இலக்கிய இணைய இதழ்
இதழ் எண் : 42 - 15 சனவரி 2006

அன்புடையீர். வணக்கம்,

நலந்தானே. மாணாக்கன் தெளிதமிழ் இதழைச் சிறப்பாக நடத்திய வி.பொ.பழனிவேலனார் அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரையை இந்த இதழில் இணைத்துள்ளேன். கல்வி முறை பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள கட்டுரை இது. விரும்புபவர்கள் படியெடுத்து ஆசிரியர்களுக்குக் கொடுத்து உணர்வூட்டவும்.

இந்த இதழில் வெளியாகியுள்ள உரைவீச்சு தொலைபேசி வழி கரூர் கார்த்திகா சொன்னவை. படைப்பாளிகள் தங்களின் தரமான படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடாம்" பெருமைப்படுகிறோம். இந்த வலையேற்றத்தின் முகப்பில் பெங்களூரில் உள்ள மூடப்பட்ட திருவள்ளுவர் சிலை புகைப்படம் இணைத்துள்ளேன். பார்த்து உணரவும்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
15 - 01 - 2006



பண்டைத் தமிழர் வாழ்வியல் வரலாறு
புலவர். வி.பொ.பழனிவேலனார்., கீ.க.தே.,

இக்காலத்தே தமிழ் மக்களிடையே பரவியுள்ள பழக்க வழக்கங்கள், கடல் கொண்ட தென்னாடாம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்திருந்த தொல் பழந்தமிழர்களின் வாழ்வியலுக்கு முற்றிலும் மாறுபட்டவையாகவே உள்ளன. இவை கொண்டு பண்டைத் தமிழர் பண்பாடறிவது அரிதாகும்.

தமிழரின் பண்டைய பண்பாடு இன்று தலைமாறிவிட்டது. ஏனெனில், தமிழர் வாழ்க்கையில் ஆரியப் பண்பாடு பெருமளவும், ஆங்கிலப் பண்பாடு ஓரளவும் பின்னிப் பிணைந்து விட்டன. ஆகவே, தமிழர் பண்பாட்டைத் தனிமைப் படுத்திக் காண்பது ஒவ்வாத ஒன்றாகிவிட்டது. எனவே, இன்று இந்தியத் தேசியத் தலைவர்கள் எனப்படும் தமிழர், குமரி முதல் பனிமலை வரை பரவியுள்ள நாகரிகம் "பாரத நாகரிகம்" என்றும் நாம் யாவரும் இந்தியர் என்றும் ஒருமைப்பாடு உரைக்கின்றனர்.

இத்தகையோர் பண்டைத் தமிழர் நாகரிகம், பண்பாடு உணராதவரே. அப்படியானால் இன்று தமிழரிடையே காணப்படும் பழக்க வழக்கங்கள் பெரும்பாலானவை தமிழர்க்குரியவையன்று என்பது உறுதி.

பண்டைத் தமிழர் வாழ்வியலை முழுமையாக அறிவதற்கு கருவிகள் எவையும் இன்றில்லை. சிந்துவெளியில் உள்ள அரப்பா, மொகஞ்சதாரோ, சங்குதாரோ ஆகிய இடங்களில் நடத்திய அகழ்வாய்வு, ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சிந்து ஆற்றச் சமவெளியில் வாழ்ந்திருந்த திரவிடர்களின் ( தமிழர்களின்) நாகரிகத்தைப் புலப்படுத்துவ தாயுள்ளதென ஆராய்ச்சியறிஞர் அறைகின்றனர். "சிந்துவெளி நாகரிகம்" என்னும் நூல் அதற்குச் சான்றாகும்.

பாண்டிய அரசர்கள், முதல், இடை, கடை என்ற முக்கழகங்கள் நிறுவி முத்தமிழ் ஆய்வு செய்யத் தமிழ்ப் புலவர் பன்னூற்றுவரை அமர்த்தினர். அப்புலவர் பெருமக்கள், ஆய்ந்து எழுதி வைத்துச் சென்ற சுவடிகள் (நூல்கள்) பல்லாயிரம். அவை, பல முதல் இடைக் கழக நூல்கள், சில கடைக்கழகத்தன. தமிழ்ப் பகைவராலும், பரவையாலும், கறையானாலும், கனலாலும், புனலாலும் அழிக்கப்பட்டன. எஞ்சியவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஒன்றே.

