இலக்கிய இணைய இதழ்
1 ஆகத்து 2006 - இதழ் எண் : 54

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் தமிழுக்காக பெருந்தொண்டாற்றிய பாவாணர் அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது. இதன் தொடர்ச்சி அடுத்த வலையேற்றத்தில் நிறைவடையும். சென்னை சென்று Edusat தொடர்பாக இயங்கியதால் கட்டுரையை முழுமையாக இந்த இதழில் வெளியிட இயலவில்லை. பொருத்தருள்க.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
1 - 08 - 2006



அவர்தாம் பாவாணர்.
(தங்கவயல் உலகத்தமிழ்க் கழகம் வெளியிட்ட சிற்றேட்டிலிருந்து)


இருபதாம் நூற்றாண்டுத் தமிழுக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்த மொழி நூல் மூதறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழினத்தின் உண்மையையும், உலகுக்கு உணர்த்திய வரலாற்று ஆய்வியல் அறிஞர். இலக்கணச் செம்மல், பாவலர், பன்மொழிப் புலமையாளர். தமிழ்ச் சொல்லாய்வுத் துறையின் முன்னோடி, தன் வாழ்நாள் முழுமையும் கொண்ட கொள்கைக்காக ஆய்வு நிகழ்த்திய ஆய்வறிஞர். அவர்தாம் பாவாணர், ஆம் பாவாணர் என்றால் அது மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரை மட்டுமே குறிக்கும்.

பாவாணர் தமிழாக வாழ்ந்தார். அவரது வரலாறு தமிழ் வரலாறாக அமையும் தகைமை சான்றது.

உலகின் மூத்த மொழி தமிழ். பல்வேறு சிறப்புகள் பொருந்திய மொழி தமிழ். இருப்பினும் தமிழ் பன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு காரணங்களால் தளர்வுற்று வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தேவநேயப் பாவாணர் அத் தளர்வுகளையும் அதற்கான காரணங்களையும் தெளிவாக்கியதுடன் அத் தளர்வுகளினின்று விடுபட்டு மீண்டும் தமிழ் தன் சிறப்புடன் திகழ்வதற்கு வழிவகை காட்டினார்.

தமிழ் தொடர்பான, குறிப்பாகத் தமிழ்ச் சொற்கள் தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வு கண்ட பெருமை பாவாணரைச் சாரும்.

பாவாணர் என்னும் முத்தமிழ் வாழ்வினால் தமிழ் ஏற்றம் பெற்றது.

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஞால முதன் மொழியுமாய் இருப்பதைத் தெளிவாக்குவதே பாவாணர் கடைப்பிடியாய் இருந்தது. தமிழை வடமொழியினின்று மீட்பதைத் தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தாம் மேற்கொண்ட கொள்கையில் தடுமாற்றம் இல்லாமல் இறுதிவரை கொள்கைக் குன்றாக நின்றவர்.

கி.பி. 1902

பாவாணரின் தந்தை ஞானமுத்து. தாய் பரிபூரணம். பாவாணருடன் பிறந்தவர் ஒன்பது பேர். மகளிர் அறுவர்க்கும் ஆண்கள் மூவர்க்கும் பின் பாவாணர் பத்தாம் மகவாக 1902 ஆம் ஆண்டு பெப்பரவரித் திங்கள் 7 ஆம் பக்கல் வெள்ளிக் கிழமை பிறந்த கடைக்குட்டி. பாவாணரது இயற்பெயர் தேவநேசன். தந்தை ஞானமுத்து. சங்கரன் கோயில் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தாய் பரிபூரணத்தம்மையாரும் ஆசிரியப்பணி செய்தவர். பாவாணர் பிறந்த ஊர் சங்கரன்கோயில் என்னும் ஊருக்கு அருகிலுள்ள பெரும்புத்தூர்.

கி.பி. 1906

பாவாணருக்கு ஐந்து அகவையாய் இருக்கும் போதே (1906 இல்) இவரது தந்தையார் காலமானார். பின்னர்ச் சின்னாளில் அன்னையாரும் இயற்கை எய்தினார்.

சிறுவயதில் பெற்றோரை இழந்த பாவாணரை வேலூர் (முந்தைய வடஆர்க்காடு மாவட்டம்) ஆம்பூரில் இருந்த இவரது மூத்த அக்கையார் தாயாய் நின்று பேணி வளர்த்தார்.

பாவாணர் ஆம்பூரில் மிசெளரி நல்லஞ்சல் உலுத்திரன் விடையூழிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை கற்றுத் தேர்ச்சியுற்றார்.

பின்னர் பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக (C.M.S) உயர்நிலைப்பள்ளியில் 4,5,6 ஆம் படிவங்களை (9,10,11 ஆகிய வகுப்புகள்) பயின்று தேர்ச்சி பெற்றார். யங் என்னும் விடையூழியர் பாவாணரது இக்காலக் கட்டக் கல்விக்கு உதவினார்.

