தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநாட்டில்
தந்தை பெரியார்
போளூரில் 24-4-1927 இல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு
சகோதரர்களே ! சகோதரிகளே !!
இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு
எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்தவிதத்தில் தகுந்தவனென்பது
எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது
மாநாட்டுக்கு, அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன் ? உங்களின்
அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை
ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷ காலந்தான் நான் பள்ளியில்
படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான்
படித்த காலத்தைவிட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும்.
இதையறிந்த என் பெற்றோர்கள், இவன் படிப்புக்கு இலாயக்கில்லை என்பதாகக் கருதி நாங்கள் செய்து வந்த
தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 ஆவது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷக்
கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி
முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி
என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற் கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.
தற்கால் ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியத் தொழிலை ஒரு புனிதமான கடமை என்பதாகக்
கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து
நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு நடத்தி வருவதே
வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மாநாடுகள் கூட்டிப் பேசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச்
சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல்
தங்களால் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்ததற்கு
அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்திளை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே
இல்லை.
முதலாவது நீங்கள் படித்த கல்வியும், நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கலவியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர்
ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதே யல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்துக்கோ,
தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த
விஷயம்தான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கலவி, சகலகலா கலவி என்பது வரையிலும் கவனித்தால்,
தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சி
முறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும்
இயந்திரமாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?
சாதாரணமாக ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது
பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்க ஆரம்ப ஆசிரியர்கள்
அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும்
தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்கங்களிலும் இவைதான்
காணப்படுகின்றன.
எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப்
படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய்
வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது.
ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைப் பெறும் இயந்திரங்களாக
இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு
அறிவுண்டாக்க அவர்களால் முடியும்? ஆகவே அந்த முதலாவது ஆசிரியர்களின் யோக்கிதை இப்படியாய் விட்டது.
அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்ப ஆசிரியர்களாகிய உங்கள் யோக்கிதையோ உங்கள் வயிற்றுப்பாட்டுக்கு
கான்பரன்ஸ் - கட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப் போகிற பிள்ளைகள்,
எப்படித் தக்க யோக்கிதையை அடைய முடியும்? கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல, அது
அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால் மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும்,
மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும் அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடும் கண்ணியமாய் உலக
வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாக்கத்தக்கதாக இருக்கவேண்டும். இவைகளை அறிந்தே
வள்ளுவரும் - உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் - என்றும் - தாம் இன்புறுவது
உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றிந்தார் - என்றும் - ஒத்தறிவான் உயிர்வாழ்வான் மற்றயான் செத்தாருள்
வைக்கப்படும் - என்றும் சொல்லி இருக்கின்றார்.
இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதவன்
குருடன், திருடாதே, அடிக்காதே - என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டு விடக்கூடும்?
இவைகள் எல்லாம் குழந்தைகள் தாமாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திருப்பி
வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும், நாயும் பூனையும் கண்ணில்
பார்க்கும் போதே கால் எத்தனை என்பதும், வாலுண்டு என்பதும் தெரிந்து கொள்வார்கள். இதற்காக இவ்வளவு
பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும், மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்ன தென்பதைக் கற்றுக் கொடுக்கவேண்டும். மானம், ஆண்மை
இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா.
என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேடடுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய
சகலகலா வல்லுநர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்கடர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், ஒரு காப்பிக்
கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு - சாமி ஒரு கப்
காப்பி கொண்டுவா - என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக்
கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து
வயிறுவளர்ப்பதில் போட்டி போடுகிறான். இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம்
படித்தவர்களாவார்களா ?
வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி, முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத்
தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி,ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக்
கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி,ஏ., படித்தவர்களுக்கு
வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ.,
படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத
வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.
ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான்., சாஸ்திரி முதலிய
பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர். உலகத்திற்கு
அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர. அறிவாகாது.
இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும, சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம்.
இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருக்கலாம்.
எனவே, இவைகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா ?
நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலத்தில் கல்விமுறை என்பதே எனது அபிப்பிராயம்.
முற்காலக் கல்விமுறை என்றே எழுதித் திண்னைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பைவிடத் தற்காலப்
படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஆற்றுமணலும் போய், காகிதக்
குப்பைகளுக்கும், பெரும் பெரும் புத்தகங்களும், இங்கி, பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள்
சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதே யல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களைவிட,
படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட
அன்பில், அன்னியோன்யத்தில், நம்பிக்கையில் படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள் ?
