இலக்கிய இணைய இதழ்
15 சூலை 2006 - இதழ் எண் : 53

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் செம்பருத்தி, அறிவுக்கொடி, ஊற்று இதழ்களில் வெளியாகியுள்ள படைப்பாக்கங்களை இணைத்துள்ளேன். கனடாவின் தமிழர் நிலை குறித்து முதல் கட்டுரையும், சிக்கனமாக வாழ்ந்த பெரியாரின் தன்மை குறித்த உரைவீச்சை இரண்டாவதாகவும், ழகரப் பணி மன்றத்தின் குறிப்பை மூன்றாவதாகவும் இணைத்துள்ளேன். பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை எழுதவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 07 - 2006



கனடாவில் பல்கலைக் கழகம் வரை
தமிழ் போதிக்கப் படுகின்றது.

இராஜரத்தினம் கூறுகிறார்.


(அண்மையில் நடைபெற்று முடிந்த ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டிற்குக் கனடாவிலிருந்து மலேசியா வந்து கலந்து கொண்ட திரு. இராஜரத்தினம் அவர்களிடம் நமது செம்பருத்தி இதழுக்காகச் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அதை உங்களுக்காக வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் - ஆர் - செம்பருத்தி)

உலகில் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள தங்களது தாய்மொழியைக் கட்டாயம் படித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன்வழி அவர்களது தாய்மொழி நிலைத்து வாழும். இந்த உன்னத உண்மையை உணராத பலர் தங்களை இந்தியர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இச்செயல் இங்குமட்டுமல்ல தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் நடக்கின்றது. இது செறிவுமிக்க அல்லது எதிர்காலப் பயனுக்கு ஊக்கமூட்டுவதாக அமையவில்லை என்று கனடா நாட்டைச் சேர்ந்த திரு.இராஜரத்தினம் கூறினார்.

இங்குள்ள (மலேசியா) தமிழர்கள் தமிழ்மொழியை அதாவது தங்களது தாய்மொழியைப் பேணிக்காக்கவும், அதன் மரபினைக் காக்கவும் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர். அவையன்றி தமிழ்மொழி வளர்ச்சிக்காக மேலும் பல ஆக்ககரமான முயற்சியில் ஈடுபட்டுவரும் தமிழ்சார்ந்த அமைப்புகள் - நிறுவனங்கள் - கழகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மனநிறைவை அளிக்கின்றன எனப் பெருமிதத்துடன் கூறுகிறார்.

இந்த அரியதொரு முயற்சி இங்கே வலுவான முறையில் வீறு கொண்டிருப்பதால்தான் இந்நாட்டில் ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடத்தப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியன்றி உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் பலவேறு தமிழ் வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றுள்ளன. எகா. முதலாவது, ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் இங்குதான் நடைபெற்றன. மிக விரைவில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் இங்குதான் நடைபெற இருக்கின்றது. அதற்குரிய வினைப்பாடுகளும் மிகச் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதையும் அறிகிறேன். மேலும் சிலப்பதிகார மாநாடு, திருக்குறள் மாநாடு, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழறிஞர்கள் நினைவு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றிருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.

என்ற அவர், இதே போன்ற கல்விப்பணி கனடாவிலும் தொடர்கின்றது இருந்த போதிலும் அங்குவாழ்கின்ற மக்கள் அதாவது முதலாவது தலைமுறையைச் சார்ந்தவர்களே தங்களது தமிழ் மொழியைப் பேணிக்காத்தும் முறையே பேசியும் வளர்த்தும் வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட இனப்படுகொலையால் கனடாவில் குடியேறியவர்கள். இவர்கள் பல்வேறு துன்பங்களுக்கிடையே தாய்மொழி மரபுமாறாமல் காத்து வருவதுடன் தங்களைத் தமிழன் என்ற அடையாளத்தையும் காட்டி வருகின்றனர்.

ஆனால் இளந்தலைமுறையினர் தங்களுடைய இல்லங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். பல வீடுகளில் மெல்ல மெல்ல ஆங்கில மொழியாக மாறி வருகின்றது. இது கவலையளிக்கின்ற ஒரு செய்தியாகத்தான் இருக்கின்றது.