பள்ளியில் படிக்கும் நாளிலேயே தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையாளராக விளங்கினார். பள்ளிப் பருவத்திலேயே பாடல் புனையும் பாங்குடையவராக இருந்தார்.

கி.பி. 1919

யங் துரைமகனார் பொறுப்பில் சீயோன் மலையில் ஒரு உயர்தரப்பள்ளி நடைபெற்று வந்தது. அப்பள்ளியில் பாவாணர் ஆறாம் வகுப்பு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். இப்பள்ளியில் 1919 ஆம் கல்வி ஆண்டு முதல் 1921 ஆம் கல்வி ஆண்டு வரை பணியாற்றினார்.

கி.பி. 1922

1922 ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட ஆம்பூர்ப் பள்ளிக்குப் பாவாணர் ஆசிரியராய்ச் சென்றார். அப்பொழுது அப்பள்ளி உயர் பள்ளியாக இருந்தது. அங்கே தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக அமர்த்தம் பெற்றார் அப்பள்ளி 1922 இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.அப்பொழுது தேவநேசர், உயர்நிலைப் பள்ளி உதவித் தமிழாசிரியராக உயர்த்தப்பெற்றார்.

அக்காலத்தில் ஒருவர்க்கு இவர் தமிழ் கற்பிக்கத் தகுந்தவர் எனப் புகழ்பெற்ற புலவர் ஒருவர் சான்று வழங்கினால் போதும். அந்தச் சான்றின் அடிப்படையில் தமிழாசிரியராகப் பணியில் அமர்த்தும் மரபு இருந்தது, அந்த மரபில் பண்டிதர் மாசிலாமணி என்பவர் இவர் தமிழ் கற்பிக்கத் தகுதியானவர் என்று ஒரு சான்றிதழ் வழங்கினார். அச்சாற்றிதழ் அடிப்படையிலேயே அவர் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டார்.

பண்டிதர் மாசிலாமணி தம் சான்றிதழில் தேவநேசனைத் "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிட்ட கவிவாணன் என்னும் பெயரே பின்னாலில் பாவாணர் என்று தமிழில் மாற்றப்பட்டு அவருக்குரிய சிறப்புப் பெயராகத் திகழ்ந்தது. அதுவே அவர்க்கு உரிய பெயராகவும் ஆயிற்று.

கி.பி. 1924

சான்றிதழின் அடிப்படையில் தமிழாசிரியருக்குத் தகுதி பெற்ற பாவாணர், தமிழாசிரியர் பதவிக்கும், தலைமைத் தமிழாசிரியர் தகுதிக்கும் அந்நாளில் சிறப்பாக விளங்கி வந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு பயன்படும் எனக் கருதி, 1924 இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவ்வாண்டு பண்டிதத் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தி.

பாவாணர் தம் பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பற்றாளராகவும் பேச்சாளராகவும் ஆங்கில் இலக்கிய மன்ற மாணவச் செயலாளராகவும் இருந்துள்ளார். எருதந்துறைப் பல்கலைக் கழகத்தில் பணி மேற்கொள்ளவும் பெரு விருப்பம் கொண்டிருந்தார்.

ஆனால் பண்டிதத் தேர்வில் தனியொருவராய் வெற்றி பெற்ற பாவாணரின் மனம் தமிழின் பால் அழுந்தியது. அன்று முதல் ஆங்கிலம் பேசக் கூடாதென்றும் சூளிட்டுக் கொண்டார். தமிழாராய்ச்சியில் மூழ்கினார். தமிழின் அடியாழத்தைக் கண்டார். எனினும் ஆங்கிலப்பட்டம் பெறும்வரை கல்லூரிப் பணிக்குக் கால் வைக்க முடியாமல் போயிற்று. இதனால் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றமும் கிடைக்காமல் போயின்.

ஆம்பூர்ப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சென்னையில், பிரம்பூர்க் கலவல கண்ணன் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு), சென்னைக் கிருத்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி(மூன்றாண்டு) ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கி.பி. 1926

திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச் சங்கத் தனித் தமிழ்ப் புலவர் தேர்வு எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தனியொருவராய் தேர்ச்சி பெற்றது போல, அவ்வாண்டு தமிழ்ப் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் ஒருவரே.

கி.பி. 1928

சென்னைப் பல்கலைக்கழக வித்வான் தேர்வும் B.O.L என்னும் கீழ்கலைத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். 1928 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று அங்கு ஆறாண்டுகள் பணி செய்துள்ளார்.

1929 இல் துவாரகை மன்னன் அல்லது பூபாரம் தீர்த்த புண்ணியன் என்னும் நூல் வெளிவந்தது. பாவாணர் முதல் மனைவி எசுத்தர் அம்மையார் 1930 இல் மணவாளதாசன் என்னும் மகனை ஈன்ற பின் இயற்கை எய்தினார்.

