இலக்கிய இணைய இதழ்
1 ஏப்ரல் 2006 - இதழ் எண் : 47

அன்புடையீர். வணக்கம்,

பழைய இதழ்கள் தொகுப்பிற்காக அலைந்த பொழுது, தேடுதலில் நடை இதழ் கிடைத்தது. 1969 இல் வெளிவந்த இவ்விதழின் படைப்பாக்கங்கள் சிறப்பாக இருந்தன. இவ்விதழிலிருந்த யானை மொழிபெயர்ப்புக் கதை அருமையாக இருந்தது. கல்வியின் அடித்தளத்தை, நுட்பத்தை மிகச் சிறப்பாகக் கதை உணர்த்தியது. விழுப்புரம் மாவட்டத்தின் மண், மொழி இதழ், 2 இதழ்களை வெளியிட்டுள்ளது. இரண்டாவது இதழில் வெளிவந்த கார்முகிலின் நறுக்குகள் உண்மை நிலையை எடுத்துக் காட்டின. மண், மொழி இதழின் படைப்பாக்கங்கள் கூர்மையாக இருந்தன.

நடை, மண் மொழி - இதழில் நான் படித்து மகிழ்ந்த இவ்விரண்டு படைப்பாக்கங்களையும், மறுவெளியீடாக சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழில் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.

மார்ச்சு மாதத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10,000 க்கு மேல் உயர்ந்துவிடும் என்று எண்ணுகிறேன். நிறைய நண்பர்கள் புதிய இணையதளம் தொடங்கவேண்டும் என்று தொலைபேசி செய்கிறார்கள். தமிழம் வலை சிறப்பாக இருக்கிறது என்று முகம்தெரியாத ஒருவர் தொலைபேசி வழியாகச் சொல்லும் பொழுது - படும் பாடெல்லாம் பறந்து விடுகிறது - நண்பர்கள் தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் நமது இணையதளத்தை அறிமுகம் செய்யவும்

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
1 - 04 - 2006




யானை

மிரோஜெக்

- (மொழி பெயர்ப்பு - வே. மாலி) -


சிறுகதை

மிருகக் காட்சிச் சாலையின் இயக்குநர் தான் புதிதாக வேலைக்கு வந்ததைக் காட்டிக் கொண்டார். தனது முன்னேற்றத்திற்குரிய ஏணிப்படிகளாகவே விலங்குகளைக் கருதினார். அவருடைய நிறுவனத்திற்குரிய கல்விச் சிறப்பைப் பற்றி அவர் கவலைப் படவே இல்லை. அவருடைய மிருகக்காட்சி சாலையில் ஒட்டைச் சிவிங்கிக்குக் கழுத்து சிறியதாக இருந்தது. வளைக் கரடிக்கு வளை இல்லை. சீட்டி அடிக்கும் பறவைகள், தங்கள் ஆர்வத்தையெல்லாம் இழந்து விட்டபடியால், மனமில்லாமல் மிக அரிதாகவே சீட்டி அடித்தன. இந்தக் குறைகளை அவர் தோன்ற விட்டிருக்கக் கூடாது.ஏனென்றால் அந்த மிருகக்காட்சி சாலைக்கு அடிக்கடி பள்ளி மாணவக் கும்பல் வருவதுண்டு.

அந்த மிருகக் காட்சி சாலை ஓர் ஒதுக்குப்புறமான நகரத்தல் இருந்தது. பல முக்கியமான விலங்குகள் அங்கே இல்லை. இல்லாத விலங்குகளில் ஒன்று யானை. ஓங்கி வளர்ந்த யானைக்கு மூவாயிரம் முயல்கள் கூடச் சமமாகாது. நமது நாடு முன்னேறத் தொடங்கியதும், செம்மையாகத் திட்டமிட்ட வழியில் குறைகளெல்லாம் நிறைகளாக்கப் பெற்றன. சூலை மாதம் 22 ஆம் நாள் விடுதலை விழாவின் போது, அதற்கு ஒரு யானை இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிருகக்காட்சி சாலைக்கு வந்தது. தங்கள் அலுவலில் ஈடுபாடுடைய எல்லா அலுவலரும் இச்செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர். தனது சாலைக்கு யானை வேண்டாம் என்றும், இன்னம் சிக்கனமான வழியில் யானையைப் பெறமுடியும் என்றும், அதற்குரிய திட்டம் ஒன்றையும் குறிப்பிட்டு வார்சாவுக்கு இயக்குநர் கடிதம் போட்டார் என்னும் செய்தி அவர்களுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.

