இலக்கிய இணைய இதழ்
15 மார்ச்சு 2006 - இதழ் எண் : 46

அன்புடையீர். வணக்கம்,

நண்பர் இரா.இரவி இரண்டு வெளிநாட்டு இதழ்களை அனுப்பி இருந்தார். இலண்டன் சுடரொளி இதழில் காசிஆனந்தன் அவர்களது உரைச் சுருக்கம் இருந்தது. நமது நிலையை மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகிற இந்தக் கட்டுரை உயர்தரத்தது. இதனையும் செவ்வியன் அவர்களது சிதறல்கள் தொகுப்பிலிருந்து சில உரைவீச்சுகளையும் இந்த இதழில் இணைத்துள்ளேன். படித்து மகிழவும். மடல் எழுதவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 03 - 2006




தமிழைக் காக்க

கட்டுரை

- உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் -


(சென்னையில் 5-11-05 அன்று நடைபெற்ற 2 ஆவது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழாவில் "புதுயுகத் தமிழர்" நூலை வெளியிட்டு ஆற்றிய உரையின் சுருக்கம்)

2 ஆவது உலகத் தமிழ்க கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுகின்ற இவ்விழா ஒரு சிறப்பான விழா.

இனறு தமிழுக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்நாட்டுக்குப் பாவலன் தேவைப்படுகிறான். அழிவின் விளிம்பில் தமிழினம் இருக்கிற காலத்தில் வீழும் தமிழினமாகக் கிடக்கிற காலத்தில் தனக்கென்று ஓர் அரசு அற்றுத் தமிழ்நாடு இருக்கிற காலத்தில் தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் பாவலன் தேவைப்படுகிறான்.

இந்த விழா உலகெங்கும் பரவிக் கிடக்கின்ற தமிழ்ப் பாவலர்களை அந்தப் பணிக்கு அழைத்து இருக்கிறது. ஒரு பயிற்சிக்கூடம் போல என்று கூடச் சொல்லலாம். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட பாவலர்கள் பலரிடையே தமிழ் மண்ணில் இன்று சிறப்புற்று விளங்குகிற பல பாவலர்களைத் தான் பார்க்கிறேன். குறிப்பாகக் கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசனுடைய நீண்ட நெடிய குடும்பத்தில் அவரைத் தொடர்ந்து வாணிதாசன், முடியரசன், சுரதா என்று வருகிற அந்த வரிசையில் வேழவேந்தனார் தனித்து நிற்கிறார் என்றே நான் சொல்லுவேன். அவருக்கென்று ஒரு தனிநடை உண்டு. எண்சீர் விருத்தம் அவருக்குக் கைவந்த கலை. எண்ணங்களைத் தொடராகத் தொடுக்கின்ற திறனும் கொண்டு சிறப்பான நடையில் பாக்களைப் புனைகிறார். அவருக்கே வந்த கலையாக நான் பார்க்கிறேன்.

பா இலக்கியத்தைப் பொறுத்த அளவில் சிறப்பாற்றல் உள்ளவர்களாகப் பலரைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இளையவர்களும் புதியவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழத்திலும் அத்தகைய ஒரு நெடிய தொடரைப் பார்க்க முடிகிறது. இறப்புக்கு நடுவே தமிழைக் கொட்டுகிற பாவலர்களெனக் களத்தில் பாடுகிற வளர்ச்சியை அந்த மண்ணிலும் பார்க்கிறோம்.

தமிழனுக்கு மிகப்பெரிய உள்ளம். அதனால் தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் - என்று எழுதினான். அது நல்ல உயரிய, சரியான சிந்தனைதான். பெரிய பண்பாட்டின் முதிர்ந்த நிலை அது என்பதை ஒப்புக் கொள்கிறேன். எந்த நாடாக இருந்தாலும் அது எங்கள் நாடு. அங்குள்ளவர்கள் எங்கள் உறவு - என்று எண்ணுகிற அந்த எண்ணம் அம்மக்கள் நொந்தாலும், வேதனையில் துடித்தாலும் நாங்கள் அவர்களுக்குத் துணை நிற்போம் எனக் கருதுகிற சிந்தனை, அதன் விளைவாக உலகில் எங்கெல்லாம் அடிமைகளாகத் துடித்தார்களோ, அங்கெல்லாம் தம் பாவலர்கள் பார்த்தார்கள். பாக்களைப் பதிவு செய்தார்கள்.

ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி, இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்தான் - என்று பாடிய 1917 இல் ஜார் மன்னனின் வீழ்ச்சியைப் பாவலர் பாரதி குறிப்பிடுகிறார். 1944 இல் ஹிட்லரின் படைகள் பாரிசு நகரை நடுக்கிக் கொண்டிருக்கையில் - கண்ணில்லான் ஹிட்டர், பாரிசே உன்னை மிதித்தான் - என்று பாவேந்தர் பாரதிதாசன் எழுச்சியோடு எழுதினாரே! அங்கேரி நாட்டின் விடுதலைக்காகப் போராடிய நாகி என்கிற தலைவன் உருசியப் படைகளால் சாகடிக்கப்பட்டபோது, அவருக்காகக் கண்ணீர் சிந்தி, அம்மக்களின் விடுதலைப் போரை ஆதரித்துக் கவிஞர் கண்ணதாசன் பாடினாரே! அண்மையில் 4-5 ஆண்டுகளுக்கு முன் குர்தீஸ் மக்களின் போராட்டம் ஈரான் எல்லையில் வெடித்தபோது, மக்கள் தலைவன் ஒகிலானைத் துருக்கிய அரசு கைது செய்து மரணதண்டனை விதித்தபோது, நான் கூடி துடிதுடித்துப் போய் ஒரு பாடல் எழுதினேன். அப்பாடல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியாகியது. வியட்நாமின் வீர விடுதலைப் போரைத் தமிழகப் பாவலர்கள் பலரும் பாடினார்கள். பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மேடைகளில் ஆதரவுக் குரல் கொடுத்தார்கள்.

இவற்றையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழர்களுக்கு இத்தகைய பெரிய உள்ளம் இருக்கிறது. ஆனால், அதே வேளையில், பக்கத்தில் சிங்களவர்களின் கொடுமைகளுக்குத் தமிழினம் பலியாகிக் கொண்டிருக்கிறதே, உலகின் எந்த நாட்டுப் பாவலனாவது இதுகுறித்துப் பா எழுதினானா? எவருமே எழுதியதில்லையே. நம்மை நாமாவது கவனிக்க வேண்டுமல்லவா? அதனால்தான், தமிழுக்கு, தமிழினத்துக்கு, தமிழ் மண்ணுக்குப் பாவலன் தேவைப்படுகிறான் என்று நான் சொல்லுகிறேன்.

இன்று வெளியிடப்பெற்ற புதுயுகத் தமிழர் நூலில் உள்ள அத்தனை பாக்களும் தமிழையும் தமிழினத்தையுமே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அந்த உணர்வு நமக்குத் தேவை. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் வடமொழியின் நுழைவால் தனித் தன்மையைத் தமிழ் இழந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வடமொழி கலந்த நடைதானே வந்துள்ளது. சற்றொப்ப 1700 ஆண்டுகளாக வடமொழிக் கலப்பை நம்மவர்கள் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். ஆனால், வடமொழிக் கலப்பைவிட 10 மடங்குக் கொடுமையான ஆங்கிலக் கலப்பு நிகழ்ந்துள்ளதைக் கண்டு கொள்ளாமல் வாளாவிருக்கிறோம். சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் அலுவலக மொழியாக இருந்ததில்லையே! அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, விளம்பர மொழியாகவோ அது இருந்ததில்லையே! கோவில்களில் மட்டுமே கோலோச்சுகிற மொழியாகத்தானே இருந்தது. ஆனால், நான் குறிப்பிட்ட இத்தனைப் படி நிலைகளில் அரசோச்சியும், பயிற்று மொழியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற ஆங்கலத்தை எதிர்த்துத் தமிழ்ப் புலவர்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். உலகில் உள்ள எல்லாத் தமிழர்களுக்கும் இப்பொறுப்பு உண்டு. ஏனென்றால், மிகப்பெரிய பாய்ச்சலோடு ஆங்கிலம் தமிழின் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது.