பின்னர் தம் 1930 இல் அக்கையார் மகளான நேசமணி அம்மையாரை மணந்து கொண்டார். இவ்வம்மையார் நான்கு ஆண்மக்களையும் ஒரு பெண் மகவையும் ஈன்றெடுத்தார்.

நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்ந்த மங்கையர்க்கரசி, மணிமன்றவாணன் ஆகியோர் அவர் மக்கள்.

மன்னார்குடியில் இருந்த இசைப் பெரும்புலவர் இராசகோபாலரிடம் முறையாக இசை பயின்றார்.

கி.பி. 1931

மன்னார்குடியில் இருந்த காலத்தில்தான் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் தொடர்பு உண்டாக்கியது. செந்தமிழ்ச் செல்வியில் இவர்தம் முதற்கட்டுரை வெளியிடப் பட்டது. 1931 சூன்-சூலை இதழில் அவரது முதற்கட்டுரை வெளியானது. தலைப்பு மொழியாராய்ச்சி என்பதாகும். அதில் இவரது பெயர் வித்துவான் ஜி.தேவநேசன் எனக் குறிக்கப் பட்டுள்ளது.

1931 முதல் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரை வரைந்தார். பாவாணரின் அறிவுத் திறம் வெளிப்பட செந்தமிழ்ச் செல்வி பெருந்துணையாயிருந்தது.

கி.பி. 1934

திருச்சிராப்பள்ளி பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934-43) பணியாற்றினார். 1938 இல் இராசகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த போது இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். இதைக் கண்டித்துத் தமிழ்த் தொண்டர்கள் போராடினர். போராடிய தமிழ்த் தொண்டர்களைத் தளைப்படுத்திச் சிறையில் அடைத்தது தமிழ்நாட்டரசு. அப்போது திருச்சியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாவாணர் அவர்கள் தமிழ்த் தொண்டர்களுக்குப் போராட்டக் கருவியாக ஒப்பியன் மொழி நூல் என்னும் ஒப்பிலா நூலை எழுதி சொந்தமாக வெளியிட்டார்.

திருச்சியில் இருந்த போது மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரை நூல்களும் இலக்கண நூல்களும் வரைந்தார். கட்டுரை வரைவியல் என்னும் நூலும் வேர்ச்சொற் சுவடி (100 சொற்களுக்கான விளக்கம்) என்னும் சிறு நூலம் இக்காலத்தில் எழுதப் பெற்று வெளிவந்தன.

திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே என்னும் தலைப்பில் ஒரு இடுநூலை உருவாக்கி M.O.L பட்டத்திற்காக 1936 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தார். அவ்விடு நூல் ஏற்றுக் கொள்ளப்படாமல் தள்ளப்பட்டது. இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை என்று முடிவுகட்டினார்.

கி.பி. 1937

கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் - செந்தமிழ்க் காஞ்சி என்றும் நூல் வெளிவந்தது.

கி.பி. 1940

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இவரது இயற்றமிழ் இலக்கணம் நூலை வெளியிட்டது.

சென்னையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய முதலாம் தமிழுணர்ச்சி மாநாட்டில் பாவாணர் பங்கேற்று உரையாற்றினார்.

கி.பி. 1943

1943 ஆம் ஆண்டில் ஒரு கல்வியாண்டு சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இங்குப் பணியாற்றிய காலத்தில் தான் தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய பதிப்புகளுக்குக் குறிப்புரையும் ஆய்வுரையும் எழுதினார்.

கி.பி. 1944

இக்காலத்தில் தான் திராவிடத் தாய் என்னும் நூல் சொந்த வெளியீடாக வெளியிடப்பட்டது.

சென்னையில் இருந்து விலகி சேலம் நகராட்சிக் கல்லூரியில் 1944 இல் பணியில் சேர்ந்தார். இங்குப் பன்னிரு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இக்கல்லூரியின் முதல்வர் இராமசாமிக் கவுண்டர் பாவாணரின் தமிழ்த் தொண்டிற்குப் பெருந்துணையாகவும் தூண்டுகோலாகவும் இருந்து புரந்தார். கம்பருக்குச் சடையப்ப வள்ளல், தனக்கு இராமசாமிக் கவுண்டர் என பாவாணர் நாவாரப் புகழ்ந்த பெருமைக்குரிய பெருந்தகை சேலம் இராமசாமிக் கவுண்டர்.

சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல்
ஞாலம் பரவுதமி ழாராய்ச்சி - நூலியற்றும்
தேவநே யன்எங்கே தென்மொழித் தொண்டெங்கே
பாவுதமிழ் மீட்பதெங்கே பார்.

என்று இராமசாமிக் கவுண்டரைப் பற்றி போற்றிப் பாடுகிறார்.

( தொடர்ச்சி அடுத்த வலையேற்றத்தில் )




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061