இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 39 - 20 நவம்பர் 2005

அன்புடையீர். வணக்கம்,

இந்த இதழில் வடக்கு வாசல் முதல் இதழில் வெளியான நரசய்யாவின் சிறுகதை இடம் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் தாங்கள் படித்த தரமான சிறுகதைகளைத் தட்டச்சு செய்தோ, அல்லது படியெடுத்தோ அனுப்பி வைக்கலாம். தரமானவை வலையேற்றப்படும். பழைய இதழ்களில் வந்த தரமான ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம். பிற இதழ்களில் வந்த படைப்புகள் பற்றிய விமர்சனமும், படைப்பின் நுட்பம், தேவை பற்றியும் விளக்கம் அளிக்கலாம். படைப்புகள் வழிகாட்டியாக இருந்து வளர்த்தெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் எழுதலாம். படைப்புகள்தான் வரலாறாக இருந்து அடித்தளம் அமைப்பதையும் சுட்டிக் காட்டலாம். இது உங்கள் பகுதியாக இருந்து எழுதவும். நீங்கள் யாரும் எழுதவில்லை என்றால் வழக்கமாகத் தொடர்வதைப்போல நான் படித்து மகிழ்நதவற்றை இந்தப் பகுதியில் தொடர்ந்து தருவேன்.

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்,
20 - 11 - 2005



செம்புலப் பெயனீர்
- (சிறுகதை) - நரசய்யா -

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தைய நுந்தையு மெம்முறை கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே.

- செம்புலப்பெயனீரார் - குறுந்தொகை 40.


லண்டன் நகரத்து அண்டர் கிரவுண்ட் ரயில்வேக்களில், விளம்பரப் பலைகைகளில், உலகத்து நல்ல கவிதைகளை அந்தந்த மொழிகளிலே எழுதி அவற்றிற்கு ஆங்கில மொழி பெயர்ப்பும் தரப்பட வேண்டும் என்ற எண்ணம் முதல் முறையாக, அமெரிக்க எழுத்தாளர் ஜூடித் செமைக் என்பாருக்குத் தோன்றியது. கவிதைகளைத் தேர்ந்தெடுக்க ஜூடித், சிசிலிஹெர்பர்ட், ஜெரார்ட் பென்சன் என்பவர்களுடன், பலமுறை மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். வருடத்திற்கு மூன்று முறை புதுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.

அம்மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் தமிழில் மேலே கொடுக்கப்பட்டுள்ள செம்புலப் பெயனீரார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஏ.கே.ராமானுஜன் மொழிபெயர்ப்புடன் அளிக்கப்பட்டது. எனது இன்றைய லண்டன் வாழ் நண்பரொருவரால் எனக்கு அதன் நகல் அனுப்பப்பட்டது. அது எனக்கு, நான் இங்கிலாந்தில் இருந்த 1960 ஆம் வருடத்துச் சம்பவத்தை நினைவு படுத்தியது.

முதல் முறையாக நானும் அவனும் கலந்து லண்டன் நகரத்து அண்டர் கிரவுண்ட் ரயிலில் லேயிசெஸ்டர் ஸ்கொயர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது தான் அவன் மிகவும் சங்கோஜத்துடன் என்னிடம் சொன்னான். "நரசய்யா, ஹான்னாவை...."

எனக்குப் புரிந்தது. என்ககு முன்கூட்டியே சந்தேகம் இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்ததான் லண்டன் சென்று அங்கிருந்து பெல்ஃபாஸ்ட் அடைந்தோம். அவன் சாதாரணமாக யாருடனும் பேசமாட்டான். எப்படியோ என்னுடன் ஒட்டிக் கொண்டுவிட்டான். சீனியர் என்பதால் அவனுடைய சுக துக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம்.

அங்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் இருந்தபிறகு பெல்ஃபாஸ்டிலிருந்து ஒரு பயிற்சிக்காக நாங்கள் லண்டனுக்கு அனுப்பப் பட்டிருந்தோம். அங்கு ஜெர்மைன் தெருவிலிருந்த நேவல் அட்டாச் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது தான் இந்தச் சம்பாசனை நடந்தது. "ஹான்னாவை நீ விரும்புகிறாயா?" அவன் என்னைப் பார்த்த பார்வையில் அந்த மாதிரி கேள்வி கேட்டதற்கே ஒரு மன்னிக்க முடியாத குற்றம் போலத் தெரிந்தது.