ஆனால் அத்தகைய அடையாளங்கள் எதுவுமே தெரியவில்லையே என்று பேசக்கூடிய சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடையாளங்கள் அவ்வப்போது தெரியாமல், இறுதியில் தெரிகின்ற நிலைகளும் உண்டே! எடுத்துக்காட்டாக, குரங்கிலிருந்து மனிதன் வளர்ந்தான் என்பதில், குரங்கு நிலையும் மனித நிலையும் தெரிந்தனவே தவிர இடைப்பட்ட நிலையில் அடையாளங்கள் எதுவும் தெரியவில்லையே! 800 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழனாக இருந்தவன் இன்று மலையாளியாக மாறிப் போனானே! இடையிலே மாற்றத்துக்கான அடையாளம் எதுவும் தெரிந்ததா? தமிழன் தெலுங்கனாகவும், கன்னடனாகவும் மாறிப்போனானே ! அடையாளம் எதுவும் இடையில் தெரிந்ததா? அதைப்போலத்தான், நாம் விழிப்பாக இல்லாவிட்டால் தமிங்கிலனாகவும் தமிழன் மாறுவானே? தமிழ் அழிவதைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே !

பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சு மொழிக் கலப்பு செய்வதைச் சட்டமாக இயற்றி எப்படித் தடை செய்திருக்கிறார்களோ அப்படித் தமிழ்நாட்டிலும் சட்டமியற்றி மொழிக் கலப்பைத் தடை செய்ய வேண்டும். அப்போதுதான் ஊடகங்களில் நல்ல தமிழைக் கலப்படமற்ற தமிழைப் பார்க்கமுடியும்.

இந்தப் புதுயுகத் தமிழர் நூலில் இடம் பெற்றுள்ள இரண்டாம் பரிசு பெற்றுள்ள பாவலர் பன்னீர் செல்வம் எழுதியுள்ள பாடலை நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும்.

செம்மொழி கண்ட பூமியின் தெருக்களில்
தமிழில் பேசாத் தமிழர்கள் உண்டு !
அன்னியமான தாய்மொழி அகதிகள்
இல்லம் தோறும் இன்றும் உண்டு !

என்று அவர் தம் கவிதையில் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ்தான் இல்லை. ஆனால் ஈழத் தெருக்களை நினைத்துப் பார்க்கிறேன். ஈழக் கடைத் தெருக்களில் பெயர்ப் பலைகைகள் ஒன்றில்கூட ஆங்கிலத்தைக் காண இயலாது. இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.அந்த ஈழமண் விரைவில் மிகமிக விரைவில் விடுதலை பெறும்.

தமிழ்நாட்டில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஈழ மண்ணில் எங்களுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரிந்த எதிரி இருக்கிறான். போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு உங்களுக்குப் புலப்படாத எதிரிகள் இருக்கிறார்கள். ஊமைகளாக அழிந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆங்கிலேயன் வந்து ஆங்கிலம் பேசித்தான் ஆகவேண்டும் என்று உங்கள் மீது திணித்தானா? உங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் படித்தாக வேண்டும் என்று சொன்னானா? ஈழத்திலே இருந்து எதிரிகளாகப் பல நாடுகளுக்கும் சென்ற தமிழர்கள், தாங்கள் குடியேறிய நாடுகளில் பள்ளிகளைத் தொடங்கி தமிழைச் சொல்லித் தருகிறார்கள். ஆங்கில நாடான இங்கிலாந்தில் தமிழ் சொல்லித் தருகிறார்களே. ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலம் தானே சொல்லித் தரப்படுகிறது. இது நமக்கு வெட்கமாக இல்லையா? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தமிழர்களுக்கு உரிமையுள்ள மண் என்றால் அது தமிழகமும் தமிழீழமும் தானே. அந்த உரிமையில் தான் கேட்கிறேன். இந்த மண்ணில் தமிழினம் மாறலாமா?