அதே வேளையில் எங்களைப் போன்றோர் தாய்மொழி நிலைக்கவும் வாழவும் வைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் கனடிய அரசிடம் தமிழ் மொழியைப் பல்கலைக்கழகப் புதுமுக வகுப்புகளுக்குக் கட்டாயப் பாடங்களில் ஒன்றாகவும், விருப்பப் பாடங்களில் ஒன்றாகவும் இடம் பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளோம். இதன் பயனாக 4, 5 ஆண்டுகளில் படிப்படியாகத தமிழ் மொழியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது என மகிழ்ச்சியினூடே கூறினார்.

தொடர்ந்து அவர் என்னுடைய பார்வையில் இன்றைய இளைஞர்கள் கவர்ச்சிக்கு விரைவில் அடிமையாகி விடுகின்றனர். இதனால் அவர்களின் பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. தாம் செல்லும்வழி தவறானது என்று உணரமுடியாத நிலையில் இருக்கும் அவர்களிடம் நம் போன்றவர்கள் அணுகி ஆறுதல் கூறுவதைப் போன்று அறிவுரைகளை எடுத்துக் கூற வேண்டும், நமக்கு ஏன் இந்த வேலையெல்லாம் என்றெண்ணி ஒதுங்கிவிட்டால் அங்கே தமிழ் வாழாது. தமிழர்களாக வாழமாட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழர் என்ற அடையாளம் இல்லாமற் போய் விடலாம்.

அதனால் நாம் சும்மா இருந்துவிட முடியாது. அவர்கள் நமது வழிக்கு கொண்டுவர முயலவேண்டும். அவர்கள் வழியில் சென்று பிறகுதான் அவர்களுக்கு நல்வழியைக் காட்டவேண்டும். பொதுவாகவே இந்த முயற்சியானது சற்றுச் சிரமத்தையும் துன்பத்தையும் கொடுக்கலாம். அதற்காக நமது இனமானத்தை விட்டுவிட முடியுமா என்ன? அவ்வாறு இருப்போமானால் விரைவில் நமது மொழியும் இனமும் அழிந்துவிடும். அதனால் நமது கடமையை முறையே செய்தாக வேண்டும்.

புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழியைக் கற்பதினால் என்ன பயன் என்று வினா எழுப்பியவர்கள் இன்று அதற்கான விடையைக் கண்டு கொண்டுள்ளார்கள். தமிழ் மொழியைக் கற்கின்றவர்கள்தாம் தன்னுடைய பெற்றோரிடமும் குடும்ப உறவினர்களிடத்தும் முரண்படாது இசைந்து வாழ்வர் என்பதைப் பலர் புரிந்து வருகின்றனர்.

தமிழ் மொழியைக் கற்பதினால்தான் தமிழர்களிடையே உள்ள வாழ்வியலைப் புரிந்து கொண்டு தமிழ்ச் சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்தி வருவதுடன் பண்பாட்டுச் சிறப்புமிக்க ஒரு வாழ்க்கை முறையைப் பெற இயலும் என்பதைக் கனடாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் புரிந்து கொண்டுள்ளதுடன் தொடர்ந்து அதனைப் பரப்புரையாகவும் செய்து வருகின்றன.

இதனை ஒரு பிரிவாகத் தமிழ்மொழி வாரம் என்ற நிகழ்ச்சி ஒன்றை கடந்தாண்டு ஏற்பாடு செய்தோம். இந்நிகழ்ச்சிகளில் தமிழ் மொழியைக் கற்பதனால் ஏற்படும் சிறப்புகள், பயன்பாடுகள், பண்புகள் பற்றிப் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் மூலம் பரப்புரை செய்யப்படுகின்றது. இத்தமிழ் மொழி வாரமானது ஒவ்வொரு ஆண்டும் சூன்மாத இறுதி வாரத்தில் இடம்பெறும். இது எங்களின் தொடர் முயற்சியாகவும் நிகழ்ச்சியாகவும் கொண்டிருக்கின்றோம் என்றார் திரு இராஜரத்தினம்.

அடுத்து, இந்த ஆண்டுமுதல் கனடாவிலுள்ள சோரண்டோ பல்கலைக்கழகத்தில் எத்துறை சார்ந்த பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்குத் தமிழ்மொழியும் தமிழியலும் இருமடங்காகக் கற்பிக்கப்பட விருக்கின்றன. கனடாவைப் பொறுத்தவரை சிறுவர் நிலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை தமிழ்மொழியைக் கற்பதற்கு அரசு நல்லதொரு வாய்ப்பினையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. என்று பெருமிதத்தோடு கூறிய அவர்..