"நேவியை விட்டுவிட வேண்டுமா?" அவன் கேள்வி

தஞ்சாவூரின் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடற்படையில் சேர்ந்துவிட்ட அவனுக்கு இது ஒரு அக உணர்வுப் போராட்டம். ஆசாரமான குடும்பம். பெற்றோர் போட்ட கோட்டைத் தாண்ட முடியாத மனநிலை. ஆனால் எப்படியோ சென்ற ஒரு வருடத்தில் ஹான்னாவுடன் நெருங்கிப் பழகி விட்டான். அவள் ஒரு தீவிரமான ஜரிஷ் கத்தோலிக்கப் பெண்.

"அப்படியானால் அவளை விவாகம் செய்து கொள்ள நிச்சயித்து விட்டாயா?"

மறுபடியும் அதே பார்வை. ஆகையால் அவன் பதில் கூறவேண்டியதில்லை. எனக்கும் தெரிகிறது. ஆகையால் நானே தொடர்ந்தேன்.

"ஆமாம். இந்தியக் குடியரசு விதிகளின்படி மற்ற நாட்டினரைக் கல்யாணம் செய்து கொள்பவர்கள் இராணுவ வேலையில் இருக்க இயலாது. கடற்படையை விட்டுவிட வேண்டும். அனுமதிகேட்டு எழுதினால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தாலும், அப்போது அனேகமாக நீங்கள் இருவரும் கிழவர்கள் ஆகிவிட்டிருப்பீர்கள். சொல்லாமல் செய்து கொண்டால், சர்வீஸ் ரெகுலேசன்படி கடற்படையிலிருந்து விலக்கி விடுவார்கள். வேலைக்குப் பிரச்சனை இல்லை. நீ எலக்ட்ரானிக் பிராஞ்சு.ஆகையால் ஹார்லாண்ட் அண்ட் வுல்ப் கப்பல் தளத்திலேயே வேலை கிடைத்துவிடும். ஆனால் அதற்குப்பிறகு இந்தியா வருவது போவது எப்படியெனத் தெரியவில்லை. சாவங்கிகர் அப்படித்தான் கல்யாணம் செய்து கொண்டு சொல்லாமல் கொல்லாமல் கனடா போய்விட்டான்.

கேட்டுக் கொண்டுதான் இருந்தானே ஒழிய அவன் மனதில் என்ன இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் நாங்கள் பெல்ஃபாஸ்ட் திரும்பி விட்டோம். அப்போது எனக்கு விமான தளத்தில் மிகவும் வேலை அதிகமாக இருந்ததால் அவனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் இருக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் விக்ராந்த் இந்தியா நோக்கி புறப்படச் சித்தமானபோது அவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டான்.

திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்திலேயே இருந்துவிட அவனுக்குத் தைரியம் இல்லை போலும் என்று தான் நான் நினைத்தேன். கப்பல் புறப்படும் நாளுக்கு முதல் நாள் ஹான்னா அவனைக் கட்டிக் கொண்டு தேம்பி அழுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் தீவிரமான கத்தோலிக்கப் பெண். இவனோ ஆசாரமான இந்தியக் குடும்பத்தினர். என்ன ஆகும் என்று நினைத்தேன். அவளுக்கும் இவனுக்கும் எங்கிருந்து இந்த உறவு பிறந்தது. எட்டாயிரம் மைல்களைத் தாண்டிப் பிறந்த இவர்களுக்குள் எப்படி இந்த பந்தம் ஏற்பட்டது. இது உண்மையானது தானா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் காணுமுன்னரே மறுநாள் காலை விடிந்தது. நான் மாலையில் தான் எனது மற்ற நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் அவனது முடிவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அனால் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றனர் சிலர். அவன் அனேகமாக எவருடனும் பேசுவதையே நிறுத்தி விட்டான். அனால் வேலையில் மட்டும் தீவிரமாக ஈடுபடுவான்.

