இலக்கிய இணைய இதழ்
25 சூன் 2006 - இதழ் எண் : 52
|
அன்புடையீர். வணக்கம்,
இந்த இதழ் 10 நாள்கள் தாமதமாக வெளிவருகிறது. கட்டகம் உருவாக்குதல் தொடர்பாகத் தொடர்ந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்ததால் உரிய நேரத்தில் வலையேற்ற இயலவில்லை. 15 ஆம் தேதி இணையம் பார்த்து - உடல் நலமில்லையா ? - எனப் பலரும் தொலைபேசி வழிக் கேட்ட பொழுது நண்பர்களின் அன்பை உணரமுடிந்தது. இந்த இதழில் பொறிஞர் கு.ம.சுப்பிரமணியன், பாவலர் வையன் ஆகியோரது படைப்புகளை இணைத்துள்ளேன்.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 25 - 06 - 2006
|
பணிநிறைவுற்றோரே வாரீர்
- பொறிஞர் கு.ம.சுப்பிரமணியன்., திருச்சி.
பணிநிறைவு பெற்றோய்வும் பெற்று விட்டோம் !
பல்லாண்டாய் உழைத்தபணம் கையில் ! மூப்பும்
பிணியும்வந் துறும் இயல்பே! பணத்தில் கொஞ்சம்
பிடித்திறுதி வரைவைத்துக் கொள்ளல் நன்று!
அணியணியாய் மக்களொடு பிறரும் நம்மை
அணுகுவார்காண்! ஈயும்முன் நன்றாய் எண்ணித்
துணிவமெனில் இறுதிவரைக் கவலை யில்லை!
தொலைநோக்குப் பார்வையிதில் செலுத்தல் வேண்டும் !
பெற்றமனம் பித்தென்பார் உண்மை ! ஆனால்
பிள்ளைமனம் ஏன்கல்லாய் மாற வேண்டும்?
எற்றுக்கு நாமிவரைப் பெற்றோம் என்ற
எண்ணம்பெற் றோர்மனதில் எழவாய்ப் பின்றிப்
பற்றுள்ளம் கொண்டவரைப் பேணிக் காத்தல்
பாரில்நன் மக்கள்தம் கடமை யாமே !
பெற்றக்கால் பெரிதுவந்த பெற்றோர் தம்மைப்
பேணாதோர் மக்களெனத் தக்கார் அல்லர் !
பிள்ளைகளின் மேற்பாசம் வைத்தல் என்றும்
பெற்றோரின் இயல்பாகும் ! உவந்து பெற்ற
பிள்ளைகளைப் பாசத்திற் குரிய ராகப்
பெற்றோரை முதுமையிலே பேண வேண்டும்!
தள்ளாத வயதிலவர்க் கூன்று கோலாய்த்
தாங்குவது பிள்ளைகளின் கடமை! மாறாய்
உள்ளமிக நைந்தொருநாள் முதியோர் இல்லம்
உறுவரெனில் அதுகொடிது கொடிதென் போமே !
நன்மக்கட் பேறென்று குறளார் சொன்ன
ந்ல்லூழ்வாய்க் கப்பெற்றோர் பேறு பெற்றோர் !
இன்பத்துள் இன்பம்நன் மக்கட் பேறே !
இல்லாயின் கவலற்க! வாய்ப்பி லாதோர்
துன்பத்தில் தோயாமல் பிறருக் காகத்
தொண்டாற்ற வாய்ப்புளதால் பற்றிக் கொள்வீர் !
அன்பொடறன் துணையாமால் யாதும் ஊராய்
யாவரையும் கேளிரெனக் கொண்டு வாழ்வோம் !
|
குறும்பாக்கள்
பாவலர் வையவன்
(o)
தன் வாய் நூலாலேயே
அழிவு தேடுகிறது
பட்டுப்பூச்சி.
(o)
அய்ந்து பேரைப் பலிவாங்கிய
சாலை நேர்ச்சியைப்
பார்த்துக் கொண்டே இருந்தார்
பஞ்சமுக விநாயகர்.