பின்னர் ஆக்கப்பட்ட நூல்கள் யாவும் கலப்புக்குள்ளானவையே. தமிழ்ப் பண்பாட்டைட அவற்றுள் காணவியலாது.

தொல்காப்பியர் ஆரியர் என்பது மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களின் ஆய்வு முடிவு. ஏனென்றால், தொல்காப்பியத்தில் ஊடே, ஊடே ஆரியப் பண்பாட இழையோடி உள்ளமையே காரணம். இடைச் செருகல்களும் உள்ளன.

ஆகவே, தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை, புறப்பொருள் வெண்பாமாலை, பரிபாடல், கலித்தொகை, தேவாரம் முதலான தமிழ் நூல்கள் கொண்டும், இன்றைய கலப்பு நாகரிகம் நுழையாத நாட்டுப்புற மக்கள் வாழ்க்கை முறை கண்டும், பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிகளை ஊகித்துணர்ந்தும், இந்த ஆய்வுரையை மக்களுக்குச் சொல்ல முற்பட்டோம். தமிழறிவுச் சான்றோர் ஆய்ந்து எமது ஆள்வினைக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்துப் பண்டைத் தமிழர் வாழ்வியல் யாண்டும் பரவ ஆவன செய்ய வேண்டுகிறோம்.

காய்தல் உவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்வ தறிவுடையார் கண்ணதே.

குறிப்பு : ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன் இந்தியாவுக்கு நாவலந்தீவு (Jambo - Island) என்ற பெயர்தான் வழங்கியது என உணர்க, ஓர்க.

அக்காலக் கல்வி முறை:-

அக்காலக் கல்வி முறை இக்காலம் போன்று இல்லை. மாணாக்கர், ஆசிரியர் இல்லில் தங்கிக் கல்வி கற்றனர். படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றுமே முதன்மையானவை. ஆசிரியர்க்குத் தேவையான உதவிகள் செய்தும், உறுபொருள் ஈந்தும் பயின்றனர்.

ஆசிரியர். ஆசு + இரியர் = ஆசிரியர் அதாவது மாணாக்கரின் மனத்திலுள்ள அறியாமையாகிய குற்றத்தைப் போக்குபவர் எனப் பொருளாகும். ஆசான் = ஆசு + ஆன். அதாவது மாணாக்கர்க்கு (கற்பதற்கு) ப் பற்றுக்கோடு போன்றவன்.

தகுதிகள் : அறிவு, திறன், நல்லொழுக்கம், பெருந்தன்மை, சால்பு உடையோரே ஆசிரியராயிருந்தனர். கணக்காயர், ஆசான் என்றும் அழைக்கப்பெற்றனர்.

கலையில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சி, உலகியல் அறிவு, உயர்பண்பு முதலான இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் பணிக்குத் தக்கவராகத் தெரிவு செய்தனர், மதித்தனர்.

இத்தகைய ஆசிரியரைத் தேடிப் பெற்றோர் தம் பிள்ளைகளைக் கல்வி பயில அவரிடம் ஒப்படைத்தனர்.

ஐயம், திரிபு, அறியாமை நீங்கக் கற்று முடித்தபின் ஆசிரியர் பெற்றோரை அழைத்து அவர்களிடம் அப்பிள்ளைகளை ஒப்படைத்து விடுவார்.

மாணாக்கர் : மாண்+ ஆக்கர் = மாணாக்கர். ஆசிரியர்பால் பயிலுங்கால் மாட்சிமையுள்ள சிறந்த பண்புகளைத் தம்மிடம் உண்டாக்கிக் கொள்பவர் எனப் பொருளாகும்.