புலம் பெயர்ந்த தமிழர்களிடையே திரைப்படத் தாக்கமும் சின்னத்திரைத் தாக்கமும் நிறையவே உள்ளன. பொதுவாக இன்றைய இளைஞர்களை அது வெகுவாகக் கவர்ந்துள்ளது எனலாம். தமிழ்த் திரைப்படங்கள், சின்னத்திரைகள் மூலம் இளைஞர்கள் தமிழ் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கின்றது என்று எண்ணிக் கொள்ளும் அதே வேளையில் அத்திரைப்படங்களால் பண்பாட்டுக் கேடுகள் தலைவிரித்தாடுகின்றன. தமிழ் மரபையும் கலை நயங்களையும் சிதைத்துத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டன. இதனால் உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட தமிழர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியாமலும் தவறான பழக்க வழக்கங்கள் அவர்கள் இலகுவில் பின்பற்றிக் கொள்ளவும் இந்தத் திரைப்படங்கள் வழி அமைத்து விடுகின்றன.

திரைப்படத் தாக்கம் தமிழர்களை எவ்வெவ்வாறு பாதிக்கச் செய்துள்ளது என்ற வினாவிற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளித்தார்.

இம்மாதிரியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பண்பாட்டுக் கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நமக்கென்று ஒரு நாடு கட்டாயம் வேண்டும். இந்த உண்மையை எல்லாத் தமிழ் மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தனித்தமிழ் நாடு அமையப் பெற்று நாட்டில் அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளிலும் மேம்பட்டு விளங்கும் பொழுதுதான் மத்தியில் (ஐரோப்பிய நாடுகள்) வாழும் இனங்களாலும் மற்ற இனங்களாலும் மதிக்கப்படுவோம். இந்த உண்மையைச் சீன, யூதர், கிரேக்கம், ஐப்பான், போன்ற நாடுகளில் வாழும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் - என்றும் அவர் கூறினார்.

இப்பொழுது கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றித் தங்களின் கருத்தென்ன? என்ற வினாவிற்கு அவர் இப்படிக் கூறுகிறார்.

ஸ்ரீலங்காவில் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இனப்படுகொலை காரணமாக வெளியேறிய தமிழர்களைக் கனடாவும் ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் கொடுத்து வரவேற்றன. பல்வேறு நாடுகள் இம்மக்களைத் தங்களுடைய குடிமக்களாகவும் ஏற்றுள்ளன.

தமிழ் மக்கள் கல்வியிலும் வாணிகத்திலும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளனர், அது மட்டுமல்லாமல் தனியார், அரசுத்துறை சார்ந்த தொழில்களில் நல்ல நிலைகளை அடைந்துள்ளார்கள். இவற்றையெல்லாம் நன்குணர்ந்துள்ள அவர்கள், தாங்கள் வாழும் நாடுகளின் மேம்பாட்டுக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதோடு நன்றி உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர்.

அதனால், தமிழீழத்தில் வாழும் மக்களின் வாழ்வியலுக்குத் தடையானது எவ்வித்திலும் பாதிப்பதாக நான் கருதவில்லை. ஆனால் நாம் நாடுகளில் எமது நாலாந்து வாழ்வியலுக்குப் பெரும் இடையூறாக அமைந்திருக்கின்றது. நாம் நேசிக்கும் நாட்டின் அரசுகளின் இவ்வாறான செயல்களின் மூலம் அந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களை மற்றின மக்கள் ஒரு வித்தியாசமான க்ணணோட்டத்தில் பார்க்கும் நிலையை உருவாக்கி விட்டது. எனவே, இத் தடைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுவான மக்கள் அல்ல, தடை விதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களே என்பதை அந்தந்த நாட்டு அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உலகில் எந்த நாட்டில் வாழும் இனங்களும் சுயநிருணய உரிமைபெற்று வாழ்வதற்கான ஆட்சிமுறைகளாகக் கூட்டாட்சி, நடுவணாட்சி என இருக்கின்றன. இவ்வாறான ஆட்சி அமைப்பை உலகில் வாழும் எந்தவொரு இனமும் போராடிப் பெறவில்லை. ஈழத்தமிழினம் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தது, 6 இலட்சத்ததிற்கு மேற்பட்டவர்கள் தமது தாயகத்தை விட்டு உலகெங்கும் பரவி பல்வேறுபட்ட துன்பங்களுக்கிடையே வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களுடைய வாழவியல் சிதைக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனக்கென ஒரு நாட்டை அமைத்துக் கொள்வதையோ அதற்காகத் தனது பங்களிப்பைச் செலுத்தவோ அதனால் ஏற்படும் இடர்களை எதிர் கொள்ளவும் தயங்காது என்பது எனது துணிவாகும் என மிகத் தெளிவுபடக் கூறினார் திரு.இராஜரத்தினம்.

