இலக்கிய இணைய இதழ்
இதழ் எண் : 43 -1 பிப்ரவரி 2006

அன்புடையீர். வணக்கம்,

நலந்தானே. மாணாக்கன் இதழைச் சிறப்பாக நடத்திய வி.பொ.பழனிவேலனார் அவர்களின் பண்டைத் தமிழர் வாழ்வியல் வரலாறு நூலிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரையின் தொடர்ச்சியை இந்த இதழிலும் வெளியிட்டுள்ளேன். சிறப்பான தமிழ் உரைநடையில், தமிழ் உணர்வோடு, தமிழரது வாழ்வியல் காட்டும் இக்கட்டுரை வணங்குதற்குரியது. படியெடுத்து மக்களுக்கு உணர்வூட்டவும்.

தமிழம் வலையைக் கண்டு சுவிட்சர்லாந்திலிருந்து நண்பர் 25-1-2006 அன்று தொலைபேசியில் பேசிய போழ்து நெஞ்சு நிறைந்தது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற உந்துதல் எழுகிறது. பார்வையாளர்கள் தமிழியச் செய்திகளை அனுப்பி உதவவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
01 - 02 - 2006


வருந்துகிறோம்

இக்கட்டுரை ஆசிரியர், முதுபெரும் தமிழறிஞர் புலவர் வி.பொ.பழனிவேலனார் அவர்கள் தம் 96 ஆம் அகவையில் சிலைத் திங்கள் 4 ஆம் நாள் (20-12-2005) மறைவுற்றார் என்பதறிந்து வருந்துகிறோம் இந்தப் படத்தில் திருப்பூர் இயற்கை வாழ்வகம் முத்துசாமியும், திருமிகு வி.பொ.பழனிவேலனார் அவர்களும் உள்ளனர்


பண்டைத் தமிழர் வாழ்வியல் வரலாறு
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

புலவர். வி.பொ.பழனிவேலனார்., கீ.க.தே.,

கடவுள் கொள்கை

இம்மண்ணுலகில் முதல் மாந்தன் தோன்றிய இடம் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் கடலால் கொள்ளப்பட்ட தென் நாடாகிய குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டமாகும். அதுவே, பண்டைத் தமிழகமும் ஆகும்.

குமரியாறு, பஃறுளியாறு என இரண்டு ஆறுகள் ஆங்குப் பாய்ந்தன. குமரி மலையும், பிற பல சிறு மலைகளும் அடுக்குகளும் இருந்தன. அங்கு மதுரை என்ற பெரிய நகரமும் இருந்தது. அம்மதுரையில் தான் பாண்டிய மன்னர் முதல், இடை, கடை என்ற மூன்று கழகங்கள் நிறுவி முத்தமிழ் வளர்த்தனர்.

முதல் மாந்தன் குறிஞ்சி நிலத்தில் தோன்றி வாழ்ந்தான். மக்கள் தொகை பெருகப் பெருக முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளில் குடியேறினர்.

குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மாந்தன் காலைக் கதிரவன் தோற்றத்தையும், மாலையில் அக்கதிரவன் மறைவதையும் கூர்ந்து கவனித்து வந்தான். காலைக் கதிரவன் ஒளி மரஞ்செடி கொடிகளில் பட்டுப் பசுமை நிறமாகக் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தான். சூரியன் தோன்றும் போழ்தும், மாலையில் மறையும் போழ்தும், செந்நிறமாயிருக்கும் அழகிய தோற்றத்தைக் கண்டான். கதிரவன் கதிர்கள் செடி, கொடிகளில் பட்டுப் பசுமை நிறமாக ஒளிர்வதையும் கண்டு மகிழ்ந்தான்.

செம்மை நிறத்தைச் சேயோள் என்றும் பசுமை நிறத்தை மாயோள் என்றும் அழைத்தான். நாளடைவில் அவை முறையே சேயோன், மாயோன் என மாற்றமுற்றன. சிவப்பு நிறமும், பச்சை நிறமும் அவனைக் கவர்ந்தன. ஆகையால், அவற்றை முருக அல்லது அழகு என ஒரு பெயரிட்டழைத்தான்.

முருகு என்றால் மணம், தேன், அழகு எனவும் பொருள். கண்ணால் கண்டும், மூக்கால் முகர்ந்தும், நாக்கால் சுவைத்தும் இன்பம் காணும் ஒரு பொருளை முருகு என்ற தமிழனின் அறிவு நுண்ணியதே.

அழகு அல்லது முருகு பற்றியறிந்த தமிழன் அதன் அடிப்படைக் கரணியும் அறிய இயலாமையின், உள்ளத்தால் அறியவும் இயலாமல், கடந்து இருப்பது எனக் கருதி "கடவுள்" எனப் பெயரிட்டான்.

