இலக்கிய இணைய இதழ்
15 பிப்ரவரி 2006 - இதழ் எண் : 44

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் மருத்துவர் காசி.பிச்சை அவர்களது கட்டுரையை இணைத்துள்ளேன். இது சென்ற ஆண்டு வெளிவந்தது. இருந்தாலும் அதன் நுட்பம் என்றும் உணர்ந்து போற்றற்குரியது. வணங்குதற்குரிய காசி.ஆனந்தன் அவர்களது உரைவீச்சும், இன்குலாப் அவர்களது உரைவீச்சும் 2006 சிந்தனையாளன் பொங்கல் மலரில் வெளிவந்தவை.

பார்வையாளர்கள் தாங்கள் படித்து மகிழும் கட்டுரை, சிறுகதை, பாக்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 02 - 2006



நோயின்றி வாழ கால்நடை வளர்ப்பு - மருத்துவர் காசி. பிச்சை -

"மாடா உழைச்சு ஓடா தேய்ந்தவன்" என்பது நம் நாட்டுப் பழமொழி. மனிதனுக்கு உழைத்துச் சாவதற்காகவே பிறந்தவை மாடுகள். ஓய்வெடுக்க முடியாமல், ஓட ஓட விரட்டப்பட்டு, வண்டி இழுத்து, பட்டினியால் உடல் வற்றி, தன் முகத்தையே பார்க்கும் கன்றுக்குகூட பால் கொடுக்க முடியாமல், குடம் கணக்கில் நமக்குப் பால் கொடுக்கும், உழைக்க மட்டுமே பிறந்த பாவப்பட்ட, பரிதாபமான உயிரிகள் நம் மாடுகள்.

செயற்கை வாழ்க்கைக்குள் மனிதன் புகுந்த பிறகுதான் மாடுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. இயற்கையோடு இயைந்து, நோய் நொடியில்லாமல் வாழ்ந்த காலத்தில் தன்னைக் காத்துக் கொள்வதைவிட, தன் இயற்கைச் செல்வங்களை, கால் நடைகளை, மரம் வளர்ப்பபை, நிலத்தடி நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச் சூழலை, தூய்மையான மூச்சுக் காற்றை மாசுபடாமல், குன்றாமல் குறையாமல், காத்தபடி வாழ்ந்தான் மனிதன்.

"மாட்டின் கொம்பு கூறு, மனிதனின் கொம்பு மயிறு" என்பது பழமொழி. கூர்மையாக மேல் நோக்கி வளர்ந்துள்ள கொம்புகள்தான் சூரிய ஒளியை உள்வாங்கி உடலில் வைட்டமின் 'டி' யை உற்பத்தி செய்து கொடுக்கும் ஆன்டென்னாக்கள். இந்த வைட்டமின் 'டி' தான் பாஸ்பரசை உறுஞ்சி எடுத்து, உள்வாங்கி கால்சியம் பாஸ்பேட்டாக எலுமபுகளில் படியச் செய்து எலும்புகளை உறுதிமிக்க தாக்குகின்றன.

"குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்" என்பது இன்னுமொரு பழமொழி. சூரிய ஒளியிலிருந்து உள்வாங்கப்பட்ட, இயற்கையான உயிரோட்ட சக்தி மாட்டின் குளம்பின் வழியே நிலத்துக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு, விளைநில மண்ணிலே ஊட்டம் ஏற்றப்படுகின்றது. அதனால்தான் உழவு வேலையின் போது எருதுகளின் லாடங்களை கழற்றி விட்டு, உழவு செய்தார்கள். ஏர் பூட்டி, உழவு செய்தது சூரிய ஒளி சக்தியை பூமிக்குள் பாய்ச்சி, வளம் கூட்டுவதற்காகத்தான் என்பதை கருத்திற் கொள்ளத் தவறிவிட்டோம். (கொம்பு, சாண உரம் இதன் அடிப்படையில் தான்) உழவு மாடுகள் சிறுநீர் கழிக்கும்போது 50 அடி நீளத்திற்கு குறைந்தது 8 கிலோ மண்ணுக்கு தன் சிறுநீரால் (யூரியா) உரமேற்றி புரட்டிக் கொடுத்து, இயற்கையான வளம் பெருகிறது. ஊரின் நிலம் முழுவதும் பல ஊர் மாடுகளின் குளம்புபட்டு உரமேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கல் விழா நாளிலும் அதன் பின்னரும் மாடுவிரட்டு, மஞ்சுவிரட்டு, எல்லைப் பந்தையம், சல்லிக்கட்டு, என்று பல பேர்களில் பல ஊர் காளைகளை ஒரே ஊரில் கூட்டிவைத்து நில வளத்தைப் பெருக்குவதே விழாவாக, பொங்கல் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

"அதிர ஓடினால் முதிர விளையும்" என்ற பழமொழி இதைத்தான் சொல்லுகின்றது. பூமி அதிர மாடுகள் ஒடினால் அதில் விளையும் பயிர் மணிகள் முதிர்ச்சி பெறும். சாலி குறையும். முதிர்ந்த மணிகள் சுவை நிறைந்ததாக, விதைகளாகப் பயன்படுத்தக்கூடிய முற்றிய மணிகளாக இருக்கும் என்பது முன்னோர்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இயற்கை விதி.