அண்மையில் ஒரு பொது நிகழ்வுக்குப் போயிருந்தேன். அதில் அகவை 9-10 உள்ள சிறுவனின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அவன் சிறந்த பலகுரல் வல்லமை உடையவனாக இருந்தான். இப்பொழுது நீங்கள் crow கேட்கப் போகிறீர்கள் என்று தொடங்கினான். அப்படியே காகம் கத்துவது போலக் கத்தினான். பிறகு நீங்கள் dog கேட்கப் போகிறீர்கள் என்றான். அப்படியே நாய் போலக் கத்தினான். பிறது pussy cat கேட்கப் போகிறீர்கள் என்றான். அப்படியே பூனைபோலக் கத்தினான். பிறகு donkey கேட்கப் போகிறீர்கள் என்றான். அப்படியே கழுதை போலக் கத்தினான். கண்களை மூடிக் கொண்டு நாம் கேட்டால், உண்மையான காகம், நாய், பூனை, கழுதை ஆகியவற்றின் குரல்களைக் கேட்பது போல் அவ்வளவு சரியாக இருந்தது. நிகழ்வின் இறுதியில், அச்சிறுவனின் பெற்றோரிடத்தில் இவ்வளவு ஆற்றலுள்ள குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள். 10 அகவையில் மிகப் பெரிய ஆற்றல் அவனுக்கு இருக்கிறது. உங்கள் குழந்தைக்குக் காகத்தின் மொழி தெரிகிறது. பூனையின் மொழியும், நாயின் ெம்ாழியும், கழுதையின் மொழியும்கூட நன்றாகத் தெரிகின்றன. ஆனால் உங்கள் குழந்தைக்குத் தாய்மொழி தெரியவில்லையே ஏன் என்று கேட்டேன்.

தமிழ் நாட்டில் இந்த நிலையைப் பார்க்கும் பொழுது துன்பமாக இல்லையா? தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா ? எனவே தான் சொல்லுகிறேன். தமிழ்நாட்டுப் புலவர்களுக்கு இன்னும் கூடுதலாக வேலை இருக்கிறது என்று.

என்ன பேசினாலும் ஆங்கிலம் கலந்தே பேசப் பழகிப் போயிருக்கிறார்கள் இங்கே. இது மிகக் கொடுமையானது அல்லவா? சன்டே ஈவனிங் காலேஜ் மீட்டிங்ல டிஸ்கசனை வச்சிகலாம் சார் - என்று பேசுகிறான். இதில் வசசிக்கலாம் என்கிற ஒரு சொல் தானே தமிழ். மற்ற ஆறு சொற்களும் ஆங்கிலம் தானே. ஊடகங்களில். நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் ஒழுங்கான தமிழைப் பார்க்க முடிகிறதா? தமிழ்ப் புலவர்களும், தமிழ்க் காவலர்களும் மிக விழிப்பாகப் பொறுப்போடு பணியாற்ற வேண்டாமா?

பூக்களைப் பற்றியும், நிலவைப் பற்றியும் இலக்கியம் எழுதுகிற காலம் இதுவல்ல. உலகெங்கும் ஒடுக்கப் பட்டுக் கிடக்கிற மொழி அடிப்படையில், நிற அடிப்படையிலி, ஆதிக்க உணர்வு அடிப்படையில், ஒடுக்கப்பட்டுத் துன்பத்துக்கு ஆளாகியுள்ள மக்கள் பற்றி இலக்கியம் படைக்க வேண்டிய காலம் இது. அதுவல்லவோ இலக்கிய நோக்காக இருக்க வேண்டும். அதே வேளையில் நம் தாய்மொழி அழியாமல் காக்கின்ற பெரிய பொறுப்பும் இருக்கிறது. ரசூல் அம்சதோவ் என்கிற தஜிகிஸ்தான் புலவன் நாளை என்னுடைய "அவார்" மொழி இறக்குமானால் நான் இன்றே இறந்து விட விரும்புகிறேன் - என்று சொன்னானே அந்த உணர்வு நமக்கும் வரவேண்டாமா?