கப்பல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜிப்ரால்டர் தாண்டி வந்துகொண்டிருக்கையில், நான் அந்தக் காட்சியை மேல் தளத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். சுகமான காற்றில் மத்தியத் தரைக்கடலில் பிரவேசிக்கும் போது உணரும் சிறந்த சீதோஷ்ணம், என்னையே மறந்திருந்தேன்.

சிறிது நேரமாயிற்று எனக்கு அவன் அருகில் இருப்பதை உணர. திரும்பி நான் அவனைப் பார்க்கையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் அவன் என்னைக் கட்டிக் கொண்டு அழவும் ஆரம்பித்து விட்டான். அவளது பிரிவை அவனால் தாங்க இயலவில்லை என்பது எனக்கு நன்கு தெரிந்தது. காலம் அவனைத் தேற்றிவிடும். என நானே என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டேன்.

"உங்களோடு பேசவேண்டும்" என்றான். விக்ராந்தில் எனக்குப் பிடித்த இடம் கேடபுல்ட் கம்ப்பார்ட்மெண்ட். அங்கே அவனை அழைத்துச் சென்றேன். அங்கிருந்து உயரமான இருக்கையில் அமர்ந்து கொண்டோம். நான் அவன் முதுகைத் தடவி விட்டு, "என்ன கேசீ?" என்றேன். கே.சீனிவாசன் என்ற அவனை நாங்கள் கூப்பிடுவது அப்படித்தான். ஹான்னாவும் அவனை அப்படித்தான் அழைப்பாள்.

பெயர் சொன்னவுடன் கண்களில் நீர் நிறைந்திருக்க அவன் பேச முடியாதவனானான். சற்று நேரத்தில் அவன் தனது பையிலிருந்து மடக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் நீட்டினான். அது ஐந்தாறு பக்கங்கள் கொண்டதாயிருந்தது. ஆரம்பத்தில் அந்தக் கடிதம் மிகவும் பர்சனலாக எழுதப்பட்டிருந்ததால் நான் தயங்கினேன். ஆனால் அவன் தொடாந்து படிக்கச் சொன்னதால் தொடர்ந்தேன். அவனை அமர்த்திவிட்டு நான் படிக்க ஆரம்பித்தேன்.

இன்றுதான் எனக்குப் புரிந்தது. செம்புலப் பெயனீரார் எவ்வளவு உண்மையான விஷயம் பற்றி எழுதியிருக்கிறார் என்று, அன்று புரிந்ததைவிட இன்று அந்தக் கடிதம் மிகச் சிறந்த உண்மையைக் கூறியுள்ளது என்று. இப்போது கே.சீ. எங்கிருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனைப் பார்த்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தும் நினைவில் உள்ளது.

ஆரம்பத்தைத் தவிர்த்துவிட்டால், கடிதம் இவ்வாறு தொடர்கிறது....." மனதிலிருந்துதான் சில பகுதிகளைச் சொல்கிறேன். அதை மறக்கவே முடியாது.

...நேற்று நான் முடிவெடுத்தேன். இதை நான் நேரடியாக உன்னிடம் சொல்ல முடியாது. ஆகையால் தான் இந்தக் கடிதத்தை ஒரு நண்பர் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

திருமணம் குறித்துப் பேசினாய். நானும் அது நல்லது என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆறஅமர்ந்து யோசித்தேன். சிலவற்றை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். நமது காதல் சிறந்தது. அது பொய்க்காது. ஆகையால் அதைத் திருமணம் செய்துதான் உறுதிப்படுத்தவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. திருமணம் ஒரு பந்தம். அது சமூகத்தனால் அனுமதிக்கப்பட்ட பந்தம். அதைவிட மேலான பந்தம் நாம் ஏற்கனவே அனுபவிப்பது. சமூகத்தை நான் பழிப்பதாக எண்ணிவிடாதே. எனக்குச் சமூகம் அவசியம். நான் கத்தோலிக்கப் பெண். எங்களுக்கு இருக்கும் சில உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள இந்த நிலையில் எனக்கு எனது சமூக சேவையும் முக்கியமாகிறது. அதை உதறிவிட்டு என்னால் இருக்க முடியாது.