காலம் அறிவியல் தொழில் நுட்பத்தை மறந்து வேடிக்கை விநோதத்தை மட்டும் நிலைநாட்டிக் கொண்டு விட்டது படிப்படியே வெறும் வீர விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டு, இப்போது பொழுதுபோக்கு வேடிக்கை விழாவாக உருமாறிவிட்டது.

ஊருக்கு ஊர் தமிழர் விழாவாக இயற்கை காக்கும் விழாவாக நடத்தப் பட்டதில் மாடுகள் அதிர ஓடி, குண்டுமணி அளவும் எருவேண்டாத இயற்கை நிலவளத்தை பெற்றிருந்ததால் தான் ஏக்கருக்கு 4.2 டன் நெல் விளைச்சலை எடுத்திருக்கிறார்கள்.

சாலி நெல்லின் சிறைகொள்வேலி ஆயிரம் விளையுண்டாக்க
காவிரி பிறக்கும் நாடு கிழவோனே.
- என பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார்


ஒரு வேலி நிலத்தில் 1000 கலம் கண்டு முதல். ஓர் எக்டேரில் 436 கலம். ஒரு ஏக்கரில் 4.2 டன். கரிகாற்சோழன் காலத்தில் கண்டுமுதல் இப்படி. "மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யாணைகட்டிப் போரடித்திருக்கிறார்கள்".

சூரிய சக்தியை உள்வாங்கி மாற்றி நிலத்தில் விதைத்து வளம் கூட்டி அமோக விளைச்சலைப் பெருக்கித் தந்ததால்தான் மாடுகள் போற்றப்பட்டன. ஆகவே தான் முதல் நாள் சூரியப் பொங்கலும் மறுநாள் மாட்டுப் பொங்கலும் நன்றிப் பெருக்கு விழாவாக விதி விலக்கின்றி அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தார்கள் நம்பரம்பரை. அறிவியல் மேம்பாடு பற்றிக் கூற இதனைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

சூரியன் போலவே தொழுது வணங்க வேண்டிய ஒன்றாக மாடுகள் கருதப்பட்டதால்தான் அவைகள் கட்டப்பட்ட இடமும் தொழுவம் என்றானது. தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் தொழுவத்து மாடுகளாயின.

கருமை நிறம், சூரியக் கதிர் வீச்சை உள்வாங்கக் கூடியது. மாட்டின் கொம்புகள் கருமையாக இருப்பது போல், மனிதனும் சூரிய ஒளியை உள்வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் தலை முடியும் கருமையாக இருக்கின்றது. கருப்பாக இருக்கும் எருமைகள் சூரியக்கதிர் வீச்சை அதிகம் உள்வாங்குவதனால்தான் பாலின் அடர்த்தி கூடி கொழுப்பும் அதிகமாக இருக்கின்றது. காராம் பசுவின் பாலே மக்கள் விரும்பி ஏற்பதில் உள்ள அடிப்படை அறிவியல்கூறும் இதுதான்.

வெள்ளை நிறத்திலுள்ள செம்மறி ஆடுகளின் இறைச்சியைவிட கருமைநிற முடி அடர்ந்த வெள்ளாடுகளின் இறைச்சி சத்து மிகுந்ததாக எண்ணி மக்கள் விரும்பி ஏற்கும் அடிப்படை காரணம் இதுதான், இன்று சூரியனையும் ஒதுக்கிவிட்டோம். சூரிய கதிர் உடலில் பட்டு விடாதபடி ஆடைகளையும் மாற்றிக் கொண்டு விட்டோம். பசுக்களையும் நிழலிலேயே கட்டிப்போட்டு பால் கறக்கும் வித்தையையும் கற்றுக் கொண்டு விட்டோம். குடை, தொப்பி போன்ற கவசங்கள் வேறு. சூரியக் கதிர் வீச்சை உள்ளே பாயவிட்ட பருத்தித் துணிகளை மாற்றி செயற்கை இழை ஆடைகளால் சூரியக் கதிர் பட்டுவிடாமல் எச்சரிக்கையாகத் தடுத்துக் கொள்கின்றோம். சூரியக் கதிர்களை உள்வாங்கிக் கொடுக்கும் மாடுகளையும் அழித்து விட்டோம். ஆண் வர்க்கமே வேண்டப்படாத அழிப்பு முறைகளை கற்று தெரிந்து, காளைகளை அடியோடு அழித்து விட்டோம். உள்ளதை இழந்து வேளாண்புரட்சி என்ற கூறில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது போலவே, வெண்மைப் புரட்சியும் முடிந்து விட்டது. அடுத்தவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டிய நாம் அடுத்தவர்களை நம்பி மோசம் போய்விட்டோம்