கட+ உள் = கடவுள் ஆயிற்று. செய் + உள் = செய்யுள். இய + உள் = இயவுள், என்றானாற் போன்று கடவுள், உள்ளத்தாலும், உணர்வாலும், உடலாலும் அறிதற்கு அரியது என்பது திரள்பொருள்.


முருகன்

இன்று முருகை முருகன் என்று உருவகஞ்செய்து அந்த அழகனுக்குப் பறவைகளுள் மிகவும் அழகிய மயிலை ஊர்தியாகவும், படைக் கருவிகளுள் அழகான வேலைப் போர்க்கருவியாகவும் கொடுத்துளர். வள்ளி, தெய்வானை என இரு மனைவியர் பின்னர் கற்பிக்கப்பட்ட கதையாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பிகளும் கற்பிக்கப் பட்டனர். மனத்தையுங் கடந்த ஒன்றிற்கு இவை ஏற்புடையனவன்று. இன்று கடவுள் என்னும் சொல் எல்லாவற்றிற்கும் பயன் படுத்தப்படுகிறது.

பிற்கால மாந்தர், கடவுளைத் தங்களைப் போல ஒரு குடும்பமாக்கிக் கதை கட்டிவிட்டனர். முருகன், கந்தன், சுப்ரமண்யன் ஆக்கப்பட்டான். வடவர் வந்து கந்தபுராணம், திருவிளையாடல்புராணம், பிற புராணங்கள் ஆக்கினர். "முருகன் அல்லது அழகு" என்னும் பெயரில் தமிழறிஞர் திரு,வி.க. எழுதியுள்ள நூலைப் படித்து உண்மை உணர்க.

திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்பது இடைச் செருகலே. திருவள்ளுவர் தமது நூலில் 1330 குறட்பாக்களில் எந்தப் பாவிலும் கடவுள் என்னும் சொல்லை எடுத்தாண்டிலர்.

இன்றுள்ள தமிழ் அகரமுதலியில், கடவுள் என்னும் சொற்கு, குரு, தெய்வம், நன்மை, மேன்மை, முனிவன், இறைவன், வானவன், தேவன், பரமன், ஈசன், அமலன், அருட்குடையோன், சாமி முதலான நூறு சொற்கள் பொருளாகக் காணப்படுகின்றன.காலம் செல்லச் செல்ல வேறு சொற்களும் புகுத்தப்படலாம்.

கிரேக்கப் பேரறிஞர் பிளாட்டோ, கடவுள் (God) என்றால் மிகப் பெருந்தன்மை வாய்ந்த, மிகவுயர்ந்த, மாந்தனது உள்ளுணர்வே என்று கூறியுள்ளார்.


சமயம் அல்லது மதம்

ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தில் சமயம் அல்லது மதம் என ஒன்று இருந்ததாக இலக்கியச் சான்று இல்லை. அதன்பிறகு தொல்காப்பியக் காலம் வரை சமயம் அன்றி மதம் என்றொன்று இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இலக்கண நூல்களில் மதம் என்னும் சொல் கொள்கை அல்லது கோட்பாடு என்னும் பொருளில்தான் எடுத்தாளப் பெற்றுள்ளது.

தொல்காப்பியம் உரியியலில் மதம் என்னும் சொல்லே வந்துள்ளது. இதோ அந்நூற்பா.

மதமே மடனும் வலியும் ஆகும் - 860
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே - 861

பொருள்: மென்மை, வன்மை, மிகுதி, அழகு, சமயம், மதம் என்னும் சொற்கள் காண்கில.

நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் நன்னூல் பாயிரம் 101 ஆம் நூற்பாவில் எழுவகை மதம் பற்றிக் கூறியுள்ளமை காண்க.

"எழுவகை மதமே யுடன்படல் மறுத்தல், பிறர்தம் மதமேற் கொண்டு களைவே, தாஅ னாட்டித் தனாது நிறுப்பே, இருவர் மாறுகோ ளொருதலை துணிவே, பிறநூற் குற்றங் காட்டல் ஏனைப், பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே "

இதனுள் மதம் என்னும் சொல் கொள்கையென்னும் பொருளில் எடுத்தாளப் பெற்றுண்மையை நன்னூல் உரையில் கண்டு தெளிக. ஈண்டு சமயம் காணப்படவில்லை. ஆயின், நன்னூலார் காலம் வரை மதம் என்னும் சொல் இன்று குறிக்கும் பொருளில் வழங்கவில்லை என்பதுறுதி.

