இலக்கிய இணைய இதழ்
1 மார்ச்சு 2006 - இதழ் எண் : 45

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் "விருந்துண்டு மொய் பெய்தல்" என்ற சிறுகதையை இணைத்துள்ளேன். சிறுகதை கதையாக இல்லாமல் அது வாழ்க்கையோடு இணைந்து வளர்த்தெடுக்க வேண்டும் என விரும்புகிறேன். இக்கதையினைப் படியெடுத்துப் பள்ளியில் படிக்கும் பெண்களுக்குத் தரவும். அது அவர்களது ஆழ்மனதில் சிறு அசைவை ஏற்படுத்தினால் அதுவே வெற்றிதான்.

மக்களாட்சி அருமையான கட்டுரை. ஆட்சிப்பீடத்தை அலங்கரிப்பவர்கள் உள்வாங்கிச் செயல்பட நிலை உயரும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
1 - 03 - 2006





விருந்துண்டு மொய் பெய்தல்

சிறுகதை

- சி.பன்னீர் செல்வம் -


உன் பங்குக்கு நீ என்ன பண்ணப்போற அமுது?

திரும்பத் திரும்ப அழுத்தமாய் அந்தக் கேள்ளி ஒலிக்க, திடுக்கிட்டு விழித்துக் கொண்ட அமுதா எழுந்து உட்கார்ந்தாள்.

பல மாதங்களுக்கு முன் நேரில் கேட்ட கேள்வியை இப்போது கனவிலும் எழுப்பிய தாத்தா, சுவரில் மாட்டியிருந்த புகைப்படச் சட்டத்துக்குள்ளிலிருந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்.

தாத்தாவின் நினைவிலிருந்து அம்மாவின் குரல் அவளை விடுவித்தது.

மணி நாலு ஆச்சு அமுதா. படிக்கணும்ன்னு சொன்னியே.

அமாம்மா படிக்கணும்

பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்து பாடப்புத்தகத்தை கையிலெடுத்தாள்.

திடீரென, ஊரையே தூக்கி எறிவது போல் அலறிற்று ஒலி பெருக்கி!

திருவிழாதான் நேத்தே முடிஞ்சு போச்சே, இன்னெக்கி என்னம்மா?

மல்லிகாவுக்கு இன்னெக்கி சடங்கு சுத்துறாங்கல்ல அதுதான்.

அதுக்காக இப்பவே மைக்செட்டைப் போட்டு விடனுமா? பக்கத்து வீட்லருந்து ஒலிக்கறாப்பல இருக்கு. எப்படி படிக்கிறது?

ஊர் பூராத் தூங்கக் கூடாதுன்னுதானே அரைமைல் தூரத்துக்கு வயர் இழுத்து அஞ்சாறு எடத்திலே மைக் செட்டை பொருத்தி வச்சிருக்காங்க.

சடங்கு சுத்தறதுக்காக இப்படியெல்லாம் செய்யணுமா?

நீ வேற! வீட்லே அவ கடைசிப் பொண்ணு அவுக குடும்பம் சீர்வரிசை, மொய்ன்னு லட்சக் கணக்கிலே ஊர்பூராவும் செஞ்சிருக்காம். அதையெல்லாம் வசூல் பண்ணணுமாம். அது மட்டுமில்ல, ஊரில வேற யாரும் செய்ய முடியாதபடி விசேசத்தை நடத்தனும்னு இப்பிடி அமர்க்களம் பண்றாக. சரி நீ படி.

அமுதா படிக்க முயன்றாள். முடியவில்லை. சோர்வுடன் திரும்புகையில் தாத்தாவின் புகைப்படம் மறுபடியும் தட்டுப்பட்டது.

நகை, நட்டு சொத்து பத்து எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உன் பாட்டி எனக்கு மனைவியா வந்தா. என் மக, அதுதான் உன்னோட அம்மா - வரதட்சணை, சாதி எல்லாத்தையும் நிராகரிச்சிட்டு உங்கப்பாவை கல்யாணம் பண்ணிகிட்டா. உன் பங்குக்கு நீ என்ன பண்ணப் போற அமுது?

தாத்தா இறப்பதற்குச் சில நாட்களிருக்கையில் அமுதாவிடம் கேட்ட கேள்வி அது.