நீ ஒரு பழைய சமுதாயத்தின் பங்கு. அதை நீ மறந்தாலும் அது உன்னை மறக்காது. இந்திய சமூகத்தைப் பற்றி நன்கு படித்துள்ளேன். உங்கள் சமூக நியதிகள் வேரூன்றி நிற்பவை. அவை சரியா, தவறா என்று அனாவசியமாகப் பரிசீலிப்பதைவிட, அது தவிர்க்க முடியாதது என்று தெரிந்து கொண்டு அதைச் சரியான முறையில் பின்பற்றுவதுதான் உனது கடமை.

நான் பேசுவது உனக்குப் பத்தாம் பசலித் தனமாக உனக்குப்பட்டால், நான் கவலைப்படப் போவதில்லை. ஏனெனரில் நான் நம்புவதை மட்டும்தான் நான் பேசுகிறேன். உண்மையின் பரிமாணம் மிக அகன்றது. அதற்கு விளிம்பே இல்லை. பொய்மையில் வாழும்போதுதான் விளிம்பில் நிற்க வேண்டி வருகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் காதல் உண்மையானது. ஆகையால் அதற்கு விளிம்பே இல்லை. நீ எங்கோ பிறந்தாய். நான் வேறெங்கோ பிறந்தேன். நாம் இருவரும் சந்தித்தது ஏதோ நம்மால் விவரிக்க இயலாத சக்தியால்தான். ஆனால் நாம் பிரிக்க இயலாதவர்களானோம். அதுதான் உண்மை. பிரிவு என்பது சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு. இன்றில்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் நிகழப்போவதுதான். ஏனெனில் சாவும் ஒரு நிகழ்வுதான். ஆகையால் அந்தப் பிரிவை ஒத்திப் போடத்தான் நம்மால் இயலுமேயன்றி தவிர்க் இயலாது. இதை நினைவில் வைத்துக் கொண்டால் பிரிவின் பொய்மை புரியும்.

இப்பொழுது நானும் நீயும் பிரிவைத் தைரியமான எதிர் கொள்ள வேண்டும். அதையும் உடலால் தான் பிரிவேயன்றி உள்ளத்தால் அல்ல என்றும் உணரவேண்டும். இதற்கு எனது அன்னை மேரி - எனக்கு உதவுவாள். உனக்கும் ஒரு தெய்வம் உதவும். ஒன்று மட்டும் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்னால் முடியும். ஏனெனில் எனது உறவினர்கள் சிலர் கன்னி மாடத்தில் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் போல என்னால் வாழ இயலும். அது ஒரு பெரிய விஷயமுமல்ல. அதே போல, நீ வாழ வேண்டும் என நான் சொல்ல இயலாது. சொல்லவும் கூடாது. தனியாக இருந்து விடுவது பெரிய சாதனையுமல்ல. வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு விடுவது ஒரு பெரிய பாவமுமில்லை. தனி மனிதர்களைப் பொறுத்த சங்கதி அது.

நமது உறவு இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டது. அது நிரந்தரமானது. அது சிரஞ்சீவியாக வாழும். இதுதான் நான் உனக்குக் கடைசியாக எழுதும் கடிதமும் கூட. நமது உறவு ரசாயன ரீதியானது. பிரிக்க முடியாதது...."

அக்கடிதம் இன்னும் நீண்டு கொண்டிருந்தது. ஆனால் அது வேண்டியதிலலை.

இப்போது எனக்கு அனுப்பப்பட்ட செம்புலப் பெயனீராரின் கவிதை ஹான்னாவின் கடிதத்தால் எனக்கு மறுபடியும் உணர்த்தப்படுகிறது.

கே.சீ யும் ஹான்னாவும் எங்கிருக்கிறார்கள் என நான் அறியேன். ஆனாலும் அவர்கள் அந்த மண்ணும் நீரும் போலத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்கள் எம்முறையினர் எனறோ, அவர் தந்தை தாயார்கள் எவ்வழியில் உறவினர் என்றோ அலச வேண்டியதும் இல்லையல்லவா?.