ஆரிய மதமாகிய இந்து மதம் தமிழ்நாட்டில் புகுத்தப்படும் வரை, தமிழர், மதம் அல்லது சமயம் என்று ஒன்றைக் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. இந்து மதம் வந்த பிறகும் தமிழர் பலர் அதை ஏற்க மறுத்தமையால் அத்தகையோரைத தம் நான்கு வருணத்துள் சேர்க்காது ஐந்தாம் சாதி, தீண்டத்தகாதவர் என ஒதுக்கி வைத்தனர். ஏனைய நான்கு வருணத்தார் வாழுமிடங்களில் சேர இருந்து வாழ இடம் அளித்திலர்.

ஆகையால், காடு, கரம்பு, திடல், திட்டு, வயல்கரை, வாய்க்கால் கரை முதலிய ஒதுக்கப்பட்ட இடங்களில் தனித்து வாழ்ந்தனர். இன்றும் அரசு ஒதுக்கப்பட்ட இடங்களில்தாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறது.

ஒதுக்கப்பட்ட மக்களுள் சிலர் புத்த மதத்திலும் சமண மதத்திலும் சேர்ந்தனர். இந்துமதக் கோட்பாடுகளை ஏற்க விரும்பாத சித்தார்த்தரே பெளத்த மதத்தைத் தோற்று வித்தவர். புத்தமதம் பின்பற்றக் கடுமையானதா யிருந்தமையின் மாவீர வர்த்தமானர் சமண சமயத்தை உண்டாக்கினார். புத்த மதத்தை ஏற்கவியலாதவர், பின்பற்ற விரும்பாதவர் சமண சமயத்தைத் தழுவினர்.

தமிழர் பலரும் பெளத்தம் அல்லது சமண சமயத்தைத் தழுவி வாழ்ந்தனர். இம்மதங்கள் கடுமையான கட்டுப் பாடுகள் உள்ளவை. ஆனால் இந்துமதம் நிலையான, கட்டுப்பாடில்லாத, கலவை மதமாதலால் பலரும் இந்து மதததில் இணைந்தனர். நான்வகை வருணத்துள் "சூத்திர" வருணத்தில் பலரும் சேர்க்கப்பட்டனர். சிலர் எம்மதத்திலும் சேராமல் இருந்தனர். அத்தகையோர் தாம் இன்று அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிரிவினரும், மலைவாழ் மக்களும் ஆவர்.

15, 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்து, இசுலாம் மதங்களில் ஒதுக்கப்பட்ட மக்கள் பலர் சேர்ந்தனர். பிற்காலத்தில் தோன்றிய சீக்கிய மதம் தமிழ்நாட்டில் புகவில்லை.


போர் செய்த முறை

பண்டு போர் செய்த முறை மிகவும் நேர்த்தியானது. ஒருவரை எதிர்த்து ஒருவர் தாம் போரிடுவர். ஒருவரைப் பலர் வளைத்துச் சூழநின்று போரிடுவதும் தமிழ் மரபன்று. போர்க் கருவிகளை இழந்து வெறுங்கையுடன் நிற்பவர் மீது போர்க்கருவிகள் செலுத்த மாட்டார். போரில் புறங்காட்டிப் பின்சென்று தாக்க மாட்டார்கள். போரில் புறப்புண் படுவதைத் தமிழ் மறவர் பேரிழிவாகக் கருதினர். மார்பில் ஏற்படும் புண்ணை விழுப்புண் என்றனர். விழுப்புண் படுவதைப் பெரும் பேறென்றெண்ணினர்.

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை யெடுத்து. - என்னும் குறள் கண்டு தெளிக.

வெண்ணிப் பறந்தலைப் போரில் கரிகால் வளவனுடன் போரிட்ட (சேரமான் கணைக்கால் இரும்பொறை) சேரலாதன் என்ற அரசன் புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் விட்டான் என்பது புறநாநூறு 65 ஆம் பாடல் கூறுவது காண்க.

வடக்கிருத்தல் என்றால் தான் இருக்கும் ஊருக்கு வடபால் ஒரு மரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாது உறங்காதிருந்து உயிர் விடுதல். அரசர் கையில் வாளொடு வடக்கிருப்பர் என்ப.


தமிழர் மறம்

பகைமறவர் எதிர்த்து வந்து கூரிய வேலால் தம் கண்ணைக் குத்த முனைந்தாலும், தமிழ் மறவர் கண்ணை மூடித் திறக்க மாட்டாராம். விழித்தபடியே நிற்பாராம். ஏனெனில், பகைவர் வேல்கண்டு கண்ணைச் சிமிட்டாமல் விழித்தபடி வீறுடன் நிற்பர் என்கிறது கீழ்வரும் குறட்பா.

விழித்தகண் வேல்கொண் டெறியின் அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவற்கு.

வலிமை மிக்க மறவன் தனக்குச் சமமான ஒரு வலிமையுள்ள வீரனுடன்தான் எதிர் நின்று போர் செய்வான், வலிமை குன்றிய ஒருவனுடன் போராடுவது தனது வீரத்திற்கு இழுக்கு என்று கருதினான்.