தகுதிகள் : மாணாக்கரைத் தேர்ந்தெடுக்கும் போழ்து கள்ளுண்டு களிப்பவர், சோம்பேறி, மானமுள்ளவர், காமம் உடையவர், கள்வர், பிணியாளி, அறிவிலி, பிணக்கர், சினமுடையவர், துயிலுவோர், மந்தமானவர், தொன்னூல் கற்க அஞ்சித் தடுமாறுபவர், தீயவர், வஞ்சகர் - ஆகிய இயல்புகள் உடையவர்களை ஆசிரியர் அன்று ஏற்கமாட்டார்.

கற்பித்தல் : மாணாக்கர்கட்கு ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போழ்து காலம், இடம் முதலியவற்றை அறிந்து நன்கமர்ந்து பாடம் சொல்லவேண்டிய பொருள் பற்றி ஆய்ந்து மனத்தில் இருத்தி, விரைவின்றியும், சீற்றங் கொள்ளாமலும், விருப்பத்துடன் முகம் மலர்ந்து, பாடங் கேட்கும் மாணாக்கர் ஏற்கும் வகையுணர்ந்து அம்மாணாக்கர் மனத்தில் பதியும்படி மாறுபாடில்லா மனநிலையோடு கற்பித்தனர்.

மாணாக்கர் பாடங்கேட்டல்: பாடம் கேட்கும் மாணாக்கர் நேரந்தவறாது சரியான நேரத்தில் ஆசிரியரிடம் சென்று ஆசிரியர்க்குப் பணிவிடை செய்வதில் வெறுப்படையாது, அவரது குணமறிந்து பழகி, குறிப்பறிந்து நடந்து, ஆசிரியர் அமரச் சொன்னபடி அமர்ந்து, கேள்வி கேட்டால் விடை சொல்லி, அடக்கமாக இருந்து, ஆசிரியர் சொல்வதைச் செவி வாயிலாகக் கேட்டு, நெஞ்சகத்திருத்தி, ஆசிரியர் சொன்ன நற்கருத்துகளை மறவாமல் மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, ஆசிரியர் போ என்று சொன்னபின் போதல் முறையாக இருந்தது.

அன்றியும், ஆசிரியரிடம் கேட்ட பாடத்தை மீண்டும் நினைத்துப் பார்த்து மறந்து போயிருந்தால் ஆசிரியரிடம் சரியானவற்றைக் கேட்டறிதல், தன்னுடன் பயிலும் மாணாக்கத் தோழர்களுடன் கலந்து பழகி தனக்குத் தெரியாதவற்றைக் கேட்டறிதல், அவர்கள் கேட்கும் வினாக்கட்கு விடையளித்தல், ஆகியவற்றைக் கடமையாகக் கொண்டு ஒழுகினால் மாணாக்கர்களின் அறியாமை முற்றாக நீங்கிவிடும் என்கிறது நன்னூல்.

கற்றவர்க்குப் பட்டம் : இன்று உள்ளது போல் படித்ததற்குச் சான்று, பட்டம் வழங்கும் முறை அன்றில்லை. ஆனால் எந்த ஆசிரியரிடம் பாடம் கேட்டீர் என்று கேட்பதுண்டு. அது கொண்டு அவரது அறிவுத்திறன் கணிக்கப்பெறும். பெயர் பெற்ற நல்லாசிரியர்களால் பாடங்கேட்டவர்க்குப் பெரு மதிப்புண்டு.

இக்காலத்தில் எந்தக் கல்லுாரி, பல்கலைக்கழகத்தில் பயின்றீர் என்று கேட்பது போன்று அக்காலத்தில் கேட்பதில்லை. யாரிடம் பாடங்கேட்டீர் என வினவுவது வழக்கமாயிருந்தது.

நாளந்தா, தட்சசீலம் பல்கலைக் கழகங்கள் பற்றிப் பேசப் படுகிறது. அவை புத்தம் பிறந்த பிற்காலத்தில் பிறந்தவை.

தமிழகத்தில் எந்தப் பல்கலைக் கழகமும் இருந்ததாகப் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பில்லை. முத்தமிழ்க் கழகங்கள் இருந்த வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைத்துள்ளன.