அவர் இப்படி எழுதியிருந்தார். - இந்த யானையின் காரணமாக எவ்வளவு பெரிய சுமை சுரங்கத்திலும், வார்ப்படச் சாலையிலும் வேலை செய்கின்ற போலிஷ் மக்களின் தோள் மீது விழுகின்றது என்பதை நானும் இங்குள்ள எல்லா அலுவலரும் முழுமையாக அறிவோம். செலவைக் குறைக்கின்ற விருப்பத்தினால் நான் கூறுவது என்ன வென்றால் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட யானைக்குப் பதிலாக, நாங்களே ஒன்றை முயன்று பெறுவோம். சரியான உருவ அமைப்பில் ஒரு யானையை ரப்பரைக் கொண்டு நாங்களே செய்ய முடியும். அதில் காற்றை அடைத்த பிறகு கம்பி வேலிக்குப் பின்னால் அதை நிறுத்தி விடலாம். அதற்குரிய சரியான வண்ணத்தை கவனத்துடன் அடித்து விட்டால் மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தால் கூட உண்மையான யானைக்கும் இதற்கும் வேறுபாடு தெரியாது. யானை சோம்பலான விலங்கு என்பதும் அது குதித்தோடித் திரிவதில்லை என்பதும் நன்றாகத் தெரிந்ததே. கம்பிவேலியின் மீதுள்ள அறிவிப்பில் இந்த யானை மிக அதிகமான சோம்பலை உடையது என்று குறிப்பிட்டு விடலாம். இவ்வாறு மீதியாகும் பணத்தை ஜெட் விமானம் வாங்கவோ, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாதா கோவிலைப் பாதுகாக்கவோ பயன்படுத்த முடியும்.

இந்த நாட்டின் பொதுப்பணிக்கும் உழைப்பிற்கும் எனது எளிய பங்கு இந்தக் கருத்தும் இதன் செயலாக்கலும் என்பதை அருள் கூர்ந்து கவனிக்கவும்.

தங்கள், முதலியன..

தனது கடமைகளை அதிகார தோரணையில் நிறைவேற்றுகின்ற ஈரமற்ற அதிகாரி ஒருவரிடம் இக்கடிதம் சேர்ந்திருக்க வேண்டும். அவர் பிரச்சனையிலுள்ள சிக்கலைப பாராமல் செலவுக் குறைப்பைப் பற்றிய ஆணையைப் பின்பற்றி இயக்குநரின் திட்டத்திற்கு இசைவு தந்தார். அமைச்சின் இசைவை அறிந்ததும், ரப்பர் யானையைச் செய்வதற்குரிய செய்முறைக் கட்டளை பிறப்பித்தார் இயக்குநர்.

ரப்பர் யானை உருவாயிற்று. அதற்கு ஆளுக்கு ஒரு புறமாக காற்றடிக்க வேண்டிய பொறுப்பு இரண்டு காவலர்களைச் சேர்ந்தது. இதை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் இந்த வேலையை இரவில் முடிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் மிருகக்காட்சி சாலைக்கு யானை வருவதைக் கேள்விப்பட்ட மக்கள் அதைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்தனர். இது விரைவாக முடிய வேண்டும் என்றார் இயக்குநர். ஏனென்றால் தனது கருத்து வெற்றி பெற்றால் தனக்கு போனஸ் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.

பணிமனையாகப் பயன்படுகின்ற ஒரு கொட்டகையில் கதவைத் தாழிட்டுக் கொண்டு யானைக்குக் காற்றடிக்க ஆரம்பித்தார்கள் அந்தக் காவலர்கள். இரண்டு மணி நேரம் கடுமையாகக் காற்றடித்த பின்னும் ரப்பர் தோல் தரைக்கு மேல் சில அங்குலமே உயர்ந்திருப்பதைக் கண்டார்கள். எந்த வழியிலும் இந்தப் புடைப்பு யானை போலத் தோன்றவில்லை. இரவு கழிந்து கொண்டே இருந்தது. வெளியே மனித ஓசைகள் ஓய்ந்தன. கழுதையின் கத்தல் மட்டுமே மெளனத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது. மிகவும் களைத்த காவலர்கள் காற்றடைப்பதை நிறுத்தினார்கள். யானைக்குள் இருக்கும் காற்று வெளியேறாமல் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் இளைஞர்கள் அல்ல. அதோடு இப்படிப் பட்ட வேலையில் அவர்களுக்குப் பழக்கமும் கிடையாது.

இதே மாதிரி வேலை செய்தால் விடிவதற்கு முன்னால் முடிக்க முடியாது. என் மனைவிக்கு நான் என்ன சொல்வது? இரவு முழுவதும யானைக்கு காற்று அடித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னால் அவள் நம்பவே மாட்டாள் - என்றான் ஒரு காவலன்.