இன்றைய நிலையோ முற்றும் முரணானது. மறைந்திருந்து தாக்குவது, வானிலிருந்து தாக்குவது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை எறிவது, கண்ணிவெடி வைப்பது, மறைவிலிருந்து கொண்டு வெடிகுண்டு வீசுவது முதலிய பலவகையான கரவு முறைகளைக் கையாள்கின்றனர்.

வலியவன் எளியவன் என்று பார்ப்பதில்லை. எங்ஙனமேனும் பகைவரை வென்று வெற்றிவாகை சூட வேண்டும் என்பதே கோட்பாடு,

ஆனால் இஃது அன்றைய தமிழர் போர் முறைக்கு மாறுபட்டதாகும்.


புலவர் இயல்பு

முற்காலப் புலவர்கள் பெருந்தன்மையும், தன்மானமும் இறுமாப்பும், ஏக்கழுத்தமும் உடையவராய் இருந்தனர். பொதுவாக மக்களிடத்தில் செல்வாக்கும், சீரமைவும் பெற்றிருந்தனர். தம் மதிப்புக்கு ஊறு நேரும் நிலைவரின் அரசர் பகைையும் பொருள்படுத்ததாமல் கண்ணறக் கடுஞ்சொல் கழறிச் சென்று விடுவர்.

மன்வனும் நீயோ, வளநாடும் உன்னதோ
உன்னை யறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு -

என்று குலோத்துங்க சோழனைப் பார்த்துக் கம்பர் கூறிய செய்யுள், அற்றைப் புலவர்களின் ஏக்கழுத்தத்திற்கோர் எடுத்துக்காட்டாம்.

அக்காலப் புலவர்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஊர்களையும் தமது சொந்த ஊராகவும், தமிழ் மக்களையெல்லாம் தம் உளவினராகவும் கருதும் பொதுமை நலஞ் சான்றவர்களாகவும விளங்கினர்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் - என்னும் புறப்பாட்டடியும்,
கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு - என்னும் பாவடியும்,
அறிவுடையோ னாறு அரசுஞ் செல்லும் - என்கிற செய்யுளடியும்,
பண்டைப் புலவர்களின் செல்வாக்கினைப் பறைசாற்றுவனவாயுள்ளன.

அன்று அரசர்களும், பெருநிலக்கிழாரும், புலவர்களைப் பெரிதும் மதித்துப் போற்றினர். இன்றோ, அத்தகைய, அறிவுக்கு மதிப்பளிக்கும் நல்லோரிலர் எனலாம்.

இன்று புலவர் எனப்படுவோரும், பண்டுபோல் துணிவும், அறிவும், ஆற்றலும், தன்மானமும் உள்ளவர் என்று சொல்லவியலவில்லை. ஏனெனில், இன்றைய புலவர்கள் அரசும், அதிகாரிகளும் போகிற போக்கிலேயே போகிறார்கள். பதவிகளில் இருப்பவர்களைப் புகழ்ந்து பேசி, போற்றி, பாராட்டித் தம் கருமியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் தாம் இருக்கிறார்கள். தமக்கென எக்கோட்பாடும் இல்லாதவராயுளர் பலர்.

உண்மையில் நல்ல அறிவும், திறனும், துணிவும் உள்ள புலவர் பலர் புறக்கணிக்கப்பட்டு இலை மறை காய் போல் இருக்கின்றனர்.

இற்றையரசு நல்லறிஞர்களை நாடுவதில்லை. நல்லறிஞர் போல நடிப்பாரையும், புகழாப் புகழ்ச்சி கூறுவாரையும் அழைத்து, அமர்த்திச் சிறப்புச் செய்கிறது. உள்ளதும், உற்றதும், உறுவதும், உரைக்கும் புலமையரைப் போற்றுவாரிலர்.

மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே - என்பது அவர்தம் குறிக்கோளாகும்.

முன்கால அரசரும், அறிஞரும், பிறரும் தம்மை எவராவது நேரில் போந்து புகழ்ந்து பேசினால் மிகவும் நாணி தலை சாய்த்துக் கொள்வாராம். இதனைப் பின்வரும் கலித்தொகையடி கூறுவதைக் கேளுங்கள்.

தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரந்துஞ்ச - என்று மாலையில் மரத்தின் இலைகள் மூடிக் கொள்வது கண்ட புலவர் அதற்குத் தம் புகழ் கேட்டாரை உவமையாக்கிக் கூறுகிறார்.

இன்று தம்மை நேர்க்கு நேர் புகழாதவரை மதிக்காதவரே பலராயுளர்.