ஒண்ணுந் தெரியல தாத்தா - என்றாள் அப்போது.,.

இப்போதும் அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல், விடிகிறவரை யோசித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

அமுதா பள்ளிக்கூடம் புறப்படுவதற்குமுன் ஒரு பத்து நிமிடம் ஓய்ந்திருந்தது ஒலி பெருக்கி. அதற்குப் பதிலாக மேளதாளங்கள் முழங்கின. இடையில் ஒலிபெருக்கியில் சில அறிவிப்புகள்.

அம்மாவிடம் சொல்லிக் கொண்டு தெருவில் இறங்கினாள். நடந்தாள்.

தெருவில் ஆங்காங்கே சுவரொட்டிகள். பூப்புனித நீராட்டு விழாவுக்கு வருகை தரும் அமைச்சர் அவர்களே! - என்று வரவேற்று கூறி அழைக்கும் வாசகங்கள். சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் தோரணங்கள். இருமருங்கிலும் திடீர் மின்விளக்குகள். சாலையை ஆக்கிரமித்துக் கொண்ட பிரமாண்டமான பந்தல். சர்புர் என்று ஓடும் வாகனங்கள்..

மல்லிகாவின் வீட்டு வழியே போவதைத் தவிர்த்து விட்டு வேறு வழியில் நடந்தாள்.

என்ன அமுதா.. உன்னோட படிக்கிற மல்லிகாவுக்கு சடங்கு சுத்த ஊரே போய்கிட்டிருக்கு. நீ போகலையா?

இல்ல

ஆமா.. நீ எப்ப உக்காரப்போற ?

பதில் சொல்லாமல் நடையை எட்டிப்போட்டாள் அமுதா

ஆனாலும் ஊரைக் கடந்து பள்ளிக்கூடம் போய்ச் சேருவதற்குள் பல மாதிரியான பேச்சுகள் காதில் வந்து விழுந்தன.

பொட்டப்புள்ள வயசுக்கு வந்ததுக்கே இந்த ஆடம்பரமாக் கெடக்கு. இன்னும் கல்யாணம் காச்சின்னா என்னென்ன கூத்து கட்டுவாங்களோ.

"ஐவேசு உள்ளவுக கோழிக் கொழம்பிலே கால் அலம்புவாக. விடு"

இருக்கிறவுகளுக்கு சரி. இல்லாதவுக என்ன பண்ணுவாக? பொண்ணுகளை பெத்தவுக கதி ?

இருக்கிற ஆடுமாடுகளை, மரம் மட்டைகளை வித்துட்டுப் போக வேண்டியதுதான்.

அதுவும் இல்லாததுக என்ன பண்ணும்? அப்புறம் எருக்கம் பாலுதான். கருவேலங்குச்சிதான்.

பள்ளிக்குள் நுழைந்த அமுதா, தன்னுடன் பத்தாம் வகுப்பில் படிக்கும் தோழி மணிமேகலையைத் தேடினாள். காணவில்லை. ஒருவேளை சடங்கு வீட்டுக்குப் போயிருப்பாளோ என்றெண்ணினாள்.

பள்ளி முடிகிற வரை மணிமேகலை ஏன் வரவில்லை ? என்ற கேள்வி அமுதாவை உறுத்திக் கொண்டே யிருந்தது. பள்ளி விட்டதும் மணிமேகலையின் வீட்டை நோக்கி நடந்தாள்.

மல்லிகாவின் வீட்டிலிருந்து ஒலி பெருக்கியின் குரல் வெகுதூரம் வரை கேட்டுக் கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு இடையே மொய் பற்றிய அறிவிப்புகளே அதிகமாய் ஒலித்தன.

மணிமேகலையின் வீட்டை நெருங்கும்போது அழுகுரல் கேட்டது. அமுதா வேகமாக ஓடினாள். மகளை மடியில் போட்டபடி அழுது கொண்டிருந்தாள் மணிமேகலையின் தாய்.

மணிக்கு என்ன ஆச்சு ? - பதறினாள் அமுதா.

வா. அமுதா. நாங்க இவளை வளக்க என்ன பாடுபட்டிருப்போம். எல்லாத்தையும் ஒரு நிமிசத்திலே பாழ் பண்ணிட்டுப் போக இருந்தாளே பாவி மக! நீயாச்சம் இவளுக்கு நல்ல புத்தி சொல்லு - என்று குமுறினாள் தாய்.