இந்தப் பாவலர்களையெல்லாம் ஒருங்கிணைத்திருக்கிற சிறப்பான இவ்விழா தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகமிகப் பொருத்தமானது. இப்புலவர்களின் ஒருங்கிணைப்பு தமிழர்களை நிமிர்த்தட்டும்.

நம் தமிழ்நாட்டு மண்ணில் நிறைய இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் முளைத்து வருகிறார்கள். புதுக் கவிதை என்று சொல்லுப்படுகிற புதுப்பா எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இவற்றைப் புதுக்கவிதை என்று ஏற்க மாட்டேன். உரைவீச்சு என்றோ, நறுக்கு என்றோ சொல்லலாம். ஆனால் அது சிறந்த இலக்கியம் தான். இது குறித்த ஆய்வு நூலைக்கூட விரைவில் கொண்டுவர இருக்கிறேன்.

வால்ட் விட்மன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கினார். பாவை அவர் விடுதலை செய்ததாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் பெரிய புலவனாகக் கருதப்படுகிற அந்த விட்மனின் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். உலக இலக்கியத்தையும் அவர் எழுதியிருக்கிறார். உரை இக்கியத்தைக் கட்டுடைத்த பா என்றார்கள். அப்படி என்ன கட்டு உடைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது எழுதப்பட்ட போது விடுதலைப் பா என்று சொல்லப்பட்டது. அது உரை இலக்கியமாகவே அமைந்தது. இலக்கணத்தை உடைத்துக் கொண்டு இந்தப் பா பிறந்தது என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்த அளவில் இலக்கணத்தை உடைத்த இலக்கியம் என்று உலகில் எதுவும் இல்லை. ஏதாவது நாலு வரியை எழுதிவிட்டு அதைப் புதுக்கவிதை என்கிறாய். அது புதுக்கவிதை இல்லை என்கிறேன் நான். இந்தப் புதுக்கவிதை என்பதற்ஙகு நீ காரணங்களைச் சொல்லியாக வேண்டுமல்லவா? நீ சொல்லுகிற காரணங்களே நீ சொல்லுகிற புதுக்கவிதைக்கு இலக்கணம் ஆகிறது. ஆகவே இலக்கணம் இல்லாமல் எந்த இலக்கியமும் உலகில் இல்லை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்த விட்மன், புதுப்பா தொடங்கி விடுதலை செய்தார் என்கிறார்களே. விடுதலையைப் பற்றிப் பேச விட்மனுக்குத் தகுதியில்லை. அமெரிக்க மண்ணில் செவ்விந்தியர்களை அழித்துச் சாம்பலாக்கிய கொடுமையான வெள்ளையர்கள் இன்று அங்கு அமெரிக்கர்கள் என்று சொல்லப்படுபவர்கள். அப்படி அந்த அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களை அழித்தது கொடுமை என்று விட்மன் எங்காவது எழுதியிருக்கிறானா? பிரெஞ்சு என்மோ என்பவனை விட்மனின் வளர்ச்சி என்றார்கள். அதே நேரத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளை பிரான்சு அடக்கி ஆண்டு கொண்டு இருக்கிறது. அது கொடுமை - அழிவைத் தரும் - என்று பாவலன் எழுதியிருந்தால் அது விடுதலைப்பா. நான் எப்பொழுதும் அமைதியின் பக்கம். நொந்தவர்கள் பக்கம். மிதிக்கப்படுபவர்கள் பக்கம். பாவலர்களின் பாக்கள் இத்தகைய நசுக்கப்படுபவர்களின் பக்கமே இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அதுதான் பாவாகவும் இருக்கும். இலக்கியமாகவும் நிலைக்கும்.

இத்தகைய புதுப்பா இலக்கியம் படைப்பதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். இதனைச் சிந்தல் இலக்கியம் என்றும், நறுக்கு இலக்கியம் என்றும் (நறுக்குத் தெறித்தார் போல் கருத்துகளைக் கொண்டிருப்பதால்) சொல்லலாம். தமிழகத்தில் மிகச் சிறப்பாகவும் ஆற்றலோடும் சிந்திக்கிறார்கள். இலஞ்சம் குறித்து நறுக்காளர் ஒருவர் எழுதுகிறார்.