மொழி

மொழியப்படுவது, அதாவது சொல்லப்படுவது, மொழியென்றும், எழுதப்படுவது, அதாவது வரையப்படுவது எழுத்தென்றும் கூறுப. உலகில் 2000 க்கு மேற்பட்ட மொழிகள் உளவென்பர் மொழி நூலறிஞர். இவற்றிற்கெல்லாம் தாயாகிய (மூலமாம்) மொழி தமிழ் என்பர் மொழி வல்லார்.

மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் எழுதியுள்ள, முதல் தாய் மொழி, தமிழ் வரலாறு என்னும் நூல்களைத் தமிழர் யாவரும் படித்தல் வேண்டும்.

முதன் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (lemuria continent) என முன்னர் கூறினோம். அஃதே முதலில் மொழி தோன்றிய இடமாகவும் இருத்தல் வேண்டும் என்பதில் இரு கருத்து இருப்பதற்கில்லை.

முதன் முதல் மக்கள் தோன்றிய ஞான்று ஒரு மொழியும் தெரியாமலே இருந்தனர். கைச்சைகையாலும், கனைகுரலாலுமே ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பல்லாயிரம் ஆண்டுகட்குப் பின்னரே பேசத் தொடங்கினர். முதலில் குழறியே பேசினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்ற பிற்றை ஞான்று சிறிது திருத்தமாகப் பேசத் தலைப்பட்டனர்.

இதனை, வையமீன்ற தொன்மக்க ளுளத்தினைக்
கையினாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம் - என்னும் பழஞ் செய்யுளால் அறிக.

முதலில் குழறிக் குழறிப் பேசியவர்கள் பலநூறு ஆண்டுகள் ஆன பிறகு சிறிது திருத்தமாகப் பேசத் தொடங்கினர். இங்ஙனம் பலகாலம் பேசியவர்கள் குடும்பம், ஊர் என அமைத்துக் கொண்டனர்.

பின்னர், மொழியின் தேவையை உணரத் தொடங்கினர். முதலில் திருத்தமற்ற எழுதும் முறையை உருவாக்கினர். நாளாவட்டத்தில் நன்கு பேசக்கற்றனர். அதன் பிறகே திருத்தமான எழுத்துமுறை உருவாக்கப் பெற்றது. அப்பொழுது அதற்கு எந்தப் பெயரும் இட்டிலர். மக்கட்டொகை நாளுக்கு நாள் பெருகியது. தக்க இடங்களைத் தடி, கூட்டம் கூட்டமாகச் சென்றனர். நீணிலத்தின் பல பகுதிகளிலும் குடியேறி வதிந்தனர்.

கடற்கோள்களாலும், கடல் நீரரிப்பாலும் குமரிக் கண்டம் சுருங்கத் தொடங்கியது. மீண்டும் மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியமர்ந்தனர். சிலர் அங்கேயே தங்கினர். மக்கள் தொகை மிகுந்தது. மொழித் தேவையும் மிகுந்தது. ஆகவே, நெடுங்கணக்கு முறையை ஒருவழிப்படுத்தி எழுதினர். அம்மொழியை மொழிநூலறிஞர் "பாலி" என்றழைத்தனர்.

அஃது பல்லாண்டு கடந்த பின் பல திரிபுகள் பெற்று "தமிழ்" என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். தமிழ் என்றால் தந்நாட்டு மொழியென்றும், தனியான ழகரத்தையுடையது என்றும் பொருள் தரும் என மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களே தமது தமிழ் வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளார். ஆனால், இன்று சிலர் தமிழ் என்றால் இனிமை எனப் பொருள் கூறி மகிழ்கின்றனர். அவர்தம் தாய் மொழிப்பற்றை பாராட்டுகிறோம்.

ஆயினும் தமி +ழ், தம்+ இழ், எனப்பகுத்தால், தமி என்பதற்குத் தனி என்றும், தம் எனின் தமது என்றும் பொருள்படும். இனிமை எங்ஙனம் வரும் ?

தமிழ் நெடுங்கணக்கில் உயிர் எழுத்துகள் அ முதல் ஒள ஈறாகப் பன்னிரண்டாம். மெய் எழுத்துகள் க் தொடக்கம் ன் முடிய பதினெட்டாம். ஆய்த எழுத்து மூன்று புள்ளி வடிவுடையது. (ஃ) இஃது, அஃகேனம், தனிநிலை எனவும் வழங்கப்பெறும். ஆக, தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை முப்பத்தொன்றாம்.

எழுத்தெனப் படுப,
அகர முதல னகர இறுவாய்
முப்பஃ தென்ப,

சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே - என்கிறது தொல்காப்பியம்.

ஆயின், தமிழ் எழுத்துகள் முப்பதென்றும், சார்பு எழுத்துகள் மூன்று என்றும் கூறுகிறது.