(o)
ஓடத் தெரியாது
என்றாலும் சிறை
கோலத்துள் புள்ளி.
(o)
திருப்பதி மலையில்
மழிக்கப்படுகிறது
மூவேந்தர் முடியும்
முத்தமிழ் பண்பாடும்.
(o)
வீட்டிலிருந்து
சமுதாயத்திற்குக் கொண்டுபோய் விடாமல்
வேலைவாய்ப்பக ஊருக்கே போகின்றன
எல்லாப் பள்ளி ஊர்திகளும்.
(o)
டியூசன் சென்டர் களில்
விற்கப்படுகிறது
மாணவர்களின் எதிர்காலம்.
(o)
குடிசை வாழ் மக்களெல்லாம்
சேர்ந்து கட்டினார்கள்
சலவைக்கல் பதித்த சக்திகோயில்.
(o)
ஏராளமான கடைகள் தமிழ் விற்க
எவருமில்லை காப்பாற்ற.
(o)
முப்பத்தேழு ஆண்டுகால
வேலை அனுபவத்தைப்
பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
எழுதப் படிக்கத் தெரியாத
தன் மனைவியிடம்.
(o)
கல்வித் துறையின் முதல் எதிரி
திரைத் துறையும் தொலைக்காட்சியும்.
(o)
தட்டேந்திக் காத்திருக்கிறார்கள்
பார்ப்பனனும் சூத்திரனும்
கோயிலுக்கு
உள்ளேயும் வெளியேயும்.
(o)
திரைப்படம் ஓடின
திரவியக் கேடு.
(o)
லாரிகளில் ஏறுகின்றன மாடுகள்
வயல்களில் இறங்குகின்றன
டிராக்டர்கள்.
(o)
எத்தனைமுறை மழித்தாலும்
வளர்கிறது மயிர்
ஆசையைப் போலவே.
(o)
விழுந்தது கண்ணாடி
ஒட்டவைக்க முடியாமல்
உடைந்தது மனம்.
(o)
தேடித் தேடிப் பொறுக்குகிறார்கள்
குப்பையிலும் கிடைக்கிறது
வாழ்க்கை.
(o)
கோடிக்கணக்கானோர்க்கு வாணிகம்
கோடியில் ஒருவர்க்கு வாழ்க்கை
ஆன்மீகம்.
(o)
சுமக்கும் பொருள் எது ?
சுமக்கும் தூரம் எவ்வளவு ?
கவலையில்லாமல் நடக்கின்றன
காளையும் காலமும்.
(o)
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்று பிடிக்கும்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்று பிடிக்காது
எந்த ஒன்றுதான்
எல்லோருக்கும் பிடிக்கும்?
ஒன்றுமில்லை.
(o)
பாலகர்களின் கல்வியே
முழுமையடையவில்லை
பாலியல் கல்வி குறித்துப்
பீற்றுகிறார்கள் !
(o)
வீட்டுக்காரன் செத்ததை எண்ணி
விக்கி அழுதன
மூட்டைப் பூச்சிகள்.
(o)
வில் ஒடித்தாகிவிட்டது
சனகனைத் துரிதப்படுத்தினான்
நவீன இராமன்
சீதையைப் பிறகு அனுப்பு,
சீதனத்தை முதலில் அனுப்பு.
(o)
கட்டட வேலை
கல் சுமக்கிறார் சிறுவர்
இளமையில் கல்.
(o)
விளக்கைக் கொடுத்த
தாமஸ் ஆல்வா எடிசன்
இருட்டையும் கொடுத்தான் உலகுக்கு !
சீரழிக்கும் திரைப்படக் கொட்டகை.
(o)
புண்ணாக்குக் கனவுகளைச் சுமந்தபடி
வலம் வருகின்றன
செக்கு மாடுகள்
(o)
ஒவ்வொரு மனிதர் சாகும்போதும்
உடன்கட்டையேறுகிறது
ஒருபகுதி மரம்.
(o)
எல்லாத் திட்டங்களின் இலக்கும்
ஒதுக்கப்பட்ட தொகையைச்
செலவு செய்வதே.
