருந்தது. வழியல் கிடைத்தவர்கள் எல்லாம் என்னைத் தடுத்து நிறுத்தி சைக்கிள் திருடு போனதைப் பற்றியே விசாரித்தார்கள். வீட்டை வந்தடைவதற்குள் ஒரு நூறு பேருக்காவது பதில் சொல்லியிருப்பேன். அன்றுதான் நான் இவ்வளவு பிரவலமானவன் என்பதையே அறிந்தேன்.

வீட்டிற்கு செய்தி எட்டியிருந்தது. என் மனைவி குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் மற்றப் பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் அலாதி விருப்பமுடையவள். அற்பமான விஷயங்களுக்காகக் கூட மணிக்கணக்கில் அழும் ஆற்றல் கொண்டவள். அவளைப் போல கண்ணீர் விட்டு அழ வேறு எவரும் எங்கள் எல்லையில் இல்லை என்று அடித்துக் கூறுவேன்.

வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் சிறுவர்களின் கூட்டம் நின்றது. எனது மகன் கர்வத்துடன் சைக்கிள் திருடு போன செய்தியை நேரில் பார்த்தவனைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதல் முதலாகக் கர்வப்படும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவனைச் சூழ்ந்திருந்த அப்பகுதியின் சிறுவர்கள் பொறாமையோடு அவன் கர்வப்பட்டுக் கொள்வதை பார்த்து நின்றனர். நிச்சயம் அவர்கள் தந்தையர்களின் சைக்கிள் திருட்டுப் போகாதது குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கலாம்.

நான் வந்து திண்ணையில் அமர்ந்தேன். அக்கம் பக்கத்தார் வந்து துக்கம் விசாரிக்க ஆரம்பித்ததார்கள். நமது நாட்டில் துக்கம் விசாரிப்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது. செருப்பு பிய்ந்து போனதை அப்பா செத்துப் போனதற்கான சம கம்பீரத்தோடு துக்கம் விசாரிப்பவர்களையும் காணமுடியும். இதில் நிறைய கவனம் வேண்டும். ஏனெனில் வருபவர்கள் அளவுக்கு அதிகமாய் துக்கப்பட்டு நம்மை படுத்தி விடலாம். சிலர் தொடர்ந்து மூன்று நான்கு இடங்களில் துக்கம் விசாரித்த வண்ணம் இருக்கலாம். ஆனாலும் திருப்தியடைய மாட்டார்கள்.

ஆனால் சைக்கிள் திருடு போன துக்கம் மற்றவற்றை விட மாறுபட்டது. இதற்கான விசாரிப்புகள் இழவு வீட்டு விசாரிப்புகளுக்கு எதிரானவை. ஆயினும் என் சுற்றத்தார் சமாளித்து விட்டனர். சைக்கிள் திருட்டுப் போனதால் நான் ஒன்றும் பெரிதாய் கவலைப்பட வில்லைதான். ஆனால் துக்க விசாரணைக்குப் பின் நானும் கவலைப்படும்படியாகி விட்டேன். என் சுற்றத்தார் இவ்வளவு துக்கப்படாமலிருந்தால் சைக்கிள் திருட்டுப் போனது ஒரு பெரிய சம்பவமாகவே எனக்குப் பட்டிருக்காது. விசாரிக்க வந்தவர்களின் பேச்சுகள் சற்று விபரீதமானவையே. "ம்...ம்ம்! சரி எது நடக்கணுமோ அது நடந்துதானே ஆகும். கவலைப்பட்டா எப்படி? எழுந்திருப்பா! போய் குளி! எதாவது சாப்பிடு!" அல்லது "நேரமுன்னு ஒன்னு இருக்குல்ல நமக்குன்னு எவ்வளவு நாள் எழுதியிருக்கோ அவ்வளவு நாள்தானே இருக்கும். நேரம் வந்திடுச்சி போயிட்டு, எழுந்திருப்பா! போய் வேலை கீலையைப் பாரு!" அல்லது "கழுத போவனுமுன்னு இருந்துச்சு, போச்சு இப்ப என்ன வாழ்க்கையா போச்சு! வருத்தப்படுற கடவுள் நினைச்சா இது மாதிரி லட்சம் வந்து காலத்தொடும்.." இதையெல்லாம் நீங்கள் கவனித்துப் பார்த்தால் இது சைக்கிள் திருடு போனதற்கான சமாதானமாகப் படலாம். புதிதாய் யாரேனும் வந்தால் நிச்சயம் என் மனைவி ஓடிப் போனதாய்த்தான் சந்தேகப்படுவார்கள்.