சார்பெழுத்துகள் மூன்றில் ஆய்தம் ஒன்றே தனியான எழுத்துடையது. ஏனைய குற்றியலுகரம், குற்றியலிகரம் என்கிற இரண்டும், பிறமெய்களுடன் இணைந்து ஒலிக்குங்கால் தம் மாத்திரையில் குறைந்து ஒலிப்பனவேயன்றித் தனியான எழுத்துகளையுடையன வன்று.

எனவே, தமிழ் நெடுங்கணக்கெழுத்துகள் முப்பத்தொன்றே. உயிரும், மெய்யும் கூடிப் பிறக்கும் எழுத்துகள் (12 x 18) இருநூற்றுப் பதினாறு என்பர். இவை கூட்டெழுத்துகளேயன்றித் தனியெழுத்துகளன்று. சுருக்கமாக எழுதுவதற்காக ஆக்கியவை.

அங்ஙனம் என்கிற சொல்லில் ங, ன இரண்டையும் கூட்டெழுத்துகளாக ஆக்காமல் எழுதினால் அங்ங + அன் + அம் என்று தான் எழுதுதல் வேண்டும்.

ஆதலின், சுருங்கவெழுதினால் எளிதாகவும், விரைவாகவும் எழுதலாம் என்பதற்காகவே மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகளையும் கூட்டி உயிர் மெய்யெழுத்துகளை உருவாக்கினர்.

இப்பொழுது உலகப் பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத்திற்கு உயிர் - மெய் எழுத்துகள் இல.

தமிழில் க் என்னும் மெய்யெழுத்துடன் அ என்னும் உயிர் எழுத்தைக் கூட்டி எழுதினால் (க்+அ) க என்கிற உயிர் மெய் எழுத்து உருவாகிறது.

இதுபோன்றே க் உடன் பிற உயிர் எழுத்துகளையும் கூட்டி (சேர்த்து) எழுதினால் - கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என்னும் ககர உயிர் மெய்கள் உண்டாகின்றன.

முற்காலத் தமிழ்ச் சான்றோர் எண்ணிப்பார்த்து தமிழ் வளங்கருதி உயிர்மெய் எழுத்துகளை உருவாக்கி உதவியமைக்கு இற்றைத் தமிழர் அற்றைத் தமிழர்க்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். இல்லையேல் உயிரெழுத்து, மெய்யெழுத்து வரிசைப்படி கூட்டி எழுத வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கும்.


தமிழ் மொழி (சிறப்பெழுத்து)

தமிழ் மொழியைத் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் இல்லாத ஓர் எழுத்து "ழ" ஆகும். ஆகையால்..இதனைச் சிறப்பு ழகரம் என்கிறோம். தமிழில் உள்ள ஒரு சொல்லைப் பலுக்கும் போழ்து அதில் ஒலிக்காத எழுத்தே இராது. ஆனால் சில மொழிகளில் ஒலிக்காமலிருக்கும் எழுத்துகளும் உள. ஆங்கிலத்தில் இத்தகைய எழுத்துகள் (silent alphabets) நிரம்ப இருக்கின்றன.


தமிழின் பெருமை.

உலக மொழிகட்கெல்லாம் மூலமாக மிளிரும் தமிழ்மொழியை, சில்லொர் சமற்கிருதத்திலிருந்து தோன்றியது என்று செப்புகின்றனர். தமிழியல் அறியாத் தடம்மாறிகளை என்னென்பது?

மொழிப் பேரறிஞர் தேவநேயனார் தீட்டியுள்ள வடமொழி வரலாறு கண்டு உண்மையுணர்க.

தமிழ்ச் சொற்களுடன் பிறமொழிச் சொற்களையும் சேர்த்து வழங்கினால்தான் தமிழ்மொழி வளர்ச்சியடையும் என்று வாதாடுகின்ற வன் கண்ணர்களும் தமிழ்நாட்டில் உளர் என்பதுதான் வியப்பாகும். அவர்தம் அறியாமையை எண்ணி இரங்குகின்றோம்.

தன்னிடம் பணமில்லாதவன் தான் பிறரிடம் கடன் பெற முயல்வான். தன்னிடம் நிறையப் பணம் இருக்கும்போழ்து பிறரிடம் கடனோ, கைமாற்றோ கேட்பின் நகைப்புக்கிடமாகு மன்றோ? அஃதொப்ப சொல்வளம், பொருள்வளம் சான்ற தமிழ்மொழி பிறமொழிகளிலிருந்து சொற்கள் கடன்பெற அல்லது எடுக்க வேண்டிய தேவையேயில்லை.