முதற்காலப் பாடங்கேட்கும் முறை, செவி வழிக் கேட்டு, மனத்திலிருத்திக் கொள்வதாகவே இருந்தது. அதனாலன்றே மாணாக்கர்களைச் சேர்க்குங்கால் மறதியில்லாத நினைவு வன்மைமிக்காரையே சேர்த்தனர்.

செவிவாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டு அவைவிடா துளத்தமைத்து.

என்று நன்னூற்பா நவில்வது காண்க.

கிழக்கிந்திய வணிகக் குழுமத்தார் ஆட்சி இந்த நாட்டிற்கு வருமுன் வரை, பாடங்கேட்கும் முறையே தமிழகத்தில் பெருவழக்காயிருந்த தெனலாம்.

யாம் பயிலுங்கால் (1925-1931) தமிழாசிரியராகப் பணிபுரிந்த யாவரும் தமிழறிஞரிடம் பாடங்கேட்டவராகத் தாம் இருந்தனர். புலவர் அல்லது வித்துவான் பட்டம் பெற்றவரல்லர். ஆயினும், பாடஞ் சொல்வதில் இற்றைப் புலவர்களைவிட வல்லவராயிருந்தனர்.

இன்றைய ஆசிரியர், மாணாக்கர் : இக்காலத்தே ஆசிரியர், மாணாக்கர் நிலை முற்றிலும் மாறுபட்டதாகும். பயிலுங்காலத்திலேயே மாணாக்கர் அரசியலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆசிரியர் பலரும் அரசியல் கட்சிகளைச் சார்ந்து செயல்படுகின்றனர்.

மாணாக்கர் பயிலும் போழ்தே அரசியலில் நேரடியாக ஈடுபடுவதால் படிப்பு அரைகுறையாக முடிகிறது. ஆசிரியர் மாணாக்கர் என்கிற அன்புப் பிணைப்பு இன்றி புரட்சியும், உறழ்ச்சியும் உடையராகின்றனர்.

ஆசிரியர்க்கு அடங்கி, அவர் வழிபற்றிப் பயிலும் நிலைமாறி, ஆசிரியரை மாணாக்கர் அதிகாரம் செய்யும் நிலையே உருவாகி வருவது வருந்துதற்குரியது. அறிவு நிரம்பப் பெற்ற பின்னரே உரிமை கோரல் முறையாகும்.

ஆசிரியர் பணிக்கு இன்று தெரிவு செய்யப் பெறுபவர் அரசுப்பணி எதுவும் பெறவியலாத நிலையில் இறுதிப் புகலிடமாக இப்பணிக்கு வருபவரே. பண்டுபோல் அறிவு, ஆளுமை, உயர்பண்பு, உடையவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.

கல்வி கலையில கற்பவர் நாட்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழிய
பாலுண் குருகின் தெரிந்து.

என்னும் பாடல் பொருளுணர்ந்து அன்று மாணாக்கர் கல்வி கற்றனர். இன்றைய ஏந்துகள் அக்கால மாணாக்கருக்கு இல்லை. எனினும், கல்வியைக் கண்ணெனப் போற்றி பேணினர்.

அன்றைய ஆசிரியர்களும், இன்றைய ஆசிரியர்களைப் போன்று, எல்லாப் பாடங்களுக்கும் வினாவிடை நூல்கள் வாங்கிப் படியுங்கள் என்று மாணாக்கரிடம் கூறாமல், தாங்கள் கற்ற, கேட்ட, கருத்துகளையும், செய்திகளையும் மாணாக்கருக்கு அக்கறையுடன், அறிவுத் தெளிவுண்டாகும் வகையிலும், பாடங்களைக் கற்பித்தனர், எமக்குக் கற்பித்த ஆசிரியர்களும் அவ்வாறே கற்பித்தனர் என்றல் மிகையன்று.

ஆண்களும்., பெண்களும் அன்று சமவாய்ப்புகளுடன் கல்வி கற்றனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் நிரம்பவுள.