நன்றி : செம்பருத்தி - சூலை 2006




நாங்கள் கண்ட பெரியார்
உரைவீச்சு - எண்ணதாசன்

சிக்கனம் என்பதற்கு
எதிர்ச்சொல்
ஊதாரித்தனம்.
நூறு ரூபாய் சம்பாதித்து
தொண்ணூறு செலவழித்து
பத்தைச் சேமிப்பது
சிக்கனம்.
நூறையும் செலவழித்து விட்டு
பத்து ரூபாய் கடன் வாங்குவது
ஊதாரித்தனம்.

இன்னும் விளக்கலாம்
வாளி நீரிலிருந்து
குவளையில் மொண்டு
கால் கழுவுவது சிக்கனம்
வாளி நீரை
அப்படியே காலில் கொட்டுவது
ஊதாரித்தனம்.
ஊதாரிகள் ஒரு போதும்
உயர்வதில்லை.

பெரியாரின் சிக்கனம்
சேமிப்புக்கு இலக்கணம்.
துளித்துளியாக
அவர் சேர்த்த செல்வம்
குளத்து நீரானது - அந்தக்
குளத்து நீரை
ஏரியாக்கிய பெருமை
வீரமணியைச் சாரும்.

சிந்தனைப் பெரியாருக்குள்
சிக்கனமும் அடக்கம்.
சிக்கனப் பெரியார்
காலத்தை மட்டும்
தாராளமாகச் செலவழிப்பார் - ஆம்
மாதத்திற்கு
முப்பது - முப்பத்தொன்று நாள்கள்
என்பது
போக்கிரித்தனம் - என்று
வைது விட்டு

மூன்று பத்து நாள்களையும்
தொடர் சுற்றுப் பயண முழக்கத்தில்
செலவிட்டு விட்டு
நேரமில்லை - என
ஏங்குவார்.

பெரியார்
ஒருநாள்
சிதம்பரத்தில்
கூட்டம் முடித்து விட்டுத்
தொடர் வண்டியில்
திண்டுக்கல் வழியாக
மதுரைக்குப் பயணமானார்.

சந்தனத்தேவன் - எனும்
பெரியார் தொண்டர்
அந்தக் காட்சியைச்
சித்திரச் சொற்களால்
இவ்வாறு சித்தரிக்கின்றார்.

சிதமபரத்தில் கூட்டம்
பேசி முடித்த பெரியார்
சென்னை செங்கோட்டை வண்டியில்
வருவதாகச் செய்தி.
எனக்கோ ரயில்வேயில்
பயணச்சீட்டு தரும் வேலை.
திண்டுக்கல் நிலையத்தில்
வண்டி நுழைய
அய்ந்தே நிமிடமுள்ளது.
என்னிடத்தில்
சக ஊழியரை அமர்த்தி விட்டு
அய்யா வரும் வண்டியை
எதிர்பார்த்து ஓடுகிறேன்.

அய்ந்த்ாறு கருஞ்சட்டைத் தோழர்கள்
கழகக் கொடி தாங்கி
பெரியார் வாழ்க
என முழக்கமிடுகின்றனர்.

வண்டி வந்து நின்றது.
பெருமூச்சு விட்டவாறு
ஒவ்வொரு பெட்டியாக
எட்டிப் பார்த்துக் கொண்டே ஓடுகிறேன்.
மூன்றாம் வகுப்புப்
பெட்டியொன்றில்
நான்கு பேர் உட்காரும் பலகையில் எட்டுப்பேர்
அவர்கள் மத்தியில்
அய்யா அமர்ந்திருப்பது கண்டு
கலங்கினேன்.
நான்கு தோழர்கள்
அவர் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர்
புலவர் இமயவரம்பன்.
அவர் கையில் ஒரு வாளி.