அங்ஙனம் பிறமொழிச் சொற்களைத் தமிழுடன் கலந்து எழுதினாலும், பேசினாலும் அம்மொழிச் சொற்களுக்கு நேரான தூய தமிழ்ச் சொற்கள் வழக்கு ஒழியும். ஆயின், தமிழ் மொழி வளர்வதற்கு மாறாகத் தமிழ் வளர்ச்சி குன்றிக் கொண்டே போகும். இறுதியில் மொழியழிவுக்கே வழிவகுக்கும்.

இன்று நாம் பேசும் எழுதும் முறைகளில் வேற்று மொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளமையை தமிழ் நெஞ்சமுள்ளவர் அறியாமலிருக்க மாட்டார்.

தமிழ்ச் சொற்கள், பிறமொழிச் சேர்க்கையால், வழக்கொழிந்தமைக்குச் சில எடுத்துக் காட்டுகள் தருவாம்.

கஷ்டம் என்னும் வடசொல்லைச் சேர்ந்ததனால் துன்பம், தொல்லை, தொலைந்தன. நஷ்டம் வந்ததால் இழப்பு ஏகிவிட்டது. புஸ்தகம் புகுந்ததும் பொத்தகம் போய்விட்டது. புஷ்பம் நுழைந்ததால் மலர் மறைந்து விட்டது, லாபம் வந்தமையின் ஊதியம், பெறுதி ஓடிவிட்டன. செளரியம், செளக்கியம், சுகம் கலந்த பின் நலம், நன்று, நீங்கின. பரிக்ஷை புகுந்து தேர்வு போயிற்று. வாத்தியார் வந்தார் ஆசிரியர் போய்விட்டார். சார் போந்தார் ஐயா அகன்றார். பேனா புகுந்தது தூவல் தொலைந்தது.

இங்ஙனம் ஆயிரக்கணக்கான தூய தமிழ்ச் சொற்கள் பிறமொழிக் கலப்பால் வழக்கற்றுப் போயினவென அறிக. மறைமலையடிகள் மகளார் புலவர். தி.நீலாம்பிகை அம்மையார் எழுதியுள்ள வடசொல் தமிழ் அகர வரிசை என்னும் நூலைப் பார்க்க.

மேலும் மேலும் வேற்று மொழிச் சொற்களைச் சேர்த்துக் கொண்டே போனால் இறுதி என்னாகும் என்பதைத் தமிழ் நெங்சங்கள் தெரிந்து கொள்ளவும்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ஆகிய மொழிகள் உண்டானாற் போன்று ஒரு புது மொழியாகத் தமிழ் மாறுபடும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி, பிறமொழிக் கலப்பு அதனை அழிக்குமேயன்றி வளர்க்காது.

இன்றுவரை நூற்றுக்கு மேல் இந்திச் சொற்கள் தமிழில் கலந்து உள்ளமையும் காண்க.


தமிழிசை மறுமலர்ச்சி

செட்டிநாட்டரசர் அண்ணாமலையார் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். திரு. இரா.கி.சண்முகனார் அவர்கள் தமிழ் இசை மன்றம் தொடங்கியவராவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிசைத் துறை என்று நிறுவப் பெற்றுள்ளது. தமிழிசை பயில்பவர்கட்குப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.

சரந்தை தமிழ்க் கழகத்தில் இருந்த தமிழிசைப் புலவர் விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்றும் பெயரில் ஓர் இசைநூல் இயற்றியுதவியுள்ளார்.

பண்டைத் தமிழிசை பற்றி அறிய இன்று துணையாக இருப்பது அந்நூல் ஒன்றே.

இக்காலத்தில் ச,ரி,க,ம,ப,த,நி, என்று பாடும் ஏழிசை தமிழிசையன்று. அவை சட்சம், தைவதம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், நிடாதம் என்ற ஏழிசையின் அடியாகத் தோன்றியவை. இப்பெயர்களே தமிழல்ல.

குரல், துத்தம், உழை, இளி, விளரி, தாரம், கைக்கிளை, என்பன பண்டைத் தமிழிசைப் பெயர்களாம். இவை ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள என்னும் எழுத்துகளால் இசைக்கப் பெற்றன. பரிபாடலில் காணப்படும் பண்கள் பாலையாழ், பண்ணோதிறம், நேர்திறம், காந்தாரம் என்பன.

தேவாரத்தில் நட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, யாழ்முரி, இந்தளம், சீகாமரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், திருவிராகம், செவ்வழி, காந்தாரபஞ்சமம், கொல்லி, கொல்லிக் கெளவாணம், கெளசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் பஞ்சரம், திருஇயமம், புறநீர்மை, அந்தாளிக்குறிஞ்சி, திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, பெரிய திருத்தாண்டகம், புக்க திருத்தாண்டகம், ஏழைத் திருத்தாண்டகம், சாப்புத் திருத்தாண்டகம், ஆகிய பண்கள் காணப்படுகின்றன. இன்று இசையரங்குகளில் இவை பயன்படவில்லை.

