ஓலைச்சுவடிகள்
முனைவர் வே.கட்டளை கைலாசம்
மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்களின் அடிப்படையில் சுவடிகளை ஓட்டுச்சுவடி, எலும்புச்சுவடி, மூங்கிற்சுவடி, லிபர் சுவடி, மரப்பட்டைச்சுவடி, பூர்ச்ச மரப்பட்டைச் சுவடி, தோல் சுவடி, உலோகச் சுவடி, துணிச் சுவடி, பலகைச் சுவடி, பனை ஓலைச்சுவடி, என பலவகைப் படுத்துகின்றனர். பனை மரங்களில் நாட்டுப்பனை (borasus flaballifer/ palmyar) சீதாளப்பனை எனப்படும் கூந்தல் பனை (coripha umbra calibra) லந்தர் பனை (coripha utan) ஆகிய மூன்று வகையான பனைமரங்களின் ஓலைகள் எழுதுவதற்குப் பயன்பட்டன. இவற்றில் நாட்டுப் பனையோலையே மிகுதி.
தென்னிந்தியாவில் நாட்டுப்பனை அதிகமாக வளர்கிறது. இந்த ஓலைகள் மிகவும் தடிமனாகவும் நீளம் குறைந்தும் காணப்படும். இவ்வகைப் பனை மரங்களின் ஓலைகள் 4 செ.மீ முதல் 6 செ.மீ வரை அகலமும் 60 செ.மீ முதல் 90 செ.மீ வரை நீளமும் உள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் மேற்குக் கடற்கரை, இலங்கை, மலேசியக் கடற்கரை ஆகிய பகுதிகளில் கூந்தற்பனை மரங்கள் அதிகம் வளர்கின்றன. சுந்தற்பனையின் ஓலைகள் மிக மெல்லியதாகவும் வழவழப்பாகவும் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது.
மூன்றாவது வகையான லந்தர் பனை ஓலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் பனை மரங்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், பர்மா, தாய்லாந்து, ஆகிய இடங்களில் அதிகமாக வளர்கின்றன.
ஓலைகள் எழுதுவதற்கேற்பப் பதப்படுத்தும் முறையை ஏடு பதப்படுத்துதல் அல்லது பாடம் செய்தல் என்று கூறுவர். எழுதுவதற்குத் தயாரிக்கப்பட்ட ஓலை வெள்ளாலை அல்லது வெற்றேடு எனப்படும். புத்தக ஏடுகளாக உதவும் படி ஓலையைச் சீவிக் செம்மையாக்குவதை ஓலை வாருதல் அல்லது ஏடு வாருதல் என்பர்.
செம்மை செய்யப்பட்ட ஏடுகளின் இருபுறமும் அளவாகத் துளைகள் போடப்படும். இத்துளைகள் ஓலைக் கண்கள் எனப்படும். இரு துளையிடப்பட்ட ஓலைகளில் இடப்பக்கம் நூல் கயிறு கோர்த்தும் வலப்பக்கம் மெல்லிய குச்சியைச் செருகியும் சுவடி தொய்வடையாவமல் காக்கப்படுகிறது. குச்சிக்குப்பதில் பித்தளை அல்லது இரும்பாலான கம்பியையும் பயன்படுத்துவதுண்டு. இந்தக் குச்சி அல்லது கம்பிக்கு நாராசம் என்று பெயர். இது கள்ளாணி என்றும் கூறப்படுகிறது.
ஓலைச் சுவடியில் எழுதுவதறகுப் பயன்படும் ஆணியை (styles) ஓலைதீட்டுப்படை, எழுத்து ஊசி, எழுத்தாணி என்பர். ஏட்டுச்சுவடியின் இருபக்கங்களிலும் இரண்டு மரச்சட்டங்களைச் சேர்ப்பர். இச்சட்டத்திற்கு கம்பை என்பது பெயர். ஏட்டுச்சுவடிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிற்றின் தலைப்பில் பனையோலையை அதன் ஈர்க்குடன் கிளிமூக்குப் போலக் கத்திரித்துக் கட்டியிருப்பர். அதற்குக் கிளி மூக்கு என்பது பெயர். சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய பலகையைத் தூக்கு என்றும் அசை என்றும் கூறுவர். கவளி என்பார் சேக்கிழாரடிகள். தூக்குகளைத் தூக்கிச் செல்லும் ஆட்கள் தூக்குத் தூக்கி என அழைக்கப்பட்டனர். அரசர் கூறும் செய்தியை ஓலையில் எழுதுவர். திருமந்திரவோலை அவர்கள் தலைவன் திருமந்திர வோலைநாயகம்.