நன்றி : வடக்கு வாசல் முதல் இதழ் - செப் 2005 - புதுடெல்லி இதழ்.



(o) குறுந்தொகைப் பாடலைக் கதையோடு இணைத்து, அதை இயல்பாக, லண்டனில் எழுதியுள்ள வரிகளோடு பொருத்திக் காட்டி, தமிழ்ப் பாடல்கள் வெளிநாடுகளிலும் படிக்கப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன என்கிற சிறப்புக்காட்டி, தமிழர் பண்பாடு என உயர்வு காட்டி - சிறுகதையை வடிவமைத்திருப்பது வாழ்த்துதற்குரியதே. நரசய்யா யாரோ, இப்பொழுது எங்கிருக்கிறாரோ.. வாழ்த்துகிறோம்.

(o) உயர்வு எனச் சுட்டிக் காட்டப்படுகிறவை, வேரூன்றி நிற்கிற சமூக நியதிகள் எனக் காட்டப்படுகிறவை - இப்பொழுது தொலைக்காட்சியாலும், பண்பலையாலும், நாளேடுகள், திரைப்படங்களாலும் குத்திக் கிழித்துச் சீரழிக்கப்பட்டு பாலியல் வக்கிரத்தோடு அலைகிற கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஒரு வகையில் சாதி, சமயம் பொடிபடுகிறது என மகிழ்ந்தாலும், இரு உள்ளங்களுக்கிடையே சுட்டிக்காட்டுகிற உயர் தன்மை, உணர்வு, அன்பு, இணைப்பு, என்பவை இன்றைய சூழலில் வினாக்குறியாகவே உள்ளன.

(o) சிறுகதைகளில் இன்றைய சூழலைக்காட்டி, இன்றைய சூழலோடு பொருந்துகிற, சுட்டுகிற, சங்கப் பாடல்களிலிருந்து பொருத்திக் காட்டி வழிநடத்துகிற சிறுகதைகள் நிறைய எழுதப்படவேண்டும். இந்த வகையில் நரசய்யாவை வாழ்த்தாமல் இருக்கமுடியாது.




இறகு

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

மறைந்த கவிஞர். திரு. பிரமிள்




குறும்பாக்கள்

(o) பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

(o) மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

(o) வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி

(o) எவன் நிலம்
எவன் நாடு
இலவசமனைப் பட்டா.

(o) நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

(o) நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

(o) பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

(o) தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின சாதி

(o) பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு.

(o) ஊருக்க ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில் தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான் கணைக்கால் இரும்பொறை.

(o) இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்.

(o) குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில் நசுங்கியது
புல்லாங்குழல்.

(o) அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

(o) ஒரே தலையணை
வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும்
மல்லிகை மணம்.

(o) இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்
வாங்கிக்கொள் வள்ளுவனிடம்.

நன்றி : அறிவுமதியின் கடைசி மழைத்துளி கவிதை நூல்.




பழந்தமிழர் பரவிய நாடுகள் நூலுக்கான முன்னுரை

கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் தென்கிழக்காசிய நாடுகளுடன் தமிழர்கள் பண்பாடு, சமயம், வாணிகம் முதலிய துறைகளில் தொடர்பு கொண்டிருந்தார்கள். இலங்கை, மியான்மா(பர்மா), மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தமிழர்களுக்கு மிக நெருக்கமான உறவு நிலவி வந்தது. கிழக்கே சீனா முதல் மேற்கே கிரேக்கம், எகிப்து, உரோமாபுரி வரையிலும் தமிழர்கள் நடத்திய வாணிகத்தின் சிறப்புக் குறித்து மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் வியப்புடன் எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது உரோமாபுரி நாணயங்களும் சீன நாணயங்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளது இதை மேலும் உறுதி செய்கிறது.