இப்பண்கள் வழக்கொழிந்தமைக்குத் தமிழர்களின் ஏமாளித்தனமே கரணியமாம். இன்றைய தமிழர் சிலர் காலம் போன கடைசியில் உணரத் தொடங்கியுளர். இவர்கள் மீண்டும் தமிழிசையை அரியணையேற்ற முன்வருவார்களாக. தமிழர் அனைவரும் இதற்கு உதவுவாராக.

தமிழ்ப்பகைவர் தமிழ் இசையைக் கருநாடக இசையாக மாற்றிவிட்டனர். என்பது இன்றைய ஆராய்ச்சியறிஞர் கருத்து. தமிழிசை பற்றித் தெளிவாக அறிய ஆர்வமுள்ள தமிழன்பர்கள் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரையையும், விபுலாநந்த அடிகளார் எழுதியுள்ள யாழ்நூலையும், பண்ணாராய்ச்சி வத்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் எழுதிய இசைத்தமிழ்ப் பயிற்சி நூலையும் வாங்கிப் படிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

திருவையாற்றில் தமிழ் இசைமன்றம் ஒன்று தொடங்கப் பெற்றுள்ளது. ஆனால் அது தமிழிசையை மறுமலர்ச்சி செய்கிறதா? என்பது தெற்றெனத் தெரியவில்லை.


நூல் முடிபு

பண்டைக் காலத் தமிழர் வாழ்வியல் குறித்து யாம் தமிழ் இலக்கியங்களின் துணைகொண்டு கண்ட உண்மையான செய்திகளைக் காய்தல் உவத்தலின்றிச் சமன்செய்து சீர் தூக்கித் தொகுத்து, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையில் நற்றமிழ் நெஞ்சங்கட்கு நல்கியுள்ளோம்.

மேன்மேலும் நுணுகி ஆய்வார்க்கு இச்சிறுநூல் ஓர் அறிமுகமாக அமையுமென்றே எழுத முற்பட்டோம். தமிழறிஞர் உலகம் ஏற்றுப் போற்றுமாக.

முத்தமமிழ்க் கழகங்கள் முகிழ்ந்த நற்றமிழ் நூல்கள் பல. யாம் முற்பகுதியில் கூறியவாறு அழிந்தும், அழிக்கப்பட்டும் போயினமையின் கழகக் காலத் தமிழரின் நாகரிகம், பண்பாடுகளை முழுமையாக அறிய நேரான நூல்கள் கிட்டவில்லை.

இன்று கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக, இலை மறை காய்போல பரந்து கிடக்கிறமை கண்டு, களித்து திரட்டித் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

இக்காலம் இருக்கும் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் நாடித்தேடிப் படிப்பது தமிழர்களின் தலையாய கடமையாகும். அவற்றில் பலவுண்மைகள் புரியும்.

இன்று தமிழ்ப்புலவர் பட்டம் பெறப் பயில்பவர் பலர் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் துருவித் துருவிப் படிப்பதில்லை. குறுக்குவழி, சுருக்குவழிகளையே தேடியலைகின்றனர். ஆதலின் புலமைப்பட்டம் பெற்ற பலர் முழுமையான தமிழறிவு சான்றவராக இலர்.

இன்றைக்குக் கிடைக்கும் பண்டைத் தமிழ் நூல்களைத் தமிழர் என்பவர் எல்வோரும் ஆழ்ந்து கற்று, கற்றவாறு நடைமுறையில் பயன்படுத்தினால்தான் தமிழ்வளரும். தமிழர் வாழ்வு மலரும்.

தமிழுக்கும் அழிழ்தென்று பேர் அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

என்ற புரட்சிப் பாவலர் கனகசுப்புரத்தினம் அவர்கள் உணர்வும தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடிய நாமக்கல் இராமலிங்கனார் ஆய்வும், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல், இனிதாவ தெங்குங் காணோம், என்று பாவலர் பாரதியார் பாடிய காய்தல், உவத்தலற்ற கணிப்பும், தமிழர் யாவர்க்கும் இருக்குமாயின், பண்டைத் தமிழர் வாழ்வியல் என்றும் போற்றிப் பேணப்படும் என்பதுறுதி.


நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் - புறம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய வளம்மலி வண்டமிழ் நாடே - திருத்துறைக்கிழார்.


நன்றி : பண்டைத் தமிழர் வாழ்வியல் வரலாறு
புலவர்.வி.பொ.பழனிவேலனார்., கி.க.தே., (திருத்துறைக்கிழார்)
வெளியீடு: தன்மானத் தனித்தமிழ்ப் பதிப்பகம், மன்னார்குடி.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061