துவண்டு போய்க் கிடந்த மணிமேகலையின் கைகளைப் பற்றிக் கொண்டாள் அமுதா. அவளின் காதுகள் வெறுமையாய்க் கிடந்தன.

இவ தோடு எங்க ? என்றாள் அமுதா.

இவளோட அப்பன்காரக வித்துட்டாக...

ஏன் ?.....

மல்லிகா வீட்டிலிருந்து இவ அக்காகாரிக்கு சீரும் மொய்யும் செஞ்சிருந்தாக. அதை இப்பத் திருப்பிச் செய்ய வசதி இல்ல. அதுதான் இவளோட தோடுகளை வித்துட்டாக. ஒனக்குத்தான் தெரியுமே - அந்தத் தோடு இவ ஆட்டுக் குட்டிக வளத்து, சிறுகச் சிறுகச் சேமிச்சு, அந்தப் பணத்துல வாங்கினது. இவளாள தாங்க முடியல. பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேன்னுட்டா. சடங்கு வீட்டுக்கும் போகாம, வீட்டிலேயே அடஞ்சு கிடந்தா. அடஞ்சு கிடந்தவ திடீர்ன்னு ஓடிப்போய் கெணத்துல குதிச்சிட்டா. நல்ல வேளையா பக்கத்து வீட்டுக்காரக பாத்திட்டாக. இல்லேன்னா இன்னேரம்.. என்று பொங்கிப் பொங்கி அழுதாள் மணிமேகலையின் தாய்.

அமுதா தன் காதுகளிலிருந்த தோடுகளைக் கழற்றி மணிமேகலையின் காதுகளில் அணிவித்தாள். இனிமே இந்தத் தோடு உனக்குத்தாண்டி மணி. எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்குடு. என்றாள்.

என்ன சத்தியம் - என்று கைகளை உயர்த்தினாள் மணிமேகலை.

நம்மைப் பெத்தவங்க எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கி வளர்த்திருப்பாங்க ! நீ சாதாரணத் தோட்டுக்காக இந்த முடிவு எடுக்கலாமா? நாம படிச்சு எவ்வளவோ சாதிக்கணும். மத்தவங்களுக்கு வழி காட்டணும். நமக்குப் பெருமை அதுதான். இந்த மாதிரி ஆடம்பரங்களும், நகை நட்டுகளும் இல்லடி. இனிமே இந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டியே?

ம் - என்று சத்தியம் செய்தாள் மணிமேகலை.

சரி நான் வர்றேன். - என்று சொல்லிக் கொண்டு வாசலுக்கு வந்தாள் அமுதா. அந்த வேளையில் அவளது அடிவயிற்றைப் பிசைந்து சுருட்டியது அந்த வலி..."அம்மா" என்றாள்.

மணிமேகலையின் தாய் ஓடி வந்தாள்.



அமுதாவின் தாய்மாமன்கள் இரண்டு பேரும் அம்மாவும் திண்ணையிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அமுதா எங்களுக்கு ஒரே மருமக. நீ சாதி விட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நாங்க எங்க மாமன் தனத்தை விட்டுக் குடுத்திர முடியாதுக்கா. இநத சடங்கை பத்திரிகை அடிச்சு, மைக் செட் ைச்சு, ஊரைக்கூட்டி, மல்லிகாவுக்கு செஞ்சதைவிட பத்து மடங்கு பிரமாதமா செய்யணும் - என்றார் பெரிய மாமா.

அக்கா ஒரு பைசா கூட வாங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு செய்ய வேண்டியதையெல்லாம் அமுதாவுக்குச் செய்யணும். அதுதான் எங்களுக்கு கெளரவம் - என்றார் இளைய மாமா.

அமுதாவின் தாய் யோசித்துக் கொண்டிருந்தாள். "என்னக்கா யோசிக்கிற?"

நீங்கள்ளாம் அப்பாவை மறந்துட்டீங்க. அவர் இறந்து முழுசா ஆறுமாசம் கூட ஆகல.

அவர் மாதிரி எல்லாரும் இருக்க முடியாதுக்கா - என்றார் பெரிய மாமா.