சமயத் துறையில் இலங்கை உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் புத்த சமயத்தைப் பரப்பிய பெருமையில் தமிழ்நாட்டுப் புத்தத் துறவிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. சைவ - வைணவ சமயங்களும் பரப்பப் பட்டுச் சிற்பக்கலைச் சிறப்பு மிக்கக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

தமிழர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் இந்நாடுகளில் பரவி இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

மாநக்கவாரம் என அந்த நாளில் தமிழர்களால் அழைக்கப்பட்ட அந்தமான் - நிக்கோபார் தீவுகள், இலங்கையிலுள்ள திருகோணமலை, முன்னீர் பழந்தீவு பன்னீராயிரம் ஆகியவற்றில் சோழர்களின் கடற்படை நிலை கொண்டிருந்தது. கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கடற்படைப் பாதுகாப்பு அளித்தது. அந்த நாளில் தென் கிழக்காசிய நாடுகளில் சீனா உள்பட எந்த நாட்டிலும் இத்தகைய வலிமையான கடற்படை இருக்கவில்லை எனவே, தமிழ்நாட்டு வணிகர்களும், துறவிகளும் எவ்வித அச்சமும் இல்லாமல் கடற்பயணம் செய்தனர்.

பல்லவர், சோழர், பாண்டியர் ஆகிய தமிழ் மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் ஆட்சி புரிவதற்கு நியமிக்கப்பட்டனர். இவர்களின் வழிவந்தவர்கள் இந்நாடுகளைத் தொடர்ந்து ஆண்டனர். இவர்களுக்கு உறுதுணையாகத் தமிழ்நாட்டு மன்னர்கள் விளங்கினார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில், பிற்காலச் சோழர்கள் காலம் தொட்டு 300 ஆண்டுகளாகப் பாண்டியர்களுடன் இடைவிடாது நடந்து வந்த போரின் விளைவாக இரு குலத்தவருேம் பலவீனம் அடைந்தனர். இதன் விளைவாக அந்நியர்கள் எட்டிப் பார்க்க அஞ்சிய தமிழகத்தில் விசயநகர நாயக்கர்களும், மராட்டியர்களும் முகமதிய நவாப்புகளும் உள்ளே புகுந்து அரசுகளைக் கைப்பற்றினர்.

தமிழ்நாட்டில் மன்னர் குலங்கள் வலிமையற்றுப் போன காரணத்தால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த தமிழர் அரசுகள் துணையற்றுப் போயின. இந்நாடுகளில் இஸ்லாம் பரவியதன் விளைவாகவும், இதைத் தொடர்ந்து சீனர்கள் செல்வாக்கும் பின்னர் ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பும் ஏற்பட்டதன் விளைவாகவும் தமிழகத்தோடு இந்நாடுகளுக்கு இருந்த உறவு முற்றிலுமாக அறுந்தது.

தமிழ்நாடு அன்னியர்களிடம் அடிமைப்படாதிருந்திருக்குமேயானால் இந்நாடுகளில் விளங்கிய தமிழர் ஆட்சிகளும் நீடித்திருக்கும்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளைக் கண்டறிந்து அங்கு குடியேறிய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நாளடைவில் இந்த நாடுகள் ஆங்கிலேயர்களின் நாடுகளாக மாறிப் போயின. இன்றளவும் இந்த நாடுகள் தங்களின் ஆதித் தாயகமான பிரிட்டனுடன் நேச உறவு கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன. ஆனால் தமிழர்களோ தாங்கள் குடியேறி ஆட்சி புரிந்த நாடுகளையும் இழந்தார்கள்.

இலங்கை, முன்னீர் பழந்தீவு பன்னீராயிரம், மாநக்காவரம் போன்ற தீவுகளையும், ஸ்ரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்கா, சோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், கடாரம் எனத் தமிழர்களால் வழங்கப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளையும் முதன் முதலாகக் கண்டறிந்து அங்கெல்லாம் குடியேறித் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த தமிழர்கள், அவற்றைப் பிறரிடம் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. ஈழம் எனத் தமிழர்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைத் தீவில், சிங்களவர்கள் குடியேறி எண்ணிக்கையில் பெருகி அத்தீவின் ஆதிக் குடிமக்களான தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி, அங்கிருந்தே விரட்டியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