அவ்வையார், காக்கை பாடினரியார், பொன்முடியார், வெண்ணிக் குயத்தியார், பெருங்கோப்பெண்டு, ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, மாற்பித்தியாார், மாறோக்கத்து நப்பசலையார், வெறிபாடிய காமக்கண்ணியார், முதலான பெண்பாற் புலவர்கள் பண்டு இருந்தமை தக்க சான்றாகும்,

இன்று கல்வி கற்பது பிழைக்க வழிதேட என்னும் நிலையில் இருக்கின்றமையின் கற்றறிவுடையவர்க்கு அன்றிருந்த மதிப்பும் பெருமையும் மக்களிடையே இல்லாமற் போயிற்று.

பண்டைய மக்கள் கல்வியைக் கண்ணெனப் போற்றினர் என்பதற்கு...

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் - என்னும் வெற்றி வேற்கைப் பாடலும்,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிற திருக்குடற்பாவும் சான்று பகர்கின்றன.

அல்லாமலும், பண்டு தமிழ் மக்கள் தம் பிள்ளைகளைக் கல்வி பயில ஆசிரியர்பல் உய்க்குங்கால், இந்தப் பிள்ளைக்குக் கலவிக் கண்ணைத் திறந்து விடுங்கள் ஐயா, என்று சொல்வது வழக்கமாக இருந்தமை ஈண்டு குறிப்பிடற்பாற்று.

காதல் வாழ்வு :

உலக வாழ்க்கையின் இன்றியமையாத பகுதி, காதல்மனையாளும், காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்து வாழும் வாழ்க்கையாகும். தமிழில் உள்ள அகப்பொருள் நூல்கள் இதனை, களவு, கற்பு எனக் கூறுகின்றன.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை,
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

என்கிறது தொல்காப்பியம் (நூற்பா 1038)

களவு என்பது இன்பம், பொருள், அறன் என்று சொல்லிய வகையில் அன்புடன் கூடிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளோடு பொருந்திய காதல் வாழ்க்கையை ஆராயுமிடத்து, வேத வழக்கினையுடைய ஆரியரிடத்து நிகழும் திருமண முறை எட்டனுள் இசைப்பாட்டு வகையுடன் இயைந்த நல்ல யாழினையுடைய, தம் மனைவியருடன் இணைபிரியா துறையும், கந்தருவரது மணவியல்புடன் ஒரு வகையில் ஒப்புமையுடையதாகும் என்பது திரள் பொருளாகும்.

இளமை நலஞ்செறிந்த கட்டிளங்காளை யொருவனும், கட்டிளம் பருவம் எய்திய எழில் மிக்க கன்னியொருத்தியும் தனியிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டு பிறரறியா வண்ணம் இணைவிழைச்சி மேற்கொண்டு ஒழுகி வருவது "களவு" எனப்பட்டது.

இக்களவொழுக்கத்தை யறிந்த ஊரார், சிலர் மட்டில் பிறரறியாதபடி மறைவாக (கமுக்கமாக) த் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பழிச்சொல் "அம்பல்" எனப்படும். அஃது பலராலும் அறியப்பட்டு பரவலாக பேசப்பட்ட போழ்து "அலர்" என்று கூறப்பட்டது.

இக்களவொழுக்கம் செவிலித்தாய், நற்றாய், ஆகியோரால் அறியப்பட்டு, தந்தை தம்முன் ஆகியோர்க்கு அறிவிக்கப்பெறும். அவர்கள் இசைந்து இருவரையும் வாழ்க்கைப்படுத்துவதும் உண்டு, மறுப்பதும் உண்டு.

அங்ஙனம் பெற்றோரும், உற்றோரும் அவர்களை வாழ்க்கை நெறிப்படுத்த ஒருப்படாவிடின் அக்காளையும் கன்னியும் உடன் போக்கு மேற்கொள்வதும் உண்டு.