இப்படியாய் மாட்டிக் கொண்டேன். சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவதை பார்த்து நான் அவர்களுக்கு சமாதானம் சொல்லி வைப்பேன். நான் இவர்களை தவிர்த்து வீட்டிற்குள் போய் விடலாம்தான். ஆனாலும் உள்ளே போனால் மனைவி கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்து விடுவாள் என்ற பயம். அபிப்ராயம் சொல்லவும் சளைக்கவில்லை சிலர். என் சைக்கிளை இரவல் வாங்கி ஓட்டிய ஒருவர், அதன் வேகத்தைப் பற்றி நிறைய பாராட்டினார். சிலர் அதன் வண்ணத்தையும், தோற்றத்தையும் வியந்து பாராட்டினார்கள். வாரம் சென்றாலும் அதில் காற்று குறையாமலிருந்ததாகப் பலர் ஆச்சர்யப் பட்டு பேசினார்கள்.

சிலர் துக்கத்தைக் குறைத்துக் காட்ட இன்னும் அப்பகுதியில் காணாமல் போன சைக்கிள்களைப் பற்றி பேசத் துவங்கினார்கள். எனக்குத் தெரியும் என் மனைவி ஓடிப்போயிருந்தால் கூட இவர்கள் இராமன், சுக்ரீவன் கதைகளைச் சொல்லியிருப்பார்கள். ஒரு சிலர் சைக்கிள் கிடைத்துப்போக வாய்ப்பிருப்பதாய் ஆசை வார்த்தைகள் கூறினார்கள்.

இன்னும் சிலர் இனி எப்படிப்பட்ட சைக்கிள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அதாவது மனைவி ஓடிப்போனவுடன் புதுப்பித்துக் கொள்ளும் புதிய உறவுகள் போல.

வருகின்ற ஒவ்வொருவருக்கும் சைக்கிள் எப்படித்தான் திருடி போனது என்ற கேள்வி அவசியமாகிப் போனது. நான் நிரம்பப் பொறுமையுடன் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஏற்கெனவே வந்தவர்கள் உதவியால் சிலதை சொல்லிக் கொண்டிருந்தேன். வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் என்னை எட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச கொஞ்சமாய் சைக்கிள் பற்றிய பேச்சு மறைந்து என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ என் சைக்கிள் திருடு போனதாகவே பட்டது. என் நல்ல பல குணங்களைப் பற்றி எல்லோரும் உச்.. கொட்டிப் பேசினார்கள். அதைக் கேட்டு இவ்வளவு நற்குணங்கள் என்னிடம் உள்ளதா என வியந்தேன்.

ஓரிரு நாட்கள் சுற்றுப் புரத்தில் சைக்கிள் திருட்டுப் போன சோகம் அப்பியிருந்தது. நான் எங்கே போனாலும் தொடர்ந்திருக்கும் அரட்டைகள் அப்படியே நின்று விடும். எல்லோரும் என்னை அனுதாபப் பார்வை பார்த்து பேச ஆரம்பித்து விடுவார்கள். இப்படியாய் சாகாமல் செத்துப் போனவனின் நிலையை அனுபவிப்பேன். இறந்தபின் நான் என்னைப் பற்றிய பேச்சுகளை கேட்க இயலாதுதான். ஆனால் சைக்கிளை இழந்ததின் காரணமாய் நான் அதை அனுபவித்து விட்டேன். என் சைக்கிளை திருடி எனக்கு இந்த அற்புத சுகத்தின் அனுபவத்தைத் தந்த அந்த மகராசனை மீண்டம் வணங்கி மண்டியிடுகிறேன்.

நன்றி : செளந்தர சுகன் - தஞ்சாவூர் - அக் 2006



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061