இராசராசச் சோழன் காலத்தில் இலங்கைத் தீவுக்கு "மும்முடிச் சோழமண்டலம்" என்று பெயரிட்டு, அங்கு தனது பெயரில் ஜனநாதமங்கலம் என்ற தலைநகரம் ஒன்றை நிறுவி ஆண்டான். ஆனால் இன்று எந்தத் தீவுக்கு முழுமையான சொந்தக்காரர்களாக இருந்தார்களோ, அந்தத் தீவில் மூன்றில் ஒரு பகுதிக்காகப் போராட வேண்டிய நிலைமைக்குத் தமிழர்கள் ஆளாகி விட்டார்கள். இதைப் போலவே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டிருந்த தமிழர் அரசுகள் பழங்கதையாய் - பகற்கனவாய் மாறிப் போயின.

இந்நாடுகளைத் தமிழர்கள் வென்ற செய்தியினைப் பாரதி பின்வருமாறு செம்மாந்து பாடினான்.

" சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு "

பாரதி பெருமிதத்துடன் பாடியபடி பண்டைத் தமிழர்கள் ஆண்ட கடல் கடந்த நாடுகளைப் பற்றிய வரலாறும் அந்நாடுகளில் இன்றளவும் நிலவுகிற தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கமும் குறித்து அறிஞர்கள் க.த.திருநாவுக்கரசு, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சேவியர் எஸ். தனிநாயகம் அடிகள், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஏ.எல்.பாஷம், ஆனந்தா கே.குமாரசாமி, எஸ்.சிங்காரவேலு, மயிலை சீனி. வேங்கடசாமி, எஸ்.நாகராசன். தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்களும் மேலும் சிலரும் நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளனர். இந்நூலை எழுதுவதற்கு மேற்கண்ட அறிஞர் பெருமக்களின் நூற்கள் பெருந்துணையாக இருந்ததை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

அந்நாடுகளில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப் பெற்ற ஏராளமான தடயங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்குச் சான்று கூறுகின்றன.

நமது மூதாதையர்களான பழந்தமிழர்கள் கடலைக் கடக்கும் திறமையும், கடல் கடந்த நாடுகளை வெல்லும் வலிமையும் படைத்தவர்களாக வாழ்ந்து வரலாறு படைத்தார்கள். தமிழர்கள் ஏரியாகக் கடல் திகழ்ந்தது.

தென்கிழக்காசிய நாடுகளில் தமிழர்களின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. தமிழ் வணிகர்களையும் துறவிகளையும், வீரர்களையும் சுமந்த வண்ணம் நமது கப்பல்கள் இந்நாடுகளுக்குத் தங்கு தடையின்றிச் சென்று வந்தன. ஆனால் காலம் மாறியது. காட்சிகளும் மாறின.

19 ஆம் நூற்றாண்டில் அதே தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கப்பல் கப்பலாகத் தமிழர்கள் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட கொடுமை நடந்தது. நமது முன்னோர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறி ஆண்டார்களோ, அதே நாடுகளில் அடிமைச் சேவகம் புரிய நம் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்ட நிகழ்ச்சி எப்பேர்பட்ட வீழ்ச்சியையும், சரிவையும் தமிழினம் சந்தித்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

தாழ்ச்சியுற்ற நமது இனம் மீண்டும் எழுச்சி பெறவேண்டுமானால் நமது பெருமைகிக்க வரலாற்றினை உணர வேண்டும். புகழ்மிக்கப் பாரம்பரியத்திற்கு நாம் உரியவர்கள் என்ற உண்மையை உணரவேண்டும். குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கு இன உணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்த இந்நூல் உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் முன்படைக்கிறேன்.

இந்நூலுக்குச் சிறந்ததொரு அணிந்துரை வழங்கிய முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2000 ஆண்டில் இந்நூலை எழுதத் தொடங்கினாலும் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்பப்பட்டுக் கடலூர் சிறையில் ஒன்றரை ஆண்டுக்காலம் இருந்தபோதுதான் எழுதி முடிக்க முடிந்தது. எனவே சிறைமலர் 4 ஆக இந்நூல் வெளிவருகிறது.

சென்னை 17-7-2004 ...... பழ. நெடுமாறன்.




தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061