ஓலைச்சுவடி பாதுகாத்தல் - திருநெலவேலியைச் சார்ந்த கவிராயர் ஓலைச்சுவடிகளில் எழுதி இலக்கியங்களைப் பாதுகாத்துள்ளார். எட்டையபுரம், சிவகிரி,சொக்கப்பட்டி, ஊற்றுமலை - குறுநில மன்னர்களும் வரதுங்கூராம பாண்டியன், அதிவீரராம பாண்டியர், வடமலையப்ப பிள்ளையன் போன்றோர் ஏடுகளைத் தொகுத்துள்ளனர். திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், காஞ்சி ஞானப்பிரகாசர் மடம், மதுரை திருஞான சம்பந்தர் மடம் ஆகியனவும், குடந்தை, சிதம்பரம், திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களில் உள்ள வீர சைவர்களும் ஏடுகளைத் தொகுத்தும் வெளியீடுகள் புரிந்தும் தமிழ்த் தொண்டு செய்துள்ளனர்.
அரசினர் கீழைநாட்டுக் கையெழுத்து நூல் நிலையம் (கர்னல் காலின் மெக்கன்சியின் சேகரிப்பு), சரசுவதி மகால் நூல் நிலையம், மதுரைத் தமிழ்ச் சங்கம், டாக்டர் சுவாமி நாதையர் நூல் நிலையம் எனப் பல இடங்களில் சுவடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், அரசு அருங்காட்சியகமும், தொல்பொருள்துறை, சித்த மருத்துவக் கல்லூரி போன்று பல இடங்களில் தனியார் பலரிடம் ஓலைச் சுவடிகள் உள்ளன, வெளி நாட்டு நூலகங்களிலும் தமிழக ஓலைச் சுவடிகள் இருக்கின்றன.
திருநெல்வேலி ஓலைச் சுவடிகள் - இலக்கியம், கலை, மருத்துவம், ஜாதகம், ஜோதிடம், கணிதம், நிகண்டு, நாட்டார் வழக்காறுகள் என்ப பலவகைச் செய்திகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் திருநெல்வேலியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகுதியாக உள்ளன. திருநெலவேலி பகுதியில் கவிராயர் குடும்பங்களில் மிகுந்த ஓலைச் சுவடிகள் உள்ளன. அண்ணாவிகள் எனப்படும் ஓலைச்சுவடி பள்ளரி ஆசிரியர்கள் களியாட்டம், போன்றவற்றையும் நாட்டார் நாடகம் நிகழ்த்தும் அண்ணாவிகள் நாடகச் சுவடிகளையும் பாதுகாத்து வருகின்றனர். வைத்தியர்கள் எனப்படும் நாட்டு மருத்துவர்களும் ஓலைச் சுவடிகளில் இருந்து மருத்துவத்தை அறிந்து மருந்து கொடுத்து வருகின்றனர். ஜோதிடர்கள், புதிண வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான் எனப் பலர் ஓலைச் சுவடிகளைப் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வருகின்றனர். ஜமீன்தார், பண்ணையார் வீடுகள், கோவில்கள், தனியார் பலரின் வீட்டு பூஜை அறைகளிலும் ஓலைச் சுவடிகளைக் காணலாம். பழைய பொருட்களை வாங்கி விற்பவர்களிடமும் ஓலைச் சுவடிகள் உள்ளன. புலவர்கள், அண்ணாவிகள், இற்ந்த வீடுகளில் ஏடுபடிப்போர்கள் எனப் பலரும் ஓலைச் சுவடிகளை வைத்துள்ளனர்.
இன்றும் பலரிடம் ஓலைச் சுவடிகள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டும். இன்றைக்கும் எத்தனை கிராமங்களில் நாட்டுப்புறத்து வீடுகளில் எத்தனை சந்து பொந்துகளில் என்னென்ன ஏடுகள் கறையானுக்கு இரையாகி வருகின்றனவோ? மிஞ்சிய மீதம் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ? உ,வே,சா செல்லாத இடங்கள் இன்னும் எத்தனையோ? அங்கெல்லாம் என்னென்ன இலக்கியங்கள் புழுங்கி மடிந்து கொண்டிருக்கின்றனவோ? யார் கண்டார்கள்?
இவைகளை மீட்டெடுத்து தமிழுக்கு வளம் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையல்லவா?
நன்றி : கதை சொல்லி இதழ் ஆகஸ்ட் 2006
நன்றி : மாற்றிக்கொள்ள விருப்பமில்லை நூல்
|