நிலையைத் தாண்டி வெளியே வந்தாள் அமுதா.

என்னம்மா?

ஒவ்வொரு பொண்ணும் வயசுக்கு வர்றதுங்கிறது இயற்கையான விசயம் தானே! அதைப்போய் வியாபாரமா மாத்தலாமா. பத்திரிகை, மைக்செட்டு, சீர்வரிசை, மொய்ங்கிறதெல்லாம் எனக்கு அவமானமாப் படுதும்மா.!

அப்ப என்னதான் செய்யணுங்கிறே?

"நீயே நம்ம வீட்டுக்குள்ளே வச்சு சடங்கைச் சுத்தி முடிச்சிரும்மா. மத்ததெல்லாம் ஒண்ணும் வேணாம். பரீட்சை வருது. நான் பள்ளிக்கூடம் போகணும். படிக்கணும்." என்ற அமுதா தாத்தாவின் புகைப்படத்தை அர்த்தச் செறிவுடன் நோக்கினாள்.

தாத்தாவின் அந்தக் கேள்விக்கு அதில் பதில் இருந்தது.




மக்களாட்சி - இர.வெற்றிவேல் - ( கட்டுரை )

மக்களாட்சி அரசைத் தலைமையேற்று நடத்த அறிவுத் தெளிவு, சொல்வன்மை, சூழலுக்கு ஏற்ற செயல்திறம், நெஞ்சுறுதி ஆகியவை வேண்டும். இவை அனைத்தையும் மறந்துவிட்டு, தனது சாதி, தனது சாதி மக்கள் என்கிற குறுகிய வட்டத்திற்குள் மக்களது வாக்குரிமையை முடக்க முயலும் நடிகர்கள், மேற்கண்ட உண்மையை உணர வேண்டும்.

நடிகர்கள் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருப்பதால், ஓட்டு விழும் என்ற எண்ணமும், வரலாற்றில் இரண்டு முதல்வர்கள் இந்த வகையில் அமைந்ததாலும், மூன்றாவது நான்காவது எனப் பட்டியல் நீளுவதையும் காணமுடிகிறது. தமிழகத்தில் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் உண்மையை உணர நமக்கு ஒரு வரலாற்றுப் பின்ணனி தேவை,

சு.தியோடர் பாஸ்கரன் - எம் தமிழர் செய்த படம் நூலிலிருந்து சில கருத்துகளைக் கீழே காண்போம்.

.....அரசியலுக்கும், சினிமாவுக்கும் இருக்கிற ஊடாட்டம் இந்தியாவில் மற்றி மாநிலங்களைவிடத் தமிழ் நாட்டில் அதிகம். காரணம், சுதந்திரப் போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு சினிமாக் கலைஞர்கள் இரண்டு வகையில் அப்போது அரசியலில் ஈடுபட்டார்கள். முதலாவது, சினிமாவின் மூலம் தேசியக் கருத்துகளைப் பரப்புவது. இரண்டாவது நடிகர்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்கள். ஆகவே அவர்களை நேரடியாக தேசிய அரசியலில் ஈடுபடுத்துவது. இத்தகைய ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் சத்தயமூர்த்தி.

தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மேயராகவும் இருந்த அவர், சவுத் இண்டியன் பிலிம் சேம்பர் ஆப் காமர்சுவுக்குத் தலைவராகவும் இருந்தார். திரைப்படத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அதன் சக்தியை அறிந்தவர். நடிகர் நாகையாவை கவுகாத்தி காங்கிரசுக்காகப் பிரதிநிதியாக அனுப்பினார். காங்கிரஸ் நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரையும் சுதந்திரப் போராட்ட அரசியலிலே ஈடுபடுத்தினார்.

கே.பி. சுந்தராம்பாள் காங்கிரசுக்காக 1937 இல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சத்தியமூர்த்தி 1943 இல் இறந்து போகிறார். சினிமாக் கலைஞர்களின் சக்தி, சரியான தலைமை இல்லாமல் அப்படியே இருந்தது. அதன் பிறகு அந்த மாபெரும் சக்தியை, அப்போதய திராவிட இயக்கத் தலைவர்கள் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டார்கள். அந்தச் சக்தியை அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள்தான் உணர்ந்தார்களே தவிர, பெரியார் தொடர்ந்து சினிமாக்காரர்களைத் தாக்கிக் கொண்டுதான் இருந்தார்.