இல்லையேல், பனைமரத்திலுள்ள கருக்கு மட்டகளால் குதிரை போல் உருவமைத்து, அக்காதலன் எருக்கம்பூ மாலை என்ற மாலை அணிந்து, அவன் விரும்பிய காதலியின் படம் வரைந்து கொடியைப் பிடித்துக் கொண்டு, அதில் ஏறி ஊர்த்தெருக்கள் வழி வலம் வருவான். கண்டோர் இரக்கப்பட்டு இந்த நல்ல பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுப்பதில் என்ன தடை? எனப்பேசிக் கொள்வதைப் பெண்ணின் பெற்றோர் அறிந்து, மணஞ் செய்து வைப்பதும் உண்டு.

அவ்வாறு மணமுடிக்க ஒப்பாது பிடிவாதமாய் இருந்தால், அந்த இளைஞன் இறுதியில் வரைபாய்தலை மேற்கொள்வானாம். அஃதாவது மலையில் ஏறிவிழுந்து உயிர்விட முயல்வானாம். ஆனால், வரை பாய்ந்ததாக இலக்கியச் சான்றில்லை.

மடல் ஊர்ந்தாலே மணம் முடித்துவிடுவராம். வரை பாய்ந்தால் காதலியின் பெற்றோர்க்கு நீங்காப் பழியுண்டாகும் என்ற அச்சம் போலும்.

மலையிலிருந்து விழுந்து சாகப்போகிறேன் என்று சொன்னாலே அஞ்சி மணம் முடிப்பாராம்.

கற்பு

களவு முறையில் நாளடைவில் பொய்ம்மையும் கள்ளமும் இழுக்கும் நேர்ந்தமையின் தமிழ்ச் சான்றோர் சடங்குகளுடன் கூடிய கற்பு முறையை வகுத்தனர். இதனைத் தொல்காப்பியம்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப, என்று இயம்புகிறது (நூற்பா 1091)

கற்பு என்பது திருமணச் சடங்கோடு பொருந்த கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைமகன், தலைமகளைக் கொடுத்தற்குரிய முறைமையுடையோர் கொடுக்க, வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதாம். இதுபற்றித் தொல்காப்பியம் கூறுவது.

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. என்பதாம் (நூற்பா 1088)

காதல் வாழ்வு நடத்தத் தகுதி வாய்ந்த தலைமகனையும் தலைமகளையும் கொடுப்போரும், எடுப்போரும் மனம் ஒப்பித் தெரிவு செய்து, பலரும் குழுமியிருக்கும் மன்றில் இருவரையும் வாழ்க்கைத் துணைவர்களாக்குவது கற்பு முறையாகும்.

மணம், மன்றல், வரைவு, திருமணம் என்பன காதலர் இருவர் கருத்தும் ஒருமித்தே நடைபெறும்.

ஆயினும் பண்டு மணமக்களைத் தேர்ந்தெடுக்குங்கால் இன்று நடைமுறையில் உள்ள "திதி, யோகம், கரணம், லக்கினம், யோனி, ராசி, கிரகம், நட்சத்திரம், திசை, புத்தி " ஆகிய பத்து வகைப் பொருத்தங்கள் பார்ப்பாரிலர்.

இன்று பிறப்பியங் (சாதகம்) கொண்டு, ஐந்திறம் (பஞ்சாங்கம்) பார்த்தும் பொருத்தம் காணும் முறை அன்றில்லை. மணமக்களை ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வாய்ப்பளிக்காமல் (சாதகம்) பிறப்பியம் பார்த்து மணமக்களைத் தெரிவு செய்பவர் பலராக உளர். இம்முறை பண்டைய தமிழ் மரபுக்கு மாறானதாகும். தொல்காப்பியர் நூற்பா 1219 நுவலும் பத்துப் பொருத்தங்கள் -

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொரு திருவென
முறையுங் கிளந்த ஒப்பினது வகையே, என அறிக.

நாள், கோள், ஓரை, நல்லநாள், கெட்டநாள், பார்க்கும் பழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை. இடைக்காலத்தில் புகுத்தப்பட்டவையே.

நட்சத்திரம், ராசி, கிரகம், யோகம், ஓனி, திதி, ராசி, எமம், குளிசம், சோசியம், சோதிடம், மாந்த்ரீகம், பில்லிசூனியம் - என்பன தமிழ்ச் சொற்களன்று.