(o)
ஒவ்வொரு கிளையின் நுனியிலும்
விளக்குகள் ஏற்றிச் சிரிக்கிறது
சிவப்புக் கொன்றை மரம்.
(o)
பெரிய ரீடர் பெரிய ரைட்டர்
பெரிய பொயட் பெரிய பெரிய ஆத்தர்
எல்லாம் இருக்கிறார்கள்
டமில் லிட்டரேச்சரில்.
(o)
காலையில் அடுக்குமாடி கட்டப்போய்
மாலையில் மண்குடிசை திரும்பினர்
தொழிலாளர்கள்.
(o)
கட்டுக் கம்பியில்
சுருக்கிட்டுத் தொங்கும்
முழம்நீளத் தண்டவாளத்தில் ஓடுகிறது
பள்ளிக்கூட வண்டி.
(o)
ஆசிரியர்கள் கேட்டுக் கொள்வதெல்லாம்
படி... படி... படி...
மாணவர்களிடமும் அரசாங்கத்திடமும்.
(o)
அலங்காநல்லூரில்
காளையை அடக்கியவன்
அடங்கிவிடுகிறான் திருநள்ளாற்றில்
(o)
வாலாட்டுகிறார்கள்
நன்றியுள்ள நாயும்
நன்றிகெட்ட மனிதனும்.
(o)
தங்கப் பாலாடையில்
நஞ்சை ஊட்டுகிறது
ஆங்கிலக் கல்வி.
(o)
ஈடாக முடியாது
எத்தனை பெப்சியும் கோக்கும்
ஓர் இளநீருக்கு.
(o)
இந்தி படித்தால்
இந்தியாவெங்கும் பிழைக்கலாம்
ஆங்கிலம் படித்தால்
உலகமெங்கும் பிழைக்கலாம்
எப்போது வரும் தமிழனுக்குத்
தமிழ்நாட்டில் பிழைக்கும் எண்ணம்?
(o)
தமிழகம் மீண்டும் தலைநிமிரும்
பாவேந்தரின் தமிழியக்கம்
பாடத்திட்டம் ஆக்கப்பட்டால்.
(o)
உரத்தைக் குறைத்துவிட்டது
உரம்போட்ட அரிசிசிசோறு.
(o)
எண்சாண் உடம்பால்
எட்டுமணிநேர உழைப்பு
நிறையவேயில்லை ஒருசாண் வயிறு.
(o)
முகம் சுளித்தது குழந்தை
பலூன் காற்றில்
பீடி நாற்றம்.
நன்றி : மனசு சுற்றிய மாவளி நூல்,
தமிழ்க் குடியரசு பதிப்பகம்,
மியான் முதல் தெரு, சேப்பாக்கம்,
சென்னை - 600 005
(o)
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
அம்மா மரணம்.
(o)
கஞ்சி போட்டான் ஆடைக்கு
பசியோடு
சலவைத் தொழிலாளி.
(o)
அழகிய மீன்
உள்ளே முட்கள்
அழகு ஆபத்தானது.
(o)
விற்காததால்
வாடியது
பூக்காரி முகம்
நன்றி : இரா. இரவி., மதுரை
|
முனிவரும் சீடரும்
ஒரு முனிவர் தன் சீடர்களுடன் காட்டில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பருவப்பெண் ஆற்றை கடக்க பயந்து நின்று கொண்டிருந்தாள். அந்த முனிவர் பெண்ணைச் சுமந்து ஆற்றின் கரையைக் கடக்க உதவி செய்தார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவருடன் அமைதியாக வந்தார்கள். சற்று நேரம் கழித்துச் சிடர்கள் முனிவரிடம் - குருவே ! நாம் துறவிகள்..நீங்கள் ஏன் அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கிச் சென்றீர்கள்?.. அது பாவம் இல்லையா? என்றனர். அதற்கு அந்த முனிவர் - நான் அந்தப் பெண்ணைக் கரையில் இறக்கி விட்டேன். நீங்கள் அந்தப் பெண்ணை இன்னும் ஏன் மனதில் சுமக்கிறீர்கள் - என்றார்.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|