வாங்கினேன் கைது செய்தார்கள்
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்.

உலகின் எந்த இலக்கியத்திலும் இதுவரை இத்தகைய அருமையான பொருட்செறிவான கருத்து வெளி வந்ததில்லையே.

இன்னொரு புலவர், நம் நாட்டுத் தொடர் வண்டிப் பயண இடர்பாடுகளை நன்கு அறிந்தவர். அவர் பாடுகிறார். சாவதற்கு ஏன் தண்டவாளத்தில் தலை வைக்கிறாய்? தொடர் வண்டியில் பயணம் செய் - என்று பாடுகிறார்.

உள்ளத்தைத் தொடுவது போல மிக உருக்கமாக ஒருவர் மெரினா தலைப்பில் எழுதுகிறார். வாங்கும் வயது, பலூன் விற்கும் பையன்.

தமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்கள் நன்கு சிந்திக்கிறார்கள். தமிழின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும், தமிழினத்தை நிமிர்த்தவும் இவர்களால் முடியாதா? கண்டிப்பாக முடியும். 1500 ஆண்டுகள் போராடி மணிப்பிரவாளக் கலப்பைத் தடுத்துப் போராடியவர்கள் மன்னர்கள் அல்லர். புலவர் பெருமக்களே. அழிந்து வரும் தமிழைக் காக்க 100 தமிழ்ப் புலவர்கள் தாமே உண்ணாநோன்பு மேற்கொண்டார்கள் இங்கே. எனவே தமிழைக் காக்க வேண்டும் என்கிற கூடுதலான துடிப்பு தமிழ்ப் புலவர்களுக்குத்தாம் உண்டு. ஆகவே தமிழ்ப் பாவலர்களே, எழுத்தாளர்களே, சிந்தனையாளர்களே, இளைஞர்களே - தமிழ்மொழி அழிவின் விளிம்பில் இருக்கிறது. தமிழ் தமிங்கிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்றுவதற்கு உங்கள் பணிகள் பயன்படட்டும்.

நன்றி இலண்டன் சுடரொளி இதழ் தை மாசி 2006




செவ்வியன் சிதறல்கள்

(o)
தமிழில் எழுதி பேசி தமிழரிடமே காசாக்கிக்கொள்
தமிழையும் தமிழரையும் பழித்து !
அவர்கள் அறம்.

(o)
நின்ற நிலையில் வளர்ந்து ஈன்றது வாழை
படர்ந்தோடி அலைந்துலைந்து கொடியீன்றது - கும்மட்டி
விளைவே சிறப்பு.

(o)
குடலைப் பிடுங்கும் நாற்றம்
நான் அவர் ஏன் எல்லாரும்தான்
சுடுகாட்டில் எரிக்கையில்.

(o)
பேரன் பேத்தியர்க்குப் பணக்கார ஆங்கிலப் பள்ளிகள்
தமிழை பண்பைச் சிதைக்கும் இதழ் தொலைக்காட்சி
தமிழர் தலை தாழ்வு.

(o)
கன்னங்கரேல் என்று தலைமுடி
வேரில் தெரிகிறதே
வெளுப்பு.

(o)
பேராசிரியர் முனைவன்மார் போற்றிப் புகழ்ந்தும்
பொத்துப் பட்டது
தமிழ்க்கொலை எழுத்து.

(o)
வேலைக்கு வரும்போது காலந் தாழ்த்தல்
முடியும் நேரத்தில் முதலில் போக முனைப்பு
கரவுமனம்.

(o)
சாண்அளவு நீள மண்புழு
நான்கைந்து எறும்புகள் வீழ்த்தி இழுத்துச் சென்றன
உருவு கண்டு அஞ்சா உயிரிகள்.

(o)
காசிக்குப் போனார்
தொலைந்தது கைப்பொருள்
பாவம் ? !

நன்றி : சிதறல்கள் - நூல்




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061