பக்கல், கிழமை, திங்கள், ஆண்டு ஆகிய கணக்கிடப் பிற்றைஞான்று தமிழ்ஐயர் ஆக்கிக் கொண்டவையே.

இக்காலத்தில் திருமணத்தின் போழ்து அரசாணைக்கால் நடுகல், காலுங்கரகம் வைத்தல், தீவளர்த்து அவிசொரிதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தீவலம் வருதல், தாலி கட்டுதல் முதலியன பண்டைத் தமிழர் அறியாதவை.

ஆனால் பிற்கால இலக்கியங்களில் அவை புகுத்தப்பட்டு விட்டன. இதுகொண்டு தமிழர் சிலர் மதிமயங்கி அவை தமிழர் திருமண முறைகள் தாம் என்று பேசியும், எழுதியும் வருகின்றனர்.

தாலி என்பது பண்டு ஆண்குழந்தைக்குப் பிறந்த ஐந்தாம் நாள் அணிந்த ஓர் அணிகலன் ஆகும். அதனை ஐம்படைத்தாலி என்றும் கூறுவர்.

பொன்னுடைத்தாலி என்மகன், என அகநானூறு ஐம்பத்து நான்காம் பாடலும்

தார் பூண்டு,
தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு
அயினியும் அன்றயின் றனனே,

என்று புறநானூறு எழுபத்தேழாம் பாடலும் புகல்வன காண்க.

ஆகவே, அன்று, ஆணுக்குப் பெண் அடிமை என்பதற்கு அறிகுறியாகத் தாலி அணியப் பெறவில்லை என்பது ஒரு தலை.

குறிப்பு : தமிழ்பேரறிஞர் பண்டாரகர் (டாக்டர்) மா. அரசமாணிக்கனார் எழுதியுள்ள "தமிழர்க்குத் தாலி உண்டா" என்னும் நூல் கண்டு தெளிவு பெறுக.




இருக்குமா என் தாய்நாடு ?

ஈராக்கில் அணுச்சோதனை
அமெரிக்கா அறிவிப்பு
ஈராக்கிற்கு அணு அணுவாய்ச் சோதனை
இதுதான் நடப்பு.

இங்கே பூக்கின்ற ஒவ்வொரு பூக்களும்
மாலையாக கோர்க்கப்படுவதில்லை.
மலர்வலையத்தில்தான்
சேர்க்கப்படுகின்றன.

ஆயுள் கைதியாய்
விற்கப்பட்டிருந்த சுதந்திரத்தை
அமெரிக்கா தூக்கிட்டு விட்டது.

அங்கங்கே தொய்ந்துபோய்
சமாதானம் என்று பறந்து கொண்டிருந்த
வெள்ளைக் கொடிகளும்
இரத்தத்தால் நனைக்கப்பட்டுவிட்டன.

வல்லரசுகளின் சொற்கோபுரங்கள்
கண்ணாமூச்சி விளையாடுகின்றன.
தொடர்ந்து கட்டப்பட்டிருப்பது
எங்களின் கண்கள்தான்.

உலகிற்கு நாகரிகம் தந்தவர்கள் நாங்கள்
நாளைய உலகவரைபடத்திலாவது
இருப்போமா நாங்கள்?

இரக்கம் தெரிவிப்பவர்களுக்காகச் சொல்கிறோம்
எங்களின் பொன்வரலாற்றுப் பதிவுகள்
கல்லறைக் கதவுகளில்தான் பொறிக்கப்படுகின்றன.

வீசுகின்ற தென்றல்
எரியும் சடலங்களைச் சரணடைந்து
அனலாகச் சுடுகின்றன.

தீவிரவாதத்தின் முகத்திரையைக்
கிழிக்க வந்த கருணைக் கைகள்
எங்கள் முகத்தையல்லவா காயப்படுத்துகிறது !

நாங்கள் இறந்துவிட்டால்
மீண்டும் பிறக்க இருக்குமா என் தாய்நாடு?

கரூர் - கார்த்திகா




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061