இனியாகிலும் உண்மை உணர்ந்து நம் பாரம்பரிய கொம்புள்ள கால்நடைகளை மீண்டும் வளர்த்தெடுப்போம். நம் வாழ்வுக்கான கொம்பன்கள் நம் மாடுகள். மாடுகளை மறந்து எந்தக் கொம்பனாலும் இயற்கை வேளாண்மை செய்திட முடியாது. திடகாத்திரமாக நோயின்றி வாழ்ந்திட முடியாது. என்பது 57 ஆண்டு கால சோதனை தெளிவாகப் புரிய வைத்து விட்டது.

கொம்பில்லாத மாட்டினங்களை வெண்மைப் புரட்சி என்ற பெயர் சூட்டி இறக்குமதி செய்து நம்நாட்டுக் கொம்பன்களை அழித்தது எவ்வளவு பெரிய படுபாதகச் செயல் என்பது இப்போதாகிலும் உணரவேண்டும். வீம்புக்காகச் சென்ற பாதையிலேயே சென்று வழியில்லாத முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்காமல் உடனடியாக திருமபி வந்து புறக்கணிக்கப்பட்ட பழைய பாதையை மீண்டும் சீர்படுத்தி நம் பாரம்பரிய கால்நடைகளை காத்து வெற்றிநடை போட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்வோம்.

வேளாண்மைக்கு புத்துயிர் கொடுப்போம். கால்நடைகளை காத்திடுவோம்

நன்றி : தினமணி - திருச்சி - 23-3-2005




பொங்கி எழு நெஞ்சே - காசி ஆனந்தன் -

வெய்யோன் எழுந்தான் ! விடிந்ததா ? இல்லை !
விழிநீர் நனைந்த விலங்கு பிணைத்த
கையோ டிருந்தேன்.. பூக்கள் சிரிக்கும்
காலைப் பொழுதில் அழும்என் தாயகம்
ஐயோ! இனியும் அழிய நேருமோ?
அடிமைக் கூண்டு பொடி ஆகாதோ?
பொய்யோ நான்செயும் பொங்கல்? நெஞ்சே!
பொறுத்தென்ன கண்டாய்? பொங்கிநீ எழுகவே!

கருப்பு வானில் தங்கம் கலக்கும்
கதிர் எழநின்ற காலைப் போழ்தில்
விருப்பு கொண்டுயான் முற்றம் விளக்கி
விறகின் அடுப்பில் வெல்லம் அரிசி
பருப்பால் கொண்டு பண்ணும் பொங்கல்
பச்சை அடிமை என்வாயில் இனிக்குமோ?
நெருப்பு மலையின் அதிர்வொடு நெஞ்சே!
நிலமிசை எழுக! பொங்கிநீ எழுகவே!

தடுத்த கொடும்பகை அரண்இனித் தகரும்!
தலைவன் ஆணை! எம்மண்மிசை போர்
தொடுத்த படைவிழ ஈழம் தோன்றும்!
தொல்பழந் தமிழினம் அரசொடு மண்ணில்
எடுத்த பொங்கல் எடுக்கும் நாள்வரும்!
இனிய தைவிழா கனியும்! கனியும்!
கடுத்த புயல்என வெடித்தெழு நெஞ்சே!
காலம் மாறும்! பொங்கிநீ எழுகவே!

நன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006




என் பெயர் - மருதாயி - இன்குலாப் -

ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பெரியபுராணம்
மறந்து விட்டேன் -
திருக்குறள்

எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை

என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே -
தலையாய கற்பினள் அல்லள்!

உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !

அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!

என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
"பெய்யெனப் பெய்ய"
தன் சடலம் எரியும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
"பெய்யெனச் சொல்லுக
உடன் வேக"

இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..

இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..

தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!

விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..

கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.

அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.

கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.

தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீரில்..

உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பெரியார் எழுத்தைத் தவிர.

பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சுரிதாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.

கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!

ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..

அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் -
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை !

நன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061