முன்காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டு வாயிலில் ஒரு பசுவையும் அதன்
கன்றையும் தீனி போடாமல் கட்டி விடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கு அஞ்சி பெண்சாதியின்
தாலியை விற்றாவது, கடனைக் கொடுத்துவிட்டுத்தான் வீதிப்புறம் நடப்பான் என்று எனது தகப்பனார் சொல்லி
இருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரிச் செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் -
பாலைக் கறந்து வந்து நமக்குக் கொடுத்துவிடு பாவம் வந்து நம்மை என்ன செய்துவிடும் பார்க்கலாம் - என்று
தைரியம் சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மாஜிஸ்திரேட் கச்சேரி,
எத்தனை முன்சீப் கோர்ட்டு, எததனை செசன்ஸ், அய்கோர்ட், எததனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கிறது.
பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா. படிப்பு என்னும் தற்காலக் கல்வி
முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஈனமாக நடக்கத் தூண்டி, அல்லல் படுத்தி, நாட்டையும் சமூகத்தையும்
பாழ்படுத்தி வருகிறது.
அறிவுக் கல்வியின் யோக்கிதை இப்படியானால் தொழில் கல்வியின் யோக்கிதை இதைவிட மோசமாக இருக்கிறது.
தொழில் கலவி என்னும் பெயரில் தற்காலம் நமது பணமும், நேரமும் மக்களின் அறிவும் வீணாவதல்லாமல்
வேறென்ன பலனைக் கண்டோம்? தற்காலப் பள்ளிக்கூடங்களில் தொழில்கல்வி என்ற பெயருடன் கற்றுக்
கொடுக்கும் தொழிற்கல்வி முறையும் கொஞ்சமும் சரியானதல்ல. கொஞ்ச காலமாகத் தேசியக் கிளர்ச்சி ஏற்பட்டதின்
பலனாய் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தொழிற்கல்வி என்பதாகச் சொல்லி, தச்சு வேலையும், விவசாயமும்,
இராட்டினம் சுற்றுதலும், நெசவு நெய்தலும் முதலிய வேலைகளுக்கென்று அனாவசியமாய்ப் பணத்தையும்,
நேரத்தையும் பாழ்படுத்துகின்றனர். வக்கீல் மகனுக்கும், ஜட்சு மகனுக்கும், மிட்டாதார் மகனுக்கும், வியாபாரி
மகனுக்கும், பெரிய நிலச்சுவான்தார்கள் மகன்களுக்கும் ஒருங்கே உட்கார வைததுச் சில மணிநேரம் தச்சு வேலை
கற்றுக் கொடுப்பதாலும், இராட்டினத்தைச் சுற்றச் சொல்வதாலும் என்ன பயன் விளையக்கூடும்? எல்லாத் தொழிலும்
கற்றிருக்கட்டும் என்பதற்காகவே சொல்வோமானால், இந்த இரண்டு மூன்று தொழிலாலேயே உலகத் தொழில்
எல்லாம் தெரிந்துவிடுமா ?
ஜீவனோபாயத்திற்காக என்று சொல்வோமானால் மேற்கண்ட பிள்ளைகளெல்லாம் இந்தத் தொழிலை
ஜீவனோபாயத்திற்காக ஏற்று ஜீவிக்க முடியுமா? ஆகவே, அறிவுக்காவது, ஜீவனத்திற்காவது இந்தத் தொழில்கள்
இப்பிள்ளைகளுக்கு உபயோகப்படுகிறதா? உயர்தரப்பாடசாலை என்பவைகளில் - சயின்ஸ் - என்றும் சரித்திரம்
என்றும் எதை எதையோ பணத்தையும் காலத்தையும் செலவழிக்கச் சொல்லிக் கொடுத்து உருப்போடச் செய்து,
கற்றுத் தேர்ந்த பிறகு 30 ரூபாய்க்கு ஏவின வேலை செய்து, படிப்பினுடைய சக்தியையும் அறிவையும்
கொண்டல்லாமல் மேல் எஜமானுக்கு மானத்தையும், மனசாட்சியையும் விற்று நல்ல பிள்ளையாவதன் மூலம்
சம்பளத்தை உயர்த்தி, வாங்கிய சம்பளத்தில் வாழ்ந்து, தன் காரியத்தை பார்த்துக் கொண்டதோடு சாவதல்லாமல்,
வேறு ஏதாவது பல்குத்துகிற துரும்புக்காவது உதவப்படுகிறதா? அல்லது அந்தத் தொழிலுக்காவது இந்தப் படிப்புகள்
உபயோகப்படுகிறதா? ......
( அடுத்த வலையேற்றத்திலும் தொடரும் )
|