அய்யாவுக்கு
கிட்னித் தொல்லை.
தன்னையும் மீறி ஒழுகும்
சிறுநீரைப் பிடிக்க
ஒரு வாளி.
அய்யாவின் இடுப்பைச்
சுற்றியிருந்த ரப்பர் குழாய்
வாளியில் தொங்கியது - அதைப்
பிடித்துக் கொண்டு நினறார் புலவர்

சின்னாளப்பட்டித் தோழர்
உரத்த குரலில்
பெரியாரிடம் சொல்கிறார்.
அய்யா
இந்த வண்டியிலேயே
பயணம் செய்து
மதுரையில் இறங்குறீங்க அங்கே
நாளை இரவுதான் கூட்டம்.
அதுவரை
உங்களுக்கு ஓய்வுதான்
நீங்க
பெரிய மனசு வைச்சு
இங்கே இறங்கினால்
மாலையில்
சின்னாளப்பட்டியில்
கழகக் கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்கிறோம்.
தமுக்கு அடித்தே
கொஞ்ச நேரத்தில்
கூட்டத்தைச் சேர்த்திடுவோம்.

காலையில்
இங்கிருந்தே
மதுரைக்குப் போக
டாக்சி ஏற்பாடு செய்கிறோம்
அதுவரை - அய்யா
உங்களுக்குத்
தங்கும் வசதி, உணவெல்லாம்
ஏற்பாடு செய்கிறோம்.
தாங்கள்
தலையசைத்தால் போதும்...

அந்தத் தோழர்
பேசி முடிக்கும் முன்பே
அய்யா தலையசைத்து விட்டார்.
எல்லோரும்
திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர்.
திண்டுக்கல்
ரெயில் நிலையம் அருகேதான்
நகராட்சிப் பயணிகள் விடுதியில்தான்
அய்யா தங்குகிறார் என்ற செய்தி
எனக்குத் தேனாய் இனிக்கிறது.
வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகிறேன்.

தனிமையிலும் தனிமை
படுக்கையில் பெரியார் உட்கார்ந்துள்ளார்
துணைக்குப் புலவர்
அய்யாவை நோக்கிப்
பெரிய கும்பிடு போட்டேன்.
அய்யா யாரு ?
ஊர் உலகுக்கெல்லாம்
அய்யாவான அவருக்கு
நான் அய்யாவாம்.

அய்யா - நான்
கழக அனுதாபி
இரயில்வேயில் வேலை.

அப்படியா. நம்மவங்க
இரயில் உத்தியோகத்துக்கு வருவது
அபூர்வம்.
பார்த்துப் பிழையுங்க.
அது .. சரி
நாங்க
மதுரை வரைக்கும்
டிக்கெட் எடுத்திருக்கிறோம் - ஆனால்
திண்டுக்கல்லிலேயே இறங்கிவிட்டோம்
அந்தப்
பயணம் செய்யாத தூரத்துக்கு
காசு கிடைக்குமா ? வழியுண்டா ?

வழியிருக்குங்க அய்யா
பயணம் செய்யாத டிக்கெட்டை
திண்டுக்கல் ஸ்டேசன் மாஸ்டரிடம்
சரண்டர் செய்தால்
இரசீது - தருவார் - அதைத்
திருச்சி ரயில்வே ஆபிசுக்கு
அனுப்பினால்
பணம் வரும்.

வரட்டுமே ! கசக்கவா செய்யும்.

மொத்தம் பத்து ரூபாய் ரீபண்ட்
வரும் - அதுக்கு
நான்கு ரூபா
தபால் செலவு வரும்.

வரட்டுமே ஒரு பைசாவானாலும்
அதுவும காசுதானே.
அதுவும்
கட்சிக்கு வரவேண்டிய காசு
பொதுமக்கள் காசு.
புலவரே
அய்யாவோடு போய் ரசீது வாங்கி
இவரை வைத்தே
திருச்சிக்கு தபால் எழுதிடு.
போ ! போ !!

அய்யா தனியா இருப்பீங்களே
என்றார் புலவர்.