ரொம்ப சரிதான். யானைக்குக் காற்றடிப்பது அன்றாட வேலையல்ல. நம் டைரக்டர் இடதுசாரி, அதுதான் காரணம் - என்றான் இரண்டாம் காவலன்.

திரும்பவும் காற்றடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அரைமணி நேரத்திற்குப் பிறகு தொடர்ந்து வேலை செய்ய முடியாத அளவு அசதியாக இருப்பதை உணர்ந்தார்கள். தரையின் மேல் கிடந்த யானையின் புடைப்பு சற்றுப் பருத்து இருந்தது. ஆனால் இன்னும் யானையின் உருவம் போல் தோன்றவில்லை.

அடிக்க அடிக்க கஷ்டம் அதிகமாகிறது - என்றான் முதல் காவலன்.

மலை ஏறுகிற மாதிரிதான் - என்று ஒத்துக் கொண்ட இரண்டாம் காவலன் - கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம் என்றான்.

அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது, அவர்களில் ஒருவன் வால்வில் முடியும் ஒரு வாயுக்குழாயைப் பார்த்தான். இந்த வாயுவால் அந்த யானையை அவர்கள் நிரப்ப முடியாதா? தனது தோழனுக்கு இதைச் சொன்னான்.

இதை முயன்று பார்க்க அவர்கள் முடிவு செய்தார்கள். வாயுக் குழாயுடன் யானையை இணைத்து விட்டு வால்வைத் திறந்தனர். சில நிமிடங்களுக்குள் முழு உருவ யானை அக் கொட்டகைக்குள் நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அது உண்மையான யானை போலவே இருந்தது. மிகப் பெரிய உடல். தூண்கள் போன்ற கால்கள். பரந்த காதுகள். பிறகு தவிர்க்க முடியாத துதிக்கை. ஆர்வத்தால் உந்தப் பெற்ற இயக்குநர் தனது மிருகக் காட்சி சாலைக்கு மிகப் பெரிய யானை ஒன்று கிடைப்பதை நிச்சயமாக்கிவிட்டார்.

அருமை மிக அருமை - என்று வாயுவைப் பயன் படுத்தும் கருத்தை எண்ணியவன் சொல்லி விட்டு, இப்போது நாம் வீட்டுக்குப் போகலாம் - என்றான்.

மறுநாள் காலை, மிருகக் காட்சிச் சாலையின் நடுவிலுள்ள, வேலியிட்டு வளைந்த ஒரு தனி இடத்தில் குரங்குக் கூண்டுக்கு அருகில் யானை நகர்த்தப் பட்டது. ஓர் உண்மையான பெரிய பாறைக்கு முன்னால் இருந்ததால் அது பயங்கரமாகவும், பிரம்மாதமாகவும் தோற்றமளித்தது. ஒரு பெரிய பலகையில் பின்வரும் அறிவிப்பு இருந்தது. - இந்த யானை மிகவும் சோம்பலானது, அசைவதே இல்லை.

அன்று காலையில் வந்த முதற் பார்வையாளர்களில் அந்த ஊர்ப்பள்ளியின் சிறுவர் கும்பல் இருந்தது. அவர்களை அழைத்து வந்த ஆசிரியர் யானையைப் பற்றிய செய்திகளை நேரடிப் பாடமாக கற்பிக்கத் திட்டமிட்டிருந்தாா. அவர் அந்தக் கும்பலை விலங்கிற்கு முன்னால் நிறுத்தி விட்டு பின் வருமாறு சொல்லத் தொடங்கினார். - யானை ஒரு தாவர உணவு உண்ணும் பாலூட்டி. தனது துதிக்கையின் உதவியால் இளம் மரங்களைப் பிடுங்கி எறிந்து அவற்றின் இலைகளைத் தின்னும்.

வியப்பும் களிப்பும் கலந்த ஆர்வத்துடன் சிறுவர்கள் யானையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது ஓர் இளம் மரத்தைப் பிடுங்கி எறிவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த விலங்கோ கம்பிக்குப் பின்னால் அசைவற்று நின்றது.

ஆசிரியர் தொடர்ந்தர்... மரபற்றுப் போன ராட்சத விலங்கின் நேரடி வாரிசு இந்த யானை. அதனால் இன்றைய உயிர்வாழ் நில விலங்கில் இதுதான் மிகப் பெரியது என்பது வியப்புக்குரியதல்ல...