எம்.ஜி.ஆர் தான் பெரிய அளவிலே தன்னுடைய புகழையும், பிரபலத்தையும் தி.மு.க. பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவர். அவரது ரசிகர் மன்றத்தினர், கட்சியின் நிழல் போல செயற்பட்டனர். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அதனால்தான் எம்,ஜி,ஆர் தனிக்கட்சி தொடங்கியவுடன் அவரை ஆதரித்தனர். ஆனால் அதே காலகட்டத்தில் செல்வாக்குடன் இருந்த சிவாஜி கணேசன், 3000 ரசிகர் மன்றம் அமைத்து அரசியலில் ஈடுபட்டும் அவரால் ஒருவித தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. காரணம் அவருடைய சினிமா ரசிகர்கள் அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள்.....

இந்தச் சூழலில் வரவிருக்கிற தேர்தலுக்காகப் புதிய கட்சியை விஜயகாந்த் தொடங்கி, களத்தில் இறக்கியுள்ளார். ஆட்சிக்கு வருகிறவர்கள் பிறநாடுகளின் வரலாறுகளைப் படித்து நம்நாட்டை எப்படி உயர்த்துவது என்ற உயர்ந்த இலக்குடன் இயங்கவேண்டும். நாட்டுயர்வு என்பது நமது நாடு அனைத்துத் துறைகளிலும் உண்மையான முதன்மை பெற்று தன் சொந்தக் காலில் நின்று, நம் மக்களைக் கொண்டு வளர்ந்து மேலெழுவது.

மக்கள் நலம் என்பது குறைந்த பட்ச அடிப்டைத் தேவையாவது மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற நிலையை முன்னெடுப்பது, இதை விடுத்து எதை எதையோ நாட்டுயர்வு என்றும், எதை எதையோ மக்கள் நலம் என்றும் விளக்குவது எத்தகையது? எதற்காகச் சுதந்திரம் பெறுகிறோம் என்ற உணர்வே கட்டமைக்கப்படாமல் சுதந்திரம் வாங்கியதால்தான் கடந்த 60 ஆண்டுகளில் நாம் வளர்ச்சி நோக்கிப் பயணிக்க முடியாமல் தவிக்கிறோம். இனியும் அந்த நிலை தொடர வேண்டுமா?

மக்கள் அனைவரையும், "இது எனது நாடு" என்ற உயர்ந்த இலக்கில் இயங்கவிடாது, இயங்குவதற்கான அடித்தளத்தை தொடக்கப்பள்ளிகளிலே விதைக்காது, குழுக்குழுவாகச் சிதறவைத்ததால் தான், இந்தச் சீரழவு தொடர்கிறது. வரலாற்று உணர்வும், மொழி பற்றிய பெருமையும், நாடு பற்றிய பெருமிதமும் உடைய உறுதியான தலைமையினால்தான் இதனைச் சாதிக்க முடியும். மக்களாட்சி என்பது மக்களுக்காக என்றால் மக்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கான திட்டமும் செயற்பாடும் தேவை தானே.




காசி ஆனந்தன் நறுக்குகள்

- அடக்கம் -
அடக்கம்
செய்யப்படுகிறோம்

இரண்டு
பெட்டிகளில்

சவப்
பெட்டியிலும்

தொலைக்காட்சிப்
பெட்டியிலும்.


- பாடம் -

புரட்சியாவது
வெங்காயமாவது
என்கிறாய்..

தெரிந்து
பேசு.

காயப்படுத்தியவன்
கண்ணீரை
வாங்கும்
வெங்காயம்.

செந்நீரை
வாங்கும்
புரட்சி.


- ஆணாதிக்கம் -

எப்படியும்
இருக்கலாம்

ஆணின்
திமிர்..

திரெளபதைக்கு
கணவன்
ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு
மனைவி
ஐந்தாகவும்.


- கோயில் -

செருப்புகளை
வெளியே
விட்டு

உள்ளே
போகிறது
அழுக்கு.

நன்றி : காசி ஆனந்தன் நறுக்குகள் - நூல்


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061