இம்மாம் பெரிய
கட்டிடம் இருக்கு
என்ன தனிமை ?
கிளம்பு, கிளம்பு

இப்படியெல்லாம் அய்யா
பைசா... பைசாவாகச்
சேர்த்ததுதான் - இன்று
மருத்துவமனையாக
பொறியியல் கல்லூரிகளாக
அரங்குகளாகத் திகழ்கின்றன - என்று
நினைத்துப் பார்க்கும்
எவருக்கும்
கண்கள் மட்டுமா கலங்கும் ?
அய்யோ... இதயமே...!

நன்றி : அறிவுக்கொடி இதழ் - சூலை 2006




அழகு - ழ கரம் பழகு

தமிழீர்! தமிழ் வாழ ழ கரம் பேசுவீர். தமிழர்கள் தரமானவர்கள் என்கிறார்களே? ஆனால் அவர்கள் தமிழ் என்பதைத் தமிள் என்று பேசி தரங்குறைக்கலாமா? முதலில் பேசும்போது தமிழ், உடனேயே மாற்றி தமிள், அடுத்து தமில், இப்படி ஒரே சொல்லை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் உளறுவாயர்கள் தானே? எப்பொளுதும் நெம் 1 வ - ள - ங்குகிறது... என்று கம்பெனியின் சங்கைகெட்ட விளம்பரம் தொலைக்காட்சியில் ! சரியா ? அனுமதிக்கலாமா?

தமிழ் நம் தாய்மொழி, தாய்மொழியில் வரும் ழகர எழுத்தைத் தவறாகப் பேசித் தவறாகப் பயன்படுத்தினால், அது தாயைத் தவறாகப் பயன் படுத்துவதற்கொப்பாகாதா? சிந்தியுங்கள் தமிழக அறிஞர்களே ! நாவை நடுவாயில் சற்றே வளைத்துக் காற்றை வேகமாகவும், அழுத்தமாகவும் விட்டு, வடமொழி ஷ பேசுபவன், காற்றை மென்மையாக விட்டு ழ பேசத் திணறுகிறானே! என்னே தமிழன்? ஆசிரியர்களும், பெற்றோர்களும் சரியல்ல என்பதையே இது உணர்த்துகிறது. தமிழ் என்று பேசுவதில் தாயகத் தமிழனே தவறு செய்தால், உலகத் தமிழன் எங்கே உருப்படப் போகிறான்?

தமிழன் என்பான ழகரம் பிறழ்ன்று அமிழ்த ஒலியை ளகர மாகத் தமிள், தமில்மொளி, வால்க வென அயலானைப் போல் அழித்து மழித்து மாற்றிப் பேசி மடையனாக்கினும், கேட்கும் தமிழன் வெட்கி நோக்காது விலகிப் போவதும் வேதனை யன்றோ?

கொலைக்கு லகரம் சரி கொள்ளைக்கு ளகரம் சரி, அழகு தமிழுக்கு ழகரம் பேச வேண்டாமா? தமிழை வாழ்த்த வாவென்றால், சென்னைக்குத் தமிழைத் தாழ்த்த வந்துள்ளார்! தமிழின் அழகே ழகரம்தான் அதை உணர்வில்லாமல் சிதைக்கின்றார்.

மழைபிழையாகி, ம லை யானால், ஆழம் வழுவி ஆலமானால் இழை குழைந்து இலை யானால், சோழன் பாழாகிச் சோளனானால், பழம் நழுவிப் பளமானால், வேழம் வெதும்பி வேளமானால், தமி(ழா) ளா - நீ பேசுவது தமிழா?

தமிழை இப்படி வானொலியினரும், கல்வித்துறையினரும், தொலைக்காட்சியினரும், திரைத்துறையினரும் சேர்ந்து கூட்டாகக் கூவமாக்கித் தமிழ் மொழியைக் கொலை செய்யலாமா? ஒருமுறை தமிழெ ன்று சொல்லி, மறுமுறை தமிளெ ன்று பேசி, அடுத்த முறை தமிலென்று கூறி, இன்றும் உணராதான் தமிழனா? உணர்ந்தும் திருந்தாதான் மனிதனா?

தமிழ் ழகரப் பணிமன்றம், 7127 ஆசீக முல்க் 2 ஆம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை 6

நன்றி : ஊற்று இதழ் - சூலை 2006




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061