சற்று மிகையாக மனச் சான்றுக்குக் கட்டுப்பட்ட மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

.... திமிங்கிலம் மட்டுமே யானையை விடப் பெரியது. ஆனால் திமிங்கிலம் கடலில் வாழ்கிறது. நிலத்தில் யானைதான் அரசோச்சுகிறது என்று நாம் கவலையின்றிச் சொல்லலாம்.

மிருகக்காட்சிச் சாலையில் இருந்த மரங்களின் கிளைகளில் இலேசான தென்றல் அசைந்தது.

...முழுவதும் வளர்ந்த யானையின் கனம் ஒன்பதாயிரம் பவுண்டுகள் முதல் பதிமூன்றாயிரம் பவுண்டுகள் வரை இருக்கும்..

இந்த நேரத்தில் யானை நடுங்கி மேலே எழுந்தது. சில வினாடிகள் தரைக்கு மேலே ஆடியது. ஆனால் பலத்த காற்று வீசி அதனுடைய முழு வடிவம் வானப்புகைப் புலத்தில் தெளிவாகத் தெரியும் படியான அளவு அதை மேலே உயர்த்தியது. தரையில் இருந்த மக்கள் யானையின் காலடிக்குரிய நான்கு வட்டங்களையும், அதன் புடைத்த வயிற்றையும் துதிக்கையையும் சற்று நேரம் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் மிக விரைவில் காற்றால் உந்தப்பட்ட யானை வேலிக்கு மேல் பறந்த பிறகு மர உச்சிகளுக்கு மேல் மறைந்து விட்டது. கூண்டிலிருந்த குரங்குகள் வியப்படைந்து வானத்தை வெறித்தபடி இருந்தன.

அடுத்துள்ள பூங்காவில் யானை கிடந்ததைக் கண்டார்கள். அது ஒரு சப்பாத்திக் கள்ளியின் மேல் விழுந்திருந்தது. அதனுடைய ரப்பர் தோல் பொத்தலாகி இருந்தது.

மிருகக் காட்சி சாலையில் இக்காட்சியைக் கண்ட பள்ளிச் சிறுவர்கள் விரைவில் தங்கள் படிப்பைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டுப் போக்கிரிகளாக மாறினார்கள். அவர்கள் குடிக்கிறார்கள் என்றும் சன்னலை உடைக்கிறார்கள் என்றும் கேள்வி. மேலும் அவர்களுக்கு இப்போதெல்லாம் யானையிடத்தில் நம்பிக்கை இல்லை.

நன்றி நடை 2 - சனவரி 1969


( போலத்தில் 1930 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஸ்லவொமிர் மிரோஜெக். ஓவிய, கட்டிடக் கலைகளைப் பயின்றவர். பத்திரிகைத் துறையில் ஈடுபட்ட பிறகு மிகச் சிறந்த நையாண்டி எழுத்தாளர் என்ற பெயர் பெற்றார். யானை - என்னும் சிறுகதைத் தொகுதிக்குப் போலிஷ் அரசினர் பரிசு கிடைத்தது. அத்தொகுதிக்குப் பெயர் தந்தது இந்தக் கதைதான். இதிலுள்ள கேலி ஆழமானது. மிகவும் கூரியது)



கார்முகிலின் நறுக்குகள்

(o)
தலைகீழாய்த் தொங்கின போதும்
வாழ்க்கையை வெறுக்குமோ
வெளவால் ?

(o)
முள் வேலியின் மீது
செழிப்பாய்க் கிடக்கின்றன
முசுட்டைக் கொடிகள்.

(o)
அரைத்து ஊற்றினாலும்
முளைத்து விடுகின்றன
அமுங்குச் செடிகள்.

(o)
கொம்பிருந்தும்
பணிந்திருக்கும் காளைகள்...
காரணம்
போதிக்கின்றன.

(o)
கசிறுகளாய்
வெளியேறுகிறது
கரைக்குள் அடக்கப்பட்ட
காட்டு வெள்ளம்.

(o)
பூத்தமாதிரியே
காய்ந்திருக்கிறது
வாடாமல்லி.

(o)
கமகமக்கும்
தாழைகளுக்கடியில்
குடிகொண்டிருக்கின்றன
நாகங்கள்.

(o)
அடங்குவது மட்டுமா
அடக்குவதும் அடிமைதான் -
ஜல்லிக்கட்டு.

(o)
வேலிக்குள்
சிக்கியுருப்பினும்
சிரிக்கிறது
எருக்கம்பஞ்சு.

(o)
வெள்ளம்
அறுக்க.. அறுக்க..
ஆழமாய்... அகலமாய்...
ஓடை..!

(o)
நாகம் என்றாலும்
கொத்தாதாம்
கும்பிடுபோட்டால்.

நன்றி : மண், மொழி இதழ் எண் 1, கும்பம் 2006




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061